Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாவற்றுக்குமே சொந்தக்காரராக இருப்பவருக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்?

எல்லாவற்றுக்குமே சொந்தக்காரராக இருப்பவருக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்?

“எங்கள் கடவுளே, . . . உங்களுக்கு நன்றி சொல்கிறோம்; உங்களுடைய அருமையான பெயரைப் புகழ்கிறோம்.”​—1 நா. 29:13.

பாடல்கள்: 95, 58

1, 2. தன்னுடைய வளங்களை யெகோவா எப்படித் தாராளமாகப் பயன்படுத்துகிறார்?

யெகோவா தாராள குணம் படைத்த கடவுள். நம்மிடம் இருக்கும் எல்லாமே அவர் கொடுத்ததுதான். தங்கம், வெள்ளி என இந்தப் பூமியில் இருக்கும் எல்லா இயற்கை வளங்களுக்கும் அவர்தான் சொந்தக்காரர். உயிர்களைப் பாதுகாக்க அவர் அவற்றைப் பயன்படுத்துகிறார். (சங். 104:13-15; ஆகா. 2:8) தன்னுடைய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக யெகோவா இந்த வளங்களை எப்படியெல்லாம் அற்புதமாகப் பயன்படுத்தினார் என்பதைக் காட்டும் ஏராளமான பதிவுகள் பைபிளில் இருக்கின்றன.

2 இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்த 40 வருஷ காலமும் யெகோவா அவர்களுக்கு மன்னாவையும் தண்ணீரையும் கொடுத்தார். (யாத். 16:35) அதனால், அவர்களுக்கு “ஒரு குறையும்” இருக்கவில்லை. (நெ. 9:20, 21) பிறகு, எலிசா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா ஒரு அற்புதத்தைச் செய்தார்; தன்னை உண்மையோடு வணங்கிய ஒரு விதவையிடம் இருந்த சிறிதளவு எண்ணெயைப் பல மடங்காக்கினார். கடவுள் செய்த அந்த அற்புதத்தால், தன்னுடைய கடனையெல்லாம் அவள் அடைத்தாள்; அதோடு, அவளும் அவளுடைய மகன்களும் உயிர் பிழைப்பதற்குத் தேவையான பணமும் அவளுக்குக் கிடைத்தது. (2 ரா. 4:1-7) யெகோவாவின் உதவியோடு இயேசுவும், தேவைப்பட்ட சமயங்களில் உணவையும் பணத்தையும் மற்றவர்களுக்கு அற்புதமாகக் கொடுத்தார்.—மத். 15:35-38; 17:27.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 பூமியிலுள்ள தன்னுடைய படைப்புகளைக் காப்பதற்குத் தேவையான எண்ணற்ற வளங்கள் யெகோவாவிடம் இருக்கின்றன. இருந்தாலும், தன்னுடைய அமைப்பில் நடக்கிற வேலைகளை ஆதரிப்பதற்காகத் தங்களிடம் இருக்கும் பொருள் வளங்களை பயன்படுத்தும் வாய்ப்பை யெகோவா தன்னுடைய ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (யாத். 36:3-7; நீதிமொழிகள் 3:9-ஐ வாசியுங்கள்.) நம்மிடம் இருக்கும் மதிப்புமிக்க பொருள்களைத் தனக்குத் திருப்பிக் கொடுக்கும்படி யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்? பைபிள் காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய வேலையை எப்படி ஆதரித்தார்கள்? நன்கொடைகளைக் கடவுளுடைய அமைப்பு இன்று எப்படிப் பயன்படுத்துகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

நாம் ஏன் யெகோவாவுக்குக் கொடுக்கிறோம்?

4. யெகோவாவின் வேலையை நாம் ஆதரிக்கும்போது நாம் எதைக் காட்டுகிறோம்?

