Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நினைவுநாள் நிகழ்ச்சியும் அருமையான ஒற்றுமையும்

நினைவுநாள் நிகழ்ச்சியும் அருமையான ஒற்றுமையும்

“ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!”​—சங். 133:1.

பாடல்கள்: 149, 99

1, 2. 2018-ல் நடக்கப்போகிற எந்த நிகழ்ச்சி நம்மை அற்புதமான விதத்தில் ஒன்றுபடுத்தும், ஏன்? (ஆரம்பப் படம்)

வருஷத்தில் ஒரு முறை நடக்கும் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக, உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கானவர்கள் மார்ச் 31, 2018 அன்று ஒன்றுகூடி வருவார்கள். அன்று சூரியன் மறைந்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளும் ஆர்வமுள்ள நிறையப் பேரும் இயேசுவின் பலியை நினைத்துப் பார்ப்பதற்காக ஒன்றுகூடி வருவார்கள். ஒவ்வொரு வருஷமும், இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சி நம்மை அற்புதமான விதத்தில் ஒன்றுபடுத்துகிறது. உலகத்தில் வேறு எந்த நிகழ்ச்சியும் இந்தளவுக்கு யாரையும் ஒன்றுபடுத்துவதில்லை.

2 உலகம் முழுவதும் அந்த விசேஷ நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி வருவதைப் பார்க்கும்போது யெகோவாவும் இயேசுவும் எந்தளவுக்கு சந்தோஷப்படுவார்கள்! “எந்த மனிதனாலும் எண்ண முடியாதளவுக்குத் திரள் கூட்டமான மக்கள்,” அதாவது “எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள் . . . உரத்த குரலில், ‘சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்’” என்று சொல்வார்கள் என பைபிள் முன்னறிவித்தது. (வெளி. 7:9, 10) வருஷா வருஷம் நடக்கிற நினைவுநாள் நிகழ்ச்சியின் மூலம் யெகோவாவும் இயேசுவும் இப்படிக் கௌரவிக்கப்படுவது எவ்வளவு அருமையான விஷயம்!

3. இந்தக் கட்டுரையில் எந்தெந்த கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்வோம்?

3 இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது நாம் பார்க்கலாம்: (1) நினைவுநாள் நிகழ்ச்சிக்காக நாம் ஒவ்வொருவரும் எப்படித் தயாராகலாம், அதிலிருந்து எப்படி நன்மை அடையலாம்? (2) நினைவுநாள் நிகழ்ச்சி எப்படிக் கடவுளுடைய மக்களை ஒன்றுபடுத்துகிறது? (3) கடவுளுடைய மக்களின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்? (4) கடைசி நினைவுநாள் நிகழ்ச்சி என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி இருக்கிறதென்றால், எப்போது?

நினைவுநாள் நிகழ்ச்சிக்காகத் தயாரிப்பதும், அதிலிருந்து நன்மை அடைவதும் எப்படி?

4. நினைவுநாள் நிகழ்ச்சியில் நாம் கலந்துகொள்வது ஏன் முக்கியம்?

4 நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்று யோசித்துப் பாருங்கள். சபையாக ஒன்றுகூடிவருவது நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம் என்பதை மறந்துவிடாதீர்கள். கூட்டங்களிலேயே மிக முக்கியமான இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முயற்சி செய்கிறவர்களை யெகோவாவும் இயேசுவும் கவனிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உடல்நிலையோ சூழ்நிலையோ மிக மோசமாக இருந்தால் தவிர, இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாகக் கலந்துகொள்வோம் என்பதை யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நாம் காட்ட விரும்புகிறோம். கூட்டங்களை நாம் முக்கியமாக நினைப்பதைக் காட்டும்போது, யெகோவா தன்னுடைய ‘நினைவுப் புத்தகத்தில்,’ அதாவது “வாழ்வின் புத்தகத்தில்,” நம் பெயரை எழுதிவைப்பதற்குக் கூடுதலான காரணத்தை அளிக்கிறோம்.—மல். 3:16; வெளி. 20:15.

5. நாம் ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா’ என்பதை நினைவுநாளுக்கு முந்தைய வாரங்களில் எப்படி ‘சோதித்துப் பார்க்கலாம்’?

