வாழ்க்கை சரிதை
வளமான ஆன்மீக சொத்தால் செழுமையாக வளர்ந்தேன்
நடுராத்திரி! கிட்டத்தட்ட 1.6 கி.மீ. அகலத்தில் இருந்த நைஜர் ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த சமயம் அது! அதனால், அந்த ஆற்றைக் கடப்பது ரொம்பவே ஆபத்தானதாக இருந்தது. இருந்தாலும், ஒன்றுக்கும் அதிகமான தடவை நாங்கள் அதைக் கடக்க வேண்டியிருந்தது. நான் ஏன் அங்கே போனேன்? நான் பிறப்பதற்கு முன்பு நடந்த சில விஷயங்களை முதலில் சொல்கிறேன்.
1913-ல், என் அப்பா ஜான் மில்ஸ் தன்னுடைய 25-வது வயதில் நியு யார்க் நகரத்தில் ஞானஸ்நானம் எடுத்தார். சகோதரர் ரஸல்தான் ஞானஸ்நானப் பேச்சைக் கொடுத்தார். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, ட்ரினிடாட் என்ற தீவுக்கு அப்பா போனார். வைராக்கியமான பைபிள் மாணாக்கரான கான்ஸ்டென்ஸ் ஃபார்மரை அங்குதான் கல்யாணம் செய்தார். “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷனை” போட்டுக் காட்டுவதற்குத் தன்னுடைய நண்பரான சகோதரர் வில்லியம் ஆர். ப்ரவுனுக்கு அப்பா உதவினார். 1923-ல், ப்ரவுன் தம்பதி மேற்கு ஆப்பிரிக்காவுக்கு நியமிக்கப்பட்டார்கள்; அதுவரை அப்பாவும் சகோதரர் ப்ரவுனும் ஃபோட்டோ டிராமாவைக் காட்டிவந்தார்கள். பரலோக நம்பிக்கையுள்ள அப்பாவும் அம்மாவும் ட்ரினிடாட்டில் தங்களுடைய சேவையைத் தொடர்ந்து செய்தார்கள்.
அப்பா அம்மா எங்களை ரொம்பவே நேசித்தார்கள்
என்னுடைய அப்பா அம்மாவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள். முதல் பிள்ளைக்கு, அப்போதைய உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் பிரசிடென்ட்டாக இருந்த சகோதரர் ரதர்ஃபோர்டின் பெயரை வைத்தார்கள். டிசம்பர் 30, 1922-ல் நான் பிறந்தேன். அப்போதைய கோல்டன் ஏஜ் (இப்போது, விழித்தெழு!) பத்திரிகையின் பதிப்பாசிரியரான க்லேட்டன் ஜெ. உட்வர்த்தின் பெயரை எனக்கு வைத்தார்கள். எங்கள் எல்லாருக்கும் தேவையான அடிப்படைக் கல்வியை அப்பா அம்மா கொடுத்தார்கள்; அதைவிட முக்கியமாக, ஆன்மீக இலக்குகளை வைப்பதற்கு உற்சாகப்படுத்தினார்கள். பைபிள் வசனங்களைப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமை அம்மாவுக்கு ரொம்பவே அதிகமாக இருந்தது. பைபிள் கதைகளைச் சொல்வது என்றால் அப்பாவுக்கு ரொம்ப இஷ்டம்! அந்தக் கதைகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் தன்னுடைய உடல் அசைவுகளின் மூலம், தத்ரூபமாகக் கதை சொல்வார்.
அவர்களுடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. ஐந்து பையன்களில் நாங்கள் மூன்று பேர் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டோம். எங்களுடைய மூன்று தங்கைகள், நிறைய வருஷங்கள் ட்ரினிடாட் மற்றும் டுபாகோவில் பயனியர் ஊழியம் செய்தார்கள். எங்களுடைய அப்பா அம்மா, தங்களுடைய போதனையின் மூலமும் நல்ல முன்மாதிரியின் மூலமும் “யெகோவாவின் வீட்டில்” எங்களை நட்டார்கள். அவர்கள் கொடுத்த உற்சாகத்தால், “கடவுளுடைய பிரகாரங்களில்” நாங்கள் செழித்து வளர்ந்தோம்.—சங். 92:13.
