Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எக்காள சத்தத்தைக் கேளுங்கள், உடனடியாகச் செயல்படுங்கள்!

எக்காள சத்தத்தைக் கேளுங்கள், உடனடியாகச் செயல்படுங்கள்!

இந்த “கடைசி நாட்களில்” யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார் என்பதையும், தன்னோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார் என்பதையும் நாம் மனதார நம்புகிறோம். (2 தீ. 3:1) ஆனால், அவருடைய ஏற்பாடுகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. நம்முடைய சூழ்நிலையை வனாந்தரத்தில் பயணம் செய்த இஸ்ரவேலர்களுடைய சூழ்நிலையோடு ஒப்பிடலாம். எக்காளம் ஊதப்பட்டபோது, அதற்குத் தகுந்தபடி அவர்கள் செயல்பட வேண்டியிருந்தது.

வெள்ளியைத் தகடாக அடித்து இரண்டு எக்காளங்களைச் செய்யும்படி யெகோவா மோசேயிடம் சொன்னார். “ஜனங்களை ஒன்றுகூடி வரச் சொல்வதற்கும், வேறொரு இடத்துக்குப் புறப்படச் சொல்வதற்கும்” அந்த எக்காளங்களைச் செய்யும்படிச் சொன்னார். (எண். 10:2) மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரியப்படுத்துவதற்குக் குருமார்கள் வெவ்வேறு விதங்களில் எக்காளங்களை ஊதினார்கள். (எண். 10:3-8) இன்று நமக்கும் நிறைய விதங்களில் வழிநடத்துதல்கள் கிடைக்கின்றன. அப்படிக் கிடைக்கிற மூன்று வழிநடத்துதல்களைப் பற்றியும், அவை எப்படி அந்தக் காலத்தில் ஊதப்பட்ட எக்காளச் சத்தத்தைப் போல் இருக்கின்றன என்பதையும் இப்போது பார்க்கலாம். பெரிய கூட்டமாகக் கூடி வரும்படி இன்று கடவுளுடைய மக்கள் அழைக்கப்படுகிறார்கள், பயிற்சி பெற்றுக்கொள்ளும்படி மூப்பர்கள் அழைக்கப்படுகிறார்கள், சபைகளில் கொடுக்கப்படும் புதிய மாற்றங்களை அல்லது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும்படி சகோதர சகோதரிகள் அழைக்கப்படுகிறார்கள்.

பெரிய கூட்டமாகக் கூடி வருவதற்கான எக்காள சத்தம்

சந்திப்புக் கூடாரத்தின் கிழக்கு நுழைவாசலில் “ஜனங்கள் எல்லாரும்” கூடிவர வேண்டுமென்று யெகோவா விரும்பியபோது, குருமார்கள் இரண்டு எக்காளங்களையும் ஊதினார்கள். (எண். 10:3) சந்திப்புக் கூடாரத்தைச் சுற்றியும் நான்கு பிரிவுகளாக முகாம் போட்டிருந்த எல்லா கோத்திரத்தாரும் அந்தச் சத்தத்தைக் கேட்டார்கள். நுழைவாசலுக்குப் பக்கத்தில் முகாம் போட்டிருந்தவர்கள் சில நிமிஷங்களில் அங்கே வந்துசேர்ந்திருப்பார்கள். தூரமாக முகாம் போட்டிருந்தவர்கள் வந்துசேருவதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்பட்டிருக்கும். எப்படியிருந்தாலும் சரி, எல்லாரும் வந்து தன்னுடைய கட்டளைகளைக் கேட்டு பிரயோஜனமடைய வேண்டுமென்று யெகோவா விரும்பினார்.

ஆனால் இன்று, சந்திப்புக் கூடாரம் என்று எதுவும் கிடையாது. ஆனால், கடவுளுடைய மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி வரும்படி அழைக்கப்படுகிறார்கள். உதாரணத்துக்கு, மண்டல மாநாடுகளுக்கும் மற்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஒன்றுகூடி வரும்படி நாம் அழைக்கப்படுகிறோம். முக்கியமான தகவல்களும் தேவையான வழிநடத்துதல்களும் அங்கே கொடுக்கப்படுகின்றன. யெகோவாவின் மக்கள் எல்லாருமே ஒரே விதமான நிகழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். இப்படி, யெகோவாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருகிற எல்லாருக்கும் சந்தோஷம் கிடைக்கிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு வருவதற்காக, சிலர் ரொம்பத் தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். இருந்தாலும், தங்களுடைய முயற்சி வீண் போகவில்லை என்பதை அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.

