Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 5

கூட்டங்களில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது?

கூட்டங்களில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது?

‘நம் எஜமான் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவியுங்கள்.’—1 கொ. 11:26.

பாட்டு 149 மீட்புவிலைக்கு நன்றி!

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) கோடிக்கணக்கான மக்கள் எஜமானரின் இரவு விருந்துக்காக ஒன்றுகூடி வரும்போது, யெகோவா எதைக் கவனிக்கிறார்? (அட்டைப் படம்) (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

உலகம் முழுவதும் இருக்கிற கோடிக்கணக்கான மக்கள், எஜமானரின் இரவு விருந்துக்காக ஒன்றுகூடி வரும்போது, யெகோவா எதைக் கவனிக்கிறார்? அந்தக் கூட்டத்துக்கு வரும் நபர்களை ஒரு தொகுதியாக மட்டுமே அவர் பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக, அங்கே வரும் ஒவ்வொருவரையும் தனித்தனி நபர்களாகக் கவனிக்கிறார். உதாரணத்துக்கு, ஒவ்வொரு வருஷமும் அந்தக் கூட்டத்துக்குத் தவறாமல் வரும் நபர்களை அவர் கவனிக்கிறார். அதில் சிலர், கடுமையான துன்புறுத்தலின் மத்தியிலும் அந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கலாம். வேறு சிலர், மற்ற சபைக் கூட்டங்களுக்கு அவ்வளவாக வருவதில்லை என்றாலும், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வருவதை ஒரு கடமையாக நினைக்கிறார்கள். இன்னும் சிலர், இந்த நிகழ்ச்சியில் என்னதான் நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முதல் தடவையாக வருகிறார்கள்; அவர்களையும் யெகோவா கவனிக்கிறார்.

2 நினைவுநாள் நிகழ்ச்சியில் நிறைய பேர் கலந்துகொள்வதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார் என்பதில் சந்தேகமே இல்லை! (லூக். 22:19) இருந்தாலும், எத்தனை பேர் அதில் கலந்துகொள்கிறார்கள் என்பது யெகோவாவுக்கு முக்கியம் கிடையாது; என்ன காரணத்துக்காக அவர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்தக் கட்டுரையில், ஒரு முக்கியக் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்: வருஷத்துக்கு ஒரு முறை நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சியில் மட்டுமல்ல, தன்னை நேசிப்பவர்களுக்காக யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் எல்லா கூட்டங்களிலும் நாம் ஏன் கலந்துகொள்கிறோம்?

(பாராக்கள் 1-2) *

மனத்தாழ்மை

3-4. (அ) நாம் ஏன் கூட்டங்களில் கலந்துகொள்கிறோம்? (ஆ) கூட்டங்களில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது? (இ) 1 கொரிந்தியர் 11:23-26 சொல்கிறபடி நாம் ஏன் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம்?

3 நாம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான முக்கியக் காரணம், அவை நம் வணக்கத்தின் பாகமாக இருப்பதுதான்! அதுமட்டுமல்ல, கூட்டங்களின் மூலம் யெகோவா நமக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறார். ஆனால் பெருமைபிடித்தவர்கள், தங்களுக்கு யாரும் எதையும் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். (3 யோ. 9) நாம் அப்படி நினைப்பது கிடையாது. யெகோவாவிடமிருந்தும் அவருடைய அமைப்பிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம்.—ஏசா. 30:20; யோவா. 6:45.

4 கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம், நாம் மனத்தாழ்மையாக இருக்கிறோம், அதாவது கற்றுக்கொள்ளத் தயாராகவும் ஆசையாகவும் இருக்கிறோம், என்பதைக் காட்டுகிறோம். வெறும் கடமைக்காக மட்டுமே நாம் இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை. “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று இயேசு கொடுத்த கட்டளைக்கு மனத்தாழ்மையோடு கீழ்ப்படிகிறோம் என்பதைக் காட்டுவதற்காகவே அதில் கலந்துகொள்கிறோம். (1 கொரிந்தியர் 11:23-26-ஐ வாசியுங்கள்.) இந்த நிகழ்ச்சி, நம் எதிர்கால நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது; யெகோவா நம்மை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதையும் ஞாபகப்படுத்துகிறது. இருந்தாலும், வருஷத்தில் ஒரு தடவை மட்டுமல்ல, பல தடவை நமக்கு உற்சாகமும் பலமும் தேவை என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால்தான், ஒவ்வொரு வாரமும் நமக்குக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார், அதில் கலந்துகொள்ள வேண்டும் என்று நம்மை உற்சாகப்படுத்துகிறார். அவருக்குக் கீழ்ப்படிய மனத்தாழ்மை நம்மைத் தூண்டுகிறது. கூட்டங்களுக்குத் தயாரிக்கவும் அதில் கலந்துகொள்ளவும் நாம் ஒவ்வொரு வாரமும் நிறைய நேரம் செலவு செய்கிறோம்.

