Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுங்கள்

யெகோவாவின் நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுங்கள்

“நீதிநியாயத்தோடு தீர்ப்பு கொடுங்கள், ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்.”—சக. 7:9.

பாடல்கள்: 21, 69

1, 2. (அ) திருச்சட்டத்தைப் பற்றி இயேசு எப்படி உணர்ந்தார்? (ஆ) வேத அறிஞர்களும் பரிசேயர்களும் திருச்சட்டத்தை எப்படித் தவறாகப் பயன்படுத்தினார்கள்?

இயேசு திருச்சட்டத்தை நேசித்தார். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால், அவருடைய வாழ்க்கையிலேயே மிக முக்கியமானவரான அவருடைய தகப்பன் யெகோவாதான் அதைக் கொடுத்திருந்தார்! கடவுளுடைய சட்டங்களை இயேசு மிகவும் நேசிப்பார் என்று சங்கீதம் 40:8 முன்கூட்டியே இப்படிச் சொல்லியிருந்தது: “என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம். உங்களுடைய சட்டம் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது.” திருச்சட்டம் பரிபூரணமானது... பிரயோஜனமானது... நிச்சயமாக நிறைவேறக்கூடியது... என்பதையெல்லாம் இயேசு தன் சொல்லிலும் செயலிலும் காட்டினார்.—மத். 5:17-19.

2 வேத அறிஞர்களும் பரிசேயர்களும் தன்னுடைய தகப்பன் கொடுத்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதைப் பார்த்து இயேசு மிகவும் வேதனைப்பட்டிருப்பார். கடவுளுடைய சட்டங்கள் நியாயமற்றவை என்பதுபோல் எல்லாரையும் அவர்கள் நினைக்க வைத்தார்கள். இயேசு அவர்களிடம், “புதினாவிலும், சதகுப்பையிலும், சீரகத்திலும் பத்திலொரு பாகத்தைக் கொடுக்கிறீர்கள்; ஆனால், திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயம், இரக்கம், விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை விட்டுவிட்டீர்கள்” என்று சொன்னார். (மத். 23:23) அப்படியென்றால், அவர்களிடம் என்ன பிரச்சினை இருந்ததாக இயேசு சுட்டிக்காட்டினார்? திருச்சட்டத்தில் இருந்த ஒவ்வொரு நுணுக்கமான விஷயத்தையும் அவர்கள் மிகக் கவனமாகக் கடைப்பிடித்தார்கள், ஆனால் முக்கியமான காரியங்களை விட்டுவிட்டார்கள். பரிசேயர்கள் திருச்சட்டத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இயேசு, எதற்காகத் திருச்சட்டம் கொடுக்கப்பட்டது என்பதையும், அதிலிருந்த ஒவ்வொரு சட்டமும் யெகோவாவைப் பற்றி எதைக் காட்டியது என்பதையும் புரிந்துகொண்டார்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 கிறிஸ்தவர்களாகிய நாம், மோசேயின் திருச்சட்டத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை. (ரோ. 7:6) பிறகு ஏன் அதை யெகோவா பைபிளில் பதிவு செய்திருக்கிறார்? அதில் சொல்லப்பட்ட “மிக முக்கியமான காரியங்களை,” அதாவது அதற்கு அடிப்படையாக இருந்த நியமங்களை, நாம் புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உதாரணத்துக்கு, அடைக்கல நகரங்களின் ஏற்பாட்டிலிருந்து என்ன நியமங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்? தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் என்ன செய்ய வேண்டியிருந்தது என்பதையும், அவை எப்படி நமக்குப் பாடமாக இருக்கின்றன என்பதையும் முந்தின கட்டுரையில் கற்றுக்கொண்டோம். அடைக்கல நகரங்கள் யெகோவாவைப் பற்றி என்ன கற்றுத்தருகின்றன என்பதையும், அவருடைய குணங்களை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்பதையும் இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்வோம். குறிப்பாக, இந்த மூன்று கேள்விகளுக்குப் பதில்களைத் தெரிந்துகொள்வோம்: யெகோவா இரக்கமுள்ளவர் என்பதை அடைக்கல நகரங்களின் ஏற்பாடு எப்படிக் காட்டியது? உயிரைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதைப் பற்றி அவை என்ன கற்றுத்தருகின்றன? அவருடைய பரிபூரணமான நீதியை அவை எப்படிக் காட்டுகின்றன? இந்த ஒவ்வொரு கேள்வியையும் சிந்திக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பனை நீங்கள் எப்படிப் பின்பற்றலாம் என்று யோசித்துப் பாருங்கள்.எபேசியர் 5:1-ஐ வாசியுங்கள்.

