Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 16

மரணத்தைப் பற்றிய உண்மைகளின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்!

மரணத்தைப் பற்றிய உண்மைகளின் பக்கம் உறுதியாக நில்லுங்கள்!

“பொய்யான செய்தி எது என்பதையும், கடவுளால் கொடுக்கப்பட்ட உண்மையான செய்தி எது என்பதையும் . . . தெரிந்துகொள்கிறோம்.”—1 யோ. 4:6.

பாட்டு 137 தைரியத்தைத் தாருங்கள்

இந்தக் கட்டுரையில்... *

கடவுள் வெறுக்கிற சம்பிரதாயங்களில் கலந்துகொள்வதற்குப் பதிலாக, அன்பானவரை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் உங்கள் சொந்தக்காரர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் (பாராக்கள் 1-2) *

1-2. (அ) மனிதர்களை சாத்தான் எப்படியெல்லாம் ஏமாற்றியிருக்கிறான்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

‘பொய்க்குத் தகப்பனான’ சாத்தான், மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே மனிதர்களை ஏமாற்றிவருகிறான். (யோவா. 8:44) அவனுடைய பொய்களில், மரணத்தைப் பற்றிய தவறான போதனைகளும், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய தவறான போதனைகளும் அடங்குகின்றன. பிரபலமான நிறைய சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இந்தப் போதனைகள்தான் அடிப்படையாக இருக்கின்றன. அதனால், சொந்தக்காரர்களோ அக்கம்பக்கத்தாரோ இறக்கும்போது, நம் சகோதர சகோதரிகள் நிறைய பேர் ‘விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராட’ வேண்டியிருக்கிறது.—யூ. 3.

2 இதுபோன்ற சோதனைகள் வரும்போது, மரணத்தைப் பற்றி பைபிளிலிருக்கிற உண்மைகளின் பக்கம் நீங்கள் எப்படி உறுதியாக நிற்கலாம்? (எபே. 6:11) கடவுளுக்குப் பிடிக்காத சம்பிரதாயங்களைச் செய்யும்படி சக கிறிஸ்தவர் ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டால், நீங்கள் எப்படி அவருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கலாம்? இந்தச் சூழ்நிலைகளைச் சமாளிக்க, யெகோவாவின் வழிநடத்துதல்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். முதலில், மரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

மரணத்தைப் பற்றிய உண்மைகள்

3. முதன்முதலில் சொல்லப்பட்ட பொய்யால் என்ன ஆனது?

3 மனிதர்கள் சாக வேண்டும் என்பது கடவுளுடைய நோக்கம் கிடையாது. ஆனால், ஆதாமும் ஏவாளும் என்றென்றும் வாழ்வதற்கு, யெகோவா தந்த எளிமையான ஒரு கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. “நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை நீ சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால், அதே நாளில் கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என்பதுதான் அந்தக் கட்டளை! (ஆதி. 2:16, 17) பிறகு, சாத்தான் ஒரு பாம்பைப் பயன்படுத்தி, “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள்” என்று ஏவாளிடம் சொன்னான். அந்தப் பொய்யை நம்பி, ஏவாள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டாள். பிறகு, அவளுடைய கணவனும் அதைச் சாப்பிட்டான். (ஆதி. 3:4, 6) இப்படி, பாவமும் மரணமும் மனித குடும்பத்துக்குள் நுழைந்தன!—ரோ. 5:12.

4-5. சாத்தான் எப்படி மனிதர்களை ஏமாற்றிவருகிறான்?

4 கடவுள் சொன்னதைப் போலவே ஆதாமும் ஏவாளும் செத்துப்போனார்கள். இருந்தாலும், மரணத்தைப் பற்றிய பொய்களைப் பரப்புவதை சாத்தான் நிறுத்தவே இல்லை. காலப்போக்கில், வேறுவிதமான பொய்களையும் அவன் சொல்ல ஆரம்பித்தான். ஒரு நபர் சாகும்போது அவருடைய உடல் மட்டும்தான் அழிகிறதே தவிர ஆத்துமா எங்கேயோ உயிர் வாழ்கிறது என்பது, அவனுடைய பொய்களில் ஒன்று! இந்தப் பொய், வெவ்வேறு வடிவங்களை எடுத்திருக்கிறது; அன்றுமுதல் இன்றுவரை எண்ணற்ற மக்களை ஏமாற்றியிருக்கிறது.—1 தீ. 4:1.

