Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இளம் பிள்ளைகளே, “உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்”

இளம் பிள்ளைகளே, “உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்”

‘நீங்கள் எப்போதும் கீழ்ப்படிந்து வந்திருக்கிறீர்கள். . . . பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்.’—பிலி. 2:12.

பாடல்கள்: 41, 89

1. ஞானஸ்நானம் எடுப்பது ஏன் மிகவும் முக்கியம்? (ஆரம்பப் படம்)

ஒவ்வொரு வருஷமும், பைபிளைப் படிக்கும் ஆயிரக்கணக்கான நபர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். அவர்களில் நிறையப் பேர் டீனேஜ் வயதை அல்லது அதைவிட சின்ன வயதைச் சேர்ந்தவர்கள். ஒருவேளை, அவர்கள் சத்தியத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், உங்களைப் பாராட்டுகிறோம்! ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்; மீட்புப் பெறுவதற்கும் என்றென்றும் வாழ்வதற்கும் அது அவசியம்.—மத். 28:19, 20; 1 பே. 3:21.

2. யெகோவாவுக்கு உங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க நீங்கள் ஏன் பயப்படக் கூடாது?

2 நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவா உங்களைப் பல விதங்களில் ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். அதேசமயத்தில், உங்களுக்கு நிறைய பொறுப்புகளும் வந்துசேர்ந்தன. எந்த விதத்தில்? நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த நாளில், “இயேசு கிறிஸ்துவுடைய பலியின் அடிப்படையில் உங்கள் பாவங்களைவிட்டு மனம் திருந்தி, யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதற்காக உங்களை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறீர்களா?” என்று ஞானஸ்நான பேச்சைக் கொடுத்த சகோதரர் கேட்டார். அதற்கு நீங்கள், ‘ஆம்’ என்று பதில் சொன்னீர்கள். யெகோவாமேல் அன்பு காட்டப்போவதாகவும், அவருடைய சேவைக்கு உங்கள் வாழ்க்கையில் முதலிடம் தரப்போவதாகவும் வாக்குக் கொடுத்தீர்கள். ஆனால், ‘ஏன்தான் அப்படியொரு வாக்கை கொடுத்தேனோ’ என்று நீங்கள் நினைக்கலாமா? நினைக்கவே கூடாது! யெகோவாவின் கையில் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்ததற்காக நீங்கள் ஒருபோதும் வருத்தப்பட மாட்டீர்கள்! யெகோவாவைப் பற்றித் தெரியாதவர்கள் சாத்தானுடைய உலகத்தின் பாகமாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை, உங்களைப் பற்றியும் அவன் கவலைப்படுவதே இல்லை. சொல்லப்போனால், நீங்கள் அவனுடைய பக்கம் சேர்ந்துகொண்டு... யெகோவாவைவிட்டு விலகி... என்றென்றும் வாழும் நம்பிக்கையை இழந்துவிட்டால்... அவனுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும்!

3. யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்ததற்காக அவர் உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார்?

3 யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்ததற்காக அவர் உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையையே நீங்கள் யெகோவாவின் கையில் கொடுத்திருப்பதால், “யெகோவா என் பக்கத்தில் இருக்கிறார், நான் பயப்பட மாட்டேன். மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று நம்பிக்கையோடு சொல்லலாம். (சங். 118:6) நீங்கள் கடவுளுடைய பக்கம் இருப்பதும், அவர் உங்களை நினைத்துப் பெருமைப்படுவதும் சாதாரண விஷயமா? இதைவிட பெரிய பாக்கியம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

உங்களுடைய பொறுப்பு

4, 5. (அ) கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பது நம்முடைய பொறுப்பு என்று ஏன் சொல்லலாம்? (ஆ) எல்லா வயதைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் என்ன பிரச்சினைகள் வருகின்றன?

