Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா?

யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா?

“யெகோவா தன்னுடைய ஊழியர்களின் உயிரை மீட்கிறார். அவரிடம் தஞ்சம் அடைகிற யாருமே குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட மாட்டார்கள்.”—சங். 34:22.

பாடல்கள்: 49, 65

1. பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களில் நிறையப் பேர் எப்படி உணருகிறார்கள்?

“எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்!” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 7:24) இன்றும், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களாகிய நம்மில் நிறையப் பேர் பவுலைப் போலவே சோர்விலும் வேதனையிலும் தவிக்கிறோம். ஏனென்றால், நாம் யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்பினாலும், சிலசமயங்களில் நம்மால் அப்படிச் செய்ய முடிவதில்லை. நாம் எல்லாருமே பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதுதான் அதற்குக் காரணம். மோசமான பாவத்தைச் செய்த சில கிறிஸ்தவர்கள், யெகோவா தங்களை மன்னிக்கவே மாட்டார் என்றுகூட நினைத்திருக்கிறார்கள்.

2. (அ) கடவுளுடைய ஊழியர்கள் குற்றவுணர்வில் புழுங்க வேண்டிய அவசியமே இல்லை என்பதை சங்கீதம் 34:22 எப்படிக் காட்டுகிறது? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைத் தெரிந்துகொள்வோம்? (“ பாடங்களா அடையாள அர்த்தங்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

2 நாம் யெகோவாவிடம் தஞ்சம் அடைந்தால், குற்றவுணர்வில் புழுங்க வேண்டிய அவசியமே இருக்காது என்று பைபிள் உறுதியளிக்கிறது. (சங்கீதம் 34:22-ஐ வாசியுங்கள்.) யெகோவாவிடம் தஞ்சம் அடைவது என்றால் என்ன? யெகோவா நம்மேல் இரக்கம் காட்டவும் நம்மை மன்னிக்கவும் வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? அன்று இஸ்ரவேலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடைக்கல நகரங்களைப் பற்றித் தெரிந்துகொண்டால், இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும். ‘திருச்சட்ட ஒப்பந்தம் அமலில் இருந்த காலத்தில்தானே அந்த ஏற்பாடு இருந்தது, அதுவும் அந்த ஒப்பந்தம் கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளில் மாற்றீடு செய்யப்பட்டதே’ என்று நாம் யோசிக்கலாம். ஆனால், யெகோவாதான் அந்தத் திருச்சட்டத்தைக் கொடுத்திருந்தார். அதனால், அடைக்கல நகரங்களின் ஏற்பாட்டைப் பற்றித் தெரிந்துகொண்டால், பாவத்தையும் பாவம் செய்கிறவர்களையும் மனம் திருந்துகிறவர்களையும் யெகோவா எப்படிக் கருதுகிறார் என்று தெரிந்துகொள்வோம். முதலில், இஸ்ரவேலில் ஏன் அடைக்கல நகரங்கள் இருந்தன என்றும், அந்த நகரங்களில் என்ன ஏற்பாடுகள் இருந்தன என்றும் கவனிக்கலாம்.

“அடைக்கல நகரங்களைத் தேர்ந்தெடுங்கள்”

3. இஸ்ரவேலர்கள் கொலைகாரர்களை என்ன செய்ய வேண்டியிருந்தது?

3 இஸ்ரவேலில் நடந்த கொலைகளை யெகோவா லேசாக எடுத்துக்கொள்ளவே இல்லை. ஒருவரை யாராவது கொலை செய்துவிட்டால், கொல்லப்பட்டவரின் நெருங்கிய (ஆண்) சொந்தக்காரர், அதாவது ‘பழிவாங்க வேண்டியவர்’ என்று அழைக்கப்பட்டவர், அந்தக் கொலைகாரனைக் கொல்ல வேண்டியிருந்தது. (எண். 35:19) இப்படி, ஒரு அப்பாவியைக் கொன்றதற்குப் பரிகாரமாக அந்தக் கொலைகாரன் தன்னுடைய உயிரையே கொடுக்க வேண்டியிருந்தது. கொலைகாரனைச் சீக்கிரத்தில் கொல்லாவிட்டால் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம் தீட்டுப்பட்டுவிடும் ஆபத்து இருந்தது. ஏனென்றால், இரத்தம் சிந்துவதன் மூலம், அதாவது யாரையாவது கொலை செய்வதன் மூலம், “நீங்கள் குடியிருக்கிற தேசத்தைத் தீட்டுப்படுத்தக் கூடாது” என்று யெகோவா கட்டளை கொடுத்திருந்தார்.—எண். 35:33, 34.