4 நாம் யெகோவாவை நேசிப்பதாலும், அவருக்கு நன்றி காட்ட விரும்புவதாலும்தான் அவருக்குக் கொடுக்கிறோம். யெகோவா நமக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது நாம் நெகிழ்ந்துபோகிறோம்! ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவைப்பட்ட காணிக்கைகளைப் பற்றி மக்களிடம் தாவீது விளக்கியபோது ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டார்; அதாவது, நாம் எல்லாவற்றையும் யெகோவாவிடமிருந்துதான் பெற்றுக்கொள்கிறோம் என்பதையும், ஏற்கெனவே அவரிடமிருந்து பெற்றுக்கொண்டதைத்தான் அவருக்குத் திருப்பிக் கொடுக்கிறோம் என்பதையும் ஒத்துக்கொண்டார்.—1 நாளாகமம் 29:11-14-ஐ வாசியுங்கள்.

5. சுயநலமில்லாமல் கொடுப்பது உண்மை வணக்கத்தின் பாகமாக இருப்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?

5 கொடுப்பது நம் வணக்கத்தின் ஒரு பாகமாகவும் இருக்கிறது. அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தைப் பார்த்தார்; அதில், “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய விருப்பத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று பரலோகத்தில் வாழும் யெகோவாவுடைய ஊழியர்கள் அவரைப் புகழ்ந்தார்கள். (வெளி. 4:11) நம்மிடம் இருப்பவற்றிலேயே மிகச் சிறந்ததைக் கொடுத்து யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கு அவர் தகுதியானவர் என்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்தானே? வருஷா வருஷம் நடந்த மூன்று பண்டிகைகளின்போது இஸ்ரவேலர்கள் தனக்கு முன்னால் வர வேண்டுமென்று மோசே மூலம் யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். அந்தச் சமயங்களில், “யாருமே . . . வெறுங்கையோடு வரக் கூடாது” என்று அவர் சொல்லியிருந்தார்; அதனால், காணிக்கை கொண்டுவருவது, அவர்களுடைய வணக்கத்தின் பாகமாக இருந்தது. (உபா. 16:16) இன்றும், சுயநலமில்லாமல் நன்கொடை கொடுப்பது நம்முடைய வணக்கத்தின் பாகமாக இருக்கிறது; இப்படி, யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்துக்கு நன்றியும் ஆதரவும் காட்டுகிறோம்.

6. கொடுப்பது ஏன் நமக்கு நல்லது? (ஆரம்பப் படம்)

6 நாம் வெறுமனே பெற்றுக்கொள்கிறவர்களாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும் இருப்பது நல்லது. (அப்போஸ்தலர் 20:35-ஐ வாசியுங்கள்.) இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு பிள்ளை, தன்னுடைய அப்பா அம்மா தனக்காகக் கொடுத்த பணத்திலிருந்து ஒரு பரிசை வாங்கி அவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்கள் எப்படி உணருவார்கள்? சந்தோஷத்தில் பூரித்துப்போவார்கள்தானே? அதேபோல், அப்பா அம்மாவின் வீட்டில் இருந்துகொண்டே பயனியர் ஊழியம் செய்யும் ஒரு மகனோ மகளோ, வீட்டுச்செலவுக்காகத் தன்னால் முடிந்தளவுக்குப் பணம் கொடுத்து உதவலாம். பொதுவாக, பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் பணத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் என்பது உண்மைதான்; இருந்தாலும், அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்; ஏனென்றால், அவர்கள் செய்கிற எல்லாவற்றுக்கும் நன்றி காட்ட இது பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது. அதேபோல், மதிப்புமிக்க பொருள்களைக் கொடுப்பது நமக்கு நல்லது என்பது யெகோவாவுக்குத் தெரியும்.

கொடுப்பது—பைபிள் காலங்களில்

7, 8. பைபிள் காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் மக்கள் இந்த விஷயங்களில் எப்படி முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்: (அ) குறிப்பிட்ட வேலைகளுக்காக நன்கொடை கொடுப்பதில்? (ஆ) ஒட்டுமொத்த வேலைக்காக நன்கொடை கொடுப்பதில்?

