Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவா அவருடைய மக்களை வழிநடத்துகிறார்

யெகோவா அவருடைய மக்களை வழிநடத்துகிறார்

“வழி இதுவே, இதிலே நடவுங்கள்.”—ஏசா. 30:21.

பாடல்கள்: 65, 48

1, 2. (அ) எந்த எச்சரிப்பு நிறைய பேரின் உயிரை பாதுகாத்தது? (ஆரம்பப் படம்) (ஆ) கடவுள் எப்படி அவருடைய மக்களை வழிநடத்துகிறார்?

கிட்டத்தட்ட 100 வருஷங்களாக, வட அமெரிக்காவில் ரயில் பாதைகளைக் கடக்கும் இடங்களில் “நில், பார், கவனி” என்ற வார்த்தைகள் பெரிய எச்சரிப்பு பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது. எதற்காக? ரயில் பாதைகளை கடக்கும் வண்டிகள், வேகமாக வரும் ரயிலில் மோதிவிடாமல் இருப்பதற்காக அப்படி எழுதியிருந்தார்கள். இந்த எச்சரிப்புக்கு கீழ்ப்படிந்த நிறையப் பேர் உயிர் தப்பினார்கள்.

2 இதுபோன்ற எச்சரிப்பு பலகைகளை எல்லாம் யெகோவா பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக நாம் ஆபத்திலிருந்து தப்பிக்கவும், முடிவில்லா வாழ்க்கையை அனுபவிக்கவும் அவர் நமக்கு ஆலோசனைகளைக் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, ஒரு அன்பான மேய்ப்பனைப் போல் யெகோவா அவருடைய மக்களை வழிநடத்துகிறார். ஆபத்தான பாதையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க எச்சரிப்புகளைக் கொடுக்கிறார்.ஏசாயா 30:20, 21-ஐ வாசியுங்கள்.

யெகோவா எப்போதுமே வழிநடத்தியிருக்கிறார்

3. மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?

3 மனிதர்களைப் படைத்த சமயத்திலிருந்தே யெகோவா அவர்களுக்கு தெளிவான ஆலோசனைகளை கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, ஏதேன் தோட்டத்தில் யெகோவா சில கட்டளைகளை கொடுத்தார். அதற்கு கீழ்ப்படிந்திருந்தால் மனிதர்கள் சாவில்லாமல் என்றென்றும் சந்தோஷமாக வாழ்ந்திருப்பார்கள். (ஆதி. 2:15-17) ஆனால், ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. சாதாரண ஒரு பாம்பு மூலமாக வந்த ஆலோசனையை ஏவாள் கேட்டாள். ஆதாமும் தன் மனைவியின் பேச்சைக் கேட்டான். அதனால் இரண்டு பேரும் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள், கடைசியில் இறந்தே போனார்கள். அவர்கள் செய்த தவறினால் மனிதர்கள் எல்லாரும் சாகிறார்கள்.

4. (அ) பெருவெள்ளத்துக்கு பிறகு மனிதர்களுக்கு ஏன் இன்னும் சில வழிநடத்துதல்கள் தேவைப்பட்டது? (ஆ) அந்த வழிநடத்துதல்களில் இருந்து கடவுளைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

4 உயிர்களை காப்பாற்றுவதற்கு தேவையான ஆலோசனைகளை யெகோவா நோவாவுக்கு கொடுத்தார். பெருவெள்ளத்துக்கு பிறகு, மக்கள் ரத்தத்தை சாப்பிடக் கூடாது என்ற புதிய கட்டளையை கொடுத்தார். ஏன்? அந்த சமயத்தில் இருந்துதான் யெகோவா அவர்களிடம் மிருகங்களை சாப்பிடலாம் என்று சொன்னார். அவர்களுடைய சூழ்நிலை மாறியதால் அதற்கு ஏற்ற வழிநடத்துதல்கள் தேவைப்பட்டது. அதனால்தான் “மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்” என்ற கட்டளையைக் கொடுத்தார். (ஆதி. 9:1-4) உயிரை கடவுள் எப்படி பார்க்கிறார் என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லாருக்கும் உயிர் கொடுத்தது கடவுள் என்பதால் நம் உயிர் அவருக்குத்தான் சொந்தம். அதனால் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான ஆலோசனைகளை கொடுக்கும் உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு மனுஷன் மற்றொரு மனுஷனை கொலை செய்ய கூடாது என்ற கட்டளையை யெகோவா கொடுத்தார். உயிரையும் ரத்தத்தையும் கடவுள் புனிதமாக பார்க்கிறார், அதன் புனிதத்தைக் கெடுக்கும் விதத்தில் நடந்துகொள்பவர்களை அவர் தண்டிப்பார்.—ஆதி. 9:5, 6.

