உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்!
“[யெகோவா] உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பே. 5:7.
பாடல்கள்: 60, 23
1, 2. (அ) நாம் ஏன் கவலையில் மூழ்கிவிடுகிறோம்? (ஆரம்பப் படம்) (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
சாத்தான் இன்று பயங்கர கோபத்தில் இருக்கிறான்; “கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்.” (1 பே. 5:8; வெளி. 12:17) அதனால், வாழ்க்கையில் நிறைய அழுத்தங்கள் வருகின்றன. கடவுளுடைய ஊழியர்கள்கூட சில சமயங்களில் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்! அன்று வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களும் கவலையில் மூழ்கியிருந்ததாக பைபிள் சொல்கிறது. உதாரணத்துக்கு, தாவீது ராஜா சில சமயங்களில் கவலையாக இருந்தார். (சங். 13:2) அப்போஸ்தலன் பவுலுக்கும் “எல்லாச் சபைகளையும் பற்றிய கவலை” இருந்தது. (2 கொ. 11:28) அப்படியென்றால், கவலையில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?
2 கவலையிலிருந்து விடுபட, அன்று வாழ்ந்த தன்னுடைய ஊழியர்களுக்கு நம்முடைய அன்பான பரலோக அப்பா உதவி செய்தார்; அதே போல, இன்றும் நமக்கு உதவி செய்கிறார். “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (1 பே. 5:7) நம் கவலைகளை அவர்மேல் வைப்பதற்கான 4 வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். (1) ஜெபம் செய்வது, (2) பைபிளைப் படிப்பது, தியானிப்பது, (3) யெகோவாவுடைய சக்தி உங்களுக்கு உதவி செய்ய அனுமதிப்பது, (4) நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை நம்பிக்கைக்குரியவரிடம் பேசுவது. இந்த 4 வழிகளைப் பற்றி சிந்திக்கும்போது, நீங்கள் எந்த விஷயத்தில் முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.
யெகோவாமேல் உங்கள் பாரத்தை வைத்துவிடுங்கள்
3. ஜெபம் செய்வதன் மூலம் நீங்கள் எப்படி ‘கவலைகளையெல்லாம் அவர்மேல் வைக்கமுடியும்’?
3 உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்துவிடுவதற்கான முதல் வழி, ஊக்கமாக ஜெபம் செய்வது! நீங்கள் கவலையாக இருக்கும் சமயங்களில், உங்கள் மனதில் இருக்கிற ஆழமான உணர்ச்சிகளை தன்னிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று உங்களுடைய பரலோக அப்பா ஆசைப்படுகிறார். சங்கீதக்காரனாகிய தாவீது, “தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்” என்று யெகோவாவிடம் கெஞ்சினார். அதே சங்கீதத்தில், “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்றும் சொன்னார். (சங். 55:1, 22) பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்த பிறகு, யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள். அப்படி ஜெபம் செய்வது, கவலையிலும் வேதனையிலும் மூழ்கிவிடாமல் இருக்க உங்களுக்கு எப்படி உதவும் என்று இப்போது பார்க்கலாம்.—சங். 94:18, 19.
4. நாம் கவலையாக இருக்கும்போது, ஜெபம் செய்வது ஏன் முக்கியம்?
4 பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள். நாம் உருக்கமாகவும், மனப்பூர்வமாகவும், விடாமுயற்சியோடும் செய்யும் ஜெபத்துக்கு யெகோவா பதிலளிக்கிறார். மன அமைதியோடு இருக்கவும், எதிர்மறையான எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தவிர்க்கவும் அவர் நமக்கு உதவுகிறார். அப்போது, கவலையும் பயமும் நம்மைவிட்டுப் போய்விடும். நாம் ஒருபோதும் அனுபவிக்காத மன அமைதியை யெகோவா நமக்குக் கொடுப்பார். நம்முடைய சகோதர சகோதரிகளில் நிறைய பேர் அப்படிப்பட்ட மன அமைதியை அனுபவித்திருக்கிறார்கள். நீங்களும்கூட அதை அனுபவித்திருப்பீர்கள்! எந்தச் சவாலையும் சமாளிக்க “தேவசமாதானம்” உங்களுக்கு உதவி செய்யும். “திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அவருடைய வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நம்பலாம்!—ஏசா. 41:10.
பைபிள் தரும் மன அமைதி
5. மன அமைதியோடு இருப்பதற்கு பைபிள் எப்படி உதவுகிறது?
