Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 48

‘ஆரம்பித்ததைச் செய்து முடித்துவிடுங்கள்’

‘ஆரம்பித்ததைச் செய்து முடித்துவிடுங்கள்’

“ஆரம்பித்ததை . . . செய்து முடித்துவிடுங்கள்.”—2 கொ. 8:11.

பாட்டு 70 ‘அதிமுக்கியமானவற்றை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்’

இந்தக் கட்டுரையில்... *

1. யெகோவா நமக்கு என்ன சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்?

நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்று முடிவு எடுப்பதற்கு யெகோவா நமக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி என்றும் அவர் சொல்லித்தருகிறார். அவரைச் சந்தோஷப்படுத்துகிற முடிவுகள் எடுக்கும்போது, அவற்றை செயல்படுத்துவதற்கு நமக்கு உதவுகிறார். (சங். 119:173) பைபிளில் இருக்கிற ஞானமான அறிவுரைகளை நாம் எந்தளவுக்குப் பின்பற்றுகிறோமோ, அந்தளவுக்கு நாம் நல்ல முடிவுகளை எடுப்போம்.—எபி. 5:14.

2. முடிவுகள் எடுத்த பிறகு என்ன ஆகலாம்?

2 நாம் ஞானமான முடிவுகள் எடுத்தாலும், ஆரம்பித்ததை முடிப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இதோ சில உதாரணங்கள்: ஓர் இளம் சகோதரர், முழு பைபிளையும் படித்து முடிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். சில வாரங்களுக்கு அப்படிப் படிக்கவும் செய்கிறார். பிறகு, படிப்பதை நிறுத்திவிடுகிறார். ஒரு சகோதரி, ஒழுங்கான பயனியர் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். ஆனால், அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறார். சபை மூப்பர் குழுவினர், இன்னும் அதிகமாக மேய்ப்பு சந்திப்புகளைச் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். ஆனால், பல மாதங்கள் பறந்துபோன பிறகும், அதைச் செயல்படுத்தவில்லை. இவை மூன்றும் வெவ்வேறு சூழ்நிலைகளாக இருந்தாலும், இவற்றுக்கு இடையில் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் எல்லாரும் முடிவு எடுத்தார்கள்; ஆனால், அதை முழுமையாகச் செய்து முடிக்கவில்லை. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கொரிந்து சபையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கும் இதே பிரச்சினை இருந்தது. அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

3. கொரிந்தியர்கள் என்ன முடிவு எடுத்தார்கள், ஆனால் என்ன ஆனது?

3 அது கி.பி. 55! எருசலேமிலும் யூதேயாவிலும் இருக்கிற சகோதர சகோதரிகள் கஷ்டத்திலும் வறுமையிலும் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு உதவுவதற்காக மற்ற சபைகளைச் சேர்ந்தவர்கள் நிதி திரட்டுகிறார்கள் என்றும் கொரிந்திய கிறிஸ்தவர்கள் கேள்விப்படுகிறார்கள். உடனே அவர்களுடைய மனதில் அன்பு சுரக்கிறது; முக்கியமான ஒரு முடிவை அவர்கள் எடுக்கிறார்கள். அதாவது, வறுமையில் இருக்கிற அந்தச் சகோதர சகோதரிகளுக்குத் தாராளமாகப் பண உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு எப்படி உதவுவது என்று அப்போஸ்தலன் பவுலிடம் கேட்கிறார்கள். அப்போது, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை பவுல் அனுப்புகிறார். பணம் திரட்டுவதற்கு தீத்துவையும் நியமிக்கிறார். (1 கொ. 16:1; 2 கொ. 8:6) இப்படியே மாதங்கள் உருண்டோடுகின்றன. ஆனால், எடுத்த முடிவை கொரிந்தியர்கள் செயல்படுத்தாததை பவுல் கேள்விப்படுகிறார். அதனால் என்ன நடந்தது? மற்ற சபைகளோடு சேர்த்து இவர்களுடைய நன்கொடைகளையும் எருசலேமுக்குக் கொண்டுபோவதற்கான சமயம் வந்தபோது, இவர்களுடைய நன்கொடைகள் தயாராக இருக்கவில்லை.—2 கொ. 9:4, 5.

4. இரண்டு கொரிந்தியர் 8:7, 10, 11-ன்படி, அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியர்களிடம் என்ன கேட்டுக்கொண்டார்?