அடைக்கல நகரங்கள் அமைந்திருந்த இடங்கள் கடவுளுடைய இரக்கத்தைக் காட்டின

4, 5. (அ) தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் ஏதாவது ஒரு அடைக்கல நகரத்துக்குச் சுலபமாக ஓடிப்போக என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஏன்? (ஆ) இதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

4 ஆறு அடைக்கல நகரங்களும், சுலபமாகப் போக முடிந்த இடங்களில் இருக்கும்படி யெகோவா ஏற்பாடு செய்தார். யோர்தான் ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் மும்மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கும்படி அவர் இஸ்ரவேலர்களிடம் சொன்னார். எதற்காக? தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் சீக்கிரமாகவும் சுலபமாகவும் அந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போவதற்காகத்தான்! (எண். 35:11-14) அந்த நகரங்களுக்குப் போன சாலைகள் நன்றாகப் பராமரிக்கப்பட்டன. (உபா. 19:3) தெரியாத்தனமாகக் கொலை செய்தவர்கள் அந்த நகரங்களைக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக, அந்தச் சாலைகளில் வழிகாட்டுப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததாக யூதப் பாரம்பரியம் சொல்கிறது. இஸ்ரவேலில் அடைக்கல நகரங்களின் ஏற்பாடு இருந்ததால், தெரியாத்தனமாகக் கொலை செய்த இஸ்ரவேலர்கள் பாதுகாப்பைத் தேடி வேறு தேசங்களுக்குப் போக வேண்டிய அவசியம் இருக்கவில்லை; அங்கே பொய்த் தெய்வங்களை வணங்கும் ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.

5 இதைக் கொஞ்சம் யோசியுங்கள்: கொலைகாரர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்திருந்தார். அதேசமயத்தில், தெரியாத்தனமாகக் கொலை செய்தவருக்கு இரக்கமும் கரிசனையும் பாதுகாப்பும் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார். அதைப் பற்றி ஒரு பைபிள் அறிஞர், “எல்லாமே ரொம்பத் தெளிவாகவும் எளிமையாகவும் சுலபமாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டது” என்றார். யெகோவா, தன் ஊழியர்களைத் தண்டிப்பதிலேயே குறியாக இருக்கிற கொடூரமான நீதிபதி கிடையாது. அவர் “மகா இரக்கமுடைய கடவுள்.”—எபே. 2:4.

6. பரிசேயர்கள் யெகோவாவைப் போல் இரக்கம் காட்டினார்களா? விளக்குங்கள்.

