Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?

இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?

“என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்.”—சங். 40:8.

பாடல்கள்: 51, 58

1, 2. (அ) ஞானஸ்நானம் ஒரு முக்கியமான தீர்மானம் என்று ஏன் சொல்லலாம்? விளக்குங்கள். (ஆ) ஞானஸ்நானம் எடுக்க நினைக்கும் ஒருவர் எதை நன்றாக புரிந்துவைத்திருக்க வேண்டும், ஏன்?

நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படும் ஒரு இளம் பிள்ளையா? அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதை நீங்கள் பெரிய பாக்கியமாக நினைக்கலாம். அது ஒரு முக்கியமான தீர்மானம் என்று போன கட்டுரையில் பார்த்தோம். ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் நீங்கள் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறீர்கள். அதாவது, நீங்கள் இனி யெகோவாவுக்கு என்றென்றும் சேவை செய்வீர்கள்... அவருடைய விருப்பத்தை செய்வதுதான் உங்களுக்கு ரொம்ப முக்கியம்... என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்துகிறீர்கள். ஞானஸ்நானம் என்பது ஒரு முக்கியமான தீர்மானமாக இருக்கிறது. அதனால், இந்த தீர்மானத்தை எடுக்கும் பக்குவம் உங்களுக்கு வந்த பிறகுதான் நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். நீங்களாகவே ஆசைப்பட்டு அதைச் செய்ய வேண்டும். அதோடு, அர்ப்பணிப்பது என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துவைத்திருக்க வேண்டும்.

2 சிலசமயம் ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாராக இல்லை என்று நினைக்கலாம். ஒருவேளை நீங்கள் தயாராக இருந்தாலும் உங்கள் அப்பா-அம்மா, நீங்கள் இன்னும் வளர வேண்டும்... உங்களுக்கு நிறைய அனுபவம் வேண்டும்... என்று நினைக்கலாம். அப்போது என்ன செய்யலாம்? சோர்ந்துவிடாதீர்கள்! அதற்கு பதிலாக ஞானஸ்நானம் எடுப்பதற்கு தேவையான தகுதிகளை அந்த சமயத்தில் வளர்த்துக்கொள்ளுங்கள். அப்போது சீக்கிரத்தில் உங்களால் ஞானஸ்நானம் எடுக்க முடியும். அதற்கு நீங்கள் 3 விஷயங்களைச் செய்யலாம். (1) உங்கள் நம்பிக்கைகளில், (2) உங்கள் செயலில், (3) நன்றிகாட்டும் விஷயத்தில் முன்னேற்றம் செய்யலாம்.

உங்கள் நம்பிக்கைகள்

3, 4. தீமோத்தேயுவின் உதாரணத்தில் இருந்து இளம் பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

3 இங்கு இருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் எப்படிப் பதில் சொல்வீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்: ‘கடவுள் இருக்குறார்னு நான் எதை வைச்சு நம்புறேன்? பைபிளை கடவுள்தான் கொடுத்தார்னு நான் ஏன் நம்புறேன்? ஒழுக்க விஷயத்துல இந்த உலகத்துல இருக்கிறவங்களை மாதிரி இல்லாம நான் ஏன் கடவுளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கேன்?’ இந்த கேள்விகளை கேட்டுக்கொண்டால் அப்போஸ்தலன் பவுல் சொன்னது போல், “நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்.” (ரோ. 12:2) ஆனால், நீங்கள் ஏன் இதைச் செய்ய வேண்டும்?

4 தீமோத்தேயுவின் உதாரணம் அதற்கு உதவியாக இருக்கும். அவருடைய அம்மாவும் பாட்டியும் அவருக்கு “சிசுப் பருவத்திலிருந்தே” பைபிளிலுள்ள உண்மைகளை சொல்லிக்கொடுத்தார்கள். அதனால் அவருக்கு பைபிளைப் பற்றி நன்றாக தெரியும். இருந்தாலும் பவுல் தீமோத்தேயுவிடம், “பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி” என்று சொன்னார். (2 தீ. 3:14, 15) அதனால், கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாம் உண்மை என்று தீமோத்தேயுவே உறுதியாக நம்ப வேண்டியிருந்தது. அதைத்தான் தீமோத்தேயு செய்தார். அம்மாவும் பாட்டியும் சொன்னதால் அல்ல, அதையெல்லாம் நம்புவதற்கு நல்ல காரணங்களை அவரே யோசித்து பார்த்ததால் அதை நம்பினார்.ரோமர் 12:1-ஐ வாசியுங்கள்.