5 இத்தனை பேர் ஏமாந்துபோயிருப்பதற்கு என்ன காரணம்? மரணத்தைப் பற்றிய மக்களின் உணர்வுகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, அவன் மக்களை ஏமாற்றியிருப்பதுதான்! என்றென்றும் வாழ்வதற்காகக் கடவுள் நம்மைப் படைத்திருப்பதால், சாக வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. (பிர. 3:11) மரணத்தை ஓர் எதிரியாகத்தான் நாம் பார்க்கிறோம்.—1 கொ. 15:26.

6-7. (அ) மரணத்தைப் பற்றிய உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியில் சாத்தானுக்கு வெற்றி கிடைத்திருக்கிறதா? விளக்குங்கள். (ஆ) இறந்துபோனவர்களை நினைத்து பயப்படாமல் இருக்க, பைபிளிலிருக்கிற உண்மைகள் நமக்கு எப்படி உதவுகின்றன?

6 சாத்தான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், மரணத்தைப் பற்றிய உண்மைகளை அவனால் முழுமையாக மூடி மறைக்க முடியவில்லை. சொல்லப்போனால், முன்பைவிட இப்போது நிறைய பேருக்கு மரணத்தைப் பற்றிய உண்மைகள் தெரிந்திருக்கின்றன. இறந்தவர்களின் நிலையைப் பற்றியும், இறந்தவர்களுடைய எதிர்கால நம்பிக்கையைப் பற்றியும் அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். (பிர. 9:5, 10; அப். 24:15) இந்த உண்மைகள், நமக்கு ஆறுதலைத் தருகின்றன; தேவையில்லாத பயத்தையும் சந்தேகத்தையும் போக்குகின்றன. உதாரணத்துக்கு, இறந்துபோனவர்கள் நமக்கு ஏதாவது கெடுதல் செய்துவிடுவார்கள் என்றோ, அவர்களுக்கு ஏதாவது கெடுதல் நடந்துவிடும் என்றோ யெகோவாவின் சாட்சிகளான நாம் பயப்படுவதில்லை. அவர்கள் உயிரோடு இல்லை என்பதும், அவர்களால் மனிதர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது என்பதும் நமக்குத் தெரியும். அவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறார்கள். (யோவா. 11:11-14) அதோடு, நாட்கள் கடந்துபோவதும் அவர்களுக்குத் தெரியாது என்பது நமக்குத் தெரியும். அதனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து வந்தாலும், அவர்கள் உயிரோடு இல்லாத அந்தக் காலப்பகுதி, ஒரு நொடிப்பொழுதைப் போல்தான் அவர்களுக்கு இருக்கும்.

7 இறந்துபோனவர்களின் நிலையைப் பற்றிய உண்மை தெளிவானதாகவும் எளிமையானதாகவும் நியாயமானதாகவும் இருக்கிறது, இல்லையா? இந்த உண்மைகளுக்கும் சாத்தானுடைய குழப்பமான பொய்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! பொய்களைப் பரப்புவதன் மூலம் மக்களை ஏமாற்றுவதோடு, படைப்பாளரைப் பற்றியும் அவன் இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறான். சாத்தான் எவ்வளவு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்: (1) சாத்தானுடைய பொய்கள் எப்படி யெகோவாவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றன? (2) மரணத்தைப் பற்றிய பொய்கள் கிறிஸ்துவின் மீட்புப் பலியின் மீது இருக்கும் நம்பிக்கையை எப்படிக் குறைக்கின்றன? (3) மனிதர்களுடைய வேதனைகளையும் கஷ்டங்களையும் அவை எப்படி அதிகமாக்கி இருக்கின்றன?

சாத்தானுடைய பொய்களால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்

8. எரேமியா 19:5 சொல்கிறபடி, மரணத்தைப் பற்றி சாத்தான் பரப்பியிருக்கும் பொய்கள், யெகோவாவைப் பற்றி எப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றன?