6 பரிசேயர்கள் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட விரும்பவில்லை. உதாரணத்துக்கு, ஒரே தவறை மூன்று தடவைக்கு மேல் செய்தவர்களைப் பரிசேயர்கள் மன்னிக்கவில்லை என்று யூதப் பாரம்பரியம் சொல்கிறது. அவர்களுடைய மனப்பான்மை எந்தளவுக்குத் தவறு என்பதைக் காட்ட இயேசு ஒரு உவமையைச் சொன்னார். அதில், வரி வசூலிக்கும் ஒருவருக்குப் பக்கத்தில் நின்று ஒரு பரிசேயன் ஜெபம் செய்தான். “கடவுளே, கொள்ளையடிப்பவர்களையும் அநீதியாக நடக்கிறவர்களையும் மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களையும் போல நான் இல்லை, வரி வசூலிக்கிற இவனைப் போலவும் நான் இல்லை. இதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்” என்றான். இயேசு சொல்லவந்த குறிப்பு இதுதான்: பரிசேயர்கள் ‘மற்றவர்களைத் துளியும் மதிக்கவில்லை,’ மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லையென்று நினைத்தார்கள்.—லூக். 18:9-14.

மன்னிப்புக் கேட்பது மற்றவர்களுக்குச் சுலபமாக இருக்கும்படி நடந்துகொள்ளுங்கள், மனத்தாழ்மை காட்டுங்கள் (பாராக்கள் 4-8)

7, 8. (அ) நீங்கள் எப்படி யெகோவாவைப் போல் இரக்கம் காட்டலாம்? (ஆ) மற்றவர்களை மன்னிக்க நமக்கு ஏன் மனத்தாழ்மை அவசியம்?

7 பரிசேயர்களைப் பின்பற்றாமல் யெகோவாவைப் பின்பற்றுங்கள். இரக்கமும் கரிசனையும் காட்டுங்கள். (கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.) மற்றவர்கள் தயங்காமல் உங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்கும்படி நடந்துகொள்ளுங்கள். (லூக். 17:3, 4) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யாராவது என் மனச அடிக்கடி நோகடிச்சாலும் உடனடியா அவங்கள மன்னிக்கிறேனா? என் மனச காயப்படுத்தினவங்ககிட்ட சமாதானம் பண்றதுக்கு ஆசப்படறேனா?’

8 மற்றவர்களை மன்னிக்க நமக்கு மனத்தாழ்மை தேவை. பரிசேயர்கள், மற்றவர்களைவிட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைத்ததால், யாரையும் மன்னிக்கவில்லை. ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம், மனத்தாழ்மையோடு ‘மற்றவர்களை நம்மைவிட உயர்ந்தவர்களாகக் கருதுகிறோம்,’ தாராளமாக அவர்களை மன்னிக்கிறோம். (பிலி. 2:3) ‘நான் யெகோவா மாதிரி மனத்தாழ்மை காட்டறேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ளலாம். நாம் மனத்தாழ்மை காட்டினால், நம்மிடம் வந்து மன்னிப்புக் கேட்பது மற்றவர்களுக்குச் சுலபமாக இருக்கும்; அவர்களை மன்னிப்பது நமக்கும் சுலபமாக இருக்கும். இரக்கம் காட்டுவதற்குத் தாமதிக்காதீர்கள், சட்டென்று கோபப்படாதீர்கள்.—பிர. 7:8, 9.

உயிருக்கு மதிப்புக் காட்டினால் “எந்தக் கொலைப்பழியும் உங்கள்மேல் வராது”

9. உயிர் பரிசுத்தமானது என்பதைப் புரிந்துகொள்ள யெகோவா எப்படி இஸ்ரவேலர்களுக்கு உதவினார்?