4. ஒரு இஸ்ரவேலர் தெரியாத்தனமாக யாரையாவது கொலை செய்த சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது?

4 ஒரு இஸ்ரவேலர் தெரியாத்தனமாக யாரையாவது கொலை செய்திருந்தாலும், ஒரு அப்பாவியைக் கொன்ற பழியை அவர் சுமக்க வேண்டியிருந்தது. (ஆதி. 9:5) ஆனாலும், அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு இரக்கம் காட்ட ஆறு அடைக்கல நகரங்களை யெகோவா ஏற்பாடு செய்திருந்தார். தெரியாத்தனமாகக் கொலை செய்தவர், பழிவாங்க வேண்டியவரிடமிருந்து தப்பித்து, அந்த நகரங்களில் ஒன்றுக்குள் ஓடிப்போய், பாதுகாப்பாக இருக்க முடிந்தது. ஆனால், தலைமைக் குரு சாகும்வரை அவர் அங்கேயே இருக்க வேண்டியிருந்தது.—எண். 35:15, 28.

5. அடைக்கல நகரங்களின் ஏற்பாடு யெகோவாவைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் என்று எப்படிச் சொல்லலாம்?

5 அடைக்கல நகரங்களின் ஏற்பாட்டை எந்த மனிதனும் செய்யவில்லை, அதை யெகோவாதான் செய்தார். “அடைக்கல நகரங்களைத் தேர்ந்தெடுங்கள்” என்று இஸ்ரவேலர்களிடம் சொல்லும்படி அவர் யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்தார். அந்த நகரங்கள் ‘தனியாக பிரித்து வைக்கப்பட்டன.’ (யோசு. 20:1, 2, 7, 8) அவை அப்படிப் பிரித்து வைக்கப்பட வேண்டுமென்று யெகோவாதான் முடிவு செய்தார். அதனால், யெகோவாவைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள இந்த ஏற்பாடு நமக்கு உதவுகிறது. உதாரணத்துக்கு, யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள அது உதவுகிறது. இன்று நாம் எப்படி யெகோவாவிடம் தஞ்சம் அடையலாம் என்றும் கற்றுக்கொடுக்கிறது.

பெரியோர்களிடம் “தன்னுடைய வழக்கைச் சொல்ல வேண்டும்”

6, 7. (அ) தெரியாத்தனமாகக் கொலை செய்தவரைப் பெரியோர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? (ஆரம்பப் படம்) (ஆ) அடைக்கலம் தேடிப் போனவர் ஏன் பெரியோர்களிடம் பேச வேண்டியிருந்தது?

6 ஒரு இஸ்ரவேலர் தற்செயலாக யாரையாவது கொலை செய்துவிட்டால், அடைக்கல நகரத்துக்கு ஓடிப்போய், நகரவாசலில் இருந்த பெரியோர்களிடம் ‘தன்னுடைய வழக்கைச் சொல்ல வேண்டியிருந்தது.’ அந்தப் பெரியோர்கள் அவரை நகரத்துக்குள் கூட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது. (யோசு. 20:4) பிற்பாடு, கொலை நடந்த நகரத்தின் பெரியோர்களிடமே அவரை அனுப்பி வைக்க வேண்டியிருந்தது. (எண்ணாகமம் 35:24, 25-ஐ வாசியுங்கள்.) அந்தக் கொலை தற்செயலாக நடந்ததை அந்தப் பெரியோர்கள் உறுதி செய்த பிறகு, அவரை மறுபடியும் அந்த அடைக்கல நகரத்துக்கே திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.

7 அடைக்கலம் தேடிப் போனவர் ஏன் பெரியோர்களிடம் பேச வேண்டியிருந்தது? ஏனென்றால், இஸ்ரவேல் சபை சுத்தமாக இருக்கும்படி அந்தப் பெரியோர்கள் பார்த்துக்கொண்டார்கள். அதோடு, தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் யெகோவாவின் இரக்கத்தைப் பெறுவதற்கு அவர்கள் உதவி செய்தார்கள். பெரியோர்களிடம் போகாவிட்டால், அவர் கொலை செய்யப்படும் ஆபத்து இருந்ததாக ஒரு பைபிள் அறிஞர் எழுதினார். அதுமட்டுமல்ல, கடவுளுடைய கட்டளையை மீறியதற்காக, அவருடைய சாவுக்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டியிருந்தது என்றும் அந்த அறிஞர் எழுதினார். தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் தொடர்ந்து உயிரோடு இருப்பதற்கு, உதவி கேட்க வேண்டியிருந்தது, அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது. ஏதாவது ஒரு அடைக்கல நகரத்துக்கு அவர் ஓடிப்போகாவிட்டால், கொல்லப்பட்டவரின் நெருங்கிய சொந்தக்காரர் அவரைக் கொலை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

