Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 4

எளிமையான இரவு விருந்து பரலோக ராஜாவைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது?

எளிமையான இரவு விருந்து பரலோக ராஜாவைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது?

“இது என் உடலைக் குறிக்கிறது. . . . இது, ‘ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை குறிக்கிறது.’”—மத். 26:26-28.

பாட்டு 108 விண் அரசுக்காக யெகோவாவைப் போற்றுங்கள்

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) தன்னுடைய மரணத்தை அனுசரிக்க ஓர் எளிமையான வழியைத்தான் இயேசு கற்றுக்கொடுத்திருக்க வேண்டும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்? (ஆ) இயேசு காட்டிய என்னென்ன குணங்களைப் பற்றிப் பார்ப்போம்?

வருஷா வருஷம் நடக்கிற இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் நாம் என்ன செய்வோம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? நம்மில் நிறைய பேரால் நிச்சயம் சொல்ல முடியும்! ஏனென்றால், அந்த இரவு விருந்து சிக்கலானது கிடையாது, ரொம்பவே எளிமையானது. அதேசமயத்தில், அது ஒரு முக்கியமான நிகழ்ச்சியும்கூட! அதனால் நாம் ஒருவேளை இப்படிக் கேட்கலாம்: ‘இந்த இரவு விருந்து ஏன் அவ்வளவு எளிமையாக இருக்கிறது?’

2 தன்னுடைய ஊழியக் காலத்தின்போது, முக்கியமான உண்மைகளை எளிமையாக, தெளிவாக, சுலபமாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் கற்றுக்கொடுப்பதில் இயேசு பேர்போனவராக இருந்தார். (மத். 7:28, 29) அதேபோல், தன்னுடைய மரணத்தை அனுசரிப்பதற்கும் * எளிமையான, அர்த்தமுள்ள ஒரு வழியை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். எஜமானின் இந்த இரவு விருந்தைப் பற்றியும், இயேசு என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதைப் பற்றியும் இப்போது கவனமாக யோசித்துப்பார்க்கலாம். அப்போது மனத்தாழ்மையையும், தைரியத்தையும், அன்பையும் அவர் எந்தளவு காட்டியிருக்கிறார் என்பதை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவரைப் போலவே நாமும் எப்படி அந்தக் குணங்களைக் காட்டலாம் என்பதையும் கற்றுக்கொள்ள முடியும்.

இயேசு மனத்தாழ்மையுள்ளவர்!

நினைவுநாள் சின்னங்களான ரொட்டியும் திராட்சமதுவும், இயேசு நமக்காக உயிரைக் கொடுத்திருக்கிறார் என்பதையும், இப்போது அவர் பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்கிறார் என்பதையும் ஞாபகப்படுத்துகின்றன (பாராக்கள் 3-5)

3. மத்தேயு 26:26-28-ல் சொல்லப்பட்டபடி, இயேசு ஆரம்பித்துவைத்த இரவு விருந்து எந்தளவு எளிமையாக இருந்தது, அந்த இரண்டு சின்னங்களும் எவற்றைக் குறித்தன?

3 தன்னுடைய உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களோடுதான் இயேசு தன்னுடைய நினைவுநாள் அனுசரிப்பை ஆரம்பித்துவைத்தார். பஸ்கா விருந்தில் மீதியிருந்தவற்றை எடுத்து எளிமையான ஓர் இரவு விருந்தை அனுசரித்தார். (மத்தேயு 26:26-28-ஐ வாசியுங்கள்.) தன்னிடமிருந்த புளிப்பில்லாத ரொட்டியையும் திராட்சமதுவையும் மட்டும்தான் அதற்காகப் பயன்படுத்தினார். இவை இரண்டும், சீக்கிரத்தில் தான் கொடுக்கவிருந்த தன்னுடைய பரிபூரணமான உடலையும் இரத்தத்தையும் குறிப்பதாக அப்போஸ்தலர்களிடம் சொன்னார். அந்த இரவு விருந்து அவ்வளவு எளிமையாக இருந்ததை நினைத்து அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள். ஏன் அப்படிச் சொல்கிறோம்?