5 நினைவுநாளுக்கு முந்தைய வாரங்களில், நாம் நிறைய நேரம் எடுத்து ஜெபம் செய்யலாம்; அதோடு, யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் எந்தளவு பலமாக இருக்கிறதென்று ஆழ்ந்து யோசிக்கலாம். (2 கொரிந்தியர் 13:5-ஐ வாசியுங்கள்.) ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதை சோதித்துப் பார்க்க’ வேண்டுமென்று கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் சொன்னார். இதை நாம் எப்படிச் செய்யலாம்? நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவா தன்னோட விருப்பத்த நிறைவேத்துறதுக்காக இந்த அமைப்ப மட்டும்தான் தேர்ந்தெடுத்திருக்காருன்னு நான் நம்பறேனா? கடவுளோட அரசாங்கத்த பத்தி பிரசங்கிக்கறதுக்கும் கத்துக்கொடுக்கறதுக்கும் முழுமுயற்சி எடுக்கறேனா? நாம கடைசி காலத்துல வாழ்றோங்கறதயும் சாத்தானோட ஆட்சி சீக்கிரத்தில அழியுங்கறதயும் உண்மையிலேயே நம்பறேன்னு என்னோட செயல்ல காட்டறேனா? யெகோவாவுக்கு என்னை அர்ப்பணிச்சப்போ அவர்மேலயும் இயேசுமேலயும் எனக்கு எந்தளவு நம்பிக்கை இருந்துச்சோ அதே அளவு நம்பிக்கை இப்பவும் இருக்கா?’ (மத். 24:14; 2 தீ. 3:1; எபி. 3:14) நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நம்மையே எப்போதும் ‘ஆராய்ந்து பார்ப்பதற்கு’ இப்படிப்பட்ட கேள்விகள் உதவும்.

6. (அ) முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கான ஒரே வழி எது? (ஆ) ஒவ்வொரு வருஷமும் நினைவுநாளுக்காக ஒரு மூப்பர் எப்படித் தயாராகிறார், அதேபோல் நீங்களும் எப்படித் தயாராகலாம்?

6 நினைவுநாள் எந்தளவு முக்கியம் என்பதை விளக்கும் கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள், அவற்றைத் தியானித்துப் பாருங்கள். (யோவான் 3:16; 17:3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவைப் பற்றி ‘தெரிந்துகொண்டே இருப்பதும்,’ அவருடைய ஒரே மகனாகிய இயேசுமேல் ‘விசுவாசம் வைப்பதும்தான்’ முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு ஒரே வழி. அவர்கள் இரண்டு பேரிடமும் நெருங்கிவர உதவும் சில படிப்புத் திட்டங்களை ஆரம்பிப்பது, நினைவுநாளுக்காகத் தயாராவதற்கு உங்களுக்கு உதவும். நிறைய வருஷங்களாக மூப்பராக இருக்கும் ஒருவர் என்ன செய்துவந்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். நினைவுநாளைப் பற்றியும், யெகோவாவும் இயேசுவும் நம்மேல் காட்டியிருக்கிற அன்பைப் பற்றியும் விளக்குகிற காவற்கோபுர கட்டுரைகளைப் பல வருஷங்களாக அவர் எடுத்து வைத்திருக்கிறார். நினைவுநாளுக்கு முந்தைய வாரங்களில், அந்தக் கட்டுரைகளை மறுபடியும் அவர் படிப்பார்; பிறகு, நினைவுநாளின் முக்கியத்துவத்தைப் பற்றித் தியானிப்பார். ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கிற கட்டுரைகளோடு அவ்வப்போது ஓரிரண்டு கட்டுரைகளைச் சேர்த்துக்கொள்வார். இந்தக் கட்டுரைகளை மறுபடியும் படிப்பதாலும், நினைவுநாள் வாரத்தில் படிக்க வேண்டிய வசனங்களைப் படித்துத் தியானிப்பதாலும், ஒவ்வொரு வருஷமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாக அவர் சொல்கிறார். எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவா மீதும் இயேசு மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு ஒவ்வொரு வருஷமும் கூடிக்கொண்டே போவதாக அவர் உணருகிறார். நீங்களும் அவரைப் போல் ஒரு படிப்புத் திட்டத்தை வைத்திருந்தால், யெகோவா மீதும் இயேசு மீதும் உங்களுக்கு அன்பும் மதிப்பும் கூடும்; இப்படி, நினைவுநாள் நிகழ்ச்சியிலிருந்து இன்னும் முழுமையாக நன்மை அடைவீர்கள்.