4 கொரிந்தியர்கள் அருமையான முடிவு எடுத்திருந்தார்கள். அவர்களுடைய அசைக்க முடியாத விசுவாசத்துக்காகவும், தாராள குணத்துக்காகவும் அப்போஸ்தலன் பவுல் அவர்களைப் பாராட்டிப் பேசினார். அதேசமயத்தில், ஆரம்பித்ததை முடிக்கும்படியும் அவர்களைக் கேட்டுக்கொண்டார். (2 கொரிந்தியர் 8:7, 10, 11-ஐ வாசியுங்கள்.) விசுவாசமுள்ள கிறிஸ்தவர்கள்கூட தாங்கள் எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்குச் சிரமப்படலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

5. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை நாம் பார்ப்போம்?

5 எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துகிற விஷயத்தில் கொரிந்தியர்களைப் போலவே நாமும் சிரமப்படலாம். அதற்கு என்ன காரணம்? நம்முடைய பாவ இயல்பால் நாம் காலத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பது அல்லது எதிர்பார்க்காமல் நடக்கிற சம்பவங்களால் நாம் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த முடியாமல் போவது அதற்குக் காரணமாக இருக்கலாம். (பிர. 9:11; ரோ. 7:18) அப்படியென்றால், ஞானமான முடிவுகளை எப்படி எடுக்கலாம்? ஒருவேளை, ஏற்கெனவே எடுத்த முடிவுகளை மாற்ற வேண்டியிருந்தால் என்ன செய்வது? ஆரம்பித்ததை முடிப்பதில் எப்படி உறுதியாக இருக்கலாம்? இதற்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

ஞானமான முடிவுகளை எடுப்பது எப்படி?

6. நம்முடைய முடிவுகளை நாம் எப்போது மாற்ற வேண்டியிருக்கலாம்?

6 சில முக்கியமான முடிவுகளை நாம் ஒருபோதும் மாற்ற மாட்டோம். உதாரணத்துக்கு, யெகோவாவுக்குச் சேவை செய்வதென்று நாம் எடுத்த முடிவையும், நம்முடைய மனைவிக்கு அல்லது கணவனுக்கு கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டுமென்று நாம் எடுத்த முடிவையும் ஒருபோதும் மாற்ற மாட்டோம். (மத். 16:24; 19:6) மற்ற முடிவுகளை நாம் மாற்ற வேண்டியிருக்கலாம். ஏனென்றால், நம்முடைய சூழ்நிலைகள் மாறலாம். அப்படியென்றால், நல்ல முடிவுகள் எடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சில படிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

7. நாம் எதைக் கேட்டு ஜெபம் செய்ய வேண்டும், ஏன்?

7 ஞானத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். “உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . . . எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்” என்று எழுதும்படி யெகோவாவின் சக்தி யாக்கோபைத் தூண்டியது. (யாக். 1:5) சில விஷயங்களில், நம் எல்லாருக்குமே ‘ஞானம் குறைவாகத்தான்’ இருக்கிறது. அதனால், முடிவுகள் எடுக்கும்போதும் சரி, எடுத்த முடிவுகளை மாற்றும்போதும் சரி, யெகோவாவை நம்பியிருங்கள். அப்போது, ஞானமான முடிவுகளை எடுப்பதற்கு அவர் உங்களுக்கு உதவுவார்.

8. முடிவுகளை எடுப்பதற்கு முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

8 ஆழமாக ஆராய்ச்சி செய்யுங்கள். பைபிளையும் நம்முடைய அமைப்பு தருகிற பிரசுரங்களையும் படியுங்கள், நல்ல அறிவுரைகளைத் தருபவர்களிடம் பேசுங்கள். (நீதி. 20:18) வேறு வேலை தேடுவது... இன்னொரு இடத்துக்குக் குடிமாறிப் போவது... உங்கள் தேவைகளையும் கவனித்துக்கொண்டு ஊழியத்தையும் மும்முரமாகச் செய்வதற்கு உதவுகிற பொருத்தமான படிப்பைத் தேர்ந்தெடுப்பது... போன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ஆராய்ச்சி செய்வது ரொம்ப முக்கியம்.

9. நமக்கு நாமே நேர்மையாக நடந்துகொள்வதால் என்ன நன்மை?