எங்கள் வீட்டிலிருந்துதான் பிரசங்க வேலைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பயனியர்கள் எங்கள் வீட்டில் ஒன்றுகூடுவார்கள். ட்ரினிடாட்டுக்கு வந்துபோயிருந்த கனடாவைச் சேர்ந்த மிஷனரியான சகோதரர் ஜார்ஜ் யங்கைப் பற்றி அவர்கள் அடிக்கடி பேசுவார்கள். எங்கள் அப்பா அம்மா, தங்களுடைய முன்னாள் ஊழிய
பார்ட்னர்களான ப்ரவுன் தம்பதியைப் பற்றி ஆர்வமாகப் பேசுவார்கள். அந்தச் சமயத்தில், ப்ரவுன் தம்பதி மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இவர்கள் பேசியதையெல்லாம் கேட்டது, பத்து வயதிலேயே ஊழியத்துக்குப் போவதற்கான உற்சாகத்தை எனக்குக் கொடுத்தது.ஆரம்பக் கால ஊழியம்
அந்தக் காலங்களில் வந்த நம்முடைய பத்திரிகைகளில் அனல் பறந்தது! அவை பொய் மதத் திரையைக் கிழித்தன, பேராசைபிடித்த வியாபாரத்தையும் அரசியல் பித்தலாட்டங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டின. இதைப் பார்த்த குருமார்கள், 1936-ல் அப்போதைய ட்ரினிடாட்டின் ஆளுநராக செயல்பட்டுக்கொண்டிருந்தவரைத் தூண்டி, உவாட்ச் டவர் வெளியீடுகள் எல்லாவற்றையும் தடை செய்தார்கள். ஆனால், நாங்கள் அந்த வெளியீடுகளை மறைத்துவைத்து, அவை தீரும்வரை பயன்படுத்தினோம். துண்டுப்பிரதிகளையும் விளம்பர அட்டைகளையும் பயன்படுத்தி நடைப்பயணமாகப் போனோம்; சைக்கிள் அணிவகுப்பையும் நடத்தினோம். டூனாபூனா என்ற ஊரிலிருந்த சவுண்ட் கார் தொகுதியோடு சேர்ந்து ட்ரினிடாட்டின் தொலைதூர பகுதிகளிலும் பிரசங்கித்தோம். அது ரொம்பவே சுவாரஸ்யமானதாக இருந்தது. இந்த அருமையான ஆன்மீகச் சூழலால், 16 வயதில் நான் ஞானஸ்நானம் எடுத்தேன்.
எங்கள் குடும்பச் சூழ்நிலையும், என்னுடைய ஆரம்பக் கால அனுபவங்களும் மிஷனரியாக ஆக வேண்டும் என்ற ஆசையை எனக்குள் வளர்த்தது. 1944-ல் அரூபா என்ற தீவுக்குப் போனபோதும் அந்த ஆசை தீரவில்லை. சகோதரர் எட்மண்ட் டபிள்யு. கமிங்ஸ் என்பவரோடு சேர்ந்து அங்கே ஊழியம் செய்தேன். 1945-ல் நடந்த நினைவுநாளுக்கு 10 பேர் வந்திருந்தார்கள்; அது எங்களுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அடுத்த வருஷம், அந்தத் தீவின் முதல் சபை உருவானது.
என்னோடு வேலை செய்த ஓரிஸ் வில்லியம்ஸ் என்ற பெண்ணுக்குச் சாட்சி கொடுத்தேன். தனக்குக் கற்பிக்கப்பட்டிருந்த கோட்பாடுகள்தான் சரி என்று அவள் விவாதம் செய்தாள். ஆனால், கடவுளுடைய வார்த்தை உண்மையிலேயே என்ன சொல்கிறது என்பதை பைபிள் படிப்பின் மூலம் தெரிந்துகொண்டாள்; ஜனவரி 5, 1947-ல் ஞானஸ்நானம் எடுத்தாள். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, நாங்கள் காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டோம். நவம்பர் 1950-ல் அவள் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தாள். அவள் என் வாழ்க்கையில் வந்ததும், என் வாழ்க்கை புதுப்பொலிவடைந்தது.
