Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுயக்கட்டுப்பாடு​—⁠யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிக்கத் தேவையான ஒரு குணம்!

சுயக்கட்டுப்பாடு​—⁠யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிக்கத் தேவையான ஒரு குணம்!

“என் மாமாவோட பையன் என்கிட்ட சண்டைக்கு வந்தப்போ, அவனோட கழுத்த பிடிச்சு நெரிச்சேன். அவன கொல்லணும்னு நினைச்சேன்.”—பால்.

“நான் வீட்டில இருந்தேன்னா, தொட்டதுக்கெல்லாம் கோபப்படுவேன். தட்டுமுட்டுச் சாமான்கள்... பொம்மைகள்னு... கையில கிடைச்சதையெல்லாம் உடைச்சு தள்ளுவேன்.”—மார்க்கோ.

பால் மற்றும் மார்க்கோ அளவுக்கு நாம் எதுவும் செய்யவில்லை என்றாலும், சிலசமயங்களில் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இதற்கு முக்கியமான காரணம், முதல் மனிதனாகிய ஆதாமிடமிருந்து கடத்தப்பட்ட பாவ இயல்புதான்! (ரோ. 5:12) பால் மற்றும் மார்க்கோவைப் போல், கோபத்தைக் கட்டுப்படுத்துவது சிலருக்குக் கஷ்டம். வேறு சிலருக்கோ, தங்களுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது கஷ்டம். இப்படிப்பட்டவர்கள், பயத்திலேயே மூழ்கிவிடுகிறார்கள், அவர்களுடைய பலத்தை உறிஞ்சுவிடுகிற விஷயங்களையே யோசிக்கிறார்கள். இன்னும் சிலரோ, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான ஆசைக்கு அணை போட முடியாமல்... குடிப்பழக்கத்தை விடமுடியாமல்... போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதை நிறுத்த முடியாமல்... தவிக்கிறார்கள்.

தங்களுடைய எண்ணங்களையும் ஆசைகளையும் செயல்களையும் கட்டுப்படுத்தாதவர்கள், தங்களுடைய தலையில் தாங்களே மண்ணைவாரிப் போட்டுக்கொள்கிறார்கள். இந்த மோசமான நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம்? சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளலாம்! அப்படியென்றால், அது சம்பந்தமான மூன்று கேள்விகளுக்கு பதில்களைப் பார்க்கலாம். (1) சுயக்கட்டுப்பாடு என்றால் என்ன? (2) அதைக் காட்டுவது ஏன் முக்கியம்? (3) ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில்’ ஒன்றான இந்தக் குணத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? (கலா. 5:22, 23) இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொண்ட பிறகு, சுயக்கட்டுப்பாட்டை இழக்கும் சமயங்களில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

சுயக்கட்டுப்பாடு என்றால் என்ன?

சுயக்கட்டுப்பாடோடு இருக்கிற ஒருவர், மனம்போன போக்கில் போக மாட்டார். அதற்குப் பதிலாக, கடவுளுக்குப் பிடிக்காத பேச்சையும் செயலையும் அறவே தவிர்த்துவிடுவார்.

இயேசு சுயக்கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாக இருந்தார்

சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுபவர் எப்படி நடந்துகொள்வார் என்பதற்கு இயேசு நமக்கு ஒரு நல்ல உதாரணம். அவரைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர் அவமானப்படுத்தப்பட்டபோது பதிலுக்கு அவமானப்படுத்தவில்லை. துன்புறுத்தப்பட்டபோது மிரட்டவில்லை; மாறாக, நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம் தன்னையே ஒப்படைத்தார்.” (1 பே. 2:23) சித்திரவதைக் கம்பத்தில் அவர் தொங்கிக்கொண்டிருக்கும்போதுகூட எதிரிகள் அவரைக் கேலி செய்தார்கள். அந்தச் சமயத்திலும், அவர் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினார். (மத். 27:39-44) அதற்கு முன்பு, இயேசுவின் பேச்சை வைத்தே அவரை மடக்குவதற்கு மதத்தலைவர்கள் முயற்சி செய்தார்கள்; அப்போதும் அவர் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினார். (மத். 22:15-22) ஆத்திரத்தில் பொங்கிய யூதர்கள் தன்மேல் கல்லெறிந்தபோதும் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினார். அவர்களைப் பழிக்குப் பழி வாங்கத் துடிப்பதற்குப் பதிலாக, “[அவர்] அவர்களிடமிருந்து நழுவி ஆலயத்தைவிட்டு வெளியே போனார்.”—யோவா. 8:57-59.

