Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 12

அன்பு வெறுப்பை வெல்லும்!

அன்பு வெறுப்பை வெல்லும்!

“நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதற்காக இவற்றைக் கட்டளையிடுகிறேன். உலகம் உங்களை வெறுத்தால், அது உங்களை வெறுப்பதற்கு முன்பே என்னை வெறுத்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.”—யோவா. 15:17, 18.

பாட்டு 154 சகித்தே ஓடுவோம்!

இந்தக் கட்டுரையில்... *

1. மத்தேயு 24:9 சொல்வதுபோல், மற்றவர்கள் நம்மை வெறுக்கும்போது நாம் ஏன் ஆச்சரியப்படக் கூடாது?

மற்றவர்கள்மேல் நாம் அன்பு காட்ட வேண்டும், மற்றவர்களும் நம்மேல் அன்பு காட்ட வேண்டும். இப்படித்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார்! அதனால், யாராவது நம்மை வெறுக்கும்போது நம் மனம் சுக்குநூறாக உடைந்து போய்விடுகிறது. சில சமயங்களில் அப்படியே பயந்து போய்விடுகிறோம். “எனக்கு 14 வயசு இருந்தப்போ, நான் யெகோவாவுக்கு சேவை செய்ய ஆரம்பிச்சதால என் அம்மா என்னை வெறுத்தாங்க. எனக்குன்னு யாருமே இல்லாத மாதிரி தோணுச்சு. நான் உண்மையிலயே நல்ல பொண்ணுதானானு என் மேலயே எனக்கு சந்தேகம் வந்துச்சு” என்று ஐரோப்பாவில் வாழ்கிற சகோதரி ஜார்ஜினா சொல்கிறார். * “நான் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் ராணுவ வீரர்கள் என்னை அடித்தார்கள், அசிங்கப்படுத்தினார்கள், மிரட்டினார்கள். அதனால், நான் பயந்துபோய்விட்டேன். எனக்கு ரொம்ப அவமானமாக இருந்தது” என்று சகோதரர் டானிலோ எழுதுகிறார். வெறுப்பு வேதனையைத் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், அதைப் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால், நாம் மற்றவர்களுடைய வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்று இயேசு ஏற்கெனவே சொல்லி இருக்கிறார்.மத்தேயு 24:9-ஐ வாசியுங்கள்.

2-3. இயேசுவின் சீஷர்களை மற்றவர்கள் ஏன் வெறுக்கிறார்கள்?

2 நாம் இயேசுவின் சீஷர்களாக இருப்பதால் இந்த உலகம் நம்மை வெறுக்கிறது. ஏனென்றால், அவர் மாதிரியே நாமும் இந்த ‘உலகத்தின் பாகமாக இல்லை.’ (யோவா. 15:17-19) அரசாங்கங்களை நாம் மதிக்கிறோம். ஆனால், அரசியலில் ஈடுபடுவது இல்லை, கொடி வணக்கம் செய்வது இல்லை, தேசிய கீதம் பாடுவதும் இல்லை. ஏனென்றால், நம்முடைய வணக்கம் யெகோவாவுக்கு மட்டும்தான்! சாத்தானும் அவனுடைய ‘சந்ததியும்’ விடாப்பிடியாக மறுக்கிற ஒரு விஷயத்தையும் நாம் செய்கிறோம். அதாவது, மனிதர்களை ஆட்சி செய்கிற உரிமை கடவுளுக்குத்தான் இருக்கிறது என்ற விஷயத்தில் உறுதியாக நிற்கிறோம். (ஆதி. 3:1-5, 15) மனிதனுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு கடவுளுடைய அரசாங்கம்தான் என்பதையும், அந்த அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் சீக்கிரத்தில் அழிக்கப்படுவார்கள் என்பதையும் மற்றவர்களிடம் சொல்கிறோம். (தானி. 2:44; வெளி. 19:19-21) இந்தச் செய்தி தாழ்மையான மக்களுக்கு நல்ல செய்தி! ஆனால், பொல்லாதவர்களுக்கு கெட்ட செய்தி!!—சங். 37:10, 11.

