Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யோவான் ஸ்நானகர்​—சந்தோஷத்தைக் கற்றுக்கொடுக்கிறார்!

யோவான் ஸ்நானகர்​—சந்தோஷத்தைக் கற்றுக்கொடுக்கிறார்!

ஏதாவது ஒரு நியமிப்பு உங்கள் கை நழுவிப் போய்க்கொண்டிருக்கிறதா? ஒருவேளை, மற்றவர்கள் சந்தோஷமாகச் செய்துகொண்டிருக்கிற நியமிப்பாக அது இருக்கலாம். அல்லது, நீங்கள் முன்பு செய்துவந்த ஒரு நியமிப்பாக இருக்கலாம். வயது... மோசமான உடல்நிலை... பணக் கஷ்டம்... குடும்பப் பொறுப்புகள்... இவையெல்லாம் நீங்கள் அதிகமாக சேவை செய்யாதபடி தடுக்கலாம். அல்லது, அமைப்பில் ஏற்படுகிற மாற்றங்களால் ரொம்பக் காலமாக நீங்கள் செய்துவந்த சில நியமிப்புகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் ஆசைப்படுகிற அளவுக்கு உங்களால் செய்ய முடியவில்லை என்று நினைக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவேளை நீங்கள் சோர்ந்துபோய்விடலாம். அப்படியென்றால், ஏமாற்றம்... மனக்கசப்பு... போன்ற உணர்வுகள் உங்கள் மனதில் வேர்விடாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்? உங்கள் சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க என்ன செய்யலாம்?

இதைத் தெரிந்துகொள்ள, யோவான் ஸ்நானகருடைய வாழ்க்கை அனுபவத்தைக் கவனிக்கலாம். அருமையான நியமிப்புகளை அவர் செய்துவந்தார். ஆனால், அவை எல்லாமே முடிவுக்கு வந்துவிடும் என்று அவர் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். எவ்வளவு காலம் ஊழியம் செய்தாரோ, அதைவிட அதிகமான காலம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று அவர் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார். இருந்தாலும், அவர் சந்தோஷத்தை இழந்துவிடவில்லை! தன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருந்தார். அவரால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடிந்தது? ஏமாற்றங்கள் மத்தியிலும் நாம் எப்படிச் சந்தோஷமாக இருக்கலாம்?

சந்தோஷமான நியமிப்பு

கி.பி. 29, இளவேனிற் காலம்! மேசியாவுடைய வருகைக்காக மக்களைத் தயார்படுத்துகிற நியமிப்பை யோவான் செய்ய ஆரம்பிக்கிறார். “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று சொல்கிறார். (மத். 3:2; லூக். 1:12-17) அவர் சொல்வதை நிறைய பேர் ஏற்றுக்கொள்கிறார்கள். சொல்லப்போனால், அவருடைய செய்தியைக் கேட்பதற்காக ரொம்பத் தூரத்திலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம்கூட்டமாக வருகிறார்கள். நிறைய பேர் மனம் திருந்துகிறார்கள், ஞானஸ்நானமும் எடுக்கிறார்கள். தங்களை நீதிமான்களாக நினைத்துக்கொண்டிருந்த மதத் தலைவர்களையும் யோவான் தைரியமாக எச்சரிக்கிறார். தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு என்ன தீர்ப்பு காத்திருக்கிறது என்றும் சொல்கிறார். (மத். 3:5-12) இப்போது கி.பி. 29, இலையுதிர் காலம்! இயேசுவுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுக்கிறார். அப்போது, யோவானுடைய ஊழியம் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது. அந்தச் சமயத்திலிருந்து, வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியாவைப் பின்பற்றும்படி மற்றவர்களிடம் அவர் சொல்கிறார்.—யோவா. 1:32-37.

