Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோர்களே, ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பிள்ளைகளுக்கு உதவுங்கள்

பெற்றோர்களே, ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பிள்ளைகளுக்கு உதவுங்கள்

“பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறாய்; அவை உனக்கு ஞானத்தைத் தந்து . . . நீ மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்.”—2 தீ. 3:15.

பாடல்கள்: 130, 88

1, 2. பிள்ளைகள் யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க விரும்பும்போது சில பெற்றோர் எதை நினைத்துக் கவலைப்படலாம்?

பைபிளைப் படிக்கும் ஆயிரக்கணக்கான நபர்கள் யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். அவர்களில் நிறையப் பேர், சத்தியத்தில் வளர்க்கப்பட்ட இளைஞர்கள்; அவர்கள் சிறந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். (சங். 1:1-3) நீங்கள் ஒரு கிறிஸ்தவப் பெற்றோராக இருந்தால், உங்கள் மகனோ மகளோ ஞானஸ்நானம் எடுக்கப்போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள்.—3 யோவான் 4-ஐ ஒப்பிடுங்கள்.

2 இருந்தாலும், ஒரு விஷயத்தை நினைத்து நீங்கள் கவலைப்படலாம். ஞானஸ்நானம் எடுத்த சில இளைஞர்கள், கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதில் உண்மையிலேயே பிரயோஜனம் இருக்கிறதா என்று பிற்பாடு யோசிக்க ஆரம்பிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். சிலர் சத்தியத்தைவிட்டே போயிருக்கிறார்கள். அதனால், உங்கள் பிள்ளையும் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்துவிட்டு, பிறகு சத்தியத்தின் மேலுள்ள அன்பை இழந்துவிட்டால் என்ன செய்வதென்று நீங்கள் கவலைப்படலாம். முதல் நூற்றாண்டிலிருந்த எபேசு சபையைச் சேர்ந்த சில கிறிஸ்தவர்களைப் போல உங்கள் பிள்ளை ஆகிவிடலாம் என்று நினைத்து நீங்கள் பயப்படலாம். “ஆரம்பத்தில் இருந்த அன்பை நீ விட்டுவிட்டாய்” என்று இயேசு அந்தக் கிறிஸ்தவர்களிடம் சொன்னார். (வெளி. 2:4) உங்கள் பிள்ளை சத்தியத்தின் மேல் இருக்கும் அன்பை இழந்துவிடாமல் இருப்பதற்கும், ‘வளர்ச்சியடைந்து மீட்புப் பெறுவதற்கும்’ நீங்கள் எப்படி உதவி செய்யலாம்? (1 பே. 2:2) அதைத் தெரிந்துகொள்வதற்கு, தீமோத்தேயுவின் உதாரணத்தைப் பார்க்கலாம்.

‘பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருப்பது’

3. (அ) தீமோத்தேயு எப்படி ஒரு கிறிஸ்தவரானார், இயேசுவின் போதனைகளைக் கற்றுக்கொண்டபோது அவர் என்ன செய்தார்? (ஆ) கற்றுக்கொள்வதில் அடங்கியிருக்கும் என்ன மூன்று அம்சங்களைப் பற்றி தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார்?

3 கி.பி. 47-ல் அப்போஸ்தலன் பவுல் முதல் தடவையாக லீஸ்திராவுக்குப் போனார். அப்போது தீமோத்தேயு டீனேஜ் வயதில் இருந்திருக்கலாம். அந்தச் சமயத்தில்தான் அவர் இயேசுவின் போதனைகளைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பார். கற்றுக்கொண்ட விஷயங்களை அவர் கடைப்பிடித்தார். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, பவுலோடு சேர்ந்து பயணம் செய்ய ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 16 வருஷங்களுக்குப் பிறகு, தீமோத்தேயுவுக்கு பவுல் இப்படி எழுதினார்: “நீ கற்றுக்கொண்ட விஷயங்களை, நம்பிக்கை வைக்கும் விதத்தில் உனக்குப் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களை விடாமல் கடைப்பிடி; அவற்றை யாரிடமிருந்து கற்றுக்கொண்டாய் என்பது உனக்குத் தெரியுமே. அதுவும், பரிசுத்த எழுத்துக்களை [அதாவது, எபிரெய வேதாகமத்தை] நீ சிசுப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறாய்; அவை உனக்கு ஞானத்தைத் தந்து கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம் நீ மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்.” (2 தீ. 3:14, 15) பவுல் சொன்ன இந்த மூன்று குறிப்புகளைக் கவனியுங்கள்: (1) பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருப்பது, (2) பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது, (3) கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தின் மூலம், மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தைப் பெற்றிருப்பது.

4. உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க நீங்கள் எதையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறீர்கள்? (ஆரம்பப் படம்)

4 ஒரு கிறிஸ்தவப் பெற்றோராக, உங்கள் பிள்ளை பரிசுத்த எழுத்துக்களை அறிந்திருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்பலாம். இன்று பரிசுத்த எழுத்துக்கள் என்பது, எபிரெய வேதாகமத்தையும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் மக்களைப் பற்றியும் சம்பவங்களைப் பற்றியும் சின்னஞ்சிறு பிள்ளைகளால்கூட கற்றுக்கொள்ள முடியும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்வதற்காக நிறைய புத்தகங்களையும் சிற்றேடுகளையும் வீடியோக்களையும் யெகோவாவின் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இவற்றில் எவையெல்லாம் உங்கள் மொழியில் கிடைக்கின்றன? உங்கள் பிள்ளை யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், பைபிளில் இருக்கும் விஷயங்களை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது’

5. (அ) ‘பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் நம்பிக்கை வைப்பது’ என்பதற்கான கிரேக்க வார்த்தைகளின் அர்த்தம் என்ன? (ஆ) இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியில் தீமோத்தேயு உறுதியான விசுவாசம் வைத்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

5 பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் மக்களையும் சம்பவங்களையும் பற்றி மட்டுமே பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால் போதாது. தீமோத்தேயுவின் விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். ‘பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்ட விஷயங்களில் அவர் நம்பிக்கை வைத்தார்.’ பவுல் இங்கே பயன்படுத்திய கிரேக்க வார்த்தைகளின் அர்த்தம், “உறுதியாக இருப்பது” அல்லது “ஏதோவொரு விஷயம் உண்மை என்பதை எந்தச் சந்தேகமும் இல்லாமல் உறுதியாக நம்புவது.” தீமோத்தேயுவுக்கு “சிசுப் பருவத்திலிருந்தே,” அதாவது சின்னஞ்சிறு வயதிலிருந்தே, எபிரெய வேதாகமம் தெரிந்திருந்தது என்பது உண்மைதான். ஆனால், இயேசுவே மேசியா என்பதற்கான மறுக்க முடியாத அத்தாட்சிகளைத் தெரிந்துகொண்டபோதுதான் அதை உறுதியாக நம்பினார். இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியில் அவர் உறுதியான விசுவாசம் வைத்ததால் ஞானஸ்நானம் எடுத்து, பவுலோடு சேர்ந்து ஒரு மிஷனரியாகச் சேவை செய்ய ஆரம்பித்தார்.

6. கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

6 “நம்பிக்கை வைக்கும் விதத்தில்” தீமோத்தேயுவுக்கு விஷயங்கள் பக்குவமாக எடுத்துச்சொல்லப்பட்டதால், அவர் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார். அப்படியென்றால், உங்கள் பிள்ளையும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளும் அளவுக்கு விஷயங்களை நீங்கள் எப்படிப் பக்குவமாக எடுத்துச்சொல்லலாம்? முதலில், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள காலம் எடுக்கும். அதோடு, நீங்கள் ஒரு விஷயத்தை நம்புகிறீர்கள் என்பதற்காக உங்கள் பிள்ளையும் அதை நம்பிவிடுவான் என்று சொல்ல முடியாது. பைபிள்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள ஒவ்வொரு பிள்ளையும் தன்னுடைய “சிந்திக்கும் திறனை” பயன்படுத்த வேண்டும். (ரோமர் 12:1-ஐ வாசியுங்கள்.) உங்கள் பிள்ளைகள் தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள, உங்களால் நிறைய உதவி செய்ய முடியும். முக்கியமாக, அவர்கள் கேள்விகள் கேட்கும்போது உங்களால் அப்படி உதவி செய்ய முடியும். ஒரு அப்பாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இப்போது பார்க்கலாம்.