5 மன அமைதியோடு இருப்பதற்கான இரண்டாவது வழி, பைபிளைப் படிப்பது, அதை தியானிப்பது! இதைச் செய்வது ஏன் முக்கியம்? ஏனென்றால், படைப்பாளரின் ஞானமான வார்த்தைகளும், நடைமுறையான அறிவுரைகளும் பைபிளில் இருக்கின்றன. அதனால்தான், நீங்கள் எவ்வளவு கவலையாக இருந்தாலும் உங்களால் கடவுளுடைய எண்ணங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க முடியும். அதோடு, அவருடைய அறிவுரைகள் உங்களை எப்படிப் பலப்படுத்துகின்றன என்று தியானித்துப் பார்க்கவும் முடியும். அப்படித் தியானிப்பது உங்களுடைய கவலைகளைச் சமாளிக்கவும், குறைக்கவும், ஏன், அதைத் தவிர்க்கவும்கூட உங்களுக்கு உதவும். நாம் ‘பலமாக, திடமாக’ இருப்பதற்கும், ‘திகையாமல், கலங்காமல்’ இருப்பதற்கும் தன்னுடைய வார்த்தையாகிய பைபிளைப் படிப்பது ரொம்ப முக்கியம் என்று யெகோவா சொல்கிறார்.—யோசு. 1:7-9.
6. இயேசு சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு எப்படி உதவும்?
6 இயேசு மக்களிடம் எப்படிப் பேசினார் என்பதை பைபிளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். அவர் பேசியதைக் கேட்பதற்கு மக்கள் ரொம்பவே ஆசைப்பட்டார்கள். ஏனென்றால், அவர் பேசியது அவர்களுக்கு ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் தந்தது. முக்கியமாக, கவலையில் இருந்தவர்களுக்கும் மனச்சோர்வில் இருந்தவர்களுக்கும் ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் தந்தது. (மத்தேயு 11:28-30-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களுடைய ஆன்மீக, சரீர மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு இயேசு முக்கியத்துவம் கொடுத்தார். (மாற். 6:30-32) தன்னோடு பயணம் செய்த அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்வதாக அவர் வாக்குக் கொடுத்தார்; அதன்படியே அவர்களுக்கு உதவினார். அதேபோல், இன்றும் அவர் நமக்கு உதவுவார். இந்த உதவியைப் பெற்றுக்கொள்ள, நாம் இயேசுவுடன் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. பரலோகத்தில் ராஜாவாக இருக்கிற இயேசு, நம்மீது தொடர்ந்து அன்பு காட்டுகிறார். அதனால், நீங்கள் கவலையாக இருக்கும்போது, அவர் உங்களோடு இருப்பார் என்பதிலும் சரியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்வார் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்கலாம். கவலையைச் சமாளிப்பதற்குத் தேவையான நம்பிக்கையையும் தைரியத்தையும் இயேசுவின் வார்த்தைகள் நமக்குக் கொடுக்கின்றன.—எபி. 2:17, 18; 4:16.
கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்கள்
7. கடவுளுடைய சக்தியால் நாம் எப்படி நன்மை அடையலாம்?
7 கவலைகளைச் சமாளிப்பதற்கான மூன்றாவது வழி, கடவுளுடைய சக்திக்காகக் கேட்பது! அப்படிக் லூக். 11:10-13) சர்வ வல்லமையுள்ள கடவுளிடம் இருக்கிற நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ள கடவுளுடைய சக்தி நமக்கு உதவும். (கொலோ. 3:10) இந்தக் குணங்கள், ‘கடவுளுடைய சக்தியினால்’ பிறப்பிக்கப்படுகின்றன. (கலாத்தியர் 5:22, 23-ஐ வாசியுங்கள்.) இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ளும்போது, மற்றவர்களோடு நல்ல நட்பு வைத்துக்கொள்ள முடியும். அதோடு, கவலைகளுக்குக் காரணமான சூழ்நிலைகளையும் தவிர்க்க முடியும். இந்த விஷயத்தில், கடவுளுடைய சக்தியால் பிறப்பிக்கப்படுகிற குணங்கள் நமக்கு என்னென்ன வழிகளில் உதவுகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.
கேட்கும்போது, தன்னுடைய அப்பா அதை நிச்சயம் தருவார் என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (8-12. கவலைகளைச் சமாளிக்க கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்கள் உங்களுக்கு எப்படி உதவுகின்றன?
