Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 26

“என்னிடம் திரும்பி வாருங்கள்”

“என்னிடம் திரும்பி வாருங்கள்”

“என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.”மல். 3:7.

பாட்டு 42 ‘பலவீனருக்கு உதவி செய்யுங்கள்’

இந்தக் கட்டுரையில்... *

1. தன்னுடைய ஊழியர்களில் ஒருவர் திரும்பி வரும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல், தன்னுடைய ஆடுகள் ஒவ்வொன்றையும் கனிவோடு பார்த்துக்கொள்கிற நல்ல மேய்ப்பருக்கு யெகோவா தன்னை ஒப்பிடுகிறார். தன்னைவிட்டு விலகிப்போனவர்களை அவர் தேடுகிறார். அதனால்தான், வழிதவறிப் போன இஸ்ரவேலர்களிடம், “என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது நானும் உங்களிடம் திரும்பி வருவேன்” என்று சொன்னார். “நான் மாறுவதில்லை” என்று அவர் சொல்லியிருப்பதால், இன்று வழிதவறிப் போனவர்களைப் பற்றியும் அவர் அப்படித்தான் நினைக்கிறார். (மல். 3:6, 7) அவர்களில் ஒருவர் திரும்பி வந்தால்கூட, யெகோவாவும் தேவதூதர்களும் அளவில்லாத ஆனந்தம் அடைவதாக இயேசுவும் சொன்னார்.—லூக். 15:10, 32.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 யெகோவாவைவிட்டு வழிதவறிப் போனவர்களுக்கு உதவுவதற்கு இயேசு சொன்ன மூன்று உவமைகள் நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்களுக்கு உதவுவதற்கு நமக்குத் தேவைப்படுகிற சில குறிப்பிட்ட குணங்களைப் பற்றியும் பார்க்கலாம். அதோடு, அவர்களுக்கு உதவுவதற்காக நாம் எடுக்கிற முயற்சிகள் ஏன் ஒருபோதும் வீண்போகாது என்றும் பார்க்கலாம்.

தொலைந்துபோன காசைத் தேடுவது

3-4. லூக்கா 15:8-10-ல் சொல்லப்பட்ட பெண், தொலைந்துபோன திராக்மா காசை ஏன் அவ்வளவு கவனமாகத் தேடுகிறாள்?

3 யெகோவாவிடம் திரும்பிவர விரும்புகிறவர்களைத் தேடுவதற்கு நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இதைப் புரிந்துகொள்ள, லூக்கா சுவிசேஷத்தில் இருக்கிற ஒரு உவமை உதவும். விலையுயர்ந்த திராக்மா காசைத் தொலைத்துவிட்ட ஒரு பெண், அதைத் தேடுவதற்கு எப்படியெல்லாம் முயற்சி செய்கிறாள் என்பதைப் பற்றி அந்த உவமையில் இயேசு சொன்னார். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிற முக்கியமான பாடம் இதுதான்: தொலைந்துபோனதைத் தேடுவதற்கு அவள் கடினமாக முயற்சி செய்கிறாள்!லூக்கா 15:8-10-ஐ வாசியுங்கள்.

4 பிறகு, அவள் அதைக் கண்டுபிடித்துவிடுகிறாள். அப்போது, அவள் எந்தளவு சந்தோஷப்பட்டாள் என்பதை இயேசு விளக்குகிறார். பொதுவாக, இயேசு வாழ்ந்த காலத்தில், இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் கல்யாணமாகி புகுந்த வீட்டுக்குப் போகும்போது, அவளுடைய அம்மா பத்து திராக்மா காசுகளைக் கொடுப்பது வழக்கம். ஒருவேளை, இயேசு சொன்ன உவமையில் வருகிற பெண், தன்னுடைய அம்மா கொடுத்த பத்து திராக்மாவில் ஒன்றைத் தொலைத்திருக்கலாம். ஒருவேளை அந்தக் காசு தரையில் கிடக்கலாம் என்று அவள் நினைக்கிறாள். அதனால், விளக்கைக் கொளுத்தி தரை முழுவதும் பார்க்கிறாள். ஆனால், பிரயோஜனமில்லை. ஏனென்றால், அவள் வைத்திருந்த எண்ணெய் விளக்கு, அந்தக் காசைக் கண்டுபிடிக்குமளவுக்கு வெளிச்சம் தராமல் இருந்திருக்கலாம். அதனால், அவள் இன்னொரு முயற்சி செய்கிறாள். அதாவது, வீடு முழுவதையும் பெருக்குகிறாள். இப்போது, அவள் பெருக்கிய குப்பையில், அந்தக் காசு விளக்கு வெளிச்சத்தில் மின்னுவதைப் பார்க்கிறாள். பொக்கிஷம்போல் வைத்திருந்த அந்தக் காசைப் பார்த்த உடனே அவளுடைய முகம் பிரகாசமாகிறது. தன்னுடைய நண்பர்களையும் அக்கம்பக்கத்தாரையும் கூப்பிடுகிறாள். அவர்களோடு சேர்ந்து சந்தோஷப்படுகிறாள்.