5. மனத்தாழ்மையுள்ள மக்கள் ஏன் யெகோவாவின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்?

5 ஒவ்வொரு வருஷமும் மனத்தாழ்மையுள்ள நிறைய பேர், யெகோவாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வருகிறார்கள். (ஏசா. 50:4) நினைவுநாள் நிகழ்ச்சியில் சந்தோஷமாகக் கலந்துகொள்கிறார்கள். பிறகு, மற்ற கூட்டங்களுக்கும் வர ஆரம்பிக்கிறார்கள். (சக. 8:20-23) புதியவர்களோடு சேர்ந்து நாமும், நம் ‘துணையாகவும்’ நம்மை ‘காப்பாற்றுபவராகவும்’ இருக்கிற யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்வதிலும், அவரால் வழிநடத்தப்படுவதிலும் சந்தோஷப்படுகிறோம்! (சங். 40:17) யெகோவாவிடமிருந்தும் அவருடைய அருமை மகனிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதைவிட வேறு எது சந்தோஷத்தைத் தர முடியும், வேறு எது முக்கியமாக இருக்க முடியும்?—மத். 17:5; 18:20; 28:20.

6. நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மனத்தாழ்மை எப்படி ஒரு நபரைத் தூண்டியது?

6 ஒவ்வொரு வருஷமும் நினைவுநாள் நிகழ்ச்சிக்காக நாம் நிறைய பேரை அழைக்கிறோம். மனத்தாழ்மையுள்ள நிறைய பேர், நம் அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த நிகழ்ச்சியிலிருந்து நன்மையடைந்திருக்கிறார்கள். பல வருஷங்களுக்கு முன்பு, நினைவுநாள் அழைப்பிதழை ஒருவர் பெற்றுக்கொண்டார். ஆனால், அதில் கலந்துகொள்ள முடியாது என்று அந்த அழைப்பிதழைக் கொடுத்த சகோதரரிடம் அவர் சொன்னார். ஆனால், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அவர் வந்ததைப் பார்த்து நம் சகோதரருக்கு ஒரே ஆச்சரியம்! சகோதரர்கள் அவரை அன்போடு வரவேற்றது, அவருடைய மனதைத் தொட்டது. பிறகு, நம்முடைய மற்ற கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்தார். சொல்லப்போனால், ஒரு வருஷத்தில் மூன்று கூட்டங்களுக்கு மட்டுமே அவர் வரவில்லை, மற்ற எல்லா கூட்டங்களிலும் அவர் தவறாமல் கலந்துகொண்டார். இப்படிக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க எது அவரைத் தூண்டியது? தன் மனதை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு அவர் மனத்தாழ்மையாக இருந்ததுதான் அதற்குக் காரணம். அவரை அழைத்த அந்தச் சகோதரரும், “அவரு உண்மையிலேயே மனத்தாழ்மையானவர்” என்று பிற்பாடு சொன்னார். யெகோவாதான் அந்த நபரைத் தன்னிடம் ஈர்த்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. இப்போது, அவர் ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரர்!—2 சா. 22:28; யோவா. 6:44.

7. கூட்டங்களிலிருந்தும் பைபிள் வாசிப்பிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் மனத்தாழ்மையாக இருக்க நமக்கு எப்படி உதவுகின்றன?

7 கூட்டங்களில் கற்றுக்கொள்ளும் விஷயங்களும் பைபிள் வாசிப்பிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களும் மனத்தாழ்மையாக இருக்க நமக்கு உதவும். நினைவுநாளுக்கு முந்தின சில வாரங்களில் நடக்கும் கூட்டங்கள், இயேசுவின் முன்மாதிரியைப் பற்றியும், தன்னுடைய உயிரை மீட்புவிலையாக கொடுத்ததன் மூலம் அவர் காட்டிய மனத்தாழ்மையைப் பற்றியும் கற்றுக்கொடுக்கின்றன. நினைவுநாளுக்கு முந்தின சில நாட்களில், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களைப் பற்றி பைபிளிலிருந்து வாசிக்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். இப்படி, நினைவுநாள் சமயத்தில் நடக்கிற கூட்டங்களிலிருந்தும் பைபிள் வாசிப்பிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள், இயேசு நமக்காகக் கொடுத்த பலியின்மீது இருக்கும் நன்றியுணர்வை அதிகரிக்கிறது. கஷ்டமாக இருந்தால்கூட, இயேசுவைப் போலவே நடக்கவும் யெகோவாவின் விருப்பத்தைச் செய்யவும் இது நம்மைத் தூண்டுகிறது.—லூக். 22:41, 42.