8 இறந்தவர்களைப் பற்றிய பொய்கள் யெகோவாவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றன. இந்தப் பொய்களில், எரிகிற நெருப்பில் இறந்தவர்கள் வாட்டி வதைக்கப்படுவார்கள் என்ற போதனையும் ஒன்று. இதுபோன்ற போதனைகள், அன்பான கடவுளுக்கு பிசாசின் குணங்கள் இருப்பதுபோல் காட்டுகின்றன! (1 யோ. 4:8) இதைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? முக்கியமாக, யெகோவாவுக்கு எப்படி இருக்கும்? எல்லா விதமான கொடூரமான செயல்களையும் அவர் வெறுக்கிறாரே!எரேமியா 19:5-ஐ வாசியுங்கள்.

9. யோவான் 3:16 மற்றும் 15:13-ல் குறிப்பிடப்பட்டிருக்கிற மீட்புப் பலியின் மீது இருக்கும் நம்பிக்கையை சாத்தானின் பொய்கள் எப்படிக் குறைக்கின்றன?

9 மரணத்தைப் பற்றி சாத்தான் பரப்பியிருக்கும் பொய்கள் கிறிஸ்துவின் மீட்புப் பலியின் மீது இருக்கும் நம்பிக்கையைக் குறைக்கின்றன. (மத். 20:28) மனிதர்களுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற கருத்து, சாத்தான் பரப்பியிருக்கிற இன்னொரு பொய். அந்தக் கருத்து உண்மையாக இருந்தால், எல்லா மனிதர்களும் என்றென்றும் வாழ்வார்கள் என்றுதானே அர்த்தம்? அப்படியென்றால், நாம் முடிவில்லாத வாழ்வைப் பெற, கிறிஸ்து தன்னுடைய உயிரை மீட்புப் பலியாகக் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே! மனிதர்கள்மேல் இதுவரை காட்டப்பட்ட அன்பிலேயே கிறிஸ்துவின் பலியின் மூலம் காட்டப்பட்ட அன்புதான் உன்னதமான அன்பு! (யோவான் 3:16; 15:13-ஐ வாசியுங்கள்.) இந்த விலைமதிக்க முடியாத பரிசை குறைத்து மதிப்பிடுகிற போதனைகளைப் பற்றி, யெகோவாவும் இயேசுவும் எப்படி உணருவார்கள் என்று யோசித்துப்பாருங்கள்.

10. மரணத்தைப் பற்றி சாத்தான் பரப்பியிருக்கும் பொய்கள், மனிதர்களுடைய வேதனைகளையும் கஷ்டங்களையும் எப்படி அதிகமாக்கி இருக்கின்றன?

10 சாத்தானின் பொய்கள் மனிதர்களின் வேதனைகளையும் கஷ்டங்களையும் அதிகமாக்குகின்றன. குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு தவிக்கிற பெற்றோர்களிடம், அந்தக் குழந்தையைக் கடவுள் எடுத்துக்கொண்டதாக, அதுவும் பரலோகத்தில் ஒரு தேவதூதராக இருப்பதற்காக அந்தக் குழந்தையைக் எடுத்துக்கொண்டதாக, சொல்லப்படலாம். சாத்தானின் இந்தப் பொய் அவர்களுடைய வேதனையைக் குறைக்கிறதா, அதிகமாக்குகிறதா? சர்ச்சின் கோட்பாடுகளை எதிர்த்தவர்களை மரக்கம்பத்தில் கட்டி எரித்து சித்திரவதை செய்வது உட்பட வேறுசில சித்திரவதைகளை நியாயப்படுத்துவதற்காக, நரகத்தைப் பற்றிய பொய் போதனை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “நரகத்தில் என்றென்றும் சித்திரவதை செய்யப்படுவது எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகத்தான்” சர்ச்சின் கோட்பாடுகளை எதிர்ப்பவர்கள் இப்படிச் சித்திரவதை செய்யப்பட்டதாக, இந்தத் தண்டனையைக் கொடுத்த சிலர் நம்பியிருக்கலாம் என்று ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணையை விவரிக்கிற ஒரு புத்தகம் சொல்கிறது. இப்படிச் சித்திரவதையை அனுபவித்தால், இறப்பதற்கு முன்பு அவர்கள் மனம் திருந்துவார்கள் என்றும், நரகத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்றும் இந்தத் தண்டனையைக் கொடுத்தவர்கள் நம்பியிருக்கலாம் என்பதாகவும் அந்தப் புத்தகம் சொல்கிறது. இறந்தவர்களை வணங்க வேண்டும், அவர்களை கௌரவப்படுத்த வேண்டும், அவர்களுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிறைய நாடுகளில் இருக்கிற மக்கள் நினைக்கிறார்கள். சில விதமான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, இறந்துபோன தங்கள் முன்னோர்களை சாந்தப்படுத்த விரும்புகிறார்கள். சாத்தான் பரப்பியிருக்கும் பொய்களின் அடிப்படையிலான எந்த நம்பிக்கைகளும் உண்மையான ஆறுதலைத் தருவதில்லை! அவை தேவையில்லாத கவலையை, ஏன், பயத்தைக்கூட ஏற்படுத்துகின்றன.

