Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 45

கடவுளுடைய சக்தி நமக்கு எப்படிக் கைகொடுக்கும்?

கடவுளுடைய சக்தி நமக்கு எப்படிக் கைகொடுக்கும்?

“என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.”—பிலி. 4:13.

பாட்டு 71 கடவுளுடைய சக்தி—நல்ல பரிசு

இந்தக் கட்டுரையில்... *

1-2. (அ) ஒவ்வொரு நாளையும் கடந்துபோக எது நமக்கு உதவுகிறது? விளக்குங்கள். (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

“நான் பட்ட கஷ்டத்தை எல்லாம், என்னோட சொந்த பலத்துல சமாளிச்சிருக்கவே முடியாது” என்று நீங்கள் நினைத்ததுண்டா? நம்மில் நிறைய பேர் அப்படி நினைத்திருப்போம். ஒருவேளை, மோசமான உடல்நலப் பிரச்சினையை அல்லது அன்பானவர்களை இழந்த துக்கத்தை வெற்றிகரமாகச் சமாளித்த பிறகு, நீங்கள் அப்படி நினைத்திருக்கலாம். கடவுளிடமிருந்து “இயல்புக்கு மிஞ்சிய சக்தி” கிடைத்ததால்தான் உங்களால் ஒவ்வொரு நாளையும் கடந்துவர முடிந்தது.—2 கொ. 4:7-9.

2 இந்தப் பொல்லாத உலகம் நம்மீது செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் நமக்குக் கடவுளுடைய சக்தி அவசியம். (1 யோ. 5:19) ‘பொல்லாத தூதர் கூட்டத்தை’ எதிர்த்தும் நாம் போராட வேண்டியிருக்கிறது. (எபே. 6:12) இவ்வளவு பிரச்சினைகளையும் சமாளிப்பதற்குக் கடவுளுடைய சக்தி நமக்குத் தேவை. அந்தச் சக்தி நமக்குக் கைகொடுக்கிற இரண்டு வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். பிறகு, அந்தச் சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய நாம் என்ன செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்.

கடவுளுடைய சக்தி—பலப்படுத்துகிறது

3. கஷ்டங்களைச் சமாளிக்க யெகோவா நமக்கு உதவும் ஒரு வழி என்ன?

3 கஷ்டங்களின் மத்தியிலும் நம்முடைய பொறுப்புகளைச் செய்துமுடிக்க கடவுளுடைய சக்தி நமக்குப் பலம் தருகிறது. ‘கிறிஸ்துவின் வல்லமையை’ நம்பியதால்தான் கஷ்டங்களின் மத்தியிலும் தன்னால் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய முடிந்தது என்று அப்போஸ்தலன் பவுலும் சொன்னார். (2 கொ. 12:9) தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது, ஊழியத்தில் கடினமாக உழைத்ததோடு, சொந்தச் செலவுகளைப் பார்த்துக்கொள்வதற்காக அவர் ஒரு வேலையையும் செய்தார். கொரிந்து நகரத்தில் இருந்தபோது, ஆக்கில்லா—பிரிஸ்கில்லா தம்பதியின் வீட்டில் அவர் தங்கியிருந்தார். அவர்கள் கூடாரத் தொழில் செய்துவந்தார்கள். பவுலுக்கும் அந்தத் தொழில் தெரிந்திருந்ததால், அவர்களோடு சேர்ந்து கொஞ்ச நாளுக்கு அந்த வேலையைச் செய்தார். (அப். 18:1-4) இந்த இரண்டையுமே அவரால் எப்படிச் செய்ய முடிந்தது? கடவுளுடைய சக்திதான் அவருக்குக் கைகொடுத்தது!

4. இரண்டு கொரிந்தியர் 12:7ஆ-9 சொல்கிறபடி, பவுலுக்கு என்ன பிரச்சினை இருந்தது?