தைரியம்

8. இயேசு எப்படித் தைரியத்தைக் காட்டினார்?

8 தைரியத்தைக் காட்டும் விஷயத்திலும் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம். தன்னுடைய மரணத்துக்கு முந்தின சில நாட்களில் அவர் எந்தளவு தைரியத்தைக் காட்டினார் என்பதை யோசித்துப்பாருங்கள். எதிரிகள் தன்னை அவமானப்படுத்துவார்கள், அடிப்பார்கள், கடைசியில் கொலையும் செய்துவிடுவார்கள் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். (மத். 20:17-19) இருந்தாலும், மரணத்தைச் சந்திக்க அவர் தயாராக இருந்தார். அந்தச் சமயம் வந்தபோது, கெத்செமனே தோட்டத்தில் தன்னோடு இருந்த உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம், “எழுந்திருங்கள், போகலாம். இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் நெருங்கி வந்துவிட்டான்” என்று சொன்னார். (மத். 26:36, 46) தன்னைக் கைது செய்வதற்காக ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் வந்தபோது, அவர்களுக்கு நேராகப் போய், அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆள் தான்தான் என்று சொன்னார். அதோடு, தன்னுடைய அப்போஸ்தலர்களைப் போகவிடும்படி அந்தப் படைவீரர்களுக்குக் கட்டளை கொடுத்தார். (யோவா. 18:3-8) எப்பேர்ப்பட்ட தைரியம்! இன்று, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் வேறே ஆடுகளும் இயேசுவைப் போலவே தைரியத்தைக் காட்ட கடினமாக முயற்சி செய்கிறார்கள். எப்படி?

நீங்கள் தைரியமாகக் கூட்டங்களுக்கு வருவது மற்றவர்களைப் பலப்படுத்துகிறது (பாரா 9) *

9. (அ) கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள நமக்கு ஏன் தைரியம் தேவை? (ஆ) நம்முடைய முன்மாதிரியால் சிறையிலிருக்கும் சகோதரர்களுக்கு எப்படிப் பலம் கிடைக்கிறது?

9 கஷ்டமான சூழ்நிலைகளிலும் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ள நமக்குத் தைரியம் தேவை. கவலை, மனச்சோர்வு அல்லது உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலும் சில சகோதர சகோதரிகள் கூட்டங்களுக்கு வருகிறார்கள். வேறு சிலர், குடும்பத்தாரிடமிருந்தும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தாலும், தைரியமாகக் கூட்டங்களுக்கு வருகிறார்கள். தங்கள் விசுவாசத்துக்காகச் சிறையிலிருக்கும் சகோதரர்கள் நம்முடைய முன்மாதிரியைப் பார்த்து எந்தளவு பலப்படுகிறார்கள் என்று யோசித்துப்பாருங்கள். (எபி. 13:3) சோதனைகள் மத்தியிலும் நாம் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்வதை அவர்கள் கேள்விப்படும்போது, விசுவாசத்தையும் தைரியத்தையும் உத்தமத்தையும் காத்துக்கொள்ள வேண்டுமென்ற அவர்களுடைய தீர்மானம் இன்னும் பலப்படுகிறது. அப்போஸ்தலன் பவுலுக்கும் அதே அனுபவம் இருந்தது. ரோமில் அவர் சிறையிலிருந்தபோது, தன்னுடைய சகோதரர்கள் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோதெல்லாம் அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். (பிலி. 1:3-5, 12-14) தான் விடுதலையாவதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு அல்லது விடுதலையான கொஞ்ச நாட்களுக்குப் பின்பு அவர் எபிரெயர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “தொடர்ந்து சகோதர அன்பை” காட்டும்படியும், சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் வரும்படியும் உண்மையுள்ள அந்தக் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்.—எபி. 10:24, 25; 13:1.

10-11. (அ) நினைவுநாள் நிகழ்ச்சிக்கு நாம் யாரையெல்லாம் அழைக்க வேண்டும்? (ஆ) அதற்கான காரணத்தை எபேசியர் 1:7 எப்படி விளக்குகிறது?