பைபிளிலிருக்கிற உண்மைகளின் பக்கம் எப்படி உறுதியாக நிற்கலாம்?

11. நம்மீது அக்கறையாக இருக்கிற சொந்தக்காரர்கள் அல்லது நண்பர்கள், பைபிளுக்கு விரோதமாகச் செயல்படும்படி நம்மை எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?

11 மரணம் சம்பந்தப்பட்ட வேதப்பூர்வமற்ற பழக்கவழக்கங்களில் கலந்துகொள்ளும்படி நம்மீது அக்கறை காட்டுகிற சொந்தக்காரர்களோ நண்பர்களோ நம்மைக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது, யெகோவாமேலும் பைபிள்மேலும் அன்பு இருந்தால், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நம் தீர்மானம் பலப்படும். இறந்துபோனவரின் மீது நமக்கு அன்பு இல்லை அல்லது அவர்மீது நமக்கு மரியாதை இல்லை என்று சொல்வதன் மூலம், அவர்கள் நம்மை அவமானப்படுத்த முயற்சி செய்யலாம். அல்லது நாம் நடந்துகொள்வதைப் பார்த்து, இறந்துபோனவர் நமக்குக் கெடுதல் செய்வார் என்று சொல்லலாம். இதுபோன்ற சமயங்களில், பைபிளிலிருக்கிற உண்மைகளின் பக்கம் எப்படி உறுதியாக நிற்கலாம்? பின்வரும் பைபிள் நியமங்களை எப்படிப் பின்பற்றலாம் என்பதைக் கவனியுங்கள்.

12. இறந்துபோனவர்களைப் பற்றிய எந்தச் சம்பிரதாயங்கள் வேதப்பூர்வமற்றவை?

12 வேதப்பூர்வமற்ற நம்பிக்கைகளிலிருந்தும் சம்பிரதாயங்களிலிருந்தும் ‘பிரிந்திருக்க’ தீர்மானமாக இருங்கள். (2 கொ. 6:17) ஒரு நபர் இறந்த பிறகு, அவருடைய “ஆவி” அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் என்றும், தன்னை மோசமாக நடத்தியவர்களை அது தண்டிக்கும் என்றும் கரீபிய நாடுகளில் ஒன்றில் இருக்கிற நிறைய பேர் நம்புகிறார்கள். அந்த “ஆவி” “சமுதாயத்துக்குக்கூட கெடுதல் செய்யலாம்” என்று ஒரு மேற்கோள் சொல்கிறது. ஆப்பிரிக்காவில், இறந்துபோனவருடைய வீட்டில் இருக்கிற கண்ணாடிகளை மூடிவைப்பதும், இறந்தவருடைய படங்களை சுவர் பக்கமாக திருப்பிவைப்பதும் வழக்கம். இறந்தவர்கள் தங்களையே பார்த்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படிச் செய்வதாக சிலர் சொல்கிறார்கள். யெகோவாவின் ஊழியர்களாக, சாத்தானின் பொய்களை ஆதரிக்கும் கட்டுக்கதைகளை நாம் நம்புவதில்லை; அவற்றோடு சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதில்லை.—1 கொ. 10:21, 22.