4 உங்களுடைய பரம்பரை சொத்து உங்களுக்குத் தானாகவே வந்துசேரும்; ஆனால், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் தானாகவே வந்துவிடாது. நீங்கள் இன்னும் உங்கள் அப்பா அம்மாவோடு வாழ்ந்துகொண்டிருந்தாலும், யெகோவாவோடு பந்தத்தை வளர்த்துக்கொள்வது உங்களுடைய பொறுப்புதான். இதை எப்போதும் ஞாபகத்தில் வைப்பது ஏன் முக்கியம்? எதிர்காலத்தில் நம்முடைய விசுவாசம் எப்படிச் சோதிக்கப்படும் என்று யாருக்குமே தெரியாது. உதாரணத்துக்கு, டீனேஜ் வயதை எட்டுவதற்கு முன்பே நீங்கள் ஞானஸ்நானம் எடுத்திருக்கலாம். ஆனால் இப்போது டீனேஜ் வயதை எட்டிவிட்டதால் உங்கள் உணர்ச்சிகள் மாறியிருக்கலாம்; நீங்கள் புதிய பிரச்சினைகளையும் சந்திக்கலாம். ஒரு டீனேஜ் பெண் இப்படிச் சொன்னாள்: “யெகோவாவின் சாட்சியா இருக்கறதுனால ஸ்கூல்ல பர்த்டே கேக்கை சாப்பிட முடியலையேன்னு நினைச்சு சின்ன பிள்ளைங்க யாரும் அவ்வளவா கவலைப்பட மாட்டாங்க. ஆனா, அவங்களே கொஞ்சம் பெரிசானதுக்கு அப்புறம், செக்ஸ் வச்சுக்கணுங்கற ஆசை அதிகமா இருக்கற வயசுல, யெகோவாவோட சட்டங்களுக்கு கீழ்ப்படியறதுதான் எப்பவுமே நல்லதுங்கறத முழுமையா நம்ப வேண்டியிருக்கு.”

5 ஆனால், ஞானஸ்நானம் எடுத்த இளம் பிள்ளைகளுக்கு மட்டும்தான் புதுப் புது பிரச்சினைகள் வருகின்றன என்று சொல்ல முடியாது. ஞானஸ்நானம் எடுத்த பெரியவர்களுக்குக்கூட எதிர்பாராத சோதனைகள் வருகின்றன. கல்யாண வாழ்க்கையிலோ வேலை செய்யும் இடத்திலோ அவர்களுக்குப் பிரச்சினைகள் வரலாம், அவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளும் வரலாம். அதனால், சிறியவர்களோ பெரியவர்களோ, நாம் எல்லாருமே எல்லா சூழ்நிலையிலும் யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க வேண்டும்.—யாக். 1:12-14.

6. (அ) நீங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதன் அர்த்தம் என்ன? (ஆ) பிலிப்பியர் 4:11-13-லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 இந்த முக்கியமான விஷயத்தை எப்போதும் ஞாபகம் வைத்திருப்பது, உண்மையாக இருக்க உங்களுக்கு உதவும்: நீங்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் யெகோவாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அதாவது, வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, நீங்கள் அவருக்குச் சேவை செய்வீர்கள் என்று வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நண்பர்களோ பெற்றோர்களோ யெகோவாவுக்குச் சேவை செய்வதை விட்டுவிட்டாலும் நீங்கள் விட மாட்டீர்கள் என்று வாக்குக் கொடுத்திருக்கிறீர்கள். (சங். 27:10) அதனால், எல்லா சூழ்நிலைகளிலும் உங்கள் வாக்கைக் காப்பாற்றுவதற்கு யெகோவாவிடம் உதவி கேட்க மறந்துவிடாதீர்கள்.பிலிப்பியர் 4:11-13-ஐ வாசியுங்கள்.

7. “பயத்தோடும் நடுக்கத்தோடும்” உங்களுடைய மீட்புக்காக உழைப்பது என்றால் என்ன?