4 இரண்டு கொரிந்தியர் 12:7ஆ-9-ஐ வாசியுங்கள். தன்னுடைய “உடலில் ஒரு முள்” குத்திக்கொண்டிருப்பதாக பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? உங்கள் உடலில் ஒரு முள் குத்திக்கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ரொம்ப வேதனையாக இருக்கும், இல்லையா? தான் சமாளித்துக்கொண்டிருந்த ஏதோவொரு பிரச்சினையைத்தான் முள் என்பதாக பவுல் சொன்னார். தன்னை “அறைந்துகொண்டே” (“அடித்துக்கொண்டே,” அடிக்குறிப்பு) இருக்கிற ‘சாத்தான் அனுப்பிய தூதன்’ என்று அதைப் பற்றிச் சொன்னார். அப்படியென்றால், சாத்தானும் அவனுடைய பேய்களும்தான் பிரச்சினை என்ற முள்ளை பவுலின் உடலில் குத்தினார்களா? இல்லை! ஆனால், அவருடைய உடலில் ஒரு “முள்” இருப்பதை அவர்கள் கவனித்தபோது, அந்த முள் அவரை இன்னும் ஆழமாகக் குத்தும்படி செய்திருப்பார்கள். அப்போது பவுல் என்ன செய்தார்?

5. பவுலின் ஜெபத்துக்கு யெகோவா எப்படிப் பதில் தந்தார்?

5 அந்த ‘முள்ளை’ யெகோவா எடுத்துப்போட வேண்டும் என்று பவுல் முதலில் ஆசைப்பட்டார். “அதை என்னிடமிருந்து எடுத்துவிடும்படி மூன்று தடவை நம் எஜமானிடம் [யெகோவாவிடம்] கெஞ்சிக் கேட்டேன்” என்று அவர் சொல்கிறார். அப்படிக் கேட்ட பிறகும் அந்த முள் நீங்கிவிடவில்லை. அப்படியென்றால், பவுலின் ஜெபத்துக்கு யெகோவா பதில் தரவில்லை என்று அர்த்தமா? இல்லை! அவர் பதில் தந்தார்! பவுலுக்கு இருந்த முள்ளை அவர் எடுத்துப்போடவில்லை என்றாலும் அதைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தைத் தந்தார். “நீ பலவீனமாக இருக்கும்போது என்னுடைய பலம் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்” என்று சொன்னார். (2 கொ. 12:8, 9) கடவுளின் உதவியோடு தொடர்ந்து சந்தோஷத்தோடும் மன சமாதானத்தோடும் பவுலால் இருக்க முடிந்தது.—பிலி. 4:4-7.

6. (அ) நாம் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் தரலாம்? (ஆ) இந்தப் பாராவில் இருக்கிற வசனங்களில் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது?

6 ஏதோவொரு பிரச்சினையைத் தீர்க்கும்படி நீங்களும் பவுலைப் போலவே யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டிருக்கிறீர்களா? அப்படிக் கேட்ட பிறகும் உங்கள் பிரச்சினை தீராமல் இருக்கலாம் அல்லது இன்னும் மோசமாகி இருக்கலாம். அப்படியென்றால், யெகோவாவுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமா? பவுலின் அனுபவத்தை யோசித்துப்பாருங்கள். பவுலுக்குப் பதில் தந்ததைப் போலவே உங்களுக்கும் யெகோவா கண்டிப்பாகப் பதில் தருவார். ஒருவேளை, அவர் உங்களுடைய பிரச்சினையைத் தீர்க்காமல் இருக்கலாம். ஆனால், தன்னுடைய சக்தியைக் கொடுப்பதன் மூலம், அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தைத் தருவார். (சங். 61:3, 4) நீங்கள் ‘தள்ளப்பட்டாலும்’ யெகோவா உங்களைக் கைவிடவே மாட்டார்.—2 கொ. 4:8, 9; பிலி. 4:13.

கடவுளுடைய சக்தி—தொடர்ந்து முன்னோக்கிப் போவதற்கு உதவுகிறது

7-8. (அ) கடவுளுடைய சக்தி எப்படிக் காற்றைப் போல் செயல்படுகிறது? (ஆ) கடவுளுடைய சக்தி செயல்படும் விதத்தை பேதுரு எப்படி விளக்கினார்?

7 கடவுளுடைய சக்தி நமக்கு இன்னொரு வழியிலும் கைகொடுக்கிறது. அதாவது, பிரச்சினைகள் மத்தியிலும் முன்னோக்கிப் போக உதவுகிறது. எப்படி? கொந்தளிக்கும் கடலில் சாதகமான காற்று நம்மை எப்படிக் கரை சேர்க்குமோ, அதேபோல் கொந்தளிக்கும் பிரச்சினைகள் மத்தியிலும் கடவுளுடைய சக்தி நம்மைப் பூஞ்சோலை பூமி என்ற கரைக்குக் கொண்டுபோய் சேர்க்கும்.