பைபிளுடைய கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக ஆராய்ச்சி செய்வதும், யெகோவாவின் சாட்சியாக இல்லாத சொந்தக்காரர்களோடு நல்ல பேச்சுத்தொடர்பு வைத்துக்கொள்வதும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும் (பாராக்கள் 13-14) *

13. ஒரு சம்பிரதாயத்தைச் செய்யலாமா வேண்டாமா என்பதில் சந்தேகம் இருந்தால், யாக்கோபு 1:5-ன்படி நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

13 ஒரு சம்பிரதாயத்தை அல்லது பழக்கவழக்கத்தைப் பின்பற்றலாமா வேண்டாமா என்பதில் சந்தேகம் இருந்தால், யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; தெய்வீக ஞானத்தைத் தரும்படி கேளுங்கள். (யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.) பிறகு, நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்யுங்கள். தேவைப்பட்டால், உங்கள் சபை மூப்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் சொல்ல மாட்டார்கள்; இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நியமங்களைப் போன்ற மற்ற பைபிள் நியமங்களைக் கண்டுபிடிக்க உதவுவார்கள். இப்படிச் செய்யும்போது, உங்கள் “பகுத்தறியும் திறன்களை” உங்களால் பயிற்றுவிக்க முடியும். “சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க” இந்தத் திறன்கள் உங்களுக்கு உதவும்.—எபி. 5:14.

14. மற்றவர்களுக்குத் தடைக்கல்லாக இருப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

14 “எல்லாவற்றையும் கடவுளுடைய மகிமைக்காகவே செய்யுங்கள். . . . தடைக்கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.” (1 கொ. 10:31, 32) ஒரு சம்பிரதாயத்தையோ பாரம்பரிய பழக்கவழக்கத்தையோ பின்பற்றலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு முன்பு, அது மற்றவர்களுடைய மனசாட்சியை, குறிப்பாக சக கிறிஸ்தவர்களுடைய மனசாட்சியை, எப்படிப் பாதிக்கும் என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். நாம் ஒருபோதும் மற்றவர்களுக்குத் தடைக்கல்லாக இருக்க விரும்ப மாட்டோம்! (மாற். 9:42) அதேசமயத்தில், யெகோவாவின் சாட்சியாக இல்லாதவர்களையும் நாம் அநாவசியமாகப் புண்படுத்த மாட்டோம். அவர்களிடம் மரியாதையோடு பேசுவதற்கு அன்பு நம்மைத் தூண்டும்; இது யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும். நாம் அவர்களோடு வாக்குவாதம் செய்யவோ, அவர்களுடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களைக் கிண்டல் செய்யவோ மாட்டோம். அன்பு வலிமையானது! அந்த அன்போடு கரிசனையும் மரியாதையும் கலந்திருந்தால், நம்மை எதிர்ப்பவர்களின் இதயத்தைக்கூட இளக வைக்க முடியும்.

15-16. (அ) உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வது ஏன் ஞானமானது? ஓர் உதாரணம் கொடுங்கள். (ஆ) ரோமர் 1:16-ல் இருக்கிற பவுலின் வார்த்தைகள் நமக்கு எப்படிப் பொருந்துகின்றன?

15 நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை உங்கள் சமுதாயத்துக்குத் தெரியப்படுத்துங்கள். (ஏசா. 43:10) உங்கள் குடும்பத்தில் யாராவது இறக்கும்போது, ஏதோவொரு சம்பிரதாயத்தில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கோபப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி முன்கூட்டியே சொல்லியிருந்தால், இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிப்பது சுலபமாக இருக்கலாம். மொசாம்பிக்கைச் சேர்ந்த சகோதரர் ஃபிரான்சிஸ்கோவின் அனுபவத்தைக் கவனியுங்கள். “என் மனைவி கரோலினாவும் நானும் சத்தியத்தைத் தெரிந்துகொண்டபோது, நாங்கள் இனிமேலும் இறந்தவர்களை வணங்க மாட்டோம் என்று எங்கள் குடும்பத்தாரிடம் சொன்னோம். கரோலினாவின் அக்கா இறந்தபோது, எங்கள் தீர்மானத்துக்கு ஒரு சோதனை வந்தது. இறந்தவரின் உடலை மதசடங்குகள் செய்து குளிக்கவைப்பது உள்ளூர் வழக்கமாக இருந்தது. அதோடு, இறந்தவரை குளிக்கவைத்த இடத்தில், அவருடைய நெருங்கிய சொந்தக்காரர் மூன்று இரவுகள் தூங்க வேண்டும். இப்படிச் செய்வது, இறந்தவரின் ஆவியைச் சாந்தப்படுத்துவதாக நம்பப்பட்டது. இறந்தவரைக் குளிக்கவைத்த இடத்தில் கரோலினா தூங்க வேண்டும் என்று அவளுடைய குடும்பத்தார் எதிர்பார்த்தார்கள்” என்று ஃபிரான்சிஸ்கோ எழுதினார்.