5, 6. சின்ன வயதில் இருந்தே “சிந்திக்கும் திறனை” பயன்படுத்த கற்றுக்கொள்வது ஏன் முக்கியம்?

5 உங்களைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பைபிளில் இருக்கும் உண்மைகளை நீங்கள் ரொம்ப வருஷங்களாக தெரிந்துவைத்திருக்கலாம். அப்படியென்றால், அதையெல்லாம் நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்தால் உங்கள் விசுவாசம் இன்னும் பலமாகும். அதோடு, நண்பர்களின் தொல்லைகளுக்கு... இந்த உலகம் சொல்லும் கருத்துக்களுக்கு... உங்கள் சொந்த ஆசைகளுக்கு... இணங்கிவிட மாட்டீர்கள்.

6 சின்ன வயதில் இருந்தே உங்கள் “சிந்திக்கும் திறனை” பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொண்டால், நண்பர்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியும்: ‘கடவுள் இருக்குறார்னு உனக்கு எப்படி தெரியும்? கடவுளுக்கு நம்ம மேல அன்பு இருந்தா நாம கஷ்டப்படுறத ஏன் பார்த்திட்டு இருக்கார்? கடவுளுக்கு ஒரு ஆரம்பமே இல்லனு எப்படி சொல்ற?’ பதில் சொல்ல நீங்கள் தயாராக இருந்தால், நீங்கள் நம்பும் விஷயத்தைப் பற்றி சந்தேகப்பட மாட்டீர்கள். அதற்கு பதிலாக, பைபிளில் இருக்கும் விஷயங்களை இன்னும் ஆராய்ச்சி செய்து படிக்க ஆசைப்படுவீர்கள்.

7-9. வெப்சைட்டில் இருக்கும் “பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?” என்ற ஸ்டடி கைடுகள் உங்கள் நம்பிக்கையை பலப்படுத்த எப்படி உதவும்?

7 நன்கு ஆராய்ச்சி செய்து படித்தால் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியும், உங்கள் நம்பிக்கை இன்னும் பலப்படும், நீங்கள் நம்பும் விஷயங்களை சந்தேகப்படவும் மாட்டீர்கள். (அப். 17:11) இந்த விஷயத்தில் நமக்கு உதவி செய்ய நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிற்றேடும், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகமும் நிறையப் பேருக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது. அதோடு, jw.org-ல் இருக்கும் “பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?” (ஆங்கிலம்) என்ற ஸ்டடி கைடுகள் (study guides) நிறைய பேருக்கு பிரயோஜனமாக இருக்கிறது. பைபிள் டீச்சிங்ஸ் > டீனேஜர்ஸ் என்ற தலைப்பில் அதை நீங்கள் பார்க்கலாம். பைபிளில் இருந்து நீங்கள் தெரிந்துகொள்ளும் விஷயங்களை உறுதியாக நம்புவதற்கு இந்த ஸ்டடி கைடுகள் உதவியாக இருக்கும்.

8 நீங்கள் பைபிளை நன்றாக படிப்பதால் ஸ்டடி கைடுகளில் இருக்கும் சில கேள்விகளுக்கு ஏற்கெனவே உங்களுக்கு பதில் தெரிந்திருக்கலாம். ஆனால், அந்த பதிலெல்லாம் சரி என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? நிறைய வசனங்களை யோசித்துப் பார்க்கவும், அதை ஏன் நீங்கள் நம்புகிறீர்கள் என்பதை எழுதவும் ஸ்டடி கைடுகள் உங்களுக்கு உதவும். உங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு விளக்குவதற்கு இது உங்களுக்கு உதவும். உங்களுக்கு இன்டர்நெட் வசதியிருந்தால் வெப்சைட்டில் இருக்கும் “பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?” என்ற ஸ்டடி கைடுகளை ஆராய்ச்சி செய்து படித்து பாருங்கள். அப்போது உங்கள் நம்பிக்கை இன்னும் பலமாகும்.