ஒற்றுமையாக இருக்க நினைவுநாள் நிகழ்ச்சி நமக்கு உதவுகிறது

7. (அ) ‘எஜமானின் முதல் இரவு விருந்தின்போது’ இயேசு எதைப் பற்றி ஜெபம் செய்தார்? (ஆ) இயேசுவின் ஜெபத்துக்கு யெகோவா பதில் தந்திருக்கிறார் என்பதை எது காட்டுகிறது?

7 ‘எஜமானின் முதல் இரவு விருந்தின்போது,’ இயேசு ஒரு விசேஷ ஜெபத்தைச் செய்தார். தனக்கும் தன் தகப்பனுக்கும் இருக்கிற அருமையான ஒற்றுமையைப் பற்றி அதில் அவர் குறிப்பிட்டார். தங்களைப் போலவே தன்னுடைய சீஷர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று ஜெபம் செய்தார். (யோவான் 17:20, 21-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய அருமை மகன் செய்த அந்த ஜெபத்துக்கு யெகோவா பதில் தந்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நடத்துகிற வேறு எந்த கூட்டத்தையும்விட நினைவுநாள் நிகழ்ச்சி தெளிவாக நிரூபிக்கிறது. அந்த நிகழ்ச்சிக்காக, வித்தியாசப்பட்ட நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் உலகம் முழுவதும் ஒன்றுகூடி வருகிறார்கள்; இப்படி, யெகோவாதான் தன்னுடைய மகனை இந்த உலகத்துக்கு அனுப்பினார் என்று நம்புவதைக் காட்டுகிறார்கள். சில இடங்களில், ஒரு மதக் கூட்டத்துக்காக வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி வருவது ரொம்ப அபூர்வம்; அப்படியே அவர்கள் ஒன்றுகூடி வந்தால்கூட, அது தவறு என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நினைவுநாள் நிகழ்ச்சியின்போது நாம் காட்டும் ஒற்றுமை யெகோவாவின் கண்களிலும் இயேசுவின் கண்களிலும் அருமையாக இருக்கிறது.

8. ஒற்றுமையைப் பற்றிய என்ன செய்தியை எசேக்கியேலிடம் யெகோவா சொன்னார்?

8 யெகோவாவின் மக்களாகிய நாம் இப்படிப்பட்ட ஒற்றுமையை அனுபவிப்பது நமக்கு ஆச்சரியம் தருவதில்லை. ஏனென்றால், இதைப் பற்றி யெகோவா ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். எசேக்கியேல் தீர்க்கதரிசியிடம் அவர் சொன்ன செய்தியைக் கவனியுங்கள். இரண்டு கோல்களை எடுத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிடிக்கும்படி அவர் எசேக்கியேலிடம் சொன்னார். அதில் ஒன்று ‘யூதாவுக்கான’ கோல், இன்னொன்று ‘யோசேப்பின்’ கோல். (எசேக்கியேல் 37:15-17-ஐ வாசியுங்கள்.) ஜூலை 2016, காவற்கோபுரத்தில் வந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” இப்படி விளக்கியது: “தன்னுடைய மக்கள் சொந்த தேசத்துக்கு திரும்பி வருவார்கள், அவர்கள் மறுபடியும் ஒன்றுசேர்ந்து ஒரே தேசமாக இருப்பார்கள் என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொல்லியிருந்தார். கடைசி நாட்களில் யெகோவாவுடைய மக்கள் ஒன்றுசேர்ந்து அவரை வணங்குவார்கள் என்றும் இந்த தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது.”

9. எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை ஒவ்வொரு வருஷமும் நடக்கிற நினைவுநாள் நிகழ்ச்சியில் எப்படிப் பார்க்கிறோம்?