4. மார்த்தாளுக்கு இயேசு கொடுத்த ஆலோசனையிலிருந்து இரவு விருந்து எளிமையாக இருந்ததென்று நமக்கு எப்படித் தெரியும்?

4 இயேசு ஊழியம் செய்த மூன்றாம் வருஷம் அது! அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, தன்னுடைய நண்பர்களான லாசரு, மார்த்தாள், மரியாள் ஆகியோருடைய வீட்டுக்கு இயேசு போயிருந்தார். அப்போது என்ன நடந்தது என்று யோசித்துப்பாருங்கள். சாவகாசமான அந்தச் சமயத்தில், இயேசு போதிக்க ஆரம்பித்தார். தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளிக்கு தடபுடலான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வதில் மார்த்தாள் மும்முரமாக இருந்தாள். இதைக் கவனித்த இயேசு, மார்த்தாளை அன்போடு திருத்தினார். விருந்து எப்போதுமே தடபுடலாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவளுக்குப் புரியவைத்தார். (லூக். 10:40-42) அவருடைய தியாக மரணத்துக்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, இந்த ஆலோசனையை அவரே கடைப்பிடித்தார். அவர் அனுசரித்த இரவு விருந்து ரொம்ப எளிமையாக இருந்தது. இது இயேசுவைப் பற்றி நமக்கு என்ன கற்றுத்தருகிறது?

5. இயேசு அனுசரித்த எளிமையான நிகழ்ச்சியிலிருந்து அவரைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம், பிலிப்பியர் 2:5-8-ல் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தோடு இது எப்படி ஒத்திருக்கிறது?

5 தான் சொன்ன, செய்த எல்லாவற்றிலும் இயேசு ரொம்பவே மனத்தாழ்மையுள்ளவர் என்பதைக் காட்டினார். அதனால், இறப்பதற்கு முந்தின இரவு அவர் மனத்தாழ்மையாக நடந்துகொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. (மத். 11:29) மனித சரித்திரத்திலேயே இதுவரை கொடுக்கப்படாத மிகப்பெரிய ஒரு பலியை தான் கொடுக்க வேண்டும் என்பதை இயேசு தெரிந்துவைத்திருந்தார். அதோடு, யெகோவா தன்னை உயிரோடு எழுப்பி, பரலோகத்தில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுப்பார் என்பதையும் தெரிந்துவைத்திருந்தார். இருந்தாலும், தன்னுடைய நினைவுநாளை ஆடம்பரமாக அனுசரித்து மற்றவர்களுடைய கவனத்தைத் தன் பக்கம் திருப்பவில்லை. ஒவ்வொரு வருஷமும் தன்னுடைய நினைவுநாளை எளிமையாக அனுசரிக்க வேண்டும் என்று அவர் தன் சீஷர்களிடம் சொன்னார். (யோவா. 13:15; 1 கொ. 11:23-25) இயேசு பெருமைபிடித்தவர் அல்ல என்பது இதிலிருந்து தெரிகிறது. நம்முடைய பரலோக ராஜாவின் முக்கியமான குணங்களில் மனத்தாழ்மையும் ஒன்று என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!பிலிப்பியர் 2:5-8-ஐ வாசியுங்கள்.

6. சோதனைகளைச் சந்திக்கும்போது நாம் எப்படி இயேசுவைப் போல மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம்?

