Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்”

“சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்”

2018-க்கான வருடாந்தர வசனம்: “யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்.”​—ஏசா. 40:31.

பாடல்கள்: 152, 67

1. எந்தெந்த பிரச்சினைகளோடு நாம் போராட வேண்டியிருக்கிறது, ஆனால் தன்னுடைய உண்மை ஊழியர்களைப் பார்த்து யெகோவா ஏன் சந்தோஷப்படுவார்? (ஆரம்பப் படங்கள்)

இந்த உலகத்தில் பிரச்சினைகளுக்குப் பஞ்சமே இல்லை என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அன்பான சகோதர சகோதரிகளாகிய உங்களில் நிறையப் பேர், பயங்கரமான உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளித்து வருகிறீர்கள். உங்களில் சிலருக்கு வயதாகியிருந்தாலும், உங்கள் குடும்பத்தில் இருக்கும் வயதான மற்றவர்களையும் கவனித்து வருகிறீர்கள். சிலர், ஆடம்பரமான பொருள்களை வாங்குவதற்கு அல்ல, உங்களுடைய குடும்பத்துக்குத் தேவைப்படுகிற அடிப்படையான பொருள்களை வாங்குவதற்குக்கூட கஷ்டப்படுகிறீர்கள். நிறையப் பேர் ஒரே நேரத்தில் இப்படிப்பட்ட பல பிரச்சினைகளோடு போராடுகிறீர்கள்! அதனால் நிறைய நேரமும் சக்தியும் செலவாகிறது; பணமும் செலவாகிறது. இருந்தாலும், கடவுளுடைய வாக்குறுதிகளில் நீங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்; எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் உறுதியான விசுவாசம் வைத்திருக்கிறீர்கள். உங்களைப் பார்த்து யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்!

2. ஏசாயா 40:29 நமக்கு எப்படி உற்சாகத்தைத் தருகிறது, ஆனால், என்ன பெரிய தவறை நாம் செய்துவிடலாம்?

2 ‘இதுக்குமேல என்னால பிரச்சினைகளை சமாளிக்க முடியாது’ என்று சிலசமயங்களில் நீங்கள் நினைக்கிறீர்களா? நிறையப் பேர் அப்படித்தான் நினைக்கிறார்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களும் நிறைய சமயங்களில் அப்படி நினைத்ததாக பைபிள் சொல்கிறது. (1 ரா. 19:4; யோபு 7:7) இருந்தாலும், அவர்கள் ஒரேயடியாகச் சோர்ந்துவிடாமல், பலத்துக்காக யெகோவாவை நம்பியிருந்தார்கள். நம்முடைய கடவுள் ‘சோர்ந்துபோகிறவர்களுக்கு சக்தி கொடுப்பவராக’ இருப்பதால், அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. (ஏசா. 40:29) ஆனால் இன்று, கடவுளுடைய மக்களில் சிலர், வாழ்க்கையில் வருகிற பிரச்சினைகளைச் சமாளிக்க, ‘யெகோவாவுக்கு சேவை செய்றத கொஞ்ச நாள் நிறுத்துறதுதான் நல்லது’ என்ற முடிவுக்கு வருகிறார்கள். கிறிஸ்தவ வாழ்க்கையை அவர்கள் ஆசீர்வாதமாக நினைப்பதற்குப் பதிலாகப் பாரமாக நினைக்கிறார்கள். அதனால், பைபிளைப் படிப்பதையும், கூட்டங்களுக்குப் போவதையும், ஊழியம் செய்வதையும் நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் இப்படிச் செய்ய வேண்டும் என்றுதான் சாத்தானும் ஆசைப்படுகிறான்!

3. (அ) நம்மைப் பலவீனப்படுத்துவதற்கு சாத்தான் எடுக்கும் முயற்சிகளை நாம் எப்படி முறியடிக்கலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 கிறிஸ்தவர்களாக நாம் செய்ய வேண்டியதையெல்லாம் சுறுசுறுப்போடு செய்யும்போது நமக்குப் பலம் கிடைக்கும் என்பது பிசாசுக்குத் தெரியும்; நாம் அப்படிப் பலமாக இருப்பது அவனுக்குப் பிடிக்காது. உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நீங்கள் சோர்வாக இருக்கும்போது, யெகோவாவைவிட்டு விலகாதீர்கள். முன்பைவிட இன்னும் அதிகமாக அவரிடம் நெருங்கிவாருங்கள்; அவர் “உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார்.” (1 பே. 5:10; யாக். 4:8) கடவுளுடைய சேவையில் நம்மை மந்தமாக்கக்கூடிய இரண்டு சூழ்நிலைகளைப் பற்றியும், பைபிள் நியமங்களின்படி நடப்பதன் மூலம் அவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதற்கு முன்பு, ஏசாயா 40:26-31 சொல்வதுபோல், நம்மைப் பலப்படுத்துவதற்கு யெகோவாவுக்கு இருக்கிற திறனைப் பற்றிப் பார்ப்போம்.

யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்

4. ஏசாயா 40:26-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

4 ஏசாயா 40:26-ஐ வாசியுங்கள். பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லா நட்சத்திரங்களையும் இதுவரை யாராலும் எண்ண முடியவில்லை. நம் பால்வீதி மண்டலத்தில் மட்டுமே 40,000 கோடி நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இவ்வளவு நட்சத்திரங்களுக்கும் யெகோவா பெயர் வைத்திருக்கிறார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? உயிரற்ற படைப்புகள்மீதே யெகோவாவுக்கு அக்கறை இருக்கிறதென்றால், அவருக்குச் சேவை செய்கிற உங்கள்மீது எவ்வளவு அக்கறை இருக்கும்! அதுவும், வேறு வழி இல்லாததால் அல்ல, அவர்மேல் இருக்கிற அன்பால் அவருக்குச் சேவை செய்கிற உங்கள்மேல் அவருக்கு எவ்வளவு அக்கறை இருக்கும்! (சங். 19:1, 3, 14) நம் அன்பான அப்பா யெகோவாவுக்கு உங்களைப் பற்றி முழுமையாகத் தெரியும். ‘உங்கள் தலையிலுள்ள முடியையெல்லாம் அவர் எண்ணியிருக்கிறாரே’! (மத். 10:30) “குற்றமற்றவர்கள் படுகிற கஷ்டம் யெகோவாவுக்குத் தெரியும்” என்று சங்கீதக்காரர் நமக்கு உறுதியளிக்கிறார். (சங். 37:18) அதனால், நீங்கள் படுகிற கஷ்டங்களை யெகோவா கவனிக்கிறார். அந்த ஒவ்வொரு கஷ்டத்தையும் சமாளிக்கத் தேவையான பலத்தை அவரால் தர முடியும்.

5. யெகோவாவால் நம்மைப் பலப்படுத்த முடியும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

5 ஏசாயா 40:28-ஐ வாசியுங்கள். அபாரமான ஆற்றலின் பிறப்பிடமே யெகோவாதான்! உதாரணமாக, சூரியனுக்கு மட்டுமே அவர் எவ்வளவு ஆற்றல் கொடுக்கிறார் என்பதைக் கவனியுங்கள். “கோடானுகோடி அணுகுண்டுகள் வெடிக்கும்போது எந்தளவு ஆற்றல் வெளியாகிறதோ அந்தளவு ஆற்றல் ஒவ்வொரு விநாடியும் சூரியனிலிருந்து வெளியாகிறது” என்று அறிவியல் எழுத்தாளர் டேவிட் போடனஸ் சொன்னார். இன்னொரு ஆராய்ச்சியாளரின் கணக்குப்படி, “2,00,000 வருஷங்களுக்கு மனிதர்களுக்குத் தேவையான ஆற்றலை [சூரியன்] ஒரே விநாடியில் வெளிவிடுகிறது.” சூரியனுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பவரால், எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்கத் தேவையான பலத்தை நமக்குக் கொடுக்க முடியாதா?

6. எந்த விதத்தில் இயேசுவின் நுகத்தடி மென்மையானது, இதைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

6 ஏசாயா 40:29-ஐ வாசியுங்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வது ரொம்ப சந்தோஷத்தைத் தருகிறது. இயேசு தன் சீஷர்களிடம், ‘என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார். அப்படிச் செய்தால், “உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்றும் சொன்னார். (மத். 11:28-30) அவர் சொன்னது எவ்வளவு உண்மை! சில சமயங்களில், கூட்டங்களுக்கோ ஊழியத்துக்கோ புறப்பட்டுப் போகும்போது நமக்கு ரொம்ப களைப்பாக இருக்கலாம். ஆனால், திரும்பி வரும்போது? புத்துணர்ச்சியோடும், பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான பலத்தோடும் வருகிறோம்! இயேசுவின் நுகத்தடி மென்மையானது என்பதில் சந்தேகமே இல்லை!

