Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

கருத்தடைக்காகக் கிறிஸ்தவர்கள் IUD-ஐ (கருப்பைக்குள் பொருத்தப்படும் சாதனத்தை) பயன்படுத்தலாமா?

இதை அந்தந்த கிறிஸ்தவத் தம்பதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில், தங்களுடைய மனசாட்சி பாதிக்காதபடி அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, IUD சாதனங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதையும், என்னென்ன பைபிள் நியமங்கள் பொருந்துகின்றன என்பதையும் அவர்கள் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஆதாம் ஏவாளிடமும், பிற்பாடு நோவா மற்றும் அவருடைய குடும்பத்தாரிடமும், ‘நீங்கள் பிள்ளைகளைப் பெற்று, ஏராளமாகப் பெருகுங்கள்’ என்று யெகோவா கட்டளை கொடுத்தார். (ஆதி. 1:28; 9:1) கிறிஸ்தவர்கள் இந்தக் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமென்று பைபிள் சொல்வதில்லை. அதனால், பிள்ளைகளை அளவோடு பெற்றுக்கொள்ளவோ, கருத்தரிப்பைத் தள்ளிப்போடவோ குறிப்பிட்ட ஒரு கருத்தடை முறையைப் பயன்படுத்துவதா வேண்டாமா என்பதை அந்தந்த தம்பதிதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு, அவர்கள் என்னென்ன விஷயங்களை யோசித்துப் பார்க்க வேண்டும்?

கருத்தடை சம்பந்தப்பட்ட எந்தவொரு தீர்மானத்தையும் பைபிள் நியமங்களின் அடிப்படையில்தான் கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டும். அதனால்தான், கருக்கலைப்பை ஒருவித கருத்தடை முறையாக அவர்கள் கருதுவதே இல்லை. வேண்டுமென்றே கருவைக் கலைப்பது, பிறக்கப்போகும் குழந்தையைக் கொலை செய்வதாக இருக்கிறது. அது, உயிருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்ற பைபிளின் கட்டளைக்கு முரணாக இருக்கிறது. (யாத். 20:13; 21:22, 23; சங். 139:16; எரே. 1:5) அப்படியென்றால், கருத்தடைக்காக IUD-ஐப் பயன்படுத்தலாமா?

மே 15, 1979 ஆங்கில காவற்கோபுரம் (பக்கங்கள் 30-31) இந்த விஷயத்தைப் பற்றி விளக்கியது. அந்தச் சமயத்தில் கிடைத்த பெரும்பாலான IUD சாதனங்கள் ப்ளாஸ்டிக்கால் செய்யப்பட்டிருந்தன. கருத்தரிப்பைத் தடை செய்வதற்காக அவை கருப்பைக்குள் பொருத்தப்பட்டன. ஆனால், அப்படிப்பட்ட சாதனங்கள் எப்படி வேலை செய்தன என்பது சரியாகத் தெரியவில்லை என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. விந்தணுக்கள் ஒரு பெண்ணின் கருமுட்டைகளோடு சேர்ந்து அந்தக் கருமுட்டைகளைக் கருத்தரிக்கச் செய்துவிடாதபடி அந்தச் சாதனங்கள் பார்த்துக்கொண்டதாக அறிவியல் நிபுணர்கள் பலர் சொன்னார்கள். கருமுட்டைகள் கருத்தரிக்காத சமயங்களில் உயிர் உருவாகவில்லை.

ஆனால், சிலசமயங்களில் கருமுட்டை கருத்தரிக்க வாய்ப்பு இருந்ததாகச் சில அத்தாட்சிகள் காட்டின. புதிதாகக் கருத்தரித்த கருமுட்டை, ஃபெலோப்பியன் ட்யூப் என்று அழைக்கப்படும் கருப்பைக் குழாயில் வளரலாம் (இது இடம் மாறிய கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது) அல்லது கருப்பையை நோக்கி நகரலாம். அது கருப்பையை அடைந்துவிட்டால், கருப்பையின் உட்புறத்தில் அது தங்காதபடி IUD பார்த்துக்கொள்ளும். இப்படி, கருத்தரிப்பு தடை செய்யப்படும்; இது கருக்கலைப்புக்குச் சமமாக இருக்கும். அதனால், அந்தக் கட்டுரை முடிவாக இப்படிச் சொன்னது: “IUD-ஐப் பயன்படுத்துவது பற்றி யோசிக்கும் ஒரு கிறிஸ்தவர், உயிரின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டுமென்ற பைபிளின் கட்டளையை மனதில் வைத்து இந்த விஷயத்தை நன்றாக அலசிப் பார்க்க வேண்டும்.”—சங். 36:9.

ஆனால், 1979-ல் இந்தக் கட்டுரை வெளியான சமயத்திலிருந்து, மருத்துவத் துறையிலும் அறிவியல் துறையிலும் நிறைய முன்னேற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இப்போது, இரண்டு புதிய IUD சாதனங்கள் கிடைக்கின்றன. ஒன்று, காப்பர் சம்பந்தப்பட்டது; இது 1988-ல் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக ஆனது. இன்னொன்று, ஹார்மோன் சம்பந்தப்பட்டது; இது 2001-ல் விற்பனைக்கு வந்தது. இந்த இரண்டு IUD சாதனங்களும் எப்படி வேலை செய்கின்றன?

