Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 25

“நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன்”

“நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன்”

“நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன். நானே அவற்றைக் கவனித்துக்கொள்வேன்.”எசே. 34:11.

பாட்டு 3 “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”

இந்தக் கட்டுரையில்... *

1. பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு யெகோவா ஏன் தன்னை ஒப்பிடுகிறார்?

“ஒரு தாய் . . . பால் குடிக்கும் தன் குழந்தையை மறப்பாளா?” ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்தில் தன்னுடைய மக்களிடம் யெகோவா கேட்ட கேள்விதான் இது! பிறகு, “அவள் மறந்தாலும், நான் ஒருபோதும் உன்னை மறக்க மாட்டேன்” என்று யெகோவா சொன்னார். (ஏசா. 49:15) தன்னைத் தாய்க்கு ஒப்பிட்டு யெகோவா அவ்வளவாகப் பேசியதில்லை. இருந்தாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் தன்னைத் தாய்க்கு ஒப்பிட்டுப் பேசினார். தன்னுடைய ஊழியர்களை சொக்கத்தங்கங்களாக தான் நினைப்பதைப் புரியவைப்பதற்காக இந்த உதாரணத்தை யெகோவா பயன்படுத்தினார். ஜாஸ்மின் என்ற சகோதரி, “உங்க குழந்தைக்கு நீங்க பால் குடுக்குறப்போ, உங்களுக்கும் குழந்தைக்கும் இடையில ஒரு பாசப் பிணைப்பு ஏற்படுது. அது வாழ்நாள் முழுசும் இருக்கும்” என்று சொல்கிறார். அவர் சொல்வதைத் தாய்மார்கள் நிறைய பேர் ஒத்துக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

2. தன்னுடைய பிள்ளைகளில் ஒருவர் வழிதவறிப் போனால்கூட யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

2 சபைக் கூட்டங்களுக்கோ ஊழியத்துக்கோ வருவதை தன்னுடைய பிள்ளைகளில் யாராவது ஒருவர் நிறுத்தினால்கூட யெகோவா கவனிக்கிறார். அப்படியென்றால், ஒவ்வொரு வருஷமும் தன்னுடைய ஊழியர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் செயலற்றவர்களாக * ஆவதைப் பார்த்து யெகோவாவின் மனம் எவ்வளவு கஷ்டப்படும்!

3. யெகோவாவின் ஆசை என்ன?

3 செயலற்ற பிரஸ்தாபிகளில் நிறைய பேர் திரும்பவும் சபைக்கு வருவதைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! அவர்கள் அப்படித் திரும்பி வர வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார், நாமும் ஆசைப்படுகிறோம். (1 பே. 2:25) அப்படியென்றால், அவர்கள் திரும்பி வருவதற்கு நாம் எப்படி உதவலாம்? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதற்கு முன்பு, இன்னொரு கேள்விக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும். சபைக்கும் ஊழியத்துக்கும் வருவதை அவர்கள் நிறுத்தியதற்கு என்ன காரணம் என்பதுதான் அந்தக் கேள்வி.

யெகோவாவுக்குச் சேவை செய்வதை சிலர் ஏன் நிறுத்திவிடுகிறார்கள்?

4. வேலை சிலரை எப்படி வழிதவறிப் போக வைத்திருக்கிறது?

4 சிலர் தங்களுடைய வேலையிலேயே மூழ்கிவிட்டதால் தங்களுடைய சேவையை நிறுத்தியிருக்கிறார்கள். ஆசியாவில் இருக்கிற ஜான் * என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “என் நேரமும் சக்தியும் வேலையிலேயே கரைஞ்சிடுச்சு. பணம் நிறைய சம்பாதிச்சா யெகோவாவுக்கு நல்லா சேவை செய்யலாம்ணு தப்புக்கணக்கு போட்டேன். அதனால, நிறைய நேரம் வேல செஞ்சேன். நிறைய தடவ கூட்டங்களுக்கு போகல. கடைசில, சுத்தமா நிறுத்திட்டேன். கடவுளுக்கு சேவை செய்றத கொஞ்சம் கொஞ்சமா நிறுத்தவைக்கிறதுதான் இந்த உலகத்தோட ஆசை.”