நைஜீரியாவில் செய்த சுவாரஸ்யமான சேவை
1955-ல் கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு வந்தது. அந்தப் பள்ளிக்குப் போவதற்காக, ஓரிஸும் நானும் எங்கள் வேலைகளை விட்டோம், வீட்டையும் சொத்துப்பத்துகளையும் விற்றோம், அரூபாவுக்கு விடைகொடுத்தோம். ஜூலை 29, 1956-ல் 27-வது கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றோம்; பிறகு, நைஜீரியாவுக்கு நியமிக்கப்பட்டோம்.
அந்த நாட்களைப் பற்றி ஓரிஸ் சொல்வதைக் கேளுங்கள்: “மிஷனரி வாழ்க்கையில கிடைக்கிற ஆசீர்வாதங்கள சந்தோஷமா அனுபவிக்கிறதுக்கும், அதுல வர்ற சவால்கள சமாளிக்குறதுக்கும் யெகோவாவோட சக்தி கண்டிப்பா உதவி செய்யும். மிஷனரியா ஆகணுங்குற ஆசை என்னோட கணவருக்கு இருந்துச்சு, ஆனா எனக்கு அந்த ஆசை இருந்ததே இல்ல. எனக்குனு ஒரு குடும்பம்... பிள்ளைங்க... இப்படித்தான் வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, பிரசங்க வேலை செய்றது எவ்வளவு அவசரம்னு புரிஞ்சதுக்கு அப்புறம் என்னோட எண்ணத்தை மாத்திக்கிட்டேன். கிலியட் பள்ளியில பட்டம் வாங்குனதுக்கு அப்புறம், மிஷனரி சேவை செய்றதுக்கு என்னை முழுசா தயார்படுத்திக்கிட்டேன். குயின் மேரி கப்பல்ல நாங்க ஏறுனப்போ, சகோதரர் நாரோட ஆஃபிஸ்ல வேலை செஞ்சிட்டு இருந்த வர்த் தார்ன்டன் எங்கள வழியனுப்பி வைக்க வந்தாரு. நாங்க பெத்தேல்ல சேவை செய்யப்போறோம்னு அவர் எங்ககிட்ட சொன்னப்போ, ‘ஐயோ, அப்படியா!’னு நான் கொஞ்ச வருத்தத்தோட சொன்னேன். இருந்தாலும், சீக்கிரமாவே நான் என்னை மாத்திக்கிட்டேன். பெத்தேல் வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சு. அங்க வேற வேற நியமிப்புகள் எனக்கு கிடைச்சுது. நான் செஞ்ச வேலைகள்லயே, வரவேற்பாளரா செஞ்ச வேலைதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. பொதுவாவே மக்கள்கிட்ட பழகுறது எனக்கு பிடிக்கும்; இந்த வேலையில, நைஜீரியாவை சேர்ந்த நிறைய சகோதரர்கள சந்திக்க முடிஞ்சுது. பெத்தேலுக்கு வந்து சேர்றதுக்குள்ள அவங்கள்ல நிறைய பேர் போட்டிருந்த துணியெல்லாம் ரொம்ப தூசியாயிடும். அவங்க ரொம்ப களைப்பா, தாகமா, பசியா வருவாங்க. அவங்கள நல்லா கவனிச்சிக்குறதும், அவங்களுக்கு தேவையான சௌகரியங்கள செஞ்சு கொடுக்குறதும் எனக்கு சந்தோஷத்த கொடுத்துச்சு. இந்த எல்லா வேலையுமே யெகோவாவுக்கு செய்ற பரிசுத்த சேவைதான்; அது எனக்கு திருப்தியையும் சந்தோஷத்தையும் தந்துச்சு.” நாங்கள் செய்த எல்லா வேலைகளுமே எங்கள் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தியது!
1961-ல், நாங்கள் குடும்பமாக ட்ரினிடாட்டில் ஒன்றுகூடினோம். அப்போது, ஆப்பிரிக்காவில் தனக்குக் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்களைச் சகோதரர் ப்ரவுன் சொன்னார். நைஜீரியாவின் வளர்ச்சியைப் பற்றி நானும் சொன்னேன். அப்போது, அவர் என் தோள்மீது கைகளைப் போட்டுக்கொண்டு என் அப்பாவைப் பார்த்து, “ஜானி, உன்னால ஆப்பிரிக்காவுக்கு போகவே முடியல, ஆனா உட்வர்த் போயிட்டான்” என்று சொன்னார். பதிலுக்கு அப்பா, “வர்த், உன் சேவைய தொடர்ந்து நல்லா செஞ்சிட்டே இரு” என்று பாராட்டினார். ரொம்பக் காலமாகச் சேவை செய்துவந்த ஊழியர்கள் கொடுத்த இதுபோன்ற உற்சாகம், ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையை அதிகமாக்கியது.