9 முதலில், ‘யூதாவுக்கான’ கோலைப் போல இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை 1919-ம் வருஷத்திலிருந்து யெகோவா மறுபடியும் ஒழுங்கமைக்கவும் ஒன்றுபடுத்தவும் ஆரம்பித்தார்; அதை அவர் படிப்படியாகச் செய்தார். பிறகு, பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள நிறையப் பேர், அதாவது ‘யோசேப்பின்’ கோலைப் போல இருப்பவர்கள், பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்; இந்த இரண்டு தொகுதியைச் சேர்ந்தவர்களும் ‘ஒரே மந்தையாக’ ஆனார்கள். (யோவா. 10:16; சக. 8:23) இந்த இரண்டு கோல்களையும் ஒரே கோலாகத் தன்னுடைய கையில் இணைக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். (எசே. 37:19) இந்த இரண்டு தொகுதியைச் சேர்ந்தவர்களும் இப்போது ஒற்றுமையோடு யெகோவாவுக்குச் சேவை செய்துவருகிறார்கள். அவர்களுடைய ஒரே ராஜா இயேசு கிறிஸ்து; அவரைக் கடவுளுடைய “ஊழியனாகிய தாவீது” என்று எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. (எசே. 37:24, 25) எசேக்கியேல் சொன்னது போலவே, இந்த இரண்டு தொகுதியைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருப்பதை ஒவ்வொரு வருஷமும் நடக்கிற இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சியில் கண்கூடாகப் பார்க்கிறோம். அந்த ஒற்றுமையைக் கட்டிக்காக்கவும் வளர்க்கவும் நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

நாம் ஒவ்வொருவரும் எப்படி ஒற்றுமையை வளர்க்கலாம்?

10. கடவுளுடைய மக்களின் ஒற்றுமையை வளர்ப்பதற்கு நாம் என்ன செய்யலாம்?

10 கடவுளுடைய மக்களின் ஒற்றுமையை வளர்ப்பதற்கான முதல் வழி, மனத்தாழ்மை காட்ட நாம் கடினமாக உழைப்பதாகும். இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது, தங்களைத் தாங்களே தாழ்த்தும்படி தன் சீஷர்களுக்கு அறிவுரை சொன்னார். (மத். 23:12) நாம் மனத்தாழ்மையாக இருந்தால், உலகத்தில் இருக்கும் நிறையப் பேரைப் போல அகம்பாவமாக நடந்துகொள்ள மாட்டோம். அதற்குப் பதிலாக, தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்கு அடிபணிந்து நடப்போம். அது சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்கு அவசியமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் மனத்தாழ்மை காட்டும்போது கடவுளுக்குப் பிரியமாக நடக்கிறோம். ஏனென்றால், “தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.”—1 பே. 5:5.

11. நினைவுநாள் சின்னங்களின் அர்த்தத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பது, ஒற்றுமையை வளர்க்க நமக்கு எப்படி உதவும்?

11 நாம் ஒற்றுமையை வளர்ப்பதற்கான இரண்டாவது வழி, நினைவுநாள் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும் சின்னங்களின் அர்த்தத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதாகும். அந்த விசேஷ இரவுக்கு முன்பாகவும், முக்கியமாக அந்த இரவிலும், புளிப்பில்லாத ரொட்டியும் சிவப்புத் திராட்சமதுவும் எதை அடையாளப்படுத்துகின்றன என்பதைக் கவனமாக யோசித்துப் பாருங்கள். (1 கொ. 11:23-25) அந்த ரொட்டி, இயேசு பலியாக செலுத்திய அவருடைய பாவமில்லாத உடலை அடையாளப்படுத்துகிறது; அந்தத் திராட்சமது, அவர் சிந்திய இரத்தத்தை அடையாளப்படுத்துகிறது. ஆனால், இந்த அடிப்படை உண்மைகளை மட்டும் நாம் புரிந்துவைத்திருப்பது போதாது. இயேசு செலுத்திய மீட்புப் பலி, இரண்டு பேருடைய தலைசிறந்த அன்புக்கு அத்தாட்சியாக இருக்கிறது என்பதை நாம் மனதில் வைக்கவும் வேண்டும்; அதாவது, நமக்காகத் தன்னுடைய மகனையே கொடுப்பதன் மூலம் யெகோவா காட்டிய அன்பையும், நமக்காகத் தன்னுடைய உயிரையே கொடுப்பதன் மூலம் இயேசு காட்டிய அன்பையும் நாம் மனதில் வைக்க வேண்டும். அவர்கள் நம்மேல் காட்டிய அன்பைப் பற்றி யோசிக்கும்போது, நாமும் அவர்கள்மேல் அன்பு காட்டத் தூண்டப்படுவோம். நாம் ஒவ்வொருவரும் யெகோவாமேல் வைத்திருக்கிற அன்பு நம்மைப் பின்னிப்பிணைக்கிறது, நம் ஒற்றுமையைப் பலப்படுத்துகிறது.

நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, ஒற்றுமையை வளர்க்கிறோம் (பாராக்கள் 12, 13)

12. நாம் மன்னிக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதை இயேசு எப்படி ஒரு உவமையின் மூலம் விளக்கினார்?

12 நாம் ஒற்றுமையை வளர்ப்பதற்கான மூன்றாவது வழி, மற்றவர்களைத் தாராளமாக மன்னிப்பதாகும். நம் மனதைப் புண்படுத்தியவர்களை நாம் மன்னிக்கும்போது, கிறிஸ்துவின் மீட்புப் பலியின் அடிப்படையில் யெகோவா நம் பாவங்களை மன்னிப்பதற்காக நன்றியோடு இருப்பதைக் காட்டுகிறோம். மத்தேயு 18:23-34-ல் இயேசு சொன்ன ஒரு உவமையை வாசித்துப் பாருங்கள். பிறகு, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இயேசு சொன்ன மாதிரி நடக்க நான் ஆசப்படறேனா? மத்த சகோதர சகோதரிகள புரிஞ்சு நடந்துக்குறேனா, அவங்ககிட்ட பொறுமை காட்டறேனா? எனக்கு எதிரா பாவம் செய்றவங்கள மன்னிக்கிறேனா?’ சில விதமான பாவங்கள் மற்ற பாவங்களைவிட ரொம்ப மோசமானவை என்பது உண்மைதான்; சில விதமான பாவங்களை மன்னிப்பது பாவ இயல்புள்ள மனிதர்களுக்கு ரொம்பக் கஷ்டம் என்பதும் உண்மைதான். ஆனாலும், யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த உவமை காட்டுகிறது. (மத்தேயு 18:35-ஐ வாசியுங்கள்.) நம் சகோதரர்கள் உண்மையிலேயே மனம் திருந்திய பிறகும் நாம் அவர்களை மன்னிக்காவிட்டால், யெகோவா நம்மை மன்னிக்க மாட்டார் என்பதை இயேசு தெளிவாகக் காட்டினார். இது, நாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம், இல்லையா? இயேசு கற்றுக்கொடுத்தபடி, மற்றவர்களை நாம் மன்னிக்கும்போது, நம்முடைய அருமையான ஒற்றுமையைக் கட்டிக்காக்கிறோம்.

13. நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்பது, ஒற்றுமையை வளர்க்க எப்படி உதவும்?

13 நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்பதைக் காட்டுகிறோம். “கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையை நினைத்துப் பாருங்கள். (எபே. 4:3) மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்று இந்த வருஷ நினைவுநாள் சமயத்திலும், முக்கியமாக அந்த இரவிலும், ஆழமாக யோசித்துப் பாருங்கள். ‘நான் யார்மேலயும் மனக்கசப்ப வளர்த்துக்கறது இல்லங்கறதயும், சமாதானமாவும் ஒற்றுமையாவும் இருக்கறதுக்குதான் பாடுபடறேங்கறதயும் மத்தவங்களால பார்க்க முடியுதா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இது, இந்த வருஷ நினைவுநாள் சமயத்தில் நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான கேள்வி!

14. நாம் ‘அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்கிறோம்’ என்று எப்படிக் காட்டலாம்?