9 உங்கள் உள்நோக்கங்களை பரிசோதித்துப் பாருங்கள். நம்முடைய உள்நோக்கம் எப்படி இருக்கிறது என்பதை யெகோவா கவனிக்கிறார். (நீதி. 16:2) எல்லா விஷயங்களிலும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால், முடிவுகள் எடுக்கும்போது, நமக்கும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும்; மற்றவர்களுக்கும் நேர்மையாக இருக்க வேண்டும். ஒருவேளை நாம் கொஞ்சம் நேர்மையாக இல்லையென்றாலும், எடுத்த முடிவுகளைச் செயல்படுத்த முடியாமல் போய்விடலாம். இதோ ஓர் உதாரணம்: ஓர் இளம் சகோதரர் ஒழுங்கான பயனியராக ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். ஆனால் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ஒழுங்கான பயனியர்கள் எடுக்க வேண்டிய மணிநேரத்தை எடுப்பது அவருக்குச் சிரமமாகிவிடுகிறது; ஊழியத்தில் இருக்கிற ஆர்வமும் குறைந்துவிடுகிறது. யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காகத்தான் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்ததாக அவர் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மையான காரணம் அதுதானா? ஒருவேளை, அப்பா அம்மாவையோ வேறொருவரையோ பிரியப்படுத்துவதற்காக அவர் பயனியர் சேவையை ஆரம்பித்தாரா?

10. மாற்றங்கள் செய்ய எது தேவை?

10 பைபிள் படிப்பு படிக்கும் ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுப்பதாக வைத்துக்கொள்வோம். புகைபிடிக்காமல் இருப்பது அவருக்குக் கஷ்டமாக இருந்தாலும் ஓரிரண்டு வாரங்கள்வரை அவர் தாக்குப்பிடிக்கிறார். ஆனால், மறுபடியும் புகைபிடிக்க ஆரம்பித்துவிடுகிறார். ஒருவழியாக, புகைபிடிப்பதை அவரால் முழுவதுமாக நிறுத்த முடிகிறது. எப்படி? யெகோவாமீது இருக்கிற அன்பும், அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஆசையும்தான் அதற்குக் காரணம்.—கொலோ. 1:10; 3:23.

11. திட்டவட்டமான குறிக்கோள் வைப்பது ஏன் அவசியம்?

11 திட்டவட்டமான குறிக்கோள்களை வையுங்கள். உங்களுடைய குறிக்கோள்கள் எந்தளவுக்குத் திட்டவட்டமாக இருக்கின்றனவோ, அந்தளவுக்கு ஆரம்பித்ததை உங்களால் செய்து முடிக்க முடியும். உதாரணத்துக்கு, அடிக்கடி பைபிள் படிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு எடுக்கிறீர்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு அட்டவணை போடவில்லை. இப்போது, உங்கள் முடிவைச் செயல்படுத்த முடியுமா? சிரமம்தான்! * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இன்னொரு உதாரணத்தைக் கவனிக்கலாம். நிறைய மேய்ப்பு சந்திப்புகளைச் செய்ய வேண்டும் என்று சபை மூப்பர்கள் முடிவு எடுக்கிறார்கள். கொஞ்ச நாட்கள் கழித்தும், எடுத்த முடிவை அவர்கள் செயல்படுத்தவில்லை. இப்போது அவர்கள் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: “யாருக்கெல்லாம் மேய்ப்பு சந்திப்பு செய்யணுங்குறத பத்தி லிஸ்ட் போட்டோமா? அவங்கள போய் சந்திக்கிறதுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்த ஒதுக்கி வைச்சோமா?”

12. நாம் என்ன செய்ய வேண்டியிருக்கலாம், ஏன்?

12 யதார்த்தமாக இருங்கள். ஆசைப்படுவதையெல்லாம் செய்வதற்கு நம்மில் யாருக்குமே நேரமோ வசதியோ சக்தியோ இல்லை. அதனால், யதார்த்தமாகவும் நியாயமாகவும் இருங்கள். எடுத்த முடிவைச் செயல்படுத்த உங்களால் முடியாது என்று நினைத்தால், அந்த முடிவை நீங்கள் மாற்ற வேண்டியிருக்கலாம். (பிர. 3:6) ஒருவேளை, ஏற்கெனவே எடுத்த முடிவைப் பற்றி யோசித்துப்பார்த்து, அதில் தேவைப்படுகிற மாற்றங்களைச் செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதைச் செயல்படுத்த முடியும் என்றும் நினைக்கிறீர்கள். இப்போது என்ன செய்யலாம்? நீங்கள் ஆரம்பித்ததைச் செய்து முடிக்க உதவுகிற அருமையான ஐந்து படிகளை கவனியுங்கள்.