5. செயலற்ற பிரஸ்தாபிகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு கடின முயற்சி ஏன் அவசியம்?

5 இயேசுவின் உவமை சொல்லித்தருகிற பாடம் இதுதான்: தொலைந்துபோன ஒன்றைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குக் கடின முயற்சி அவசியம்! செயலற்ற பிரஸ்தாபிகளைத் தேடிக் கண்டுபிடிக்கிற விஷயத்திலும் இதுதான் உண்மை. அவர்கள் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் வருவதை நிறுத்தி நிறைய வருஷங்கள் ஆகியிருக்கலாம். ஒருவேளை, வேறொரு இடத்துக்கு அவர்கள் குடிமாறிப் போயிருக்கலாம். அங்கிருக்கிற சகோதர சகோதரிகளுக்கோ அவர்களைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கலாம். சகோதர சகோதரிகளோடு சேர்ந்து மறுபடியும் யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர்கள் ஆசைப்படலாம். அப்படியென்றால், நம்முடைய உதவி அவர்களுக்குத் தேவை, இல்லையா?

6. சபையில் இருக்கும் எல்லாரும் எப்படிச் செயலற்ற பிரஸ்தாபிகளைத் தேடும் படலத்தில் இறங்கலாம்?

6 செயலற்ற பிரஸ்தாபிகளைத் தேடும் படலத்தில் யாரெல்லாம் இறங்கலாம்? மூப்பர்கள்... பயனியர்கள்... செயலற்ற பிரஸ்தாபிகளின் குடும்பத்தார்... பிரஸ்தாபிகள்... என எல்லாருமே முயற்சி செய்யலாம். உங்கள் நண்பரோ சொந்தக்காரரோ செயலற்ற பிரஸ்தாபியாக ஆகிவிட்டாரா? வீட்டுக்கு வீடு ஊழியம் அல்லது பொது ஊழியம் செய்யும்போது செயலற்ற பிரஸ்தாபிகள் யாரையாவது பார்த்தீர்களா? அப்படியென்றால், யாராவது வந்து தங்களைச் சந்திக்க அவர்களுக்கு விருப்பம் இருந்தால், அவர்களுடைய விலாசத்தையோ ஃபோன் நம்பரையோ உள்ளூர் மூப்பர்களிடம் கொடுப்பதாகச் சொல்லுங்கள்.

7. தாமஸ் என்ற மூப்பரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

7 யெகோவாவிடம் திரும்பிவர விரும்புபவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிற பொறுப்பு முக்கியமாக மூப்பர்களுக்கு இருக்கிறது. அதற்காக அவர்கள் என்ன செய்யலாம்? தாமஸ் * என்ற மூப்பர் சொல்வதைக் கவனியுங்கள். அவர் ஸ்பெயின் நாட்டில் வாழ்கிறார். செயலற்ற நிலையிலிருந்த 40-க்கும் அதிகமானவர்கள் திரும்பி வருவதற்கு இவர் உதவியிருக்கிறார். “செயலற்ற பிரஸ்தாபிகள் இப்போ எங்கே குடியிருக்காங்கனு தெரியுமானு சகோதர சகோதரிகள்கிட்ட முதல்ல கேட்பேன். இல்லனா, கூட்டங்களுக்கு வர்றத நிறுத்தியிருக்கிற யாரையாவத தெரியுமானு கேட்பேன். அப்படி கேட்குறப்போ, பெரும்பாலும் நிறைய பேர் ஆர்வமா தங்களுக்கு தெரிஞ்சத சொல்வாங்க. ஏன்னா, தேடுற படலத்துல அவங்களும் ஒரு பங்கை செய்யணும்னு ஆசப்படுறாங்க. செயலற்ற பிரஸ்தாபிகளை கண்டுபிடிச்சதும், அவங்களோட பிள்ளைகள பத்தியும் அவங்க குடும்பத்துல இருக்கிற மத்தவங்கள பத்தியும் விசாரிப்பேன். ஏன்னா, இந்த செயலற்ற பிரஸ்தாபிகள் சிலர் கூட்டங்களுக்கு வந்துட்டிருந்த சமயத்துல, பிள்ளைகளயும் கூட்டிட்டு வந்திருப்பாங்க. அந்த பிள்ளைகள், பிரஸ்தாபிகளாவும் இருந்திருப்பாங்க. அதனால, அவங்களும் யெகோவாகிட்ட திரும்பி வர்றதுக்கு உதவணும்” என்று அவர் சொல்கிறார்.