7, 8. (அ) ஒரு அப்பா தன் மகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது எப்படிப் பொறுமை காட்டுகிறார்? (ஆ) நீங்கள் எப்போது உங்கள் பிள்ளையிடம் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது?

7 தாமஸ் என்ற சகோதரருக்கு 11 வயது மகள் இருக்கிறாள். சிலசமயங்களில், அவள் அவரிடம் கேள்விகள் கேட்பாள். உதாரணத்துக்கு, “இந்த பூமியில உயிர்கள உருவாக்குறதுக்கு யெகோவா பரிணாமத்த பயன்படுத்தியிருக்கலாம், இல்லையா?” என்று கேட்பாள். அல்லது, “நாம ஏதாவது சேவை செஞ்சு சமுதாயத்த நல்ல நிலைமைக்கு கொண்டுவரலாம் இல்லையா? அதுக்காக தேர்தல்ல கலந்துக்கலாம்தானே?” என்று கேட்பாள். அப்போது, அவள் எதை நம்ப வேண்டும் என்று நேரடியாகச் சொல்லாமல் இருக்க அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. உண்மையை எடுத்த எடுப்பிலேயே சொல்வதற்குப் பதிலாக, அதற்கான ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் காட்டும்போதுதான் ஒருவருக்கு நம்பிக்கை வரும் என்பதை தாமஸ் புரிந்துவைத்திருக்கிறார்.

8 தன்னுடைய மகளுக்குப் பொறுமையாகத்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதையும் தாமஸ் புரிந்துவைத்திருக்கிறார். சொல்லப்போனால், எல்லா கிறிஸ்தவர்களுமே பொறுமை காட்ட வேண்டும். (கொலோ. 3:12) தன்னுடைய மகளின் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்குக் காலம் எடுக்கும் என்பதும், நிறைய தடவை அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதும் தாமசுக்கு நன்றாகத் தெரியும். அதோடு, பைபிள் வசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவது எவ்வளவு அவசியம் என்பதும் அவருக்குத் தெரியும். அவர் இப்படிச் சொல்கிறார்: “கத்துக்குற முக்கியமான விஷயங்கள என் பொண்ணு உண்மையிலேயே நம்புறாளான்னும், அவளுக்கு அதெல்லாம் சரின்னு படுதான்னும் நானும் என் மனைவியும் தெரிஞ்சுக்க நினைப்போம். அவ கேள்வி கேட்டா நாங்க சந்தோஷப்படுவோம். உண்மைய சொல்லணும்னா, எந்த கேள்வியும் கேட்காம ஒரு விஷயத்த அவ ஏத்துக்கிட்டாதான் எங்களுக்கு கவலையா இருக்கும்.”

9. கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கை வைக்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

9 பெற்றோர் பொறுமையாகக் கற்றுக்கொடுக்கும்போது, காலப்போக்கில் பிள்ளைகள் சத்தியத்தின் ‘அகலத்தையும் நீளத்தையும் உயரத்தையும் ஆழத்தையும்’ புரிந்துகொள்ள ஆரம்பிப்பார்கள். (எபே. 3:18) அவர்களுடைய வயதுக்கும் புரிந்துகொள்ளும் திறனுக்கும் ஏற்றபடி நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அவர்களுடைய விசுவாசம் அதிகமாகும்போது, கூடப் படிப்பவர்களிடமும் மற்றவர்களிடமும் சத்தியத்தைப் பற்றி அவர்களால் தயக்கமில்லாமல் பேச முடியும். (1 பே. 3:15) உதாரணத்துக்கு, இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை உங்கள் பிள்ளைகளால் பைபிளிலிருந்து விளக்க முடியுமா? பைபிள் தரும் விளக்கம் அவர்களுக்குச் சரியென்று படுகிறதா? * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கடவுளுடைய வார்த்தையில் விசுவாசத்தை வளர்க்க உங்கள் பிள்ளைக்கு நீங்கள் பொறுமையாக உதவி செய்ய வேண்டும் என்பதை ஞாபகம் வையுங்கள். ஆனால், நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும்.—உபா. 6:6, 7.

10. பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போது உங்கள் பங்கில் என்ன செய்வது முக்கியம்?

10 பிள்ளைகள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு உதவ வேண்டுமென்றால், நீங்கள் முன்மாதிரி வைப்பதும் முக்கியம். மூன்று மகள்களுக்குத் தாயாக இருக்கும் ஸ்டெஃபனீ இப்படிச் சொல்கிறார்: “என்னோட பொண்ணுங்க ரொம்ப சின்ன பிள்ளைங்களா இருந்தப்பவே, நான் சில விஷயங்கள யோசிக்க வேண்டியிருந்துச்சு. அதாவது, ‘யெகோவா இருக்குறாரு... நம்ம மேல அன்பு காட்டுறாரு... அவரு சொல்றதுதான் சரி... அப்படின்னெல்லாம் நான் ஏன் நம்புறேங்கறத பத்தி பிள்ளைங்ககிட்ட பேசறேனா? நான் யெகோவாவ உண்மையிலேயே நேசிக்கிறத பிள்ளைங்களால நல்லா பார்க்க முடியுதா?’ அப்படின்னெல்லாம் யோசிக்க வேண்டியிருந்துச்சு. ஏன்னா, எனக்கு முதல்ல நம்பிக்கை இருந்தாதான் என் பிள்ளைங்களுக்கும் நம்பிக்கை வரும்.”

‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற்றிருப்பது

11, 12. ஞானம் என்றால் என்ன, ஞானத்துக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்று எப்படிச் சொல்லலாம்?

11 தீமோத்தேயுவுக்கு வேதவசனங்களைப் பற்றித் தெரிந்திருந்தது என்றும், கற்றுக்கொண்ட விஷயங்களில் அவர் உறுதியான நம்பிக்கை வைத்தார் என்றும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். ஆனால், பரிசுத்த எழுத்துக்கள் “ஞானத்தைத் தந்து . . . மீட்கப்படுவதற்கு வழிநடத்தும்” என்று தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன?

12 பைபிளில் சொல்லப்படும் ஞானம், “அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் நன்றாகப் பயன்படுத்தும் திறமையைக் குறிக்கிறது; பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கோ, குறிக்கோள்களை அடைவதற்கோ, இவற்றைச் செய்ய மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கோ அது உதவுகிறது. அது முட்டாள்தனத்துக்கு நேர்மாறானது” என்று வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2 விளக்குகிறது. “பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 22:15) ஞானம் என்பது முட்டாள்தனத்துக்கு நேர்மாறாக இருப்பதால், அது முதிர்ச்சிக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. ஒருவர் ஆன்மீக விதத்தில் எப்போது முதிர்ச்சி அடைகிறார்? வயது கூடும்போது அல்ல, யெகோவாவுக்குப் பயந்து நடந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பும்போதுதான் அப்படி முதிர்ச்சி அடைகிறார்.சங்கீதம் 111:10-ஐ வாசியுங்கள்.

13. மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானம் தங்களுக்கு இருப்பதை இளைஞர்கள் எப்படிக் காட்டலாம்?

13 ஆன்மீக விதத்தில் ஓரளவு முதிர்ச்சி அடைந்திருக்கும் இளைஞர்கள், தங்களுடைய ஆசையினால் அல்லது மற்ற இளைஞர்களுடைய செல்வாக்கினால் “அலைக்கழிக்கப்படவோ . . . இங்குமங்கும் அடித்துச் செல்லப்படவோ” மாட்டார்கள். (எபே. 4:14) அதற்குப் பதிலாக, “சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க” அவர்களுடைய ‘பகுத்தறியும் திறன்களைப் பயிற்றுவிக்கிறார்கள்.’ (எபி. 5:14) அதனால், பெற்றோரோ வயதில் பெரியவர்களாக இருக்கும் மற்றவர்களோ கவனிக்காத சமயங்களில்கூட அவர்கள் ஞானமான தீர்மானங்களை எடுக்கிறார்கள். (பிலி. 2:12) மீட்புப் பெறுவதற்கு அப்படிப்பட்ட ஞானம் அவசியம். (நீதிமொழிகள் 24:14-ஐ வாசியுங்கள்.) அப்படிப்பட்ட ஞானத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? நீங்கள் கடைப்பிடிக்கும் தராதரங்களை அவர்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். நீங்கள் பைபிள் தராதரங்களின்படி வாழ முயற்சி செய்வதை உங்களுடைய சொல்லாலும் செயலாலும் அவர்களுக்குக் காட்ட வேண்டும்.—ரோ. 2:21-23.