5. பிரச்சினைகள் அடுத்தடுத்து தாக்கியதால், ஒரு சகோதரி எப்படிப் பாதிக்கப்பட்டார்?

5 சில சகோதர சகோதரிகள், தங்களுடைய பிரச்சினைகளால் திக்குமுக்காடிப் போனதால் தங்கள் சேவையை நிறுத்தியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் இருக்கிற மேரியைப் பற்றிக் கவனியுங்கள். அவருக்கு ஐந்து பிள்ளைகள். “என்னோட ஒரு குழந்த ரொம்ப மோசமான உடல்நல பிரச்சினையோடதான் பிறந்துச்சு. கொஞ்ச நாளுக்கு அப்புறம், என்னோட ஒரு பொண்ணு சபை நீக்கம் செய்யப்பட்டா. இன்னொரு பையன் மனநோயால கஷ்டப்பட்டான். நான் ரொம்பவே மனச்சோர்வுல மூழ்கிட்டேன். கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போறத நிறுத்திட்டேன். கடைசில, செயலற்ற பிரஸ்தாபியா ஆயிட்டேன்” என்று அவர் சொல்கிறார். மேரியையும் அவருடைய குடும்பத்தையும், இவர்களைப் போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கிற மற்றவர்களையும் நினைக்கும்போது நம் மனம் உருகுகிறது, இல்லையா?

6. கொலோசெயர் 3:13 சொல்கிறபடி செய்யாததால் சிலர் எப்படி யெகோவாவின் மக்களைவிட்டுப் பிரிந்துபோயிருக்கிறார்கள்?

6 கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள். சகோதர சகோதரிகள் சொன்ன அல்லது செய்த ஏதோவொரு விஷயத்தால் புண்பட்டு, சிலர் தங்கள் சேவையை நிறுத்தியிருக்கிறார்கள். சிலசமயங்களில், ஒரு சகோதரர் அல்லது சகோதரிமேல் நமக்கு “ஏதாவது மனக்குறை” வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக அப்போஸ்தலன் பவுல் சொன்னார். நம்மை யாராவது அநியாயமாகக்கூட நடத்தலாம். நாம் ஜாக்கிரதையாக இல்லையென்றால், அதைப் பற்றியே நினைத்து மனக்கசப்பை வளர்த்துக்கொள்வோம். கடைசியில் அது நம்மை யெகோவாவின் மக்களிடமிருந்து ரொம்பத் தூரத்துக்குக் கொண்டுபோய்விடும். தென் அமெரிக்காவில் இருக்கிற சார்ல்ஸ் என்ற சகோதரருக்கு என்ன நடந்ததென்று பாருங்கள். அவர்மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால், சபை பொறுப்பை இழந்தார். அப்போது அவர் என்ன செய்தார்? “எனக்கு கோபம் கோபமா வந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா சபையவிட்டே போயிட்டேன்” என்று அவர் சொல்கிறார்.

7. குற்ற உணர்வு ஒருவரை எப்படி வாட்டி வதைக்கும்?

7 முன்பு செய்த மோசமான பாவத்தை நினைத்து குற்ற உணர்வால் புழுங்குவதால் சிலர் தங்கள் சேவையை நிறுத்தியிருக்கலாம். கடவுளுடைய அன்பைப் பெற்றுக்கொள்ள தங்களுக்குத் தகுதியில்லை என்று அவர்கள் நினைக்கலாம். அவர்கள் மனம் திருந்திய பிறகும்கூட, கடவுளுடைய மக்களில் ஒருவராக இருக்கிற தகுதி தங்களுக்கு இல்லை என்று நினைக்கலாம். ஃபிரான்சிஸ்கோ என்ற சகோதரரை அந்த எண்ணம்தான் வாட்டியது. “பாலியல் முறைகேட்டுல ஈடுபட்டதால, நான் கண்டிக்கப்பட்டிருந்தேன். தொடர்ந்து கூட்டங்களுக்கு போக ஆரம்பிச்சாலும், மனச்சோர்வு என்னை பாடாய்படுத்துச்சு. யெகோவாவோட மக்கள்ல ஒருத்தனா இருக்குற தகுதி எனக்கு இல்லனு நினைச்சேன். என் மனசாட்சி என்னை குத்துச்சு. யெகோவா என்னை மன்னிக்கவே மாட்டார்னு நினைச்சேன். கொஞ்சம் கொஞ்சமா கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போறத நிறுத்திட்டேன்” என்று அவர் சொல்கிறார். இதுவரை பார்த்த சகோதர சகோதரிகளின் நிலைமையில் இருக்கிறவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள்மேல் அனுதாபப்படுவீர்களா? மிக முக்கியமாக, அவர்களைப் பற்றி நினைக்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கும்?