16 இந்தச் சூழ்நிலையை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? “நாங்கள் யெகோவாவை நேசித்ததாலும், அவரைப் பிரியப்படுத்த விரும்பியதாலும் அந்தச் சம்பிரதாயங்களில் கலந்துகொள்ளவில்லை. அதனால், கரோலினாவின் குடும்பத்தார் பயங்கரமாகக் கோபப்பட்டார்கள். இறந்துபோனவரை நாங்கள் மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இனிமேல் அவர்கள் எங்களைப் பார்க்க வர மாட்டார்கள் என்றும், எங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் என்றும் சொன்னார்கள். எங்கள் நம்பிக்கைகளைப் பற்றி முன்கூட்டியே சொல்லியிருந்ததால், அவர்கள் கோபமாக இருந்தபோது நாங்கள் எதுவும் பேசவில்லை. சொந்தக்காரர்களில் சிலர், இதைப் பற்றியெல்லாம் நாங்கள் முன்னதாகவே சொல்லியிருப்பதைக் குறிப்பிட்டு எங்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள். காலங்கள் போகப்போக, கரோலினாவின் சொந்தக்காரர்களுடைய கோபம் தணிந்தது; நாங்கள் அவர்களோடு சமாதானம் செய்ய முடிந்தது. சொல்லப்போனால், பைபிள் பிரசுரங்களைக் கேட்டு சிலர் எங்கள் வீட்டுக்குக்கூட வந்தார்கள்” என்று ஃபிரான்சிஸ்கோ விளக்கினார். மரணத்தைப் பற்றி பைபிள் சொல்லும் உண்மைகளின் பக்கம் உறுதியாக நிற்பதற்கு நாம் ஒருபோதும் வெட்கப்பட மாட்டோம்!ரோமர் 1:16-ஐ வாசியுங்கள்.

துக்கத்தில் தவிப்பவர்களை ஆறுதல்படுத்துங்கள், ஆதரியுங்கள்

அன்பானவர்களை இழந்த துக்கத்தில் தவிப்பவர்களுக்கு, உண்மையான நண்பர்கள் ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள் (பாராக்கள் 17-19) *

17. துக்கத்தில் தவிக்கும் சக கிறிஸ்தவருக்கு நல்ல நண்பனாக இருக்க எது உதவும்?

17 சக கிறிஸ்தவர் ஒருவர் அன்பானவரை இழந்து தவிக்கும்போது, நாம் ‘உண்மையான நண்பனாக’ இருக்க வேண்டும். ‘கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாகவும்’ இருக்க வேண்டும். (நீதி. 17:17) வேதப்பூர்வமற்ற பழக்கவழக்கங்களைப் பின்பற்றச் சொல்லி துக்கத்தில் இருக்கிற ஒரு சகோதரரோ சகோதரியோ கட்டாயப்படுத்தப்படும்போது, நாம் எப்படி ஒரு ‘நல்ல நண்பனாக’ இருக்கலாம்? மற்றவர்களை ஆறுதல்படுத்த உதவும் இரண்டு பைபிள் நியமங்களைப் பார்க்கலாம்.

18. இயேசு ஏன் அழுதார், அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

18 “அழுகிறவர்களோடு அழுங்கள்.” (ரோ. 12:15) துக்கத்தில் தவிப்பவர்களிடம் என்ன பேசுவது என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். சிலசமயங்களில், நம்முடைய வார்த்தைகளைவிட கண்ணீர் அதிகம் பேசும். இயேசுவின் நண்பனான லாசரு இறந்தபோது, தங்களுடைய பாசமான சகோதரனை இழந்த துக்கத்தில் மரியாளும் மார்த்தாளும் அழுதார்கள்; மற்றவர்களும் தங்களுடைய நண்பனை இழந்த துக்கத்தில் அழுதார்கள். நான்கு நாட்கள் கழித்து இயேசு வந்தபோது, அவரும் “கண்ணீர்விட்டார்.” தான் லாசருவை சீக்கிரத்தில் உயிர்த்தெழுப்பப்போவது தெரிந்திருந்தும் அவர் கண்ணீர்விட்டார். (யோவா. 11:17, 33-35) லாசருவின் மரணத்தைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார் என்பதை இது காட்டியது. அதோடு, லாசருவின் குடும்பத்தை இயேசு எவ்வளவு நேசித்தார் என்பதையும் இது காட்டியது. மரியாளுக்கும் மார்த்தாளுக்கும் இது நிச்சயம் ஆறுதலாக இருந்திருக்கும். அதேபோல், நம்முடைய சகோதரர்களும் நம்முடைய அன்பையும் அனுதாபத்தையும் புரிந்துகொள்ளும்போது, தாங்கள் தனியாக இல்லை என்பதையும் தங்கள்மீது அக்கறையையும் ஆதரவையும் காட்டுகிற நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வார்கள்.

