Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

எஜமானைப் பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன்

எஜமானைப் பின்பற்றுவதற்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன்

எனக்கு 16 வயது இருந்தபோது, “நீ ஊழியத்துக்கு போறதா இருந்தா ஒரேடியா போயிடு! திரும்பி வந்தா, காலை உடச்சுடுவேன்” என்று என் அப்பா மிரட்டினார். அதனால், வீட்டைவிட்டுப் போக நான் முடிவு செய்தேன். நம் எஜமானாகிய இயேசுவைப் பின்பற்றுவதற்கு, முதல் தடவையாக எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன்.

என் அப்பா ஏன் அந்தளவுக்குக் கோபப்பட்டார்? சொல்கிறேன், கேளுங்கள். நான் ஜூலை 29, 1929-ல் பிறந்தேன். பிலிப்பைன்சில் இருக்கும் பூலாக்கான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நான் வளர்ந்தேன். எங்களிடம் அவ்வளவாகப் பணம் இல்லை, அதனால் நாங்கள் எளிமையாக வாழ்ந்தோம். நான் சின்னப் பையனாக இருந்தபோது, ஜப்பானியப் படை பிலிப்பைன்சைத் தாக்கியதால் போர் ஆரம்பித்தது. ஆனாலும், எங்கள் கிராமம் ஒதுக்குப்புறத்தில் இருந்ததால் நாங்கள் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. அப்போது, எங்களிடம் ரேடியோவோ டிவியோ செய்தித்தாள்களோ இல்லை. அதனால், மற்றவர்கள் சொல்வதை வைத்துத்தான் போர் நிலவரத்தைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.

என் கூடப்பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். எனக்கு எட்டு வயது இருக்கும்போது, என் தாத்தா பாட்டி என்னை அவர்களுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். கொஞ்சக் காலம் அங்குதான் நான் வளர்ந்தேன். நாங்கள் கத்தோலிக்கர்களாக இருந்தோம். ஆனாலும், யாராவது வந்து மதத்தைப் பற்றிப் பேசினால் என் தாத்தா தயங்காமல் அவர்களிடம் பேசுவார். அவருடைய நண்பர்கள் கொடுக்கும் மத புத்தகங்களையும் வாங்கிப் படிப்பார். ஒருநாள், பொய் மத போதனைகளை அம்பலப்படுத்திய சிறு புத்தகங்களை (டாகலாக் மொழியில்) அவர் என்னிடம் காட்டினார்; ஒரு பைபிளையும் காட்டினார். பைபிளைப் படிக்க எனக்குப் பிடித்திருந்தது. அதுவும், அதில் இருக்கிற நான்கு சுவிசேஷப் புத்தகங்களை நான் ரசித்துப் படித்தேன். அதனால்தான், இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆசை எனக்கு வந்தது.—யோவா. 10:27.

எஜமானைப் பின்பற்றக் கற்றுக்கொண்டேன்

1945-ல் ஜப்பானியப் படை பிலிப்பைன்சைவிட்டுப் போனது. அந்தச் சமயத்தில், என்னுடைய அப்பா அம்மா என்னை மறுபடியும் வீட்டுக்கு வரச் சொன்னார்கள். என் தாத்தாவும் என்னைப் போகச் சொன்னார். அதனால், நான் போனேன்.

டிசம்பர் 1945-ல், ஆங்காட் ஊரிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் எங்களுடைய கிராமத்துக்கு வந்து ஊழியம் செய்தார்கள். எங்கள் வீட்டுக்கு வயதான ஒரு சாட்சி வந்தார். ‘கடைசி நாட்களை’ பற்றி பைபிள் சொல்வதை அவர் விளக்கினார். (2 தீ. 3:1-5) பக்கத்திலிருந்த ஒரு கிராமத்தில் நடத்தப்பட்ட பைபிள் படிப்புக்கு வரும்படி அவர் எங்களைக் கூப்பிட்டார். நான் மட்டும் போனேன், என் அப்பா அம்மா வரவில்லை. அங்கே கிட்டத்தட்ட 20 பேர் இருந்தார்கள். சிலர் பைபிளைப் பற்றிக் கேள்விகள் கேட்டார்கள்.

அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்றே எனக்குப் புரியவில்லை, அதனால் அங்கிருந்து கிளம்ப நினைத்தேன். அப்போது, அவர்கள் ஒரு ராஜ்ய பாடலைப் பாட ஆரம்பித்தார்கள். எனக்கு அந்தப் பாட்டு ரொம்பப் பிடித்துவிட்டதால் அங்கேயே இருந்துவிட்டேன். பாட்டும் ஜெபமும் முடிந்த பிறகு, ஆங்காட் ஊரில் அந்த ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த கூட்டத்துக்கு எங்கள் எல்லாரையும் வரச் சொன்னார்கள்.

அந்தக் கூட்டம் க்ரூஸ் குடும்பத்தாருடைய வீட்டில் நடத்தப்பட்டது. எங்களில் சிலர் கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் (ஐந்து மைல்) தூரம் நடந்தே போனோம். அங்கே கிட்டத்தட்ட 50 பேர் வந்திருந்தார்கள். பைபிள் சம்பந்தப்பட்ட கஷ்டமான சில கேள்விகளுக்குச் சின்னப் பிள்ளைகள்கூட பதில் சொன்னதைக் கேட்டு நான் அசந்துபோனேன். இன்னும் நிறைய தடவை நான் கூட்டங்களுக்குப் போனேன். ஒருநாள், டாமியன் சான்டோஸ் என்ற வயதான பயனியர் சகோதரர், ராத்திரி அவருடைய வீட்டில் தங்கும்படி என்னைக் கூப்பிட்டார். அவர் முன்பு மேயராக இருந்தவர். விடியவிடிய நாங்கள் பைபிளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தக் காலத்திலெல்லாம், பைபிளிலுள்ள சில அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்டதுமே ஞானஸ்நானம் எடுத்துவிடுவார்கள். அதனால், ஒருசில கூட்டங்களுக்கு நான் போன பிறகு, “நீங்க ஞானஸ்நானம் எடுக்க ஆசப்படறீங்களா?” என்று சகோதரர்கள் என்னிடமும் மற்றவர்களிடமும் கேட்டார்கள். “ஆமா, கண்டிப்பா” என்று நான் சொன்னேன். ‘எஜமானாகிய கிறிஸ்துவுக்கு அடிமையாக வேலை செய்ய’ நான் விரும்பினேன். (கொலோ. 3:24) பக்கத்திலிருந்த ஒரு ஆற்றுக்கு நாங்கள் போனோம். பிப்ரவரி 15, 1946-ல் நானும் இன்னொருவரும் ஞானஸ்நானம் எடுத்தோம்.

ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள் இயேசுவைப் போலவே தவறாமல் ஊழியம் செய்ய வேண்டுமென்று நான் புரிந்துகொண்டேன். ஆனால், என் அப்பா என்னிடம், “ஊழியம் செய்ற அளவுக்கெல்லாம் உனக்கு இன்னும் வயசு ஆகல. ஆத்துல முங்கி எழுந்திட்டா நீ ஊழியக்காரனா ஆயிடுவியா?” என்று கேட்டார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை நாம் பிரசங்கிக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம் என்று அவருக்கு விளக்கினேன். (மத். 24:14) அதோடு, கடவுளுக்குக் கொடுத்த வாக்கை நான் காப்பாற்ற வேண்டும் என்றும் சொன்னேன். அப்போதுதான், ஆரம்பத்தில் நான் சொன்னபடி என் அப்பா என்னை மிரட்டினார். நான் ஊழியம் செய்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று அவர் நினைத்தார். அந்தச் சமயத்தில்தான், யெகோவாவுக்குச் சேவை செய்ய முதல் தடவையாகத் தியாகங்கள் செய்தேன், அதாவது எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன்.

