Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 15

இயேசுவைப் பின்பற்றுங்கள், மனசமாதானத்தை அனுபவியுங்கள்

இயேசுவைப் பின்பற்றுங்கள், மனசமாதானத்தை அனுபவியுங்கள்

“எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தை . . . பாதுகாக்கும்.”—பிலி. 4:7.

பாட்டு 39 சமாதானம் நம் உடமை

இந்தக் கட்டுரையில்... *

1-2. இயேசு ஏன் பயங்கர வேதனையில் இருந்தார்?

மனிதராக இயேசு வாழ்ந்த கடைசி நாளன்று, பயங்கரமான வேதனையில் இருந்தார். சீக்கிரத்தில், அக்கிரமக்காரர்களின் கையால் கொடூரமான ஒரு மரணத்தை சந்திக்கவிருந்தார். ஆனால், அந்தக் கவலையைவிட இன்னொரு விஷயத்தின் மேல் அவருக்கு அதிகக் கவலை இருந்தது. தன்னுடைய தந்தையான யெகோவாமேல் இயேசு அதிகமான அன்பு வைத்திருந்தார்; அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். சீக்கிரத்தில் வரவிருந்த கஷ்டமான சோதனையை உண்மையோடு சகிப்பதன் மூலம், யெகோவாவைப் பற்றிச் சொல்லப்பட்ட எல்லா பொய்களும் தவறு என்பதை நிரூபிக்க முடியும் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. எல்லா மகிமையையும் பெற்றுக்கொள்ளும் தகுதி யெகோவாவுக்கு இருக்கிறது என்பதையும் நிரூபிக்க முடியும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதோடு, மக்களை அவர் நேசித்தார்; நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதும் கிடைக்காததும், மரணம்வரை தான் உண்மையோடு இருப்பதைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

2 பயங்கரமான வேதனையை அனுபவித்தபோதிலும், இயேசு மனசமாதானத்தோடு இருந்தார். “என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன்” என்று அவர் தன்னுடைய அப்போஸ்தலர்களிடம் சொன்னார். (யோவா. 14:27) யெகோவாவோடு இருக்கிற ஓர் அருமையான பந்தத்தால் கிடைக்கிற மனஅமைதியை, அதாவது ‘தேவசமாதானத்தை’ இயேசு அனுபவித்தார். இந்தத் தேவசமாதானம், அவருடைய மனதுக்கும் இதயத்துக்கும் அமைதியைத் தந்தது.—பிலி. 4:6, 7.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இயேசுவுக்கு வந்ததைப் போன்ற அழுத்தம் நமக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. இருந்தாலும், இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாரும் சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். (மத். 16:24, 25; யோவா. 15:20) இயேசுவைப் போல, நாமும் சிலசமயங்களில் வேதனையை அனுபவிக்கலாம். ஆனால், அந்த வேதனையிலேயே மூழ்கிப்போய், மனசமாதானத்தை இழந்துவிடாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்? தன்னுடைய ஊழியக் காலத்தில் இயேசு செய்த மூன்று விஷயங்களைப் பற்றியும், அவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இயேசு அடிக்கடி ஜெபம் செய்தார்

ஜெபம் செய்வது, தொடர்ந்து மனசமாதானத்தோடு இருப்பதற்கு உதவும் (பாராக்கள் 4-7)

4. ஒன்று தெசலோனிக்கேயர் 5:17-ஐ மனதில் வைத்து, தன்னுடைய கடைசி நாளில் இயேசு அடிக்கடி ஜெபம் செய்தார் என்பதற்கு சில உதாரணங்களைச் சொல்லுங்கள்.