7 தன்னுடைய நண்பராக நீங்கள் இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். ஆனால், அவரோடு இருக்கும் நட்பைப் பலமாக வைத்திருப்பதற்கும், உங்களுடைய மீட்புக்காக உழைப்பதற்கும் முயற்சி தேவை. “பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்களுடைய மீட்புக்காக உழைத்து வாருங்கள்” என்று பிலிப்பியர் 2:12 சொல்கிறது. அதனால், என்ன பிரச்சினைகள் வந்தாலும், நாம் யெகோவாவைவிட்டு விலகாமல் எப்படி அவருக்கு உண்மையாக இருக்கலாம் என்பதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையோடு நாம் இருக்கக் கூடாது. நிறைய வருஷங்களாகக் கடவுளுக்குச் சேவை செய்த சிலர்கூட தொடர்ந்து உண்மையாக இருக்கவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் எப்படியெல்லாம் உங்களுடைய மீட்புக்காக உழைக்கலாம்?

பைபிளைப் படிப்பது முக்கியம்

8. பைபிளை நாம் எப்படிப் படிக்க வேண்டும்? அப்படிப் படிப்பது ஏன் முக்கியம்?

8 நாம் யெகோவாவின் நண்பராக இருப்பதற்கு, அவரிடம் பேச வேண்டும், அவர் பேசுவதைக் கேட்கவும் வேண்டும். அவர் பேசுவதைக் கேட்பதற்கான முக்கியமான வழி, பைபிளைப் படிப்பதுதான். அப்படியென்றால், பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசித்து தியானிக்க வேண்டும். ஆனால், பைபிளைப் படிப்பது, பரீட்சைக்காகப் பாடங்களை மனப்பாடம் செய்வதைப் போன்றது கிடையாது. அது சுவாரஸ்யமான ஒரு பயணத்தைப் போன்றது. பைபிளைப் படிக்கும்போது யெகோவாவைப் பற்றிப் புதுப் புது விஷயங்களைத் தேடிக் கண்டுபிடிப்பீர்கள். நீங்கள் கடவுளிடம் நெருங்கிவருவீர்கள், அவரும் உங்களிடம் நெருங்கிவருவார்.—யாக். 4:8.

யெகோவாவோடு உங்களுக்கு நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கிறதா? (பாராக்கள் 8-11)

9. உங்களுடைய தனிப்பட்ட படிப்புக்கு என்னென்ன கருவிகள் உதவியாக இருந்திருக்கின்றன?

9 பைபிளை ஆழமாகப் படிப்பதற்கு யெகோவாவின் அமைப்பு நிறைய கருவிகளை உங்களுக்குத் தந்திருக்கிறது. உதாரணத்துக்கு, நம்முடைய வெப்சைட்டில் “டீனேஜர்கள்” என்ற பிரிவில் “பைபிளைப் படி... யோசித்துப் பார்...” என்ற பகுதி இருக்கிறது. பைபிள் பதிவுகளிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயங்களைக் கடைப்பிடிக்க அது உங்களுக்கு உதவும். நம்முடைய வெப்சைட்டில், “பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?” என்ற புத்தகத்துக்கான படிப்புப் பயிற்சிகளும் இருக்கின்றன. உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளவும், உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேசவும் இவை உதவும். தனிப்பட்ட படிப்புக்கு உதவும் மற்ற ஆலோசனைகள், ஜூலை 2009 விழித்தெழு! இதழில் இருக்கிற “இளைஞர் கேட்கின்றனர் . . . ஆர்வமாய் பைபிள் வாசிப்பதற்கு நான் என்ன செய்யலாம்?” என்ற கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் மீட்புக்காக உழைப்பதற்கு பைபிளைப் படிப்பதும் தியானிப்பதும் அவசியம்.சங்கீதம் 119:105-ஐ வாசியுங்கள்.

ஜெபம் செய்வது அவசியம்

10. ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்வது ஏன் அவசியம்?

10 நாம் பைபிளைப் படிக்கும்போது, யெகோவா பேசுவதைக் கேட்கிறோம்; நாம் ஜெபம் செய்யும்போது, நாம் அவரிடம் பேசுகிறோம். ஜெபத்தை ஏதோவொரு சடங்கு என்று நாம் நினைத்துவிடக் கூடாது; அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஏதோவொரு ‘மந்திரம்’ என்றும் நினைத்துவிடக் கூடாது. நம்மைப் படைத்தவரிடம் மனம்திறந்து பேசுவதைத்தான் ஜெபம் என்று சொல்கிறோம். இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: நீங்கள் சொல்ல நினைப்பதை யெகோவா கேட்க விரும்புகிறார்! (பிலிப்பியர் 4:6-ஐ வாசியுங்கள்.) அதனால், ஏதோவொரு பிரச்சினையை நினைத்து நீங்கள் கவலைப்படும்போது, ‘யெகோவாமேல் உங்கள் பாரத்தைப் போட்டுவிடுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (சங். 55:22) இந்த ஆலோசனை தங்களுக்கு உதவியிருப்பதாக லட்சக்கணக்கான சகோதர சகோதரிகள் சொல்கிறார்கள். இது உங்களுக்கும் உதவும் என்பது நிச்சயம்!

