Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 9

இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?

இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?

“இளம் ஆண்கள் உங்களிடம் திரண்டு வருவார்கள். அவர்கள் . . . பனித்துளி போன்றவர்கள்.”—சங். 110:3.

பாட்டு 4 தேவனிடம் நற்பெயர் சம்பாதிப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1. இளம் சகோதரர்கள் சபைக்கு ஒரு சொத்து என்று எப்படிச் சொல்லலாம்?

இளம் சகோதரர்களே, உங்களுடைய சேவை எங்களுக்குத் தேவை! உங்களிடம் பலமும் இளமைத் துடிப்பும் நிறைய இருக்கிறது. (நீதி. 20:29) நீங்கள் சபைக்கு ஒரு பெரிய சொத்து! ஒரு உதவி ஊழியராக ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கலாம். ஆனால், ‘நான் சின்ன பையன்னும் அவ்வளவா அனுபவம் இல்லாதவன்னும் மத்தவங்க நினைப்பாங்களோ’ என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் சின்னப் பையனாக இருக்கலாம். ஆனால், மற்றவர்களுடைய நம்பிக்கையையும் மதிப்பு மரியாதையையும் நிச்சயம் உங்களால் சம்பாதிக்க முடியும்.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 முக்கியமாக, தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, யூதாவின் ராஜாக்களாக இருந்த ஆசாவைப் பற்றியும் யோசபாத்தைப் பற்றியும் பார்ப்போம். இவர்கள் மூன்று பேருடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் வந்தன, அப்போது அவர்கள் என்ன செய்தார்கள், அவர்களிடமிருந்து இளம் சகோதரர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.

தாவீதிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

3. வயதானவர்களுக்கு இளைஞர்கள் எப்படி உதவலாம்?

3 யெகோவாவிடம் தாவீதுக்கு நெருக்கமான நட்பு இருந்தது. மற்றவர்களுக்குப் பிரயோஜனமான நிறைய திறமைகளை சின்ன வயதிலேயே அவர் வளர்த்துக்கொண்டார். இசைக் கருவிகளை நன்றாக வாசிப்பதற்குப் பழகிக்கொண்டார். அந்தத் திறமையை வைத்து கடவுளால் நியமிக்கப்பட்ட ராஜாவான சவுலுக்கு அவரால் உதவவும் முடிந்தது. (1 சா. 16:16, 23) உங்களிடமும் திறமைகள் இருக்கின்றனவா? அதை வைத்து சபையில் இருக்கிறவர்களுக்கு உதவ முடியுமா? உங்களில் நிறைய பேர் இப்படி உதவுகிறீர்கள். ஒருவேளை, உங்கள் சபையில் இருக்கிற வயதானவர்களுக்கு டேப்லெட் அல்லது மற்ற எலக்ட்ரானிக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு உதவி தேவைப்படலாம். இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் திறமை உங்களுக்கு இருப்பதால் நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.

தாவீது தன்னுடைய அப்பாவின் ஆடுகளை பொறுப்பாக கவனித்துக்கொண்டார். நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார். ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக கரடியிடம்கூட சண்டை போட்டார். (பாரா 4)

4. தாவீது மாதிரியே இளம் சகோதரர்கள் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ளலாம்? (அட்டைப் படம்)