7 யெகோவாவுடைய வேலையை ஆதரிக்க அவருடைய மக்கள் நன்கொடைகள் கொடுத்ததை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். சிலசமயங்களில், குறிப்பிட்ட வேலைகளுக்காக அவர்கள் நன்கொடைகள் கொடுத்தார்கள். உதாரணத்துக்கு, வழிபாட்டுக் கூடாரத்தை அமைக்க காணிக்கைகளைக் கொண்டுவரும்படி மோசே இஸ்ரவேலர்களிடம் சொன்னார். பிற்பாடு, ஆலயத்தைக் கட்டுவதற்குக் காணிக்கைகளைக் கொண்டுவரும்படி தாவீது ராஜா சொன்னார். (யாத். 35:5; 1 நா. 29:5-9) யோவாஸ் ராஜா ஆட்சி செய்த காலத்தில், மக்கள் கொடுத்த காணிக்கைகளைப் பயன்படுத்தி யெகோவாவின் ஆலயத்தைக் குருமார்கள் பழுதுபார்த்தார்கள். (2 ரா. 12:4, 5) ஆரம்பக் கால கிறிஸ்தவ சபையில் இருந்தவர்களும் தாராள குணத்தைக் காட்டினார்கள். யூதேயாவிலிருந்த சகோதரர்கள் பஞ்சத்தினால் கஷ்டப்படுகிறார்கள் என்று அவர்கள் கேள்விப்பட்டபோது, “ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை . . . செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.”—அப். 11:27-30.

8 யெகோவாவின் மக்கள், அவருடைய வேலையை முன்நின்று வழிநடத்தியவர்களுக்கும் பணம், பொருள் கொடுத்து உதவி செய்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, திருச்சட்டம் அமலில் இருந்த சமயத்தில், மற்ற கோத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டதுபோல் லேவியர்களுக்கு எந்தச் சொத்தும் கொடுக்கப்படவில்லை. அதனால், மற்ற இஸ்ரவேலர்கள் தங்களிடம் இருந்தவற்றில் பத்திலொரு பாகத்தை லேவியர்களுக்குக் கொடுத்தார்கள். அதன் காரணமாக, வழிபாட்டுக் கூடாரத்தில் தாங்கள் செய்து வந்த வேலைகளில் லேவியர்களால் முழு கவனம் செலுத்த முடிந்தது. (எண். 18:21) அதேபோல், தாராள குணம் கொண்ட சில பெண்கள், ‘தங்களுடைய உடைமைகளைக் கொண்டு இயேசுவுக்கும் அவருடைய அப்போஸ்தலர்களுக்கும் பணிவிடை செய்துவந்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—லூக். 8:1-3.

9. பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்கள் எதை வைத்து நன்கொடைகளைக் கொடுத்தார்கள்?

9 ஒவ்வொருவரும் நன்கொடையாகக் கொடுத்த பணம் பொருளெல்லாம் எங்கிருந்து கிடைத்தன என்பதில் வித்தியாசங்கள் இருந்தன. உதாரணத்துக்கு, வனாந்தரத்திலிருந்த இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கொண்டுவந்த பொருள்களை வழிபாட்டுக் கூடாரம் அமைப்பதற்குக் காணிக்கையாகக் கொடுத்திருக்கலாம். (யாத். 3:21, 22; 35:22-24) முதல் நூற்றாண்டில் இருந்த சில கிறிஸ்தவர்கள், தங்களுடைய வீடுகளையும் வயல்களையும் விற்று, அந்தப் பணத்தை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தார்கள்; அப்போஸ்தலர்கள், கஷ்டத்திலிருந்த சகோதர சகோதரிகளுக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தார்கள். (அப். 4:34, 35) மற்ற கிறிஸ்தவர்கள், பணத்தைச் சேமித்து வைத்து, தவறாமல் நன்கொடை கொடுத்தார்கள். (1 கொ. 16:2) இப்படி, பணக்காரர்கள்முதல் ஏழைகள்வரை எல்லாரும் தங்களால் முடிந்த நன்கொடைகளைக் கொடுத்தார்கள்.—லூக். 21:1-4.

