Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 3

உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

“எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்.”—நீதி. 4:23.

பாட்டு 52 இதயத்தைக் காத்திடு

இந்தக் கட்டுரையில்... *

1-3. (அ) சாலொமோனை யெகோவா நேசித்ததற்கு என்ன காரணம், சாலொமோன் என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவித்தார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

இளம் வயதிலேயே சாலொமோன் இஸ்ரவேல் தேசத்துக்கு ராஜாவாக ஆனார். அவருடைய ஆட்சிக் காலத்தின் ஆரம்பத்தில் யெகோவா அவருடைய கனவில் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்” என்று கேட்டார். அதற்கு சாலொமோன், “நான் சின்னப் பையன், அனுபவம் இல்லாதவன். . . . அதனால், உங்களுடைய மக்களுக்கு நீதி வழங்குவதற்கு . . . உங்களுக்குக் கீழ்ப்படிகிற இதயத்தை அடியேனுக்குக் கொடுங்கள்” என்று சொன்னார். (1 ரா. 3:5-10) ‘கீழ்ப்படிகிற இதயம்’! எவ்வளவு தாழ்மையான ஒரு வேண்டுகோள்! சாலொமோனை யெகோவா நேசித்தார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! (2 சா. 12:24) அந்த இளம் ராஜாவின் வேண்டுகோள் யெகோவாவுக்கு அவ்வளவு பிடித்திருந்ததால், “ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ள இதயத்தை” அவருக்குக் கொடுத்தார்.—1 ரா. 3:12.

2 யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவரை சாலொமோன் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவித்தார். “இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயருக்காக” ஓர் ஆலயத்தைக் கட்டும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. (1 ரா. 8:20) ஞானத்துக்கு சாலொமோன் பேர்போனவராக இருந்தார்; அந்த ஞானத்தைக் கடவுள்தான் கொடுத்திருந்தார். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் சாலொமோன் சொன்ன விஷயங்கள், பைபிளின் மூன்று புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நீதிமொழிகள் புத்தகம்.

3 இதயம் என்ற வார்த்தை, நீதிமொழிகள் புத்தகத்தில் 51 தடவைகள் வருகின்றன. உதாரணத்துக்கு, “எல்லாவற்றையும்விட முக்கியமாக உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்” என்று நீதிமொழிகள் 4:23 சொல்கிறது. இந்த வசனத்தில், ‘இதயம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? இதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இன்னும் இரண்டு கேள்விகளுக்கான பதில்களையும் பார்ப்போம். அவை: நம் இதயத்தைச் சாத்தான் எப்படிக் கறைபடுத்துகிறான்? இதயத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றால், இந்த முக்கியமான கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘உங்கள் இதயம்’—எதைக் குறிக்கிறது?

4-5. (அ) நீதிமொழிகள் 4:23-ல் இருக்கும் ‘இதயம்’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? (ஆ) நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள ஆரோக்கியத்தைப் பற்றிய உதாரணம் எப்படி உதவுகிறது?

4 நீதிமொழிகள் 4:23-ல் இருக்கிற ‘இதயம்’ என்ற வார்த்தை உள்ளான மனிதனை அல்லது உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘இதயம்’ என்ற வார்த்தை நம்முடைய யோசனைகளையும், உணர்வுகளையும், எண்ணங்களையும், ஆசைகளையும் குறிக்கிறது. முக்கியமாக, வெளித்தோற்றத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அல்ல, உள்ளுக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

5 நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது ரொம்பவே முக்கியம். இதைப் புரிந்துகொள்ள, உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். முதலாவதாக, உடலளவில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்; தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், ஆன்மீக விதத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், சத்தான ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்; யெகோவாமேல் இருக்கும் விசுவாசத்தைத் தவறாமல் காட்ட வேண்டும். அதற்கு, நாம் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி செய்ய வேண்டும்; நம் விசுவாசத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும். (ரோ. 10:8-10; யாக். 2:26) இரண்டாவதாக, நம்முடைய வெளித்தோற்றத்தை வைத்து நாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், உள்ளுக்குள் நமக்கு ஏதோவொரு வியாதி இருக்கலாம். அதேபோல், ஆன்மீக விஷயங்களில் நாம் தினமும் சுறுசுறுப்பாக இருப்பதால், விசுவாசத்தில் பலமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், கெட்ட ஆசைகள் நமக்குள் வேர்விட ஆரம்பித்திருக்கலாம். (1 கொ. 10:12; யாக். 1:14, 15) தன்னுடைய யோசனைகளின் மூலம் சாத்தான் நம்முடைய யோசனைகளைக் கறைபடுத்த முயற்சி செய்வான் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால், அதை அவன் எப்படிச் செய்வான்? நம்மைப் எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

சாத்தான் நம் இதயத்தை எப்படிக் கறைபடுத்துகிறான்?

