Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 1

“கவலைப்படாதே, நான் உன் கடவுள்“

“கவலைப்படாதே, நான் உன் கடவுள்“

“பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.”ஏசா. 41:10.

பாட்டு 23 யெகோவாவே எம் பலம்

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) ஏசாயா 41:10-லிருக்கும் வார்த்தைகள் யோஷிக்கோ என்ற சகோதரிக்கு எப்படி ஆறுதலாக இருந்தன? (ஆ) யாருடைய நன்மைக்காக யெகோவா இந்த வார்த்தைகளைப் பாதுகாத்திருக்கிறார்?

“இன்னும் கொஞ்ச நாளைக்குதான் நீங்க உயிரோட இருப்பீங்க” என்ற கெட்ட செய்தியை யோஷிக்கோவின் டாக்டர் சொன்னார். கடவுளுக்கு உண்மையாக இருந்த அந்தச் சகோதரிக்கு அப்போது எப்படி இருந்தது? தனக்கு ரொம்பப் பிடித்த வசனமான ஏசாயா 41:10-ஐ அவர் யோசித்துப்பார்த்தார். (வாசியுங்கள்.) பிறகு, யெகோவா தன் கையைப் பிடித்திருப்பதால் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்று அமைதியோடு தன் டாக்டரிடம் சொன்னார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்த வசனத்தில் இருக்கும் ஆறுதலான வார்த்தைகள் யெகோவாவை முழுமையாக நம்ப அவருக்கு உதவியது. பயங்கரமான சோதனைகளைச் சந்திக்கும்போது மனஅமைதியைக் காத்துக்கொள்ள அந்த வசனம் நமக்கும் உதவும். எப்படி? இதைத் தெரிந்துகொள்ள, ஏசாயாவிடம் கடவுள் ஏன் அந்த வார்த்தைகளைச் சொன்னார் என்பதைப் பற்றி முதலில் பார்க்கலாம்.

2 பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்படவிருந்த யூதர்களை ஆறுதல்படுத்தத்தான் ஏசாயாவின் மூலம் யெகோவா இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆனால், அவர்களுடைய நன்மைக்காக மட்டுமல்ல அன்றுமுதல் இன்றுவரை வாழும் அவருடைய மக்கள் எல்லாருடைய நன்மைக்காகவும் யெகோவா இந்த வார்த்தைகளைப் பாதுகாத்திருக்கிறார். (ஏசா. 40:8; ரோ. 15:4) “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்வதால், ஏசாயா புத்தகத்திலிருக்கும் ஆறுதலான வார்த்தைகள் எப்போதையும்விட இப்போது நமக்கு ரொம்பத் தேவை!—2 தீ. 3:1.

3. (அ) 2019-க்கான வருடாந்தர வசனத்தில் இருக்கும் மூன்று வாக்குறுதிகள் என்ன? (ஆ) இந்த வாக்குறுதிகள் நமக்கு ஏன் தேவை?

3 ஏசாயா 41:10-ல், விசுவாசத்தைப் பலப்படுத்துகிற மூன்று வாக்குறுதிகளை யெகோவா கொடுத்திருக்கிறார். அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். (1) யெகோவா நம்மோடு இருப்பார், (2) அவர் நம் கடவுள், (3) அவர் நமக்கு உதவுவார். இந்த வாக்குறுதிகள் * நமக்கு ரொம்பவே தேவை. ஏனென்றால், யோஷிக்கோவைப் போல் நம்முடைய வாழ்க்கையிலும் சோதனைகள் வருகின்றன. அதோடு, உலகத்தில் நடக்கிற கெட்ட விஷயங்களாலும் பாதிக்கப்படுகிறோம். பலம்படைத்த அரசாங்கங்களின் மூலம் வரும் துன்புறுத்தலையும் நம்மில் சிலர் சமாளித்து வருகிறோம். ஏசாயா 41:10-லிருக்கும் மூன்று வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.