தன்னுடைய ஊழியர்கள்மேல் யெகோவா உயிரையே வைத்திருக்கிறார்

காணாமல்போன ஆட்டின் மேல் இஸ்ரவேல மேய்ப்பர் ரொம்ப அக்கறையோடு இருக்கிறார் (பாராக்கள் 8-9) *

8. தனக்குச் சேவை செய்தவர்களை யெகோவா மறந்துவிடுவாரா? விளக்குங்கள்.

8 தனக்குச் சேவை செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறவர்களை யெகோவா மறப்பதில்லை. தனக்காக அவர்கள் உழைத்ததையும் அவர் மறக்க மாட்டார். (எபி. 6:10) தன்னுடைய மக்களை யெகோவா எந்தளவு நேசிக்கிறார் என்பதைக் காட்ட ஏசாயா தீர்க்கதரிசி ஓர் அருமையான உவமையைச் சொல்லியிருக்கிறார். “ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார். ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார். அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார்” என்று அவர் எழுதினார். (ஏசா. 40:11) தன்னுடைய ஊழியர்களில் யாராவது தனக்குச் சேவை செய்வதை நிறுத்தும்போது பெரிய மேய்ப்பரான யெகோவாவுக்கு எப்படி இருக்கும்? அவருடைய உணர்ச்சிகளை இயேசு எப்படி வெளிப்படுத்தினார் என்று கவனியுங்கள். தன்னுடைய சீஷர்களிடம் அவர் இப்படிக் கேட்டார்: “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனிடம் 100 ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அவன் மற்ற 99 ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறி அலைகிற ஆட்டைத் தேடிப் போவான், இல்லையா? அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால், வழிதவறிப் போகாத மற்ற 99 ஆடுகளைவிட அந்த ஒரு ஆட்டை நினைத்தே அதிக சந்தோஷப்படுவான் என்று நான் உங்களுக்கு நிச்சயமாகவே சொல்கிறேன்.” (மத். 18:12, 13) இதிலிருந்து யெகோவாவின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா?

9. நல்ல மேய்ப்பர்கள் ஆடுகளை எப்படிக் கவனித்துக்கொள்வார்கள்? (அட்டைப் படம்)

9 யெகோவாவை மேய்ப்பர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை ரொம்ப அக்கறையாகக் கவனித்துக்கொள்வார்கள். உதாரணத்துக்கு, தாவீது என்ன செய்தார் என்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். தன்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக சிங்கத்தோடும் கரடியோடும் அவர் போராடினார். (1 சா. 17:34, 35) ஒரு நல்ல மேய்ப்பனுக்கு, ஒரு ஆடு காணாமல்போனால்கூட தெரிந்துவிடும். (யோவா. 10:3, 14) அப்படிப்பட்ட ஒரு மேய்ப்பர் தன்னுடைய 99 ஆடுகளை தொழுவத்தில் பத்திரமாக அடைத்துவிட்டு அல்லது மற்ற மேய்ப்பர்களின் கவனிப்பில் விட்டுவிட்டு, காணாமல் போன அந்த ஆட்டைத் தேடிக்கொண்டு போவார். ஒரு முக்கியமான உண்மையைப் புரியவைப்பதற்காகத்தான் இயேசு அந்த உவமையைச் சொன்னார். “இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை [அவருடைய] பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை” என்பதுதான் அந்த உண்மை!—மத். 18:14.

பூர்வ இஸ்ரவேலில் வாழ்ந்த ஒரு மேய்ப்பர், காணாமல் போன ஆட்டை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறார் (பாரா 9)

தன்னுடைய ஊழியர்களை யெகோவா தேடிக் கண்டுபிடிக்கிறார்

10. எசேக்கியேல் 34:11-16-ன்படி, காணாமல்போன ஆட்டுக்கு என்ன உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்?