1962-ல், பத்து மாதங்களுக்கு நடத்தப்பட்ட 37-வது கிலியட் பள்ளியில் கலந்துகொண்டு, கூடுதலான பயிற்சியைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நைஜீரியா கிளை அலுவலகத்தின் ஊழியராக அப்போது சேவை செய்துகொண்டிருந்த சகோதரர் வில்ஃப்ரெட் கூச் 38-வது கிலியட் பள்ளியில் கலந்துகொண்டார். பிறகு, இங்கிலாந்துக்கு நியமிக்கப்பட்டார். அதனால், நைஜீரியா கிளை அலுவலகத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. சகோதரர் ப்ரவுனைப் போலவே, நானும் நிறைய இடங்களுக்குப் பயணம் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (பொலிகெஜாஸ் என்பது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, பக்கவாட்டில் அடைக்கப்படாத பஸ்கள்.) மாநாடுகளுக்கு வருவார்கள். சிந்தனையைத் தூண்டும் வாசகங்கள் அந்தப் பஸ்களில் எழுதப்பட்டிருந்தன. “சிறு துளி பெரு வெள்ளம்” என்பது அவற்றில் ஒன்று.
செய்தேன். நைஜீரியாவைச் சேர்ந்த பாசமான சகோதரர்களைச் சந்திக்கவும், அவர்கள்மீது அன்பு காட்டவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. வளர்ந்த நாடுகளில் சாதாரணமாகக் கிடைத்த பொருள்கள்கூட இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், போதுமென்ற மனதுடன் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை, பணத்தையோ பொருள் வசதிகளையோ சார்ந்தது கிடையாது என்பதை இவர்களுடைய வாழ்க்கை காட்டியது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், அவர்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் கூட்டங்களுக்கு வந்தது பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம்! நிறைய பேர், லாரிகள் மற்றும் பொலிகெஜாஸில்உண்மையான வாசகம் அது! ஒவ்வொரு சின்னச் சின்ன முயற்சியும் பலன் தரும்! நாங்கள் எடுத்த முயற்சியும் பலன் தந்தது. 1974-க்குள் அமெரிக்காவுக்கு அடுத்ததாக, 1,00,000 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரே நாடாக நைஜீரியா ஆனது. வேலை தொடர்ந்து செழித்தது!
இந்த வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்தது. அப்போது பல மாதங்களாக, நைஜர் ஆற்றின் அந்தப் பக்கத்தில் இருந்த பையஃப்ரா மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர்களால் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நாங்கள்தான் அவர்களுக்கு ஆன்மீக உணவைக் கொண்டுபோக வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் சொன்னதுபோல் நாங்கள் நிறைய தடவை ஆற்றைக் கடந்தோம்; அந்தச் சமயங்களில், நிறைய ஜெபம் செய்தோம், யெகோவாமீது நம்பிக்கை வைத்தோம்.