3 கடவுளுடைய சட்டங்களின்படி வாழ்வதாலும் இந்த உலகம் நம்மை வெறுக்கிறது. இந்தச் சட்டங்களுக்கும் இந்த உலகத்தில் இருக்கிற கேவலமான பழக்க வழக்கங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. உதாரணத்துக்கு, இன்று இந்த உலகத்தில் இருக்கிற நிறைய பேர் படு கேவலமான பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இதே மாதிரி பழக்கவழக்கங்களில் ஈடுபட்ட சோதோம் கொமோரா மக்களை கடவுள் அன்று பூண்டோடு ஒழித்துக்கட்டினார்! (யூ. 7) பைபிளில் இருக்கிற சட்டங்களின்படி நாம் வாழ்வதால் நிறைய பேர் நம்மைக் கிண்டல் செய்கிறார்கள். ‘ஊரோடு ஒத்துப் போகாத ஜனங்க’ என்று சொல்கிறார்கள்.—1 பே. 4:3, 4.

4. மற்றவர்களின் வெறுப்பைச் சமாளிப்பதற்கு எந்தக் குணங்கள் நமக்கு உதவும்?

4 மற்றவர்களின் வெறுப்பையும் அவமானத்தையும் சமாளிப்பதற்கு எது உதவும்? யெகோவாமேல் இருக்கிற பலமான விசுவாசம்தான்! அது ஒரு பெரிய கேடயம் மாதிரி இருந்து ‘பொல்லாதவன் எரிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைத்துவிடும்.’ (எபே. 6:16) ஆனால், விசுவாசம் இருந்தால் மட்டும் போதாது, அன்பும் இருக்க வேண்டும். ஏனென்றால், அன்பு “எரிச்சல் அடையாது,” அது எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும். (1 கொ. 13:4-7, 13) யெகோவாமேலும் சகோதர சகோதரிகள்மேலும், எதிரிகள்மேலும்கூட அன்பு காட்டும்போது வெறுப்பை வெல்ல முடியும். எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

யெகோவாமேல் இருக்கும் அன்பு வெறுப்பை வெல்லும்

5. யெகோவாமேல் வைத்திருந்த அன்பு இயேசுவுக்கு எப்படி உதவியது?

5 தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, தனக்கு உண்மையாக இருந்த சீஷர்களிடம் ‘தகப்பன்மேல் நான் அன்பு [வைத்திருப்பதால்] என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (யோவா. 14:31) அதற்குப் பிறகு வந்த சோதனைகளைச் சமாளிப்பதற்கு யெகோவாமேல் வைத்திருந்த அன்புதான் இயேசுவுக்கு உதவியது. அதே அன்பு இன்று நமக்கும் உதவும்.

6. ரோமர் 5:3-5 சொல்வதுபோல், இந்த உலகம் தங்களை வெறுப்பதை யெகோவாவின் ஊழியர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

6 அன்றுமுதல் இன்றுவரை, யெகோவாமேல் இருக்கும் அன்புதான் துன்புறுத்தல்களைச் சகிப்பதற்கு அவருடைய ஊழியர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு, பிரசங்கிப்பதை நிறுத்தும்படி யூத உச்சநீதிமன்றம் அப்போஸ்தலர்களுக்குக் கட்டளை கொடுத்தபோது, கடவுள்மேல் அன்பு இருந்ததால்தான், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று அவர்கள் தைரியமாகச் சொன்னார்கள். (அப். 5:29; 1 யோ. 5:3) இன்றும், பலம் படைத்த சில அரசாங்கங்கள் நமது சகோதர சகோதரிகளைக் கொடுமைப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. யெகோவாமேல் அளவுகடந்த அன்பு இருப்பதால்தான் இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் நினைத்து சோர்ந்துபோவதற்குப் பதிலாக, உலகத்தால் வெறுக்கப்படுவதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.—அப். 5:41; ரோமர் 5:3-5-ஐ வாசியுங்கள்.