“நான் உன்னோடு இருக்கிறேன்”

4. (அ) நாம் பார்க்கப்போகும் முதல் வாக்குறுதி என்ன? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.) (ஆ) நம்மேல் வைத்திருக்கும் பாசத்தை யெகோவா எப்படி வெளிப்படுத்துகிறார்? (இ) யெகோவாவின் வார்த்தைகள் உங்களை எப்படிப் பலப்படுத்துகின்றன?

4 “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்” என்று சொல்வதன் மூலம் யெகோவா நம்மை முதலில் ஆறுதல்படுத்துகிறார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) தன் முழு கவனத்தையும் நம்மீது செலுத்துவதன் மூலமும் அன்பைப் பொழிவதன் மூலமும் அவர் நம்மோடு இருப்பதைக் காட்டுகிறார். “நீ எனக்குத் தங்கமானவன். உன்னைக் கௌரவப்படுத்தினேன்; உன்மேல் அன்பு வைத்தேன்” என்று சொல்வதன் மூலம் அவர் நம்மேல் எந்தளவு கனிவான பாசத்தை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறார். (ஏசா. 43:4) தனக்குச் சேவை செய்பவர்கள்மீது யெகோவா அன்பு காட்டுவதை இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது; அவர் காட்டும் உண்மைத்தன்மை ஒருபோதும் அழியாது. (ஏசா. 54:10) அவருடைய அன்பும் நட்பும் நமக்குத் தைரியத்தைத் தருகின்றன. தன்னுடைய நண்பரான ஆபிராமை (ஆபிரகாமை) அவர் எப்படிப் பாதுகாத்தாரோ, அதேபோல் இன்று நம்மையும் பாதுகாப்பார். “ஆபிராமே, பயப்படாதே. நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்” என்று யெகோவா சொன்னார்.—ஆதி. 15:1.

ஆற்று வெள்ளம்போல் அல்லது தீ ஜுவாலைபோல் சோதனைகள் நம்மைத் தாக்கினாலும் அவற்றை ‘கடந்து போக’ யெகோவா உதவுவார் (பாராக்கள் 5-6) *

5-6. (அ) சோதனைகள் நம்மைத் தாக்கும்போது, யெகோவா நமக்கு உதவ விரும்புகிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) யோஷிக்கோவின் உதாரணத்திலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

5 சோதனைகள் நம்மைத் தாக்கும்போது, யெகோவா நமக்கு உதவ விரும்புகிறார். இது நமக்கு எப்படித் தெரியும்? “நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன். ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது. நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது. தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது” என்று அவர் வாக்குக்கொடுத்திருக்கிறாரே! (ஏசா. 43:2) இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன?

6 நம் வாழ்க்கையைச் சிக்கலாக்குகிற சோதனைகளை எடுத்துப்போடுவதாக யெகோவா வாக்குக்கொடுக்கவில்லை. ஆனால், ‘ஆற்று’ வெள்ளம்போல் திரண்டுவரும் பிரச்சினைகளில் நாம் மூழ்கிவிடாதபடி, அல்லது “தீ ஜுவாலை” போன்ற சோதனைகள் நம்மை நிரந்தரமாகப் பாதிக்காதபடி, பார்த்துக்கொள்வார். அவர் நம்மோடு இருப்பதாகவும் சவால்களை ‘கடந்து போக’ உதவுவதாகவும் உறுதியளிக்கிறார். எப்படி? பயப்படாமல் மனஅமைதியோடு இருக்க யெகோவா உதவுவார். அப்போது, மரணத்தைச் சந்திக்க வேண்டியிருந்தாலும்கூட நாம் யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருப்போம். (ஏசா. 41:13) யோஷிக்கோவின் விஷயத்தில் இதுதான் உண்மையாக இருந்தது. அவருடைய மகள் இப்படிச் சொன்னார்: “அம்மா அந்தளவு மனஅமைதியோட இருக்குறத பாத்து நாங்க அசந்துபோயிட்டோம். யெகோவாதான் அவங்களுக்கு மனசமாதானத்தை கொடுத்தாருங்குறத உணர முடிஞ்சுது. சாகுறவரைக்கும் யெகோவாவ பத்தியும் அவரோட வாக்குறுதிகள பத்தியும் நர்சுங்ககிட்டயும் மத்த நோயாளிங்ககிட்டயும் பேசிக்கிட்டே இருந்தாங்க.” யோஷிக்கோவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? “நான் உன்னோடு இருக்கிறேன்” என்ற வாக்குறுதியில் நம்பிக்கை வைத்தால், சோதனைகளைச் சந்திக்கும்போது நம்மாலும் தைரியத்தோடும் மனபலத்தோடும் இருக்க முடியும்.