11. நீங்கள் ஏன் யெகோவாவுக்கு எப்போதும் நன்றி சொல்ல வேண்டும்?

11 ஆனால், உதவி தேவைப்படும்போது மட்டும் நாம் யெகோவாவிடம் ஜெபம் செய்வது சரியாக இருக்காது. “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்” என்று பைபிள் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. (கொலோ. 3:15) சிலசமயங்களில், நம்முடைய பிரச்சினைகளை நினைத்தே நாம் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதால், நாம் ஏற்கெனவே அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசிக்காமல் போய்விடுகிறோம். அதனால், இப்படிச் செய்து பாருங்கள்: யெகோவா உங்களுக்காகக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களில் குறைந்தது மூன்றையாவது ஒவ்வொரு நாளும் யோசியுங்கள். பிறகு, அவற்றுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். 12 வயதில் ஞானஸ்நானம் எடுத்த அபிகெயில் என்ற டீனேஜ் பெண் இப்படிச் சொல்கிறாள்: “இந்த உலகத்துலேயே நாம யெகோவாவுக்குத்தான் நிறைய நன்றி சொல்லணும். அவரு நமக்கு கொடுத்திருக்கிற எல்லா பரிசுக்கும் நாம எப்பவுமே நன்றி சொல்லணும்.” * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

சொந்த அனுபவத்தின் மதிப்பு

12, 13. யெகோவா நல்லவர் என்பதை உங்கள் வாழ்க்கையில் எப்படி ருசித்துப் பார்த்திருக்கிறீர்கள், யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறார் என்பதை யோசிப்பது ஏன் முக்கியம்?

12 நிறைய கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க தாவீது ராஜாவுக்கு யெகோவா உதவி செய்தார். அதனால், “யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள். அவரிடம் தஞ்சம் அடைகிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று தாவீது சொன்னார். (சங். 34:8) யெகோவா நல்லவர் என்பதை நம்முடைய சொந்த அனுபவத்தில் நாம் ருசித்துப் பார்க்க வேண்டுமென்று அந்த வசனம் காட்டுகிறது. பைபிள் மற்றும் பைபிள் பிரசுரங்களை வாசிக்கும்போதும், கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதும், உண்மையாக இருக்க யெகோவா மற்றவர்களுக்கு எப்படி உதவியிருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். ஆனால், யெகோவாவிடம் நீங்கள் நெருங்க நெருங்க, அவர் உங்களுக்கு எப்படி உதவுகிறார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். யெகோவா நல்லவர் என்பதை உங்கள் வாழ்க்கையில் எப்படி ருசித்துப் பார்த்திருக்கிறீர்கள்?

13 ஒவ்வொரு கிறிஸ்தவரும், யெகோவா நல்லவர் என்பதை விசேஷமான ஒரு விதத்தில் ருசித்துப் பார்த்திருக்கிறார்கள். அதாவது, தன்னிடமும் தன் மகனிடமும் நெருங்கி வரும்படி அவர் நம் ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறார். “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் அவன் என்னிடம் வர முடியாது” என்று இயேசு சொன்னார். (யோவா. 6:44) யெகோவா உங்களைத் தன்னிடம் ஈர்த்திருக்கிறார் என்று நினைக்கிறீர்களா? அல்லது, அவர் உங்கள் அப்பா அம்மாவைத் தன்னிடம் ஈர்த்திருப்பதாகவும் நீங்கள் வெறுமனே அவர்களுடைய வழியில் போவதாகவும் நினைக்கிறீர்களா? நீங்கள் யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்தபோது, அவரோடு உங்களுக்கு ஒரு விசேஷ பந்தம் உருவானதை நினைத்துப் பாருங்கள். “ஒருவன் கடவுள்மீது அன்பு வைத்திருந்தால், கடவுள் அவனை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 8:3) யெகோவா தன்னுடைய அமைப்பில் உங்களுக்குத் தந்திருக்கும் இடத்தை எப்போதும் ஒரு பொக்கிஷமாக நினையுங்கள்.