7. குடும்பத்தில் இருப்பவர்கள் நம்மை எதிர்க்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

7 குடும்பத்தில் இருப்பவர்கள் எதிர்ப்பது நமக்கு பெரிய சோதனையாக இருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து நாம் பைபிளைப் படிக்கும்போது, நாம் ஏமாந்துபோய்விட்டதாக அவர்கள் நினைக்கலாம். அவர்களில் சிலர், நம்மை பைத்தியக்காரர்களாக நினைக்கலாம். (மாற்கு 3:21-ஐ ஒப்பிடுங்கள்.) இன்னும் ஒரு படி மேல் போய் நம்மைக் கொடுமைப்படுத்தலாம். ஆனால், இதையெல்லாம் பார்த்து நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. ஏனென்றால், “ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத். 10:36) அவர்கள் நம்மை எப்படி நினைத்தாலும் சரி, நாம் அவர்களை எதிரிகளாகப் பார்ப்பது இல்லை. அதற்குப் பதிலாக, யெகோவாமேல் இருக்கிற அன்பு அதிகமாக அதிகமாக மற்றவர்கள்மேல் இருக்கிற அன்பு நமக்கு அதிகமாகிறது. (மத். 22:37-39) அதேசமயத்தில், மற்றவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக, பைபிளில் இருக்கிற சட்டங்களையும் நியமங்களையும் நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

கொஞ்ச நாட்களுக்குக் கஷ்டங்கள் நம்மை வாட்டினாலும் யெகோவா எப்போதும் நம் கூடவே இருந்து நம்மை ஆறுதல்படுத்துவார், பலப்படுத்துவார் (பாராக்கள் 8-10)

8-9. ஜார்ஜினாவால் எப்படி எதிர்ப்பை சமாளிக்க முடிந்தது?

8 நாம் ஏற்கெனவே பார்த்த சகோதரி ஜார்ஜினாவை அவருடைய அம்மா பயங்கரமாகத் துன்புறுத்தினார். இருந்தாலும், ஜார்ஜினா விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். “நானும் என் அம்மாவும்தான் யெகோவாவின் சாட்சிகள்கிட்ட பைபிள படிக்க ஆரம்பிச்சோம். ஆறு மாசத்துக்கு அப்புறம் நான் கூட்டங்களுக்கு போக ஆரம்பிச்சதும் என் அம்மா ரொம்ப மாறிட்டாங்க. விசுவாச துரோகிகள்கிட்ட அவங்களுக்கு தொடர்பு இருந்த விஷயம் அப்பதான் தெரியவந்துச்சு. நம்மள பத்தி விசுவாச துரோகிகள் சொல்ற தப்பு தப்பான விஷயங்கள கேட்டுட்டு வந்து என்கூட வாக்குவாதம் செய்ய ஆரம்பிச்சாங்க. என்னை அவமானப்படுத்துனாங்க, என்னோட முடிய பிடிச்சு இழுத்தாங்க, என் கழுத்த நெரிச்சாங்க, பிரசுரங்கள தூக்கி எறிஞ்சாங்க. ஆனாலும், எனக்கு 15 வயசு ஆனப்போ நான் ஞானஸ்நானம் எடுத்தேன். நான் யெகோவாவ வணங்க கூடாதுங்குறதுக்காக, அடங்காத பிள்ளைகள கவனிச்சுக்குற விடுதியில கொண்டுபோய் என் அம்மா என்னை சேத்துட்டாங்க. அங்கிருந்த பொண்ணுக போதை பொருள பயன்படுத்துனாங்க. பெரிய பெரிய குற்றங்களயும் செஞ்சாங்க. நம்ம மேல அன்பும் அக்கறையும் காட்ட வேண்டியவங்களே நம்மள வெறுக்குறப்போ நம்மளால தாங்கிக்கவே முடியாது” என்று ஜார்ஜினா சொல்கிறார்.

