Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க தயாரா?

இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க தயாரா?

“உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?”—லூக். 14:28.

பாடல்கள்: 120, 64

ஞானஸ்நானம் எடுக்க விரும்பும் இளம் பிள்ளைகளுக்காகவே இந்தக் கட்டுரையும் அடுத்த கட்டுரையும் தயாரிக்கப்பட்டிருக்கிறது

1, 2. (அ) இன்று யெகோவாவின் மக்கள் எதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்? (ஆ) ஞானஸ்நானத்தைப் பற்றி பிள்ளைகளுக்கு புரியவைக்க பெற்றோரும் மூப்பர்களும் என்ன செய்யலாம்?

“உன்னை எனக்கு பிறந்ததுல இருந்தே தெரியும். இப்போ நீ ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா நீ ஏன் ஞானஸ்நானம் எடுக்கணும்னு ஆசைப்படுற?” என்று 12 வயது கிறிஸ்டோபரிடம் ஒரு மூப்பர் கேட்டார். அந்த மூப்பர் இப்படி கேட்டதற்கு நல்ல காரணம் இருந்தது. ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஞானஸ்நானம் எடுப்பது நமக்கு சந்தோஷமாக இருக்கிறது. (பிர. 12:1) ஆனால், அந்த தீர்மானத்தை அவர்கள் சொந்தமாக எடுக்கிறார்களா... ஞானஸ்நானம் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்திருக்கிறார்களா... என்பதை கிறிஸ்தவ பெற்றோரும் சபையில் இருக்கிற மூப்பர்களும் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம்.

2 ஒருவர் அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது கிறிஸ்தவராக அவர் ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. யெகோவா அவரை எப்படியெல்லாம் ஆசீர்வதிக்கிறார் என்பதை அவர் புரிந்துகொள்வார். அதேசமயம் சாத்தானிடமிருந்து நிறைய எதிர்ப்புகளையும் அனுபவிப்பார். (நீதி. 10:22; 1 பே. 5:8) அதனால், கிறிஸ்துவின் சீடராக இருப்பது என்றால் என்ன என்பதை அப்பா-அம்மா நேரம் ஒதுக்கி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். ஒருவேளை, அப்பா-அம்மா யெகோவாவை வணங்காதவர்களாக இருந்தால் சபையில் இருக்கிற மூப்பர்கள் இதை அன்பாக சொல்லிக்கொடுக்க வேண்டும். (லூக்கா 14:27-30-ஐ வாசியுங்கள்.) ஒரு கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு ஆகும் செலவை முன்பே கணக்குப் போடுவது போல் இளம் பிள்ளைகளும் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே அதற்காக தயாராக வேண்டும். அப்போதுதான் அவர்கள் “முடிவுவரை” யெகோவாவுக்கு உண்மையாக இருப்பார்கள். (மத். 24:13) கடைசிவரை யெகோவாவை சேவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்க பிள்ளைகளுக்கு எது உதவும்? அதை இப்போது பார்க்கலாம்.

3. (அ) ஞானஸ்நானம் எடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இயேசுவும் பேதுருவும் சொன்னதிலிருந்து என்ன தெரிந்துகொள்ளலாம்? (மத். 28:19, 20; 1 பே. 3:21) (ஆ) இந்த கட்டுரையில் என்ன கேள்விகளுக்கு பதிலை பார்க்கப் போகிறோம், ஏன்?

3 இளம் பிள்ளைகளே, நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிகச்சிறந்த தீர்மானம் இதுதான். ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவதை நினைத்து நீங்கள் பெருமைப்படலாம்! அதுமட்டுமல்ல கிறிஸ்தவராக இருக்கிற ஒவ்வொருவரும் இந்த முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஏனென்றால் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பதற்கு இந்த தீர்மானத்தை எடுப்பது ரொம்ப அவசியம். (மத். 28:19, 20; 1 பே. 3:21) நீங்கள் கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையாக இருக்க ஆசைப்படுவதை ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமாக காட்டுவீர்கள். ஆனால், இந்த முக்கியமான தீர்மானத்தை எடுக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: (1) ஞானஸ்நானம் எடுக்குற அளவுக்கு எனக்கு முதிர்ச்சி இருக்கா? (2) நானா சொந்தமா இந்த தீர்மானத்தை எடுக்கிறேனா? (3) யெகோவாவுக்கு என்னை அர்ப்பணிக்கிறதுனா என்னனு எனக்கு தெரியுமா? இந்த கேள்விகளுக்கு இப்போது பதிலை பார்க்கலாம்.

ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு நான் முதிர்ச்சி அடைந்துவிட்டேனா?

4, 5. (அ) பெரியவர்கள் மட்டுமே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று ஏன் சொல்ல முடியாது? (ஆ) ஒருவர் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் என்பதை எதை வைத்து சொல்லலாம்?

4 பெரியவர்களான பிறகு அல்லது குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகுதான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்று பைபிள் சொல்லவில்லை. “சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையுமானவரா என்று சொல்லிவிடலாம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 20:11, பொது மொழிபெயர்ப்பு) அப்படியென்றால், எது சரி என்று புரிந்துகொண்டு பிள்ளைகளாலும் யெகோவாவுக்கு தங்களை அர்ப்பணிக்க முடியும். அதனால், முதிர்ச்சியுள்ள பிள்ளைகள் தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருந்தால் அவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது ரொம்ப ரொம்ப முக்கியமாக இருக்கிறது.—நீதி. 20:7.

5 ஒருவர் முதிர்ச்சியுள்ளவர் என்பதை எதை வைத்து சொல்லலாம்? ஒருவருடைய வயதையோ உடல் வளர்ச்சியையோ வைத்து எப்போதுமே அதை தீர்மானிக்க முடியாது. ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருப்பவர்களை’ முதிர்ச்சியுள்ளவர்கள் என்று பைபிள் சொல்கிறது. (எபி. 5:14) அப்படியென்றால், முதிர்ச்சியுள்ள ஒருவருக்கு எது சரி என்று தெரிவதோடு அதை செய்ய அவர் தீர்மானமாகவும் இருப்பார். தவறு செய்ய யாராவது அவரை தூண்டினாலும் அதை செய்ய மாட்டார். அதோடு, எது சரி என்று மற்றவர்கள் அவரிடம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் இருக்காது. அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுத்த பிள்ளைகள் தனியாக இருந்தாலும் எப்போதும் யெகோவாவுக்கு பிடித்ததையே செய்வார்கள் என்பதில் நம்பிக்கையோடு இருக்கலாம்.—பிலிப்பியர் 2:12-ஐ ஒப்பிடுங்கள்.

6, 7. (அ) பாபிலோனில் தானியேல் எப்படிப்பட்ட சவால்களை சந்தித்தார்? (ஆ) அவர் முதிர்ச்சியுள்ளவர் என்பதை எப்படி காட்டினார்?

6 இளம் பிள்ளைகளால் முதிர்ச்சியுள்ளவர்களாக நடந்துகொள்ள முடியுமா? தானியேலின் உதாரணத்தை கவனியுங்கள். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட சமயத்தில் அவர் ஒரு டீனேஜராக இருந்திருப்பார். திடீரென்று அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியது. அவருடைய அப்பா-அம்மா அவரோடு இல்லை, அவரை சுற்றியிருந்த எல்லாரும் பொய் கடவுளை வணங்கினார்கள். பாபிலோன் ராஜாவுக்கு சேவை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். அதனால் பாபிலோனில் இருந்தவர்கள் அவரை ரொம்ப விசேஷமாக கவனித்துக்கொண்டார்கள். (தானி. 1:3-5, 13) இஸ்ரவேலில் இருந்ததைவிட பாபிலோனில் தானியேலுக்கு நிறைய வசதி வாய்ப்புகள் இருந்தது.

7 அப்போது தானியேல் என்ன செய்தார்? புது இடத்துக்கு போனதால் தானியேல் மாறிவிட்டாரா? பாபிலோனியர்களுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்வதற்காக தன்னுடைய விசுவாசத்தையே விட்டுவிட்டாரா? இல்லவே இல்லை! பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட எதையும் செய்யக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ‘தன்னைத் தீட்டுப்படுத்த கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானமாக’ இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. (தானி. 1:8) இப்படி நடந்துகொண்டதன் மூலம் தானியேல் முதிர்ச்சியுள்ளவர் என்பதை காட்டினார்.

