Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்

மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்

“நீதிமானுக்கும் கெட்டவனுக்கும் . . . உள்ள வித்தியாசத்தை நீங்கள் . . . பார்ப்பீர்கள்.”​—மல். 3:18.

பாடல்கள்: 61, 53

1, 2. இன்று கடவுளுடைய ஊழியர்களுக்கு என்ன சவால் இருக்கிறது? (ஆரம்பப் படங்கள்)

நிறைய டாக்டர்களும் நர்ஸுகளும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தருகிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புவதால் அவர்கள்மேல் அக்கறை காட்டுகிறார்கள். ஆனால், தங்களுக்கு அந்த நோய் தொற்றிக்கொள்ளாதபடி அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. யெகோவாவின் ஊழியர்களாகிய நாமும் அதேபோன்ற சூழ்நிலையில்தான் இருக்கிறோம். கடவுளுடைய குணங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான குணங்களையும் மனப்பான்மைகளையும் காட்டுகிற மக்களோடு நாம் வாழ்கிறோம், அவர்களோடு வேலை செய்கிறோம். இது நமக்கு ஒரு சவாலாக இருக்கலாம்.

2 இந்தக் கடைசி நாட்களில், கடவுளை நேசிக்காத மக்கள் அவருடைய தராதரங்களை அசட்டை செய்கிறார்கள். இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க, அந்த மக்கள் எப்படிப்பட்ட குணங்களை அதிகமாகக் காட்டுவார்கள் என்று தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (2 தீமோத்தேயு 3:1-5, 13-ஐ வாசியுங்கள்.) அவர்களுடைய குணங்களைப் பார்த்து நாம் ஒருவேளை அதிர்ச்சியடையலாம்; ஆனால், நாமும் அவர்களைப் போலவே யோசிக்கவும் பேசவும் நடந்துகொள்ளவும் ஆரம்பித்துவிடலாம். (நீதி. 13:20) அவர்கள் காட்டும் குணங்கள் எப்படிக் கடவுளுடைய மக்கள் காட்டும் குணங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவும்போது, அவர்களுடைய கெட்ட குணங்கள் நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்றும் பார்ப்போம்.

3. எப்படிப்பட்ட மக்களைப் பற்றி 2 தீமோத்தேயு 3:2-5 சொல்கிறது?

3 கடைசி நாட்களில், “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று பவுல் எழுதினார். பிறகு, 19 வகையான கெட்ட குணங்கள் நம் காலத்தில் சர்வசாதாரணமாகக் காணப்படும் என்று சொன்னார். இதே போன்ற குணங்களைத்தான் ரோமர் 1:29-31 வசனங்களிலும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் வேறு எங்குமே இல்லை. “மனிதர்கள்” இப்படிப்பட்ட குணங்களைக் காட்டுவார்கள் என்று பவுல் சொன்னார். ஆனால், எல்லா மனிதர்களுமே அந்தக் கெட்ட குணங்களைக் காட்டுவதில்லை. உண்மைக் கிறிஸ்தவர்கள் அந்தக் குணங்களுக்கு நேர்மாறான குணங்களைக் காட்டுகிறார்கள்.மல்கியா 3:18-ஐ வாசியுங்கள்.

நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம்?

4. தலைக்கனம் பிடித்தவர்களை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?

4 நிறையப் பேர் சுயநலக்காரர்களாகவும் பண ஆசைபிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்று பவுல் சொன்ன பிறகு, அவர்கள் ஆணவமுள்ளவர்களாகவும், கர்வமுள்ளவர்களாகவும், தலைக்கனம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்றும் சொன்னார். இப்படிப்பட்ட குணங்களைக் காட்டுகிறவர்கள், மற்றவர்களைவிட தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு சில திறமைகளோ நிறைய சொத்தோ பெரிய அந்தஸ்தோ இருக்கலாம். மற்றவர்களுடைய அபிமானத்தைப் பெற வேண்டுமென்று அவர்கள் துடிக்கிறார்கள். “அப்படிப்பட்ட ஒருவர் தன்னுடைய இதயத்தில் ஒரு பீடத்தைக் கட்டி, தன்னையே வணங்குகிறார்” என்று ஒரு அறிஞர் எழுதினார். தலைக்கனம் பிடித்தவர்களுக்குக்கூட, மற்றவர்கள் தலைக்கனத்தோடு நடப்பதைப் பார்க்கப் பிடிக்காது; தலைக்கனம் அந்தளவுக்கு அசிங்கமான ஒரு குணம்!