யோவானுடைய நியமிப்பு தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “மனுஷராகப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை.” (மத். 11:11) தன்னுடைய நியமிப்பை யோவான் ரொம்பச் சந்தோஷமாகச் செய்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. யோவானைப் போலவே இன்று நிறைய பேர் அருமையான ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் சகோதரர் ட்டெர்ரி. அவரும் அவருடைய மனைவி சான்ட்ராவும் 50 வருஷங்களுக்கும்மேல் முழுநேர சேவை செய்திருக்கிறார்கள். “எனக்கு அருமையான நியமிப்புகள் கிடைச்சுது. பயனியர் சேவை... பெத்தேல் சேவை... விசேஷ பயனியர் சேவை... வட்டார சேவை... மாவட்ட சேவை... இப்போ மறுபடியும் விசேஷ பயனியர் சேவை... இப்படி நிறைய நியமிப்புகள நான் சந்தோஷமா செஞ்சேன்” என்று ட்டெர்ரி சொல்கிறார். கடவுளுடைய சேவையில் நியமிப்புகள் கிடைக்கும்போது நமக்குச் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், சூழ்நிலைகள் மாறும்போதும் சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்க நம் பங்கில் தொடர்ந்து முயற்சி எடுப்பது அவசியம். இந்தப் பாடத்தைத்தான் யோவானிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.

தொடர்ந்து நன்றியோடு இருங்கள்

தனக்குக் கிடைத்த நியமிப்புகளுக்கு யோவான் எப்போதுமே நன்றியோடு இருந்தார். அதுதான் அவருடைய சந்தோஷத்தின் ரகசியம்! இப்போது ஒரு விஷயத்தைக் கவனியுங்கள். இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு, யோவானைப் பின்பற்றுபவர்கள் குறைந்தார்கள்; இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அதிகமானார்கள். இது யோவானுடைய சீஷர்களுக்குக் கவலையாக இருந்தது. அதனால், யோவானிடம் “இதோ, அவர் இப்போது ஞானஸ்நானம் கொடுத்துவருகிறார், எல்லாரும் அவரிடம் போகிறார்கள்” என்று சொன்னார்கள். (யோவா. 3:26) அதற்கு யோவான் என்ன சொன்னார்? “மணமகள் யாருக்குச் சொந்தமோ அவர்தான் மணமகன். இருந்தாலும், மணமகனின் தோழன் அவர் பக்கத்தில் நின்று அவர் பேசுவதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்படுகிறான். இந்தச் சந்தோஷம் எனக்கு நிறைவாகக் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். (யோவா. 3:29) இயேசுவோடு அவர் போட்டி போடவில்லை. இயேசுவின் நியமிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், தன்னுடைய நியமிப்புக்கு இருந்த மதிப்பு குறைந்துவிட்டதாக அவர் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, ‘மணமகனின் தோழனாக’ இருப்பதை அவர் உயர்வாக மதித்தார்; தொடர்ந்து சந்தோஷமாக இருந்தார்.

யோவானுடைய நியமிப்புகள் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால், அவருடைய மனப்பான்மை நன்றாக இருந்ததால், அவரால் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடிந்தது. உதாரணத்துக்கு, பிறந்ததிலிருந்தே அவர் நசரேயராக இருந்ததால், திராட்சமது அவருக்குத் தடைசெய்யப்பட்டிருந்தது. (லூக். 1:15) யோவானுடைய எளிமையான வாழ்க்கையைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “யோவான் சாப்பிடவும் இல்லை, குடிக்கவும் இல்லை.” ஆனால், இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் அதுபோன்ற தடைகள் எதுவும் இல்லை. அவர்கள் இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்ந்தார்கள். (மத். 11:18, 19) அதோடு, யோவான் எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. ஆனால், அற்புதங்களைச் செய்கிற வல்லமை இயேசுவின் சீஷர்களுக்கும், முன்பு யோவானுடைய சீஷர்களாக இருந்து பின்பு இயேசுவின் சீஷர்களாக ஆனவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. (மத். 10:1; யோவா. 10:41) இதைப் பற்றியெல்லாம் யோவான் கவலைப்படவில்லை. யெகோவாவின் சேவையில் தனக்குக் கிடைத்த நியமிப்பை தொடர்ந்து ஆர்வத்துடிப்போடு செய்துவந்தார்.