இயேசுவைப் போல நம்மால் நடந்துகொள்ள முடியுமா? ஓரளவுக்கு முடியும்! அதனால்தான், “கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 2:21) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுகிற விஷயத்தில் இயேசுவை நெருக்கமாக பின்பற்ற முடியும். இப்படிச் செய்வது ஏன் முக்கியம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது ஏன் முக்கியம்?

யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்றால், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது முக்கியம். ரொம்ப வருஷங்களாக நாம் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவந்திருந்தாலும், நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும் கடிவாளம் போடவில்லை என்றால், நமக்கும் அவருக்கும் இடையில் இருக்கிற நட்பில் விரிசல் விழுந்துவிடும்.

இப்போது மோசேயைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். “பூமியிலுள்ள எல்லா மனிதர்களையும்விட மோசே மிகவும் தாழ்மையானவராக இருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எண். 12:3) நிறைய வருஷங்களாக, இஸ்ரவேலர்கள் சொன்ன குறைகளை அவர் பொறுமையோடு கேட்டுவந்தார். ஆனால், ஒருநாள் அவர் பொறுமையை இழந்துவிட்டார். போதுமான தண்ணீர் இல்லை என்று மறுபடியும் அவர்கள் குறை சொன்னபோது, மோசேக்குக் கோபம் வந்துவிட்டது. “அடங்காதவர்களே! இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தர வேண்டுமா?” என்று கடுமையாகப் பேசிவிட்டார்.—எண். 20:2-11.

மோசே சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்! அற்புதமாகத் தண்ணீர் தந்த யெகோவாவுக்குப் புகழ் சேர்க்காமல் போய்விட்டார். (சங். 106:32, 33) அதனால், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக மோசேயை யெகோவா அனுமதிக்கவில்லை. (எண். 20:12) சுயக்கட்டுப்பாட்டை இழந்ததை நினைத்து தான் மண்ணுக்குள் மறையும்வரை மோசே வருத்தப்பட்டிருப்பார்.—உபா. 3:23-27.

மோசேயிடமிருந்து நமக்கு என்ன பாடம்? ரொம்ப வருஷங்களாக நாம் சத்தியத்தில் இருந்தாலும், நம்மை எரிச்சல்படுத்துகிறவர்களிடமோ, ஆலோசனை தேவைப்படுகிறவர்களிடமோ ஒருபோதும் கடுமையாகப் பேசிவிடக் கூடாது. (எபே. 4:32; கொலோ. 3:12) வயதாக வயதாக, சிலசமயங்களில் பொறுமையை இழந்துவிடுவதற்கான வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஆனால், மோசேயை நினைத்துக்கொள்ளுங்கள்! ஒருகணம் சுயக்கட்டுப்பாட்டை இழப்பதால், நிறைய வருஷங்களாக யெகோவாவிடம் சம்பாதித்த நற்பெயரை இழக்க நாம் விரும்புவோமா? அப்படியென்றால், இந்தப் பொன்னான குணத்தை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

சுயக்கட்டுப்பாட்டை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். சுயக்கட்டுப்பாடு என்பது, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் ஒன்றாக இருப்பதாலும், தன்னிடம் கேட்கிறவர்களுக்கு அந்தச் சக்தியை அவர் தருவதாலும், அதற்காக நாம் ஜெபம் செய்ய வேண்டும். (லூக். 11:13) அப்போது, தன்னுடைய சக்தியின் மூலம் அவர் நம்மைப் பலப்படுத்துவார். (பிலி. 4:13) கடவுளுடைய சக்தியால் உண்டாகிற மற்ற குணங்களான அன்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ளவும் அவர் உதவுவார். அந்தக் குணங்கள் இருக்கும்போது, சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவது சுலபம்.—1 கொ. 13:5.

சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதற்குத் தடங்கலாக இருக்கும் எதையும் தவிர்த்துவிடுங்கள்

சுயக்கட்டுப்பாடு காட்டுவதற்குத் தடங்கலாக இருக்கிற எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளுங்கள். தவறான நடத்தையை உயர்வாகச் சித்தரிக்கிற வெப்சைட்டுகளையும் மற்ற பொழுதுபோக்குகளையும் தவிர்த்துவிடுங்கள். (எபே. 5:3, 4) இவற்றை மட்டுமல்ல, தவறு செய்யத் தூண்டுகிற எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளுங்கள். (நீதி. 22:3; 1 கொ. 6:12) ஒழுக்கங்கெட்ட பாலியல் ஆசைகளுக்கு சுலபமாக அடிபணிந்துவிடுகிற அளவுக்கு பலவீனமாக இருப்பவர்கள், அந்த ஆசைகளைத் தூண்டுகிற புத்தகங்களையும் சினிமாக்களையும் அறவே தவிர்க்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்வது ஒருவேளை நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம் முயற்சி செய்யும்போது, சுயக்கட்டுப்பாடோடு இருப்பதற்கு யெகோவா பலம் கொடுப்பார். (2 பே. 1:5-8) நம்முடைய எண்ணங்கள், பேச்சு, செயல்கள் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க அவர் உதவுவார். ஆரம்பத்தில் பார்த்த பால் மற்றும் மார்க்கோவின் விஷயத்தில் அதுதான் நடந்தது. அவர்கள் இரண்டு பேருமே தங்களுடைய முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்த பழகிக்கொண்டார்கள். இப்போது இன்னொரு சகோதரரைப் பற்றிப் பார்க்கலாம். இவர் வாகனம் ஓட்டும்போது, அடிக்கடி கோபப்பட்டு மற்ற ஓட்டுனர்களிடம் சண்டை போடுவாராம். தன்னை மாற்றிக்கொள்ள இவர் என்ன செய்தார்? “ஒவ்வொரு நாளும் ஊக்கமா ஜெபம் செஞ்சேன். சுயக்கட்டுப்பாட்ட பத்தி சொல்ற கட்டுரைகள படிச்சேன். எனக்கு உதவியா இருந்த சில பைபிள் வசனங்கள மனப்பாடம் செஞ்சேன். நிறைய வருஷங்களா இப்படி செஞ்சிட்டிருந்தாலும், ஒவ்வொரு நாளும் கண்விழிச்சவுடனே ‘இன்னைக்கு அமைதியா இருக்கணும்’னு எனக்கு நானே சொல்லிக்குவேன். அதோட, வேலைக்கு அவசர அவசரமா போகாம சீக்கிரமாவே போறேன்” என்று அவர் சொல்கிறார்.

சுயக்கட்டுப்பாட்டைக் காட்டத் தவறினால்...

சிலசமயங்களில், நாம் சுயக்கட்டுப்பாட்டைக் காட்டாமல் போய்விடுகிறோம். அப்போது, யெகோவாவிடம் ஜெபம் செய்வதற்கு நாம் தயங்கலாம். ஆனால், அதுபோன்ற சமயங்களில்தான் நாம் அதிகமாக ஜெபம் செய்ய வேண்டும். அதனால், அப்படிப்பட்ட சமயங்களில் உடனடியாக ஜெபம் செய்யுங்கள். யெகோவாவிடம் மன்னிப்பு கேளுங்கள், உதவும்படி கெஞ்சுங்கள், திரும்பவும் அதே தவறைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். (சங். 51:9-11) இரக்கம் காட்டும்படி நீங்கள் செய்கிற ஜெபத்தை யெகோவா அலட்சியம் செய்ய மாட்டார். (சங். 102:17) கடவுளுடைய மகனின் இரத்தம் “எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 1:7; 2:1; சங். 86:5) தன்னுடைய ஊழியர்கள் ஒருவரை ஒருவர் திரும்பத் திரும்ப மன்னிக்க வேண்டுமென்று யெகோவா சொல்கிறார். அப்படியென்றால், நம்முடைய விஷயத்திலும் அதை அவர் செய்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—மத். 18:21, 22; கொலோ. 3:13.

வனாந்தரத்தில் மோசே ஒரு தடவை சுயக்கட்டுப்பாட்டைக் காட்டத் தவறியபோது யெகோவாவின் மனம் கஷ்டப்பட்டது. இருந்தாலும், யெகோவா அவரை மன்னித்தார். விசுவாசத்தில் அவர் நமக்குத் தலைசிறந்த முன்மாதிரி வைத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. (உபா. 34:10; எபி. 11:24-28) வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் கால் பதிக்க யெகோவா மோசேயை அனுமதிக்கவில்லை என்றாலும், பூஞ்சோலை பூமியில் அவரை உயிரோடு எழுப்புவார். முடிவில்லாத வாழ்வுக்கான வாய்ப்பையும் தருவார். மிக முக்கியக் குணமான சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்தால், நமக்கும் அதே வாய்ப்பைத் தருவார்.—1 கொ. 9:25.