காணாமல்போன யெகோவாவின் மகன்களையும் மகள்களையும் கூட்டிக்கொண்டு வாருங்கள்

8. லூக்கா 15:17-24-ல் சொல்லப்பட்டிருக்கிற காணாமல்போன மகனைப் பற்றிய உவமையில் வருகிற அப்பா, மனம் திருந்திய தன் மகனை எப்படி நடத்துகிறார்?

8 யெகோவாவிடம் திரும்பிவர ஆசைப்படுபவர்களுக்கு உதவுவதற்கு, சில குணங்கள் நமக்குத் தேவை. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, இயேசு சொன்ன ஊதாரி மகனைப் பற்றிய உவமை நமக்கு உதவும். (லூக்கா 15:17-24-ஐ வாசியுங்கள்.) வீட்டைவிட்டுப் போன அவனுக்குக் கடைசியில் புத்திவருகிறது. திரும்பவும் வீட்டுக்கே போகலாம் என்று அவன் முடிவு செய்கிறான். அவனைப் பார்த்த உடனே, அவனுடைய அப்பா ஓடிப்போய் அவனைக் கட்டியணைத்துக்கொள்கிறார். இப்படி, தன்னுடைய அன்பைக் காட்டுகிறார். தான் செய்த தவறை நினைத்து அவன் கூனிக்குறுகுகிறான். தன் அப்பாவுக்கு மகன் என்று சொல்லிக்கொள்ளும் அருகதை தனக்கு இல்லை என்று சொல்கிறான். தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்டிய மகன்மீது அப்பாவுக்கு அனுதாபம் ஏற்படுகிறது. பிறகு, தன்னுடைய மகனை மனதார ஏற்றுக்கொண்டதைக் காட்டுவதற்குச் சில விஷயங்களைச் செய்கிறார். மனம் திருந்திய தன்னுடைய மகனை ஒரு வேலைக்காரனாக அல்ல, தன்னுடைய கண்மணியாக ஏற்றுக்கொண்டதைக் காட்டுவதற்கு, தடபுடலான விருந்தை ஏற்பாடு செய்கிறார். முதல்தரமான உடைகளைத் தருகிறார்.

9. செயலற்றவர்கள் திரும்பி வருவதற்கு உதவ, என்னென்ன குணங்கள் நமக்குத் தேவை? (“ திரும்பிவர விரும்புகிறவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

9 அந்த உவமையில் வந்த அப்பாவைப் போல்தான் யெகோவாவும்! செயலற்ற பிரஸ்தாபிகளை அவர் நேசிக்கிறார், தன்னிடம் அவர்கள் திரும்பிவர வேண்டுமென்று ஆசைப்படுகிறார். யெகோவாவைப் போலவே நாமும் அவர்களுக்கு உதவலாம். இப்படிச் செய்வதற்கு, பொறுமை... அனுதாபம்... அன்பு... ஆகிய குணங்கள் நமக்குத் தேவை. இந்தக் குணங்களை நாம் ஏன் காட்ட வேண்டும், எப்படிக் காட்டலாம்?

10. செயலற்ற பிரஸ்தாபிகள் மறுபடியும் யெகோவாவிடம் நெருங்கிவருவதற்கு உதவ நமக்கு ஏன் பொறுமை தேவை?