5. நாம் எதைப் பற்றி பார்க்கப் போகிறோம், ஏன்?

5 நோவாவின் காலத்துக்கு பிறகும் யெகோவா தொடர்ந்து மக்களுக்கு வழிநடத்துதல்களை கொடுத்து வந்தார். அவர் எப்படி வழிநடத்தினார் என்பதற்கு சில உதாரணங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். புதிய உலகத்தில் யெகோவா கொடுக்கும் ஆலோசனைகளுக்கு கீழ்ப்படிவதில் உறுதியாக இருக்க இந்த கட்டுரை நமக்கு உதவும்.

புதிய தேசம், புதிய சட்டங்கள்

6. இஸ்ரவேல் ஜனங்களுக்கு கடவுள் ஏன் திருச்சட்டத்தை கொடுத்தார், இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

6 மோசே வாழ்ந்த காலத்திலும் யெகோவா தெளிவான ஆலோசனைகளைக் கொடுத்தார். மக்கள் எப்படி வாழ வேண்டும், தன்னை எப்படி வணங்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார். ஏன்? சூழ்நிலை மாறியதால் அந்த ஆலோசனைகளைக் கொடுத்தார். 200 வருஷங்களுக்கு மேல் இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள். அவர்களை சுற்றியிருந்தவர்கள் சிலைகளையும் இறந்தவர்களையும் வணங்கினார்கள், யெகோவாவுக்கு பிடிக்காத இன்னும் நிறைய விஷயங்களை செய்தார்கள். அதனால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையான பிறகு அவர்களுக்கு புதிய வழிநடத்துதல்கள் தேவைப்பட்டது. அவர்கள் இனிமேல் அடிமைகளாக இல்லாமல் ஒரு தேசமாக இருந்து யெகோவாவின் சட்டங்களை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. “சட்டம்” என்ற எபிரெய வார்த்தை “வழிநடத்துதல், ஆலோசனை, வழிகாட்டி” என்ற அர்த்தத்தை தருவதாக சில ஆராய்ச்சி புத்தகங்கள் சொல்கின்றன. ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையிலும் பொய் மதத்திலும் ஊறிப்போயிருந்த மற்ற நாட்டு மக்களால் கறைபடாமல் இருக்க திருச்சட்டம் இஸ்ரவேலர்களுக்கு உதவியது. இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தபோது அவருடைய ஆசீர்வாதத்தை அவர்கள் அனுபவித்தார்கள். ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமல் போனபோது மோசமான கஷ்டங்களை அனுபவித்தார்கள்.உபாகமம் 28:1, 2, 15-ஐ வாசியுங்கள்.

7. (அ) யெகோவா அவருடைய மக்களுக்கு வழிநடத்துதல்களை கொடுத்ததற்கு இன்னொரு காரணத்தை சொல்லுங்கள்? (ஆ) திருச்சட்டம் எப்படி ஒரு “ஆசானாக” இருந்தது?

7 யெகோவா புதிதாக வழிநடத்துதல்களை கொடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. திருச்சட்டம் மேசியாவின் (இயேசு கிறிஸ்துவின்) வருகைக்காக இஸ்ரவேலர்களை தயார்படுத்தியது. ஏனென்றால் யெகோவாவுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் மேசியாவுக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருந்தது. மனிதர்கள் பாவம் செய்யும் இயல்புள்ளவர்கள் என்பதை திருச்சட்டம் இஸ்ரவேலர்களுக்கு ஞாபகப்படுத்தியது. அதனால் அவர்களை பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்ய மீட்புப் பலி தேவை என்பதை அவர்களுக்கு புரியவைத்தது. (கலா. 3:19; எபி. 10:1-10) அதோடு, மேசியா வரவிருந்த வம்சாவளியை பாதுகாக்கவும், மேசியா வரும்போது அவரை அடையாளம் கண்டுபிடிக்கவும் இந்த திருச்சட்டம் உதவியது. இந்த விதத்தில் திருச்சட்டம், “கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசானாக” இருந்தது. கிறிஸ்து வரும்வரைதான் அது தேவைப்பட்டது.—கலா. 3:23, 24.

8. திருச்சட்டத்தில் இருக்கும் நியமங்களை நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?