பெற்றோர் விடாமுயற்சி செய்வது ஏன் முக்கியம்? (பாராக்கள் 14-18)

14, 15. (அ) ஞானஸ்நானம் எடுக்க விரும்பும் பிள்ளைகள் எதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்? (ஆ) கடவுளுடைய சட்டங்களைக் கடைப்பிடிப்பதால் வரும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

14 ஆனாலும், விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால், சரி எது தவறு எது என்று நீங்கள் சொன்னால் மட்டும் போதாது. இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்கவும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்: ‘நாம செய்ய ஆசப்படற சில விஷயங்கள பைபிள் ஏன் செய்யக் கூடாதுன்னு சொல்லுது? பைபிள் தராதரங்கள்படி நடந்தா எனக்குதான் நல்லதுன்னு எப்படி நம்புறது?’—ஏசா. 48:17, 18.

15 உங்கள் பிள்ளை ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால், என்னென்ன பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நன்றாக யோசித்துப் பார்க்க உதவி செய்யுங்கள். அந்தப் பொறுப்புகளைப் பற்றி அவன் என்ன நினைக்கிறான்? அதனால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்? சவால்களைவிட ஆசீர்வாதங்கள் அதிகமாக இருக்கும் என்று எப்படிச் சொல்லலாம்? (மாற். 10:29, 30) ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு இதையெல்லாம் கவனமாக யோசித்துப் பார்ப்பது ரொம்பவும் முக்கியம். கீழ்ப்படியும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் கீழ்ப்படியாமல்போகும்போது வருகிற மோசமான விளைவுகளைப் பற்றியும் யோசித்துப் பார்க்க உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். அப்போதுதான், பைபிள் தராதரங்களின்படி வாழ்வது எப்போதுமே தனக்கு நல்லது என்பதை அவன் புரிந்துகொள்வான்.—உபா. 30:19, 20.

ஞானஸ்நானம் எடுத்த பிள்ளை விசுவாசத்தில் தடுமாறும்போது

16. ஞானஸ்நானம் எடுத்த பிள்ளையின் விசுவாசம் குறைய ஆரம்பித்துவிட்டால் பெற்றோர் என்ன செய்யலாம்?

16 ஞானஸ்நானம் எடுத்த பிறகு உங்கள் பிள்ளைக்கு சத்தியத்தின்மேல் ஆர்வம் குறைய ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது? உதாரணத்துக்கு, உங்கள் மகனோ மகளோ இந்த உலகக் காரியங்களிடம் கவரப்படலாம். அல்லது, பைபிள் நியமங்களின்படி வாழ்வது உண்மையிலேயே சிறந்த வாழ்க்கைதானா என்று சந்தேகப்பட ஆரம்பிக்கலாம். (சங். 73:1-3, 12, 13) அதுபோன்ற சமயங்களில் உங்கள் பிள்ளையிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது ரொம்ப முக்கியம்; ஏனென்றால், அவன் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வானா மாட்டானா என்பது நீங்கள் நடந்துகொள்வதைப் பொறுத்துதான் இருக்கிறது. உங்கள் பிள்ளை இப்போது டீனேஜ் வயதில் இருந்தாலும் சரி, அதைவிட சின்ன வயதில் இருந்தாலும் சரி, இந்த விஷயத்தில் அவனோடு சண்டைபோடாதீர்கள். அதற்குப் பதிலாக, நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதையும், அவனுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் புரிய வையுங்கள்.

17, 18. ஒரு பிள்ளைக்குச் சந்தேகங்கள் இருந்தால் பெற்றோர் எப்படி உதவி செய்யலாம்?