8 “அன்பு, சந்தோஷம், சமாதானம்.” மற்றவர்களை நீங்கள் மரியாதையாக நடத்தும்போது, உங்களுக்கு அதிக கவலை இருக்காது. எப்படி? சகோதர அன்பையும், கனிவான பாசத்தையும், மதிப்பையும் காட்டும்போது, கோபம், வெறுப்பு, மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை நீங்கள் தவிர்க்கலாம். அப்போது, உங்களால் மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முடியும்.—ரோ. 12:10.
9 “நீடிய பொறுமை, கருணை, நல்மனம்.” “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள் . . . ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபே. 4:32) இந்த ஆலோசனையின்படி நடக்கும்போது, மற்றவர்களோடு சமாதானமாக இருக்க முடியும். அதோடு, கவலைகளை ஏற்படுத்தும் சூழ்நிலைகளையும் தவிர்க்க முடியும். நம்முடைய அபூரணத்தன்மையால் ஏற்படுகிற சூழ்நிலைகளையும் சுலபமாகச் சமாளிக்க முடியும்.
10 “விசுவாசம்.” பணம் மற்றும் பொருள் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி நாம் அடிக்கடி கவலைப்படுகிறோம். (நீதி. 18:11) நாம் எப்படி இதுபோன்ற கவலைகளைத் தவிர்க்கலாம்? “உள்ளதை வைத்துத் திருப்தியுடன் இருங்கள்” என்று பவுல் சொன்ன ஆலோசனையை நாம் பின்பற்ற வேண்டும். யெகோவாமீது பலமான விசுவாசம் இருந்தால், அவர் நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வார் என்று உறுதியாக நம்புவோம். “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். அதனால், பவுல் சொன்னது போல் நாமும் இப்படிச் சொல்லலாம்: “யெகோவாவே எனக்குத் துணை; நான் பயப்பட மாட்டேன், மனுஷன் எனக்கு என்ன செய்துவிட முடியும்?”—எபி. 13:5, 6.
11 “சாந்தம், சுயக்கட்டுப்பாடு.” சாந்தமாக இருப்பதும் சுயக்கட்டுப்பாடோடு நடந்துகொள்வதும், எவ்வளவு பயனுள்ளதாகவும் நடைமுறையானதாகவும் இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கவலையை ஏற்படுத்துகிற விஷயங்களைச் செய்யாமல் இருக்கவும், பேசாமல் இருக்கவும் இந்தக் குணங்கள் உங்களுக்கு உதவும். அதோடு, “மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும்” தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கவும் இந்தக் குணங்கள் உதவும்.—எபே. 4:31.
12 ‘கடவுளுடைய பலத்த கையில்’ நம்பிக்கை வைப்பதற்கும், ‘உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைப்பதற்கும்’ மனத்தாழ்மை அவசியம். (1 பே. 5:6, 7) நீங்கள் மனத்தாழ்மையாக இருந்தால், கடவுளுடைய அன்பும் ஆதரவும் உங்களுக்கு இருக்கும். உங்களால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளும்போது, நீங்கள் உங்களை நம்புவதற்குப் பதிலாக கடவுளையே நம்பியிருப்பீர்கள். அப்போது, நீங்கள் கவலையில் மூழ்கிவிட மாட்டீர்கள்.—மீ. 6:8.
“ஒருபோதும் கவலைப்படாதீர்கள்”
13. “ஒருபோதும் கவலைப்படாதீர்கள்” என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
13 மத்தேயு 6:34-ல் (வாசியுங்கள்) “ஒருபோதும் கவலைப்படாதீர்கள்” என்ற ஞானமான ஆலோசனையை இயேசு கொடுத்திருக்கிறார். ‘கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்? அது முடியவே முடியாது’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், இயேசு அப்படிச் சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்? தாவீதும் பவுலும் சில சமயங்களில் கவலையாக இருந்தார்கள் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அப்படியென்றால், கடவுளை வணங்குகிறவர்கள் ஒருபோதும் கவலைப்படவே மாட்டார்கள் என்று இயேசு சொல்லவில்லை. தேவையில்லாமல் கவலைப்படுவதாலோ அளவுக்கு அதிகமாக கவலைப்படுவதாலோ பிரச்சினைகள் சரியாகாது என்பதைத் தன்னுடைய சீடர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இயேசு அப்படிச் சொன்னார். ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால், நடந்து முடிந்த பிரச்சினைகளைப் பற்றியும் இனிமேல் நடக்கப் போகிற பிரச்சினைகளைப் பற்றியும் நினைத்து கிறிஸ்தவர்கள் கவலையைக் கூட்டிக்கொள்ளக் கூடாது. அளவுக்கு அதிகமாகக் கவலைப்படாமல் இருப்பதற்கு இயேசுவின் ஆலோசனை எப்படி உதவும்?