10 வழிதவறிப் போன ‘சிறியவர்கள்’ உட்பட, நம் ஒவ்வொருவர்மேலும் யெகோவா ரொம்ப அன்பு வைத்திருக்கிறார். வழிதவறிப் போனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, மறுபடியும் அவர்கள் தன்னோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவுவதாக யெகோவா எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஒரு ஆடு காணாமல் போய்விட்டால் ஓர் இஸ்ரவேல மேய்ப்பர் என்னென்ன படிகளை எடுப்பாரோ, அதேபோல் வழிதவறிப் போன தன்னுடைய ஊழியர்களைக் கண்டுபிடிக்கவும் யெகோவா சில படிகளை எடுக்கிறார். (எசேக்கியேல் 34:11-16-ஐ வாசியுங்கள்.) ஒரு மேய்ப்பர், முதலில் ஆட்டைத் தேடிக் கண்டுபிடிப்பார்; அதற்கு நேரமும் முயற்சியும் நிச்சயம் தேவை. ஆட்டைக் கண்டுபிடித்த பிறகு, அதைத் தொழுவத்துக்குக் கூட்டிக்கொண்டு வருவார். பிறகு, ஆட்டுக்குக் காயம் ஏற்பட்டிருந்தால், அதற்குக் கட்டுப்போடுவார், தன் மடியில் வைத்துக்கொள்வார். அது பசியாக இருந்தால், அதற்கு உணவு கொடுப்பார். “கடவுளுடைய மந்தையை” மேய்த்துவருகிற மூப்பர்களும், சபையைவிட்டு வழிதவறிப் போன சகோதர சகோதரிகளுக்கு உதவுவதற்காக அந்த மேய்ப்பர் எடுக்கிற அதே படிகளை எடுக்க வேண்டும். (1 பே. 5:2, 3) மூப்பர்கள் அதை எப்படிச் செய்கிறார்கள்? வழிதவறிப் போனவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள், சபைக்கு திரும்பி வருவதற்கு உதவுகிறார்கள், மறுபடியும் யெகோவாவின் நண்பர்களாக ஆவதற்கு உதவுவதன் மூலம் அன்பைப் பொழிகிறார்கள். *

11. ஒரு நல்ல மேய்ப்பர் எதைப் புரிந்துவைத்திருப்பார்?

11 ஆடுகள் எப்போது வேண்டுமானாலும் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை ஒரு நல்ல மேய்ப்பர் புரிந்துவைத்திருப்பார். அப்படியொரு ஆடு மந்தையைவிட்டு அலைந்துதிரிந்தால், அந்த மேய்ப்பர் அதை முரட்டுத்தனமாக நடத்த மாட்டார். யெகோவாவும் அந்த மேய்ப்பரைப் போல்தான் நடந்துகொள்கிறார். தன்னுடைய ஊழியர்கள் தற்காலிகமாகத் தன்னைவிட்டு விலகியபோது அவர் என்ன செய்தார் என்பதை இப்போது பார்க்கலாம்.

12. யோனாவை யெகோவா எப்படி நடத்தினார்?

12 யோனாவைப் பற்றி இப்போது பார்க்கலாம். யெகோவா கொடுத்த நியமிப்பை விட்டுவிட்டு அவர் ஓடிப்போனார். அப்போது, யெகோவா என்ன செய்தார்? அவர் எதற்கும் லாயக்கில்லை என்று விட்டுவிட்டாரா? இல்லை! ஒரு நல்ல மேய்ப்பராக, யோனாவைக் காப்பாற்றினார். தான் கொடுத்த நியமிப்பைச் செய்வதற்கான பலத்தைத் தந்தார். (யோனா 2:7; 3:1, 2) பிறகு என்ன நடந்தது? சுரைக்காய்க் கொடியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு மனிதனின் உயிரும் எவ்வளவு பொக்கிஷமானது என்பதை அவருக்குப் புரியவைத்தார். (யோனா 4:10, 11) பாடம்: செயலற்ற பிரஸ்தாபிகள் இனிமேல் முன்னேறவே மாட்டார்கள் என்ற முடிவுக்கு மூப்பர்கள் வந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, சபையைவிட்டு அவர்கள் விலகியதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் திரும்பி வரும்போது, அவர்கள்மேல் தொடர்ந்து அன்பைப் பொழிய வேண்டும், அக்கறை காட்ட வேண்டும்.