6. சாத்தான் எதற்கு ஆசைப்படுகிறான், அதை நிறைவேற்ற என்ன செய்கிறான்?

6 சாத்தான், யெகோவாவின் தராதரங்களை ஒதுக்கித்தள்ளும் ஒரு கலகக்காரன்; சுயநலவாதி! நாமும் அவனைப் போலவே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால், அவனைப் போலவே யோசிப்பதற்கும் செயல்படுவதற்கும் அவனால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியாது. அதனால், வேறு வழிகளில் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்கிறான். உதாரணத்துக்கு, அவனால் கறைபடுத்தப்பட்டிருக்கிற மக்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கும்படி செய்கிறான். (1 யோ. 5:19) கெட்ட ஆட்களோடு சகவாசம் வைத்துக்கொண்டால், நம்முடைய யோசிக்கும் விதமும் செயல்படும் விதமும் பாதிக்கப்படும் என்று நமக்குத் தெரிந்திருந்தும், நாம் அவர்களோடு நேரம் செலவிடுவோம் என்று அவன் எதிர்பார்க்கிறான். (1 கொ. 15:33) அவனுடைய தந்திரம் சாலொமோன் ராஜாவின் விஷயத்தில் பலித்தது. பொய்த் தெய்வங்களைக் கும்பிட்ட பெண்கள் நிறைய பேரை அவர் கல்யாணம் செய்துகொண்டார். கடைசியில், அவருடைய “மனைவிகள் அவர்மீது அதிக செல்வாக்கு செலுத்தினார்கள்.” அதோடு, யெகோவாவைவிட்டு “கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இதயத்தை வழிவிலகச் செய்தார்கள்.”—1 ரா. 11:3; அடிக்குறிப்பு.

தன்னுடைய யோசனைகளின் மூலம் சாத்தான் நம்முடைய இதயத்தைக் கறைபடுத்தாதபடி நாம் எப்படிக் கவனமாக இருக்கலாம்? (பாரா 7) *

7. தன்னுடைய யோசனைகளைப் பரப்ப சாத்தான் வேறு எதையும் பயன்படுத்துகிறான், நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?

7 திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் பயன்படுத்தி சாத்தான் தன்னுடைய யோசனைகளைப் பரப்புகிறான். கதை சொல்வது அல்லது கதை கேட்பது என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு மட்டுமே அல்ல என்று அவனுக்குத் தெரியும். ஏனென்றால், ஒருவர் எப்படி யோசிக்க வேண்டும், உணர வேண்டும், செயல்பட வேண்டும் என்பதைக் கதைகள் கற்றுக்கொடுக்கின்றன. இயேசுவும் கதைகள் மூலம் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். உதாரணத்துக்கு, நல்ல சமாரியன் மற்றும் ஊதாரி மகனின் கதைகள் உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். (மத். 13:34; லூக். 10:29-37; 15:11-32) சாத்தானுடைய யோசனைகளால் கறைபட்டிருக்கும் ஒருவர், கதைகளைப் பயன்படுத்தி நம்மையும் கறைபடுத்தலாம். அதனால், நாம் நன்றாக யோசித்துச் செயல்பட வேண்டும். சில திரைப்படங்களும் டிவி நிகழ்ச்சிகளும் நல்ல பொழுதுபோக்காக இருக்கலாம், சில விஷயங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கலாம்; அவை நம்மைக் கறைபடுத்தாமல் இருக்கலாம். ஆனாலும், நாம் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும். அதனால், பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும்போது, ‘நான் பார்க்குற திரைப்படமோ டிவி நிகழ்ச்சியோ பாவ ஆசைகளுக்கு அடிபணிய என்னை தூண்டுமா?’ என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம். (கலா. 5:19-21; எபே. 2:1-3) நீங்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி சாத்தானைப் போலவே யோசிக்க உங்களைத் தூண்டுவதாக உணர்கிறீர்களா? அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? தொற்றுநோய் நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருக்க எவ்வளவு ஜாக்கிரதையாக இருப்போமோ, அவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும்.