7. மத்தேயு 11:28-30 எவ்வளவு உண்மை என்பதைக் காட்டுகிற ஒரு அனுபவத்தைச் சொல்லுங்கள்.

7 ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். நாள்பட்ட சோர்வு நோயாலும் (chronic fatigue syndrome), மன உளைச்சலாலும், கடுமையான ஒற்றைத் தலைவலியாலும் அவர் கஷ்டப்பட வேண்டியிருந்தது. சில சமயங்களில், ரொம்ப சிரமப்பட்டு அவர் கூட்டங்களுக்குப் போக வேண்டியிருந்தது. அப்படி ஒருமுறை பொதுப்பேச்சுக்குப் போனதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “சோர்வை பத்தி ஒரு சகோதரர் பேச்சு கொடுத்தாரு. அவரு ரொம்ப அக்கறையா, கரிசனையா பேசுனத கேட்டு எனக்கு கண்ணீரே வந்துடுச்சு. நான் இருக்க வேண்டிய இடம் இதுதான்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.” கூட்டத்துக்குப் போக முயற்சி எடுத்ததற்காக அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்!

8, 9. “நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்” என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன?

8 ஏசாயா 40:30-ஐ வாசியுங்கள். நமக்கு எவ்வளவுதான் திறமை இருந்தாலும், நம்முடைய சொந்த பலத்திலேயே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. நாம் எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது. அப்போஸ்தலன் பவுல் திறமையானவராக இருந்தபோதிலும், அவருக்கும் வரம்புகள் இருந்தன; நினைத்ததையெல்லாம் அவரால் செய்ய முடியவில்லை. தன்னுடைய கவலைகளைப் பற்றிக் கடவுளிடம் அவர் தெரியப்படுத்தியபோது, “நீ பலவீனமாக இருக்கும்போது என்னுடைய பலம் உனக்கு முழுமையாகக் கிடைக்கும்” என்று கடவுள் சொன்னார். கடவுள் சொன்ன குறிப்பை பவுல் புரிந்துகொண்டார். அதனால்தான், “நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்” என்று சொன்னார். (2 கொ. 12:7-10) அதன் அர்த்தம் என்ன?

9 தன்னைவிட பலம்படைத்த ஒருவரின் உதவி இல்லாமல் தன்னால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. அவருக்குத் தேவைப்பட்ட பலத்தைக் கடவுளுடைய சக்தியால் தர முடியும் என்பதும், சொந்த பலத்தால் தன்னால் ஒருபோதும் செய்ய முடியாத விஷயங்களைச் செய்ய கடவுளுடைய சக்தி தனக்கு உதவும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. நம் விஷயத்திலும் இதுதான் உண்மை! யெகோவா தன்னுடைய சக்தியை நமக்குக் கொடுக்கும்போது உண்மையிலேயே நாமும் பலமடைய முடியும்!

10. தாவீதுக்கு வந்த சவால்களைச் சமாளிக்க யெகோவா எப்படி உதவினார்?

10 கடவுளுடைய சக்தி தனக்குப் பலம் தந்ததை சங்கீதக்காரரான தாவீது அடிக்கடி அனுபவத்தில் உணர்ந்தார். “உங்கள் துணையால் கொள்ளைக்கூட்டத்தைத் தாக்குவேன். உங்கள் சக்தியால் மதிலையும் தாண்டுவேன்” என்று அவர் பாடினார். (சங். 18:29) சொந்த பலத்தால் நம்மால் தாண்ட முடியாத சில மதில்கள், அதாவது சமாளிக்க முடியாத சில பிரச்சினைகள், நமக்கு இருக்கலாம்; அவற்றைச் சமாளிக்க, யெகோவா தரும் பலம் கண்டிப்பாக நமக்குத் தேவை.

11. நம்முடைய பிரச்சினைகளைச் சமாளிக்க கடவுளுடைய சக்தி எப்படி உதவுகிறது?