6 இயேசுவைப் போல நாம் எப்படி மனத்தாழ்மையாக நடந்துகொள்ளலாம்? நம்முடைய நலனில் அக்கறை காட்டுவதைவிட மற்றவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். (பிலி. 2:3, 4) இயேசு இறப்பதற்கு முந்தின இரவு என்ன நடந்ததென்று யோசித்துப்பாருங்கள். சீக்கிரத்தில், தான் வேதனைப்பட்டு இறக்க வேண்டும் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தும், தன் உண்மையுள்ள அப்போஸ்தலர்களுடைய நலனில் அதிக அக்கறை காட்டினார். தன்னை நினைத்து அவர்கள் ரொம்பவே கவலைப்படுவார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், அந்த இரவு முழுவதும் இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார், அவர்களை உற்சாகப்படுத்தினார், தைரியப்படுத்தினார். (யோவா. 14:25-31) தன்னுடைய நலனைவிட மற்றவர்களுடைய நலனில் அதிக அக்கறை காட்டுவதன் மூலம் இயேசு மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். நாம் பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரி!

இயேசு தைரியமுள்ளவர்!

7. எஜமானின் இரவு விருந்தை ஆரம்பித்துவைத்த கொஞ்ச நேரத்திலேயே இயேசு எப்படித் தைரியத்தைக் காட்டினார்?

7 எஜமானின் இரவு விருந்தை ஆரம்பித்துவைத்த கொஞ்ச நேரத்திலேயே தான் எந்தளவு தைரியமானவர் என்பதை இயேசு காட்டினார். எப்படி? தன்னுடைய அப்பாவின் விருப்பத்தைச் செய்ய இயேசு மனமுள்ளவராக இருந்தார்; தெய்வ நிந்தனை செய்கிறவன் என்ற அபாண்டமான பழியோடு சாக வேண்டியிருந்தாலும் அதற்கு மனமுள்ளவராக இருந்தார். (மத். 26:65, 66; லூக். 22:41, 42) இயேசு எல்லா விதங்களிலும் உத்தமத்தைக் காத்துக்கொண்டார். அதனால், யெகோவாவின் பெயருக்கு மகிமை சேர்க்கவும், யெகோவாவுக்கு மட்டுமே ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதை நிரூபிக்கவும், மனம் திருந்தும் மக்கள் முடிவில்லாத வாழ்க்கையை அனுபவிக்கவும் அவரால் வழி செய்ய முடிந்தது. அதேசமயத்தில், தன்னுடைய சீஷர்கள் சீக்கிரத்தில் சந்திக்கவிருந்த கஷ்டங்களைச் சமாளிக்கவும் இயேசுவால் அவர்களைத் தயார்படுத்த முடிந்தது.

8. (அ) உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம் இயேசு என்ன சொன்னார்? (ஆ) இயேசு இறந்து பல வருஷங்களுக்குப் பிறகும் அவருடைய சீஷர்கள் எப்படித் தைரியத்தைக் காட்டினார்கள்?

8 தன்னுடைய கவலைகளிலேயே மூழ்கிவிடுவதற்குப் பதிலாக, தன் உண்மையுள்ள அப்போஸ்தலர்களின் தேவைகளுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் இயேசு தைரியத்தைக் காட்டினார். யூதாசை அனுப்பிவிட்டு, எளிமையான இரவு விருந்தை இயேசு ஆரம்பித்துவைத்தார். இந்த விருந்து, பரலோக நம்பிக்கையுள்ள சீஷர்களாக ஆகப்போகிறவர்களுக்கு அவர் சிந்திய இரத்தத்தால் கிடைக்கப்போகும் நன்மைகளை ஞாபகப்படுத்தும். அதோடு, புதிய ஒப்பந்தத்தில் பங்குகொள்வதால் கிடைக்கப்போகும் நன்மைகளையும் ஞாபகப்படுத்தும். (1 கொ. 10:16, 17) இந்தச் சீஷர்கள் உண்மையாக இருப்பதற்கும் பரலோகத்தில் தன்னோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்கும், தானும் தன்னுடைய அப்பாவும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிற விஷயத்தை இயேசு அவர்களிடம் சொன்னார். (யோவா. 15:12-15) அவர்களுக்கு வரவிருந்த சோதனைகளைப் பற்றியும் அவர்களுக்குச் சொன்னார். பிறகு, தான் தைரியமாக இருப்பதுபோல் அவர்களும் ‘தைரியமாக’ இருக்க வேண்டும் என்று சொன்னார். (யோவா. 16:1-4அ, 33) பல வருஷங்களுக்குப் பிறகும் அவருடைய சீஷர்கள் இயேசுவைப் போலவே தியாக மனப்பான்மையையும் தைரியத்தையும் காட்டினார்கள். அவர்கள் பல விதமான அவமானங்களையும் உபத்திரவங்களையும் அனுபவித்தபோதிலும், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தார்கள்.—எபி. 10:33, 34.