14. தாவீதைப் போல, முன்பு செய்த தவறை நினைத்து கவலைப்படாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?
14 சிலசமயங்களில், முன்பு செய்த தவறை நினைத்து மக்கள் கவலைப்படுகிறார்கள். ஒருவேளை ரொம்ப வருடங்களுக்கு முன்பு அந்தத் தவறைச் செய்திருந்தால்கூட, அதை நினைத்து அளவுக்கு மீறிய குற்ற உணர்வால் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள். தாவீது ராஜாவும் தான் செய்த தவறுகளை நினைத்து ரொம்ப வேதனைப்பட்டார். “என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்” என்று அவர் சொன்னார். (சங். 38:3, 4, 8, 18) அந்தச் சூழ்நிலையில் ஞானமான ஒரு விஷயத்தை அவர் செய்தார். அதாவது, யெகோவா தன்மீது இரக்கம் காட்டுவார் என்றும் தன்னை மன்னிப்பார் என்றும் நம்பினார். யெகோவா தன்னை மன்னித்துவிட்டார் என்பதை உணர்ந்தபோது தாவீது ரொம்பவே சந்தோஷப்பட்டார்.—சங்கீதம் 32:1-3, 5-ஐ வாசியுங்கள்.
15. (அ) தாவீதிடமிருந்து வேறு எதையும் நாம் கற்றுக்கொள்ளலாம்? (ஆ) கவலைகளைச் சமாளிக்க நீங்கள் என்ன செய்யலாம்? ( “கவலையைச் சமாளிப்பதற்குச் சில வழிகள்...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
15 சில சந்தர்ப்பங்களில், உங்கள் வாழ்க்கையில் நடக்கிற விஷயங்களை நினைத்து நீங்கள் கவலைப்படலாம். உதாரணத்துக்கு, 55-ஆம் சங்கீதத்தை எழுதிய சமயத்தில், தன்னைக் கொலை செய்துவிடுவார்களோ என்ற பயம் தாவீதுக்கு இருந்தது. (சங். 55:2-5) ஆனால், அவர் கவலையில் மூழ்கிவிடவில்லை; யெகோவாமீது தொடர்ந்து நம்பிக்கை வைத்தார். தன்னுடைய பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி செய்யும்படி தாவீது யெகோவாவிடம் கெஞ்சினார். அதேசமயம், அதைச் சமாளிக்க தன்னுடைய பங்கிலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. (2 சா. 15:30-34) தாவீதிடமிருந்து நீங்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ளலாம். கவலைகள் உங்களைத் திணறடிப்பதற்கு அனுமதிக்காதீர்கள்; அதற்குப் பதிலாக, பிரச்சினைகளைச் சமாளிக்க உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். யெகோவா உங்களை அக்கறையாகக் கவனித்துக்கொள்வார் என்று உறுதியாக நம்புங்கள்.
16. கடவுளுடைய பெயரின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதால் உங்கள் நம்பிக்கை எப்படிப் பலப்படுகிறது?
16 எதிர்காலத்தில் என்ன பிரச்சினை வருமோ என்று நினைத்து ஒரு கிறிஸ்தவர் சிலசமயம் கவலைப்படலாம். ஆனால், இன்னும் நடக்காத விஷயங்களை நினைத்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்? நிறைய சமயங்களில், நாம் நினைக்கும் அளவுக்கு விஷயங்கள் மோசமாக ஆவதில்லை; அதோடு, கடவுளால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை என்று எதுவும் இல்லை! “நினைத்ததைச் செய்கிறவர்” என்பதுதான் அவருடைய பெயரின் அர்த்தம். (யாத். 3:14) மனிதர்களுக்கான கடவுளுடைய எல்லா நோக்கங்களும் நிறைவேறும் என்பதை அவருடைய பெயர் காட்டுகிறது. அதனால், நாம் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தனக்கு உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம். அதுமட்டுமில்லாமல், கடந்த காலத்தை நினைத்து கவலைப்படாமல் இருக்க யெகோவா உதவி செய்வார் என்று நாம் நிச்சயமாக இருக்கலாம். இப்போது இருக்கிற கவலைகளையும், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளையும் சமாளிக்க யெகோவா உதவி செய்வார் என்றும் நாம் நிச்சயமாக இருக்கலாம்.
நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பேசுங்கள்
17, 18. ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசுவது உங்கள் கவலையைச் சமாளிக்க எப்படி உதவும்?
17 கவலையைச் சமாளிப்பதற்கான நான்காவது நீதி. 12:25) “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்” என்றும் பைபிள் சொல்கிறது.—நீதி. 15:22.
வழி, மனதில் இருப்பதையெல்லாம் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகப் பேசுவது! மணத்துணையோ, நெருங்கிய நண்பரோ, சபை மூப்பரோ உங்கள் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுவார்கள். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (18 நம்முடைய கவலைகளைச் சமாளிப்பதற்குச் சபைக் கூட்டங்களும் நமக்கு உதவியாக இருக்கும். உங்கள்மீது அக்கறையோடு இருக்கிற, ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிற சகோதர சகோதரிகள் அங்கே இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் கூட்டங்களுக்குப் போகும்போது, நாம் அவர்களோடு நேரம் செலவிடுகிறோம். (எபி. 10:24, 25) அப்போது, நாம் ஒருவருக்கொருவர் உற்சாகம் பெறுகிறோம். அப்படி உற்சாகம் பெறுவது, நம்மைப் பலப்படுத்துகிறது; எப்படிப்பட்ட கவலையையும் சமாளிப்பதற்குத் தேவையான உதவியைத் தருகிறது.—ரோ. 1:12.
யெகோவாவோடு உள்ள பந்தம் உங்களைப் பலப்படுத்தும்
19. கடவுளோடு உள்ள பந்தம் நம் கவலைகளைச் சமாளிக்க உதவும் என்பதில் ஏன் உறுதியாக இருக்கலாம்?
19 தன்னுடைய கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை கனடாவைச் சேர்ந்த ஒரு மூப்பர் புரிந்துகொண்டார். அவர் பள்ளி ஆசிரியராக வேலை செய்துவந்தார்; அந்த வேலையில் அவருக்கு ரொம்ப நெருக்கடி இருந்தது. அதோடு, அவர் மனப்பதற்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையெல்லாம் சமாளிக்க எது அவருக்கு உதவியது? கஷ்டமான சமயங்களில், உண்மையான நண்பர்கள் அவருக்கு ரொம்ப உதவியாக இருந்தார்கள். அவர் எப்படி உணருகிறார் என்பதைத் தன் மனைவியிடம் ஒளிவுமறைவில்லாமல் சொன்னதும் அவருக்கு உதவியாக இருந்தது. தன்னுடைய சூழ்நிலையை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்ப்பதற்கு, சபையிலிருந்த மூப்பர்களும் வட்டாரக் கண்காணியும் அவருக்கு உதவினார்கள். அதோடு, அவருடைய நிலைமையைப் புரிந்துகொள்ள டாக்டரும் அவருக்கு உதவினார். அதனால், தன்னுடைய அட்டவணையில் மாற்றங்களைச் செய்யவும், ஓய்வு எடுக்கவும், உடற்பயிற்சி செய்யவும் அவர் நேரத்தைத் திட்டமிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவோடு உள்ள பந்தத்தை வளர்த்துக்கொள்ள அவர் கடினமாக உழைத்தார். தன்னுடைய சூழ்நிலையையும் தன்னுடைய உணர்ச்சிகளையும் எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டார். அவருடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விஷயங்களை அவர் யெகோவாவிடம் விட்டுவிட்டார்.
20. (அ) நம்முடைய கவலைகளையெல்லாம் நாம் எப்படி யெகோவாமேல் வைக்கலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
20 கடவுளிடம் ஜெபம் செய்வது, பைபிளைப் படிப்பது, தியானிப்பது ஆகியவற்றின் மூலம் நம்முடைய கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கட்டுரையில் கற்றுக்கொண்டோம். அதோடு, யெகோவாவுடைய சக்தி நமக்கு உதவி செய்ய அனுமதிப்பதும், நம்பிக்கைக்குரியவரிடம் பேசுவதும், சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதையும் கற்றுக்கொண்டோம். தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் அளிக்கிறார் என்ற நம்பிக்கையைக் கொடுப்பதன் மூலம், அவர் நம்மை எப்படித் தாங்குகிறார் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.—எபி. 11:6.