14, 15. ஊழியம் செய்வது, பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள எப்படி உதவும்?

14 ஊழியத்திலோ பள்ளியிலோ உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச யெகோவா உங்களுக்குத் தைரியம் தரும்போதும், அவர் நல்லவர் என்பதை உங்களால் ருசித்துப் பார்க்க முடியும். கூடப் படிக்கிறவர்களிடம் பைபிளைப் பற்றிப் பேசுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அவர்கள் என்ன சொல்வார்களோ என்று நீங்கள் பயப்படலாம். அதுவும், நிறையப் பேருக்கு முன்னால் உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி விளக்க நீங்கள் ரொம்பவே பயப்படலாம். அப்படியென்றால், நீங்கள் என்ன செய்யலாம்?

15 பைபிள் சொல்லும் விஷயங்களை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்று முதலில் யோசித்துப் பாருங்கள். நம்முடைய வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் படிப்புப் பயிற்சிகள் உங்கள் மொழியில் இருந்தால், தயவுசெய்து அவற்றைப் பயன்படுத்துங்கள். நீங்கள் என்ன நம்புகிறீர்கள், அதை ஏன் நம்புகிறீர்கள், அதை மற்றவர்களிடம் எப்படி விளக்கிச் சொல்வீர்கள் என்றெல்லாம் யோசித்துப் பார்க்க அந்தப் படிப்புப் பயிற்சிகள் உங்களுக்கு உதவும். உங்கள் நம்பிக்கைகள் சரிதான் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கும்போதும், நீங்கள் நன்றாகத் தயாரிக்கும்போதும், யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுக்க விரும்புவீர்கள்.எரே. 20:8, 9.

16. உங்கள் நம்பிக்கைகளைப் பற்றித் தைரியமாகப் பேச எது உதவும்?

16 நீங்கள் நன்றாகத் தயாரித்திருந்தாலும், உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச ஒருவேளை உங்களுக்குப் பயமாக இருக்கலாம். 13 வயதில் ஞானஸ்நானம் எடுத்த 18 வயது சகோதரி இப்படிச் சொல்கிறாள்: “என்னோட நம்பிக்கைகள பத்தி எனக்கு நல்லா தெரியும், ஆனா அத பத்தி சொல்றதுக்குத்தான் சிலசமயம் வாயே வராது.” இந்தப் பிரச்சினையை அவள் எப்படிச் சமாளிக்கிறாள்? “நான் எப்பவும்போல சாதாரணமா பேசறதுக்கு முயற்சி எடுப்பேன்” என்று அவள் சொல்கிறாள். “என்கூட படிக்கிற பிள்ளைங்க, அவங்க செய்ற விஷயங்கள பத்தியெல்லாம் ஜாலியா பேசிட்டு இருப்பாங்க. அப்படின்னா, நான் செய்ற விஷயங்கள பத்தி நானும் பயப்படாம பேசணும்தானே! அதனால, ‘அன்னைக்கு நான் பைபிள பத்தி சொல்லிக்கொடுத்திட்டு இருந்தப்போ என்னாச்சுன்னா . . .’ அப்படின்னு பேச்சுவாக்குல ஆரம்பிப்பேன். நான் பைபிள பத்தி நேரடியா பேசலன்னாலும், பைபிள பத்தி நான் என்ன சொல்லிக்கொடுக்குறேன்னு தெரிஞ்சுக்க மத்தவங்க ஆசப்படுவாங்க. சிலசமயம் அத பத்தி கேள்விகள்கூட கேட்பாங்க. இந்த மாதிரி நான் பேசப் பேச, என்னால சுலபமா சாட்சி கொடுக்க முடியுது. அதுக்கப்புறம் ரொம்ப சந்தோஷமாயிடுது!” என்றும் அவள் சொல்கிறாள்.