கொடுப்பது—இன்று

10, 11. (அ) பைபிள் காலங்களில் வாழ்ந்த யெகோவாவின் ஊழியர்களைப் போல நாம் எப்படித் தாராள குணத்தைக் காட்டலாம்? (ஆ) கடவுளுடைய வேலையை ஆதரிக்க உங்களுக்குக் கிடைத்திருக்கும் பாக்கியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

10 குறிப்பிட்ட ஒரு வேலைக்காக நன்கொடை கொடுக்கும் வாய்ப்பு இன்று நமக்கும் கிடைக்கலாம். உதாரணத்துக்கு, உங்கள் சபைக்காக ஒரு புதிய ராஜ்ய மன்றம் கட்ட சகோதரர்கள் திட்டம் போட்டுக்கொண்டிருக்கலாம்; அல்லது, உங்கள் ராஜ்ய மன்றத்தைப் புதுப்பித்துக்கொண்டிருக்கலாம். ஒருவேளை, நம் நாட்டின் கிளை அலுவலகத்தைப் புதுப்பிப்பதற்கு, நம் மாநாட்டின் செலவுகளைக் கவனிப்பதற்கு, அல்லது இயற்கைப் பேரழிவினால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு உதவி செய்வதற்குப் பணம் தேவைப்படுவது பற்றி நமக்குத் தெரிவிக்கப்படலாம். அதுமட்டுமல்ல, உலகத் தலைமை அலுவலகத்திலும், உலகம் முழுவதிலும் இருக்கிற கிளை அலுவலகங்களிலும் சேவை செய்கிற சகோதரர்களின் தேவைகளுக்காக நாம் நன்கொடை கொடுக்கிறோம். மிஷனரிகள், விசேஷ பயனியர்கள், மற்றும் வட்டாரக் கண்காணிகளின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவும் நம் நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, உலகளாவிய கட்டுமானத் திட்டத்துக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்புவதாக உங்கள் சபை தீர்மானம் எடுத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை; இந்தத் திட்டத்தினால் கட்டப்படும் ராஜ்ய மன்றங்களும் மாநாட்டு மன்றங்களும் உலகம் முழுவதிலும் இருக்கிற சகோதரர்களுக்குப் பிரயோஜனமாக இருக்கின்றன.

11 இந்தக் கடைசி நாட்களில் யெகோவா நடத்திவரும் வேலையை ஆதரிக்க நம்மால் முடிந்த நன்கொடைகளை நாம் தரலாம். யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பது பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றங்களில் இருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் நாம் போடும் நன்கொடைகளைப் பற்றியோ, jw.org வெப்சைட்டைப் பயன்படுத்தி நாம் கொடுக்கும் நன்கொடைகளைப் பற்றியோ மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. “நான் கொடுக்குற சின்ன நன்கொடைய வெச்சு பெருசா என்ன செய்ய முடியும்...” என்று நினைக்கிறீர்களா? உண்மை என்னவென்றால், அமைப்புக்குப் பெரிய அளவில் நன்கொடைகள் வருவதைவிட சிறிய அளவில்தான் அதிக நன்கொடைகள் வருகின்றன. பண வசதி இல்லாத நம் சகோதரர்கள்கூட மக்கெதோனியாவைச் சேர்ந்த சகோதரர்களைப் போலவே தாராள குணத்தைக் காட்டுகிறார்கள். மக்கெதோனியாவைச் சேர்ந்தவர்கள், “கொடிய வறுமையில்” இருந்தபோதிலும் மற்றவர்களுக்குக் கொடுக்கும் பாக்கியத்தைத் தங்களுக்குத் தர வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கெஞ்சிக் கேட்டார்கள்; பிறகு, தாராளமாகக் கொடுத்தார்கள்.—2 கொ. 8:1-4.