17 ஞானஸ்நானம் எடுத்த பிள்ளைகள் யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். அதாவது, வேறு எதையும்விட... எவரையும்விட... யெகோவாவை அதிகமாக நேசிப்பதாகவும் அவருக்குச் சேவை செய்வதாகவும் அவருக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். (மாற்கு 12:30-ஐ வாசியுங்கள்.) இந்த வாக்குறுதியை யெகோவா லேசாக எடுத்துக்கொள்வதில்லை; அதனால், நாமும் அதை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. (பிர. 5:4, 5) இதை உங்கள் பிள்ளைக்கு ஞாபகப்படுத்துங்கள். அதற்குமுன், பெற்றோருக்காக யெகோவாவின் அமைப்பு தந்திருக்கும் பிரசுரங்களை நன்றாகப் படியுங்கள். பிறகு, அவன் தன்னை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருப்பதும் ஞானஸ்நானம் எடுத்திருப்பதும் லேசான விஷயமே அல்ல என்பதையும், அது நிறைய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்பதையும் சரியான நேரத்தில் அவனுக்கு அன்போடு எடுத்துச் சொல்லுங்கள்.

18 உதாரணத்துக்கு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 1-ல் (ஆங்கிலம்) இருக்கிற “பெற்றோர் கேட்கும் கேள்விகள்” என்ற பிற்சேர்க்கையில் நல்ல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெற்றோர், தங்களுடைய டீனேஜ் பிள்ளைகள் சத்தியத்தை ஒதுக்கிவிட்டதாக சட்டென முடிவு செய்துவிடாமல், உண்மையான பிரச்சினையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டுமென்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. நண்பர்கள் தரும் அழுத்தமோ தனிமை உணர்ச்சியோ பிரச்சினையாக இருக்கலாம். அல்லது, மற்ற இளைஞர்கள் தன்னைவிட அதிகமாக யெகோவாவுக்குச் சேவை செய்வதாக நினைத்து ஒரு பிள்ளை சோர்ந்துபோயிருக்கலாம். அதற்காக, உங்கள் பிள்ளை உங்களுடைய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது என்றும் அந்தப் பிற்சேர்க்கை சொல்கிறது. பொதுவாக, வேறு ஏதாவது பிரச்சினையால்தான் பிள்ளைகளுக்குச் சத்தியத்தில் ஆர்வம் குறைந்துவிடுகிறது. அப்படிப்பட்ட பிள்ளைகளுக்குப் பெற்றோர் எப்படி உதவலாம் என்று அந்தப் பிற்சேர்க்கை விளக்குகிறது.

19. ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற பெற்றோர் எப்படித் தங்கள் பிள்ளைகளுக்கு உதவலாம்?

19 ‘யெகோவா சொல்கிற விதத்தில் பிள்ளைகளைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி’ வளர்க்கும் முக்கியமான பொறுப்பும் பாக்கியமும் பெற்றோராகிய உங்களுக்கு இருக்கிறது. (எபே. 6:4) அப்படியென்றால், நாம் பார்த்தபடி, பைபிள் என்ன சொல்கிறது என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்றுத்தர வேண்டும்; அதோடு, கற்றுக்கொள்ளும் விஷயங்களில் நம்பிக்கை வைக்க அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்களுடைய விசுவாசம் பலமாகும்போது, யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிக்கவும் சிறந்த விதத்தில் அவருக்குச் சேவை செய்யவும் அவர்கள் விரும்புவார்கள். ‘மீட்கப்படுவதற்கு வழிநடத்தும் ஞானத்தை’ பெற, யெகோவாவின் வார்த்தையும் அவருடைய சக்தியும் உங்கள் முயற்சிகளும் உங்கள் பிள்ளைகளுக்கு உதவட்டும்!

^ பாரா. 9பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?” என்ற புத்தகத்துக்கான படிப்புப் பயிற்சிகள், பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு விளக்கிச் சொல்ல சிறியவர்களுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, உதவி செய்யும். அவை jw.org வெப்சைட்டில் பல மொழிகளில் கிடைக்கின்றன. பைபிள் போதனைகள் > பைபிள் படிப்புக் கருவிகள் என்ற தலைப்பின்கீழ் பாருங்கள்.