8, 9. மோசமான பாவம் செய்த ஒரு கிறிஸ்தவர் ஏன் மூப்பர்களிடம் பேச வேண்டும்?

8 இன்று, ஒரு கிறிஸ்தவர் மோசமான பாவம் செய்துவிட்டால் மறுபடியும் யெகோவாவிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள அவர் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும். இது ஏன் ரொம்ப முக்கியம்? இதற்கான மூன்று காரணங்களைப் பார்க்கலாம். முதலாவதாக, மோசமான பாவங்களை விசாரிக்க யெகோவாதான் மூப்பர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். (யாக். 5:14-16) இரண்டாவதாக, மனம் திருந்தியவர்கள் மறுபடியும் கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்கவும், அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்யாமல் இருக்கவும் மூப்பர்கள் உதவி செய்வார்கள். (கலா. 6:1; எபி. 12:11) மூன்றாவதாக, மனம் திருந்தியவர்களுக்கு நம்பிக்கை அளித்து, வேதனையிலிருந்தும் குற்றவுணர்ச்சியிலிருந்தும் விடுபட மூப்பர்கள் அவர்களுக்கு உதவி செய்வார்கள். இதையெல்லாம் செய்வதற்காகத்தான் மூப்பர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள், அதற்கான பயிற்சியும் அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. மூப்பர்கள் “புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக” இருக்கிறார்கள் என்று யெகோவா சொல்கிறார். (ஏசா. 32:1, 2) இந்த ஏற்பாடு, அவர் நமக்கு இரக்கம் காட்டுவதற்கான ஒரு வழி.

9 மூப்பர்களிடம் பேசி, அவர்களுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளும்போது நிம்மதி கிடைக்கிறது; கடவுளுடைய ஊழியர்களில் நிறையப் பேருடைய அனுபவம் இதைத்தான் காட்டுகிறது. உதாரணத்துக்கு, டானியல் என்ற சகோதரர் ஒரு மோசமான பாவத்தைச் செய்துவிட்டார். மாதக்கணக்காக அதைப் பற்றி அவர் மூப்பர்களிடம் பேசவே இல்லை. “இவ்ளோ நாளுக்கு அப்புறம் மூப்பர்கள்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம், இனி அவங்களால எப்படி உதவி செய்ய முடியும்னு நினைச்சேன்” என்று அவர் சொல்கிறார். ஆனாலும், அவர் செய்த தவறு யாருக்காவது தெரிந்துவிடுமோ என்ற பயம் எப்போதுமே அவருக்கு இருந்தது. அதோடு, ஒவ்வொரு தடவை ஜெபம் செய்யும்போதும், முதலில் யெகோவாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் மற்ற விஷயங்களைப் பேச வேண்டுமென்று நினைத்தார். பிறகு ஒருவழியாக, மூப்பர்களிடம் உதவி கேட்டார். “அவங்ககிட்ட பேசறதுக்கு ஆரம்பத்துல எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. ஆனா, பேசுனதுக்கு அப்புறம், என் தோள்ல சுமந்துட்டு இருந்த ஒரு பெரிய பாரத்தை யாரோ இறக்கி வச்ச மாதிரி இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். மறுபடியும் அவருக்குச் சுத்தமான மனசாட்சி கிடைத்ததால், யெகோவாவிடம் தயக்கமில்லாமல் பேச முடிந்தது. சமீபத்தில் அவர் உதவி ஊழியராக நியமிக்கப்பட்டார்.

‘இந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போக வேண்டும்’

10. தெரியாத்தனமாகக் கொலை செய்தவர், மன்னிப்பைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டியிருந்தது?