10 செயலற்றவர்கள் திரும்பிவர காலம் எடுக்கும். அதனால், நமக்குப் பொறுமை தேவை. தாங்கள் மறுபடியும் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு, மூப்பர்களும் சபையிலிருப்பவர்களும் நிறைய தடவை தங்களை வந்து பார்க்க வேண்டியிருந்ததாக முன்பு செயலற்றவர்களாக இருந்தவர்கள் சொல்கிறார்கள். ஆசியாவைச் சேர்ந்த நான்சி என்ற சகோதரி இப்படி எழுதுகிறார்: “சபையிலிருந்த என்னுடைய நெருங்கிய தோழி எனக்கு நிறைய உதவினாள். தன்னுடைய அக்காவைப் போல் என்னை நேசித்தாள். நாங்கள் இரண்டு பேரும் முன்பு ஒன்றாகச் சேர்ந்து செலவழித்த அந்தத் தருணங்களை ஞாபகப்படுத்தினாள். என்னுடைய உணர்ச்சிகளைக் கொட்டும்போது, அவள் காதுகொடுத்துக் கேட்பாள். எனக்கு அறிவுரை கொடுக்கவும் அவள் தயங்கவில்லை. என்னுடைய உண்மையான தோழியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருந்தாள்.”

11. புண்பட்ட மனதை ஆற்றுவதற்கு அனுதாபம் தேவை என்று ஏன் சொல்லலாம்?

11 அனுதாபம் என்பது, இதமான தைலத்தைப் போன்றது. புண்பட்ட மனதை அது ஆற்றும். செயலற்ற பிரஸ்தாபிகளில் சிலர், ஒரு சகோதரரோடு அல்லது சகோதரியோடு ஏற்பட்ட மனக்கசப்பை நிறைய வருஷங்களாக மனதுக்குள் தேக்கி வைத்திருக்கலாம். யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு இந்த எண்ணங்கள் முட்டுக்கட்டையாக இருக்கலாம். தாங்கள் அநியாயமாக நடத்தப்பட்டதாக சிலர் நினைக்கலாம். அதனால், அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பதற்கும், அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்கு யாராவது தேவை. (யாக். 1:19) முன்பு செயலற்ற நிலையில் இருந்த மரியா இப்படிச் சொல்கிறார்: “நான் சொல்றத கவனமா கேட்குறதுக்கும், ஆறுதல் சொல்றதுக்கும், அறிவுரை கொடுத்து உதவுறதுக்கும் எனக்கு யாராவது தேவைப்பட்டாங்க.”

12. செயலற்றவர்களைத் தன்னிடம் யெகோவா எப்படிச் சேர்த்துக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

12 யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்பை கயிறுக்கு ஒப்பிட்டு பைபிள் பேசுகிறது. எந்த அர்த்தத்தில் அப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது? இதோ ஓர் உதாரணம்: பயங்கரமான அலைகளுக்கு மத்தியில் சிக்கி நீங்கள் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கிறீர்கள். அப்போது, யாரோ ஒருவர் மரக்கட்டையை வீசுகிறார். அதைப் பிடித்துக்கொண்டு உங்களால் மிதக்க முடிகிறது. இப்போது, அவருக்கு நீங்கள் ரொம்ப நன்றியோடு இருப்பீர்கள், இல்லையா? ஆனால், மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டால் மட்டும் உயிர் பிழைக்க முடியுமா? முடியாது! ஏனென்றால், தண்ணீர் ரொம்பவே சில்லென்று இருக்கும். உயிர் பிழைக்க வேண்டுமென்றால், நீங்கள் படகில் ஏற வேண்டும். அப்படிப் படகில் ஏற வேண்டுமென்றால், யாராவது ஒருவர் உங்கள் பக்கமாக கயிறை வீசி உங்களைப் படகின் பக்கம் இழுக்க வேண்டும். இப்போது, வழிதவறிப்போன இஸ்ரவேலர்களைப் பற்றி யெகோவா என்ன சொன்னார் என்று பாருங்கள். “பாசமெனும் கயிறுகளால் அவர்களை இழுத்துக்கொண்டிருந்தேன்” என்று சொன்னார். (ஓசி. 11:4) அப்படியென்றால், தனக்குச் சேவை செய்வதை நிறுத்திவிட்டு, பிரச்சினைகள் மற்றும் கவலைகள் என்ற கடலில் தத்தளிக்கிறவர்களைப் பற்றியும் யெகோவா இப்படித்தான் நினைக்கிறார். தன்னுடைய அன்பை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறார். தன்னிடம் அவர்கள் திரும்பிவர வேண்டுமென்றும் நினைக்கிறார். உங்களைப் பயன்படுத்தி யெகோவா இதையெல்லாம் செய்யலாம்.