ஆங்காட் ஊருக்கு வந்து தங்களோடு தங்கும்படி க்ரூஸ் குடும்பத்தார் என்னைக் கூப்பிட்டார்கள். அதோடு, பயனியர் ஊழியம் செய்யச் சொல்லி என்னையும் அவர்களுடைய கடைசிப் பெண் நோராவையும் உற்சாகப்படுத்தினார்கள். நாங்கள் இரண்டு பேரும் நவம்பர் 1, 1947-ல் பயனியர் செய்ய ஆரம்பித்தோம். நான் ஆங்காட் ஊரிலேயே ஊழியம் செய்தேன், ஆனால் நோரா இன்னொரு ஊருக்குப் போய் ஊழியம் செய்தாள்.

எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போக இன்னொரு வாய்ப்பு

நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்து இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, எர்ல் ஸ்டூயர்ட் என்ற சகோதரர் பெத்தேலிலிருந்து வந்து, ஆங்காட் ஊரின் பொதுச் சதுக்கத்தில் ஒரு பேச்சுக் கொடுத்தார். 500-க்கும் அதிகமானவர்கள் அங்கே வந்திருந்தார்கள். அவர் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்தார். பிறகு, அந்தப் பேச்சின் சுருக்கத்தை டாகலாக் மொழியில் நான் சொன்னேன். நான் மொழிபெயர்த்த முதல் பேச்சு அதுதான். அதற்குப் பிறகு எத்தனையோ பேச்சுகளை மொழிபெயர்த்திருக்கிறேன். உண்மையில், நான் ஏழு வருஷங்கள்தான் பள்ளிக்குப் போயிருக்கிறேன். அப்படியிருந்தும் என்னால் எப்படி மொழிபெயர்க்க முடிந்தது? என்னுடைய ஆசிரியர்கள் தவறாமல் ஆங்கிலத்தில் பேசினார்கள். அதோடு, நம்முடைய அமைப்பு வெளியிட்ட நிறைய பிரசுரங்கள் டாகலாக் மொழியில் கிடைக்காததால் அவற்றை ஆங்கிலத்தில்தான் படித்தேன். அதனால்தான், பேச்சுகளை மொழிபெயர்க்கும் அளவுக்கு என்னால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

1950-ல், அமெரிக்காவிலுள்ள நியு யார்க் நகரத்தில் “தேவராஜ்ய அதிகரிப்பு” என்ற மாநாடு நடக்கவிருந்தது. மிஷனரிகள் அதற்குப் போகப்போவதைப் பற்றி சகோதரர் ஸ்டூயர்ட் உள்ளூர் சபைக்குத் தெரிவித்தார். அதனால், பெத்தேலில் வேலை செய்ய ஓரிரண்டு பயனியர்கள் தேவைப்பட்டார்கள். அப்போதுதான் நான் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டேன். இந்தத் தடவை, பெத்தேல் சேவைக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் போனேன்.

ஜூன் 19, 1950-ல் நான் பெத்தேலில் காலடியெடுத்து வைத்தேன். அது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அமைந்திருந்த ஒரு பெரிய, பழைய வீட்டில் இருந்தது. சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் இருந்தன. கல்யாணமாகாத கிட்டத்தட்ட 12 சகோதரர்கள் அங்கே வேலை செய்தார்கள். விடியற்காலையில் நான் சமையல் வேலையில் உதவினேன். அதன் பிறகு, கிட்டத்தட்ட ஒன்பது மணிக்குத் துணிமணிகளுக்கு இஸ்திரி போடும் வேலை செய்தேன். மத்தியானமும் அதே வேலைகளைச் செய்தேன். சர்வதேச மாநாட்டை முடித்துவிட்டு மிஷனரிகள் திரும்பிய பிறகும்கூட, நான் பெத்தேலிலேயே வேலை செய்தேன். சகோதரர்கள் செய்யச் சொன்ன எல்லா வேலைகளையும் செய்தேன். உதாரணத்துக்கு, அஞ்சல் செய்வதற்காகப் பத்திரிகைகளைத் தயார்ப்படுத்தினேன், சந்தா விவரங்களைப் பதிவு செய்தேன், வரவேற்பறையிலும் வேலை செய்தேன்.