“நான் உன் கடவுள்”

7-8. (அ) நாம் பார்க்கப்போகும் இரண்டாவது வாக்குறுதி என்ன, அதற்கு என்ன அர்த்தம்? (ஆ) யூத கைதிகளிடம் “கவலைப்படாதே” என்று யெகோவா ஏன் சொன்னார்? (இ) ஏசாயா 46:3, 4-லிருக்கும் எந்த வார்த்தைகள் கடவுளுடைய மக்கள் பயப்படாமல், மனஅமைதியோடு இருக்க உதவியிருக்கும்?

7 ஏசாயா பதிவு செய்திருக்கும் இரண்டாவது வாக்குறுதியைக் கவனியுங்கள்: “கவலைப்படாதே, நான் உன் கடவுள்.” இந்த வசனத்திலிருக்கும் “கவலை” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? மூலமொழியில், “கவலை” என்ற சொல்லுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை, “ஆபத்து வருமோ என்று நினைத்து, பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்ப்பதை” அல்லது, “ஆபத்திலிருக்கும் ஒருவரைப் போல் பீதியில் இருப்பதை” குறிக்கிறது.

8 பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோகப்படவிருந்த யூதர்களிடம், “கவலைப்படாதே” என்று யெகோவா ஏன் சொன்னார்? ஏனென்றால், பாபிலோன் தேசத்து மக்கள் பயத்தில் நடுங்கப்போகும் ஒரு காலம் வரும் என்று யெகோவாவுக்குத் தெரியும். அவர்களுடைய பயத்துக்கு என்ன காரணம்? யூதர்கள் கைதிகளாக இருந்த 70 வருஷ காலப்பகுதி முடிவுக்கு வரவிருந்த சமயத்தில், மேதிய பெர்சியர்களால் பாபிலோன் தாக்கப்படவிருந்தது. அந்தப் படையைப் பயன்படுத்தி யெகோவா தன் மக்களைப் பாபிலோனிலிருந்து விடுவிக்கவிருந்தார். (ஏசா. 41:2-4) ஓர் எதிரி படை தங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டவுடன், பாபிலோனியர்களும் மற்ற தேசத்து மக்களும், “பயப்படாதீர்கள்” என்று சொல்லி ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டார்கள். அதோடு, நிறைய சிலைகளையும் செய்தார்கள், அவைத் தங்களைக் காப்பாற்றும் என்று நம்பினார்கள். (ஏசா. 41:5-7) ஆனால், கைதிகளாக இருந்த யூதர்கள் பயப்படாமல் மனஅமைதியோடு இருப்பதற்காக, “என் ஊழியனான இஸ்ரவேலே, [நீ அக்கம்பக்கத்தாரைப் போல் அல்ல] . . . கவலைப்படாதே, நான் உன் கடவுள்” என்று யெகோவா அவர்களிடம் சொன்னார். (ஏசா. 41:8-10) “நான் உன் கடவுள்” என்று யெகோவா சொன்னதைக் கவனியுங்கள். இந்த வார்த்தைகளின் மூலம் தன் உண்மை ஊழியர்களை அவர் மறக்கவில்லை என்று உறுதியளித்தார். அதாவது, அவர் இன்னமும் அவர்களுடைய கடவுள்தான் என்றும், அவர்கள் இன்னமும் அவருடைய மக்கள்தான் என்றும் உறுதியளித்தார். “உங்களை எப்போதுமே சுமப்பேன் . . . காப்பாற்றுவேன்” என்று சொன்னார். இந்த ஆறுதலான, உற்சாகமூட்டுகிற வார்த்தைகள் யூத கைதிகளை உண்மையிலேயே பலப்படுத்தியிருக்கும்!ஏசாயா 46:3, 4-ஐ வாசியுங்கள்.