10 தெரியாத்தனமாகக் கொலை செய்தவர், மன்னிப்புப் பெறுவதற்காகப் பக்கத்திலுள்ள ஒரு அடைக்கல நகரத்துக்கு உடனடியாக ஓடிப்போக வேண்டியிருந்தது. (யோசுவா 20:4-ஐ வாசியுங்கள்.) அவர் உயிர் பிழைப்பதற்கு, தலைமைக் குரு சாகும்வரை அங்கேயே இருக்க வேண்டியிருந்தது. இது உண்மையிலேயே ஒரு தியாகம்தான். ஏனென்றால், அவர் தன்னுடைய வேலையையும் சௌகரியமான வீட்டையும் விட்டுவிட்டு வர வேண்டியிருந்தது. அதோடு, நினைத்த இடத்துக்கெல்லாம் போக முடியாமல் ஒரே இடத்திலேயே இருக்க வேண்டியிருந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (எண். 35:25) ஆனால், அவருடைய நல்லதுக்காகத்தான் இதையெல்லாம் அவர் செய்ய வேண்டியிருந்தது. ஏனென்றால், அந்த நகரத்தைவிட்டு வெளியே போனால், கொலை செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்று உணராததை அவர் காட்டுவார். அதோடு, அவருடைய உயிருக்கு அவரே ஆபத்தைத் தேடிக்கொள்வார்.

11. மனம் திருந்திய ஒரு கிறிஸ்தவர் கடவுளுடைய இரக்கத்துக்கு ரொம்ப நன்றியோடு இருப்பதை எப்படிக் காட்டலாம்?

11 இன்றும், மனம் திருந்திய ஒருவர் கடவுளிடமிருந்து மன்னிப்பைப் பெற வேண்டுமென்றால் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். பாவம் செய்வதை அவர் முதலில் நிறுத்த வேண்டும். மோசமான பாவங்களை செய்யத் தூண்டுகிற எதையும் அவர் தவிர்க்க வேண்டும். கொரிந்துவிலிருந்த சில கிறிஸ்தவர்கள் மனம் திருந்தியபோது என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “கடவுளுக்கு ஏற்ற வருத்தம் உங்களுக்குள் எவ்வளவு ஊக்கத்தை ஏற்படுத்தியது பாருங்கள்! களங்கத்தைப் போக்கிக்கொள்ள எவ்வளவு ஆவலையும், குற்றத்தின்மேல் எவ்வளவு கொதிப்பையும், கடவுள்மேல் எவ்வளவு பயத்தையும், பிரச்சினைகளைச் சரிசெய்ய எவ்வளவு ஏக்கத்தையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், தவறைச் சரிப்படுத்த எவ்வளவு ஆர்வத்தையும் ஏற்படுத்தியது!” (2 கொ. 7:10, 11) அதனால், பாவம் செய்யாமல் இருக்க நாம் எல்லா முயற்சியும் எடுக்கும்போது, செய்த தவறை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறோம் என்பதைக் காட்டுவோம். அதோடு, கடவுளுடைய இரக்கம் தானாகவே கிடைத்துவிடும் என்ற எண்ணம் நமக்கு இல்லை என்பதையும் காட்டுவோம்.

12. யெகோவாவுடைய இரக்கம் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் ஒரு கிறிஸ்தவர் எதையெல்லாம் விட்டுவிட வேண்டியிருக்கும்?

12 யெகோவாவுடைய இரக்கம் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால் ஒரு கிறிஸ்தவர் எதையெல்லாம் விட்டுவிட வேண்டியிருக்கும்? பாவம் செய்யத் தூண்டுகிற விஷயங்களை விட்டுவிட அவர் தயாராக இருக்க வேண்டும்; அவருக்குப் பிடித்த விஷயங்களாக இருந்தாலும்கூட அவற்றை அவர் விட்டுவிட வேண்டும். (மத். 18:8, 9) உதாரணத்துக்கு, யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்யச் சொல்லி உங்கள் நண்பர்கள் உங்களைத் தூண்டினால் என்ன செய்வீர்கள்? அவர்களோடு பழகுவதையே நிறுத்துவீர்களா? ஒருவேளை, அளவாகக் குடிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அளவுக்கு அதிகமாகக் குடிக்கத் தூண்டுகிற சூழ்நிலைகளைத் தவிர்ப்பீர்களா? ஒழுக்கங்கெட்ட ஆசைகளைக் கட்டுப்படுத்துவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அசிங்கமான யோசனைகளைத் தூண்டுகிற சினிமாக்களையோ வெப்சைட்டுகளையோ வேறெதாவது செயல்களையோ தவிர்ப்பீர்களா? யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்காக நாம் செய்கிற எந்தத் தியாகத்துக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும். யெகோவா நம்மேல் ‘என்றென்றும் மாறாத அன்பு’ காட்டும்போது நமக்கு எப்படி இருக்கும்? (ஏசா. 54:7, 8) அதைவிட சந்தோஷம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? ஒருவேளை, யெகோவா நம்மைக் கைவிட்டுவிட்டால் எப்படி இருக்கும்? அதைவிட வேதனை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

‘அங்கே அடைக்கலம் பெற முடியும்’

13. தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் அடைக்கல நகரத்துக்குள் எப்படிப் பாதுகாப்போடும் சந்தோஷத்தோடும் இருக்க முடிந்தது? விளக்குங்கள்.