ஒதுக்குப்புறமான தொகுதிகளில் இருக்கிற சகோதர சகோதரிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலிருந்து நன்மையடைய நவீன தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. அதனால், இப்படிப்பட்ட பெரிய கூட்டத்தில் தாங்களும் ஒருவர் என்ற எண்ணத்தை இது அவர்களுக்குத் தருகிறது. பெனின் என்ற நாட்டில் என்ன நடந்தது என்று கவனிக்கலாம். அந்த நாட்டின் கிளை அலுவலகத்தில் தலைமை அலுவலக பிரதிநிதியின் சந்திப்பு நடந்தபோது, அந்த நிகழ்ச்சியை, நைஜர் நாட்டில் இருக்கும் ஆர்லெட் என்ற சின்ன ஊரிலிருந்த சகோதர சகோதரிகளுக்கு ஒளிபரப்பு செய்தார்கள். (சஹாரா பாலைவனத்தில் இருக்கிற அந்த ஊரில், சுரங்கத் தொழில் நடந்துவருகிறது.) ஒளிபரப்பைப் பார்க்க, சகோதர சகோதரிகள்... ஆர்வம் காட்டிய மற்றவர்கள்... என மொத்தம் 21 பேர் வந்திருந்தார்கள். இவர்கள் ரொம்பத் தூரத்தில் இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 44,131 பேரில் தாங்களும் ஒருவர் என்பதை நினைத்து சந்தோஷப்பட்டார்கள். “இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக உங்களுக்கு மனதார நன்றி சொல்கிறோம். எங்கள்மேல் நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை மறுபடியும் தெரிந்துகொள்ள முடிந்தது” என்று ஒரு சகோதரர் எழுதினார்.

மூப்பர்களுக்கான எக்காள சத்தம்

இஸ்ரவேல் குருமார்கள் ஒரேவொரு எக்காளத்தை மட்டும் ஊதும்போது, “ஆயிரக்கணக்கானோரின் தலைவர்களான கோத்திரத் தலைவர்கள்” சந்திப்புக் கூடாரத்துக்கு முன்பாக வர வேண்டியிருந்தது. (எண். 10:4) அந்தச் சமயத்தில், அவர்களுக்குச் சில தகவல்களையும் பயிற்சியையும் மோசே கொடுத்தார். அவர்களுடைய பொறுப்புகளைச் செய்வதற்கு அது பிரயோஜனமாக இருந்தது. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்திருந்தால், சந்திப்புக் கூடாரத்துக்குப் போவதற்கு உங்களால் முடிந்த எல்லா முயற்சியையும் எடுத்திருப்பீர்கள், இல்லையா?

இன்றிருக்கிற மூப்பர்கள், “கோத்திரத் தலைவர்கள்” அல்ல. தங்களுடைய பொறுப்பில் இருக்கும் கடவுளுடைய மந்தையின் மீது அவர்கள் ஆதிக்கம் செலுத்துவதில்லை. (1 பே. 5:1-3) அதை அன்பாகக் கவனித்துக்கொள்ள தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார்கள். அதனால், ராஜ்ய ஊழியப் பள்ளி போன்ற கூடுதலான பயிற்சிக்காக அழைக்கப்படும்போது ஆர்வமாகக் கலந்துகொள்கிறார்கள். சபை சம்பந்தப்பட்ட விஷயங்களை இன்னும் நன்றாகச் செய்ய இதுபோன்ற பயிற்சிகள் அவர்களுக்குக் கைகொடுக்கின்றன. அதுமட்டுமல்ல, அவர்களும் சபையில் இருப்பவர்களும் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் இவை உதவின. இவற்றில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அதில் கலந்துகொண்டவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

மாற்றங்களைச் செய்வதற்கான எக்காள சத்தம்

இஸ்ரவேல் குருமார்கள் சிலசமயங்களில் ஏற்ற இறக்கத்தோடு எக்காளத்தை ஊதினார்கள். இஸ்ரவேலர்கள் முகாம் போட்டிருந்த இடத்தைவிட்டுப் புறப்பட வேண்டும் என்பதை அது காட்டியது. (எண். 10:5, 6) அவர்கள் இப்படிப் புறப்பட்டு போனபோதெல்லாம் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தொகுதியாகப் போனார்கள். அதற்காக அவர்களுடைய பங்கில் நிறைய முயற்சி தேவைப்பட்டது. ஒரு இடத்தைவிட்டு இன்னொரு இடத்துக்குப் போவது ஒருவேளை சிலருக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம். ஏன்?