முடிவுகளைச் செயல்படுத்த உதவுகிற படிகள்

13. எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்குத் தேவையான பலம் உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்?

13 செயல்படுவதற்கான பலத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். நீங்கள் எடுத்த முடிவுகளின்படி ‘செய்வதற்கான வல்லமையை’ கடவுள் உங்களுக்குக் கொடுப்பார். (பிலி. 2:13) அதனால், உங்களுக்குத் தேவையான பலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகக் கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். உங்கள் ஜெபத்துக்குப் பதில் கிடைக்காததுபோல் தோன்றுகிறதா? பரவாயில்லை, இயேசு சொன்னதைச் செய்யுங்கள்! “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்கு [கடவுளுடைய சக்தி] கொடுக்கப்படும்.”—லூக். 11:9, 13.

14. எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்கு நீதிமொழிகள் 21:5-ல் இருக்கிற நியமம் எப்படி உதவும்?

14 திட்டம் போடுங்கள். (நீதிமொழிகள் 21:5-ஐ வாசியுங்கள்.) எந்த வேலையாக இருந்தாலும், அதைச் செய்வதற்குத் திட்டம் போடுவது முக்கியம். பிறகு, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதும் அவசியம். அதேபோல், நீங்கள் ஒரு முடிவு எடுத்த பிறகு, அதைச் செயல்படுத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போடுங்கள். ஒருவேளை ஒரு பெரிய வேலையைச் செய்ய வேண்டியிருந்தால், அதைச் சின்னச் சின்ன வேலைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அப்போது, எந்தளவுக்கு அந்த வேலையில் முன்னேறியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஓர் உதாரணத்தைப் பாருங்கள். நன்கொடை சேர்த்து வைப்பதைப் பற்றி கொரிந்திய கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னபோது, தான் வந்த பிறகு நன்கொடையை ஏற்பாடு செய்யாமல், “ஒவ்வொரு வாரத்தின் முதல்நாளிலும்” ஏதாவது சேமித்து வைக்கும்படி சொன்னார். (1 கொ. 16:2) பெரிய வேலையைச் சின்னச் சின்ன வேலைகளாகப் பிரித்துக்கொண்டால் நாம் திக்குமுக்காட வேண்டியிருக்காது.

15. திட்டம் போட்ட பிறகு என்ன செய்ய வேண்டும்?

15 உங்கள் திட்டத்துக்கு எழுத்து வடிவம் கொடுங்கள். அப்போது, செயல் வடிவம் கொடுப்பது சுலபமாக இருக்கும். (1 கொ. 14:40) மூப்பர் குழு எடுக்கும் முடிவுகள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை இப்போது பார்க்கலாம். தாங்கள் எடுக்கிற முடிவுகளை எழுதி வைப்பதற்கு குழுவில் இருக்கிற ஒரு மூப்பரை நியமிக்கும்படி மூப்பர் குழுவுக்கு வழிநடத்துதல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முடிவையும் எந்த மூப்பர் செயல்படுத்துவார், எப்போது செயல்படுத்துவார் போன்ற விவரங்களையும் எழுதி வைக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வழிநடத்துதலின்படி செய்யும்போது, முடிவுகளைச் செயல்படுத்துவது மூப்பர்களுக்குச் சுலபமாக இருக்கும். (1 கொ. 9:26) உங்களுடைய சொந்த வேலைகளிலும் இதே முறையைப் பின்பற்றலாம். உதாரணத்துக்கு, ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போடலாம். பிறகு, முன்னுரிமையின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தலாம். இப்படிச் செய்வதால் என்ன நன்மை? ஆரம்பித்ததை முடிப்பது மட்டுமல்ல, கொஞ்ச நேரத்துக்குள் நிறைய வேலைகளைச் செய்ய முடியும்!

16. நீங்கள் எடுத்த ஒரு முடிவைச் செயல்படுத்துவதற்கு எது அவசியம், இந்தக் கருத்தை ரோமர் 12:11 எப்படி ஆதரிக்கிறது?