முதிர்ச்சியுள்ள இளம் பிள்ளைகள் ராஜ்ய மன்றத்தில் யெகோவாவுக்கு பிடித்த மாதிரியும் பள்ளியில் நண்பர்களுக்கு பிடித்த மாதிரியும் நடந்துகொள்ள மாட்டார்கள் (பாரா 8)

8. தானியேலிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

8 தானியேலிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? முதிர்ச்சியுள்ள இளம் பிள்ளைகள் எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையிலும் தங்களுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பச்சோந்தியை போல் இடத்துக்கு ஏற்ற மாதிரி மாறிவிட மாட்டார்கள். அதாவது, ராஜ்ய மன்றத்தில் யெகோவாவுக்கு பிடித்த மாதிரியும், பள்ளியில் நண்பர்களுக்கு பிடித்த மாதிரியும் நடந்துகொள்ள மாட்டார்கள். அதற்கு பதிலாக, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க தீர்மானமாக இருப்பார்கள்.எபேசியர் 4:14, 15-ஐ வாசியுங்கள்.

9, 10. (அ) சமீபத்தில் தங்களுக்கு வந்த சோதனையை எப்படி சமாளித்தார்கள் என்று இளம் பிள்ளைகள் யோசித்து பார்ப்பது ஏன் முக்கியம்? (ஆ) ஞானஸ்நானம் எடுப்பதன் மூலமாக நீங்கள் எதை தெரியப்படுத்துகிறீர்கள்?

9 சிறியவர்கள் பெரியவர்கள் என எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். (பிர. 7:20) இருந்தாலும் நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால், யெகோவாவுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிய நீங்கள் எந்தளவு தீர்மானமாக இருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். “இப்பெல்லாம் நான் யெகோவாவுக்கு கீழ்ப்படிஞ்சு நடக்கிறேனா?” என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். சமீபத்தில் உங்களுக்கு ஏதாவது சோதனை வந்தபோது நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அந்த சமயத்தில் யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? தன்னுடைய திறமைகளை பயன்படுத்தி பெரிய ஆளாக வரவேண்டும் என்று தானியேலை வற்புறுத்தியதை போலவே உங்களையும் மற்றவர்கள் வற்புறுத்துகிறார்களா? இந்த மாதிரி சோதனைகள் உங்களுக்கு வரும்போது யெகோவாவுக்கு எது பிடிக்கும் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?—எபே. 5:17.

10 இந்த கேள்விகளை ஏன் யோசித்து பார்க்க வேண்டும்? அப்படி யோசித்து பார்த்தால்தான் ஞானஸ்நானம் எவ்வளவு முக்கியமான தீர்மானம் என்பதை புரிந்துகொள்வீர்கள். ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் யெகோவாவுக்கு ஒரு முக்கியமான வாக்குக் கொடுத்ததை மற்றவர்கள் தெரிந்துகொள்வார்கள். அதாவது, யெகோவாவை நீங்கள் எப்போதும் நேசிப்பீர்கள், கடைசிவரை அவரை முழு மனதோடு சேவிப்பீர்கள் என்று வாக்குக் கொடுத்ததைத் தெரிந்துகொள்வார்கள். (மாற். 12:30) ஞானஸ்நானம் எடுத்த எல்லாருமே கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தீர்மானமாக இருக்க வேண்டும்.பிரசங்கி 5:4, 5-ஐ வாசியுங்கள்.

இது உங்கள் சொந்த தீர்மானமா?

11, 12. (அ) ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறவர்கள் எதை யோசித்துப் பார்க்க வேண்டும்? (ஆ) ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள எது உதவும்?

11 பிள்ளைகள் பெரியவர்கள் என எல்லாருமே யெகோவாவை ‘மனப்பூர்வமாக’ சேவிப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (சங். 110:3) அப்படியென்றால் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறவர்கள் இந்த தீர்மானத்தை அவர்களே சொந்தமாக எடுக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறீர்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதுவும் நீங்கள் யெகோவாவை வணங்கும் பெற்றோரால் வளர்க்கப்பட்டிருந்தால் இப்படி யோசித்துப் பார்ப்பது ரொம்ப முக்கியம்.