4 ஒன்று தெசலோனிக்கேயர் 5:17-ஐ வாசியுங்கள். பூமியில் தான் வாழ்ந்த கடைசி நாள் முழுவதும், இயேசு அடிக்கடி ஜெபம் செய்தார். தன்னுடைய மரணத்தை எப்படி அனுசரிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தபோது, ரொட்டியையும் திராட்சமதுவையும் எடுத்து ஜெபம் செய்தார். (1 கொ. 11:23-25) பஸ்காவைக் கொண்டாடிய இடத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு, சீஷர்களோடு சேர்ந்து ஜெபம் செய்தார். (யோவா. 17:1-26) அவரும் அவருடைய சீஷர்களும் அன்று ராத்திரி கெத்செமனே தோட்டத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது, திரும்பத் திரும்ப ஜெபம் செய்தார். (மத். 26:36-39, 42, 44) அவருடைய கடைசி வார்த்தைகள்கூட, ஜெபம் செய்தபோது பேசிய வார்த்தைகள்தான்! (லூக். 23:46) பூமியில் தான் வாழ்ந்த கடைசி நாளில் நடந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவர் ஜெபம் செய்தார்.

5. அப்போஸ்தலர்களின் தைரியம் ஏன் குறைந்துபோனது?

5 ஜெபம் செய்வதன் மூலம் இயேசு தன்னுடைய தந்தையைச் சார்ந்திருந்தார்; சோதனைகளைச் சகிப்பதற்கு அவருக்கு உதவிய ஒரு விஷயம் இதுதான்! ஆனால், அன்று ராத்திரி, அப்போஸ்தலர்கள் தொடர்ந்து ஜெபம் செய்யத் தவறிவிட்டார்கள். அதனால் சோதனை வந்தபோது, அவர்களுடைய தைரியம் குறைந்துபோனது. (மத். 26:40, 41, 43, 45, 56) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி “தொடர்ந்து ஜெபம்” செய்தால்தான், சோதனைகள் வரும்போது நம்மால் தொடர்ந்து உண்மையாக இருக்க முடியும். அப்படியென்றால், எதைப் பற்றி ஜெபம் செய்வது?

6. தொடர்ந்து மனசமாதானத்தோடு இருப்பதற்கு விசுவாசம் எப்படி உதவும்?

6 “எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று கேட்டு, நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். (லூக். 17:5; யோவா. 14:1) இயேசுவைப் பின்பற்றுகிற எல்லாரையும் சாத்தான் சோதிப்பான்; அதனால், நமக்கு விசுவாசம் தேவைப்படுகிறது. (லூக். 22:31) பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வரும்போது, தொடர்ந்து மனசமாதானத்தோடு இருப்பதற்கு விசுவாசம் எப்படி உதவும்? ஒரு பிரச்சினையைச் சமாளிப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பிறகு, மற்றதை யெகோவாவின் கையில் விட்டுவிட விசுவாசம் நமக்கு உதவும். ஏனென்றால், அந்தப் பிரச்சினையை நம்மைவிட யெகோவாவால் சரியாகக் கையாள முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அந்த நம்பிக்கை, நம் மனதுக்கும் இதயத்துக்கும் சமாதானத்தைத் தருகிறது.—1 பே. 5:6, 7.

7. சகோதரர் ராபர்ட் சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

7 எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் சரி, தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க ஜெபம் நமக்கு உதவும். ராபர்ட் என்ற விசுவாசமுள்ள மூப்பரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருக்கு 80 வயதுக்கு மேல் ஆகிறது. “என்னோட வாழ்க்கையில வந்த நிறைய சோதனைகள சமாளிக்க பிலிப்பியர் 4:6, 7-ல இருக்கிற ஆலோசனை உதவியா இருந்துச்சு. எனக்கு பண கஷ்டம் வந்துச்சு. அதுமட்டுமில்ல, கொஞ்ச நாளைக்கு மூப்பரா சேவை செய்ற பாக்கியத்தையும் இழந்துட்டேன்” என்று அவர் சொல்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க அவருக்கு எது உதவியது? “மனசுல கவலை வந்துச்சுனா, உடனடியா ஜெபம் செய்ய ஆரம்பிச்சுடுவேன் . . . எவ்வளவு அடிக்கடி ஜெபம் செய்றேனோ, அதுவும் எவ்வளவு உருக்கமா ஜெபம் செய்றேனோ, அவ்வளவு நிம்மதியா இருக்க முடியுது” என்று அவர் சொல்கிறார்.