இரத்த வெறிபிடித்த வீரர்கள், நோய், மற்ற ஆபத்துகள் மத்தியில் நிறைய தடவை நைஜர் ஆற்றைக் கடந்தது எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒருபக்கம், சந்தேகப் பார்வையோடு பார்த்த ராணுவப் படையைத் தாண்டிப்போவது ஆபத்தானதாக இருந்தது; இன்னொருபக்கம், ஆற்றைக் கடந்து பையஃப்ரா பகுதிக்குப் போவது அதைவிட ஆபத்தானதாக இருந்தது. ஒரு ராத்திரி, ஆசாபாவிலிருந்து ஓனீட்சாவுக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு போய்க்கொண்டிருந்த படகில் ஏறி, பெருக்கெடுத்து ஓடிய நைஜர் ஆற்றைக் கடந்துபோய், எனுகுவிலிருந்த கண்காணிகளைச் சந்தித்து உற்சாகப்படுத்தினேன். இன்னொரு பயணத்தின்போது, ஆபாவிலிருந்த மூப்பர்களைச் சந்தித்துப் பலப்படுத்தினேன். அந்தச் சமயத்தில், எதிரிகள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக, ஆபா என்ற இடத்திலிருந்த எல்லா வீடுகளிலும் கட்டிடங்களிலும் சாயங்கால நேரத்தில் விளக்குகளை அணைக்கும்படி சொல்லப்பட்டிருந்தது. ஒரு சமயம், போர்ட் ஹார்கோட்டில், ஜெபம் செய்துவிட்டு அவசர அவசரமாகக் கூட்டத்தை முடிக்க வேண்டியிருந்தது. ஏனென்றால், ராணுவப் படை பையஃப்ரா பகுதிக்குள் நுழைந்திருந்தது.
தங்களை யெகோவா அன்பாகக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையைச் சகோதர சகோதரிகளுக்குக் கொடுப்பதற்கு அந்தச் சந்திப்புகள் ரொம்பவே அவசியமாக இருந்தன. அதோடு, நடுநிலை மற்றும் ஒற்றுமை சம்பந்தப்பட்ட முக்கியமான அறிவுரைகளைக் கொடுப்பதற்கும் அவை உதவியாக இருந்தன. அந்தப் பயங்கரமான சூழ்நிலையை நைஜீரியாவைச் சேர்ந்த சகோதரர்கள் வெற்றிகரமாகச் சமாளித்தார்கள். அவர்களுடைய அன்பு இனவெறியை வென்றது! கிறிஸ்தவ ஒற்றுமையை அவர்கள் விட்டுக்கொடுக்கவே இல்லை. சோதனையான அந்தக் காலக்கட்டத்தில் அவர்களோடு இருந்ததை ஒரு பாக்கியமாக நினைக்கிறேன்!
1969-ல், நியு யார்க் நகரத்திலிருந்த யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த “பூமியில் சமாதானம்” என்ற சர்வதேச மாநாட்டின் சேர்மேனாக சகோதரர் மில்டன் ஜி. ஹென்ஷல் இருந்தார். நான் அவருக்கு உதவியாளராக இருந்ததால் எனக்கு நிறைய பயிற்சி கிடைத்தது. அந்தப் பயிற்சி எனக்கு சரியான சமயத்தில் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், 1970-ல் “அனுக்கிரகம் பெற்ற மக்கள்” என்ற சர்வதேச மாநாட்டை நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் என்ற இடத்தில் நாங்கள் நடத்தினோம். உள்நாட்டுப் போர் முடிந்த கையோடு அந்த மாநாட்டை நடத்தியது உண்மையிலேயே யெகோவாவின் ஆசீர்வாதம்தான். சாதனை படைத்த ஒரு மாநாடாக அது இருந்தது. ஏனென்றால், அந்த மாநாடு 17 மொழிகளில் நடந்தது; 1,21,128 பேர் அதில் கலந்துகொண்டார்கள். சகோதரர் நாரும், சகோதரர் ஹென்ஷலும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்து தனிவிமானத்தில் வந்திருந்த மற்ற சகோதரர்களும் 3,775 பேர் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்த்தார்கள். பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஞானஸ்நானங்களில் இதுவும் ஒன்று! இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்காக நான் செலவிட்ட நாட்கள்தான் என்னுடைய வாழ்க்கையிலேயே ரொம்பவே பிஸியான நாட்கள்! அந்தச் சமயத்தில் ஏற்பட்ட பிரஸ்தாபிகளின் வளர்ச்சியை சாதாரண வளர்ச்சி என்று சொல்ல முடியாது, அது அபார வளர்ச்சி!