9-10. எதற்குமே நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை எது காட்டுகிறது? விளக்குங்கள்.

9 உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போவதால், எப்போதையும்விட இப்போது மக்கள் ரொம்பவே கவலைப்படுகிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் அதே பிரச்சினைகளை நாமும் அனுபவிக்கிறோம். இருந்தாலும், பயப்படவேண்டிய அவசியம் இல்லை. “நான் உன் கடவுள்” என்று யெகோவாவே சொல்கிறார். இந்த வார்த்தைகள் மனஅமைதியோடு இருக்க நமக்கு ரொம்பவே உதவுகின்றன என்று ஏன் சொல்லலாம்?

10 இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள். ஜிம் மற்றும் பென் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். பலத்த காற்றால் விமானம் மேலும் கீழுமாக நிலைதடுமாறுகிறது. அப்போது, “உங்க சீட் பெல்ட்ட போட்டுக்கோங்க. கொஞ்ச நேரத்துக்கு இப்படித்தான் இருக்கும், சீக்கிரம் சரியாயிடும்” என்று ஒலிபெருக்கியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது. ஜிம் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார். அப்போது, “நான் உங்க விமானி பேசுறேன். யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல” என்று அந்த விமானி சொல்கிறார். அந்தச் சமயத்தில், “இவர் சொல்றத எப்படி நம்புறது?” என்று சந்தேகத்தோடு ஜிம் கேட்கிறார். ஆனால், எந்தக் கவலையும் இல்லாமல் பென் அமைதியாக இருப்பதை ஜிம் கவனிக்கிறார். அவர் பென்னிடம், “உங்களால மட்டும் எப்படி பயமில்லாம அமைதியா இருக்க முடியுது?” என்று கேட்கிறார். அதற்கு பென் சிரித்துக்கொண்டே, “எனக்கு அந்த விமானிய பத்தி நல்லா தெரியும். அவர் என்னோட அப்பா” என்கிறார். பிறகு, “என்னோட அப்பாவ பத்தியும், அவரு எவ்வளவு நல்லா விமானத்த ஓட்டுவாருங்கறத பத்தியும் நான் உங்ககிட்ட சொல்றேன். அப்போ, நீங்களும் பயமில்லாம அமைதியா இருப்பீங்க” என்று சொல்கிறார்.

11. இரண்டு பயணிகளைப் பற்றிய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

11 இந்த உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? ஒன்று, பென்னைப் போலவே நாம் பயப்படாமல் மனஅமைதியோடு இருக்கிறோம். ஏனென்றால், நமக்கும் நம்முடைய பரலோக அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்தக் கடைசி நாட்களில், புயல் போன்ற பிரச்சினைகள் மத்தியிலும் அவர் நம்மைப் பத்திரமாக வழிநடத்துவார் என்று நமக்கு நன்றாகத் தெரியும். (ஏசா. 35:4) நாம் யெகோவாவை நம்பியிருப்பதால், உலகத்தில் இருக்கும் மற்றவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாலும் நாம் மனஅமைதியோடு இருக்கிறோம். (ஏசா. 30:15) இரண்டு, பென்னைப் போலவே நம்முடைய அப்பாமீது நம்பிக்கை வைத்திருப்பதற்கான காரணத்தை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குச் சொல்கிறோம். அப்போது, எப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தாலும் யெகோவா தங்களை கைவிடமாட்டார் என்று அவர்களும் நம்புவார்கள்.

“நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்”

12. (அ) நாம் பார்க்கப்போகும் மூன்றாவது வாக்குறுதி என்ன? (ஆ) யெகோவாவின் ‘கையை’ பற்றிச் சொல்லியிருப்பது நமக்கு எந்த உண்மையை ஞாபகப்படுத்துகிறது?

12 ஏசாயா பதிவு செய்திருக்கும் மூன்றாவது வாக்குறுதியைக் கவனியுங்கள்: “நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்.” “யெகோவா பலம்படைத்தவராக வருவார். அவருடைய கை அவருக்காக ஆட்சி செய்யும்” என்று சொல்வதன் மூலம் யெகோவா தன் மக்களை எப்படிப் பலப்படுத்துவார் என்பதை ஏற்கெனவே ஏசாயா விவரித்திருக்கிறார். (ஏசா. 40:10) “கை” என்ற வார்த்தை, பொதுவாக பலத்தை அடையாளப்படுத்துவதற்காக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால், “அவருடைய கை அவருக்காக ஆட்சி செய்யும்” என்ற வார்த்தைகள், யெகோவா பலம்படைத்த ஒரு ராஜா என்பதை ஞாபகப்படுத்துகிறது. வீழ்த்த முடியாத தன்னுடைய பலத்தைப் பயன்படுத்தி கடந்த காலத்தில் வாழ்ந்த தன்னுடைய ஊழியர்களை அவர் பலப்படுத்தியிருக்கிறார், பாதுகாத்திருக்கிறார். அதே பலத்தைப் பயன்படுத்தி இன்றும் தன்னை நம்பியிருப்பவர்களை அவர் பலப்படுத்துகிறார், பாதுகாக்கிறார்.—உபா. 1:30, 31; ஏசா. 43:10.

யெகோவாவின் பலத்த கையை மீறி எந்த ஆயுதமும் நம்மைத் தாக்காது (பாராக்கள் 12-16) *

13. (அ) நம்மைப் பலப்படுத்துவதாகக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா எப்போது காப்பாற்றுகிறார்? (ஆ) எந்த வாக்குறுதி நமக்குப் பலத்தையும் நம்பிக்கையையும் தருகிறது?

13 முக்கியமாக, எதிரிகள் நம்மைத் துன்புறுத்தும்போது “நான் உன்னைப் பலப்படுத்துவேன்” என்று தான் சொன்ன வாக்குறுதியை யெகோவா காப்பாற்றுகிறார். இன்று, உலகத்தில் இருக்கும் சில இடங்களில், நம்முடைய பிரசங்க வேலையை அல்லது அமைப்பைத் தடை செய்ய எதிரிகள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். இருந்தாலும், இதுபோன்ற தாக்குதல்களை நினைத்து நாம் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவதில்லை. யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதி நமக்குப் பலத்தையும் நம்பிக்கையையும் தருகிறது. “உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்” என்பதுதான் அந்த வாக்குறுதி! (ஏசா. 54:17) இந்த வார்த்தைகள் மூன்று விஷயங்களை ஞாபகப்படுத்துகின்றன.

14. கடவுளுடைய எதிரிகள் நம்மைத் தாக்கும்போது நாம் ஏன் ஆச்சரியப்படுவதில்லை?

