Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷமாகப் பாடுங்கள்!

சந்தோஷமாகப் பாடுங்கள்!

“நம் கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது.”—சங். 147:1.

பாடல்கள்: 9, 138

1. பாடல்கள் என்ன செய்ய நமக்கு உதவுகின்றன?

புகழ்பெற்ற ஒரு பாடலாசிரியர் இப்படிச் சொன்னார்: “வார்த்தை சிந்தனையைத் தூண்டுகிறது. இசை உணர்ச்சியைத் தூண்டுகிறது. ஆனால், பாடல் இரண்டையுமே தூண்டுகிறது.” நம்முடைய பாடல்கள் நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவைப் புகழவும், அவர்மேல் இருக்கும் அன்பைக் காட்டவும் நமக்கு உதவுகின்றன. அவரிடம் நெருங்கிப்போகவும் அவை நமக்கு உதவுகின்றன. அதனால்தான், பாடல்கள் உண்மை வணக்கத்தின் மிக முக்கியமான அம்சமாக இருக்கின்றன; நாம் தனியாகப் பாடினாலும் சரி, சகோதர சகோதரிகளோடு சேர்ந்து பாடினாலும் சரி!

2, 3. (அ) சபையில் சத்தமாகப் பாடுவதைப் பற்றி சிலர் எப்படி உணரலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

2 சபையில் சத்தமாகப் பாடுவதைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? தர்மசங்கடமாக உணருகிறீர்களா? சில கலாச்சாரங்களில், மற்றவர்களுக்கு முன்னால் பாடுவதற்கு ஆண்கள் கூச்சப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மனப்பான்மை முழு சபையையும் பாதிக்கலாம். முக்கியமாக, மூப்பர்கள் பாடுவதற்குத் தயங்கும்போது அல்லது பாட வேண்டிய சமயத்தில் மற்ற வேலைகளைச் செய்யும்போது முழு சபையும் பாதிக்கப்படலாம்.—சங். 30:12.

3 பாடல்கள் பாடுவது உண்மை வணக்கத்தின் பாகமாக இருப்பதை நாம் புரிந்துகொண்டால், பாடல் பாடப்படும் சமயத்தில் நாம் கண்டிப்பாக வெளியே போக மாட்டோம்; நம்முடைய கூட்டத்தின் அந்த முக்கியமான அம்சத்தை நாம் ஒருபோதும் தவறவிட மாட்டோம். அதனால், நாம் எல்லாரும் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கூட்டங்கள்ல பாடறத பத்தி நான் எப்படி உணர்றேன்? மத்தவங்க முன்னால பாடறதுக்கு தயக்கமா இருந்தா என்ன செய்றது? நான் எப்படி உணர்ச்சியோட பாடறது?’

பாடுவது—உண்மை வணக்கத்தின் முக்கியமான பாகம்

4, 5. பூர்வ இஸ்ரவேலில் இருந்த ஆலயத்தில் பாடல்கள் பாடுவதற்கு என்ன ஏற்பாடுகள் இருந்தன?

4 காலம்காலமாக, யெகோவாவின் வணக்கத்தார் இசையைப் பயன்படுத்தி அவரைப் புகழ்ந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தபோது, பாடல்கள் பாடுவது அவர்களுடைய வணக்கத்தின் முக்கிய பாகமாக இருந்தது. உதாரணத்துக்கு, தாவீது ஆலய சேவைக்கான ஏற்பாடுகளைச் செய்தபோது, இசை இசைத்து யெகோவாவைப் புகழ்வதற்கு 4,000 லேவியர்களை ஒழுங்கமைத்தார். அவர்களில் 288 பேர், ‘யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதற்கு . . . பயிற்சி பெற்ற . . . வித்வான்களாக இருந்தார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.—1 நா. 23:5; 25:7.