13. அன்பு வலிமையானது என்பதைக் காட்டும் ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

13 செயலற்ற பிரஸ்தாபிகளை யெகோவாவும் நாமும் ரொம்ப நேசிக்கிறோம் என்ற உறுதியை அவர்களுக்குக் கொடுப்பது முக்கியம். முந்தின கட்டுரையில் பார்த்த சார்ல்ஸ், 30 வருஷங்களுக்கும்மேல் செயலற்ற பிரஸ்தாபியாக இருந்தார். “ஒரு நாள் காலையில, நான் வீட்டைவிட்டு கிளம்பிட்டு இருந்தப்போ, வயசான ஒரு சகோதரி என்னை பார்க்க வந்தாங்க. ரொம்ப அன்பா பேசுனாங்க. உடனே குழந்த மாதிரி நான் அழ ஆரம்பிச்சிட்டேன். என்கிட்ட பேசுறதுக்கு யெகோவாவே அவங்கள அனுப்பிச்ச மாதிரி தெரியுதுனு அவங்ககிட்ட சொன்னேன். யெகோவாகிட்ட திரும்ப வரணும்னு அப்பதான் முடிவெடுத்தேன்” என்று அவர் சொல்கிறார்.

பலவீனமானவர்களை அன்புக் கரங்களால் தாங்குங்கள்

14. லூக்கா 15:4, 5 சொல்வதுபோல், ஆட்டைக் கண்டுபிடித்ததும் மேய்ப்பர் என்ன செய்கிறார்?

14 செயலற்ற பிரஸ்தாபிகளுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்பது முக்கியம். இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட அந்த மகனைப் போல், செயலற்றவர்கள் உணர்ச்சி ரீதியில் காயப்பட்டிருக்கலாம். சாத்தானுடைய உலகத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் யெகோவாவுடன் இருக்கிற பந்தத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். அதனால், பாழடைந்துபோன விசுவாசம் என்ற கட்டிடத்தைப் புதுப்பிக்க அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். காணாமல்போன ஆட்டைப் பற்றிய உவமையில், அந்த மேய்ப்பன் எப்படி அந்த ஆட்டைத் தன் தோள்கள்மேல் போட்டுக்கொண்டு தொழுவத்துக்குக் கொண்டுவருகிறார் என்று இயேசு விளக்குகிறார். ஆட்டைக் கண்டுபிடிப்பதற்கு ஏற்கெனவே அந்த மேய்ப்பர் நேரத்தையும் சக்தியையும் செலவழித்திருக்கிறார்! ஆனால், அதோடு நிறுத்திக்கொண்டாரா? இல்லை! தொழுவத்துக்குத் திரும்பி வருவதற்கான பலம் அந்த ஆட்டுக்கு இல்லை என்பதால், அவர் அதைத் தூக்கிக்கொண்டு வருகிறார்!லூக்கா 15:4, 5-ஐ வாசியுங்கள்.

15. யெகோவாவிடம் திரும்பிவர ஆசைப்படுகிறவர்களுக்கு நாம் எப்படி உதவலாம்? (“ அற்புதமான ஒரு சிற்றேடு” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

15 செயலற்ற பிரஸ்தாபிகள் தங்களுடைய பிரச்சினைகளிலிருந்து வெளியேவர, நம்முடைய நேரத்தையும் சக்தியையும் செலவழிக்க வேண்டியிருக்கலாம். ஆனால், யெகோவாவின் சக்தி, பைபிள், அமைப்பு தருகிற பிரசுரங்கள் ஆகியவற்றின் உதவியோடு, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். (ரோ. 15:1) எப்படி? “யெகோவாகிட்ட திரும்பிவர ஆசப்படற செயலற்ற பிரஸ்தாபிகள்ல நிறைய பேருக்கு மறுபடியும் பைபிள் படிப்பு எடுக்க வேண்டியிருக்கும்” என்று அனுபவமுள்ள ஒரு மூப்பர் சொல்கிறார். * அதனால், அப்படிப்பட்ட ஒருவருக்கு படிப்பு நடத்தும்படி மூப்பர்கள் உங்களிடம் கேட்டால், அதை ஒரு பாக்கியமாக நினைத்து ஏற்றுக்கொள்ளுங்கள். “அவங்களுக்கு படிப்பு நடத்துற பிரஸ்தாபி, நல்ல நண்பரா இருக்கணும். செயலற்ற பிரஸ்தாபி தயக்கமில்லாம அவர்கிட்ட பேசுற மாதிரி அவர் நடந்துக்கணும்” என்றும் அந்த மூப்பர் சொல்கிறார்.