13 தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் அடைக்கல நகரத்துக்குள் போன பிறகு பாதுகாப்பாக இருந்தார். ‘அங்கே [அதாவது, அந்த நகரங்களில்] அடைக்கலம் பெற முடியும்’ என்று யெகோவா சொல்லியிருந்தார். (யோசு. 20:2, 3) ஏனென்றால், அங்கே போன பிறகு அந்த வழக்கு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கவில்லை. அதோடு, பழிவாங்க வேண்டியவர் அந்த நகரத்துக்குள் வரவும் அவரைக் கொலை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. அடைக்கலம் தேடிப் போனவர் அந்த நகரத்திலேயே இருந்தபோது யெகோவாவின் பாதுகாப்பு அவருக்கு இருந்தது. அந்த நகரம் அவருக்கு சிறையைப் போல இருக்கவில்லை. ஏனென்றால், வேலை செய்யவும், மற்றவர்களுக்கு உதவி செய்யவும், நிம்மதியோடு யெகோவாவுக்குச் சேவை செய்யவும் அவரால் முடிந்தது. சொல்லப்போனால், அவரால் சந்தோஷத்தோடும் திருப்தியோடும் வாழ முடிந்தது.

யெகோவா மன்னிக்கிறார் என்று உறுதியாக நம்புங்கள் (பாராக்கள் 14-16)

14. மனம் திருந்திய ஒரு கிறிஸ்தவர் எதை உறுதியாக நம்பலாம்?

14 மோசமான பாவங்களைச் செய்த சிலர், மனம் திருந்திய பிறகும்கூட குற்றவுணர்ச்சியில் புழுங்குகிறார்கள். அவர்கள் செய்த பாவத்தை யெகோவா ஒருபோதும் மறக்க மாட்டார் என்றும் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவா உங்களை மன்னிக்கும்போது முழுமையாக மன்னிக்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அதனால், இனி நீங்கள் குற்றவுணர்ச்சியில் தவிக்க வேண்டியதே இல்லை. நாம் ஏற்கெனவே பார்த்த டானியலின் அனுபவமும் இதுதான். திருந்துவதற்கும் சுத்தமான மனசாட்சியைப் பெறுவதற்கும் மூப்பர்கள் அவருக்கு உதவிய பிறகு, அவர் ரொம்பவே நிம்மதி அடைந்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “அதுக்கு அப்புறம் என் மனசு என்னை உறுத்தவே இல்ல. ஒரு பாவம் மன்னிக்கப்பட்டா, அது முழுசா மன்னிக்கப்பட்டிருக்குன்னு அர்த்தம். யெகோவா சொன்ன மாதிரி, உங்க பாரத்தை தூக்கி அவர் தூரமா வீசி எறிஞ்சிடுறாரு. அத பத்தி நீங்க மறுபடியும் யோசிக்க வேண்டியதே இல்ல.” தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் அடைக்கல நகரத்துக்குள் இருந்தபோது, பழிவாங்க வேண்டியவர் வந்து தன்னைக் கொலை செய்துவிடுவாரோ என்று பயப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதேபோல், யெகோவா நம்முடைய பாவங்களை மன்னித்த பிறகு, அதை மறுபடியும் நினைத்துப் பார்ப்பார் என்றோ அதற்காக நம்மைத் தண்டிப்பார் என்றோ நாம் பயப்பட வேண்டியதில்லை.சங்கீதம் 103:8-12-ஐ வாசியுங்கள்.

15, 16. இயேசு நம் மீட்பராகவும் தலைமைக் குருவாகவும் இருப்பது, கடவுளுடைய இரக்கத்தின் மேல் அதிக நம்பிக்கை வைக்க நமக்கு எப்படி உதவுகிறது?