பிலிப்பைன்சிலிருந்து கிலியட் பள்ளிக்கு...

1952-ல், நானும் பிலிப்பைன்சிலிருந்த இன்னும் ஆறு சகோதரர்களும் கிலியட் பள்ளியின் 20-வது வகுப்புக்கு அழைக்கப்பட்டோம். நான் சந்தோஷத்தில் பூரித்துப்போனேன்! அமெரிக்காவில் நிறைய விஷயங்கள் எங்களுக்குப் புதிதாக இருந்தன. நான் வாழ்ந்த சின்ன கிராமத்துக்கும் அமெரிக்காவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

கிலியட் பள்ளியில் சில மாணவர்களோடு

உதாரணத்துக்கு, அதுவரை பார்க்காத புதுப் புது சாதனங்களையும் பாத்திரங்களையும் பயன்படுத்த நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. சீதோஷ்ணம்கூட ரொம்ப வித்தியாசமாக இருந்தது! ஒருநாள் காலையில் நான் எழுந்து பார்த்தபோது, எல்லாமே வெள்ளைவெளேர் என்று இருந்தது. அப்போதுதான், பனி பெய்ந்திருப்பதை முதல் தடவையாகப் பார்த்தேன். அது ரொம்ப அழகாக இருந்தது. ஆனால், குளிர் தாங்க முடியவில்லை!

கிலியட் பள்ளிப் படிப்பு ரொம்ப அருமையாக இருந்ததால், இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையாகவே எனக்குத் தெரியவில்லை. கிலியட் பள்ளியின் போதகர்கள் எல்லா விஷயங்களையும் அருமையாகச் சொல்லிக்கொடுத்தார்கள். எப்படிப் படிப்பது, எப்படி ஆராய்ச்சி செய்வது என்றெல்லாம் காட்டினார்கள். கிலியட் பள்ளியில் கிடைத்த பயிற்சி, யெகோவாவோடு எனக்கு இருந்த பந்தத்தைப் பலப்படுத்தியது என்பதில் சந்தேகமே இல்லை.

அந்தப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, நியு யார்க் நகரத்திலுள்ள ப்ராங்ஸ் ஊரில் விசேஷப் பயனியராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டேன். அதனால் ஜூலை 1953-ல், அங்கே நடந்த “புதிய உலக சமுதாயம்” என்ற மாநாட்டில் கலந்துகொள்ள முடிந்தது. அந்த மாநாட்டுக்குப் பிறகு நான் மறுபடியும் பிலிப்பைன்சுக்கு அனுப்பப்பட்டேன்.

நகரத்திலிருந்த வசதிகளை விட்டுவிட்டுப் போனேன்

பெத்தேலில் இருந்த சகோதரர்கள் என்னை வட்டாரக் கண்காணியாக நியமித்தார்கள். அதனால், இயேசுவைப் பின்பற்ற எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன; இயேசு எப்படித் தொலைதூர ஊர்களுக்கும் நகரங்களுக்கும் போய் யெகோவாவின் மக்களுக்கு உதவி செய்தாரோ, அதேபோல் நானும் உதவி செய்தேன். (1 பே. 2:21) பிலிப்பைன்சில் இருந்த மிகப் பெரிய தீவாகிய லுஜோன் தீவின் மத்தியப் பகுதியில்தான் நான் வட்டார சேவை செய்ய வேண்டியிருந்தது. அந்த மிகப் பெரிய பகுதியில்தான் பூலாக்கான், நிவேவா ஆசேஹா, டார்லக், ஸாம்பாலேஸ் மாகாணங்கள் இருந்தன. அங்கிருந்த சில ஊர்களுக்குப் போக கரடுமுரடான சையெர்ரா மாத்ரே மலைகளை நான் தாண்டிப்போக வேண்டியிருந்தது. அங்கே பஸ் வசதியோ ரயில் வசதியோ இல்லை. அதனால், நிறைய தடவை லாரி டிரைவர்களின் அனுமதியோடு, அவர்களுடைய லாரியில் ஏற்றப்பட்டிருந்த பெரிய பெரிய மரக்கட்டைகள்மேல் உட்கார்ந்து சவாரி செய்தேன். ஆனால், அப்படிச் சவாரி செய்வது ரொம்ப சிரமமாக இருந்தது.