8 இன்று நாம் திருச்சட்டத்தை கடைப்பிடிப்பதில்லை என்றாலும் அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். எப்படி? அந்த சட்டத்துக்கு அடிப்படையாக இருக்கும் நியமங்களை நாம் நிதானமாக யோசித்துப் பார்க்கலாம். அந்த நியமங்களிலிருந்து நம் வாழ்க்கைக்கும் யெகோவாவை வணங்குவதற்கும் உதவும் நிறைய ஆலோசனைகளை தெரிந்துகொள்ளலாம். நாம் திருச்சட்டத்திலிருந்து கற்றுக்கொள்ளவும்... அதிலுள்ள நியமங்களால் வழிநடத்தப்படவும்... இயேசு சொன்ன விஷயங்கள் அதைவிட சிறந்தது என்பதை புரிந்துகொள்ளவும்... யெகோவா திருச்சட்டத்தை பைபிளில் பதிவு செய்திருக்கிறார். இயேசு சொன்ன ஒரு நியமத்தை கவனியுங்கள்: “‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.” மணத்துணைக்கு துரோகம் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது கெட்ட ஆசைகள் நம் மனதில் வரும்போது அதை வேரோடு பிடுங்க வேண்டும்.—மத். 5:27, 28.

9. புதிய வழிநடத்துதல்களை யெகோவா ஏன் கொடுத்தார்?

9 இயேசு மேசியாவாக வந்தபோது யெகோவா புதிதாக சில வழிநடத்துதல்களைக் கொடுத்தார். அதில் அவருடைய நோக்கத்தைப் பற்றி இன்னும் அதிகமாக தெரியப்படுத்தினார். அந்த வழிநடத்துதல் ஏன் தேவைப்பட்டது? ஏனென்றால், கி.பி. 33-வது வருஷத்தில் இஸ்ரவேல் தேசத்தை யெகோவா ஒதுக்கிவிட்டு கிறிஸ்தவ சபையில் இருந்தவர்களை அவருடைய மக்களாக ஏற்றுக்கொண்டார். அதனால் கடவுளுடைய மக்களின் சூழ்நிலை திரும்பவும் மாறியது.

கடவுளுடைய இஸ்ரவேலுக்கு புதிய வழிநடத்துதல்கள்

10. கிறிஸ்தவ சபைக்கு ஏன் புதிய சட்டங்களை கடவுள் கொடுத்தார், திருச்சட்டத்திலிருந்து இது எப்படி வித்தியாசமாக இருந்தது?

10 எப்படி வாழ வேண்டும், தன்னை எப்படி வணங்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுப்பதற்காக யெகோவா இஸ்ரவேலர்களுக்கு திருச்சட்டத்தைக் கொடுத்தார். ஆனால் முதல் நூற்றாண்டிலிருந்து, வித்தியாசமான நாட்டையும் பின்னணியையும் சேர்ந்தவர்கள் கடவுளுடைய மக்களாக ஆனார்கள். அவர்கள் கடவுளுடைய இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாக இருந்ததோடு புதிய ஒப்பந்தத்திலும் இருந்தார்கள். அதனால் அவர்கள் எப்படி வாழ வேண்டும், தன்னை எப்படி வணங்க வேண்டும் என்பதற்கு புதிய வழிநடத்துதல்களை யெகோவா கொடுத்தார். “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. (அப். 10:34, 35) அவர்கள் “கிறிஸ்துவின் சட்டத்தை” கடைப்பிடித்தார்கள். இந்த சட்டம் நியமங்களின் அடிப்படையில் இருந்தது. கற்பலகைகளில் அல்ல, இருதயப் பலகைகளில் இது எழுதப்பட்டது. எந்த நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்களாலும் கிறிஸ்துவின் சட்டத்தை கடைப்பிடிக்க முடிந்தது.—கலா. 6:2.

11. கிறிஸ்தவ வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட இரண்டு முக்கியமான விஷயங்கள் என்ன?

11 இயேசு மூலமாக யெகோவா கொடுத்த வழிநடத்துதல்கள் கடவுளுடைய இஸ்ரவேலர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தது. புதிய ஒப்பந்தத்தை செய்வதற்கு முன்பு இயேசு இரண்டு முக்கியமான கட்டளைகளை கொடுத்தார். அதாவது நற்செய்தியை பிரசங்கிப்பது பற்றியும் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும், மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றியும் கட்டளை கொடுத்தார். இதை எல்லா கிறிஸ்தவர்களுக்கும் கொடுத்தார். அதனால் நமக்கு பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, இந்த கட்டளைகள் நம் எல்லாருக்குமே பொருந்தும்.

