Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 17

பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராடுங்கள், யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராடுங்கள், யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

“பரலோகத்தில் இருக்கிற பொல்லாத தூதர் கூட்டத்தோடு நாம் போராட வேண்டியிருக்கிறது.”—எபே. 6:12.

பாட்டு 33 வேண்டாம் பயமே!

இந்தக் கட்டுரையில்... *

1. எபேசியர் 6:10-13 விளக்குகிறபடி, தன்னுடைய ஊழியர்களான நம்மிடம் யெகோவா அக்கறை காட்டுகிற ஒரு வழி என்ன? விளக்குங்கள்.

மனதைத் தொடுகிற நிறைய வழிகளில் தன்னுடைய ஊழியர்களான நம்மிடம் யெகோவா அக்கறை காட்டுகிறார். நம்முடைய எதிரிகளை எதிர்த்துப் போராட நமக்கு உதவுவது, அதில் ஒரு வழி! சாத்தானும் பேய்களும்தான் நம்முடைய முக்கிய எதிரிகள். இந்த எதிரிகளைப் பற்றி யெகோவா நம்மை எச்சரிக்கிறார், இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடத் தேவையான உதவியையும் தருகிறார். (எபேசியர் 6:10-13-ஐ வாசியுங்கள்.) யெகோவா தருகிற உதவியை ஏற்றுக்கொண்டு, அவரை முழுமையாகச் சார்ந்திருக்கும்போது, நம்மால் பிசாசை வெற்றிகரமாக எதிர்த்து நிற்க முடியும். அப்போது, “கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?” என்று சொன்ன அப்போஸ்தலன் பவுலைப் போலவே நம்மாலும் நம்பிக்கையோடு சொல்ல முடியும்.—ரோ. 8:31.

2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 உண்மைக் கிறிஸ்தவர்களான நாம், சாத்தான்மீதும் பேய்கள்மீதும் அதிக கவனம் செலுத்துவது கிடையாது. யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதிலும் அவருக்குச் சேவை செய்வதிலும்தான் அதிக கவனம் செலுத்துகிறோம். (சங். 25:5) இருந்தாலும், சாத்தானுடைய செயல்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். அப்போதுதான், அவனிடம் ஏமாற மாட்டோம். (2 கொ. 2:11) சாத்தானும் பேய்களும் மக்களைத் தவறாக வழிநடத்துகிற ஒரு முக்கியமான வழியைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சாத்தானையும் பேய்களையும் எப்படி வெற்றிகரமாக எதிர்த்து நிற்கலாம் என்றும் பார்ப்போம்.

பொல்லாத ஆவிகள் மக்களை எப்படித் தவறாக வழிநடத்துகின்றன?

3-4. (அ) ஆவியுலகத் தொடர்பு என்றால் என்ன? (ஆ) ஆவியுலகத் தொடர்பு எந்தளவு பரவலாக இருக்கிறது?

3 சாத்தானும் பேய்களும் மக்களைத் தவறாக வழிநடத்துகிற ஒரு முக்கியமான வழி, ஆவியுலகத் தொடர்பு! மற்றவர்களுக்குத் தெரியாதது தங்களுக்குத் தெரியும் என்றோ, மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாதவற்றைத் தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்றோ ஆவியுலகத் தொடர்பில் ஈடுபடுகிறவர்கள் சொல்கிறார்கள். உதாரணத்துக்கு, குறிசொல்வதன் மூலம் அல்லது ஜோதிடம் பார்ப்பதன் மூலம் தங்களால் எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர், இறந்தவர்களிடம் தங்களால் பேச முடிவதுபோல் காட்டிக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், பில்லிசூனியம் அல்லது மாயமந்திரத்தில் ஈடுபடுகிறார்கள்; மற்றவர்களை வசியம் செய்யவும் முயற்சி செய்கிறார்கள். *

4 இன்று, ஆவியுலகத் தொடர்பை மக்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள்? லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனைச் சேர்ந்த 18 நாடுகளில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மாயமந்திரம் மற்றும் பில்லிசூனியத்தின்மேல் நம்பிக்கை இருப்பது தெரியவந்தது. கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள மக்களுக்கு ஆவிகளோடு பேச முடியும் என்ற நம்பிக்கை இருப்பதும் தெரியவந்தது. அதேபோல், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 18 நாடுகளில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சராசரியாக, இரண்டு பேருக்கு ஒருவர் பில்லிசூனியத்தை நம்புவதாகச் சொன்னார்கள். நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, ஆவியுலகத் தொடர்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சாத்தான் “உலகம் முழுவதையும்” ஏமாற்றப்பார்க்கிறான்!—வெளி. 12:9.