9 பைபிளில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் உண்மை என்று உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஞானஸ்நானம் எடுக்க உங்களால் தயாராக முடியும். ஒரு டீனேஜ் சகோதரி இப்படிச் சொன்னார்: “நான் ஞானஸ்நானம் எடுக்குறதுக்கு முன்னாடி பைபிளை நல்லா படிச்சேன். இதுதான் உண்மையான மதம்னு தெரிஞ்சுக்கிட்டேன். இந்த நம்பிக்கை எனக்கு நாளுக்கு நாள் பலமாகுது.”

உங்கள் செயல்கள்

10. ஞானஸ்நானம் எடுத்த ஒருவர் விசுவாசத்தை செயலில் காட்டுவார் என்று ஏன் எதிர்பார்க்கலாம்?

10 “விசுவாசம் செயல்களில் காட்டப்படவில்லை என்றால், அது செத்ததாயிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 2:17) உங்களுக்கு உறுதியான விசுவாசம் இருந்தால் அதை நீங்கள் செயலில் காட்டுவீர்கள். பைபிள் சொல்கிறபடி “பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும்” இருப்பீர்கள்.2 பேதுரு 3:11-ஐ வாசியுங்கள்.

11. “பரிசுத்த நடத்தை” என்பது எதைக் குறிக்கிறது?

11 “பரிசுத்த நடத்தை” என்பது ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருப்பதை குறிக்கிறது. இந்த விஷயத்தில் கடந்த 6 மாதமாக நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். தவறு செய்ய தூண்டப்பட்டபோது எது சரி எது தவறு என்று உங்களால் யோசித்து முடிவெடுக்க முடிந்ததா? (எபி. 5:14) தவறு செய்ய யாராவது உங்களைக் கட்டாயப்படுத்தினாலும் அதைச் செய்ய கூடாது என்று நீங்கள் தீர்மானமாக இருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? பள்ளியில் நீங்கள் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருந்தீர்களா? கூடப்படிப்பவர்கள் கேலி செய்ய கூடாது என்பதற்காக அவர்களை போலவே நடந்துகொண்டீர்களா, அல்லது யெகோவாவுக்கு உண்மையாக இருந்தீர்களா? (1 பே. 4:3, 4) நாம் எல்லாருமே தவறு செய்பவர்கள்தான். அதனால் யெகோவாவை பல வருஷங்களாக சேவிக்கும் சிலர்கூட தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி சொல்ல கூச்சப்படலாம். ஆனால், யெகோவாவுக்கு தன்னை அர்ப்பணித்த ஒருவர் யெகோவாவின் சாட்சியாக இருப்பதை நினைத்து பெருமைப்படுவார். யெகோவாவுக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்வதன் மூலம் அதைக் காட்டுவார்.

12. எதையெல்லாம் ‘தேவபக்திக்குரிய செயல்கள்’ என்று சொல்லலாம்? அந்த செயல்களை செய்வதைப் பற்றி நீங்கள் எப்படி உணர வேண்டும்?

12 சபை கூட்டங்களிலும் ஊழியத்திலும் தவறாமல் கலந்துகொள்வதை ‘தேவபக்திக்குரிய செயல்கள்’ என்று சொல்லலாம். அதோடு, யாரும் கவனிக்கவில்லை என்றாலும் ஜெபம் செய்வது, பைபிளை ஆராய்ச்சி செய்து படிப்பது போன்ற விஷயங்களும் ‘தேவபக்திக்குரிய செயல்கள்’ என்று சொல்லலாம். யெகோவாவுக்கு தன்னை அர்ப்பணித்த ஒருவருக்கு இதையெல்லாம் செய்வது கஷ்டமாக இருக்காது. “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று தாவீது உணர்ந்ததைப் போலவே அவரும் உணர்வார்.—சங். 40:8.

13, 14. ‘தேவபக்திக்குரிய செயல்களைச் செய்ய’ எது உங்களுக்கு உதவும்? சில இளம் பிள்ளைகளுக்கு ‘ஒர்க் ஷீட்’ எப்படி உதவியாக இருந்திருக்கிறது?