5 ஆலயம் அர்ப்பணிக்கப்பட்ட சமயத்தில்கூட, இசைக்கும் பாடல்களுக்கும் ஒரு முக்கிய பங்கு இருந்தது. பைபிள் இப்படிச் சொல்கிறது: “எக்காளம் ஊதுகிறவர்களும் பாடகர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்கு நன்றி சொல்லி புகழ் பாடினார்கள். எக்காளங்களையும் ஜால்ராக்களையும் மற்ற இசைக் கருவிகளையும் இசைத்துக்கொண்டே, . . . யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; அப்போது . . . உண்மைக் கடவுளின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.” அந்தச் சந்தர்ப்பத்தில், இஸ்ரவேலர்களின் விசுவாசம் எந்தளவுக்குப் பலப்பட்டிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.—2 நா. 5:13, 14; 7:6.

6. எருசலேமின் ஆளுநராக இருந்த சமயத்தில் இசை இசைப்பதற்கும் பாடல் பாடுவதற்கும் நெகேமியா என்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தார்?

6 நெகேமியா எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்கு இஸ்ரவேலர்களைத் தலைமைதாங்கி நடத்தியபோது, இசை இசைப்பதற்கும் பாடல் பாடுவதற்கும் லேவியர்களை ஏற்பாடு செய்தார். திரும்பக் கட்டப்பட்ட மதில்கள் அர்ப்பணிக்கப்பட்டபோது, இசையும் பாடலும் சந்தோஷத்துக்கு சந்தோஷம் சேர்த்தன. ‘நன்றிப் பாடல்கள் பாடுவதற்கு இரண்டு பெரிய குழுக்களை’ நெகேமியா நியமித்திருந்தார். அந்தக் குழுவினர் எதிரெதிர் திசைகளில் நகரத்தின் மதில்மேல் நடந்துபோனார்கள். கடைசியில், ஆலயத்துக்குப் பக்கத்திலிருந்த மதில்பகுதியில் வந்து நின்றார்கள். அவர்கள் எழுப்பிய சத்தம் ரொம்பத் தூரம்வரை கேட்டது. (நெ. 12:27, 28, 31, 38, 40, 43) தன்னுடைய மக்கள் உற்சாகம் பொங்க தன்னைப் புகழ்ந்து பாடுவதைக் கேட்டு யெகோவா மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

7. இசை, கிறிஸ்தவர்களுடைய வணக்கத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

7 இயேசு வாழ்ந்த காலத்திலும் இசை உண்மை வணக்கத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான இரவில் என்ன நடந்ததென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இயேசு தன்னுடைய சீஷர்களோடு இரவு விருந்தை முடித்த பிறகு, அவர்கள் எல்லாரும் சேர்ந்து யெகோவாவைப் புகழ்ந்து பாடல்கள் பாடினார்கள்.மத்தேயு 26:30-ஐ வாசியுங்கள்.

8. கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படி நல்ல முன்மாதிரி வைத்தார்கள்?

8 கடவுளைப் புகழ்ந்து பாடுவதில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நல்ல முன்மாதிரி வைத்தார்கள். அந்தக் கிறிஸ்தவர்கள், ஆலயம்போல் பிரமாண்டமாக இல்லாத சாதாரண வீடுகளில் ஒன்றுகூடி வந்தபோதிலும், ஆர்வம்பொங்க யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள். சொல்லப்போனால், அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களிடம் இப்படிச் சொன்னார்: “சங்கீதங்களாலும் புகழ் பாடல்களாலும் நன்றியோடு பாடப்படுகிற பக்திப்பாடல்களாலும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள். உங்கள் இதயத்திலிருந்து யெகோவாவை புகழ்ந்து பாடிக்கொண்டே இருங்கள்.” (கொலோ. 3:16) நம்முடைய பாட்டுப் புத்தகத்திலுள்ள பாடல்களை நாமும் ‘நன்றியோடு பாட’ வேண்டியது மிகவும் அவசியம். “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நமக்காக ‘ஏற்ற வேளையில் கொடுக்கிற உணவில்’ இவையும் அடங்கும் என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.—மத். 24:45.

நீங்கள் எப்படித் தயக்கமில்லாமல் தைரியமாகப் பாடலாம்?