8. பிள்ளைகள் தங்கள் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள பெற்றோர்கள் எப்படி உதவலாம்?

8 பெற்றோர்களே, சாத்தானால் உங்கள் பிள்ளைகளுடைய இதயம் கறைபடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்; அது உங்களுடைய முக்கியப் பொறுப்பு! இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். எந்த நோயும் உங்கள் பிள்ளைகளுக்கு வராதபடி பார்த்துக்கொள்வதில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள். அதற்காக, வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பீர்கள், நோயை உண்டாக்கும் எதுவும் உங்கள் வீட்டில் இல்லாதபடி பார்த்துக்கொள்வீர்கள். அதேபோல், சாத்தானுடைய யோசனைகளை வெளிக்காட்டும் சில திரைப்படங்களும், டிவி நிகழ்ச்சிகளும், எலக்ட்ரானிக் கேம்ஸ்களும், வெப்சைட்டுகளும் உங்கள் பிள்ளைகளின் இதயத்தைக் கறைபடுத்திவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்வது ரொம்ப முக்கியம்! பிள்ளைகள் ஆன்மீக விதத்தில் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பை யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். (நீதி. 1:8; எபே. 6:1, 4) அதனால், பைபிளின் அடிப்படையில் சில சட்டங்களைப் போடத் தயங்காதீர்கள். எதைப் பார்க்கலாம், எதைப் பார்க்கக் கூடாது என்று உங்கள் இளம் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். அதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவுங்கள். (மத். 5:37) பிள்ளைகள் வளர வளர, யெகோவாவின் தராதரங்களுக்கு ஏற்றபடி எது சரி, எது தவறு என்பதை அவர்களாகவே பகுத்தறிய பயிற்சி கொடுங்கள். (எபி. 5:14) நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதிலிருந்து கற்றுக்கொள்வதைவிட, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதிலிருந்து அதிகம் கற்றுக்கொள்வார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.—உபா. 6:6, 7; ரோ. 2:21.

9. சாத்தான் பரப்பும் ஒரு கருத்து என்ன, அது ஏன் ஆபத்தானது?

9 யெகோவாவை நம்பாமல் மனிதர்களுடைய ஞானத்தை நம்பும்படி செய்வதன் மூலமும் சாத்தான் நம் இதயத்தைக் கறைபடுத்த முயற்சி செய்கிறான். (கொலோ. 2:8) சாத்தான் பரப்பும் ஒரு கருத்தை, அதாவது பணக்காரராவதுதான் வாழ்க்கையின் முக்கிய லட்சியமாக இருக்க வேண்டும், என்ற கருத்தைப் பற்றி யோசித்துப்பாருங்கள். இப்படி யோசிப்பவர்கள், ஒருவேளை பணக்காரர்களாக ஆகலாம் அல்லது ஆகாமலும் போகலாம். எப்படியிருந்தாலும் சரி, அவர்கள் ஆபத்தில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால், பணம் சம்பாதிப்பதிலேயே அவர்கள் குறியாக இருப்பதால், ஆரோக்கியத்தையும் குடும்ப உறவுகளையும், ஏன் கடவுளோடு இருக்கும் நட்பையும்கூட தியாகம் செய்துவிடுகிறார்கள். (1 தீ. 6:10) பணத்தைப் பற்றிய சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள நம் பரலோக அப்பா நமக்கு உதவி செய்கிறார். அதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்!—பிர. 7:12; லூக். 12:15.

இதயத்தை நாம் எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

மோசமான விஷயங்கள் நம் இதயத்தைக் கறைபடுத்தாமல் இருப்பதற்கு, அந்தக் காலத்திலிருந்த காவல்காரர்களையும் வாயிற்காவலர்களையும் போல நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் (பாராக்கள் 10-11) *

10-11. (அ) நம்மைப் பாதுகாத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) கடந்த காலத்திலிருந்த காவல்காரர்கள் என்ன செய்வார்கள், நம் மனசாட்சி எப்படிக் காவல்காரனைப் போல செயல்படுகிறது?

