வாசகர் கேட்கும் கேள்விகள்
யூதர்களுடைய ஆலயத்தின் காவலர்களாக இருந்தவர்கள் யார்? அவர்களுடைய வேலை என்ன?
குருமார்களாக இல்லாத லேவியர்கள் வேறு வேலைகளைச் செய்தார்கள். அவற்றில் ஒன்றுதான் காவலர்களாக இருப்பது. ஆலயத்தின் காவல் தலைவருடைய கண்காணிப்பின் கீழ் அவர்கள் இருந்தார்கள். யூத எழுத்தாளரான ஃபீலோ, அவர்களுடைய வேலைகளைப் பற்றி இப்படி எழுதினார்: “இந்த [லேவியர்களில்] சிலர், ஒவ்வொரு நுழைவாசலின் கதவுகளுக்குப் பக்கத்திலும் வாயிற்காவலர்களாக நிறுத்தப்பட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ யாரும் ஆலயத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக, வேறுசில லேவியர்கள் பரிசுத்த இடத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டார்கள். வேறுசிலர், ஆலயத்தை காவல் காப்பதற்காக இரவும் பகலும் மாறி மாறி ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.”
நியாயசங்கம் சொல்கிற வேலைகளை இந்தக் காவல் அதிகாரிகள் செய்தார்கள். யூதர்களிலேயே இவர்களுக்கு மட்டும்தான் ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கு ரோமர்கள் அதிகாரம் கொடுத்திருந்தார்கள்.
யோயாக்கிம் யரமீயாஸ் என்ற அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “தன்னைக் கைது செய்ய வந்த அதிகாரிகளிடம், தான் தினமும் ஆலயத்தில் போதித்துக்கொண்டிருந்தபோதே தன்னை ஏன் கைது செய்யவில்லை என்று இயேசு கேட்டார். (மத். 26.55) அப்படியென்றால், அந்த அதிகாரிகள் ஆலயத்தின் காவலர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.” இந்தச் சம்பவத்துக்கு முன்பு ஒரு தடவை இயேசுவைக் கைது செய்யப் போனவர்களும் ஆலயத்தின் காவலர்கள்தான் என்று யோயாக்கிம் யரமீயாஸ் நம்புகிறார். (யோவா. 7:32, 45, 46) பிற்பாடு, இயேசுவின் சீஷர்களை இழுத்துவரும்படி, ஆலய காவல் அதிகாரிகளில் சிலரையும் ஆலயத்தின் காவல் தலைவரையும் நியாயசங்கம் அனுப்பியது. அப்போஸ்தலன் பவுலை ஆலயத்திலிருந்து வெளியே இழுத்துக்கொண்டு போனதும் ஆலய காவல் அதிகாரிகளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.—அப். 4:1-3; 5:17-27; 21:27-30.