16 மும்முரமாக உழையுங்கள். உங்கள் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுத்து, நீங்கள் ஆரம்பித்ததை முடிப்பதற்கு முயற்சி அவசியம். (ரோமர் 12:11-ஐ வாசியுங்கள்.) சிறந்த போதகராக ஆவதற்கு, ‘முழு மூச்சோடு ஈடுபடும்படியும்’ ‘நிலைத்திருக்கும்படியும்’ தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். யெகோவாவுக்காக நாம் செய்ய ஆசைப்படுகிற எல்லா விஷயங்களிலும் பவுலின் அறிவுரையை நாம் பின்பற்றலாம்.—1 தீ. 4:13, 16.

17. முடிவைச் செயல்படுத்தும் விஷயத்தில் எபேசியர் 5:15, 16 சொல்வதுபோல் எப்படிச் செய்யலாம்?

17 நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள். (எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.) எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்குக் குறிப்பிட்ட ஒரு நேரத்தை ஒதுக்குங்கள்; அந்த நேரத்தை மாற்றாதீர்கள். ‘எல்லா சூழ்நிலைகளும் ஒத்து வரட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று சொல்லி காலத்தைத் தள்ளிப்போடாதீர்கள். ஏனென்றால், அப்படியொரு நேரம் வராமலேயே போய்விடலாம். (பிர. 11:4) மிக முக்கியமான வேலைகளைச் செய்வதற்கு நேரமும் சக்தியும் தேவை. அதனால், அவ்வளவு முக்கியம் இல்லாத வேலைகள் உங்கள் நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். (பிலி. 1:10) முடிந்தால், மற்றவர்கள் உங்களுக்கு இடைஞ்சல் தராத ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்களுடைய வேலைகளில் முழுகவனம் செலுத்த அந்த நேரம் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை மற்றவர்களிடம் சொல்லிவையுங்கள். உங்கள் மொபைல் ஃபோனை அணைத்து வைப்பதைப் பற்றியும், ஈ-மெயில்களை அல்லது சோஷியல் மீடியாவைப் பிறகு பார்க்க முடியுமா என்பதைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

18-19. தடைகள் வந்தாலும் நாம் எடுத்த முடிவைச் செயல்படுத்துவதற்கு எது உதவும்?

18 பலன்கள்மீது கவனத்தை ஊன்றவையுங்கள். நீங்கள் எடுத்த முடிவால் கிடைக்கப்போகிற பலனை, நீங்கள் போய்ச் சேர வேண்டிய ஓர் இடத்துக்கு ஒப்பிடலாம். அந்த இடத்துக்கு உண்மையிலேயே போய்ச் சேர விரும்பினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்கள் போய்க்கொண்டிருக்கிற சாலை மூடப்பட்டுவிட்டது என்பதற்காகப் பயணத்தை நிறுத்திவிடுவீர்களா? இல்லை. வேறொரு சாலை வழியாக எப்படியாவது அந்த இடத்துக்குப் போய்ச் சேருவீர்கள்! அதேபோல், நம் முடிவால் கிடைக்கப்போகிற பலன்மீது கவனத்தை ஊன்றவைத்தால், தடைகள் வந்தாலும் எப்படியாவது நாம் ஆரம்பித்ததைச் செய்து முடிப்போம்.—கலா. 6:9.

19 நல்ல முடிவுகள் எடுப்பதும், அதைச் செயல்படுத்துவதும் சுலபம் கிடையாது. ஆனால், யெகோவா நம் பக்கம் இருக்கிறார். ஆரம்பித்ததை முடிப்பதற்குத் தேவையான ஞானத்தையும் பலத்தையும் அவர் நமக்குத் தருவார்.

பாட்டு 45 முன்னேறுவீரே!

^ பாரா. 5 ஏதாவது ஒரு முடிவு எடுத்துவிட்டு, பின்பு அதை நினைத்து வருத்தப்பட்டிருக்கிறீர்களா? அல்லது, ஏற்கெனவே எடுத்த முடிவைச் செயல்படுத்துவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்! இந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், ஆரம்பித்ததைச் செய்து முடிக்கவும் இந்தக் கட்டுரை உங்களுக்குக் கைகொடுக்கும்.

^ பாரா. 11 jw.org® வெப்சைட்டில் இருக்கிற “பைபிள் வாசிப்பு அட்டவணை” உங்களுக்கு உதவியாக இருக்கும். இது ஆங்கிலத்தில் இருக்கிறது.

^ பாரா. 17 நேரத்தைத் திட்டமிடுவது பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, “அதிக நேரம் கிடைப்பதற்கு 20 வழிகள்” என்ற கட்டுரையை ஏப்ரல் 2010 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் பாருங்கள்.