10 இதயத்தைப் பாதுகாப்பதில் நாம் வெற்றிபெற வேண்டும் என்றால், முதலில் ஆபத்துகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். பிறகு, உடனடியாகச் செயல்பட வேண்டும். நீதிமொழிகள் 4:23-ல் “பாதுகாத்துக்கொள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை, காவல்காரன் செய்யும் வேலையை ஞாபகப்படுத்துகிறது. சாலொமோன் ராஜாவின் காலத்தில், நகரத்தின் மதில்கள்மேல் காவல்காரர்கள் நின்றுகொண்டு ஆபத்து வருகிறதா என்று பார்ப்பார்கள்; அப்படி ஆபத்து ஏதாவது வந்தால் உடனடியாக எச்சரிக்கை ஒலி எழுப்புவார்கள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்யும்போது, சாத்தான் நம் யோசனைகளைக் கறைபடுத்தாதபடி பார்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

11 கடந்த காலத்தில், வாயிற்காவலர்களோடு சேர்ந்துதான் காவல்காரர்கள் வேலை செய்தார்கள். (2 சா. 18:24-26) எதிரிகள் நகரத்தைத் தாக்க வரும்போது, வாயிற்கதவுகள் மூடப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்வதன் மூலம் அவர்கள் நகரத்தைப் பாதுகாத்தார்கள். (நெ. 7:1-3) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட நம்முடைய மனசாட்சி, * காவல்காரனைப் போல செயல்படுகிறது. சாத்தான் நம் இதயத்தைத் தாக்க முயற்சி செய்யும்போது, அதாவது நம் யோசனைகளையும் உணர்வுகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் கெடுக்க முயற்சி செய்யும்போது, அது நம்மை எச்சரிக்கிறது. நம் மனசாட்சி அந்த எச்சரிக்கை ஒலியை எழுப்பும்போதெல்லாம் நாம் அதைக் கேட்டு, இதயம் என்னும் கதவை அடைத்துக்கொள்ள வேண்டும்.

12-13. என்ன செய்வதற்கான தூண்டுதல் நமக்கு வரலாம், அதை எப்படித் தவிர்க்கலாம்?

12 சாத்தானின் யோசனைகள் நம்மைக் கெடுத்துவிடாதபடி எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். ‘பாலியல் முறைகேடும் எல்லா விதமான அசுத்தமும் [நம்] மத்தியில் இருக்கக் கூடாது’ என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (எபே. 5:3) ஆனால், நம்மோடு வேலை செய்பவர்களோ கூடப்படிப்பவர்களோ ஒழுக்கங்கெட்ட விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் என்ன செய்வது? ‘கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டுவிட வேண்டும்’ என்பது நமக்குத் தெரியும். (தீத். 2:12) நமக்குள் இருக்கும் காவல்காரன், அதாவது நம் மனசாட்சி, அந்த நேரத்தில் எச்சரிப்பு ஒலியை எழுப்பலாம். (ரோ. 2:15) அப்போது நாம் அதைக் கேட்போமா? அவர்கள் சொல்லும் விஷயங்களைக் கேட்க வேண்டும் அல்லது அவர்கள் காட்டுகிற படங்களைப் பார்க்க வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு வரலாம். ஆனால், நகரத்தின் நுழைவாசல்களை மூட வேண்டிய சமயம் இது! அதாவது, ஆபத்தை உடனடியாகத் தவிர்க்க வேண்டிய சமயம் இது! ஆனால் இதை எப்படிச் செய்வது? உடனே பேச்சை மாற்றலாம் அல்லது அந்த இடத்தைவிட்டே போய்விடலாம்.

13 கூடவேலை செய்பவர்கள் அல்லது கூடப்படிப்பவர்கள், கெட்ட விஷயங்களை யோசிக்கவோ செய்யவோ நம்மைத் தூண்டினால் அதைத் தவிர்ப்பதற்கு நமக்குத் தைரியம் தேவை. நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா பார்க்கிறார் என்பதில் உறுதியாக இருக்கலாம். சாத்தானின் யோசனைகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான பலத்தையும் ஞானத்தையும் அவர் கொடுப்பார். (2 நா. 16:9; ஏசா. 40:29; யாக். 1:5) ஆனால், நம் இதயத்தைப் பாதுகாக்க, நம் பங்கில் நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?