13. சங்கீதம் 73-ஐ எழுதியவரை யெகோவா நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 இப்போது, 73-ம் சங்கீதத்தை எழுதியவருடைய விஷயத்துக்கு வரலாம். அக்கிரமம் கொடிகட்டிப் பறந்ததைப் பார்த்து அவர் நொந்துபோனார். அதனால், கடவுளுடைய வேலையைச் செய்வதில் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்று நினைக்குமளவுக்குப் போய்விட்டார். (சங். 73:12, 13, 16) அப்போது யெகோவா என்ன செய்தார்? அவரை யெகோவா திட்டித்தீர்க்கவில்லை. சொல்லப்போனால், அந்தச் சங்கீதக்காரரின் வார்த்தைகளை பைபிளில் பதிவு செய்துவைத்திருக்கிறார். அந்தச் சங்கீதக்காரர், கடைசியில் ஒரு உண்மையைப் புரிந்துகொண்டார். யெகோவாவோடு இருக்கிற நட்பைவிட வாழ்க்கையில் வேறு எதுவுமே பெரிதல்ல என்பதை உணர்ந்துகொண்டார். (சங். 73:23, 24, 26, 28) பாடம்: யெகோவாவுக்குச் சேவை செய்வதால் என்ன பிரயோஜனம் என்று யாராவது நினைத்தால், அவர்கள் மிக மோசமானவர்கள் என்று மூப்பர்கள் அவசரப்பட்டு முத்திரை குத்திவிடக் கூடாது. அவர்களைக் கடிந்துபேசாமல், அவர்கள் அப்படிப் பேசுவதற்கும் நடந்துகொள்வதற்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான், அவர்களுக்குத் தேவையான வசனங்களைப் பயன்படுத்தி உற்சாகம் தர முடியும்.

14. எலியாவுக்கு ஏன் உதவி தேவைப்பட்டது, அதை யெகோவா எப்படிக் கொடுத்தார்?

14 எலியாவை யெகோவா எப்படி நடத்தினார் என்று இப்போது பார்க்கலாம். அவர் யேசபேல் ராணியிடமிருந்து உயிருக்குப் பயந்து ஓடிப்போனார். (1 ரா. 19:1-3) தன்னைத் தவிர யாருமே யெகோவாவின் தீர்க்கதரிசியாகச் செயல்படவில்லை என்று அவர் நினைத்துக்கொண்டார். தான் சேவை செய்வதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். செத்தால் போதும் என்று நினைக்குமளவுக்கு மனச்சோர்வில் மூழ்கிவிட்டார். (1 ரா. 19:4, 10) யெகோவா என்ன செய்தார்? எலியாவை அவர் திட்டவில்லை. அவர் தனியாள் கிடையாது... தன்னுடைய வல்லமையில் அவர் நம்பிக்கை வைக்கலாம்... செய்வதற்கு இன்னும் ஏராளமான வேலைகள் இருக்கின்றன... என்றெல்லாம் சொல்லி அவரைத் தைரியப்படுத்தினார். அதோடு, எலியாவின் கருத்துகளைக் கவனமாகக் கேட்டார், வேறொரு புதிய நியமிப்பைக் கொடுத்தார். (1 ரா. 19:11-16, 18) பாடம்: மூப்பர்கள் உட்பட நாம் எல்லாருமே சகோதர சகோதரிகளை அன்பாக நடத்த வேண்டும். யாராவது கோபத்தைக் காட்டினாலோ, யெகோவாவின் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமளவுக்குத் அவர்களுக்குத் தகுதியில்லை என்று சொன்னாலோ, மூப்பர்கள் அதை அக்கறையோடு கேட்க வேண்டும். தங்கள் இதயத்தில் இருப்பதைக் கொட்டுவதற்கு அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். பிறகு, அவர்களை யெகோவா ரொம்ப நேசிக்கிறார் என்ற உறுதியைக் கொடுக்க வேண்டும்.

வழிதவறிப்போனவர்களைப் பற்றி நமக்கு என்ன எண்ணம் இருக்க வேண்டும்?

15. யோவான் 6:39-ன்படி, தன்னுடைய தந்தையின் ஆடுகளைப் பற்றி இயேசு என்ன நினைத்தார்?