பிரசங்க வேலையை இயேசு சுறுசுறுப்பாகச் செய்தார்

ஊழியம் செய்வது, தொடர்ந்து மனசமாதானத்தோடு இருப்பதற்கு உதவும் (பாராக்கள் 8-10)

8. யோவான் 8:29 சொல்கிறபடி, இயேசு மனசமாதானத்தோடு இருந்ததற்கு இன்னொரு காரணம் என்ன?

8 யோவான் 8:29-ஐ வாசியுங்கள். துன்புறுத்தப்படும்போதும் இயேசுவால் மனசமாதானத்தோடு இருக்க முடிந்தது. ஏனென்றால், தான் உண்மையோடு சகித்திருப்பது தன்னுடைய தந்தையைச் சந்தோஷப்படுத்துகிறது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. கீழ்ப்படிவதற்குக் கஷ்டமாக இருந்த சமயங்களில்கூட அவர் தொடர்ந்து கீழ்ப்படிந்தார். தன் தந்தையின் மீது அவருக்கு அன்பு இருந்தது; அவருக்குச் சேவை செய்வதைத்தான் தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமானதாக நினைத்தார். பூமிக்கு வருவதற்கு முன்பு, “கைதேர்ந்த கலைஞனாக” கடவுளோடு சேர்ந்து வேலை செய்தார். (நீதி. 8:30) பூமிக்கு வந்த பின்பு, தன்னுடைய தந்தையான யெகோவாவைப் பற்றி எல்லாருக்கும் சுறுசுறுப்பாகக் கற்றுக்கொடுத்தார். (மத். 6:9; யோவா. 5:17) இந்த வேலை அவருக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தது.—யோவா. 4:34-36.

9. ஊழியத்தைச் சுறுசுறுப்பாகச் செய்வது நமக்கு மனசமாதானத்தைத் தரும் என்று எப்படிச் சொல்லலாம்?

9 யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் ‘எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்வதன்’ மூலமும் நம்மால் இயேசுவைப் பின்பற்ற முடியும். (1 கொ. 15:58) பிரசங்க வேலையை “முழு மூச்சோடு” செய்யும்போது, நம்முடைய பிரச்சினைகளைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க முடியும். (அப். 18:5) உதாரணத்துக்கு, ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களுக்கு நம்மைவிட நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. இருந்தாலும், யெகோவாவை நேசிக்க அவர்கள் கற்றுக்கொள்ளும்போதும், அவருடைய ஆலோசனைகளின்படி நடக்கும்போதும் அவர்களுடைய வாழ்க்கை முன்னேறுகிறது; அவர்களுடைய சந்தோஷமும் அதிகமாகிறது. இதைப் பார்க்கிற ஒவ்வொரு தடவையும், யெகோவா நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை நமக்கு அதிகமாகிறது. தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க இந்த நம்பிக்கை நமக்கு உதவுகிறது. இது எவ்வளவு உண்மை என்பதை ஒரு சகோதரி தன்னுடைய அனுபவத்தில் உணர்ந்தார். மனச்சோர்வாலும், தான் எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணத்தாலும், வாழ்க்கை முழுவதும் அந்தச் சகோதரி கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். “நான் ரொம்ப சுறுசுறுப்பா ஊழியம் செய்றப்போ, உணர்ச்சி ரீதியில என்னால சமநிலையா இருக்க முடியுது. சந்தோஷமாவும் இருக்க முடியுது. ஏன்னா, ஊழியம் செய்றப்போ, யெகோவாகிட்ட ரொம்ப நெருக்கமா இருக்குற மாதிரி உணர்றேன்” என்று அந்தச் சகோதரி சொல்கிறார்.