17. மற்றவர்களிடம் தைரியமாகப் பேச வேறு எதுவும் உங்களுக்கு உதவும்?

17 நீங்கள் மற்றவர்கள்மேல் உண்மையான அக்கறையும் மரியாதையும் காட்டும்போது, உங்களையும் உங்கள் நம்பிக்கைகளையும் அவர்கள் மதிப்பார்கள். சிறு வயதில் ஞானஸ்நானம் எடுத்த 17 வயது ஒலீவியா, “பைபிள பத்தி பேச்சு எடுத்தாலே நான் ஏதோ மதவெறி பிடிச்சவள்னு மத்தவங்க நினைச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கும்” என்று சொல்கிறாள். பிறகு, தான் யோசிக்கும் விதத்தை அவள் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள். தனக்குப் பயமாக இருந்த விஷயங்களைப் பற்றியே யோசிப்பதற்குப் பதிலாக, இப்படி யோசித்தாள்: “நிறைய இளைஞர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள பத்தி ஒண்ணுமே தெரியாது. நம்மள தவிர வேற சாட்சிகள அவங்க பார்த்திருக்கக்கூட மாட்டாங்க. அதனால, நாம சொல்றத அவங்க கேட்பாங்களா மாட்டாங்களா அப்படிங்கறது, நாம எப்படி நடந்துக்குறோங்கறத பொறுத்துதான் இருக்கு. நம்ம நம்பிக்கைகள பத்தி பேச நாம வெட்கப்பட்டாவோ, கூச்சப்பட்டாவோ, சிரமப்பட்டாவோ, தர்மசங்கடப்பட்டாவோ அவங்க என்ன யோசிப்பாங்க? யெகோவாவின் சாட்சியா இருக்கறத நாம பெருமையா நினைக்கலன்னுதான் யோசிப்பாங்க. நம்பிக்கை இல்லாம நாம பேசறத பார்த்துட்டு அவங்க ஒருவேள நம்மகிட்ட மரியாதை இல்லாமகூட நடந்துக்கலாம். ஆனா, பயமோ தயக்கமோ இல்லாம இயல்பாவும் உறுதியாவும் நம்ம நம்பிக்கைகள பத்தி பேசறப்போ, நம்மமேல அவங்களுக்கு மரியாதை வர நிறைய வாய்ப்பு இருக்கு.”

உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்

18. நீங்கள் எப்படியெல்லாம் உங்கள் மீட்புக்காக உழைக்கலாம்?

18 உங்கள் மீட்புக்காக உழைப்பது ஒரு முக்கியமான பொறுப்பு என்பதை நாம் பார்த்தோம். அப்படி உழைப்பதற்காக, கடவுளுடைய வார்த்தையை நாம் வாசிக்கவும் தியானிக்கவும் வேண்டும், யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும், தனிப்பட்ட விதமாக உங்களுக்கு அவர் எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதை நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். இதையெல்லாம் செய்தால், யெகோவா உங்கள் நண்பர் என்பதை இன்னும் உறுதியாக நம்புவீர்கள். அப்போது, உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேச விரும்புவீர்கள்.சங்கீதம் 73:28-ஐ வாசியுங்கள்.

19. உங்கள் மீட்புக்காக உழைப்பது ஏன் வீண்போகாது?

19 “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத். 16:24) அதனால், இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க வேண்டியது அவசியம். இப்போதே ஏராளமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பதற்கும், எதிர்காலத்தில் கடவுளுடைய புதிய உலகத்தில் முடிவில்லாமல் வாழ்வதற்கும் அது வழிநடத்தும். அதனால், உங்கள் மீட்புக்காகத் தொடர்ந்து உழையுங்கள்!

^ பாரா. 11 கூடுதலான ஆலோசனைகளுக்கு, jw.org வெப்சைட்டில், “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—நான் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?” என்ற கட்டுரையையும் அதற்கான ஒர்க் ஷீட்டையும் பாருங்கள்.