8 கப்பல் பயணத்தைப் பற்றி மீனவராக இருந்த அப்போஸ்தலன் பேதுருவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், கடவுளுடைய சக்தி எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்க, கப்பல் பயணத்தோடு சம்பந்தப்பட்ட வார்த்தையை அவர் அநேகமாகப் பயன்படுத்தியிருக்கலாம். இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். “மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை. கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்” என்று அவர் எழுதினார். ‘தூண்டப்பட்டு’ என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், ‘கொண்டுசெல்லப்படுவதை’ குறிக்கிறது.—2 பே. 1:21.

9. ‘கொண்டுசெல்லப்படுவது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதன் மூலம் எப்படிப்பட்ட காட்சியை வாசகர்களின் மனதுக்கு பேதுரு கொண்டுவந்தார்?

9 ‘கொண்டுசெல்லப்படுவது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதன் மூலம் வாசகர்களின் மனதுக்கு பேதுரு என்ன காட்சியைக் கொண்டுவந்தார் என்று பார்க்கலாம். அதே வார்த்தையின் இன்னொரு வடிவத்தை அப்போஸ்தலர் புத்தகத்தின் எழுத்தாளரான லூக்காவும் பயன்படுத்தினார். அதாவது, ஒரு கப்பல் ‘காற்றால் அடித்துச் செல்லப்பட்டது’ என்று அவர் சொன்னார். (அப். 27:15) அப்படியானால், பைபிள் எழுத்தாளர்கள் ‘தூண்டப்பட்டார்கள்,’ அதாவது ‘கொண்டுசெல்லப்பட்டார்கள்’ என்று பேதுரு எழுதியபோது, “கடல் பயணத்தோடு சம்பந்தப்பட்ட ஓர் அழகான உருவகத்தை” பயன்படுத்தியதாக ஒரு பைபிள் அறிஞர் சொல்கிறார். பயணத்தை முடிக்க ஒரு கப்பல் எப்படிக் காற்றால் கொண்டுசெல்லப்படுகிறதோ, அதேபோல் தீர்க்கதரிசிகளும் பைபிள் எழுத்தாளர்களும் தங்களுடைய வேலையைச் செய்து முடிக்க கடவுளுடைய சக்தியால் கொண்டுசெல்லப்பட்டார்கள், அதாவது தூண்டப்பட்டார்கள் என்று பேதுரு சொன்னார். அந்த பைபிள் அறிஞர் இப்படியும் சொன்னார்: “ஒரு விதத்தில், தீர்க்கதரிசிகள் தங்கள் கப்பற்பாயை உயர்த்தினார்கள்.” யெகோவா, தன்னுடைய பங்கைச் செய்தார். எப்படி? “காற்று வீசும்படி” செய்தார்! அதாவது, தன்னுடைய சக்தியைக் கொடுத்தார்!! அப்போது, பைபிள் எழுத்தாளர்கள் தங்களுடைய பங்கைச் செய்தார்கள். அதாவது, கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்கு அப்படியே கட்டுப்பட்டார்கள்.

முதல் படி: யெகோவா கொடுத்திருக்கும் வேலையைத் தவறாமல் செய்யுங்கள்

இரண்டாவது படி: உங்கள் பலத்தை எல்லாம் ஒன்றுதிரட்டி யெகோவாவின் வேலையை முழுமையாகச் செய்யுங்கள் (பாரா 11) *

10-11. கடவுளுடைய சக்தி நம்மை வழிநடத்த என்ன இரண்டு படிகளை எடுக்க வேண்டும்? உதாரணத்தோடு விளக்குங்கள்.

10 ஆனால் இன்று, யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து பைபிளை எழுத வைப்பதில்லை. அந்தச் சக்தியைப் பயன்படுத்தி தன்னுடைய ஊழியர்களை வழிநடத்துகிறார். யெகோவா இன்றும் தன்னுடைய பங்கைச் செய்கிறார். அப்படியென்றால், கடவுளுடைய சக்தியிலிருந்து நன்மையடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய பங்கை நாம் செய்கிறோமா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். அதை எப்படிச் செய்வது?