9. (அ) கூட்டங்களிலும் மாநாடுகளிலும் குரலை உயர்த்தி சந்தோஷமாகப் பாடுவதற்கு ஏன் சிலர் தயங்கலாம்? (ஆ) நாம் எப்படி யெகோவாவைப் புகழ்ந்து பாட வேண்டும், இதில் யார் முன்மாதிரி வைக்க வேண்டும்? (ஆரம்பப் படம்)

9 என்னென்ன காரணங்களால் நீங்கள் பாடுவதற்குத் தயங்கலாம்? ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் அல்லது கலாச்சாரத்தில், பாடும் பழக்கம் நிறையப் பேருக்கு இல்லாமல் இருக்கலாம். அல்லது, ரேடியோவிலோ டிவியிலோ சிலர் பாடுவதைக் கேட்டுவிட்டு, உங்களை நீங்களே குறைவாக எடைபோடலாம், மற்றவர்கள்முன் பாடவும் கூச்சப்படலாம். ஆனால், யெகோவாவைப் புகழ்ந்து பாட வேண்டிய கடமை நம் எல்லாருக்குமே இருக்கிறது. அதனால், பாட்டுப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்து, தலையை நிமிர்த்தி, உற்சாகமாகப் பாடுங்கள்! (எஸ்றா 3:11; சங்கீதம் 147:1-ஐ வாசியுங்கள்.) இன்று நிறைய ராஜ்ய மன்றங்களில், பாடல் வரிகள் திரையில் காட்டப்படுகின்றன. அதனால், சத்தமாகப் பாட நம்மால் முடிகிறது. இப்போதெல்லாம் மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளியிலும் பாடல்கள் பாடப்படுகின்றன. சபைக் கூட்டங்களில் பாடும் விஷயத்தில் மூப்பர்கள் முன்மாதிரி வைக்க வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது.

10. சத்தமாகப் பாடுவதற்கு நாம் பயப்பட்டால் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?

10 நிறையப் பேர் சத்தமாகப் பாடுவதற்குப் பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவர்களுடைய குரல் நன்றாக இல்லை என்றோ, ரொம்பக் கத்திப் பாடிவிடுவார்கள் என்றோ நினைக்கிறார்கள். ஆனால், இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: பேசும்போது “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.” அதற்காகப் பேசாமலேயே இருந்துவிடுகிறோமா? (யாக். 3:2) அதேபோல், நம் குரல் சரியில்லை என்பதற்காக ஏன் யெகோவாவைப் புகழ்ந்து பாடாமல் இருக்க வேண்டும்?

11, 12. நாம் எப்படி இன்னும் நன்றாகப் பாடுவதற்குக் கற்றுக்கொள்ளலாம்?

11 ஒருவேளை, எப்படிப் பாடுவதென்று தெரியாததால்கூட நாம் பாடுவதற்குப் பயப்படலாம். ஆனால், எளிமையான சில ஆலோசனைகளைக் கடைப்பிடித்தாலே நம்மால் நன்றாகப் பாட முடியும். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

12 சரியாக மூச்சு இழுத்துவிட கற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் சத்தமாகவும் கணீரென்றும் பாடலாம். மின்சாரம் எப்படி ஒரு பல்புக்குச் சக்தி கொடுக்குமோ, அப்படித்தான் உங்கள் மூச்சு உங்கள் குரலுக்குச் சக்தி கொடுக்கும்; நீங்கள் பேசும்போதும் சரி, பாடும்போதும் சரி இதுதான் உண்மை! நீங்கள் எவ்வளவு சத்தமாகப் பேசுவீர்களோ அவ்வளவு சத்தமாக அல்லது அதைவிட சத்தமாகப் பாட வேண்டும். (தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில், பக்கங்கள் 181-184-ல் உள்ள “தகுந்த முறையில் சுவாசித்தல்” என்ற உபதலைப்பைப் பாருங்கள்.) சொல்லப்போனால், யெகோவாவின் வணக்கத்தார் அவரைப் புகழ்ந்து பாடும்போது ‘சந்தோஷ ஆரவாரம் செய்ய’ வேண்டுமென்று பைபிள் சொல்கிறது.—சங். 33:1-3.

13. நாம் எப்படி இன்னும் நம்பிக்கையான குரலில் பாடலாம் என்று விளக்குங்கள்.