யெகோவாவின் சேவையில் இப்போது நமக்கு இருக்கிற நியமிப்பை உயர்வாக மதித்தால், நம்மால் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடியும். “எனக்கு கிடைச்ச ஒவ்வொரு நியமிப்பையும் கண்ணும்கருத்துமா செஞ்சேன்” என்று ட்டெர்ரி சொல்கிறார். முழுநேர சேவையில் அவர் கடந்துவந்த பாதையைத் திரும்பிப்பார்க்கும்போது, அவர் இப்படிச் சொல்கிறார்: “அத நினைச்சு நான் கொஞ்சம்கூட வருத்தப்படுறதே இல்ல, பசுமையான நினைவுகள்தான் என் மனசுல நிறைஞ்சிருக்கு.”

நம்முடைய நியமிப்பை எது மதிப்புள்ளதாக்குகிறது என்பதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, நம்மால் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடியும். எது நம் நியமிப்பை மதிப்புள்ளதாக்குகிறது? “கடவுளுடைய சக வேலையாட்களாக” இருக்கிற அந்தப் பாக்கியம்தான்! (1 கொ. 3:9) கடவுளுக்கு நாம் செய்கிற சேவையை, பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்டு வருகிற ஒரு பொருளுக்கு ஒப்பிடலாம். கடவுளுக்குச் சேவை செய்கிற பாக்கியத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்ப்பதை, அந்தப் பொருளை மெருகேற்றுவதற்கு ஒப்பிடலாம். பரம்பரைப் பொருளை மெருகேற்றும்போது, அதன் பொலிவு எப்படி மங்காமல் இருக்குமோ, அதேபோல் கடவுளுக்குச் சேவை செய்கிற பாக்கியத்தைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போது, அதன் பொலிவு, அதாவது சந்தோஷம் மங்காமல் இருக்கும். அப்போது, நாம் செய்கிற தியாகங்களை மற்றவர்கள் செய்கிற தியாகங்களோடு ஒப்பிட மாட்டோம். அதேசமயத்தில், மற்றவர்களுக்கு என்ன நியமிப்புகள் கிடைக்கின்றன என்பதை வைத்து நம்முடைய நியமிப்பை எடைபோட மாட்டோம்.—கலா. 6:4.

முக்கியமான விஷயங்களின் மீது கவனம் செலுத்துங்கள்

தன்னுடைய ஊழியம் ரொம்ப நாளுக்கு நீடிக்காது என்று யோவானுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், அது திடீரென்று ஒரு முடிவுக்கு வரும் என்பது அவருக்குத் தெரிந்திருக்காது. (யோவா. 3:30) கி.பி. 30-ல், அதாவது இயேசுவுக்கு அவர் ஞானஸ்நானம் கொடுத்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களில், ஏரோது ராஜா அவரைச் சிறையில் தள்ளினார். இருந்தாலும், சரியானதைச் சொல்வதை அவர் நிறுத்திவிடவில்லை. (மாற். 6:17-20) இதெல்லாம் நடந்தும்கூட அவரால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடிந்தது? முக்கியமான விஷயங்களின் மீது அவர் தொடர்ந்து கவனம் செலுத்தினார்!

இயேசு தன்னுடைய ஊழியத்தை பெரியளவில் செய்கிறார் என்ற விஷயத்தை சிறையில் இருந்த யோவான் கேள்விப்பட்டார். (மத். 11:2; லூக். 7:18) இயேசுதான் மேசியா என்று யோவான் உறுதியாக நம்பினார். ஆனாலும், மேசியா நிறைவேற்ற வேண்டியிருந்த எல்லா தீர்க்கதரிசனங்களையும் இயேசு எப்படி நிறைவேற்றுவார் என்று அவர் யோசித்திருக்கலாம். ‘மேசியா ராஜாவா ஆட்சி செய்வார்னு சொல்லப்பட்டிருக்கே, அப்படினா இயேசு சீக்கிரமாவே ராஜாவாயிடுவாரா? என்னை விடுதலை செய்வாரா?’ என்றெல்லாம் அவர் யோசித்திருக்கலாம். இயேசுவின் நியமிப்பைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்காக, தன்னுடைய இரண்டு சீஷர்களை அவரிடம் அனுப்பி, “வர வேண்டியவர் நீங்கள்தானா அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?” என்று கேட்கச் சொன்னார். (லூக். 7:19) அவர்கள் திரும்பி வந்து, “பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள், காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள், இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது” என்று சொன்னார்கள். (லூக். 7:20-22) அவர்கள் சொல்வதை யோவான் ரொம்ப ஆர்வமாகக் கேட்டிருக்க வேண்டும்!