9. தைரியத்தைக் காட்டும் விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் போல நடந்துகொள்ளலாம்?

9 தைரியத்தைக் காட்டும் விஷயத்தில் இன்றும் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். உதாரணத்துக்கு, விசுவாசத்தின் காரணமாக துன்புறுத்தலை அனுபவிக்கும் சகோதரர்களுக்கு உதவும்போது நமக்குத் தைரியம் தேவை. சிலசமயங்களில், நம் சகோதரர்கள் அநியாயமாக சிறையில் தள்ளப்படலாம். அப்போது, நம்மால் முடிந்த எல்லாவற்றையும் அவர்களுக்காகச் செய்ய வேண்டும்; அவர்களை ஆதரித்தும் பேச வேண்டும். (பிலி. 1:14; எபி. 13:19) “தைரியமாக” பிரசங்கிப்பதன் மூலமும் நாம் தைரியத்தைக் காட்டுகிறோம். (அப். 14:3) மக்கள் நம்மை எதிர்த்தாலும், துன்புறுத்தினாலும், இயேசுவைப் போலவே நல்ல செய்தியைப் பிரசங்கிக்க நாம் உறுதியாக இருக்கிறோம். ஆனால், சிலசமயங்களில் தைரியம் இல்லாததுபோல் நாம் உணரலாம். அப்போது என்ன செய்வது?

10. நினைவுநாளுக்கு முந்தின சில வாரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?

10 இயேசுவின் மீட்புப் பலியின் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் எதிர்கால நம்பிக்கையைப் பற்றி யோசித்துப்பார்ப்பது நமக்கு அதிக தைரியத்தைத் தருகிறது. (யோவா. 3:16; எபே. 1:7), நினைவுநாளுக்கு முந்தின சில வாரங்களில், மீட்புப் பலியின் மீது இருக்கும் நன்றியுணர்வை இன்னும் அதிகமாக்க நமக்கு ஒரு விசேஷ வாய்ப்பு இருக்கிறது. அந்த வாரங்களில், நினைவுநாள் பைபிள் வாசிப்பைத் தவற விடாதீர்கள். இயேசுவின் மரணத்துக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களை ஆழமாக யோசித்துப்பாருங்கள். அப்படிச் செய்யும்போது, எஜமானின் இரவு விருந்துக்காகக் கூடிவரும் சமயத்தில், நினைவுநாள் சின்னங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவை அடையாளப்படுத்துகிற ஈடிணையற்ற பலியைப் பற்றியும் நன்றாகப் புரிந்துகொள்வோம். இயேசுவும் யெகோவாவும் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும்போதும், அவற்றால் நாமும் நம்முடைய அன்பானவர்களும் எப்படி நன்மையடைகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும்போதும் நம் எதிர்கால நம்பிக்கை இன்னும் பலமாகும். அதோடு, கடைசிவரை சகித்திருப்பதற்குத் தேவையான பலமும் கிடைக்கும்.—எபி. 12:3.

11-12. இதுவரை நாம் என்ன கற்றுக்கொண்டோம்?