13 இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், பகுதி-2-ல் (ஆங்கிலம்) பக்கம் 308, 309-ல் இருக்கும் ‘ஒர்க் ஷீட்’ (worksheet) சில குறிக்கோள்களை வைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். பின்வரும் கேள்விகளுக்கு நீங்கள் அதில் பதில்களை எழுதலாம்: “உங்கள் ஜெபங்கள் எப்படி இருக்கிறது, யெகோவாமீது உங்களுக்கு இருக்கும் அன்பை உங்கள் ஜெபங்கள் காட்டுகிறதா? தனிப்பட்ட படிப்பில் நீங்கள் என்ன விஷயங்களை படிக்கிறீர்கள்? ஊழியத்துக்கு உங்கள் அப்பா-அம்மா போகவில்லை என்றாலும் நீங்கள் போகிறீர்களா?” இந்த விஷயங்களில் நீங்கள் ஏதாவது முன்னேற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதை எழுதி வைக்க அந்த ‘ஒர்க் ஷீட்டில்’ இடம் இருக்கிறது.

14 ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுகிற நிறையப் பேருக்கு இந்த ‘ஒர்க் ஷீட்’ ரொம்ப பிரயோஜனமாக இருந்திருக்கிறது. டில்டா என்ற இளம் சகோதரி சொல்கிறாள், “அந்த ‘ஒர்க் ஷீட்டை’ பயன்படுத்தி நான் சில குறிக்கோள்களை வைச்சேன். அதுல ஒவ்வொரு குறிக்கோளா அடைஞ்சேன். அதனால ஒரு வருஷத்துலயே ஞானஸ்நானம் எடுக்க நான் தயாரானேன்.” இதே மாதிரி உணர்ந்த பாட்ரிக் என்ற இளம் சகோதரர் சொல்கிறார், “எதெல்லாம் என்னோட குறிக்கோள்னு எனக்கு நல்லா தெரியும். இருந்தாலும் அதை நான் எழுதி வைச்சதுனாலதான் அதை அடைய என்னால கடினமா உழைக்க முடிஞ்சுது.”

யெகோவாவை சேவிப்பதை அப்பா-அம்மா நிறுத்திவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து சேவிப்பீர்களா? (பாரா 15)

15. ஞானஸ்நானம் எடுப்பது ஏன் உங்கள் சொந்த தீர்மானமாக இருக்க வேண்டும்?

15 அந்த ‘ஒர்க் ஷீட்டில்’ இப்படி ஒரு கேள்வி இருக்கிறது: “உங்கள் அப்பா-அம்மாவோ நண்பர்களோ யெகோவாவை சேவிப்பதை நிறுத்திவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து யெகோவாவை சேவிப்பீர்களா?” யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் யெகோவாவோடு நெருங்கிய நட்பை அனுபவிப்பீர்கள். அதனால், அப்பா-அம்மாவோ மற்றவர்களோ சொல்வதால் நீங்கள் யெகோவாவுக்கு சேவை செய்யக் கூடாது. உங்களுடைய பரிசுத்த நடத்தையும் தேவபக்திக்குரிய செயல்களும், நீங்கள் யெகோவாவுக்கு பிடித்ததைச் செய்ய ஆசைப்படுகிறீர்கள்... தெரிந்துகொண்ட விஷயங்களை உறுதியாக நம்புகிறீர்கள்... என்பதைக் காட்ட வேண்டும். அப்போது, சீக்கிரத்தில் ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயாராகிவிடுவீர்கள்.

நன்றியோடு இருங்கள்

16, 17. (அ) கிறிஸ்தவராவதற்கு ஒருவரை எது தூண்ட வேண்டும்? (ஆ) மீட்புப் பலிக்காக எப்படி நன்றியோடு இருக்கலாம் என்பதற்கு உதாரணம் கொடுங்கள்.

16 திருச்சட்டத்தை நன்றாக தெரிந்த ஒருவன் இயேசுவிடம், “திருச்சட்டத்தில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டான். அதற்கு அவர், “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று சொன்னார். (மத். 22:35-37) யெகோவாமீது இருக்கும் அன்புதான் ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கும், கிறிஸ்தவராக ஆவதற்கும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்று இயேசு விளக்கினார். யெகோவாமீது உங்களுக்கு இருக்கும் அன்பு இன்னும் அதிகமாக வேண்டுமென்றால் அவர் கொடுத்த மிகச்சிறந்த பரிசான மீட்புப் பலியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். (2 கொரிந்தியர் 5:14, 15; 1 யோவான் 4:9, 19-ஐ வாசியுங்கள்.) அப்படி யோசித்தால், அந்த பரிசைக் கொடுத்த யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க ஆசைப்படுவீர்கள்.