19. துக்கத்தில் இருக்கும் சக கிறிஸ்தவரை ஆறுதல்படுத்த பிரசங்கி 3:7 எப்படி உதவும்?

19 “பேசுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது, பேசாமல் இருப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது.” (பிர. 3:7) துக்கத்தில் இருக்கும் சக கிறிஸ்தவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதே அவருக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். மனதில் இருப்பதையெல்லாம் அவர் கொட்டட்டும்! ஒருவேளை, அவர் ‘ஏதேதோ பேசினால்’ நீங்கள் புண்பட்டுவிடாதீர்கள். (யோபு 6:2, 3) யெகோவாவின் சாட்சியாக இல்லாத சொந்தக்காரர்களுடைய அழுத்தத்தால் அவருடைய மனவேதனை அதிகமாகியிருக்கலாம். அதனால், அவரோடு சேர்ந்து ஜெபம் செய்யுங்கள். அவருக்குப் பலத்தையும் மனத் தெளிவையும் தரச்சொல்லி ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ கெஞ்சிக் கேளுங்கள். (சங். 65:2) சூழ்நிலை அனுமதித்தால், அவரோடு சேர்ந்து பைபிள் படியுங்கள். அல்லது, நம்முடைய பிரசுரங்களிலிருந்து பொருத்தமான கட்டுரைகளை வாசியுங்கள்; உற்சாகத்தைத் தருகிற வாழ்க்கை சரிதைகளைப் போன்ற கட்டுரைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

20. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

20 மரணத்தைப் பற்றிய உண்மைகளையும், நினைவுக் கல்லறைகளில் இருப்பவர்களுக்காகக் காத்திருக்கிற எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய உண்மைகளையும் தெரிந்துவைத்திருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (யோவா. 5:28, 29) அதனால், நம்முடைய சொல்லாலும் செயலாலும் பைபிள் உண்மைகளின் பக்கம் உறுதியாக நிற்கலாம். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, அவற்றைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லலாம். மக்களைத் தொடர்ந்து ஆன்மீக இருளிலேயே வைத்திருக்க சாத்தான் இன்னொரு விதத்திலும் முயற்சி செய்கிறான். அதுதான் ஆவியுலகத் தொடர்பு! பேய்த்தனமான இந்தக் கண்ணியோடு சம்பந்தப்பட்டிருக்கும் பழக்கவழக்கங்களையும் பொழுதுபோக்குகளையும் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 107 யெகோவாவின் மா மலைக்கு வருக!

^ பாரா. 5 சாத்தானும் அவனுடைய பேய்களும், மரணத்தைப் பற்றிய பொய்களைப் பரப்புவதன் மூலம் மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள். இந்தப் பொய்களை நம்புவதால், நிறைய வேதப்பூர்வமற்ற சம்பிரதாயங்களை மக்கள் பின்பற்றுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பிரதாயங்களைப் பின்பற்றச் சொல்லி மற்றவர்கள் கட்டாயப்படுத்தும்போது, நாம் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம்? இதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 55 படங்களின் விளக்கம்: அன்பானவரை இழந்து தவிக்கும் சொந்தக்காரருக்கு, யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அவருடைய குடும்பத்தார் ஆறுதல் சொல்கிறார்கள்.

^ பாரா. 57 படங்களின் விளக்கம்: சவ அடக்க நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சம்பிரதாயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்த பிறகு, யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒருவர், தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி சொந்தக்காரர்களிடம் விளக்குகிறார்.

^ பாரா. 59 படங்களின் விளக்கம்: அன்பானவரை இழந்து தவிக்கும் ஒருவருக்கு சபை மூப்பர்கள் ஆறுதலையும் ஆதரவையும் தருகிறார்கள்.