10. ப்ரெண்டா சொன்னதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

10 ப்ரெண்டா என்ற இன்னொரு சகோதரியின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவரும் அவருடைய மகளும், மல்ட்டிப்பிள் ஸ்க்லரோஸிஸ் என்ற வியாதியால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ப்ரெண்டாவால் நடக்க முடியாது. அதனால், எப்போதுமே வீல் சேரில்தான் இருப்பார். அவருடைய உடம்பிலும் அவ்வளவாகத் தெம்பு இல்லை. முடிந்தபோதெல்லாம் அவர் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வார். முக்கியமாக, கடிதங்கள் வழியாகச் சாட்சி கொடுப்பார். அவர் இப்படிச் சொல்கிறார்: “இந்த உலகத்துல, என்னோட நோய் குணமாகாதுங்குறத புரிஞ்சிக்கிட்டேன். அந்த எதார்த்தத்தை ஏத்துக்கிட்டேன். அதனால, ஊழியத்துக்கு முழு கவனம் கொடுக்க முடிஞ்சுது. ஊழியம் செய்றதுனால, என்னோட கஷ்டங்கள பத்தியே யோசிச்சிட்டு இருக்காம, என் சபையோட ஊழிய பகுதியில இருக்குறவங்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம்னு யோசிக்க முடியுது. அதுமட்டுமில்ல, என்னோட எதிர்கால நம்பிக்கைய பத்தி எப்பவுமே யோசிக்கிறதுக்கு இது உதவியா இருக்கு.”

தன்னுடைய நண்பர்கள் செய்த உதவியை இயேசு ஏற்றுக்கொண்டார்

நல்ல நண்பர்களோடு பழகுவது, தொடர்ந்து மனசமாதானத்தோடு இருப்பதற்கு உதவும் (பாராக்கள் 11-15)

11-13. (அ) அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் இயேசுவுக்கு எப்படி உண்மையான நண்பர்களாக இருந்தார்கள்? (ஆ) இயேசுவின் நண்பர்கள் அவரை எப்படி உணர வைத்தார்கள்?

11 இயேசு ஊழியம் செய்த அந்தச் சவாலான காலப்பகுதி முழுவதும், அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் அவருக்கு உண்மையான நண்பர்களாக இருந்தார்கள். “கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு” என்ற வார்த்தைகளுக்கு அவர்கள் உதாரணமாக இருந்தார்கள். (நீதி. 18:24) இப்படிப்பட்ட நண்பர்களை இயேசு உயர்வாக மதித்தார். அவர் ஊழியம் செய்த காலத்தில், அவருடைய சொந்த சகோதரர்களில் ஒருவர்கூட அவர்மேல் விசுவாசம் வைக்கவில்லை. (யோவா. 7:3-5) ஒருசமயம், அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றுகூட அவருடைய சொந்தக்காரர்கள் சொன்னார்கள். (மாற். 3:21) ஆனால், இயேசுவின் உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் அப்படியிருக்கவில்லை. தான் வாழ்ந்த கடைசி ராத்திரியன்று, “எனக்குச் சோதனைகள் வந்தபோது என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்கள்தான்” என்று தன் அப்போஸ்தலர்களிடம் இயேசு சொன்னார்.—லூக். 22:28.

12 அந்த அப்போஸ்தலர்கள், சிலசமயங்களில் இயேசுவின் மனதைக் கஷ்டப்படுத்தியது உண்மைதான். இருந்தாலும், அவர்களுடைய தவறுகளை அவர் பெரிதுபடுத்தவில்லை. அதற்குப் பதிலாக, தன்மேல் அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தைப் பார்த்தார். (மத். 26:40; மாற். 10:13, 14; யோவா. 6:66-69) தான் கொல்லப்படுவதற்கு முன்பு, இந்த உண்மையுள்ள நபர்களோடு இருந்த கடைசி ராத்திரியன்று இயேசு இப்படிச் சொன்னார்: “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், என் தகப்பனிடமிருந்து கேட்ட எல்லா விஷயங்களையும் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.” (யோவா. 15:15) இயேசுவின் நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஊழியத்தில் அவர்கள் ஆதரவாக இருந்தது, இயேசுவை ரொம்பச் சந்தோஷமாக உணர வைத்தது.—லூக். 10:17, 21.