11 ஏசாயா 40:31-ஐ வாசியுங்கள். ஒரு கழுகால் சொந்த பலத்திலேயே அதிக உயரத்தில் பறந்துகொண்டிருக்க முடியாது. மேலே எழும்பும் வெதுவெதுப்பான காற்றுதான் மேல்நோக்கிப் பறந்துபோக கழுகுக்கு உதவுகிறது. இப்படி, கழுகால் அதன் ஆற்றலை மிச்சப்படுத்த முடிகிறது. அதனால், கஷ்டமான ஒரு சூழ்நிலையை நீங்கள் சந்திக்கும்போது, கழுகை நினைத்துக்கொள்ளுங்கள். யெகோவா ‘தன்னுடைய சக்தியாகிய சகாயர்’ மூலம் உங்களுக்கு அதிக பலம் தர வேண்டுமென்று கெஞ்சிக் கேளுங்கள். (யோவா. 14:26) எப்போது வேண்டுமானாலும், 24 மணிநேரத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், நம்மால் கடவுளுடைய சக்தியைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். முக்கியமாக, சபையில் யாரிடமாவது நமக்கு மனஸ்தாபம் வரும்போது நமக்குக் கடவுளுடைய உதவி கண்டிப்பாகத் தேவை என்பதை நாம் உணரலாம். ஆனால், இப்படிப்பட்ட மனஸ்தாபங்கள் ஏன் வருகின்றன?

12, 13. (அ) கிறிஸ்தவர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவதற்கு காரணம் என்ன? (ஆ) யோசேப்பின் உதாரணத்திலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

12 நாம் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால்தான், நமக்கு இடையே மனஸ்தாபங்கள் வருகின்றன. சில சமயங்களில், நம் சகோதர சகோதரிகளுடைய சொல்லோ செயலோ நம்மை எரிச்சல்படுத்தலாம். அல்லது, நம்முடைய சொல்லோ செயலோ அவர்களை எரிச்சல்படுத்தலாம். இது உண்மையிலேயே ஒரு பெரிய சோதனையாக இருக்கலாம். ஆனால், நம்முடைய உத்தமத்தை நிரூபிப்பதற்கு இது வாய்ப்பளிக்கும். எப்படி? சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஒற்றுமையாகச் சேவை செய்யும்போது நம்முடைய உத்தமத்தை நிரூபிப்போம். அவர்கள் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் யெகோவா அவர்களை நேசிக்கிறார், அதனால் நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

யோசேப்பை யெகோவா கைவிடவில்லை, உங்களையும் அவர் கைவிடவே மாட்டார் (பாரா 13)

13 தன்னுடைய ஊழியர்களுக்கு சோதனையே வராதபடி யெகோவா பார்த்துக்கொள்வதில்லை என்பதை யோசேப்பின் உதாரணம் காட்டுகிறது. யோசேப்பு இளவயதில் இருந்தபோது, பொறாமைபிடித்த அவருடைய சகோதரர்கள் அவரை அடிமையாக விற்றுவிட்டார்கள்; அவர் எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டார். (ஆதி. 37:28) நடந்ததை யெகோவா பார்த்தார்; தன்னுடைய நண்பனும் உண்மையுள்ள ஊழியனுமான யோசேப்பு நடத்தப்பட்ட விதத்தைப் பார்த்து அவர் வேதனைப்பட்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருந்தாலும், இந்த விஷயத்தில் அவர் தலையிடவில்லை. பிற்பாடு, போத்திபாரின் மனைவியைக் கற்பழிக்க முயற்சி செய்ததாக யோசேப்பு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தள்ளப்பட்டபோதும், யெகோவா தலையிடவில்லை. ஆனால், அவர் யோசேப்பை எப்போதாவது கைவிட்டாரா? இல்லை! “யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்தார்.”—ஆதி. 39:21-23.

14. கோபத்தை ‘விட்டுவிடும்போது’ உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

14 இன்னொரு உதாரணத்தைக் கவனியுங்கள். தாவீதைப் போல மோசமாக நடத்தப்பட்டவர்கள் ரொம்ப ரொம்பக் குறைவுதான். இருந்தாலும், கடவுளுடைய நண்பரான அவர் மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளவில்லை. சொல்லப்போனால், “கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிடு. எரிச்சல்பட்டு ஏதாவது தப்பு செய்துவிடாதே” என்று அவர் எழுதினார். (சங். 37:8) ‘நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி நம்மை நடத்தாத’ யெகோவாவைப் பின்பற்ற விரும்புவதுதான், நாம் கோபத்தை ‘விட்டுவிடுவதற்கான’ மிக முக்கியமான காரணமாக இருக்க வேண்டும். (சங். 103:10) ஆனால், கோபத்தை ‘விட்டுவிடும்போது,’ வேறு நன்மைகளும் கிடைக்கின்றன. கோபமாக இருக்கும்போது உயர் இரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன. அது நம்முடைய கல்லீரல், கணையம் போன்றவற்றை பாதிக்கும், ஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். நாம் கோபமாக இருக்கும்போது, நம்மால் தெளிவாக யோசிக்க முடியாது. சிலசமயங்களில், நாம் கோபத்தில் வெடித்துவிட்டு, பிறகு ரொம்ப நாட்களுக்கு மனச்சோர்வில் தவிக்கலாம். ஆனால், “அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 14:30) அப்படியென்றால், நம் சகோதரரோ சகோதரியோ நம் மனதைப் புண்படுத்தியிருந்தாலும் நாம் எப்படி அவரோடு சமாதானமாகலாம்? பைபிள் சொல்லும் ஞானமான ஆலோசனைப்படி நடப்பதன் மூலம் சமாதானமாகலாம்.