அந்தப் பகுதியில் இருந்த பெரும்பாலான சபைகள் புதிய சபைகள், சின்ன சபைகள். அதனால், இன்னும் நன்றாகக் கூட்டங்களை நடத்தவும் வெளி ஊழிய ஏற்பாடுகளைச் செய்யவும் நான் உதவினேன். சகோதரர்கள் அதற்கு ரொம்ப நன்றியோடு இருந்தார்கள்.

பிற்பாடு, பீக்கோல் பகுதி முழுவதும் நான் வட்டார சேவை செய்ய வேண்டியிருந்தது. அந்தப் பகுதியில் நிறைய ஒதுக்குப்புறமான தொகுதிகள் இருந்தன. அதுவரை ஊழியம் செய்யப்படாத பகுதிகளில் விசேஷப் பயனியர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். நான் தங்கியிருந்த ஒரு வீட்டில், தரையில் தோண்டப்பட்ட ஒரு குழியைத்தான் கழிப்பிடமாகப் பயன்படுத்தினார்கள். அந்தக் குழிக்கு நடுவில் இரண்டு கம்புகளை குறுக்கே வைத்திருந்தார்கள். அந்தக் கம்புகள்மேல் நான் ஏறி நின்றபோது, அவை அந்தக் குழிக்குள் விழுந்துவிட்டன. அந்தக் கம்புகளோடு சேர்ந்து நானும் குழிக்குள் விழுந்துவிட்டேன். அதன் பிறகு குளித்துத் தயாராவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது!

நான் அந்த வட்டாரத்தில் சேவை செய்தபோது, என்னோடு சேர்ந்து பயனியர் ஊழியத்தை ஆரம்பித்த நோராவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது, டுமாகுடே நகரத்தில் விசேஷப் பயனியராக அவள் சேவை செய்துவந்தாள். அவளைப் பார்க்க அங்கே போனேன். பிறகு, கொஞ்சக் காலத்துக்கு நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொண்டோம். 1956-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். கல்யாணமான முதல் வாரத்தில், ராப்பூ ராப்பூ தீவில் இருந்த ஒரு சபையைச் சந்தித்தோம். அந்தத் தீவில் நாங்கள் மலைகளில் ஏறி இறங்க வேண்டியிருந்தது, ரொம்பத் தூரம் நடந்துபோகவும் வேண்டியிருந்தது. ஆனாலும், கணவன் மனைவியாகச் சேர்ந்து சேவை செய்ததும், தொலைதூர இடங்களில் இருந்த சகோதரர்களுக்கு உதவி செய்ததும் எங்களுக்குச் சந்தோஷத்தைத் தந்தது.

மறுபடியும் பெத்தேலுக்கு...

கிட்டத்தட்ட நான்கு வருஷங்களுக்கு வட்டார சேவை செய்த பிறகு, நாங்கள் மறுபடியும் கிளை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டோம். ஜனவரி 1960-ல் நாங்கள் அங்கே வேலை செய்ய ஆரம்பித்தோம். இத்தனை வருஷங்களாக, யெகோவாவின் அமைப்பில் பெரிய பொறுப்புகளில் இருந்த சகோதரர்களோடு சேர்ந்து பெத்தேலில் வேலை செய்ததால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது. நோராவும் பெத்தேலில் கிடைத்த வித்தியாசமான நியமிப்புகளைச் சந்தோஷமாகச் செய்திருக்கிறாள்.