நைஜீரியாவில் இருந்த 30-க்கும் அதிகமான வருஷங்களில், சிலசமயம் பயணக் கண்காணியாகவும் மண்டலக் கண்காணியாகவும் மேற்கு ஆப்பிரிக்காவில் சேவை செய்திருக்கிறேன். மிஷனரிகள்மேல் தனிப்பட்ட அக்கறை காட்டியபோதும், அவர்களை உற்சாகப்படுத்தியபோதும் அவர்கள் ரொம்பவே நன்றியோடு இருந்தார்கள். அவர்கள் மறக்கப்படவில்லை என்ற நம்பிக்கையைக் கொடுத்தது எனக்குச் சந்தோஷத்தைத் தந்தது. சகோதர சகோதரிகள் ஆன்மீக விதத்தில் செழுமையாக இருப்பதற்கும், யெகோவாவின் அமைப்பு பலமாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதற்கும், அவர்கள்மீது தனிப்பட்ட அக்கறை காட்டுவது ரொம்பவே முக்கியம் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
யெகோவாவின் உதவி இருந்ததால்தான் உள்நாட்டுப் போராலும் நோயாலும் வந்த கஷ்டங்களை எங்களால் சமாளிக்க முடிந்தது. யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததை எங்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இப்போது, ஓரிஸ் சொல்வதைக் கேளுங்கள்:
“எங்க ரெண்டு பேருக்கும் நிறைய தடவை மலேரியா வந்துச்சு. அப்படி ஒரு தடவை வர்த்துக்கு மலேரியா வந்தப்போ, லாகோஸிலிருந்த ஆஸ்பத்திரியில சேர்த்தோம். அவர் பிழைக்க
மாட்டார்னு டாக்டர் சொன்னாங்க. ஆனா, அவர் உயிர் பிழைச்சது எனக்கு பயங்கர சந்தோஷமா இருந்துச்சு. அவருக்கு சுயநினைவு வந்ததும், அவர கவனிச்சுக்கிட்ட ஆண் நர்ஸ்கிட்ட கடவுளோட அரசாங்கத்த பத்தி பேசுனாரு. கொஞ்ச நாளுக்கு அப்புறம், அந்த நர்ஸுக்கு பைபிள் மேல இருந்த ஆர்வத்தை வளர்க்குறதுக்காக, நானும் வர்த்தும் அவர பார்க்குறதுக்காக போனோம். அவரோட பேரு நவாம்பிவே. அவரு சத்தியத்த ஏத்துக்கிட்டாரு; கொஞ்ச காலத்துக்கு அப்புறம் ஆபாவுல மூப்பரா சேவை செஞ்சாரு. நிறைய பேரு சத்தியத்தை ஏத்துக்குறதுக்கு நானும் உதவி செஞ்சேன். தீவிரமா இருந்த சில முஸ்லிம்கள்கூட யெகோவாவுக்கு தங்கள அர்ப்பணிக்கிறதுக்கு என்னால உதவ முடிஞ்சுது. நைஜீரியா மக்கள பத்தி தெரிஞ்சிக்கிட்டது சந்தோஷமா இருந்துச்சு. அவங்களையும் அவங்களோட கலாச்சாரத்தையும் பழக்கவழக்கங்களையும் மொழியையும் நேசிச்சதும் எங்களுக்கு ரொம்பவே சந்தோஷத்த கொடுத்துச்சு.”நாங்கள் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம்: வேறொரு நாட்டில் நமக்குக் கிடைத்திருக்கும் நியமிப்பை நன்றாகச் செய்ய வேண்டும் என்றால், சகோதர சகோதரிகளை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய கலாச்சாரத்தைவிட அவர்களுடைய கலாச்சாரம் ரொம்பவே வித்தியாசமானதாக இருந்தாலும் நாம் அவர்களை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய நியமிப்புகள்
நைஜீரியா பெத்தேலில் சேவை செய்த பிறகு, 1987-ல் எங்களுக்குப் புதிய நியமிப்பு கிடைத்தது. கரீபியனில் இருந்த செயின்ட் லூசியா என்ற அழகான தீவில் நாங்கள் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டோம். அருமையான நியமிப்பு அது! ஆனால், புதுப்புது சவால்களும் இருந்தன. ஆப்பிரிக்காவில் இருந்தவர்கள் நிறைய பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். ஆனால், செயின்ட் லூசியாவிலிருந்தவர்கள் முறையாக திருமணம் செய்யாமலேயே ஒன்றுசேர்ந்து வாழ்ந்தார்கள். எங்களோடு பைபிள் படித்த நிறைய பேர், தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்தார்கள். பைபிளில் இருக்கிற வல்லமையான வார்த்தைகள்தான் அப்படிச் செய்ய அவர்களைத் தூண்டியது.