9 இதையெல்லாம் ஜார்ஜினா எப்படிச் சமாளித்தார்? “என் அம்மா எப்போ என்னை எதிர்க்க ஆரம்பிச்சாங்களோ அன்னைக்குதான் நான் முழு பைபிளயும் படிச்சு முடிச்சிருந்தேன். இதுதான் சத்தியங்குறது எனக்கு நல்லா தெரிஞ்சுது. யெகோவா என்கூடவே இருக்குற மாதிரி தோணுச்சு. நான் அடிக்கடி அவர்கிட்ட ஜெபம் செஞ்சேன். அவரும் என் ஜெபத்த கேட்டாரு. நான் அந்த விடுதியில இருந்தப்போ, ஒரு சகோதரி வந்து என்னை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பைபிள நல்லா ஆராய்ச்சி செஞ்சு படிச்சோம். ராஜ்ய மன்றத்துல இருந்த சகோதர சகோதரிகள் எனக்கு எப்பவுமே ஆறுதலா இருந்தாங்க. அவங்க குடும்பத்துல ஒருத்தரா என்னை பார்த்துக்கிட்டாங்க. நம்மளோட எதிரிகள் யாரா இருந்தாலும் சரி, அவங்க எல்லாத்தயும்விட யெகோவா பலமானவருங்குறத நான் அனுபவத்துல பார்த்தேன்” என்று ஜார்ஜினா சொல்கிறார்.

10. நாம் என்ன நம்பிக்கையோடு இருக்கலாம்?

10 “நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மை” எவற்றாலும் யாராலும் பிரிக்க முடியாது என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோ. 8:38, 39) கொஞ்ச நாட்களுக்குக் கஷ்டங்கள் நம்மை வாட்டினாலும் யெகோவா எப்போதும் நம் கூடவே இருந்து நம்மை ஆறுதல்படுத்துவார், பலப்படுத்துவார். ஜார்ஜினாவின் அனுபவம் காட்டுவதுபோல் சகோதர சகோதரிகள் வழியாகவும் யெகோவா நமக்கு உதவி செய்வார்.

சகோதர சகோதரிகள்மேல் இருக்கும் அன்பு வெறுப்பை வெல்லும்

11. யோவான் 15:12, 13-ல் இயேசு சொன்ன மாதிரி நடந்துகொண்டது சீஷர்களுக்கு எப்படி உதவியது? ஓர் உதாரணம் கொடுங்கள்.

11 உண்மையான அன்பு இருந்தால், ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதும் உலகத்தின் வெறுப்பை வெல்ல முடியும் என்பதும் இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால்தான், இறப்பதற்கு முந்தின ராத்திரி, ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டும்படி சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 15:12, 13-ஐ வாசியுங்கள்.) இந்த மாதிரியான அன்பைத்தான், தெசலோனிக்கே சபையில் இருந்தவர்கள் காட்டினார்கள். அந்தச் சபை உருவான சமயத்திலிருந்தே அங்கிருந்த சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்பட்டார்கள். இருந்தாலும், அவர்கள் எல்லாரும் உண்மையாக இருந்தார்கள். ஒருவர்மேல் ஒருவர் அன்பைக் காட்டினார்கள். (1 தெ. 1:3, 6, 7) அந்த அன்பை “இன்னும் அதிகமாகக் காட்டும்படி” பவுல் அவர்களிடம் கேட்டுக்கொண்டார். (1 தெ. 4:9, 10) ஏனென்றால், இந்த அன்பு இருந்தால்தான் மனச்சோர்வால் வாடுபவர்களுக்கு அவர்களால் ஆறுதல் சொல்ல முடியும். பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியும். (1 தெ. 5:14) பவுல் சொன்னதை அங்கே இருந்தவர்கள் செய்தார்கள். அதனால், ஒரு வருஷம் கழித்து அவர் இரண்டாவது கடிதம் எழுதியபோது, “நீங்கள் எல்லாரும் ஒருவர்மேல் ஒருவர் காட்டுகிற அன்பும் அதிகமாகி வருகிறது” என்று சொன்னார். (2 தெ. 1:3-5) அந்த அன்பு, கஷ்டங்களைச் சகிக்கவும் துன்புறுத்தலைத் தாங்கிக்கொள்ளவும் அவர்களுக்கு உதவியது.

வெறுப்பை வெல்ல அன்பு உதவும் (பாரா 12) *

12. ஒரு நாட்டில் போர் நடந்துகொண்டிருந்தபோது சகோதர சகோதரிகள் எப்படி ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினார்கள்?