9 கொலைப்பழியிலிருந்து இஸ்ரவேலர்களைப் பாதுகாப்பதுதான், அடைக்கல நகரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதற்கான ஒரு முக்கிய காரணம். (உபா. 19:10) யெகோவா உயிரை நேசிப்பதால் கொலையை வெறுக்கிறார். (நீதி. 6:16, 17) அவர் நீதியும் பரிசுத்தமும் உள்ளவர் என்பதால், தெரியாத்தனமாக நடந்த கொலைகளைக்கூட கண்டும்காணாமல் விடவில்லை. தெரியாத்தனமாகக் கொலை செய்தவருக்கு இரக்கம் காட்டப்பட்டது உண்மைதான். ஆனால், நடந்ததையெல்லாம் முதலில் பெரியோர்களிடம் அவர் விளக்க வேண்டியிருந்தது. அவர் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்ததை அவர்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பிறகு, தலைமைக் குரு சாகும்வரை அவர் அடைக்கல நகரத்திலேயே இருக்க வேண்டியிருந்தது. அப்படியென்றால், வாழ்க்கையின் மீதி காலமெல்லாம் அங்கு இருக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். இந்த ஏற்பாடு, உயிர் எவ்வளவு பரிசுத்தமானது என்பதை எல்லா இஸ்ரவேலர்களுக்கும் உணர்த்தியது. உயிர் கொடுத்தவருக்கு மதிப்புக் காட்டுவதற்காக, மற்றவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாதபடி அவர்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது.

10. இயேசு சொன்னபடி, வேத அறிஞர்களும் பரிசேயர்களும் எப்படி மற்றவர்களுடைய உயிருக்கு மதிப்புக் காட்டவில்லை?

10 வேத அறிஞர்களும் பரிசேயர்களும் யெகோவாவைப் போல் நடந்துகொள்ளவில்லை; மற்றவர்களுடைய உயிருக்கு அவர்கள் மதிப்புக் காட்டவில்லை. அதனால், இயேசு அவர்களிடம், “அறிவு என்ற சாவியை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் உள்ளே போகவில்லை, போகிறவர்களையும் போக விடுவதில்லை” என்றார். (லூக். 11:52) இயேசு எதை அர்த்தப்படுத்தினார்? வேத அறிஞர்களும் பரிசேயர்களும் கடவுளுடைய வார்த்தையை மக்களுக்குக் கற்றுத்தர வேண்டியிருந்தது, முடிவில்லாத வாழ்வைப் பெற அவர்களுக்கு உதவ வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள், ‘வாழ்வின் அதிபதியாகிய’ இயேசுவைப் பின்பற்றாதபடி மக்களைத் தடுத்தார்கள். (அப். 3:15) இப்படி, மக்களை அழிவின் பாதைக்கு வழிநடத்தினார்கள். அவர்கள் பெருமையும் சுயநலமும் பிடித்தவர்களாக இருந்தார்கள். மக்களுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. கொஞ்சம்கூட அன்பு காட்டாமல் எவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள்!

11. (அ) அப்போஸ்தலன் பவுல் எப்படி யெகோவாவைப் போல் உயிரை உயர்வாக மதித்தார்? (ஆ) பவுலைப் போலவே சுறுசுறுப்பாக ஊழியம் செய்ய எது நமக்கு உதவும்?

11 நாம் எப்படி வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும் பின்பற்றாமல் யெகோவாவைப் பின்பற்றலாம்? உயிரை உயர்வாக மதிப்பதன் மூலம் நாம் அப்படிச் செய்யலாம். அப்போஸ்தலன் பவுல், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை முடிந்தவரை எல்லாருக்கும் சொல்வதன் மூலம் உயிருக்கு மதிப்புக் காட்டினார். அதனால்தான், “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல” என்று அவரால் சொல்ல முடிந்தது. (அப்போஸ்தலர் 20:26, 27-ஐ வாசியுங்கள்.) ஆனால், குற்றவுணர்ச்சியைத் தவிர்ப்பதற்காக மட்டும் பவுல் பிரசங்கித்தாரா? அல்லது, யெகோவா கட்டளை கொடுத்திருந்ததால் மட்டும் பிரசங்கித்தாரா? இல்லை. அவர் மக்களை நேசித்தார். அவர்களுடைய உயிரை உயர்வாக மதித்தார். அவர்கள் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டுமென்று விரும்பினார். (1 கொ. 9:19-23) உயிரை யெகோவா மதிப்பதுபோல் நாம் மதிக்க வேண்டும். எல்லாரும் மனம் திருந்தி உயிர் பிழைக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (2 பே. 3:9) யெகோவாவைப் பின்பற்றுவதற்கு, நாம் மக்களை நேசிக்க வேண்டும். அவர்கள்மேல் நமக்கு இரக்கம் இருந்தால், சுறுசுறுப்போடும் சந்தோஷத்தோடும் பிரசங்கிப்போம்.