13 குடும்ப வழிபாட்டின்போது அல்லது தனியாக இருக்கும்போது இப்படிச் செய்து பாருங்கள்: நம்முடைய பாட்டுப் புத்தகத்திலிருந்து உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டைத் தேர்ந்தெடுங்கள். பின்பு, பாடல் வரிகளை நம்பிக்கையான குரலில் கணீரென்று சத்தமாக வாசியுங்கள். அடுத்ததாக, அதே சத்தத்தில், ஒரு சொற்றொடரில் இருக்கும் எல்லா வார்த்தைகளையும் ஒரே மூச்சில் சொல்லுங்கள். பிறகு, அதே கணீர் குரலில் அந்தச் சொற்றொடரை ராகத்தோடு பாடுங்கள். (ஏசா. 24:14) இந்தப் பயிற்சியைச் செய்தால், கணீர் குரலில் சத்தமாகப் பாடப் பழகிக்கொள்வீர்கள். அது ஒரு நல்ல விஷயம்தான். அதனால், சத்தமாகப் பாடுவதை நினைத்துப் பயப்படாதீர்கள் அல்லது கூச்சப்படாதீர்கள்.

14. (அ) நம் வாயை அகலமாகத் திறப்பது நன்றாகப் பாட எப்படி உதவும்? (“ நீங்கள் எப்படி இன்னும் நன்றாகப் பாடலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) (ஆ) குரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான எந்த ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

14 கணீர் குரலில் பாடுவதற்கு, வாயை லேசாகத் திறந்தால் போதாது. பேசும்போது எந்தளவுக்கு வாயைத் திறப்பீர்களோ அதைவிட அகலமாகத் திறக்க வேண்டும். ஆனால், உங்களுக்குப் பலவீனமான குரலோ உச்சஸ்தாயி குரலோ (அதாவது, கீச் குரலோ) இருப்பதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்யலாம்? அதற்கான சில நல்ல ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள, தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகத்தில், பக்கம் 184-ல் இருக்கிற “குறிப்பிட்ட பிரச்சினைகளை மேற்கொள்ளுதல்” என்ற பெட்டியைப் படித்துப் பாருங்கள்.

இதயத்திலிருந்து பாடுங்கள்

15. (அ) 2016-ன் வருடாந்தரக் கூட்டத்தில் என்ன அறிவிப்பு செய்யப்பட்டது? (ஆ) புதிய பாட்டுப் புத்தகம் வெளியிடப்பட்டதற்கான சில காரணங்கள் என்ன?

15 2016 வருடாந்தரக் கூட்டத்தில் ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் ஸ்டீஃபன் லெட், ஆங்கிலத்தில் ஒரு புதிய பாட்டுப் புத்தகத்தை வெளியிட்டபோது அங்கே கூடியிருந்த எல்லாரும் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்கள். யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’ என்பதுதான் அந்தப் பாட்டுப் புத்தகத்தின் தலைப்பு. ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் திருத்தப்பட்டதுதான் அந்தப் புதிய பாட்டுப் புத்தகத்தை வெளியிட்டதற்கான ஒரு காரணம் என்று சகோதரர் லெட் விளக்கினார். புதிய உலக மொழிபெயர்ப்பில் மாற்றப்பட்ட வார்த்தைகள் புதிய பாட்டுப் புத்தகத்திலும் மாற்றப்பட்டிருக்கின்றன. அதோடு, பிரசங்க வேலையையும் மீட்புவிலையையும் பற்றிய புதிய பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, பாடுவது நம்முடைய வணக்கத்தின் முக்கியமான அம்சமாக இருப்பதால், உயர்தரமான பாட்டுப் புத்தகத்தை வெளியிட ஆளும் குழு விரும்பியது. அதனால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் போன்ற அட்டை அதற்குக் கொடுக்கப்பட்டது.

16, 17. புதிய பாட்டுப் புத்தகத்தில் வேறென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன?