15 யெகோவா இரக்கம் காட்டுவார் என்று நம்புவதற்கு இஸ்ரவேலர்களைவிட நமக்குத்தான் முக்கியமான காரணம் இருக்கிறது. யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடியாததால், “பரிதாபமான நிலையில்” தான் இருப்பதாக பவுல் சொன்னார். ஆனால், அப்படிச் சொன்ன பிறகு, “நம்முடைய எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் கடவுளுக்கு நன்றி!” என்றும் சொன்னார். (ரோ. 7:25) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? அவர் பாவ ஆசைகளை எதிர்த்துப் போராடிவந்தபோதிலும், முன்பு பாவம் செய்திருந்தபோதிலும், இயேசுவுடைய மீட்புப்பலியின் அடிப்படையில் யெகோவா தன்னை மன்னித்திருந்ததை அவர் நம்பினார். ஏனென்றால், அவர் மனம் திருந்தியிருந்தார். இயேசு தன் உயிரை மீட்புவிலையாகக் கொடுத்திருப்பதால், நமக்கு சுத்தமான மனசாட்சியும் மன நிம்மதியும் கிடைக்கிறது. (எபி. 9:13, 14) இயேசு நம்முடைய தலைமைக் குருவாக இருப்பதால், “தன் மூலம் கடவுளை அணுகுகிற ஆட்களை முழுமையாக மீட்பதற்கு அவர் வல்லவராக இருக்கிறார். ஏனென்றால், அவர்களுக்காகப் பரிந்து பேச அவர் எப்போதும் உயிரோடு இருக்கிறார்.” (எபி. 7:24, 25) பூர்வ காலங்களில், யெகோவா தங்களுடைய பாவங்களை மன்னிப்பார் என்று இஸ்ரவேலர்கள் உறுதியாக நம்புவதற்கு, தலைமைக் குரு உதவினார். இன்று இயேசு நமக்குத் தலைமைக் குருவாக இருப்பதால், “நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெறுவோம்” என்பதை நாம் இன்னும் உறுதியாக நம்பலாம்.—எபி. 4:15, 16.

16 யெகோவாவிடம் தஞ்சம் அடைய வேண்டுமென்றால், இயேசுவின் பலியில் நாம் விசுவாசம் வைக்க வேண்டும். மீட்புவிலை எல்லா மனிதர்களுக்காகவும் பொதுவாகக் கொடுக்கப்பட்டதாக நினைக்காதீர்கள். மீட்புவிலை உங்களுக்கு நன்மை செய்கிறது என்று நம்புங்கள். (கலா. 2:20, 21) மீட்புவிலையின் அடிப்படையில் யெகோவா உங்கள் பாவங்களை மன்னிக்கிறார் என்று நம்புங்கள். என்றென்றும் வாழும் நம்பிக்கையை மீட்புவிலை உங்களுக்குக் கொடுத்திருக்கிறது என்று நம்புங்கள். இயேசுவின் பலி யெகோவா உங்களுக்குக் கொடுத்த பரிசு!

17. யெகோவாவிடம் தஞ்சம் அடைய நீங்கள் ஏன் ஆசைப்படுகிறீர்கள்?

17 யெகோவாவின் இரக்கத்தைப் புரிந்துகொள்ள அடைக்கல நகரங்கள் நமக்கு உதவுகின்றன. கடவுள் செய்திருக்கும் இந்த ஏற்பாடு, உயிர் பரிசுத்தமானது என்பதை நமக்குக் கற்பிக்கிறது. மூப்பர்கள் எப்படி நமக்கு உதவலாம் என்பதையும், உண்மையாக மனம் திருந்துவது என்றால் என்ன என்பதையும், யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்று நாம் ஏன் முழுமையாக நம்பலாம் என்பதையும் இந்த ஏற்பாடு காட்டுகிறது. நீங்கள் யெகோவாவிடம் தஞ்சம் அடைகிறீர்களா? அதைவிட பாதுகாப்பான இடம் வேறு எதுவும் இல்லை! (சங். 91:1, 2) நீதிக்கும் இரக்கத்துக்கும் தலைசிறந்த முன்மாதிரியாக இருக்கும் யெகோவாவைப் பின்பற்றுவதற்கு, அடைக்கல நகரங்கள் எப்படி உதவுகின்றன என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 10 அடைக்கலம் தேடிப் போனவருடைய நெருங்கிய குடும்பத்தாரும் அவரோடு சேர்ந்து அடைக்கல நகரத்தில் ஒருவேளை தங்கியிருப்பார்கள் என்று யூத அறிஞர்கள் சொல்கிறார்கள்.