12. கடவுளுடைய மக்கள் ஏன் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்?

12 யெகோவாவைப் போலவே உயிருக்கு மதிப்புக் காட்ட, நாம் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வாகனங்களை ஓட்டும்போதும் வேலை செய்யும்போதும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வணக்கத்துக்கான இடங்களைக் கட்டும்போதும், பராமரிக்கும்போதும், அங்கே போய்வரும்போதும்கூட நாம் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பும் ஆரோக்கியமும்தான் எப்போதுமே முக்கியம்; நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதெல்லாம் அதற்கு அடுத்ததுதான். நம் கடவுள் எப்போதுமே சரியானதைத்தான் செய்கிறார், நாமும் அவரைப் போலவே இருக்க வேண்டும். முக்கியமாக, மூப்பர்கள் தங்களுடைய பாதுகாப்புக்கும் மற்றவர்களுடைய பாதுகாப்புக்கும் கவனம் செலுத்த வேண்டும். (நீதி. 22:3) பாதுகாப்பு விதிமுறைகளைப் பற்றி ஒரு மூப்பர் உங்களுக்கு ஞாபகப்படுத்தினால், அவருக்குக் கீழ்ப்படியுங்கள். (கலா. 6:1) யெகோவாவைப் போல் உயிருக்கு மதிப்புக் காட்டுங்கள், அப்போது “எந்தக் கொலைப்பழியும் உங்கள்மேல் வராது.”

‘இந்த நீதித்தீர்ப்புகளின்படி தீர்ப்பு வழங்குங்கள்’

13, 14. இஸ்ரவேலில் இருந்த பெரியோர்கள் எப்படி யெகோவாவின் நீதியைப் பின்பற்ற வேண்டியிருந்தது?

13 இஸ்ரவேலில் இருந்த பெரியோர்கள் தன்னுடைய நீதியைப் பின்பற்ற வேண்டுமென்று யெகோவா கட்டளை கொடுத்தார். முதலில், அவர்கள் எல்லாவற்றையும் விசாரித்து உண்மைகளை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. பிறகு, கொலை செய்தவரின் உள்நோக்கம், மனப்பான்மை, கடந்தகால செயல்கள் ஆகியவற்றைக் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டியிருந்தது. அதன் பிறகுதான், அவருக்கு இரக்கம் காட்டுவதா வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. அவர் முன்விரோதத்தால் திட்டம்போட்டு கொலை செய்தாரா என்பதை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. (எண்ணாகமம் 35:20-24-ஐ வாசியுங்கள்.) ஒருவேளை சாட்சிகள் இருந்தால், குறைந்தது இரண்டு சாட்சிகளின் வாக்குமூலத்தைக் கேட்ட பிறகுதான் கொலைகாரருக்குத் தண்டனை கொடுக்க வேண்டியிருந்தது.—எண். 35:30.

14 அந்தப் பெரியோர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்த பிறகு, அவர் செய்ததை மட்டும் யோசிக்காமல் அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் யோசிக்க வேண்டியிருந்தது. வெளிப்படையாகத் தெரியாத விஷயங்களையும், அவர் அப்படிச் செய்ததற்கான காரணங்களையும் புரிந்துகொள்ள அவர்களுக்கு விவேகம் தேவைப்பட்டது. மிக முக்கியமாக, யெகோவாவைப் போல் விவேகத்தையும் இரக்கத்தையும் நீதியையும் காட்டுவதற்கு அவருடைய சக்தியின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது.—யாத். 34:6, 7.