12 டானிலோவுக்கும் அவருடைய மனைவிக்கும் என்ன நடந்தது என்று பார்க்கலாம். அவர்கள் இருந்த ஊரில் போர் ஆரம்பித்தது. ஆனால், அவர்கள் தொடர்ந்து கூட்டங்களுக்குப் போனார்கள். முடிந்த அளவுக்கு ஊழியம் செய்தார்கள். அவர்களிடம் இருந்த சாப்பாட்டை சகோதர சகோதரிகளிடம் பகிர்ந்துகொண்டார்கள். ஒருநாள், டானிலோவின் வீட்டுக்கு ராணுவ வீரர்கள் வந்தார்கள். “‘இனி நான் ஒரு யெகோவாவின் சாட்சி இல்லனு எழுதி கொடு’னு அவங்க என்கிட்ட சொன்னாங்க. முடியாதுனு சொன்னப்போ என்னை அடிச்சாங்க. என்னை பயமுறுத்துறதுக்காக என்னோட தலைக்கு மேல சுட்டாங்க. என் மனைவிய கற்பழிக்கப் போறதா சொல்லி மிரட்டுனாங்க. அந்த ராணுவ வீரர்கள் போன உடனே, சகோதரர்கள் வந்து எங்கள ரயில்ல ஏத்தி வேற ஒரு ஊருக்கு அனுப்பிவெச்சாங்க. சகோதரர்கள் காட்டுன அன்ப என்னால மறக்கவே முடியாது. நாங்க அந்த ஊருக்கு போய் சேர்ந்ததும் அங்க இருந்த சகோதரர்கள் எங்களுக்கு சாப்பாடு கொடுத்தாங்க. வேலை கிடைக்கிறதுக்கு உதவி செஞ்சாங்க. ஒரு வீடு தேடி கொடுத்தாங்க. அதனால, போர் நடக்குற இடத்துல இருந்து தப்பிச்சு வர்ற மத்த யெகோவாவின் சாட்சிகளுக்கு எங்களால அடைக்கலம் கொடுக்க முடிஞ்சுது” என்று டானிலோ சொல்கிறார். உண்மையான அன்பு வெறுப்பைச் சகித்துக்கொள்ள உதவும் என்பதை இந்த அனுபவங்கள் காட்டுகின்றன.

எதிரிகள்மேல் இருக்கும் அன்பு வெறுப்பை வெல்லும்

13. மற்றவர்கள் நம்மை வெறுத்தாலும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கு அவருடைய சக்தி எப்படி உதவும்?

13 எதிரிகளையும் நேசியுங்கள் என்று இயேசு அவருடைய சீஷர்களிடம் சொன்னார். (மத். 5:44, 45) இது அவ்வளவு சுலபமா? இல்லை! ஆனால், கடவுளுடைய சக்தி இருந்தால் இதை நம்மால் செய்ய முடியும். அந்தச் சக்தி இருக்கும்போது அன்பு, பொறுமை, கருணை, சாந்தம், சுயக்கட்டுப்பாடு மாதிரியான குணங்களை நம்மால் காட்ட முடியும். (கலா. 5:22, 23) இந்தக் குணங்கள் வெறுப்பை வெல்வதற்கு உதவி செய்யும். இந்தக் குணங்களைக் காட்டியதால் சத்தியத்தில் இல்லாத கணவர்கள், மனைவிகள், பெற்றோர்கள், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் நம்மை வெறுப்பதை நிறுத்தி இருக்கிறார்கள். அவர்களில் நிறைய பேர் இன்றைக்கு நம் சகோதர சகோதரிகளாகவும் ஆகியிருக்கிறார்கள். உங்களை வெறுக்கிறவர்களை நேசிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், கடவுளுடைய சக்தியைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள். (லூக். 11:13) யெகோவாவின் வழிதான் எப்போதுமே சிறந்த வழி என்பதில் உறுதியாக இருங்கள்.—நீதி. 3:5-7.

14-15. ரோமர் 12:17-21-ல் இருக்கும் ஆலோசனை யாஸ்மினுக்கு எப்படி உதவியது?