இதயத்தைத் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்

14-15. (அ) இதயக் கதவை நாம் ஏன் திறக்க வேண்டும், அதை எப்படிச் செய்யலாம்? (ஆ) பைபிள் வாசிப்பிலிருந்து அதிக நன்மையடைய நீதிமொழிகள் 4:20-22 எப்படி உதவுகிறது? (“ எப்படி ஆழமாக யோசிப்பது?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

14 நம் இதயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், கெட்ட விஷயங்களைத் தவிர்ப்பதற்காக நம் இதயம் என்ற கதவை மூடினால் மட்டும் போதாது; நல்ல விஷயங்களை ஏற்றுக்கொள்வதற்காக அதைத் திறக்கவும் வேண்டும். மதில் சூழ்ந்த நகரத்தின் உதாரணத்தை மறுபடியும் யோசித்துப்பாருங்கள். எதிரிகள் நகரத்தைத் தாக்க வரும்போது வாயிற்காவலர் நகரத்தின் கதவுகளை மூடுவார். ஆனால், உணவுப் பொருள்களும் மற்ற தேவையான பொருள்களும் வரும்போது கதவுகளைத் திறந்து வைப்பார். கதவுகள் திறக்கப்படவே இல்லை என்றால் மக்கள் பசியில்தான் வாடுவார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவாவின் யோசனைகள் நம்மை வடிவமைக்க வேண்டும் என்றால், தவறாமல் நம் இதயக் கதவைத் திறக்க வேண்டும்.

15 யெகோவாவின் யோசனைகள் பைபிளில் இருக்கின்றன. ஒவ்வொரு தடவை பைபிளைப் படிக்கும்போதும், யெகோவாவின் யோசனைகள், நம்முடைய யோசனைகளையும் உணர்வுகளையும் செயல்களையும் வடிவமைக்க நாம் அனுமதிக்கிறோம். பைபிள் வாசிப்பிலிருந்து அதிக நன்மையடைய வேண்டும் என்றால், ஜெபம் செய்வது முக்கியம். “பைபிள படிக்குறதுக்கு முன்னாடி, நான் யெகோவாகிட்ட ஜெபம் செய்வேன். உங்க வார்த்தையில இருக்குற ‘அருமையான விஷயங்கள’ தெளிவா புரிஞ்சிக்க உதவுங்கனு கேட்பேன்” என்று ஒரு சகோதரி சொல்கிறார். (சங். 119:18) நாம் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். அதாவது, படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். ஜெபம் செய்யும்போதும் பைபிளைப் படிக்கும்போதும் நன்றாக யோசித்துப்பார்க்கும்போதும், கடவுளுடைய வார்த்தை நம் இதயத்தில் ‘ஆழமாகப் பதியும்.’ யெகோவாவின் யோசனைகளை நேசிக்கவும் ஆரம்பிப்போம்.நீதிமொழிகள் 4:20-22-ஐ வாசியுங்கள்; சங். 119:97.

16. JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகள் எப்படி நமக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன? ஓர் உதாரணம் கொடுங்கள்.

16 JW பிராட்காஸ்டிங்® நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போதும் யெகோவாவின் யோசனைகள் நம்மை வடிவமைக்க அனுமதிக்கிறோம். “ஒவ்வொரு மாசமும் வர்ற பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிய, எங்க ஜெபத்துக்கு கிடைச்ச பதில்னுதான் சொல்லணும். நாங்க சோகமா, தனிமையா உணர்ற சமயங்கள்ல அந்த நிகழ்ச்சிகள் எங்கள உற்சாகப்படுத்துது. அதுல வர்ற பாடல்களதான் எப்பவுமே கேட்போம். சமைக்குறப்போ... வீட்ட சுத்தம் செய்றப்போ... டீ குடிக்குறப்போ... இப்படி எல்லா சமயங்கள்லயும் அததான் கேட்போம்” என்று ஒரு தம்பதி சொல்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள், நம் இதயத்தைப் பாதுகாக்க உண்மையிலேயே உதவுகின்றன. யெகோவாவைப் போல யோசிக்கவும், சாத்தானைப் போல யோசிக்காமல் இருக்கவும் நமக்கு உதவுகின்றன.

17-18. (அ) 1 ராஜாக்கள் 8:61-ன்படி, யெகோவா சொல்வதைக் கேட்பதால் நமக்கு என்ன நன்மை? (ஆ) எசேக்கியா ராஜாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (இ) சங்கீதம் 139:23, 24-ல் இருக்கிற தாவீதின் ஜெபத்தைப் போலவே நாமும் எதற்காக ஜெபம் செய்யலாம்?