14 முதல் விஷயம், கிறிஸ்துவின் சீஷர்களான நாம் கண்டிப்பாக வெறுக்கப்படுவோம். (மத். 10:22) கடைசி நாட்களில் தன்னுடைய சீஷர்கள் கடுமையான துன்புறுத்தலைச் சந்திப்பார்கள் என்று இயேசு முன்னதாகவே சொல்லியிருந்தார். (மத். 24:9; யோவா. 15:20) இரண்டாவது விஷயம், எதிரிகள் நம்மை வெறுப்பதோடு நமக்கு எதிராக பல்வேறு ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசனம் முன்கூட்டியே எச்சரித்திருக்கிறது. தந்திரமாக ஏமாற்றுவதும், அப்பட்டமான பொய்களைச் சொல்வதும், கடுமையாகத் துன்புறுத்துவதும் அந்த ஆயுதங்களில் உட்பட்டிருக்கின்றன. (மத். 5:11) எதிரிகள் இந்த ஆயுதங்களை நமக்கு எதிராகப் பயன்படுத்துவதை யெகோவா தடுக்க மாட்டார். (எபே. 6:12; வெளி. 12:17) இருந்தாலும், நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்?

15-16. (அ) நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம் என்ன, ஏசாயா 25:4, 5 இந்த விஷயத்தை எப்படி ஆதரிக்கிறது? (ஆ) நம்மோடு சண்டை போடுபவர்களுக்குக் கடைசியில் என்ன ஆகும் என்று ஏசாயா 41:11, 12 விவரிக்கிறது?

15 நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயத்தைக் கவனியுங்கள். நமக்கு எதிராக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும் என்று யெகோவா சொல்லியிருக்கிறார். புயல் காற்றிலிருந்து உறுதியான ஒரு சுவர் நம்மைப் பாதுகாப்பது போல, ‘கொடுங்கோலர்களின் கோபத்திலிருந்து’ யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார். (ஏசாயா 25:4, 5-ஐ வாசியுங்கள்.) நம் எதிரிகளால் நமக்கு நிரந்தரப் பாதிப்பை ஒருபோதும் கொண்டுவர முடியாது.—ஏசா. 65:17.

16 நம்மேல் ‘எரிச்சலாக இருக்கிறவர்களுக்கு’ என்ன காத்திருக்கிறது என்பதை விவரமாகச் சொல்வதன் மூலம் யெகோவா நம்மை இன்னும் பலப்படுத்துகிறார். (ஏசாயா 41:11, 12-ஐ வாசியுங்கள்.) எதிரிகள் நமக்கு எதிராகத் தீவிரமாகச் சண்டை போட்டாலும் அல்லது கடுமையாகப் போர் செய்தாலும் அதன் விளைவு ஒன்றுதான். அவர்கள் “அடியோடு அழிந்துபோவார்கள்.”

யெகோவாமீது இருக்கும் நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துவது?

பைபிளிலிருந்து யெகோவாவைப் பற்றித் தொடர்ந்து படித்துவந்தால், அவர்மீது இருக்கும் நம்பிக்கை பலப்படும் (பாராக்கள் 17-18) *

17-18. (அ) பைபிளைப் படிப்பது கடவுள்மேல் நமக்கு இருக்கும் நம்பிக்கையை எப்படி அதிகமாக்கும்? ஓர் உதாரணம் கொடுங்கள். (ஆ) 2019-க்கான வருடாந்தர வசனத்தை ஆழமாக யோசிப்பது நமக்கு எப்படி உதவும்?

17 யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்மீது இருக்கும் நம்பிக்கையை நம்மால் பலப்படுத்திக்கொள்ள முடியும். அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கு ஒரே வழி, பைபிளைக் கவனமாகப் படிப்பதும், படித்த விஷயங்களை நன்றாக யோசித்துப்பார்ப்பதும்தான். கடந்த காலத்தில் யெகோவா தன்னுடைய மக்களை எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்ற நம்பகமான பதிவுகள் பைபிளில் இருக்கின்றன. இன்றும் அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையை அவை தருகின்றன.