10 நம்முடைய சொந்தக்காரர்களையும், நம்மோடு வேலை செய்கிறவர்களையும், அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களையும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அழைப்பதன் மூலம் நாம் தைரியத்தைக் காட்டுகிறோம். யெகோவாவும் இயேசுவும் நமக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றுக்கும் நாம் ரொம்பவே நன்றியோடு இருக்கிறோம். அதனால்தான், நம்மால் அவர்களை அழைக்காமல் இருக்க முடிவதில்லை. மீட்புவிலையின் மூலம் யெகோவா காட்டியிருக்கும் ‘அளவற்ற கருணையால்’ எப்படி நன்மையடையலாம் என்பதை அவர்களும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்.எபேசியர் 1:7-ஐ வாசியுங்கள்; வெளி. 22:17.

11 கூட்டங்களுக்கு வர தைரியத்தைக் காட்டும்போது, இன்னொரு முக்கியமான குணத்தையும் நாம் வெளிக்காட்டுகிறோம். இந்தக் குணத்தைத்தான் கடவுளும் அவருடைய மகனும் பல வழிகளில் காட்டுகிறார்கள்.

அன்பு

12. (அ) கூட்டங்களில் கலந்துகொள்வதன் மூலம் யெகோவாமீதும் இயேசுமீதும் இருக்கிற அன்பு எப்படி அதிகமாகிறது? (ஆ) 2 கொரிந்தியர் 5:14, 15 சொல்கிறபடி நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?

12 யெகோவாமீதும் இயேசுமீதும் இருக்கிற அன்பு, கூட்டங்களில் கலந்துகொள்ள நம்மைத் தூண்டுகிறது. அங்கே கற்றுக்கொள்ளும் விஷயங்களால், அந்த அன்பு இன்னும் அதிகமாகிறது. அவர்கள் நமக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்பதையும் கூட்டங்கள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. (ரோ. 5:8) அவர்கள் நம்மீது காட்டுகிற அன்பு, அதுவும் மீட்புவிலையின் முக்கியத்துவத்தைப் பற்றி இதுவரை புரிந்துகொள்ளாதவர்கள்மீதும் அவர்கள் காட்டுகிற அன்பு, எந்தளவு ஆழமானது என்பதை நினைவுநாள் நிகழ்ச்சி நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அதனால்தான், நம் இதயத்தில் நன்றி பொங்க, ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல வாழ முயற்சி செய்கிறோம். (2 கொரிந்தியர் 5:14, 15-ஐ வாசியுங்கள்.) அதோடு, மீட்புவிலையைக் கொடுத்ததற்காக யெகோவாவைப் புகழவும் நம் இதயம் நம்மைத் தூண்டுகிறது. அவரைப் புகழ்வதற்கான ஒரு வழி, கூட்டங்களில் மனதிலிருந்து பதில் சொல்வதாகும்!

13. யெகோவாமீதும் அவருடைய மகன்மீதும் நமக்கு ஆழமான அன்பு இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்? விளக்குங்கள்.

13 நமக்கு யெகோவாமீதும் இயேசுமீதும் ஆழமான அன்பு இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்? அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில், கூட்டங்களுக்குப் போக நாம் நிறைய தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. நிறைய சபைகளில், நாள் முழுதும் வேலைசெய்து நாம் களைப்பாக இருக்கும் சமயத்தில், அதாவது சாயங்காலத்தில், ஒரு கூட்டம் நடக்கிறது. இன்னொரு கூட்டம், மக்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் வாரயிறுதியில் நடக்கிறது. களைப்பாக இருந்தாலும், கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சியை யெகோவா கவனிக்கிறாரா? கண்டிப்பாக! நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் அவர் கவனிக்கிறார், அவற்றை உயர்வாக மதிக்கிறார்.—மாற். 12:41-44.

14. சுயதியாக அன்பைக் காட்டும் விஷயத்தில் இயேசு எப்படி முன்மாதிரி வைத்திருக்கிறார்?