சகோதர சகோதரிகளால் ஏமாற்றம் அடையும்போது...

15, 16. நம்மைப் புண்படுத்தியவரிடம் நாம் எப்படிப் பேச வேண்டும்?

15 எபேசியர் 4:26-ஐ வாசியுங்கள். இந்த உலகம் நம்மைக் கடுமையாக நடத்தும்போது, நாம் ஆச்சரியப்படுவதில்லை. ஆனால், நம் சகோதர சகோதரிகளோ, நம் குடும்பத்தில் யாராவதோ எதையாவது சொல்லி அல்லது செய்து நம் மனதைப் புண்படுத்திவிட்டால், நாம் அப்படியே இடிந்துபோய்விடலாம். ஒருவேளை, நம்மால் அவ்வளவு சீக்கிரம் அதை மறக்க முடியாமல் இருக்கலாம். அதற்காக, பல வருஷங்களுக்கு மனக்கசப்புடனேயே இருப்போமா? அல்லது, பைபிள் சொல்கிற ஞானமான அறிவுரையின்படி பிரச்சினையை உடனடியாகச் சரிசெய்வோமா? பிரச்சினையைச் சரிசெய்வதை எந்தளவுக்குத் தள்ளிப்போடுகிறோமோ அந்தளவுக்கு அந்த நபரோடு சமாதானமாவது கஷ்டமாகிவிடும்.

16 ஒருவேளை, ஒரு சகோதரரோ சகோதரியோ உங்களைப் புண்படுத்திவிட்டதாகவும், அதை அப்படியே விடமுடியாது என்று நீங்கள் நினைப்பதாகவும் வைத்துக்கொள்வோம். அவரோடு சமாதானமாவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? முதலாவதாக, யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள்; உங்கள் சகோதரர் அல்லது சகோதரியோடு நல்ல முறையில் பேசுவதற்கு உதவும்படி கேளுங்கள். அவரும் யெகோவாவின் நண்பர்தான் என்பதை ஞாபகம் வையுங்கள். (சங். 25:14) கடவுள் அவரை நேசிக்கிறார்! தன்னுடைய நண்பர்களை யெகோவா அன்போடு நடத்துகிறார், நம்மிடமும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். (நீதி. 15:23; மத். 7:12; கொலோ. 4:6) இரண்டாவதாக, நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே யோசியுங்கள். உங்கள் சகோதரரோ சகோதரியோ உங்களை வேண்டுமென்றே காயப்படுத்தியதாக நினைத்துக்கொள்ளாதீர்கள்; ஏதோ தவறுதலாகப் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்பதை மனதில் வையுங்கள். அதோடு, உங்களுக்குள் ஏற்பட்ட விரிசலுக்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அவரிடம் பேச ஆரம்பிக்கும்போது, “நான்தான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட மாதிரி தோணுது. ஆனா, நேத்து நீங்க பேசுனப்போ எனக்கு . . .” என்று சொல்லலாம். அவரிடம் பேசிய பிறகும் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், சமாதானம் பண்ணுவதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தைத் தேடுங்கள். அதேசமயத்தில், உங்கள் சகோதரர் அல்லது சகோதரிக்காக ஜெபம் செய்யுங்கள்; அவரை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் கேளுங்கள். அவருடைய நல்ல குணங்களை நினைத்துப் பார்ப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். கடவுளுடைய நண்பரான உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம் சமாதானம் பண்ணுவதற்கு நீங்கள் எடுக்கும் ஊக்கமான முயற்சி யெகோவாவை நிச்சயம் சந்தோஷப்படுத்தும்.

முன்பு செய்த தவறுகள் நம்மை வாட்டிவதைக்கும்போது...