17 மீட்புப் பலிக்காக நன்றியோடு இருப்பதை இப்படி விளக்கலாம்: நீங்கள் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருப்பதாக கொஞ்சம் கற்பனை செய்யுங்கள். அப்போது யாரோ ஒருவர் உங்கள் உயிரை காப்பாற்றுகிறார். நீங்கள் கரைக்கு வந்தவுடன் உங்கள் கை-கால்களை துடைத்துவிட்டு அப்படியே வீட்டுக்கு போய்விடுவீர்களா? நிச்சயம் அப்படி போக மாட்டீர்கள்! உங்கள் உயிரை காப்பாற்றிய அந்த நபருக்கு நீங்கள் ரொம்பவே நன்றியோடு இருப்பீர்கள். அவர் செய்த உதவியை சாகும்வரை மறக்க மாட்டீர்கள். அதேபோல்தான் மீட்புப் பலிக்காக நாம் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் சாகும்வரை நன்றியோடு இருக்க வேண்டும். பாவத்தில் இருந்தும் மரணத்தில் இருந்தும் அவர்கள் நம்மை காப்பாற்றியிருக்கிறார்கள். பூஞ்சோலை பூமியில் நாம் வாழப்போவதற்கு காரணமே அவர்கள் நம்மீது காட்டிய அன்புதான்!

18, 19. (அ) யெகோவாவுக்கு பிடித்த மாதிரி இருப்பதை நினைத்து நீங்கள் ஏன் பயப்பட தேவையில்லை? (ஆ) யெகோவாவை சேவித்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எப்படிச் சொல்லலாம்?

18 யெகோவா உங்களுக்கு செய்த எல்லாவற்றுக்கும் நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுங்கள். அர்ப்பணிப்பதன் மூலமாக நீங்கள் எப்போதும் யெகோவா விரும்புவதை செய்வீர்கள் என்று வாக்குக் கொடுக்கிறீர்கள். அப்படி வாக்குக் கொடுக்க நீங்கள் பயப்பட வேண்டாம்! உங்களுக்கு எது சிறந்தது என்று யெகோவாவுக்கு நன்றாக தெரியும். அவருடைய விருப்பத்தை செய்கிறவர்களை அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார். (எபி. 11:6) அவருக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தால் உங்கள் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். டீனேஜ் வயதை எட்டுவதற்கு முன்பே ஞானஸ்நானம் எடுத்த 24 வயது சகோதரர் சொல்கிறார், “நான் பெரியவனானதுக்கு அப்புறம் ஞானஸ்நானம் எடுத்திருந்தா பைபிளை இன்னும் ஆழமா புரிஞ்சிக்க முடிஞ்சிருக்கும். ஆனா, நான் சின்ன வயசுலயே ஞானஸ்நானம் எடுத்ததுனாலதான் இந்த உலக ஆசைகள்ல இருந்து என்னை பாதுகாத்துக்க முடிஞ்சது.”

19 உங்களுக்கு எப்போதும் சிறந்ததை யெகோவா கொடுப்பார். ஆனால், சாத்தான் அப்படி இல்லை. அவன் சுயநலக்காரன், அவனுக்கு உங்கள்மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லை. நீங்கள் அவனுக்கு பிடித்ததை செய்தாலும் அவனால் உங்களுக்கு எந்த நல்லதும் செய்ய முடியாது. ஏனென்றால் அவனிடம் எந்த நல்லதும் கிடையாது! அவனுக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லை. அவனுக்கு அழிவுதான் காத்துக்கொண்டிருக்கிறது. அவனை நம்புகிறவர்களுக்கும் அழிவுதான் கிடைக்கப் போகிறது.—வெளி. 20:10.

20. அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க ஒரு இளம் பிள்ளை என்ன செய்யலாம்? (“ நீங்கள் முன்னேற்றம் செய்ய...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

20 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதுதான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் சரியான தீர்மானமாக இருக்கும். அதைச் செய்ய நீங்கள் தயாரா? அப்படித் தயாராக இருந்தால் அதைச் செய்ய நீங்கள் தயங்காதீர்கள். தயாராக இல்லை என்றால் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை செய்து பாருங்கள். பிலிப்பியில் இருந்த சகோதரர்களை தொடர்ந்து முன்னேற்றம் செய்யும்படி பவுல் உற்சாகப்படுத்தினார். (பிலி. 3:16) நீங்களும் அப்படிச் செய்தால் சீக்கிரத்தில் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பீர்கள்.