5. ஆவியுலகத் தொடர்பைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்?

5 யெகோவா ‘சத்தியத்தின் கடவுள்.’ (சங். 31:5) அதனால், ஆவியுலகத் தொடர்பை அவர் வெறுக்கிறார்! “உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க கூடாது. குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்” என்று யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். (உபா. 18:10-12) கிறிஸ்தவர்கள் இன்று திருச்சட்டத்தின் கீழ் இல்லை. இருந்தாலும், ஆவியுலகத் தொடர்பைப் பற்றி யெகோவா அன்று எப்படி உணர்ந்தாரோ அதேபோல்தான் இன்றும் உணருகிறார் என்பது நமக்குத் தெரியும்.—மல். 3:6.

6. (அ) ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்தி சாத்தான் எப்படி மக்களுக்குக் கெடுதல் செய்கிறான்? (ஆ) இறந்தவர்களின் நிலையைப் பற்றி பிரசங்கி 9:5 என்ன சொல்கிறது?

6 ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்தி சாத்தான் மக்களுக்குக் கெடுதல் செய்கிறான் என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால்தான், அதைப் பற்றி அவர் நம்மை எச்சரிக்கிறார். பொய்களைப் பரப்புவதற்கு சாத்தான் ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகிறான். இறந்துபோனவர்கள் எங்கேயோ தொடர்ந்து உயிர் வாழ்கிறார்கள் என்ற பொய்யும் அவற்றில் அடங்குகிறது. (பிரசங்கி 9:5-ஐ வாசியுங்கள்.) மக்கள் எப்போதும் பயத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், யெகோவாவிடமிருந்து அவர்கள் பிரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் அவன் ஆவியுலகத் தொடர்பைப் பயன்படுத்துகிறான். இதில் ஈடுபடுவதன் மூலம் யெகோவாமேல் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, பொல்லாத ஆவிகள்மேல் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய குறிக்கோள்.

பொல்லாத ஆவிகளை எப்படி எதிர்த்துப் போராடலாம்?

7. யெகோவா நம்மிடம் என்ன சொல்கிறார்?

7 ஏற்கெனவே பார்த்தபடி, சாத்தானிடமும் பேய்களிடமும் ஏமாறாமல் இருப்பதற்கு நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய விஷயத்தை யெகோவா சொல்கிறார். இப்போது, சாத்தானையும் பேய்களையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாம் என்ன படிகளை எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

8. (அ) பொல்லாத ஆவிகளை எதிர்த்து நிற்பதற்கான முக்கியமான வழி என்ன? (ஆ) இறந்தவர்களைப் பற்றி சாத்தான் பரப்புகிற பொய்யை சங்கீதம் 146:4 எப்படி அம்பலப்படுத்துகிறது?

8 கடவுளுடைய வார்த்தையைப் படியுங்கள், அதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பாருங்கள். இப்படிச் செய்வதுதான், பொல்லாத ஆவிகள் பரப்புகிற பொய்களை ஒதுக்கித்தள்ளுவதற்கான முக்கிய வழி! கடவுளுடைய வார்த்தை கூர்மையான வாள்போல் இருக்கிறது; சாத்தான் பரப்புகிற பொய்களை அம்பலப்படுத்துகிறது. (எபே. 6:17) உதாரணத்துக்கு, இறந்தவர்களால் உயிரோடு இருப்பவர்களோடு பேச முடியும் என்று நம்பப்படுகிற பொய்யை அது அம்பலப்படுத்துகிறது. (சங்கீதம் 146:4-ஐ வாசியுங்கள்.) யெகோவாவால் மட்டுமே எதிர்காலத்தைப் பற்றிச் சரியாகக் கணிக்க முடியும் என்பதையும் ஞாபகப்படுத்துகிறது. (ஏசா. 45:21; 46:10) கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படித்து, அதைப் பற்றி ஆழமாக யோசித்தால், எந்தப் பொய்களை நாம் நம்ப வேண்டும் என்று பொல்லாத ஆவிகள் நினைக்கின்றனவோ, அவற்றை ஒதுக்கித்தள்ளவும் வெறுக்கவும் நாம் தயாராக இருப்போம்.

9. ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட என்னென்ன பழக்கவழக்கங்களை நாம் பின்பற்றுவதில்லை?

9 ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்டிருக்கிற எந்தவொரு விஷயத்தையும் செய்யாதீர்கள். உண்மைக் கிறிஸ்தவர்களான நாம், ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு பழக்கவழக்கத்தையும் பின்பற்றுவதில்லை. உதாரணத்துக்கு, ஆவிகளோடு பேசுகிறவர்களிடம் நாம் போவதும் கிடையாது; இறந்துபோனவர்களிடம் பேசுவதற்கு வேறு ஏதாவது வழியைத் தேடுவதும் கிடையாது. முந்தின கட்டுரையில் பார்த்தபடி, இறந்தவர்கள் எங்கேயோ உயிர் வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படுகிற சவ அடக்க சடங்குகளில் நாம் கலந்துகொள்வது கிடையாது. அதோடு, எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஜோதிடம் பார்ப்பதோ குறிகேட்பதோ கிடையாது. (ஏசா. 8:19) இதுபோன்ற எல்லா பழக்கவழக்கங்களும் ரொம்பவே ஆபத்தானவை என்பது நமக்குத் தெரியும்; ஏனென்றால், சாத்தானோடும் பேய்களோடும் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு இவை வழிசெய்து விடலாம்.

மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களை ஒழித்துவிடுவதன் மூலமும் ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கைத் தவிர்ப்பதன் மூலமும் ஆரம்பக் கால கிறிஸ்தவர்களைப் பின்பற்றுங்கள் (பாராக்கள் 10-12)

10-11. (அ) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சிலர், சத்தியத்தைக் கற்றுக்கொண்டதும் என்ன செய்தார்கள்? (ஆ) 1 கொரிந்தியர் 10:21-ன்படி, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை நாம் ஏன் பின்பற்ற வேண்டும், அதை நாம் எப்படிச் செய்யலாம்?

10 மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களை ஒழித்துவிடுங்கள். முதல் நூற்றாண்டில், எபேசுவில் வாழ்ந்த சிலர் ஆவியுலகத் தொடர்பில் ஈடுபட்டிருந்தார்கள். சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது, அவர்கள் தீவிர நடவடிக்கை எடுத்தார்கள். “மாயமந்திரங்கள் செய்துவந்த ஏராளமான ஆட்கள் தங்களுடைய புத்தகங்களை மொத்தமாகக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்னால் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.” (அப். 19:19) பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராட தங்களால் முடிந்த எல்லாவற்றையும் அவர்கள் செய்தார்கள். அந்தப் புத்தகங்கள் விலை உயர்ந்தவையாக இருந்தன. ஆனால், அந்தப் புத்தகங்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு அல்லது விற்பதற்குப் பதிலாக, அவற்றைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்கள். புத்தகங்களின் மதிப்பைவிட, யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது.

11 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுடைய உதாரணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்? மாயமந்திரம் சம்பந்தப்பட்ட எந்தப் பொருள்கள் நம்மிடம் இருந்தாலும் அவற்றை ஒழித்துவிடுவது ஞானமானது. தாயத்துகள், மந்திரப்பொருள்கள், பொல்லாத ஆவிகளிடமிருந்து தங்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் அணிந்துகொள்கிற அல்லது தங்களிடம் வைத்துக்கொள்கிற சில பொருள்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.1 கொரிந்தியர் 10:21-ஐ வாசியுங்கள்.

12. பொழுதுபோக்கைப் பற்றி நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

12 எந்த மாதிரியான பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள். இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மாயமந்திரம் சம்பந்தப்பட்ட புத்தகங்களயோ, பத்திரிகைகளயோ, இல்லன்னா இன்டர்நெட்டில் இருக்குற அது சம்பந்தமான கட்டுரைகளயோ நான் படிக்குறேனா? எந்த மாதிரியான இசைய கேட்குறேன், எந்த மாதிரியான சினிமாவ, டிவி நிகழ்ச்சிகள பார்க்குறேன் இல்லன்னா எந்த மாதிரியான வீடியோ கேம்ஸ் விளையாடுறேன்? நான் ஈடுபடுற பொழுதுபோக்கு ஏதோ ஒரு விதத்துல ஆவியுலகத்தோட சம்பந்தப்பட்டிருக்கா? ரத்தக் காட்டேரி, பிணம் நடந்து வர்ற மாதிரியான காட்சி இல்லன்னா அமானுஷ்ய சக்தி, அந்த பொழுதுபோக்குல வருதா? மாயாஜாலம் செய்றத, வசியம் செய்றத இல்லன்னா ஆவியுலக மத்தியஸ்தர் மூலமா இன்னொருத்தரோட வாழ்க்கைய கெடுக்குறத, வெறும் நகைச்சுவை மாதிரி காட்டுதா?’ கற்பனைக் கதைகள் எல்லாமே ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்டது கிடையாதுதான்! இருந்தாலும், நீங்கள் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்குகளில் யெகோவா வெறுக்காத விஷயங்கள்தான் இருக்கின்றன என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். கடவுளுக்கு முன்னால் “சுத்தமான மனசாட்சியோடு” இருக்க நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்ய நாம் விரும்புகிறோம்.—அப். 24:16. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