பரலோகத்திலும் பூமியிலும் சந்தோஷ ஆரவாரம்

16. நமக்கு தேவதூதர்களின் உதவி இருக்கிறது என்பது எப்படித் தெரியும்?

16 யெகோவாவிடம் திரும்பிவர ஏங்கிக்கொண்டிருப்பவர்களைத் தேடும் படலத்தில் தேவதூதர்கள் நமக்குப் பக்கபலமாக இருப்பதை நிறைய அனுபவங்கள் காட்டுகின்றன. (வெளி. 14:6) ஓர் உதாரணம்: சபைக்குத் திரும்பி வருவதற்குத் தனக்கு உதவும்படி கேட்டு ஈக்வடார் நாட்டில் இருக்கிற சில்வியோ ஊக்கமாக ஜெபம் செய்தார். அப்படி ஜெபம் செய்துகொண்டிருந்தபோதே, அவருடைய வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. இரண்டு மூப்பர்கள் கதவுக்கு முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள். அவருக்குத் தேவையான உதவியைச் செய்ய முடிந்ததை நினைத்து அந்த மூப்பர்கள் சந்தோஷப்பட்டார்கள்.

17. செயலற்ற பிரஸ்தாபிகளுக்கு உதவும்போது நம் மனதுக்கு எப்படி இருக்கும்?

17 செயலற்ற பிரஸ்தாபிகள் யெகோவாவிடம் திரும்பி வருவதற்கு உதவுவதில் நாம் ரொம்பச் சந்தோஷப்படுகிறோம். அவர்களுக்கு விசேஷ கவனம் கொடுக்கிற ஒரு பயனியர் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “சில சமயத்துல என் கண்ணுல வர்ற ஆனந்த கண்ணீர என்னால அடக்கவே முடியாது. சாத்தானோட உலகத்துல இருந்து தன்னோட செல்ல பிள்ளைகள்ல ஒருத்தர யெகோவா திரும்பவும் சபைக்கு கொண்டு வந்திருக்காருனு நினைக்கிறப்போ, எனக்கு சந்தோஷமா இருக்கு. அவரோட சேர்ந்து இந்த வேலைய செய்ற பாக்கியத்த எனக்கு கொடுத்தத நினைச்சும் நான் சந்தோஷப்படுறேன்.”—அப். 20:35.

18. நீங்கள் ஒரு செயலற்ற பிரஸ்தாபியாக இருந்தால், எதை உறுதியாக நம்பலாம்?

18 நீங்கள் செயலற்ற பிரஸ்தாபியாக ஆகிவிட்டீர்களா? அப்படியென்றால், இன்னமும் யெகோவா உங்களை நேசிக்கிறார் என்பதைத் தயவுசெய்து மறந்துவிடாதீர்கள்! நீங்கள் திரும்பிவர வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அதற்கு நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். இயேசுவின் உவமையில் சொல்லப்பட்டிருக்கிற அந்த அப்பாவைப் போல், நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள் என்று யெகோவா அப்பா வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கிறார். உங்களைக் கட்டியணைத்து வரவேற்க ஆசையோடு காத்துக்கொண்டிருக்கிறார்.

பாட்டு 123 மேய்ப்பர்கள்—‘மனித வடிவில் பரிசுகள்’

^ பாரா. 5 செயலற்ற பிரஸ்தாபிகள் திரும்பிவர வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார். அதனால்தான், “என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று அவர்களை அழைக்கிறார். அவர்கள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள நம்மால் உதவ முடியும். அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 7 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 15 செயலற்ற பிரஸ்தாபிகள் சிலருக்கு, கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் படிப்பதன் மூலம் உதவலாம். வேறு சிலருக்கு, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்திலிருந்து சில பாடங்களைப் படித்தது பிரயோஜனமாக இருந்திருக்கிறது. யார் படிப்பை நடத்துவது என்று சபை ஊழியக் குழு முடிவு செய்யும்.

^ பாரா. 68 படங்களின் விளக்கம்: திரும்பிவர ஆசைப்படுகிற ஒரு சகோதரருக்கு மூன்று சகோதரர்கள் உதவுகிறார்கள். தொடர்ந்து ஃபோன் செய்வதன் மூலமும், எல்லாருமே அவரை நேசிக்கிறார்கள் என்ற உறுதியைக் கொடுப்பதன் மூலமும், அவரைப் புரிந்துகொண்டு அவர் பேசுவதைக் கவனமாகக் கேட்பதன் மூலமும் உதவுகிறார்கள்.