14 சுயதியாக அன்பைக் காட்டும் விஷயத்தில் இயேசு நமக்குச் சிறந்த முன்மாதிரி! தன்னுடைய சீஷர்களுக்காக அவர் உயிரையே கொடுக்கத் தயாராக இருந்தார். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் தன்னுடைய தேவைகளைவிட சீஷர்களுடைய தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். உதாரணத்துக்கு, உடல் ரீதியிலோ உணர்ச்சி ரீதியிலோ சோர்வாக இருந்தபோதுகூட அவர் தன் சீஷர்களைச் சந்தித்துப் பேசினார். (லூக். 22:39-46) மற்றவர்களிடமிருந்து எதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்றுதான் அதிகமாக யோசித்தார். (மத். 20:28) யெகோவாமீதும் நம் சகோதரர்கள்மீதும் நமக்கு அந்தளவு அன்பு இருந்தால், நினைவுநாள் நிகழ்ச்சியிலும் மற்ற எல்லா கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொள்ள நம்மால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுப்போம்.

15. முக்கியமாக யாருக்கு உதவ நாம் ஆர்வமாக இருக்கிறோம்?

15 உண்மையான சகோதர அன்பைக் காட்டும் ஒரு தொகுதியின் பாகமாக நாம் இருக்கிறோம். நம்மோடு சேர்ந்துகொள்ளும்படி நாம் புதியவர்களை அழைக்க நிறைய நேரம் செலவு செய்கிறோம். இருந்தாலும், “நம்முடைய விசுவாசக் குடும்பத்தாருக்கு,” முக்கியமாக செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு, உதவ நாம் ஆர்வமாக இருக்கிறோம். (கலா. 6:10) கூட்டங்களுக்கும், முக்கியமாக, நினைவுநாள் நிகழ்ச்சிக்கும் வரும்படி நாம் அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் அவர்களை நேசிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். யெகோவா ஓர் அன்பான அப்பாவாகவும் மேய்ப்பராகவும் இருக்கிறார். செயலற்ற பிரஸ்தாபி ஒருவர் அவரிடம் திரும்பி வரும்போது, நாம் யெகோவாவையும் இயேசுவையும் போலவே சந்தோஷப்படுகிறோம்.—மத். 18:14.

16. (அ) நாம் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம், நம் கூட்டங்கள் எதற்கு உதவும்? (ஆ) யோவான் 3:16-ல் இருக்கும் இயேசுவின் வார்த்தைகளை நினைத்துப்பார்ப்பதற்கு இது ஏன் சரியான சமயம்?

16 ஏப்ரல் 19, 2019, வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் நடக்கவிருக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு முடிந்தளவு நிறைய பேரை அழைக்க முயற்சி செய்யுங்கள். (“ அவர்களை அழைப்பீர்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) இந்த வருஷம் முழுவதும், யெகோவா ஏற்பாடு செய்திருக்கும் எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்வதன் மூலம் நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம். உலகத்தின் முடிவு நெருங்கி வந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், தொடர்ந்து மனத்தாழ்மையாகவும் தைரியமாகவும் அன்பாகவும் இருக்க சபைக் கூட்டங்கள் நமக்கு உதவும். (1 தெ. 5:8-11) யெகோவாவும் அவருடைய மகனும் நம்மீது காட்டியிருக்கும் அன்பைப் பற்றி எப்படி உணருகிறோம் என்பதை நம்முடைய செயலில் காட்டலாம்!யோவான் 3:16-ஐ வாசியுங்கள்.

பாட்டு 43 உறுதியுடன் விழிப்பாய் இருப்போமே!

^ பாரா. 5 ஏப்ரல் 19, 2019, வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் அனுசரிக்கப்படும் கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சிதான் இந்த வருஷத்திலேயே மிகவும் முக்கியமான நிகழ்ச்சி. இது ஒரு முக்கியமான கூட்டமும்கூட! இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எது நம்மைத் தூண்டுகிறது? யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆசைதான்! நினைவுநாள் நிகழ்ச்சியிலும் மற்ற சபைக் கூட்டங்களிலும் நாம் கலந்துகொள்வதற்கான காரணத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 50 அட்டைப் படம்: எஜமானரின் இரவு விருந்தில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கான மக்கள் வரவேற்கப்படுகிறார்கள்

^ பாரா. 52 படங்களின் விளக்கம்: சிறையிலிருக்கும் ஒரு சகோதரர் தன் வீட்டிலிருந்து வந்திருக்கும் கடிதத்தைப் படித்து பலம்பெறுகிறார். அந்தப் பகுதியில் உள்நாட்டுக் கலவரம் இருக்கிறபோதிலும், தன்னுடைய குடும்பத்தார் தன்னை மறக்கவில்லை என்பதையும், அவர்கள் யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக இருக்கிறார்கள் என்பதையும் நினைத்து அவர் சந்தோஷப்படுகிறார்.