5. யெகோவாவின் உண்மை ஊழியர்களைக்கூட தலைக்கனம் எப்படித் தொற்றியிருக்கிறது?

5 யெகோவா தலைக்கனத்தை அருவருக்கிறார். ‘ஆணவத்தோடு பார்க்கும் கண்களை’ அவர் நிச்சயமாகவே வெறுக்கிறார். (நீதி. 6:16, 17) ஒருவருக்குத் தலைக்கனம் இருந்தால் அவரால் கடவுளை நெருங்கவே முடியாது. (சங். 10:4) தலைக்கனம் பிசாசின் குணம். (1 தீ. 3:6) யெகோவாவின் உண்மை ஊழியர்கள் சிலரைக்கூட தலைக்கனம் தொற்றியிருப்பது வருத்தமான ஒரு விஷயம். உதாரணத்துக்கு, யூதாவை ஆட்சி செய்த உசியா ராஜா நிறைய வருஷங்களாகக் கடவுளுக்கு உண்மையோடு இருந்தார். ஆனால், “வலிமைமிக்கவராக ஆனதும், அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமானது. . . . தன்னுடைய கடவுளான யெகோவாவின் கட்டளையை அவர் மீறினார்” என்று பைபிள் சொல்கிறது. தனக்கு அதிகாரம் இல்லாதபோதும் ஆலயத்துக்குள் போய் தூபம் காட்டினார். கடவுளுக்கு உண்மையோடு இருந்த எசேக்கியா ராஜாவும் கொஞ்சக் காலத்துக்குத் தலைக்கனத்தோடு நடந்துகொண்டார்.—2 நா. 26:16; 32:25, 26.

6. தலைக்கனம் அடைய தாவீதுக்கு என்ன காரணங்கள் இருந்தன? ஆனால், அவர் ஏன் மனத்தாழ்மையோடு இருந்தார்?

6 சிலருக்கு அழகு, புகழ், இசைத் திறமை, பலம், அல்லது மற்றவர்களுடைய அபிமானம் இருப்பதால் அவர்களுக்குத் தலைக்கனம் வந்துவிடுகிறது. தாவீதுக்கு இவை எல்லாமே இருந்தும், வாழ்நாள் முழுக்க அவர் மனத்தாழ்மையோடு இருந்தார். ஒருமுறை, கோலியாத்தைக் கொன்ற பிறகு, சவுல் ராஜா தன்னுடைய மகளைக் கல்யாணம் செய்துதருவதாக தாவீதிடம் சொன்னார். அப்போது தாவீது, “ராஜாவின் மருமகனாவதற்கு எனக்கென்ன அருகதை இருக்கிறது? இஸ்ரவேலில் என் அப்பாவின் குடும்பம் சாதாரணக் குடும்பம்தானே?” என்று சொன்னார். (1 சா. 18:18) எப்போதும் மனத்தாழ்மையோடு இருக்க தாவீதுக்கு எது உதவியது? தனக்கு இருந்த குணங்களுக்கும் திறமைகளுக்கும் விசேஷப் பொறுப்புகளுக்கும் கடவுள்தான் காரணம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது; அதாவது, கடவுள் மனத்தாழ்மையோடு தன்னைக் கண்ணோக்கிப் பார்த்ததால்தான் அவையெல்லாம் தனக்கு இருந்ததை அவர் புரிந்துவைத்திருந்தார். (சங். 113:5-8) தன்னிடம் இருந்த நல்ல விஷயங்கள் எல்லாவற்றுக்கும் யெகோவாதான் காரணம் என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.—1 கொரிந்தியர் 4:7-ஐ ஒப்பிடுங்கள்.

7. மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள எது நமக்கு உதவும்?