4 தாவீது பொறுப்பான பையனாக இருந்தார். அவரை நம்பி ஒரு வேலையை ஒப்படைக்க முடிந்தது. உதாரணத்துக்கு, அவர் சின்னப் பையனாக இருந்தபோது அவருடைய அப்பாவின் ஆடுகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டார். அது ஆபத்தான ஒரு வேலையாக இருந்தது. “உங்கள் அடியேனாகிய நான் என்னுடைய அப்பாவின் ஆடுகளை மேய்த்துவருகிறேன். ஒருநாள் ஒரு சிங்கமும், இன்னொரு நாள் ஒரு கரடியும் வந்து மந்தையிலுள்ள ஆட்டைக் கவ்விக்கொண்டு போனது. நான் அதைத் துரத்திக் கொண்டுபோய், அதன் வாயிலிருந்து ஆட்டைக் காப்பாற்றினேன்” என்று சவுல் ராஜாவிடம் தாவீது சொன்னார். (1 சா. 17:34, 35) ஆடுகளைப் பொறுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததால் அவற்றைக் காப்பாற்றுவதற்காகத் தைரியமாக சண்டை போட்டார். இளம் சகோதரர்களே, நீங்களும் தாவீது மாதிரி இருங்கள். எந்த வேலை கொடுத்தாலும் பொறுப்பாக செய்து முடியுங்கள்.

5. இளம் சகோதரர்கள் முக்கியமாக என்ன செய்ய வேண்டும் என்று சங்கீதம் 25:14 சொல்கிறது?

5 சின்ன வயதிலேயே யெகோவாவிடம் நெருக்கமான நட்பை தாவீது வளர்த்துக்கொண்டார். அவரிடம் இருந்த தைரியம்... யாழ் இசைக்கும் திறமை... ஆகியவற்றைவிட யெகோவாவிடமிருந்த நட்பைத்தான் அவர் முக்கியமாக நினைத்தார். யெகோவா அவருக்கு வெறுமனே கடவுளாக மட்டுமல்ல, நெருங்கிய நண்பராகவும் இருந்தார். (சங்கீதம் 25:14-ஐ வாசியுங்கள்.) இளம் சகோதரர்களே, தாவீது மாதிரியே நீங்களும் யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

6. தாவீதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தார்கள்?

6 தாவீது ஒரு பொடிப் பையன் என்றும் பொறுப்பு இல்லாதவன் என்றும் மற்றவர்கள் சொன்னார்கள். உதாரணத்துக்கு, ‘நான் கோலியாத்த கொல்றேன்’ என்று தாவீது சொன்னபோது, “நீ இளைஞன்” என்று சொல்லி அவருடைய உற்சாகத்தை சவுல் குறைத்தார். (1 சா. 17:31-33) தாவீதின் அண்ணனும், அவரை பொறுப்பு இல்லாதவன் என்று ஒருதடவை சொன்னார். (1 சா. 17:26-30) ஆனால், யெகோவா தாவீதைப் பொடிப் பையனாகவும் பார்க்கவில்லை; பொறுப்பு இல்லாதவன் என்றும் நினைக்கவில்லை. அவரைப் பற்றி யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். தாவீதும் பலத்துக்காக தன்னுடைய நண்பரான யெகோவாவை நம்பியிருந்தார். அதனால், கோலியாத்தை அவரால் வெட்டி வீழ்த்த முடிந்தது.—1 சா. 17:45, 48-51.

7. தாவீதின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?

7 தாவீதின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்திலிருந்து, பொறுமையாக இருப்பது ஏன் முக்கியம் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள சிலருக்குக் கொஞ்சக் காலம் எடுக்கும். நீங்கள் குழந்தையாக இருந்ததிலிருந்தே உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதால் அவர்கள் அப்படி நினைக்கலாம். ஆனால், உங்களைக் குழந்தையாகவோ சின்னப் பையனாகவோ யெகோவா நினைப்பதில்லை. நீங்கள் யார்... உங்களுக்கு என்னென்ன திறமைகள் இருக்கின்றன... என்பதெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். (1 சா. 16:7) தாவீதிடமிருந்து இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளலாம். படைப்புகளை அவர் உன்னிப்பாகக் கவனித்தார். அதிலிருந்து யெகோவாவுடைய அருமை பெருமைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார். அவரிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டார். நீங்களும் யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். (சங். 8:3, 4; 139:14; ரோ. 1:20) பலத்துக்காக எப்போதுமே யெகோவாவையே நம்பியிருக்க வேண்டும் என்ற பாடத்தையும் தாவீதிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் உங்களோடு படிக்கிற பிள்ளைகள் உங்களைக் கிண்டல் செய்கிறார்கள். நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்யலாம். அப்போது, தாவீது மாதிரியே இந்தச் சூழ்நிலையை உங்களால் ஜெயிக்க முடியும். அதோடு, பைபிளிலும் பிரசுரங்களிலும் வீடியோக்களிலும் இருக்கிற அறிவுரைகளின்படி நடப்பதற்கு முயற்சி செய்யுங்கள். யெகோவா உங்களுக்கு உதவுவதைப் பார்க்க பார்க்க அவர்மேல் இருக்கிற நம்பிக்கை அதிகமாகும்.