14 ஒற்றுமையை வளர்ப்பதற்கான நான்காவது வழி, அன்பின் கடவுளாகிய யெகோவாவைப் போலவே அன்பு காட்டுவதாகும். (1 யோ. 4:8) நம்முடைய சகோதர சகோதரிகளில் யாரையாவது பற்றி, ‘நான் அவருமேல அன்பு காட்டணும்னு தெரியும், ஆனா எனக்கு அவர பிடிக்காது!’ என்று நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது. அப்படி நினைப்பது, “அன்பினால் ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்ற பவுலின் அறிவுரைக்கு நேர்மாறாக இருக்கும். (எபே. 4:2) வெறுமனே, “ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்” என்று பவுல் சொல்லவில்லை; “அன்பினால்” பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னார். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது! யெகோவா தன்னிடம் ஈர்த்திருக்கிற எல்லா விதமான மக்களும் நம்முடைய சபைகளில் இருக்கிறார்கள். (யோவா. 6:44) யெகோவா அவர்களைத் தன்னிடம் ஈர்த்திருப்பதால், அவர்கள்மேல் அவர் அன்பு வைத்திருக்கிறார் என்பது புரிகிறது. அப்படியிருக்கும்போது, அவர்கள் நம் அன்பைப் பெறுவதற்கு லாயக்கில்லாதவர்கள் என்று நாம் யாராவது நினைக்க முடியுமா? யெகோவா காட்டச் சொல்லியிருக்கும் அன்பை நாம் காட்டாமல் இருக்கவே கூடாது!—1 யோ. 4:20, 21.

கடைசி நினைவுநாள் நிகழ்ச்சி—எப்போது?

15. கடைசி நினைவுநாள் நிகழ்ச்சி ஒருநாள் வரும் என்று நமக்கு எப்படித் தெரியும்?

15 கடைசி நினைவுநாள் நிகழ்ச்சி ஒருநாள் வரும். இது நமக்கு எப்படித் தெரியும்? ஒவ்வொரு வருஷமும் இயேசுவின் மரணத்தை நினைத்துப் பார்ப்பதன் மூலம், ‘நம் எஜமான் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவிக்கிறோம்’ என்று பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். (1 கொ. 11:26) முடிவு காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்திலும், தான் ‘வரப்போவதை’ பற்றி இயேசு குறிப்பிட்டார். சீக்கிரத்தில் ஆரம்பிக்கப்போகும் மிகுந்த உபத்திரவத்தைப் பற்றி அவர் இப்படிச் சொன்னார்: “மனிதகுமாரனின் அடையாளம் வானத்தில் தோன்றும். பின்பு, பூமியில் இருக்கிற எல்லா கோத்திரத்தாரும் நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள். அதோடு, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்து மேகங்கள்மேல் வருவதை அவர்கள் பார்ப்பார்கள். எக்காள சத்தம் முழங்க அவர் தன்னுடைய தேவதூதர்களை அனுப்புவார்; கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை, நான்கு திசைகளிலிருந்தும் அவர்கள் கூட்டிச்சேர்ப்பார்கள்.” (மத். 24:29-31) ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட்டிச்சேர்க்கப்படுவது’ எதைக் குறிக்கிறது? பூமியில் மிஞ்சியிருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் பரலோகத்துக்குப் போவதைக் குறிக்கிறது. இது, மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு நடக்கும், ஆனால் அர்மகெதோன் போருக்கு முன்பு நடக்கும். அந்தப் போரில், பரலோக நம்பிக்கையுள்ள எல்லாரும், அதாவது 1,44,000 பேரும், இயேசுவோடு சேர்ந்து பூமியின் ராஜாக்களை ஜெயிப்பார்கள். (வெளி. 17:12-14) பரலோக நம்பிக்கையுள்ளவர்களைக் கூட்டிச்சேர்ப்பதற்காக இயேசு எப்போது ‘வருவாரோ,’ அதற்கு முன்பு நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சிதான் கடைசி நினைவுநாள் நிகழ்ச்சி!

16. இந்த வருஷ நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏன் தீர்மானமாக இருக்கிறீர்கள்?

16 மார்ச் 31, 2018 அன்று நடக்கும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்மை அடைய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும். யெகோவாவின் மக்களுடைய ஒற்றுமையைத் தொடர்ந்து கட்டிக்காக்க உதவி கேட்டு நாம் ஜெபம் செய்ய வேண்டும். (சங்கீதம் 133:1-ஐ வாசியுங்கள்.) ஒருநாள், நாம் கலந்துகொள்ளும் நினைவுநாள் நிகழ்ச்சிதான் கடைசி நினைவுநாள் நிகழ்ச்சியாக இருக்கும்! அதுவரை, எல்லா நினைவுநாள் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள நாம் முழுமுயற்சி செய்ய வேண்டும், அங்கே அனுபவிக்கும் அருமையான ஒற்றுமையை உயர்வாக மதிக்கவும் வேண்டும்.