12 நிறையப் பேர் ஞானஸ்நானம் எடுத்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் நண்பர்களும் கூடப்பிறந்தவர்களும் ஞானஸ்நானம் எடுத்ததையும் பார்த்திருப்பீர்கள். மற்றவர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பதற்காகவோ ஒரு குறிப்பிட்ட வயதில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்பதற்காகவோ நீங்களும் எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள் எப்படி தெரிந்துகொள்ளலாம்? அதற்கு, ஞானஸ்நானம் ஏன் ரொம்ப முக்கியம் என்று நிதானமாக யோசித்து பாருங்கள். அதைப் புரிந்துகொள்ள இந்த கட்டுரையும் அடுத்த கட்டுரையும் உங்களுக்கு உதவும்.

13. நீங்களே விருப்பப்பட்டுதான் ஞானஸ்நானம் எடுக்கிறீர்கள் என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

13 இந்த தீர்மானத்தை நீங்களே சொந்தமாக எடுக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் செய்கிற ஜெபம் எப்படி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். ஒருநாளில் எத்தனை முறை ஜெபம் செய்கிறீர்கள்? எதற்காக எல்லாம் நீங்கள் ஜெபம் செய்கிறீர்கள்? இந்த கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதிலை வைத்து யெகோவாவோடு நீங்கள் எந்தளவு நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும். (சங். 25:4) நிறைய சமயங்களில் யெகோவா நம் ஜெபங்களுக்கு பைபிள் மூலமாக பதில் சொல்கிறார். பைபிளை படிக்க நீங்கள் எடுக்கும் முயற்சியை வைத்து யெகோவாவிடம் நெருங்கி போகவும் அவரை முழு மனதோடு சேவிக்கவும் நீங்கள் உண்மையிலேயே ஆசைப்படுகிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள முடியும். (யோசு. 1:8) ‘பைபிளை நான் தவறாம படிக்கிறேனா? குடும்ப வழிபாட்டுல நான் உற்சாகமா கலந்துக்கிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். ஞானஸ்நானம் எடுப்பது உங்களுடைய சொந்த தீர்மானமா என்பதை தெரிந்துகொள்ள இந்த கேள்விகள் உங்களுக்கு உதவும்.

அர்ப்பணிப்பது என்றால் என்ன?

14. ஞானஸ்நானத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் என்ன வித்தியாசம்?

14 சில இளம் பிள்ளைகளுக்கு அர்ப்பணிப்புக்கும் ஞானஸ்நானத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. ‘நான் ஏற்கெனவே யெகோவாவுக்கு என்னை அர்ப்பணிச்சிட்டேன். ஆனா ஞானஸ்நானம் எடுக்க நான் இன்னும் தயாரா இல்ல’ என்று சிலர் சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்வது சரியாக இருக்குமா? நிச்சயம் இருக்காது. ஏனென்றால், யெகோவாவை என்றென்றும் சேவிப்பதாக ஜெபத்தில் வாக்குக் கொடுப்பதுதான் அர்ப்பணிப்பு. இந்த வாக்கை நீங்கள் ஏற்கெனவே யெகோவாவுக்கு கொடுத்துவிட்டீர்கள் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதுதான் ஞானஸ்நானம். அதனால் நீங்கள் ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே அர்ப்பணிப்பதன் அர்த்தத்தை தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

15. அர்ப்பணிப்பு என்றால் என்ன?

15 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்கும்போது நீங்கள் இனிமேல் அவருக்குத்தான் சொந்தம் என்று அவரிடம் சொல்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதாக அவருக்கு வாக்குக் கொடுக்கிறீர்கள். (மத்தேயு 16:24-ஐ வாசியுங்கள்.) கொடுத்த வாக்கை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. (மத். 5:33) அப்படியென்றால், நீங்கள் இனிமேல் உங்களுக்காக வாழாமல் யெகோவாவுக்காக வாழ்வீர்கள் என்பதை எப்படி காட்டலாம்?—ரோ. 14:8.