13. நாம் என்ன செய்யக் கூடாது?

13 பேய்களைப் பற்றிய கதைகளைப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் நாம் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்ற விரும்புகிறோம். (1 பே. 2:21) பூமிக்கு வருவதற்கு முன்பு, இயேசு பரலோகத்தில் வாழ்ந்ததால், சாத்தானைப் பற்றியும் பேய்களைப் பற்றியும் அவருக்கு நிறைய தெரிந்திருந்தது. ஆனால், இந்தப் பொல்லாத ஆவிகளைப் பற்றிய கதைகளை அவர் பேசவில்லை. யெகோவாவைப் பற்றி மக்களுக்குச் சொல்லித்தர அவர் விரும்பினாரே தவிர, பேய்களைப் பற்றி அல்ல. அதேபோல், நாமும் பேய்களைப் பற்றிய கதைகளை மற்றவர்களிடம் பேசக் கூடாது. “ஒரு அருமையான விஷயத்தால் [நம்முடைய] இதயம் பொங்குகிறது” என்பதை நம்முடைய வார்த்தைகள் காட்ட வேண்டும்; சத்தியம்தான் அந்த அருமையான விஷயம்!—சங். 45:1.

பொல்லாத ஆவிகளை நினைத்து பயப்படுவதற்கு நமக்கு எந்தக் காரணமும் இல்லை. யெகோவாவும் இயேசுவும் தேவதூதர்களும் அதிக சக்திபடைத்தவர்கள் (பாராக்கள் 14-15) *

14-15. (அ) பொல்லாத ஆவிகளை நினைத்து நாம் ஏன் பயப்படக் கூடாது? (ஆ) தன்னுடைய மக்களை யெகோவா பாதுகாக்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

14 பொல்லாத ஆவிகளை நினைத்து பயப்படாதீர்கள். இந்த மோசமான உலகத்தில், கெட்ட விஷயங்கள் நமக்கு நடக்கலாம். எதிர்பாராத விதத்தில் நமக்கு விபத்து ஏற்படலாம், உடல்நிலை சரியில்லாமல் போகலாம், ஏன் மரணம்கூட வரலாம். ஆனால், காண முடியாத இந்தப் பொல்லாத ஆவிகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று நாம் நினைக்கக் கூடாது. “எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள்” யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. (பிர. 9:11) பேய்களைவிட தனக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது என்பதை யெகோவா ஏற்கெனவே காட்டியிருக்கிறார். உதாரணத்துக்கு, யோபுவைக் கொல்வதற்கு சாத்தானை அவர் அனுமதிக்கவில்லை. (யோபு 2:6) மோசேயின் காலத்தில், எகிப்திலிருந்த மந்திரவாதிகளைவிட தனக்குத்தான் அதிக சக்தி இருக்கிறது என்பதை அவர் நிரூபித்துக்காட்டினார். (யாத். 8:18; 9:11) பிறகு பரலோகத்தில், சாத்தான்மீதும் பேய்கள்மீதும் இயேசுவுக்கு அவர் அதிகாரம் கொடுத்தார். அதனால் இயேசு, சாத்தானையும் பேய்களையும் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளினார். வெகு சீக்கிரத்தில், சாத்தானும் பேய்களும் அதலபாதாளத்துக்குள் தள்ளப்படுவார்கள்; அங்கே அவர்கள் யாருக்கும் கெடுதல் செய்ய முடியாது.—வெளி. 12:9; 20:2, 3.