17. பாவம் செய்தவர்களுக்கு உதவி செய்ய யெகோவா என்ன ஏற்பாடு செய்திருக்கிறார், அந்த ஏற்பாட்டை நாம் ஏன் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்?

17 மோசமான ஒரு பாவத்தைச் செய்ததால் யெகோவாவுக்குச் சேவை செய்ய தங்களுக்குத் தகுதி இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். குற்றவுணர்ச்சி நம்முடைய நிம்மதியையும் சந்தோஷத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடும். குற்றவுணர்ச்சியால் தவித்த தாவீது ராஜா, “நான் எதையும் வெளியே சொல்லாத வரைக்கும், நாளெல்லாம் குமுறிக் குமுறியே என் எலும்புகள் தளர்ந்துபோயின. ராத்திரி பகலாக உங்களுடைய கை என்னை அழுத்திக்கொண்டே இருந்தது” என்று எழுதினார். தாவீது தைரியமாக யெகோவா எதிர்பார்த்தபடியே செய்தார். “கடைசியில், என் பாவத்தை உங்களிடம் ஒத்துக்கொண்டேன். . . . நீங்களும் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்” என்று எழுதினார். (சங். 32:3-5) நீங்கள் மோசமான பாவத்தைச் செய்துவிட்டால், உங்களுக்கு உதவ யெகோவா தயாராக இருக்கிறார். ஆனால், சபை மூலமாக அவர் தரும் உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். (நீதி. 24:16; யாக். 5:13-15) அதைச் செய்யத் தாமதிக்காதீர்கள்! இல்லாவிட்டால், முடிவில்லாத வாழ்வு உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடலாம்! ஆனால், உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டு ரொம்ப நாட்கள் ஆன பிறகும், உங்கள் மனசாட்சி உங்களை உறுத்திக்கொண்டே இருக்கிறதா?

18. தாங்கள் தகுதியற்றவர்கள் என்று நினைத்துத் தவிப்பவர்களுக்கு பவுலின் உதாரணம் எப்படி உதவும்?

18 முன்பு செய்த தவறுகளை நினைத்து அப்போஸ்தலன் பவுலும் சில சமயங்களில் வேதனைப்பட்டார். “அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்; கடவுளுடைய சபையைக் கொடுமைப்படுத்தியதால் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட தகுதியில்லாதவன்” என்று சொன்னார். “ஆனாலும், கடவுளுடைய அளவற்ற கருணையால் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன்” என்றும் சொன்னார். (1 கொ. 15:9, 10) பவுலை அவருடைய குறைகளோடு கடவுள் ஏற்றுக்கொண்டார்; அதை பவுல் புரிந்துகொள்ள வேண்டுமென்று கடவுள் எதிர்பார்த்தார். முன்பு செய்த தவறுகளை நினைத்து நீங்கள் மனம் திருந்தி, அதை யெகோவாவிடமும், தேவைப்பட்டால் மூப்பர்களிடமும் ஒத்துக்கொண்டிருந்தால், யெகோவா உங்கள்மேல் இரக்கம் காட்டுவார் என்பது உறுதி! அதனால், யெகோவா உங்களை மன்னித்துவிட்டார் என்று நம்புங்கள், அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.—ஏசா. 55:6, 7.

19. 2018-க்கான வருடாந்தர வசனம் என்ன, அது ஏன் பொருத்தமாக இருக்கிறது?

19 இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க நமக்கு நிறையப் பிரச்சினைகள் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், அவற்றைச் சமாளிப்பதற்கு உங்களுக்கு எந்தளவு உதவி தேவையோ அந்தளவு யெகோவா உதவி செய்வார் என்பது நிச்சயம்; ஏனென்றால், “சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார். தெம்பு இல்லாதவர்களுக்கு எல்லா பலமும் கொடுக்கிறார்.” (ஏசா. 40:29; சங். 55:22; 68:19) 2018-ஆம் வருஷத்தில், கூட்டங்களுக்காக நாம் ராஜ்ய மன்றத்துக்குப் போகும்போதெல்லாம் இந்த முக்கியமான உண்மை நம் ஞாபகத்துக்கு வந்துகொண்டே இருக்கும்; ஏனென்றால், அங்கே இந்த வருடாந்தர வசனத்தைப் பார்ப்போம்: “யெகோவாவை நம்புகிறவர்கள் புதுத்தெம்பு பெறுவார்கள்.”ஏசா. 40:31.