12. பிரசங்க வேலையை ஏன் ஒரு புதிய மாற்றம் என்று சொல்லலாம்?

12 முன்பெல்லாம் மக்கள் யெகோவாவை வணங்குவதற்காக இஸ்ரவேல் தேசத்துக்கு வர வேண்டியிருந்தது. (1 இரா. 8:41-43) ஆனால் இயேசு அவருடைய சீடர்களிடம் ‘நீங்கள் புறப்பட்டுப் போய் எல்லா தேசத்தாரையும் சீடராக்குங்கள்’ என்று கட்டளை கொடுத்தார். அது மத்தேயு 28:19, 20-ல் (வாசியுங்கள்) இருக்கிறது. உலகத்தில் இருக்கும் எல்லா ஜனங்களுக்கும் நற்செய்தியை சொல்ல வேண்டும் என்பதை கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் யெகோவா தெரியப்படுத்தினார். அன்று, புதிதாக உருவாக்கப்பட்ட சபையை சேர்ந்த சுமார் 120 பேருக்கு அவருடைய சக்தியைக் கொடுத்தார். அதனால் அவர்கள் வேறு மொழிகளை பேசிய யூதர்களிடமும் யூத மதத்துக்கு மாறியவர்களிடமும் நற்செய்தியை சொன்னார்கள். (அப். 2:4-11) அதன் பிறகு, சமாரியர்களுக்கு நற்செய்தியை சொன்னார்கள். பின்பு கி.பி. 36-ல் விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற நாட்டு மக்களுக்கும் நற்செய்தியை சொன்னார்கள். அப்படியென்றால், கிறிஸ்தவர்கள் உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நற்செய்தியை சொல்ல வேண்டும் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

13, 14. (அ) இயேசுவின் “புதிய கட்டளையை” கடைப்பிடிப்பதை நாம் எப்படி காட்டலாம்? (ஆ) இயேசுவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 நம் சகோதர சகோதரிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இயேசு ஒரு “புதிய கட்டளையை” கொடுத்தார். (யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்.) சகோதர சகோதரிகள்மீது நமக்கு அன்பிருப்பதை ஒவ்வொரு நாளும் காட்ட வேண்டும். அதோடு அவர்களுக்காக நம் உயிரைக் கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஆனால், மற்றவர்களுக்காக நம் உயிரையே கொடுக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொல்லவில்லை.—மத். 22:39; 1 யோ. 3:16.

14 சுயநலமில்லாத அன்பை காட்டியதில் இயேசுதான் சிறந்த உதாரணம். சீடர்களை அவர் ரொம்ப நேசித்ததால் அவர்களுக்காக தன்னுடைய உயிரையே கொடுத்தார். தன்னை பின்பற்றுகிற எல்லாரும் அப்படிப்பட்ட அன்பை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், நாம் எல்லாருமே நம் சகோதர சகோதரிகளுக்காக கஷ்டங்களை சகிக்கவும் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.—1 தெ. 2:8.

இன்றைக்கும் எதிர்காலத்துக்கும் உதவும் வழிநடத்துதல்கள்

15, 16. இன்று யெகோவா நம்மை எப்படி வழிநடத்துகிறார், நம் சூழ்நிலை எப்படி மாறியிருக்கிறது?

15 “ஏற்ற வேளையில் தன் வீட்டாருக்கு உணவளிப்பதற்காக” இயேசு ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்தார். (மத். 24:45-47) அதனால் அவர்கள் காலத்துக்கு ஏற்ற உணவைக் கொடுக்கிறார்கள். நம் சூழ்நிலை மாறும்போது நமக்கு புதுப்புது வழிநடத்துதல்களையும் கொடுக்கிறார்கள். அப்படியென்றால் நம் சூழ்நிலை எப்படி மாறியிருக்கிறது?

16 நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம். இதுவரை யாருமே அனுபவிக்காத ஒரு பயங்கரமான உபத்திரவத்தை நாம் சீக்கிரத்தில் அனுபவிக்க போகிறோம். (2 தீ. 3:1; மாற். 13:19) அதுமட்டுமல்ல, சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து பூமிக்கு தள்ளப்பட்டதால் மனிதர்கள் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். (வெளி. 12:9, 12) அதோடு, இயேசு கொடுத்த கட்டளைக்கு கீழ்ப்படிந்து நிறைய மொழிகளில் நற்செய்தியை சொல்கிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு நிறைய ஜனங்களுக்கும் சொல்கிறோம்.