15 இன்று யெகோவா தன்னுடைய மக்களைப் பாதுகாக்கிறார் என்பதற்கு நம்மால் நிறைய ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. இதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: இந்தப் பூமி முழுவதும் நாம் சத்தியத்தைப் பற்றிப் பிரசங்கிக்கிறோம், கற்பிக்கிறோம். (மத். 28:19, 20) இதன் மூலம், பிசாசின் பொல்லாத செயல்களை நாம் வெட்ட வெளிச்சமாக்குகிறோம். நம்முடைய எல்லா வேலைகளையும் சாத்தானால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறதா? அப்படி முடிந்திருந்தால், அவன் தடுத்து நிறுத்தியிருப்பானே! ஆனால், அவனால் அப்படித் தடுத்து நிறுத்தவே முடியவில்லை! அதனால், பொல்லாத ஆவிகளை நினைத்து நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை. “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன” என்பது நமக்குத் தெரியும். (2 நா. 16:9) நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், பேய்களால் நமக்கு எந்தவொரு நிரந்தரத் தீங்கையும் ஏற்படுத்த முடியாது.

யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

16-17. பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஏன் தைரியம் தேவை என்பதைக் காட்டுகிற ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

16 பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராட நமக்குத் தைரியம் தேவை; அதுவும், நம்மீது அக்கறையாக இருக்கிற நண்பர்களோ சொந்தக்காரர்களோ நம்மை எதிர்க்கும்போது நமக்கு ரொம்பவே தைரியம் தேவை. அப்படித் தைரியமாக நடந்துகொள்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். கானா என்ற நாட்டில் வாழும் சகோதரி எரிக்காவின் உதாரணத்தைக் கவனியுங்கள். பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தபோது, அவளுக்கு 21 வயது. அவளுடைய அப்பா, மாயமந்திரம் செய்யும் ஒரு பூசாரி. அதனால், ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட சம்பிரதாயத்தில் அவள் கலந்துகொள்ள வேண்டும் என்று அவளுடைய குடும்பத்தார் எதிர்பார்த்தார்கள். அந்தச் சம்பிரதாயத்தின்படி, இறந்துபோன முன்னோர்களுடைய ஆவிகளுக்குப் படைக்கப்பட்ட இறைச்சியை அவள் சாப்பிட வேண்டியிருந்தது. ஆனால் அப்படிச் செய்யாததன் மூலம், முன்னோர்களின் ஆவியை அவள் அவமானப்படுத்திவிட்டதாக அவளுடைய குடும்பத்தார் நினைத்தார்கள். அந்த ஆவிகள் தங்களைத் தண்டித்துவிடும் என்றும் அவர்கள் நினைத்தார்கள்; அதாவது, மன ரீதியிலும் உடல் ரீதியிலும் தங்களுக்குக் கெடுதல் உண்டாக்கும் என்று நினைத்தார்கள்.

17 அந்தச் சம்பிரதாயத்தில் கலந்துகொள்ளும்படி எரிக்காவின் குடும்பத்தார் அவளைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்கவில்லை என்றால், வீட்டை விட்டு போக வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் அவள் அதை மறுத்துவிட்டாள். பிறகு என்ன நடந்தது? யெகோவாவின் சாட்சிகள் சிலர், தங்களுடைய வீட்டில் அவளுக்கு இடம் கொடுத்தார்கள். இப்படி, ஒரு புதிய குடும்பத்தைக் கொடுத்து யெகோவா அவளை ஆசீர்வதித்தார். சக கிறிஸ்தவர்கள், அவளுடைய சொந்த அண்ணன்-அக்கா போலவும், தம்பி-தங்கை போலவும் ஆனார்கள். (மாற். 10:29, 30) அவளுடைய சொந்தக்காரர்கள் அவளை ஒதுக்கித்தள்ளியபோதிலும், அவளுடைய பொருள்களை எரித்தபோதிலும், அவள் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருந்தாள்; பிறகு, ஞானஸ்நானம் எடுத்தாள். இப்போது, ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறாள். பேய்களை நினைத்து அவள் பயந்து நடுங்குவதில்லை. “யெகோவாவ பத்தி தெரிஞ்சுக்கிறதுனால கிடைக்கிற ஆசீர்வாதத்தயும், நம்மளோட அன்பான கடவுள வணங்குறதுனால கிடைக்குற விடுதலையயும் என்னோட குடும்பத்துல இருக்குறவங்க அனுபவிக்கணும்னு நான் தினமும் ஜெபம் செய்றேன்” என்று அவள் சொல்கிறாள்.