17 நல்லது செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும் நம் விசுவாசம் பலப்படுகிறது. (யாக். 1:2, 3) தன்னுடைய பிள்ளை என்று யெகோவா நம்மைப் பார்த்து பெருமைப்படுமளவுக்கு நாம் நடந்திருக்கிறோம் என்ற உணர்வு நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. அதோடு, அவரைத் தொடர்ந்து பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. (நீதி. 27:11) நமக்கு வரும் ஒவ்வொரு சோதனையின்போதும் நாம் எதை நிரூபிக்கிறோம்? நம் அன்பான அப்பாவுக்கு அரை இதயத்தோடு, அதாவது அரை மனதோடு, சேவை செய்யவில்லை என்பதை நிரூபிக்கிறோம். (சங். 119:113) யெகோவாவை முழு இதயத்தோடு, அதாவது அவருடைய சட்டங்களுக்கும் விருப்பத்துக்கும் முழுமையாகக் கீழ்ப்படியும் இதயத்தோடு, நேசிக்கிறோம் என்பதை நிரூபிக்கிறோம்.1 ராஜாக்கள் 8:61-ஐ வாசியுங்கள்.

18 அப்படியென்றால், நாம் தவறுகளே செய்ய மாட்டோம் என்று சொல்ல முடியுமா? இல்லை! நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் தவறுகள் செய்துவிடலாம். அதுபோன்ற சமயங்களில், எசேக்கியா ராஜாவின் உதாரணத்தை யோசித்துப்பார்க்கலாம். அவரும் தவறுகளைச் செய்தார். ஆனால், மனம் திருந்தினார்; “முழு இதயத்தோடு” யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்தார். (ஏசா. 38:3-6; 2 நா. 29:1, 2; 32:25, 26) தன்னுடைய யோசனைகளால் சாத்தான் நம்மைக் கறைபடுத்தாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். “கீழ்ப்படிகிற இதயத்தை” வளர்த்துக்கொள்ள உதவும்படி யெகோவாவிடம் கேட்க வேண்டும். (1 ரா. 3:9; சங்கீதம் 139:23, 24-ஐ வாசியுங்கள்.) எல்லாவற்றையும்விட, நம் இதயத்தைப் பாதுகாத்தால்தான் நம்மால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும்.

பாட்டு 65 “வழி இதுவே!”

^ பாரா. 5 நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்போமா அல்லது அவருக்குச் சேவை செய்யாதபடி சாத்தானின் வலையில் விழுந்துவிடுவோமா? இதற்கான பதில், நாம் எந்தளவு கடுமையாகச் சோதிக்கப்படுகிறோம் என்பதைப் பொறுத்து அல்ல, எந்தளவு நம் இதயத்தைப் பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. “இதயம்” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? நம் இதயத்தைக் கறைபடுத்த சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான்? இதயத்தை நாம் எப்படிப் பாதுகாக்கலாம்? இந்த முக்கியமான கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்லும்.

^ பாரா. 11 வார்த்தைகளின் விளக்கம்: நம்முடைய யோசனைகளும் உணர்வுகளும் செயல்களும் எப்படி இருக்கின்றன என்பதை சோதித்துப் பார்த்து, நாம் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தீர்மானிக்கிற திறமையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். இதைத்தான் மனசாட்சி என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 2:15; 9:1) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி, பைபிளில் இருக்கும் யெகோவாவின் தராதரங்களின் அடிப்படையில் நம்மை நியாயந்தீர்க்கிறது. நம்முடைய யோசனையும் சொல்லும் செயலும் சரியாக இருக்கிறதா இல்லையா என்று நியாயந்தீர்க்கிறது.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரர் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒழுக்கக்கேடான ஒரு காட்சி வருகிறது. இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும்.

^ பாரா. 58 படங்களின் விளக்கம்: கடந்த காலத்தில், நகரத்துக்கு ஆபத்து வருவதைப் பார்க்கும் ஒரு காவல்காரன் கீழே இருக்கிற வாயிற்காவலர்களிடம் எச்சரிப்பு ஒலியை எழுப்புகிறான். அவர்களும் உடனடியாகக் கதவுகளை மூடுகிறார்கள், உள்ளே இருந்து தாழ்ப்பாளைப் போடுகிறார்கள்.