அவர்கள் சொன்னதைக் கேட்டு யோவானுக்கு நிச்சயம் தைரியம் பிறந்திருக்கும்! மேசியா நிறைவேற்ற வேண்டிய தீர்க்கதரிசனங்களை இயேசு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையும் வந்திருக்கும். மேசியாவாக இயேசு வந்திருப்பதால் தனக்கு விடுதலை கிடைத்துவிடாது என்றாலும், தான் செய்த ஊழியம் வீணாகிவிடவில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சாதகமற்ற சூழ்நிலைகளிலும் அவர் சந்தோஷமாக இருந்தார்!

உலகம் முழுவதும் நடக்கிற ஊழியத்தைப் பற்றிய அறிக்கைகளின் மீது கவனம் செலுத்தும்போது சந்தோஷத்தை இழக்காமல் இருக்க முடியும்

யோவானைப் போலவே நாமும் முக்கியமான விஷயங்களின் மீது கவனமாக இருந்தால், சந்தோஷமாகவும் பொறுமையாகவும் இருக்க முடியும். (கொலோ. 1:9-11) அப்படி இருப்பதற்கு, நாம் பைபிளைப் படிக்க வேண்டும்; படித்தவற்றை ஆழமாக யோசிக்க வேண்டும். அப்போது, கடவுளுக்கு நாம் செய்யும் சேவை வீண்போகாது என்பதில் உறுதியாக இருக்க முடியும். (1 கொ. 15:58) “ஒவ்வொரு நாளும் பைபிள்ல இருக்கிற ஒரு அதிகாரத்த படிக்கிறதுனால யெகோவாகிட்ட நெருங்கி போக முடியுது. என்னை பத்தி அதிமாக யோசிக்காம யெகோவாவ பத்தி யோசிக்க முடியுது” என்று சான்ட்ரா சொல்கிறார். அதோடு, உலகம் முழுவதும் நடக்கிற ஊழியத்தைப் பற்றிய அறிக்கைகளின் மீதும் நாம் கவனம் செலுத்தலாம். அப்போது, நம்மைப் பற்றியே யோசிக்காமல் யெகோவா எவ்வளவு பெரிய விஷயங்களைச் சாதிக்கிறார் என்று யோசிப்போம். “ஒவ்வொரு மாசமும் வர்ற பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகள் ரொம்ப உதவியா இருக்கு. அமைப்புகிட்ட நெருங்கி இருக்கிற மாதிரி இருக்கு. நியமிப்ப சந்தோஷமா செய்ய அது உதவுது” என்றும் சான்ட்ரா சொல்கிறார்.

யோவான் ஸ்நானகர் கொஞ்சக் காலம்தான் ஊழியம் செய்தார். இருந்தாலும் “எலியாவுக்கு இருந்த அதே ஆர்வத்துடிப்போடும் வல்லமையோடும்” ஊழியம் செய்தார். எலியாவைப் போலவே யோவானும் “நம்மைப் போன்ற மனிதர்தான்.” (லூக். 1:17; யாக். 5:17) யோவானைப் போலவே நன்றியோடு இருக்கும்போதும், யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்யும்போதும் நம்முடைய சேவையைச் சந்தோஷமாகச் செய்ய முடியும். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, சந்தோஷத்தை இழக்காமல் இருக்க முடியும்.