18. யெகோவாமீது நம்பிக்கை வைக்கும்போது நமக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

18 ஒருவேளை, எரிக்காவுக்கு வந்ததைப் போன்ற ஒரு பெரிய விசுவாசப் பரீட்சை நமக்கு வராமல் இருக்கலாம். இருந்தாலும், நாம் எல்லாரும் பொல்லாத ஆவிகளை எதிர்த்துப் போராட வேண்டும், யெகோவாமீது நம்பிக்கை வைக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, யெகோவா நமக்கு நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுப்பார்; சாத்தான் பரப்பும் பொய்களாலும் நாம் ஏமாற மாட்டோம். யெகோவாவுக்குச் சேவை செய்வதை நிறுத்திவிடும் அளவுக்கு நாம் பேய்களை நினைத்துப் பயப்பட மாட்டோம். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை நாம் பலப்படுத்திக்கொள்வோம். “கடவுளுக்கு அடங்கி நடங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று சீஷரான யாக்கோபு எழுதினார்.—யாக். 4:7, 8.

பாட்டு 133 மீட்படைய தேவனை நாடுங்கள்

^ பாரா. 5 பொல்லாத ஆவிகளைப் பற்றியும், அவைகளால் ஏற்படுகிற கெடுதல்களைப் பற்றியும் யெகோவா நம்மை அன்போடு எச்சரித்திருக்கிறார். இந்தப் பொல்லாத ஆவிகள் மக்களை எப்படித் தவறாக வழிநடத்துகின்றன? இவற்றை எதிர்த்துப் போராட நாம் என்னென்ன படிகளை எடுக்கலாம்? இந்தக் கட்டுரையில், பொல்லாத ஆவிகளிடம் ஏமாறாமல் இருக்க யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

^ பாரா. 3 வார்த்தைகளின் விளக்கம்: ஆவியுலகத் தொடர்பு என்பது, பேய்களோடு சம்பந்தப்பட்டிருக்கிற நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் குறிக்கிறது. ஒருவர் இறந்த பிறகு, அவருடைய உடல்தான் அழிகிறதே தவிர அவருடைய ஆத்துமா உயிர் வாழ்கிறது என்றும், முக்கியமாக, ஒரு மத்தியஸ்தர் மூலம் அந்த ஆத்துமா உயிரோடு இருப்பவர்களோடு தொடர்புகொள்கிறது என்றும் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையும் ஆவியுலகத் தொடர்பில் அடங்குகிறது. அதோடு, பில்லிசூனியமும் குறிசொல்வதும் ஆவியுலகத் தொடர்பில் அடங்குகின்றன. இந்தக் கட்டுரையில், மாயமந்திரம் என்ற வார்த்தை, அமானுஷ்ய சக்திகளோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களைக் குறிக்கிறது. ஆவிகளோடு பேசும் மத்தியஸ்தரிடம் போய் ஒருவருடைய வாழ்க்கையைக் கெடுக்கும்படி சொல்வதும் இதில் அடங்கும். அதோடு, மற்றவர்களை வசியம் செய்வது அல்லது வசியம் செய்யப்பட்டவர்களை விடுவிப்பதும் இதில் அடங்கும்.

^ பாரா. 12 பொழுதுபோக்கு சம்பந்தமாகச் சட்டங்கள் போடுவதற்கு மூப்பர்களுக்கு உரிமை இல்லை. எதைப் படிப்பது, எதைப் பார்ப்பது, என்ன விளையாடுவது என்று முடிவு செய்வதற்கு, ஒவ்வொரு கிறிஸ்தவரும் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியைப் பயன்படுத்த வேண்டும். ஞானமாக நடந்துகொள்ளும் குடும்பத் தலைவர்கள், தங்களுடைய குடும்பத்தார் தேர்ந்தெடுக்கிற பொழுதுபோக்கு, பைபிள் நியமங்களின் அடிப்படையில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்கிறார்கள்.—jw.org® வெப்சைட்டில், “சில திரைப்படங்களையும் புத்தகங்களையும் பாடல்களையும் யெகோவாவின் சாட்சிகள் தடை செய்கிறார்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள். (எங்களைப் பற்றி > யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்).

^ பாரா. 54 படங்களின் விளக்கம்: தேவதூதர்களின் படையை முன்நின்று வழிநடத்தும் சக்திபடைத்த பரலோக ராஜாவாக இயேசு காட்டப்படுகிறார்.