11 இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். காற்றைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் கப்பலோட்டி, இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலாவதாக, காற்றடிக்கும் திசையில் அவர் கப்பலை ஓட்ட வேண்டும். அந்தத் திசையிலிருந்து அவர் ரொம்பத் தூரத்தில் இருந்தால், அதாவது துறைமுகத்திலேயே இருந்தால், கப்பல் எப்படி முன்னோக்கிப் போகும்? இரண்டாவதாக, கப்பற்பாயை நன்றாக உயர்த்தி, அதை விரித்துவிட வேண்டும். ஏனென்றால், என்னதான் காற்று அடித்தாலும், கப்பற்பாய் காற்றை உள்வாங்கிக்கொண்டால்தான் கப்பல் முன்னோக்கிப் போகும். அதேபோல், கடவுளுடைய சக்தியின் உதவி இருந்தால்தான் நாம் அவருடைய சேவையில் தொடர்ந்து முன்னோக்கிப் போக முடியும். அப்படியென்றால், அந்தச் சக்தியின் உதவி நமக்குக் கிடைப்பதற்கு நாம் இரண்டு படிகளை எடுக்க வேண்டும். முதல் படி, காற்று வீசும் திசையில் நாம் இருக்க வேண்டும். அதாவது, கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்ள உதவுகிற வேலைகளைச் செய்வதன் மூலம் கடவுளுடைய சக்தி வழிநடத்துகிற பாதையில் இருக்க வேண்டும். இரண்டாவது படி, நம்மால் முடிந்தளவு “கப்பற்பாயை உயர்த்தி கட்ட வேண்டும்.” அதாவது, நம்முடைய எல்லா பலத்தையும் ஒன்றுதிரட்டி சிறந்த விதத்தில் அந்த வேலைகளைச் செய்ய வேண்டும். (சங். 119:32) இந்தப் படிகளை எடுக்கும்போது, எதிர்ப்பு மற்றும் சோதனை என்ற ராட்சத அலைகளைக் கிழித்துக்கொண்டு, பூஞ்சோலை பூமி என்ற கரையை அடைய கடவுளுடைய சக்தி நம்மை உந்துவிக்கும்.

12. இப்போது எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

12 கடவுளுடைய சக்தி நமக்கு உதவுகிற இரண்டு வழிகளை இதுவரை பார்த்தோம். (1) அது நம்மைப் பலப்படுத்துகிறது. (2) சோதனைத் தீயைச் சகிக்கவும் கடைசிவரை உண்மையாக இருக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்ல, முடிவில்லாத வாழ்க்கை என்ற பாதையில் முன்னோக்கிப் போகவும், தொடர்ந்து அதில் நடைபோடவும் அந்தச் சக்தி நமக்கு உதவுகிறது. கடவுளுடைய சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய நாம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கடவுளுடைய சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைவது எப்படி?

13. இரண்டு தீமோத்தேயு 3:16, 17 சொல்கிறபடி, என்ன செய்வதற்குக் கடவுளுடைய வார்த்தை நம்மைத் தூண்டுகிறது, அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

13 முதலாவதாக, கடவுளுடைய வார்த்தையைப் படியுங்கள். (2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசியுங்கள்.) ‘கடவுளுடைய சக்தியின் தூண்டுதல்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கான நேரடி அர்த்தம் “கடவுள் ஊதினார்” என்பதுதான்! தன்னுடைய எண்ணங்களை பைபிள் எழுத்தாளர்களின் மனதில் ‘ஊதுவதற்கு,’ அதாவது அவர்களுடைய மனதில் வைப்பதற்கு, கடவுள் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தினார். அதனால், பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது கடவுளுடைய எண்ணங்கள் நம் மனதையும் இதயத்தையும் நிரப்பும். இந்த எண்ணங்கள், கடவுளுக்குப் பிடித்த மாதிரி நம் வாழ்க்கையை மாற்றுவதற்கு நம்மைத் தூண்டும். (எபி. 4:12) ஆனால், கடவுளுடைய சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், பைபிளைத் தவறாமல் படிப்பதற்கும் படித்தவற்றை ஆழமாக யோசித்துப்பார்ப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான், நம்முடைய சொல்லிலும் செயலிலும் பைபிளின் தாக்கம் இருக்கும்.