16 இந்தப் பாட்டுப் புத்தகம் பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாடல்கள் அந்தந்த பொருளின்படி பிரிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, முதல் 12 பாடல்கள் யெகோவாவைப் பற்றிய பாடல்கள். அடுத்த 8 பாடல்கள் இயேசுவையும் மீட்புவிலையையும் பற்றிய பாடல்கள். பாட்டுப் புத்தகத்தின் ஆரம்பத்தில், எந்தெந்த பொருள்களின்படி பாடல்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன என்ற மொத்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இது நமக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும். உதாரணத்துக்கு, பொதுப் பேச்சுக்கான பாடலைத் தேர்ந்தெடுக்க சகோதரர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

17 இதயத்திலிருந்து பாடுவதற்கு எல்லாருக்கும் உதவி செய்வதற்காக, சில பாடல் வரிகள் இன்னும் தெளிவாக மாற்றப்பட்டிருக்கின்றன. அதோடு, புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கின்றன. சில பாடல் வரிகள், கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்துக்கும் இன்னும் நன்றாகப் பொருந்தும் விதத்தில் மாற்றப்பட்டிருக்கின்றன.

குடும்ப வழிபாட்டில் பாடல்களைப் பாடிப் பழகுங்கள் (பாரா 18)

18. புதிய பாட்டுப் புத்தகத்திலுள்ள பாடல்களை நாம் ஏன் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

18 யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’ புத்தகத்திலுள்ள நிறையப் பாடல்கள் ஜெபங்களைப் போல இருக்கின்றன. நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று யெகோவாவிடம் சொல்ல அவை உங்களுக்கு உதவும். மற்ற பாடல்கள், “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும்” நம்மை உற்சாகப்படுத்தும். (எபி. 10:24) நம்முடைய பாடல்களின் ராகத்தையும், தாளத்தையும், வார்த்தைகளையும் நாம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். பாடல்களை உங்களுடைய வீட்டில் பாடிப் பழகும்போது, தயக்கமில்லாமல் தைரியத்தோடும் உணர்ச்சியோடும் பாடக் கற்றுக்கொள்ளலாம். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

19. சபையில் உள்ள எல்லாரும் எப்படி யெகோவாவுடைய வணக்கத்தின் முக்கியமான அம்சத்தில் பங்குபெற முடியும்?

19 பாடுவது நம்முடைய வணக்கத்தின் முக்கிய அம்சமாக இருப்பதை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். யெகோவாமேல் நாம் அன்பு வைத்திருப்பதையும், அவர் நமக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றுக்கும் நன்றியோடு இருப்பதையும் காட்டுவதற்கு இது ஒரு சிறந்த வழி. (ஏசாயா 12:5-ஐ வாசியுங்கள்.) நீங்கள் உற்சாகமாகப் பாடும்போது, சபையிலுள்ள மற்றவர்களும் உங்களைப் பார்த்து உற்சாகமாகப் பாடுவார்கள். இப்படிப் பாடுவதன் மூலம் சிறியவர்கள், பெரியவர்கள், புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் என சபையிலுள்ள எல்லாரும் யெகோவாவுடைய வணக்கத்தின் இந்த முக்கியமான அம்சத்தில் பங்குபெற முடியும். அதனால், இதயத்திலிருந்து பாடுவதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள். சங்கீதக்காரர் மூலம் யெகோவா கொடுத்த கட்டளைப்படியே, “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!” அதுவும், சந்தோஷமாகப் பாடுங்கள்!—சங். 96:1.

^ பாரா. 11 இன்னும் நன்றாகப் பாடுவதற்கான ஆலோசனைகள், “டேவிட் எச். ஸ்ப்லேன்: புதிய பாடல்களைப் பாடத் தயாராகுங்கள்” என்ற வீடியோவில் இருக்கின்றன (JW பிராட்காஸ்டிங்> எங்கள் ஸ்டுடியோவில் இருந்து > பேச்சுகள் என்ற தலைப்பில் பாருங்கள்).

^ பாரா. 18 ஒவ்வொரு மாநாட்டிலும், காலை நிகழ்ச்சியும் மதிய நிகழ்ச்சியும் 10 நிமிட இசையோடு ஆரம்பிக்கின்றன. ஆர்வத்தோடு பாடுவதற்கும் நிகழ்ச்சியைக் கவனிப்பதற்கும் இவை நம்மைத் தயார்ப்படுத்துகின்றன. அதனால், இசை ஆரம்பிக்கும்போதே நாம் நம்முடைய இருக்கைகளில் உட்கார்ந்து, அதைக் கேட்கத் தயாராக இருக்க வேண்டும்.