7 தாவீதைப் போலவே மனத்தாழ்மையோடு இருக்க இன்று யெகோவாவின் மக்கள் முயற்சி செய்கிறார்கள். உன்னதமான கடவுளாகிய யெகோவாவே மனத்தாழ்மையோடு இருக்கிறார்! இந்த உண்மை நம் மனதைத் தொடுகிறது, இல்லையா? (சங். 18:35) “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் பொறுமையையும் காட்டுங்கள்” என்ற அறிவுரையின்படி நடக்க நாம் விரும்புகிறோம். (கொலோ. 3:12) அன்பு “பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது” என்றும் நமக்குத் தெரியும். (1 கொ. 13:4) நாம் மனத்தாழ்மையோடு நடந்துகொள்வதைப் பார்க்கும்போது, மற்றவர்களும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பலாம். ஒரு கிறிஸ்தவ மனைவியின் நல்ல நடத்தையைப் பார்த்து அவருடைய கணவன் எப்படி யெகோவாவிடம் ஈர்க்கப்படுவாரோ அப்படித்தான் நம்முடைய மனத்தாழ்மையைப் பார்த்து மற்றவர்களும் யெகோவாவிடம் ஈர்க்கப்படுவார்கள்.—1 பே. 3:1.

நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறோம்?

8. (அ) பிள்ளைகள் அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்காததைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்? (ஆ) பிள்ளைகளுக்கு பைபிள் என்ன கட்டளை கொடுக்கிறது?

8 கடைசி நாட்களில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்று பவுல் விளக்கினார். பிள்ளைகள் அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள் என்று அவர் எழுதினார். இன்று, பிள்ளைகள் அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்காததில் எந்தத் தவறும் இல்லை, அது சகஜம்தான் என்பதுபோல் நிறைய புத்தகங்களும் சினிமாக்களும் டிவி நிகழ்ச்சிகளும் மக்களை நினைக்க வைக்கின்றன. ஆனால், கீழ்ப்படியாமை என்ற குணம் சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கும் குடும்பத்தையே ஆட்டம்காண வைக்கிறது என்பதுதான் உண்மை. இந்த உண்மை, காலம்காலமாகவே மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. உதாரணத்துக்கு, பூர்வ கிரேக்க நாட்டில், பெற்றோரை அடித்தவர்களுடைய சமுதாய உரிமைகள் பறிக்கப்பட்டன. ரோமில் இருந்த சட்டம், கொலைக் குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனையைத் தன் அப்பாவை அடித்தவனுக்கும் கொடுக்க அனுமதி அளித்தது. எபிரெய வேதாகமம், கிரேக்க வேதாகமம் ஆகிய இரண்டுமே, அப்பா அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று பிள்ளைகளுக்குக் கட்டளை கொடுக்கிறது.—யாத். 20:12; எபே. 6:1-3.

9. அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய பிள்ளைகளுக்கு எது உதவும்?

9 அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க பிள்ளைகளுக்கு எது உதவும்? அதுவும், சுற்றியிருப்பவர்கள் கீழ்ப்படிதலைக் காட்டாவிட்டாலும் அவர்கள் கீழ்ப்படிந்து நடக்க எது உதவும்? அப்பா அம்மா தங்களுக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி பிள்ளைகள் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு நன்றியோடு இருப்பார்கள், அவர்களுடைய பேச்சைக் கேட்டு நடக்க விரும்புவார்கள். நம் எல்லாருக்கும் தகப்பனாக இருக்கும் கடவுளே அதைத்தான் எதிர்பார்க்கிறார் என்பதையும் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகளே, உங்கள் அப்பா அம்மாவைப் பற்றிய நல்ல விஷயங்களை உங்கள் நண்பர்களிடம் நீங்கள் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அவர்களும் தங்களுடைய பெற்றோரை மதிப்பார்கள். பெற்றோர்கள் பந்தபாசம் இல்லாமல் நடந்துகொண்டால் அவர்களுக்கு கீழ்ப்படிவது பிள்ளைகளுக்கு இன்னும் கஷ்டமாக இருக்கும். ஆனால், அப்பா அம்மா தன்னை உண்மையிலேயே நேசிக்கிறார்கள் என்பதை பிள்ளை உணரும்போது, கஷ்டமான சந்தர்ப்பத்தில்கூட அவர்களுக்குக் கீழ்ப்படிவது சுலபமாக இருக்கும். ஆஸ்டின் என்ற இளம் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “தப்பு செய்யணுங்கற எண்ணம் அப்பப்போ எனக்கு வந்துச்சு; ஆனா என்னோட அப்பா அம்மா எதை செய்ய சொன்னாலும் அதுல ஒரு நியாயம் இருந்துச்சு, அதுக்கான காரணங்கள அவங்க எடுத்து சொன்னாங்க. அதுமட்டுமில்ல, அவங்ககிட்ட மனசுவிட்டு பேசவும் முடிஞ்சுது. அதனால, என்னால அவங்களுக்கு கீழ்ப்படிய முடிஞ்சுது. அவங்க என்மேல அக்கறையோட இருந்தத என்னால பார்க்க முடிஞ்சுது. அதனால, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கணும்னு நினைச்சேன்.”