காப்பர்: ஏற்கெனவே சொல்லப்பட்டபடி, விந்தணு கருப்பைக்குள் போய் ஒரு கருமுட்டையோடு சேருவதை IUD சாதனங்கள் தடுக்கின்றன. காப்பர் சேர்க்கப்பட்ட IUD சாதனங்கள் விந்தணுக்களைக் கொன்றேவிடுகின்றன; காப்பர் ஒரு விஷமாகச் செயல்பட்டு விந்தணுக்களைக் கொல்கிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இந்த வகையான IUD சாதனங்கள் கருப்பையின் உட்புறத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

ஹார்மோன்: கருத்தடை மாத்திரைகளில் இருப்பது போன்ற ஒரு ஹார்மோன் இந்த விதமான IUD சாதனங்களில் இருக்கின்றன. இவை முந்தைய IUD சாதனங்களைப் போலவே செயல்படுவதோடு, கருப்பைக்குள் ஒரு ஹார்மோனையும் சுரக்கின்றன. இதனால், சில பெண்களின் கருமுட்டைப் பையில் கருமுட்டை உருவாவது தடுக்கப்படுகிறது. கருமுட்டை உருவாகவில்லை என்றால், கருத்தரிக்க முடியாது. இந்த வகையான IUD சாதனங்கள் கருப்பையின் உட்புறத்தை மெலிதாக்கிவிடுகின்றன. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதோடு, கருப்பையின் வாய்ப் பகுதியில் (cervix) இருக்கும் சவ்வைக் கெட்டியாக்கிவிடுகின்றன. இப்படி, விந்தணு ஒரு பெண்ணின் யோனிக் குழாய் (vagina) வழியாகக் கருப்பைக்குப் போய்ச் சேராதபடி தடுக்கப்படுகிறது.

நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இரண்டு விதமான IUD சாதனங்களுமே கருப்பையின் உட்புறத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. அப்படியென்றால், கருமுட்டை உருவாகி, கருத்தரித்து, கருப்பைக்குள் போனால்கூட, கருப்பையின் உட்புறம் தகுந்த நிலையில் இல்லாததால் அந்தக் கருமுட்டையால் அங்கே தங்க முடியாது. அதனால், ஆரம்பக் கட்டத்திலேயே கருத்தரிப்பு தடை செய்யப்படும். இருந்தாலும், இப்படி நடப்பது அபூர்வம்தான் என்று அறிவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தும்போதும் இப்படி நடக்கலாம் என்று சொல்கிறார்கள்.

அதனால், காப்பர் IUD-ஐ அல்லது ஹார்மோன் IUD-ஐப் பயன்படுத்தினால் கருமுட்டைகள் ஒருபோதும் கருத்தரிக்காது என்று யாராலும் சொல்ல முடியாது. இருந்தாலும், இப்படிப்பட்ட சாதனங்கள், மேலே விளக்கப்பட்ட விதங்களில் செயல்பட்டு கருத்தரிப்பைத் தடுப்பதால், இவற்றைப் பயன்படுத்தும் பெண்கள் கர்ப்பமாவது அபூர்வம் என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

IUD சாதனங்களைப் பயன்படுத்த விரும்பும் ஒரு கிறிஸ்தவத் தம்பதி, தங்களுடைய டாக்டரோடு இதைப் பற்றிப் பேசலாம். அவர்களுடைய பகுதியில் கிடைக்கும் IUD சாதனங்களைப் பற்றியும், அவற்றிலுள்ள நன்மைகளையும் ஆபத்துகளையும் பற்றியும் அந்த டாக்டரால் விளக்க முடியும். தங்களுக்காக மற்றவர்கள் முடிவு எடுக்க வேண்டுமென்று அந்தத் தம்பதி எதிர்பார்க்கக் கூடாது, அதை அனுமதிக்கவும் கூடாது. அவர்களுடைய டாக்டர்கூட அவர்களுக்காக முடிவு எடுக்கக் கூடாது. (ரோ. 14:12; கலா. 6:4, 5) ஒரு தம்பதியாக அவர்கள்தான் இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும். கடவுளைப் பிரியப்படுத்தும் விதத்திலும், சுத்தமான மனசாட்சியைப் பெறும் விதத்திலும் தீர்மானம் எடுப்பதுதான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 1:18, 19-ஐயும் 2 தீமோத்தேயு 1:3-ஐயும் ஒப்பிடுங்கள்.

^ பாரா. 4 இங்கிலாந்தின் தேசிய உடல்நலச் சேவையின் ஒரு கைடு இப்படிச் சொல்கிறது: “அதிகளவு காப்பர் உள்ள IUD சாதனங்களின் செயல்திறன் 99%-க்கும் அதிகம்! அப்படியென்றால், ஒவ்வொரு வருஷமும், IUD-ஐப் பயன்படுத்தும் பெண்களில் 1%-க்கும் குறைவானவர்கள்தான் கர்ப்பமாவார்கள். குறைந்தளவு காப்பர் உள்ள IUD சாதனங்களின் செயல்திறன் அந்தளவுக்கு இல்லை.”

^ பாரா. 5 ஹார்மோன் IUD சாதனங்கள் கருப்பையின் உட்புறத்தை மெலிதாக்கிவிடுவதால், கல்யாணமான அல்லது கல்யாணமாகாத பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அளவுக்கதிகமான இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்தும்படி சிலசமயம் டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.