16, 17. (அ) அர்ப்பணிப்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள்? (ஆ) யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

16 இந்த உதாரணத்தை கவனியுங்கள்: உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு காரை பரிசாகக் கொடுக்கிறார். காரின் டாக்குமென்டை எல்லாம் உங்களிடம் கொடுத்துவிட்டு, ‘இந்த கார் உனக்குத்தான். ஆனா, கார் சாவியை மட்டும் நானே வைச்சிக்கிறேன். நான்தான் காரை ஓட்டுவேன்’ என்று சொல்கிறார். அப்போது, அவர் கொடுத்த பரிசைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அந்த நண்பரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?

17 ஒருவர் யெகோவாவுக்கு தன்னை அர்ப்பணிக்கும்போது அவர் யெகோவாவிடம், ‘நான் என்னையே உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இனி நான் உங்களுக்குத்தான் சொந்தம்’ என்று வாக்குக் கொடுக்கிறார். கொடுத்த வாக்கை அவர் காப்பாற்ற வேண்டும் என்றுதான் யெகோவா எதிர்பார்க்கிறார். ஆனால், யெகோவாவை வணங்காத ஒருவரை அவர் ரகசியமாக காதலித்தால்... ஊழியத்தையும் கூட்டத்தையும் அடிக்கடி தவறவிடுகிற வேலையை தேர்ந்தெடுத்தால்... கொடுத்த வாக்கைக் காப்பாற்றுகிறார் என்று சொல்ல முடியுமா? கார் சாவியை தன்னிடம் வைத்துக்கொண்ட நண்பனைப் போல்தான் அவர் இருப்பார். நம்மை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும்போது, ‘இனி நான் உங்களுக்குத்தான் சொந்தம்’ என்று சொல்கிறோம். அதனால் நமக்கு பிடித்ததை செய்வதைவிட யெகோவாவுக்கு பிடித்ததைத்தான் எப்போதும் செய்ய வேண்டும். அப்படி செய்தால், “என்னுடைய சித்தத்தைச் செய்வதற்கு அல்ல, என்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்வதற்கே பரலோகத்திலிருந்து நான் இறங்கி வந்திருக்கிறேன்” என்று சொன்ன இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுவோம்.—யோவா. 6:38.

18, 19. (அ) ஞானஸ்நானம் எடுப்பது ஒரு பெரிய பாக்கியம் என்று ரோஸ் மற்றும் கிறிஸ்டோபரின் அனுபவத்திலிருந்து எப்படி தெரிந்துகொள்கிறோம்? (ஆ) ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

18 இதுவரை பார்த்ததிலிருந்து, ஞானஸ்நானம் ஒரு முக்கியமான தீர்மானம் என்பது தெளிவாக தெரிகிறது. யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பது ஒரு பெரிய பாக்கியம். யெகோவாவை நேசிக்கும் இளம் பிள்ளைகள் அர்ப்பணிப்பின் அர்த்தத்தை புரிந்துகொள்ளும்போது யெகோவாவுக்கு தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். ஞானஸ்நானம் எடுத்ததை நினைத்து அவர்கள் வருத்தப்படுவதில்லை. ரோஸ் என்ற டீனேஜர் இப்படி சொல்கிறார்: “யெகோவாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். யெகோவாவை சேவிக்கிறதைவிட வேற எதுலயும் எனக்கு இந்தளவு சந்தோஷம் கிடைச்சிருக்காது. இதுதான் என் வாழ்க்கையிலயே நான் எடுத்த நல்ல தீர்மானம்!”

19 ஆரம்பத்தில் பார்த்த கிறிஸ்டோபர், 12 வயதில் ஞானஸ்நானம் எடுத்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறார். 17 வயதில் அவர் ஒழுங்கான பயனியரானார். 18 வயதில் உதவி ஊழியரானார். இப்போது பெத்தேலில் சேவை செய்கிறார். அவர் சொல்கிறார், “ஞானஸ்நானம் எடுத்தது ஒரு நல்ல தீர்மானம்னு சொல்லுவேன். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் வேலை செய்றது எனக்கு ரொம்ப சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கு.” நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கு எப்படி தயாராகலாம்? அதை பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.