10, 11. (அ) மக்களுக்கு மற்றவர்கள்மேல் அன்பு இல்லை என்பதை எந்தெந்த கெட்ட குணங்கள் காட்டுகின்றன? (ஆ) உண்மைக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள்?

10 மக்களிடம் இருக்கும் மற்ற கெட்ட குணங்களைப் பற்றியும் பவுல் சொன்னார்; ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இல்லாததை அவை காட்டுகின்றன. அவர்கள், “அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக” இருப்பார்கள் என்று சொன்ன பிறகு, அவர்கள் நன்றிகெட்டவர்களாக இருப்பார்கள் என்றும் பவுல் சொன்னார். இது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! ஏனென்றால், மற்றவர்கள் தங்களுக்காகச் செய்யும் நல்ல விஷயங்களை மதிக்காதவர்கள்தான் நன்றிகெட்டவர்களாக இருக்கிறார்கள். அடுத்ததாக, மக்கள் உண்மையில்லாதவர்களாக இருப்பார்கள் என்று பவுல் சொன்னார். அவர்கள் எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக இருப்பார்கள்; அதாவது, மற்றவர்களோடு சமாதானமாவதற்கு விரும்ப மாட்டார்கள். அதோடு, கடவுளை நிந்திக்கிறவர்களாகவும், நம்பிக்கைத் துரோகிகளாகவும் இருப்பார்கள்; அவர்கள் மனிதர்களைப் பற்றியும் கடவுளைப் பற்றியும்கூட படுமோசமாகப் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமல்ல, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். அதாவது, மற்றவர்களுடைய பெயரைக் கெடுப்பதற்காகப் பொய்களைப் பரப்புகிறவர்களாக இருப்பார்கள். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

11 இன்று, யெகோவாவின் ஊழியர்கள் உலகத்திலிருக்கும் பெரும்பாலான மக்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் மற்றவர்கள்மேல் உண்மையான அன்பைக் காட்டுகிறார்கள்! காலம்காலமாக அவர்கள் இப்படித்தான் செய்துவந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், கடவுள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளைக்கு அடுத்ததாக மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளைதான் திருச்சட்டத்திலேயே முக்கியமான கட்டளை என்று இயேசு சொன்னார். (மத். 22:38, 39) அன்புதான் உண்மைக் கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருக்கும் என்றும் இயேசு சொன்னார். (யோவான் 13:34, 35-ஐ வாசியுங்கள்.) உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்கள் எதிரிகளையும் நேசிப்பார்கள்.—மத். 5:43, 44.

12. இயேசு எப்படி மக்கள்மேல் அன்பு காட்டினார்?

12 மக்கள்மேல் தனக்கு உண்மையான அன்பு இருந்ததை இயேசு காட்டினார். எப்படி? நகரம் நகரமாகப் போய், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மக்களுக்குச் சொன்னார். அதோடு, பார்வை இல்லாதவர்களையும், நடக்க முடியாதவர்களையும், தொழுநோயாளிகளையும், காது கேட்காதவர்களையும் குணப்படுத்தினார். இறந்தவர்களைக்கூட அவர் உயிரோடு எழுப்பினார். (லூக். 7:22) மனிதர்களை மீட்பதற்காக இயேசு தன் உயிரையே கொடுத்தார்; அவர்களில் நிறையப் பேர் அவரை வெறுத்தபோதிலும் அவர் அப்படிச் செய்தார். தன்னுடைய தகப்பன் காட்டிய அன்பை அவர் அப்படியே காட்டினார். உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் இயேசுவைப் பின்பற்றி மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறார்கள்.