14 யாஸ்மின் என்ற சகோதரியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவர் யெகோவாவின் சாட்சியாக ஆனபோது, அவர் ஏதோ ஏமாந்துபோய்விட்டதாக அவருடைய கணவர் நினைத்தார். அதனால், யாஸ்மின்னை பயங்கரமாக எதிர்த்தார். அவரை அவமானப்படுத்தினார். சொந்தக்காரர்களையும், மதத் தலைவர் ஒருவரையும், மந்திரவாதியையும் கூட்டிக்கொண்டு வந்து அவரை மிரட்டினார். குடும்பத்தை அவர் பிரிக்கிறார் என்று குறை சொன்னார். கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது சகோதரர்களைக் கண்டபடி திட்டினார். தன்னுடைய கணவர் இப்படி அன்பு இல்லாமல் நடந்துகொண்டதால் யாஸ்மின் எப்போதும் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார்.

15 ராஜ்ய மன்றத்துக்கு வந்தபோதெல்லாம் சகோதர சகோதரிகள் யாஸ்மினை ஆறுதல்படுத்தினார்கள், தைரியப்படுத்தினார்கள். ரோமர் 12:17-21-ல் சொல்லியிருக்கிற மாதிரி நடந்துகொள்ளும்படி மூப்பர்களும் யாஸ்மினைக் கேட்டுக்கொண்டார்கள். (வாசியுங்கள்.) “அவங்க சொல்ற மாதிரி செய்றது கஷ்டமாதான் இருந்துச்சு. உதவி செய்ய சொல்லி யெகோவாகிட்ட கெஞ்சி கேட்டேன். பைபிள்ல சொல்லியிருக்கிற மாதிரி நடந்துக்க என்னால முடிஞ்ச எல்லா முயற்சிகளயும் எடுத்தேன். என்னோட கணவர் என்னை எரிச்சல்படுத்துறதுக்காக சமையலறையில மண்ணை கொண்டுவந்து கொட்டுவாரு, நான் அதை சுத்தம் செஞ்சிடுவேன். அவர் என்னை அவமானப்படுத்தறப்போ, சாந்தமா பதில் சொல்லுவேன். அவருக்கு உடம்பு சரியில்லாம போனப்போ, அவரை கவனிச்சிக்கிட்டேன்” என்று யாஸ்மின் சொல்கிறார்.

நம்மைத் துன்புறுத்துபவர்கள்மேல் அன்பு காட்டும்போது அவர்களுடைய மனம் இளகும்! (பாராக்கள் 16-17) *

16-17. யாஸ்மினுடைய வாழ்க்கை நமக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறது?

16 யாஸ்மினுக்கு பலன் கிடைத்ததா? அவர் என்ன சொல்கிறார் என்று நீங்களே கேளுங்கள்: “நான் எப்பவுமே உண்மைய சொல்றதுனால என் கணவருக்கு என் மேல இருந்த நம்பிக்க அதிகமாச்சு. நான் மதத்த பத்தி பேசுனப்போ, அதை மதிச்சு கேட்டாரு. வீட்டுல சண்ட சச்சரவு இல்லாம இருக்க முயற்சி எடுக்குறதா சொன்னாரு. இப்பல்லாம் அவர் என்னை சந்தோஷமா கூட்டங்களுக்கு அனுப்பி வைக்கிறாரு. எங்களுக்குள்ள இருக்கிற நெருக்கமும் அதிகமாகியிருக்கு. நாங்க ரொம்ப நிம்மதியா இருக்குறோம். என்னைக்காவது ஒரு நாள், என் கணவரும் மனசு மாறி யெகோவாவின் சாட்சியா ஆவாருங்குற நம்பிக்கை இருக்கு.”

17 அன்பு “எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், . . . எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்” என்பதை யாஸ்மினுடைய வாழ்க்கை காட்டுகிறது. (1 கொ. 13:4, 7) வெறுப்பு நம்மை வேதனைப்படுத்தும் என்பதும் மனதை ரணமாக்கும் என்பதும் உண்மைதான். ஆனாலும், அன்பு அதைவிட வலிமையானது. அது இதயங்களை வெல்லும்! யெகோவாவின் இதயத்தை சந்தோஷப்படுத்தும்! நம்மை எதிர்ப்பவர்கள் நம்மேல் தொடர்ந்து வெறுப்பைக் காட்டினாலும், நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். எப்படி என்று யோசிக்கிறீர்களா?

வெறுக்கப்படும்போதும் சந்தோஷமாக இருங்கள்

18. மக்கள் நம்மை வெறுத்தாலும் நாம் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்?