15. பாவிகளை இயேசு பார்த்த விதத்துக்கும் பரிசேயர்கள் பார்த்த விதத்துக்கும் என்ன வித்தியாசம்?

15 பரிசேயர்கள், குற்றவாளி செய்த குற்றத்தை மட்டுமே பார்த்தார்கள், அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பார்க்கவே இல்லை. மத்தேயுவின் வீட்டில் இயேசு விருந்து சாப்பிடுவதைச் சில பரிசேயர்கள் பார்த்தபோது, “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?” என்று அவருடைய சீஷர்களிடம் கேட்டார்கள். அப்போது இயேசு, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை. அதனால், ‘பலியை அல்ல, இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று சொன்னார். (மத். 9:9-13) அப்படியென்றால், பாவிகள் செய்ததை இயேசு நியாயப்படுத்தினாரா? இல்லவே இல்லை. அவர்கள் மனம் திருந்த வேண்டுமென்றுதான் விரும்பினார். அவர் பிரசங்கித்த செய்தியின் முக்கியமான அம்சமே அதுதான். (மத். 4:17) ‘வரி வசூலிப்பவர்களிலும் பாவிகளிலும்’ சிலராவது மாற விரும்பியது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. வெறுமனே சாப்பிடுவதற்காக அவர்கள் மத்தேயுவின் வீட்டுக்கு வரவில்லை. இயேசுவைப் பின்பற்றியதால்தான் அங்கே வந்திருந்தார்கள். (மாற். 2:15) ஆனால், மக்களை இயேசு பார்த்தது போல பரிசேயர்களில் பெரும்பாலானவர்கள் பார்க்கவில்லை. மக்கள் மாறுவார்கள் என்று அவர்கள் நம்பவே இல்லை. திருந்துவதற்கு வாய்ப்பில்லாத பாவிகளாகத்தான் மக்களை அவர்கள் பார்த்தார்கள். நீதியும் இரக்கமும் உள்ள கடவுளாகிய யெகோவாவுக்கும் அந்தப் பரிசேயர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

16. நீதிவிசாரணைக் குழுவில் இருக்கும் மூப்பர்கள் எதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்?

16 இன்று மூப்பர்கள், ‘நியாயத்தை நேசிக்கிற’ யெகோவாவைப் போல் நடந்துகொள்ள வேண்டும். (சங். 37:28) முதலில், ஒரு பாவம் செய்யப்பட்டிருப்பது உண்மையா என்று அவர்கள் “அலசி ஆராய” வேண்டும். பாவம் செய்யப்பட்டிருப்பது உறுதியானால், அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிப்பதற்கு பைபிளின் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். (உபா. 13:12-14) நீதிவிசாரணைக் குழுவில் இருக்கும் மூப்பர்கள், மோசமான பாவத்தைச் செய்தவர் மனம் திருந்தியிருக்கிறாரா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதைச் செய்வது எப்போதுமே சுலபம் கிடையாது. பாவம் செய்தவர் அந்தப் பாவத்தை எப்படிக் கருதுகிறார் என்பதையும், அவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதையும் தெரிந்துகொண்டால்தான் அவர் மனம் திருந்தியிருக்கிறாரா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியும். (வெளி. 3:3) பாவம் செய்தவர் மனம் திருந்தினால்தான் இரக்கம் பெற முடியும். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

17, 18. ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா என்று மூப்பர்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? (ஆரம்பப் படம்)