13. மற்றவர்களிடம் நாம் காட்டும் அன்பு, யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள மற்றவர்களை எப்படித் தூண்டலாம்?

13 மற்றவர்கள்மேல் நாம் அன்பு காட்டும்போது, நம் பரலோக தகப்பனைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவார்கள். ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள். தாய்லாந்தில் இருந்த ஒருவர், மண்டல மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு சகோதர சகோதரிகள் ஒருவர்மேல் ஒருவர் காட்டிய அன்பு அவரை மிகவும் கவர்ந்தது. வீட்டுக்குப் போன பிறகு, வாரத்தில் இரண்டு தடவை தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி அவர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுக்கொண்டார். சத்தியத்தைப் பற்றித் தன்னுடைய எல்லா சொந்தக்காரர்களிடமும் பேசினார். ஆறே மாதங்களில், ராஜ்ய மன்றத்தில் தன்னுடைய முதல் நியமிப்பை, அதாவது பைபிள் வாசிப்பை, செய்தார். நீங்களும் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறீர்களா? உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட குடும்பத்தல இருக்கறவங்களுக்கும் சபையில இருக்கறவங்களுக்கும் ஊழியத்துல பார்க்கற ஆட்களுக்கும் என்னால முடிஞ்ச உதவிய செய்றேனா? மத்தவங்கள யெகோவா பார்க்கற மாதிரி பார்க்கறதுக்கு நான் முயற்சி செய்றேனா?’

ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும்

14, 15. என்னென்ன கெட்ட குணங்களை நிறையப் பேர் காட்டுகிறார்கள்? சிலர் எப்படித் தங்கள் சுபாவத்தை மாற்றியிருக்கிறார்கள்?

14 நாம் தவிர்க்க வேண்டிய இன்னும் சில கெட்ட குணங்களையும் மக்கள் இந்தக் கடைசி நாட்களில் காட்டிவருகிறார்கள். உதாரணத்துக்கு, நிறையப் பேர் நல்ல காரியங்களை விரும்புவதே கிடையாது. நல்லதை வெறுப்பதோடு, அதை எதிர்க்கவும் செய்கிறார்கள்! அப்படிப்பட்டவர்கள், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும் கொடூரமானவர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் அடங்காதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் யோசிக்காமல் நடந்துகொள்கிறார்கள். தங்களுடைய செயல்கள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை.

15 இப்படிப்பட்ட மிருகத்தனமான குணங்களைக் காட்டிய பலர் தங்களுடைய சுபாவத்தை அடியோடு மாற்றியிருக்கிறார்கள். இதைப் பற்றி ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் முன்கூட்டியே சொன்னது. (ஏசாயா 11:6, 7-ஐ வாசியுங்கள்.) ஓநாயையும் சிங்கத்தையும் போன்ற காட்டு மிருகங்கள், ஆட்டுக்குட்டியையும் கன்றுக்குட்டியையும் போன்ற வீட்டு விலங்குகளோடு சமாதானமாக வாழும் என்று அந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. அவை ஏன் சமாதானமாக வாழும்? “ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று அதே தீர்க்கதரிசனம் சொல்கிறது. (ஏசா. 11:9) மிருகங்களால் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடியாது. அதனால், மக்கள் தங்களுடைய சுபாவத்தை மாற்றிக்கொள்வார்கள் என்பதைத்தான் அடையாள அர்த்தத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.

பைபிள் நியமங்களின்படி நடக்கும்போது வாழ்க்கையே மாறிவிடுகிறது! (பாரா 16)

16. தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ள பைபிள் எப்படி மக்களுக்கு உதவியிருக்கிறது?