17, 18. நமக்கு வழிநடத்துதல்கள் கிடைக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

17 பிரசங்கிக்க உதவியாக இருக்கும் நிறைய கருவிகளை நம் அமைப்பு நமக்கு கொடுக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? இவை எல்லாவற்றையும் திறமையாக பயன்படுத்த கூட்டங்களில் நமக்கு வழிநடத்துதல் கிடைக்கிறது. யெகோவாதான் இந்த வழிநடத்துதல்களை கொடுக்கிறார் என்று நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?

18 கடவுளுடைய ஆசீர்வாதத்தை நாம் அனுபவிக்க வேண்டுமென்றால் கிறிஸ்தவ சபை மூலமாக அவர் கொடுக்கும் எல்லா வழிநடத்துதல்களுக்கும் நாம் கீழ்ப்படிய வேண்டும். இப்போதே நாம் அந்த வழிநடத்துதல்களுக்கு கீழ்ப்படிந்தால் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ சாத்தானுடைய உலகம் அழியும்போது நமக்கு கிடைக்கும் வழிநடத்துதல்களுக்கு கீழ்ப்படிவது கஷ்டமாக இருக்காது. (மத். 24:21) அதன்பின், புதிய உலகத்தில் நமக்கு புதுப்புது வழிநடத்துதல்கள் கிடைக்கும். அந்த சமயத்தில் சாத்தானின் தொல்லைகள் எதுவுமே நமக்கு இருக்காது.

புதிய உலகத்தில் சுருள்கள் திறக்கப்படும், நமக்கு புதிய வழிநடத்துதல்கள் கிடைக்கும் (பாராக்கள் 19, 20)

19, 20. என்ன சுருள்கள் திறக்கப்படும், அதனால் நமக்கு என்ன நன்மை?

19 மோசே காலத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு புதிய வழிநடத்துதல்கள் தேவைப்பட்டது. அதனால் கடவுள் அவர்களுக்கு திருச்சட்டத்தை கொடுத்தார். பிறகு கிறிஸ்தவ சபையில் இருந்தவர்கள் “கிறிஸ்துவின் சட்டத்தை” கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. அதேபோல் புதிய உலகத்தில் நமக்கும் புதிய சுருள்கள் கொடுக்கப்படும், அதாவது புதிய வழிநடத்துதல்கள் கிடைக்கும். (வெளிப்படுத்துதல் 20:12-ஐ வாசியுங்கள்.) மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று யெகோவா அந்த சுருள்களில் விளக்குவார். யெகோவா நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை, நாமும் உயிர்த்தெழுந்து வருகிறவர்களும் அதிலிருந்து தெரிந்துகொள்வோம். யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை இன்னும் நன்றாக தெரிந்துகொள்வோம். அதோடு பைபிளையும் நாம் நன்றாக புரிந்துகொள்வோம். அதனால் பூஞ்சோலை பூமியில் நாம் ஒருவரை ஒருவர் அன்பாக, மரியாதையாக நடத்துவோம். (ஏசா. 26:9) நம் ராஜா இயேசு கிறிஸ்து நம்மை வழிநடத்தும்போது நாம் இன்னும் எவ்வளவு விஷயங்களை கற்றுக்கொள்வோம், மற்றவர்களுக்கும் எந்தளவு கற்றுக்கொடுப்போம் என்று யோசித்துப் பாருங்கள்!

20 “அந்தச் சுருள்களில் எழுதப்பட்டவற்றின்படி” நாம் நடந்தால்... கடைசி சோதனையிலும் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால்... நம் பெயர்களை யெகோவா ‘வாழ்வின் சுருளில்’ நிரந்தரமாக எழுதுவார். அப்போது நமக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும். அதற்கு நாம் இப்போதே 3 விஷயங்களை செய்ய வேண்டும். அதாவது, நாம் பைபிளை படிக்க வேண்டும், படிக்கும் விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் கொடுக்கும் ஆலோசனைகளுக்கு இப்போதே கீழ்ப்படிய வேண்டும். இதை நாம் செய்தால் மிகுந்த உபத்திரவத்தில் இருந்து தப்பிப்போம். அன்பும் ஞானமும் நிறைந்த யெகோவாவைப் பற்றி காலமெல்லாம் கற்றுக்கொள்வோம்.—பிர. 3:11; ரோ. 11:33.