வயதாக வயதாக எங்களுடைய பலமெல்லாம் குறைந்துகொண்டே போனது. அதனால், 2005-ல், அமெரிக்காவின் நியு யார்க்கைச் சேர்ந்த புருக்லினில் இருந்த உலகத் தலைமை அலுவலகத்துக்கு ஆளும் குழு எங்களை அன்போடு மாற்றியது. ஓரிஸை எனக்குக் கொடுத்ததற்காக நான் யெகோவாவுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்கிறேன். 2015-ல், மரணம் என்ற எதிரி அவளை வென்றது. அவள் இல்லாத ஒரு வாழ்க்கை எனக்கு எவ்வளவு வேதனையாக இருக்கிறது என்பதை விளக்க வார்த்தைகளே இல்லை. அவள் எனக்கு அருமையான துணையாக இருந்தாள். அன்பான மனைவியாக இருந்தாள். நான் அவளை நேசிக்கும் விதத்தில்தான் எப்போதும் நடந்துகொள்வாள். எங்களுடைய 68 வருஷ கல்யாண வாழ்க்கையில் நான் அவளை நெஞ்சார நேசித்தேன். கல்யாண வாழ்க்கையிலும் சரி, சபையிலும் சரி, சந்தோஷத்தின் ரகசியத்தை நாங்கள் புரிந்துகொண்டோம். தலைமை ஸ்தானத்தை மதிப்பது... தாராளமாக மன்னிப்பது... தொடர்ந்து மனத்தாழ்மையாக இருப்பது... கடவுளுடைய சக்தி உண்டாக்குகிற குணங்களைக் காட்டுவது... இவையெல்லாம்தான் சந்தோஷத்தின் ரகசியம்!
ஏமாற்றங்களோ சோர்வுகளோ எங்களைத் தாக்கியபோதும், தியாகங்கள் செய்வதை விட்டுவிடாமல் இருக்க யெகோவாவையே நம்பியிருந்தோம். நாங்கள் தொடர்ந்து எங்களைச் சரிப்படுத்திக்கொண்டபோது, அருமையான மாற்றங்கள் நடப்பதைப் பார்த்தோம். இன்னும் அருமையான விஷயங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன.—ஏசா. 60:17; 2 கொ. 13:11.
ட்ரினிடாட்டிலும் டுபாகோவிலும் என் அப்பா அம்மாவும் மற்றவர்களும் செய்த வேலைகளை யெகோவா ஆசீர்வதித்தார். சமீப அறிக்கைகளின்படி 9,892 பேர் உண்மை வணக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அரூபாவில் நான் முதன்முதலில் இருந்த சபையைப் பலப்படுத்த நிறைய பேர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இப்போது, நன்றாக வளர்ச்சியடைந்த 14 சபைகள் அந்தத் தீவில் இருக்கின்றன. நைஜீரியாவிலும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 3,81,398 ஆக உயர்ந்திருக்கிறது. செயின்ட் லூசியா தீவிலும் யெகோவாவின் அரசாங்கத்தை ஆதரிக்கிற 783 பேர் இருக்கிறார்கள்.
இப்போது எனக்கு 90 வயதுக்கு மேல் ஆகிறது. யெகோவாவின் வீட்டில் நடப்பட்டிருக்கிறவர்களைப் பற்றி சங்கீதம் 92:14 இப்படிச் சொல்கிறது: “வயதான காலத்திலும் அவர்கள் திடமாக இருப்பார்கள். துடிப்பாகவும் தெம்பாகவும் இருப்பார்கள்.” இவ்வளவு காலம் யெகோவாவின் சேவையைச் செய்வதற்காகக் கிடைத்த வாய்ப்புக்கு நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். எனக்குக் கிடைத்த ஆன்மீக சொத்து, யெகோவாவின் சேவையை முழு மூச்சோடு செய்ய உதவியாக இருந்திருக்கிறது. ‘[என்] கடவுளுடைய பிரகாரங்களில் செழித்து வளர’ தன்னுடைய மாறாத அன்பின் மூலம் யெகோவா எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.—சங். 92:13.
^ பாரா. 18 மார்ச் 8, 1972 ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 24-26-ஐப் பாருங்கள்.