12. நன்கொடைகளைச் சிறந்த விதத்தில் பயன்படுத்த அமைப்பு எப்படி முயற்சி செய்கிறது?

12 ஆளும் குழு, நன்கொடைகளைப் பயன்படுத்தும் விஷயத்தில் உண்மையாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள கடினமாக உழைக்கிறது. (மத். 24:45) ஞானமான தீர்மானங்கள் எடுக்க அதன் அங்கத்தினர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்கிறார்கள்; பிறகு, நன்கொடைகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று நன்றாகத் திட்டமிட்டு, அதன்படியே செலவு செய்கிறார்கள். (லூக். 14:28) பைபிள் காலங்களில், மக்கள் கொடுத்த காணிக்கைகள் யெகோவாவின் வணக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதா என்பதை நிர்வாகிகள் நிச்சயப்படுத்திக்கொண்டார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எஸ்றா. பெர்சிய ராஜா காணிக்கையாகக் கொடுத்த தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற பொருள்களையும் அவர் எருசலேமுக்குக் கொண்டுவந்தார். இன்று அவற்றின் மதிப்பு, 10 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகம்! அவற்றை மக்கள் சொந்த விருப்பத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்திருந்ததை எஸ்றா உணர்ந்திருந்தார்; அதனால், அந்த ஆபத்தான பயணத்தின்போது அவற்றைப் பத்திரமாக எடுத்துக்கொண்டு போகும்படி அவர் அறிவுரை கொடுத்தார். (எஸ்றா 8:24-34) அடுத்து, அப்போஸ்தலன் பவுலின் உதாரணத்தைக் கவனியுங்கள். யூதேயாவில் இருந்த சகோதரர்களுக்கு நிவாரண உதவி செய்வதற்காக அவர் பணம் திரட்டினார். அந்தப் பணத்தைக் கொண்டுபோய்ச் சேர்த்தவர்கள், ‘எல்லாவற்றையும் யெகோவாவுடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதர்களுடைய பார்வையிலும் நேர்மையாகச் செய்ய முயற்சி எடுக்கிறவர்களாக’ இருக்கும்படி பவுல் நிச்சயப்படுத்திக்கொண்டார். (2 கொரிந்தியர் 8:18-21-ஐ வாசியுங்கள்.) எஸ்றா மற்றும் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றி இன்று நம்முடைய அமைப்பு நன்கொடைகளை மிகக் கவனமாகப் பயன்படுத்துகிறது.

13. சமீப காலங்களில் அமைப்பின் வேலைகள் எளிமையாக்கப்பட்டிருப்பதை நாம் எப்படிக் கருத வேண்டும்?

13 ஒரு குடும்பம், வரவுக்கு அதிகமாகச் செலவு செய்யாமல் இருப்பதற்காகச் சில மாற்றங்களைச் செய்யலாம். அல்லது, யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்வதற்காகத் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொண்டு வாழ்க்கையை எளிமையாக்க முயற்சி செய்யலாம். யெகோவாவின் அமைப்பும் இதைத்தான் செய்கிறது. சமீப காலங்களில், சந்தோஷம் தரும் நிறைய புதிய விஷயங்களை அமைப்பு செய்திருக்கிறது. அதற்காக, வரவுக்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டிய நிலைமை சிலசமயங்களில் ஏற்பட்டிருக்கிறது. அதனால், செலவுகளை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்றும், வேலைகளை எப்படியெல்லாம் எளிமையாக்கலாம் என்றும் அமைப்பு திட்டமிடுகிறது. இப்படி, உங்களுடைய தாராளமான நன்கொடைகளைச் சிறந்த விதத்தில் பயன்படுத்த அமைப்பு முயற்சி செய்கிறது.