13 அப்போஸ்தலர்களைத் தவிர, வேறுசில ஆண்களும் பெண்களும் இயேசுவுக்கு நண்பர்களாக இருந்தார்கள். ஊழியத்தில் அவர்கள் இயேசுவுக்கு ஆதரவு கொடுத்தார்கள்; மற்ற நடைமுறையான உதவிகளையும் செய்தார்கள். சிலர், தங்களுடைய வீட்டுக்கு அவரை அழைத்து உபசரித்தார்கள். (லூக். 10:38-42; யோவா. 12:1, 2) வேறுசிலர், அவரோடு சேர்ந்து பயணம் செய்தார்கள்; தங்களிடம் இருந்தவற்றை அவரோடு பகிர்ந்துகொண்டார்கள். (லூக். 8:3) இயேசுவுக்கு நல்ல நண்பர்கள் இருந்ததற்கு காரணம், அவர் மற்றவர்களுக்கு நல்ல நண்பராக இருந்ததுதான். அவர்களுக்காக இயேசு நிறைய நல்ல விஷயங்களைச் செய்தார், அவர்களிடமிருந்து அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கவில்லை. இயேசு பரிபூரணராக இருந்தபோதிலும், பாவ இயல்புள்ள தன்னுடைய நண்பர்களுடைய ஆதரவுக்கு நன்றியோடு இருந்தார். தொடர்ந்து மனசமாதானத்தை உணர அவர்கள் இயேசுவுக்கு உதவினார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

14-15. நாம் எப்படி நல்ல நண்பர்களை உருவாக்கலாம், அவர்கள் நமக்கு எப்படி உதவுவார்கள்?

14 யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருப்பதற்கு நல்ல நண்பர்கள் நமக்கு உதவுவார்கள். நல்ல நண்பர்களை உருவாக்குவதற்குச் சிறந்த வழி, நாம் நல்ல நண்பர்களாக இருப்பதுதான்! (மத். 7:12) உதாரணத்துக்கு, மற்றவர்களுக்கு உதவுவதற்காக, முக்கியமாக “இல்லாதவர்களுக்கு” உதவுவதற்காக, நம்முடைய நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்த வேண்டும் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபே. 4:28) உங்கள் சபையில் இருக்கிற யாருக்காவது உதவி தேவைப்படுமா? வெளியே போய்வர முடியாத நிலையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்காக நீங்கள் கடைக்குப் போய்வர முடியுமா? பணக் கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உணவு கொடுத்து உதவ முடியுமா? jw.org® வெப்சைட்டையும் JW லைப்ரரி அப்ளிகேஷனையும் எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்கள் சபையில் இருக்கிற மற்றவர்களுக்கும் சொல்லித்தர முடியுமா? மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாம் சுறுசுறுப்பாக இருந்தால், சந்தோஷமாக இருப்போம்.—அப். 20:35.

15 பிரச்சினைகள் வரும்போது, நமக்குக் கிடைக்கிற நண்பர்கள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள்; தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க உதவுவார்கள். தான் அனுபவித்த சோதனைகளைப் பற்றி யோபு பேசியபோது, அவருடைய நண்பரான எலிகூ காதுகொடுத்துக் கேட்டார். நம்முடைய உணர்ச்சிகளை மனம்திறந்து கொட்டும்போது, நம்முடைய நண்பர்களும் எலிகூவைப் போலவே பொறுமையாகக் கேட்பார்கள். (யோபு 32:4) ஆனால், நமக்காக அவர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அதேசமயத்தில், பைபிளிலிருந்து அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும்போது, நம்மால் ஞானமாக நடந்துகொள்ள முடியும். (நீதி. 15:22) தன்னுடைய நண்பர்கள் செய்த உதவியை தாவீது ராஜா மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். அதேபோல், நமக்கு உதவி தேவைப்படும்போது, நம்முடைய நண்பர்களின் உதவியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நாம் பெருமையாக நடந்துகொள்ளக் கூடாது. (2 சா. 17:27-29) இப்படிப்பட்ட நல்ல நண்பர்கள், உண்மையில் யெகோவா கொடுத்த பரிசுகள்!—யாக். 1:17.