17 யெகோவாவையும் இயேசுவையும் போல மூப்பர்களால் மற்றவர்களுடைய இதயத்தில் இருப்பதைப் பார்க்க முடியாது. நீங்கள் ஒரு மூப்பராக இருந்தால், ஒருவர் உண்மையிலேயே மனம் திருந்தியிருக்கிறாரா இல்லையா என்று எப்படிக் கண்டுபிடிக்கலாம்? முதலாவதாக, ஞானத்தையும் விவேகத்தையும் கேட்டு ஜெபம் செய்யுங்கள். (1 ரா. 3:9) இரண்டாவதாக, ‘உலக மக்களைப் போல் வருத்தப்படுவதற்கும்,’ ‘கடவுளுக்கு ஏற்ற வருத்தத்துக்கும்,’ அதாவது உண்மையாக மனம் திருந்துவதற்கும், இருக்கிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள, பைபிளையும் உண்மையுள்ள அடிமை தந்திருக்கும் பிரசுரங்களையும் பயன்படுத்துங்கள். (2 கொ. 7:10, 11) மனம் திருந்தியவர்களும் சரி, மனம் திருந்தாதவர்களும் சரி, எப்படி உணர்ந்தார்கள்... யோசித்தார்கள்... நடந்துகொண்டார்கள்... என்பதையெல்லாம் பைபிளில் அலசிப் பாருங்கள்.

18 மூன்றாவதாக, அந்த நபர் என்ன செய்தார் என்பதை மட்டும் யோசிக்காமல், அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் யோசியுங்கள். அவருடைய பின்னணியையும் உள்நோக்கத்தையும் வரம்புகளையும் யோசியுங்கள். கிறிஸ்தவ சபையின் தலைவரான இயேசு, “கண்ணால் பார்ப்பதை வைத்து தீர்ப்பு சொல்ல மாட்டார். காதால் கேட்பதை வைத்து கண்டிக்க மாட்டார். பூமியிலுள்ள ஏழைகளுக்கு நீதியோடு தீர்ப்பு வழங்குவார். தாழ்மையானவர்களின் சார்பாக ஜனங்களை நியாயமாகக் கண்டிப்பார்” என்று பைபிள் முன்னறிவித்தது. (ஏசா. 11:3, 4) மூப்பர்களே, தன் சபையைக் கவனித்துக்கொள்ள இயேசு உங்களை நியமித்திருக்கிறார். அதனால், நீதியோடும் இரக்கத்தோடும் தீர்ப்புக் கொடுக்க அவர் உங்களுக்கு உதவுவார். (மத். 18:18-20) மூப்பர்கள் நம்மேல் அக்கறை காட்டுகிறார்கள். நீதியோடும் இரக்கத்தோடும் ஒருவரை ஒருவர் நடத்த அவர்கள் நமக்கு உதவுகிறார்கள். இப்படிப்பட்ட மூப்பர்கள் கிடைத்ததற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்!

19. அடைக்கல நகரங்கள் கற்றுத்தரும் பாடங்களில் நீங்கள் எதைக் கடைப்பிடிக்க நினைக்கிறீர்கள்?

19 திருச்சட்டத்தில் ‘அடிப்படை அறிவும் உண்மையும்’ இருக்கிறது. யெகோவாவையும் அவருடைய நியமங்களையும் பற்றி அது நமக்குக் கற்றுத்தருகிறது. (ரோ. 2:20) திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடைக்கல நகரங்களின் ஏற்பாடு, ‘நீதிநியாயத்தோடு தீர்ப்பு கொடுப்பது’ எப்படி என்று மூப்பர்களுக்குக் கற்றுத்தருகிறது. அதோடு, ‘ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்ட’ அது நம் எல்லாருக்கும் கற்றுத்தருகிறது. (சக. 7:9) நாம் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றாலும், யெகோவா மாறாதவராக இருப்பதை மறந்துவிடக் கூடாது. இன்றும்கூட நீதியையும் இரக்கத்தையும் அவர் மிக முக்கியமானதாகக் கருதுகிறார். அப்படிப்பட்ட கடவுளை வணங்குவது நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பெரிய பாக்கியம்! அவருடைய அருமையான குணங்களை நாம் பின்பற்றி, அவரிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் பெறலாம்!

^ பாரா. 16 செப்டம்பர் 15, 2006 காவற்கோபுரம் பக்கம் 30-ல் இருக்கிற “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.