14. (அ) கூட்டங்களில் கடவுளுடைய சக்தி செயல்படுகிறது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) கூட்டங்களில் கடவுளுடைய சக்தி நம்மில் முழுமையாகச் செயல்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

14 இரண்டாவதாக, மற்றவர்களோடு சேர்ந்து கடவுளை வணங்குங்கள். (சங். 22:22) ஒருவிதத்தில், நம் கிறிஸ்தவ கூட்டங்கள் “காற்று வீசும்” ஓர் இடமாக இருக்கின்றன. அதாவது, யெகோவாவின் சக்தி செயல்படுகிற ஓர் இடமாக இருக்கின்றன. (வெளி. 2:29) ஏன் அப்படிச் சொல்லலாம்? ஏனென்றால், சகோதர சகோதரிகளோடு சேர்ந்து யெகோவாவை வணங்குவதற்காக ஒன்றுகூடி வரும்போது, கடவுளுடைய சக்திக்காக நாம் ஜெபம் செய்கிறோம். பைபிள் அடிப்படையிலான பாடல்களைப் பாடுகிறோம். அதுமட்டுமல்ல, கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்ட சகோதரர்கள் கொடுக்கிற பைபிள் பேச்சுகளைக் கேட்கிறோம். சகோதரிகள் நன்றாகத் தயாரித்து தங்களுடைய நியமிப்புகளைச் செய்யவும் இந்தச் சக்திதான் உதவுகிறது. ஆனால், இந்தச் சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், கூட்டங்களில் பதில் சொல்வதற்காக நன்றாகத் தயாரித்து வர வேண்டும். இப்படிச் செய்யும்போது, ஒருவிதத்தில், நம்முடைய “கப்பற்பாயை விரித்துவிடுகிறோம்” என்று அர்த்தம்.

15. ஊழியத்தில் கடவுளுடைய சக்தி எப்படிச் செயல்படுகிறது?

15 மூன்றாவதாக, ஊழியம் செய்யுங்கள். பிரசங்கிக்கும்போதும் கற்பிக்கும்போதும் நாம் பைபிளைப் பயன்படுத்துகிறோம். அதன் மூலம் ஊழியத்தில் கடவுளுடைய சக்தி செயல்படுவதற்கு இடம்கொடுக்கிறோம். (ரோ. 15:18, 19) கடவுளுடைய சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்; முடிந்தபோதெல்லாம் பைபிளைப் பயன்படுத்த வேண்டும். ஊழியத்தில் நன்றாகப் பேசுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சிப் புத்தகத்தில் வருகிற இப்படிப் பேசலாம் பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேசலாம்.

16. கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கு நேரடியான வழி என்ன?

16 நான்காவதாக, யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (மத். 7:7-11; லூக். 11:13) கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கு நேரடியான வழி இதுதான்! நம்முடைய ஜெபம் யெகோவாவிடம் போய்ச் சேருவதையோ, கடவுளுடைய சக்தி நமக்குக் கிடைப்பதையோ தடுத்து நிறுத்தும் சக்தி யாருக்கும் எதற்கும் கிடையாது! சிறைச்சாலையின் கதவுகளுக்கும் கிடையாது, சாத்தானுக்கும் கிடையாது!! (யாக். 1:17) கடவுளுடைய சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்? லூக்கா சுவிசேஷத்தில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிற ஓர் உவமை நமக்கு உதவும். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஜெபத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிற அந்த உவமையை இப்போது கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

விடாமல் ஜெபம் செய்யுங்கள்

17. லூக்கா 11:5-9, 13-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் உவமையிலிருந்து ஜெபம் செய்வதைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

17 லூக்கா 11:5-9, 13-ஐ வாசியுங்கள். கடவுளுடைய சக்திக்காக நாம் எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்பதை இயேசு சொன்ன உவமை காட்டுகிறது. இந்த உவமையில் சொல்லப்பட்ட நபர் ‘விடாப்பிடியாகக் கேட்டதால்’ அவருக்குத் தேவையானது கிடைத்தது. நடுராத்திரியாக இருந்தாலும், தன் நண்பனிடம் உதவி கேட்க அவன் தயங்கவில்லை. (ஜூலை 2018 பயிற்சிப் புத்தகத்தைப் பாருங்கள்.) இந்த உவமையை இயேசு எப்படி ஜெபத்துக்கு ஒப்பிட்டார்? “கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள். தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று இயேசு சொன்னார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? கடவுளுடைய சக்தி நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், விடாமல் ஜெபம் செய்ய வேண்டும்.