11 இந்தக் கட்டுரையில் இதுவரை நாம் என்ன கற்றுக்கொண்டோம்? எஜமானின் இரவு விருந்திலிருந்து, விலைமதிப்பில்லாத மீட்புவிலையைப் பற்றியும் இயேசுவின் மனத்தாழ்மை மற்றும் தைரியத்தைப் பற்றியும் கற்றுக்கொண்டோம். இன்று பரலோகத்தில் தலைமைக் குருவாக இருந்து நமக்காகப் பரிந்து பேசுகிற இயேசு, தொடர்ந்து இந்த அருமையான குணங்களைக் காட்டிவருகிறார்; இதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! (எபி. 7:24, 25) இந்த நன்றியை வெளிக்காட்ட, அவர் கட்டளையிட்டபடியே அவருடைய மரணத்தை அனுசரிக்க வேண்டும். (லூக். 22:19, 20) நிசான் 14-க்கு இணையான தேதியில் நாம் அதை அனுசரிக்கிறோம்; அந்த நாள்தான் வருஷத்திலேயே மிக முக்கியமான நாள்!

12 எஜமானின் எளிமையான இரவு விருந்து, இயேசுவின் இன்னொரு முக்கியமான குணத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தக் குணம்தான் நமக்காக உயிரையே கொடுக்க அவரைத் தூண்டியது. பூமியிலிருந்தபோது, இந்தக் குணத்தைக் காட்டுவதில் அவர் பேர்போனவராக இருந்தார். அது என்ன குணம்?

இயேசு அன்புள்ளவர்!

13. யெகோவாவும் இயேசுவும் காட்டிய அன்பைப் பற்றி யோவான் 15:9 மற்றும் 1 யோவான் 4:8-10 வசனங்கள் எப்படி விவரிக்கின்றன, அந்த அன்பிலிருந்து நாம் எப்படி நன்மையடைகிறோம்?

13 யெகோவாவுக்கு நம்மீது அளவில்லாத அன்பு இருக்கிறது என்பதை, தான் செய்த எல்லாவற்றின் மூலமும் இயேசு காட்டினார். (யோவான் 15:9-ஐயும் 1 யோவான் 4:8-10-ஐயும் வாசியுங்கள்.) எல்லாவற்றையும்விட, அவருடைய உயிரையே நமக்காகக் கொடுத்திருக்கிறார். நாம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி, ‘வேறே ஆடுகளாக’ இருந்தாலும் சரி, இந்தப் பலியின் மூலம் யெகோவாவும் இயேசுவும் காட்டியிருக்கும் அன்பால் நாம் நன்மையடைகிறோம். (யோவா. 10:16; 1 யோ. 2:2) நினைவுநாள் நிகழ்ச்சியில் நாம் பயன்படுத்துகிற சின்னங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். தன் சீஷர்கள்மீது இயேசு வைத்திருக்கும் அன்பையும் கரிசனையையும் அவை எடுத்துக்காட்டுகின்றன. எப்படி?

இயேசு ஆரம்பித்துவைத்த நினைவுநாள் நிகழ்ச்சி எளிமையாக இருந்ததால், பல நூற்றாண்டுகளாக, கஷ்டமான சூழ்நிலைகளின் மத்தியிலும் மக்கள் அதை அனுசரித்தார்கள் (பாராக்கள் 14-16) *

14. எந்த விதத்தில் இயேசு தன்னுடைய சீஷர்கள்மீது அன்பு காட்டினார்?

14 சிக்கலான ஒரு சடங்காச்சாரத்தை ஆரம்பித்துவைப்பதற்குப் பதிலாக, ஓர் எளிய நிகழ்ச்சியை ஆரம்பித்துவைப்பதன் மூலம் இயேசு தன்னுடைய பரலோக நம்பிக்கையுள்ள சீஷர்கள்மீது அன்பு காட்டினார். காலங்கள் போகப் போக, வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒவ்வொரு வருஷமும் அவர்கள் நினைவுநாளை அனுசரிக்க வேண்டியிருந்தது. சிறையில் இருந்தபோதுகூட அவர்கள் அதை அனுசரிக்க வேண்டியிருந்தது! (வெளி. 2:10) அவர்களால் இயேசுவுக்குக் கீழ்ப்படிய முடிந்ததா? கண்டிப்பாக!