உங்கள் நன்கொடைகளால் வரும் பலன்கள்

நீங்கள் கொடுக்கும் நன்கொடைகள் உலகளாவிய வேலைக்கு உதவுகின்றன (பாராக்கள் 14-16)

14-16. (அ) நீங்கள் கொடுக்கும் நன்கொடைகளால் நம்முடைய அமைப்பு எதையெல்லாம் சாதித்துவருகிறது? (ஆ) அமைப்பு செய்திருக்கும் ஏற்பாடுகள் எந்த விதங்களில் உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கின்றன?

14 நமக்கு ஆன்மீக உணவு கிடைப்பதற்காக, என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்றைக்கு அமைப்பு ஏராளமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது என்று ரொம்பக் காலமாக யெகோவாவுக்குச் சேவை செய்துவரும் சகோதரர்கள் நிறையப் பேர் சொல்கிறார்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள்! இப்போது, நமக்கு jw.org வெப்சைட்டும் JW பிராட்காஸ்டிங்கும் இருக்கின்றன. அதோடு, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் பல மொழிகளில் கிடைக்கிறது. 2014/2015-ல், மொத்தம் 14 நகரங்களில் இருந்த பெரிய ஸ்டேடியங்களில், “கடவுளுடைய அரசாங்கத்தை முதலில் நாடுங்கள்!” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடுகள் நடத்தப்பட்டன; மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்ட அந்த மாநாடுகளில் கலந்துகொண்ட எல்லாரும் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை!

15 யெகோவாவுடைய அமைப்பின் மூலமாகக் கிடைக்கும் அருமையான பலன்களுக்காகப் பலர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகளைப் பற்றி ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் சேவை செய்யும் ஒரு தம்பதி இப்படி எழுதினார்கள்: “நாங்கள் ஒரு சின்ன ஊரில் சேவை செய்கிறோம். அதனால், சிலசமயங்களில் தனியாக இருப்பதுபோல் உணருகிறோம். யெகோவாவின் மக்கள் உலகம் முழுவதும் அவருடைய வேலையைச் செய்கிறார்கள் என்பதை எளிதில் மறந்துவிடுகிறோம். ஆனால், JW பிராட்காஸ்டிங்கில் வருகிற வித்தியாசமான நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, உலகம் முழுவதும் எங்களுக்கு சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது ஞாபகத்துக்கு வரும். இந்த ஊரில் இருக்கும் சகோதர சகோதரிகளும் JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகளை ரொம்ப ஆர்வமாகப் பார்த்து ரசிக்கிறார்கள். மாதாமாதம் வரும் நிகழ்ச்சிகள், ஆளும் குழுவில் இருக்கும் சகோதரர்களோடு நெருக்கமாவதற்கு உதவுவதாக அவர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். கடவுளுடைய அமைப்பின் பாகமாக இருப்பதை முன்பைவிட இப்போது ரொம்பப் பெருமையாக அவர்கள் நினைக்கிறார்கள்.”

16 உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 2,500 ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஹோண்டுராஸில் இருக்கும் ஒரு சபை புதிய ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது. அதைப் பற்றி அந்தச் சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள் இப்படி எழுதினார்கள்: “யெகோவாவின் சர்வலோகக் குடும்பத்தின் பாகமாக இருப்பதற்காகவும், உலகம் முழுவதும் இருக்கிற அருமையான சகோதர சகோதரிகளுடைய நட்பை அனுபவிப்பதற்காகவும் நாங்கள் ரொம்பவே சந்தோஷப்படுகிறோம். இவைதான், எங்களுடைய ஊரில் ஒரு ராஜ்ய மன்றம் வேண்டுமென்ற எங்களுடைய கனவை நனவாக்கியிருக்கின்றன.” இன்னும் நிறைய சகோதரர்கள் தங்கள் சொந்த மொழியில் பைபிளையும் மற்ற பிரசுரங்களையும் பெற்றுக்கொள்ளும்போது... நிவாரண உதவி கிடைக்கும்போது... பெருநகர ஊழியத்தின் அல்லது பொது ஊழியத்தின் பலன்களைத் தங்கள் பிராந்தியத்தில் பார்க்கும்போது... இதேபோல் நன்றி தெரிவிக்கிறார்கள்.