18. இயேசு சொன்ன உவமையின்படி, தன்னுடைய சக்தியை யெகோவா கொடுப்பார் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?

18 தன்னுடைய சக்தியை யெகோவா நமக்கு ஏன் கொடுக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் இயேசுவின் உவமை உதவுகிறது. உவமையில் சொல்லப்பட்ட நபர், தன்னைத் தேடி வந்தவனை உபசரிக்க வேண்டும் என்று விரும்பினார். தன்னிடம் ஒன்றுமே இல்லை என்றாலும், நடுராத்திரியில் தன்னைத் தேடி வந்தவனுக்குக் கண்டிப்பாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். தனக்கு ரொட்டி தரும்படி அவன் விடாப்பிடியாகக் கேட்டதால், அவனுக்கு அவர் உதவினார் என்று இயேசு சொன்னார். இயேசு சொல்லவரும் கருத்து என்ன? பாவ இயல்புள்ள ஒரு மனிதனே தன்னிடம் விடாப்பிடியாக உதவி கேட்பவனுக்கு உதவ விரும்பினால், கருணையுள்ளம் படைத்த நம் பரலோகத் தந்தை தன்னுடைய சக்திக்காக விடாப்பிடியாகக் கேட்கிறவர்களுக்கு அதைத் தர மாட்டாரா? அதனால், தன்னுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்பவர்களுக்கு யெகோவா அதை நிச்சயம் தருவார் என்ற நம்பிக்கையோடு ஜெபம் செய்யலாம்.—சங். 10:17; 66:19.

19. நமக்கு வெற்றி நிச்சயம் என்று ஏன் உறுதியாகச் சொல்லலாம்?

19 நம்மைத் தோற்கடிக்க சாத்தான் என்னதான் மல்லுக்கட்டினாலும் நம்மால் ஜெயிக்க முடியும். ஏனென்றால், கடவுளுடைய சக்தி நமக்கு இரண்டு வழிகளில் உதவுகிறது. ஒரு வழி, நம்முடைய கஷ்டங்களைச் சமாளிக்கத் தேவையான பலத்தை அது தருகிறது. இன்னொரு வழி, பூஞ்சோலை பூமி என்ற கரையை அடையும்வரை யெகோவாவின் சேவையில் தொடர்ந்து முன்னோக்கிப் போக அது உதவுகிறது. அதனால், கடவுளுடைய சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.

பாட்டு 56 யெகோவாவே, கேளும் என் ஜெபம்

^ பாரா. 5 கஷ்டங்களைச் சமாளிக்க கடவுளுடைய சக்தி எப்படி உதவும் என்பதை இந்தக் கட்டுரை சிறப்பித்துக் காட்டும். கடவுளுடைய சக்தியிலிருந்து முழுமையாகப் பிரயோஜனமடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கும்.

^ பாரா. 16 இயேசுவின் வாழ்க்கையில் ஜெபம் முக்கிய அம்சமாக இருந்தது என்பதை மற்ற சுவிசேஷ எழுத்தாளர்களைவிட லூக்கா முக்கியப்படுத்திக் காட்டுகிறார்.—லூக். 3:21; 5:16; 6:12; 9:18, 28, 29; 18:1; 22:41, 44.

^ பாரா. 59 படங்களின் விளக்கம்: முதல் படி: ஒரு சகோதரரும் சகோதரியும் ராஜ்ய மன்றத்துக்கு வருகிறார்கள். மற்ற சகோதர சகோதரிகளோடு ஒன்றுகூடி வருவதன் மூலம், கடவுளுடைய சக்தி செயல்படுகிற இடத்தில் இருக்கிறார்கள். இரண்டாவது படி: கூட்டங்களுக்குத் தயாரித்து வந்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரையில் நாம் பார்த்த மற்ற விஷயங்களுக்கும் இந்த இரண்டு படிகள் பொருந்துகின்றன. அதாவது, பைபிளைப் படிப்பது... ஊழியம் செய்வது... ஜெபம் செய்வது... ஆகிய விஷயங்களுக்கும் பொருந்துகின்றன.