15-16. கஷ்டமான சூழ்நிலைகளில்கூட சிலரால் எப்படி நினைவுநாள் நிகழ்ச்சியை அனுசரிக்க முடிந்தது?

15 முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை, உண்மை கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்தை அனுசரிக்கக் கடினமாக முயற்சி செய்திருக்கிறார்கள். சில கஷ்டமான சூழ்நிலைகளிலும்கூட, எஜமானின் இரவு விருந்தை முறைப்படி அனுசரிக்க தங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்திருக்கிறார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள். சகோதரர் ஹாரல்டு கிங் சீனாவிலிருந்த ஒரு தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்தச் சமயத்தில், நினைவுநாளை எப்படி அனுசரிப்பது என்று அவர் யோசிக்க வேண்டியிருந்தது. தன்னிடம் இருந்த பொருள்களை வைத்து நினைவுநாள் சின்னங்களை அவர் ரகசியமாகத் தயாரித்தார். நினைவுநாள் தேதியையும் முடிந்தளவு சரியாகக் கணக்கிட்டார். நினைவுநாளை அனுசரிக்க வேண்டிய சமயம் வந்தபோது, பாட்டுப் பாடினார், ஜெபம் செய்தார், பைபிள் பேச்சையும் கொடுத்தார். இதையெல்லாம் அவர் தனியாகவே செய்தார்.

16 இன்னொரு உதாரணத்தைக் கவனியுங்கள். இரண்டாம் உலகப் போரின்போது, சித்திரவதை முகாமிலிருந்த சில சகோதரிகள் தங்கள் உயிரையே பணயம்வைத்து நினைவுநாளை அனுசரித்தார்கள். நினைவுநாள் நிகழ்ச்சிக்கான சின்னங்கள் அந்தளவு எளிமையாக இருந்ததால், அந்த நிகழ்ச்சியை அவர்களால் ரகசியமாக அனுசரிக்க முடிந்தது. அவர்களுடைய அறிக்கை இப்படிச் சொல்கிறது: “நாங்கள் எல்லாரும் வட்டமாக நின்றுகொண்டோம். நடுவில் ஒரு கால்மணையை வைத்து, அதை வெள்ளைத் துணியால் போர்த்தி, அதன்மீது நினைவுநாள் சின்னங்களை வைத்தோம். மின் விளக்கைப் பயன்படுத்தினால் அது எங்களைக் காட்டிக்கொடுத்துவிடும் என்பதால் ஒரு மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தினோம் . . . எங்கள் தகப்பனுடைய பரிசுத்த பெயரை மகிமைப்படுத்த எங்கள் பலத்தையெல்லாம் பயன்படுத்துவோம் என்று நாங்கள் கொடுத்திருந்த வாக்குறுதியை எங்கள் தகப்பனிடம் மறுபடியும் சொன்னோம்.” எப்பேர்ப்பட்ட விசுவாசம்! நினைவுநாள் நிகழ்ச்சியை எளிமையாக அனுசரிக்க சொல்லிக்கொடுத்ததன் மூலம், இயேசு நம்மீது அன்பு காட்டியிருக்கிறார். அதனால்தான் கஷ்டமான சூழ்நிலைகளிலும் நம்மால் அதை அனுசரிக்க முடிகிறது.