தொடர்ந்து மனசமாதானத்தோடு இருப்பது எப்படி?

16. பிலிப்பியர் 4:6, 7 சொல்கிறபடி, மனசமாதானத்தை அனுபவிப்பதற்கான ஒரே வழி எது? விளக்குங்கள்.

16 பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள். தான் கொடுக்கும் மனசமாதானத்தை “கிறிஸ்து இயேசுவின் மூலமாக” அனுபவிக்க முடியும் என்று யெகோவா ஏன் சொல்கிறார்? ஏனென்றால், யெகோவாவுடைய நோக்கத்தில் இயேசுவின் பங்கைப் புரிந்துகொண்டு, இயேசுவின் மேல் விசுவாசம் வைக்கும்போது மட்டும்தான் நம்முடைய மனதிலும் இதயத்திலும் நிலையான மனசமாதானத்தை அனுபவிக்க முடியும். உதாரணத்துக்கு, இயேசுவின் மீட்புப் பலியின் மூலம் நம்முடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. (1 யோ. 2:12) இதை நினைக்கும்போது நம் மனதுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது! சாத்தானாலும் அவனுடைய உலகத்தாலும் நமக்கு ஏற்பட்ட எல்லா பாதிப்புகளையும் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு சரிசெய்து விடுவார். (ஏசா. 65:17; 1 யோ. 3:8; வெளி. 21:3, 4) அருமையான எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்க இது நம்மைத் தூண்டுகிறது, இல்லையா? சவாலான ஒரு வேலையை இயேசு நமக்குக் கொடுத்திருந்தாலும், அவர் நம்மோடு இருக்கிறார்; இந்த உலகத்தின் கடைசிக்கட்டம்வரை நமக்கு ஆதரவாக இருப்பார். (மத். 28:19, 20) இது நமக்குத் தைரியத்தைத் தருகிறது, இல்லையா? நிம்மதி, நம்பிக்கை, தைரியம்! இவைதான், மனசமாதானத்தின் அஸ்திவாரங்கள்!

17. (அ) ஒரு கிறிஸ்தவரால் எப்படித் தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க முடியும்? (ஆ) யோவான் 16: 33-ல் இருக்கிற வாக்குறுதியின்படி, நம்மால் என்ன செய்ய முடியும்?

17 பயங்கரமான சோதனைகள் தாக்கும்போதும் உங்களால் எப்படித் தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க முடியும்? இயேசு செய்த விஷயங்களை நீங்களும் செய்யலாம். முதலாவது, ஜெபம் செய்யுங்கள்; தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். இரண்டாவது, கீழ்ப்படிவதற்குக் கஷ்டமாக இருக்கிற சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள்; சுறுசுறுப்பாகப் பிரசங்கியுங்கள். மூன்றாவது, சோதனைகளைச் சமாளிப்பதற்கு உங்கள் நண்பர்களைச் சார்ந்திருங்கள். இதையெல்லாம் செய்யும்போது, தேவசமாதானம் உங்கள் மனதையும் இதயத்தையும் பாதுகாக்கும். எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் சரி, இயேசுவைப் போலவே நம்மாலும் ஜெயிக்க முடியும்.யோவான் 16:33-ஐ வாசியுங்கள்.

பாட்டு 56 யெகோவாவே, கேளும் என் ஜெபம்

^ பாரா. 5 மனசமாதானத்தைக் கெடுக்கிற பிரச்சினைகளை நாம் எல்லாரும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க இயேசுவுக்கு உதவிய மூன்று விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பயங்கரமான சோதனைகள் வந்தாலும் தொடர்ந்து மனசமாதானத்தோடு இருக்க, அந்த மூன்று விஷயங்கள் நமக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.