18 மக்கள் நம்மை வெறுக்க வேண்டும் என்றோ துன்புறுத்த வேண்டும் என்றோ நாம் ஆசைப்படுவது கிடையாது. ஆனால், “மக்கள் உங்களை வெறுக்கும்போதும், . . . சந்தோஷப்படுங்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:22) அப்படியென்றால், நாம் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்? இதோ மூன்று காரணங்கள்: (1) நாம் சகித்திருக்கும்போது யெகோவா சந்தோஷப்படுவார். (1 பே. 4:13, 14) (2) நம்முடைய விசுவாசம் பலமாகும். (1 பே. 1:7) (3) முடிவில்லாத வாழ்வு என்ற பொன்னான பரிசு கிடைக்கும்.—ரோ. 2:6, 7.

19. எதிரிகள் அடித்தபோதும் அப்போஸ்தலர்களால் ஏன் சந்தோஷமாக இருக்க முடிந்தது?

19 இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட கொஞ்ச காலத்திலேயே அவர் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை அப்போஸ்தலர்கள் புரிந்துகொண்டார்கள். எதிரிகள் அவர்களை வெறுத்தார்கள், அடித்தார்கள், பிரசங்கிக்கக் கூடாது என்று கட்டளை போட்டார்கள். இருந்தாலும் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஏன்? இயேசுவுடைய “பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை நினைத்து” அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். (அப். 5:40-42) எதிரிகளின் மேல் இருந்த பயத்தைவிட இயேசுவின் மேல் இருந்த அன்புதான் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அதனால், “இடைவிடாமல்” பிரசங்கித்தார்கள். இன்றைக்கும், எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தாலும் நிறைய சகோதர சகோதரிகள் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்கிறார்கள். அவர்கள் செய்கிற சேவையையும், தன்மேல் அவர்கள் வைத்திருக்கிற அன்பையும் யெகோவா மறக்கவே மாட்டார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.—எபி. 6:10.

20. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

20 கடவுளுடைய அரசாங்கம் வரும் வரைக்கும் இந்த உலகம் நம்மை வெறுத்துக்கொண்டுதான் இருக்கும். (யோவா. 15:19) ஆனால், நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், தனக்கு உண்மையாக இருப்பவர்களை யெகோவா “பலப்படுத்துவார் . . . பாதுகாப்பார்.” (2 தெ. 3:3) இதைப் பற்றித்தான் நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதனால், யெகோவாவின் மேலும், சகோதர சகோதரிகளின் மேலும், எதிரிகளின் மேலும்கூட நாம் தொடர்ந்து அன்பு காட்டலாம். இப்படியெல்லாம் செய்யும்போது, நாம் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க முடியும். யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். அவருக்குப் புகழ் சேர்க்க முடியும். அன்பு வெறுப்பை வெல்லும் என்பதை நிரூபிக்கவும் முடியும்.

பாட்டு 72 அன்பெனும் பண்பை வளர்த்தல்

^ பாரா. 5 யெகோவாமேலும் சகோதர சகோதரிகளின் மேலும் எதிரிகளின் மேலும்கூட அன்பு காட்டும்போது இந்த உலகத்தின் வெறுப்பை நம்மால் வெல்ல முடியும். மற்றவர்கள் நம்மை வெறுக்கும்போதும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று இயேசு சொன்னார். எப்படி? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 1 பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

^ பாரா. 58 படங்களின் விளக்கம்: ராணுவ வீரர்கள் வந்து டானிலோவை மிரட்டியதற்குப் பிறகு, அவரையும் அவருடைய மனைவியையும் பத்திரமாக இன்னொரு ஊருக்கு சகோதர சகோதரிகள் அனுப்பிவைக்கிறார்கள். போன இடத்திலும் சகோதரர்கள் அவர்களை அன்பாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.

^ பாரா. 60 படங்களின் விளக்கம்: யாஸ்மினுடைய கணவர் அவரை எதிர்க்கிறார். மூப்பர்கள் யாஸ்மினுக்கு நல்ல ஆலோசனை கொடுக்கிறார்கள். அவரும் நல்ல மனைவியாக நடந்துகொள்கிறார். கணவருக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது அவரை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்.