16 ஒரு காலத்தில், நம்முடைய சகோதர சகோதரிகளில் பலர் ஓநாய்களைப் போலக் கொடூரமானவர்களாக இருந்தார்கள்; ஆனால், இப்போது சாதுவாக மாறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிலருடைய அனுபவங்களை, jw.org வெப்சைட்டிலுள்ள “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தொடர் கட்டுரைகளில் நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இன்று, உலகத்தில் சிலர் பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்கள் கடவுளை வணங்குவதுபோல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறான செயல்களைச் செய்கிறார்கள். ஆனால், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருக்குச் சேவை செய்கிறவர்கள் அப்படிக் கிடையாது. முன்பு கொடூரமானவர்களாக இருந்தவர்கள்கூட இப்போது “கடவுளுடைய விருப்பத்தின்படி, உண்மையான நீதிக்கும் உண்மைத்தன்மைக்கும் ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை” அணிந்திருக்கிறார்கள். (எபே. 4:23, 24) மக்கள் கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது, அவருடைய தராதரங்களின்படி வாழ்வது அவசியம் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதனால், அவர்களுடைய நம்பிக்கைகளிலும் மனப்பான்மைகளிலும் நடத்தையிலும் மாற்றங்களைச் செய்கிறார்கள். இந்த மாற்றங்களைச் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும், கடவுளைப் பிரியப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அவருடைய சக்தி உதவும்.

“இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு”

17. மக்களுடைய கெட்ட குணங்கள் நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

17 கடவுளுக்கு சேவை செய்கிறவர்களுக்கும் சேவை செய்யாதவர்களுக்கும் இருக்கிற வித்தியாசத்தை இப்போது நம்மால் இன்னும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. கடவுளுக்கு சேவை செய்யாதவர்களுடைய கெட்ட குணங்கள் நம்மைத் தொற்றிக்கொள்ளாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். 2 தீமோத்தேயு 3:2-5-ல் விவரிக்கப்பட்டிருக்கும் மக்களை விட்டுவிலக வேண்டுமென்ற யெகோவாவின் அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். கெட்ட குணமுள்ள எல்லாரையும் நாம் ஒட்டுமொத்தமாக தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். ஏனென்றால், நாம் அப்படிப்பட்டவர்களோடு சேர்ந்து வேலை பார்க்க வேண்டியிருக்கலாம் அல்லது பள்ளியில் படிக்க வேண்டியிருக்கலாம் அல்லது ஒரே வீட்டில் தங்க வேண்டியிருக்கலாம். இருந்தாலும், நாம் அவர்களைப் போல் யோசிக்கவோ நடந்துகொள்ளவோ வேண்டியது இல்லை. அப்படிச் செய்யாமல் இருக்க எது நமக்கு உதவும்? யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை பலப்படுத்துவது நமக்கு உதவும். அதற்காக, பைபிளைப் படிக்க வேண்டும்; அதோடு, யெகோவாவை நேசிப்பவர்களை நம்முடைய நெருங்கிய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

18. நம்முடைய பேச்சும் நடத்தையும், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள எப்படி மற்றவர்களைத் தூண்டலாம்?

18 யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். அதனால், சத்தியத்தைப் பற்றிப் பேசுவதற்கு சந்தர்ப்பங்களைத் தேடுங்கள். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகளைப் பேசுவதற்கு யெகோவாவிடம் உதவி கேளுங்கள். நாம் யெகோவாவின் சாட்சிகள் என்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், நம்முடைய நல்ல நடத்தை நமக்குப் புகழ் சேர்ப்பதற்குப் பதிலாக யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும். “கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டுவிடுவதற்கும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதிமான்களாக, கடவுள்பக்தி உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்வதற்கும்” யெகோவா நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார். (தீத். 2:11-14) நாம் யெகோவாவைப் போல் நடந்துகொள்ளும்போதும், அவர் சொல்வதையெல்லாம் செய்யும்போதும், மக்கள் அதைக் கவனிப்பார்கள். அவர்களில் சிலர், “கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்” என்றுகூட சொல்லலாம்.—சக. 8:23.

^ பாரா. 10 “இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்” அல்லது “குற்றம் சுமத்துபவன்” என்பதற்கான கிரேக்க வார்த்தை டையபொலாஸ். பைபிளில் இந்த வார்த்தை சாத்தானுடைய பட்டப்பெயராகக் குறிப்பிடப்படுகிறது; ஏனென்றால், அவன் கடவுளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவனாக இருக்கிறான்.