17. நாம் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

17 நினைவுநாள் நிகழ்ச்சி நெருங்கிவரும் சமயத்தில், சில கேள்விகளை நாம் கேட்டுக்கொள்வது நல்லது. ‘அன்பு காட்டுற விஷயத்துல எப்படி இயேசுவ இன்னும் நல்லா பின்பற்றலாம்? என்னோட தேவைகளவிட, சகோதர சகோதரிகளோட தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறேனா? சகோதர சகோதரிகள்கிட்ட இருந்து அளவுக்கு அதிகமா எதிர்பார்க்குறேனா, இல்லன்னா அவங்களோட வரம்புகள புரிஞ்சு நடந்துக்குறேனா?’ நாம் எல்லாரும் இயேசுவைப் போல் நடந்துகொள்ள முயற்சி செய்யலாம்; சகோதர சகோதரிகள்மீது “அனுதாபத்தை” காட்டலாம்!—1 பே. 3:8.

கற்றுக்கொண்ட பாடங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

18-19. (அ) எந்த விஷயத்தைப் பற்றி நாம் உறுதியாக இருக்கலாம்? (ஆ) நீங்கள் என்ன செய்யத் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

18 கிறிஸ்துவின் நினைவுநாளை அனுசரிக்க வேண்டிய அவசியம் சில காலத்துக்குப் பிறகு இருக்காது. மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் இயேசு ‘வரும்போது,’ ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில்’ மீதியாக இருப்பவர்களைப் பரலோகத்தில் கூட்டிச்சேர்ப்பார். அதற்குப் பிறகு, நினைவுநாள் அனுசரிக்கப்படாது.—1 கொ. 11:26; மத். 24:31.

19 நினைவுநாள் அனுசரிக்கப்படாத சமயத்திலும், யெகோவாவின் மக்கள் இந்த எளிமையான நிகழ்ச்சியைச் சந்தோஷமாக நினைத்துப் பார்ப்பார்கள் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். இதுவரை எந்த மனிதனும் காட்டாத மனத்தாழ்மை, தைரியம், அன்பு ஆகியவற்றின் அடையாளமாக இந்த நினைவுநாள் நிகழ்ச்சியை அவர்கள் நினைத்துப் பார்ப்பார்கள். இதை அனுசரித்தவர்கள், அந்தச் சமயத்தில் வாழும் மக்களிடம் இதைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்வார்கள்; அதைக் கேட்டு மக்கள் நிச்சயம் நன்மையடைவார்கள். ஆனால், நினைவுநாள் நிகழ்ச்சியிலிருந்து இன்றே நன்மையடைய, இயேசுவைப் போலவே மனத்தாழ்மையையும், தைரியத்தையும், அன்பையும் காட்ட நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படித் தீர்மானமாக இருந்தால், யெகோவா தரும் பரிசை நிச்சயம் பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்.—2 பே. 1:10, 11.

பாட்டு 5 ஏசு நமக்கு முன்மாதிரி

^ பாரா. 5 இயேசு கிறிஸ்துவின் நினைவுநாளை அனுசரிக்க, சீக்கிரத்தில் எஜமானின் இரவு விருந்தில் கலந்துகொள்வோம். இந்த எளிமையான இரவு விருந்திலிருந்து இயேசு காட்டிய மனத்தாழ்மை, தைரியம், அன்பு ஆகிய குணங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்வோம். இந்த அருமையான குணங்களை நாம் எப்படிக் காட்டலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: ஒரு முக்கியமான நிகழ்ச்சியை அல்லது நபரைக் கௌரவப்படுத்தவும், நினைத்துப்பார்க்கவும் விசேஷமாக செய்யப்படும் ஏதோவொன்றைத்தான் அனுசரிப்பு என்று சொல்கிறோம்.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: நினைவுநாள் நிகழ்ச்சி எப்படி அனுசரிக்கப்பட்டது என்பதைச் சித்தரிக்கும் படங்கள்—முதல் நூற்றாண்டில்; 1800-களின் கடைசியில்; நாசி சித்திரவதை முகாமில். இன்று: வெப்பமான ஒரு சீதோஷ்ணத்தில் தென் அமெரிக்காவில் இருக்கும் எளிமையான, திறந்தவெளி ராஜ்ய மன்றத்தில்.