15 வழிதவறிப்போன கடவுளுடைய ஆடுகளைப் பற்றி நமக்கு எப்படிப்பட்ட எண்ணம் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு நமக்கு உதவுகிறார். யெகோவாவுக்குத் தன்னுடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் தங்கமானவர்கள் என்பதை அவர் புரிந்துவைத்திருந்தார். அதனால், ‘வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் மக்களுக்கு’ உதவ தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார். (மத். 15:24; லூக். 19:9, 10) நல்ல மேய்ப்பரான இயேசு, யெகோவாவின் ஆடுகளில் ஒன்றைக்கூட இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதற்காகக் கடுமையாக உழைத்தார்.—யோவான் 6:39-ஐ வாசியுங்கள்.

16-17. வழிதவறிப் போனவர்களைப் பற்றி மூப்பர்களுக்கு என்ன எண்ணம் இருக்க வேண்டும்? (“ வழிதவறிப் போனவர்களின் உணர்வுகள்...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

16 இயேசுவைப் போல் நடந்துகொள்ளும்படி எபேசு சபையாரை அப்போஸ்தலன் பவுல் கேட்டுக்கொண்டார். “[நீங்கள்] பலவீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . . .  ‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது’ என்று எஜமானாகிய இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (அப். 20:17, 35) யெகோவாவின் மக்களைக் கவனித்துக்கொள்கிற முக்கியமான பொறுப்பு மூப்பர்களுக்கு இருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. “காணாம போன ஆடுகள்மேல யெகோவா எந்தளவு அக்கறை வைச்சிருக்காருனு நினைச்சு பார்க்குறப்போ, அவங்களுக்கு உதவுறதுக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்யணுங்குற ஆசை வருது. நான் அவங்கள நல்லா பார்த்துக்கணும்னு யெகோவா ஆசைப்படுறாருங்குறது எனக்கு தெரியும்” என்று ஸ்பெயினில் இருக்கிற ஃபெர்னான்டோ என்ற மூப்பர் சொல்கிறார்.

17 வழிதவறிப் போன சிலரைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம். அவர்கள் எல்லாரும் தங்களுக்குக் கிடைத்த உதவியைப் பெற்றுக்கொண்டு மறுபடியும் திரும்பி வந்தார்கள். அதேபோல் இன்றும், நிறைய பேர் திரும்பிவர ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பாட்டு 134 புதிய பூமியில் வாழ்க்கை

^ பாரா. 5 நிறைய வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்த சிலர், சபையைவிட்டு வழிதவறிப் போயிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? அவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, தற்காலிகமாக யெகோவாவைவிட்டு வழிவிலகிப் போன பூர்வகால ஊழியர்களுக்கு அவர் உதவிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.

^ பாரா. 2 வார்த்தைகளின் விளக்கம்: ஆறு மாதங்களாகவோ அதற்கும் மேலாகவோ ஊழிய அறிக்கை செய்யாதவர்கள்தான் செயலற்ற பிரஸ்தாபிகள். ஆனாலும், அவர்கள் இன்னமும் நம்முடைய சகோதர சகோதரிகள்தான். இன்னமும் அவர்களை நாம் நெஞ்சார நேசிக்கிறோம்.

^ பாரா. 4 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 10 இந்த மூன்று படிகளை மூப்பர்கள் எப்படி எடுக்கலாம் என்பதை அடுத்த கட்டுரை விளக்கும்.

^ பாரா. 60 படங்களின் விளக்கம்: இஸ்ரவேலைச் சேர்ந்த ஒரு மேய்ப்பர், காணாமல்போன ஆட்டை அக்கறையோடு தேடிக் கண்டுபிடித்து தொழுவத்துக்குக் கூட்டிக்கொண்டு வருகிறார். இன்றிருக்கிற மூப்பர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.

^ பாரா. 64 படங்களின் விளக்கம்: செயலற்ற பிரஸ்தாபியாக ஆகிவிட்ட ஒரு சகோதரி, பஸ் புறப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அப்போது, யெகோவாவின் சாட்சிகளில் இரண்டு பேர் சந்தோஷமாகப் பொது ஊழியம் செய்வதைப் பார்க்கிறார்.