18 யெகோவா நம்மை எப்படிப் பாதுகாக்கிறார் என்பதை விளக்குவதற்கு ஏசாயா ஓர் அழகான சொல்லோவியத்தைப் பயன்படுத்துகிறார். யெகோவாவை ஒரு மேய்ப்பர் என்றும், அவருடைய ஊழியர்களை ஆட்டுக்குட்டிகள் என்றும் சொல்கிறார். “ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார். அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார்” என்று யெகோவாவைப் பற்றி ஏசாயா சொன்னார். (ஏசா. 40:11) யெகோவாவின் பலத்த கைகள் நம்மை அரவணைத்திருப்பதை நாம் உணர்ந்தால், மனஅமைதியும் பாதுகாப்பான உணர்வும் நமக்குக் கிடைக்கும். பிரச்சினைகளின் மத்தியிலும் மனஅமைதியைக் காத்துக்கொள்ள, உண்மையும் விவேகமும் உள்ள அடிமை, ஏசாயா 41:10-ஐ 2019-க்கான வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. “கவலைப்படாதே, நான் உன் கடவுள்” என்று அந்த வசனம் சொல்கிறது. நம்பிக்கையைப் பலப்படுத்தும் இந்த வார்த்தைகளை ஆழமாக யோசித்துப்பாருங்கள். எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை அது உங்களுக்குக் கொடுக்கும்.

பாட்டு 60 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

^ பாரா. 5 இந்த உலகத்திலும் நம் வாழ்க்கையிலும் மோசமான சம்பவங்கள் நடக்கும்போது, நம்மால் மனஅமைதியோடு இருக்க முடியுமா? கண்டிப்பாக! அதற்கான மூன்று காரணங்களை 2019-க்கான வருடாந்தர வசனம் தருகிறது. அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பயத்திலேயே மூழ்கிவிடாமல் இருக்கவும் யெகோவாவை நம்பவும் இந்தக் கட்டுரை உதவும். அதனால், வருடாந்தர வசனத்தைப் பற்றி ஆழமாக யோசியுங்கள். முடிந்தால், மனப்பாடம் செய்யுங்கள். வரவிருக்கும் சவால்களைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை இது தரும்.

^ பாரா. 3 வார்த்தைகளின் விளக்கம்: ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும் என்பதை உறுதிப்படுத்துகிற உண்மையான வார்த்தைகளைத்தான் வாக்குறுதி என்று சொல்கிறோம். நம்முடைய பிரச்சினைகளிலேயே மூழ்கிவிடாமல் இருக்க யெகோவா தரும் வாக்குறுதிகள் நமக்கு உதவும்.

^ பாரா. 4 அடிக்குறிப்பு: ஏசாயா 41:10, 13, 14 வசனங்களில், “பயப்படாதே” என்ற வார்த்தை மூன்று தடவை வருகிறது. “நான்” (யெகோவாவைக் குறிப்பிட்டு) என்ற வார்த்தையும் இந்த வசனங்களில் பல தடவை வருகிறது. இந்த வார்த்தையைப் பல தடவை பயன்படுத்தும்படி யெகோவா ஏன் ஏசாயாவைத் தூண்டினார்? யெகோவாவை நம்பினால் மட்டுமே நம்மால் பயமில்லாமல் மனஅமைதியோடு இருக்க முடியும் என்ற முக்கியமான உண்மையைப் புரியவைக்கத்தான்!

^ பாரா. 52 படங்களின் விளக்கம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வேலை... ஆரோக்கியம்... ஊழியம்... பள்ளி... என எல்லா விஷயங்களிலும் சோதனைகளைச் சந்திக்கிறார்கள்.

^ பாரா. 54 படங்களின் விளக்கம்: ஒருவருடைய வீட்டில் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது திடீரென்று போலீஸார் சோதனை செய்ய வருகிறார்கள். ஆனால், சகோதர சகோதரிகள் பதட்டப்படாமல் இருக்கிறார்கள்.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துவது சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தை நமக்குக் கொடுக்கும்.