மாநாட்டில் நான் கொடுத்த பேச்சு சிபுவானோ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது

பிலிப்பைன்சில் யெகோவாவுக்குச் சேவை செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போவதைப் பார்க்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. கல்யாணமாகாத ஒரு இளைஞனாக நான் பெத்தேல் சேவையை ஆரம்பித்தபோது, நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். ஆனால் இப்போது 2,00,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். பிரசங்க வேலையை ஆதரிப்பதற்காக நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் பெத்தேலில் சேவை செய்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில், பெத்தேல் வேலைகளுக்கு இன்னும் நிறைய இடம் தேவைப்பட்டது. அதனால், ஒரு பெரிய கிளை அலுவலகத்தைக் கட்டுவதற்கு இடம் பார்க்கும்படி ஆளும் குழு எங்களிடம் சொன்னது. அச்சக இலாகாவின் கண்காணியும் நானும் அக்கம்பக்கத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் போய், யாராவது தங்கள் நிலத்தை விற்கத் தயாராக இருக்கிறார்களா என்று கேட்டோம். ஆனால், யாருமே தயாராக இல்லை. அங்கிருந்த ஒருவர், “சீனாக்காரங்க யாரும் விற்க மாட்டோம், வாங்க மட்டும்தான் செய்வோம்” என்றுகூட சொன்னார்.

சகோதரர் ஆல்பர்ட் ஷ்ரோடர் கொடுத்த பேச்சை நான் மொழிபெயர்த்தபோது

ஆனாலும், ஒருநாள் திடீர்த் திருப்பம் ஏற்பட்டது. பெத்தேலுக்குப் பக்கத்தில் குடியிருந்த ஒருவர் அமெரிக்காவுக்குக் குடிமாறிப் போக முடிவு செய்தார். அதனால், தன்னுடைய நிலத்தை வாங்கிக்கொள்ள முடியுமா என்று எங்களிடம் கேட்டார். அதன் பிறகு, இன்னொருவரும் தன்னுடைய நிலத்தை விற்க முடிவு செய்தார். அதுமட்டுமல்ல, மற்றவர்களையும் அப்படி விற்கும்படி சொன்னார். “சீனாக்காரங்க யாரும் விற்க மாட்டோம்” என்று சொன்னவருடைய நிலத்தைக்கூட எங்களால் வாங்க முடிந்தது! கடைசியில், அப்போதிருந்த கிளை அலுவலகத்தைவிட மூன்று மடங்கு பெரிய இடம் எங்களுக்குக் கிடைத்தது. இது கண்டிப்பாக யெகோவாவின் ஏற்பாடுதான்!

1950-ல், பெத்தேலில் இருந்தவர்களிலேயே நான்தான் சின்னப் பையன். ஆனால் இப்போது, நானும் என் மனைவியும்தான் எல்லாரையும்விட வயதானவர்கள். இவ்வளவு காலம் இயேசு காட்டிய பாதையில் போனதற்காக நான் துளியும் வருத்தப்படவில்லை. என் அப்பா அம்மா என்னை வீட்டைவிட்டுத் துரத்தினாலும், யெகோவாவை நேசிக்கிற ஒரு பெரிய குடும்பம் எனக்குக் கிடைத்திருக்கிறது. யெகோவாதான் இந்தக் குடும்பத்தை எனக்குக் கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட நியமிப்புக் கிடைத்தாலும் சரி, நமக்குத் தேவையான எல்லாவற்றையுமே யெகோவா கொடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். யெகோவா அன்போடு செய்த எல்லா உதவிகளுக்காகவும் நானும் நோராவும் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். யெகோவாவைச் சோதித்துப் பார்க்கும்படி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறோம்.—மல். 3:10.

ஒரு தடவை, வரிவசூலிப்பவரான மத்தேயு லேவியைத் தன் சீஷராகும்படி இயேசு அழைத்தார். அப்போது மத்தேயு என்ன செய்தார்? “அவர் எழுந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிப் போனார்.” (லூக். 5:27, 28) எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. அப்படிச் செய்து ஆசீர்வாதங்களை அனுபவிக்கும்படி நான் மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறேன்.

பிலிப்பைன்சில் தொடர்ந்து சேவை செய்வதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்