17. அமைப்புக்கு யெகோவாவின் துணை இருக்கிறது என்பதை அது செயல்படும் விதம் எப்படிக் காட்டுகிறது?

17 நன்கொடைகளை மட்டுமே வைத்து அமைப்பு இவ்வளவு வேலைகளையும் எப்படிச் செய்கிறது என்பதை மற்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஒரு பெரிய கம்பெனியின் அதிகாரி நம்முடைய அமைப்பின் ஒரு அச்சகத்தைச் சுற்றிப் பார்த்தார். அங்கு யாருமே சம்பளத்துக்காக வேலை செய்வதில்லை... நன்கொடைகளை வைத்தே எல்லா வேலைகளும் நடக்கின்றன... எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லை... பணம் திரட்டப்படுவதில்லை... என்பதையெல்லாம் பார்த்து அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். சாதாரணமாக இப்படியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவர் சொன்னார். அதை நாமும் ஒத்துக்கொள்கிறோம். ஏனென்றால், யெகோவாவின் உதவி இல்லாமல் இதெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லைதான்!—யோபு 42:2.

யெகோவாவுக்குத் திருப்பிக் கொடுப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள்

18. (அ) கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக நன்கொடைகள் தரும்போது நமக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன? (ஆ) நன்கொடை கொடுப்பதற்கு நாம் எப்படி நம் பிள்ளைகளுக்கும் புதியவர்களுக்கும் கற்றுக்கொடுக்கலாம்?

18 இன்று நடந்துகொண்டிருக்கும் பிரமாண்டமான வேலையை ஆதரிக்கும் பாக்கியத்தைக் கொடுத்து யெகோவா நம்மைக் கௌரவப்படுத்தியிருக்கிறார். அவருடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக நாம் நன்கொடைகள் கொடுக்கும்போது நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார். (மல். 3:10) தாராளமாகக் கொடுக்கிறவர்கள் செழிப்பார்கள் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 11:24, 25-ஐ வாசியுங்கள்.) தாராளமாகக் கொடுக்கும்போது நமக்கு சந்தோஷமும் கிடைக்கிறது; ஏனென்றால், “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.” (அப். 20:35) அமைப்பின் வேலைகளை எப்படி ஆதரிக்கலாம் என்று நம் சொல்லினாலும் செயலினாலும் நம்முடைய பிள்ளைகளுக்கும் புதியவர்களுக்கும் நாம் கற்றுக்கொடுக்கலாம்; அந்த வேலைகளை ஆதரிப்பதால் அவர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதையும் கற்றுக்கொடுக்கலாம்.

19. இந்தக் கட்டுரை உங்களை எப்படி உற்சாகப்படுத்தியிருக்கிறது?

19 நம்மிடம் இருக்கும் எல்லாமே யெகோவா கொடுத்ததுதான். அவற்றை அவருக்குத் திருப்பிக் கொடுக்கும்போது, நாம் அவரை நேசிக்கிறோம் என்பதையும், நமக்காக அவர் செய்திருக்கிற எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம். (1 நா. 29:17) அன்று ஆலயத்தைக் கட்டுவதற்காக, “மக்கள் முழு இதயத்தோடு யெகோவாவுக்குக் காணிக்கை கொடுத்தார்கள். இப்படி அவர்களாகவே விருப்பப்பட்டு காணிக்கை கொடுத்ததால் சந்தோஷப்பட்டார்கள்.” (1 நா. 29:9) அவர்களைப் போலவே நாமும், யெகோவாவின் கையிலிருந்து பெற்றுக்கொண்டதை அவருக்கே திருப்பிக் கொடுப்பதால் வரும் சந்தோஷத்தையும் திருப்தியையும் தொடர்ந்து அனுபவிக்கலாம்!