ஏனென்றால், இப்படிப் போவதற்கான அழைப்பு அடிக்கடி வந்ததாகவும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்ததாகவும் சிலர் நினைத்திருக்கலாம். “வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும்போது [இஸ்ரவேலர்களும்] அங்கேயே தங்கியிருப்பார்கள்” என்று பைபிள் சொல்கிறது. “சிலசமயம் சாயங்காலத்திலிருந்து காலை வரைக்கும்தான் அந்த மேகம் தங்கியிருக்கும்.” வேறுசில சமயங்களிலோ, “இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, அதற்கும் அதிகமான காலமோ” மேகம் அங்கே தங்கியிருக்கும். (எண். 9:21, 22) எண்ணாகமம் 33-ம் அதிகாரம் சொல்வதுபோல், கிட்டத்தட்ட 40 இடங்களில் இஸ்ரவேலர்கள் முகாம் போட்டார்கள்!

சிலசமயங்களில், நிழலான இடங்களில் அவர்கள் முகாம் போட்டிருக்கலாம். ‘பயங்கரமான பெரிய வனாந்தரத்தில்’ அப்படிப்பட்ட இடங்களில் தங்குவது எவ்வளவு இதமாக இருந்திருக்கும்! (உபா. 1:19) அதனால், அடுத்ததாக மாறிப்போகும் இடம் எப்படி இருக்குமோ என்று நினைத்து அவர்கள் கவலைப்பட்டிருக்கலாம்.

ஒவ்வொரு கோத்திரத்தாரும், தாங்கள் புறப்படுவதற்கான சமயம் வரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஏற்ற இறக்கத்துடன் ஊதப்பட்ட எக்காள சத்தத்தை எல்லாருமே கேட்டாலும், எல்லாராலும் ஒரே சமயத்தில் புறப்பட முடியவில்லை. முதல் தடவையாக எக்காளம் ஊதப்படும்போது, கிழக்கில் முகாம் போட்டிருந்த யூதா, இசக்கார், செபுலோன் கோத்திரத்தார் புறப்பட வேண்டியிருந்தது. (எண். 2:3-7; 10:5, 6) அவர்கள் புறப்பட்ட பிறகு, இரண்டாவது தடவையாக குருமார்கள் ஏற்ற இறக்கத்துடன் எக்காளத்தை ஊதுவார்கள். அப்போது, தெற்கில் முகாம் போட்டிருந்த மற்ற மூன்று கோத்திரத்தார் புறப்பட வேண்டும். எல்லாரும் புறப்படும்வரை குருமார்கள் இப்படி எக்காளம் ஊதினார்கள்.

அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்போது, உங்களுக்குள் உணர்ச்சிப் போராட்டங்கள் நடக்கலாம். எதிர்பார்க்காத ஏராளமான மாற்றங்கள் நடப்பதைப் பார்த்து நீங்கள் திணறிப்போகலாம். அல்லது, உங்களுக்கு நன்றாகப் பழக்கப்பட்ட விஷயங்கள் மாறாமல் இருந்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். இதில் எதுவாக இருந்தாலும், அந்த மாற்றங்கள் உங்கள் பொறுமையைச் சோதிக்கலாம். மாற்றத்துக்கேற்றபடி உங்களை மாற்றிக்கொள்ள கொஞ்சம் காலம் எடுக்கலாம். ஆனாலும், அவற்றை மனதார ஏற்றுக்கொள்ளும்போது, யெகோவா ஆசீர்வாதங்களை மழைபோல் பொழிவார்!

மோசே காலத்தில், லட்சக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும் வனாந்தரம் வழியாக யெகோவா கூட்டிக்கொண்டு போனார். அவருடைய கவனிப்பும் வழிநடத்துதலும் இல்லாமல் இருந்திருந்தால், வனாந்தரம் அவர்களை காவு வாங்கியிருக்கும்! இந்தப் பயங்கரமான கடைசி நாட்களில், தன் உள்ளங்கையில் வைத்து யெகோவா நம்மைத் தாங்குகிறார். அவரோடு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும் உதவுகிறார். அதனால், வெவ்வேறு விதமான எக்காள சத்தத்துக்குப் பிரதிபலித்த இஸ்ரவேலர்களைப் போலவே நடந்துகொள்வது நம்முடைய தீர்மானமாக இருக்கட்டும்!