இளைஞர்களே, நிறைய விதங்களில் மற்றவர்களுக்கு உங்களால் உதவ முடியும் (பாராக்கள் 8-9)

8-9. அரியணை ஏறும்வரை காத்திருப்பதற்கு தாவீதுக்கு எது உதவியது, இளம் சகோதரர்களுக்கு என்ன பாடம்?

8 தாவீதின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்: யூதாவின் ராஜாவாக அவர் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாலும், அரியணை ஏறுவதற்கு ரொம்ப வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. (1 சா. 16:13; 2 சா. 2:3, 4) அவரால் எப்படிப் பொறுமையாக இருக்க முடிந்தது? அரியணை ஏற முடியவில்லையே என்று நினைத்து சோர்ந்து போவதற்குப் பதிலாக, தன்னால் முடிந்ததை எல்லாம் அவர் செய்தார். உதாரணத்துக்கு, பெலிஸ்தியர்களின் தேசத்துக்குத் தப்பித்துப் போனபோது இஸ்ரவேலின் எதிரிகளை எதிர்த்து சண்டை போட்டார். இப்படி, யூதாவின் எல்லைகளைப் பாதுகாத்தார்.—1 சா. 27:1-12.

9 இதிலிருந்து இளம் சகோதரர்களுக்கு என்ன பாடம்? காத்திருக்கிற காலத்தை மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்குப் பயன்படுத்துங்கள். ரிகார்டோ என்ற சகோதரர் அதைத்தான் செய்தார். * சின்ன வயதிலிருந்தே ஒழுங்கான பயனியராக சேவை செய்ய வேண்டும் என்பது அவருடைய கனவு. ஆனால், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று மூப்பர்கள் சொல்லிவிட்டார்கள். இதை நினைத்து அவர் சோர்ந்துபோகவில்லை, மூப்பர்கள்மேல் கோபப்படவில்லை. ஊழியத்தை அதிகமாகச் செய்தார். “இப்போ நினைச்சு பார்த்தா நான் சில முன்னேற்றங்கள செய்ய வேண்டி இருந்துச்சுங்குறது புரியுது. யாராவது துளி ஆர்வம் காட்டுனாகூட அவங்கள போய் மறுபடியும் பார்த்தேன். இப்படி, நிறைய மறுசந்திப்புகள செஞ்சேன். ஒரு பைபிள் படிப்பையும் ஆரம்பிச்சேன். அனுபவம் கிடைக்க கிடைக்க பயமெல்லாம் போயிடுச்சு” என்று ரிகார்டோ சொல்கிறார். இன்று ஒழுங்கான பயனியர் சேவையை நன்றாக செய்துகொண்டிருக்கிறார். உதவி ஊழியராகவும் இருக்கிறார்.

10. முக்கியமான ஒரு முடிவை எடுப்பதற்கு முன் தாவீது என்ன செய்தார்?

10 தாவீதின் வாழ்க்கையில் இன்னொரு சம்பவம் நடந்தது. சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்தியர்களின் தேசத்தில் அவர் வாழ்ந்துகொண்டு இருந்தபோது, அவரும் அவரோடு இருந்த ஆண்களும் தங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு ஒருதடவை போருக்குப் போயிருந்தார்கள். அந்தச் சமயத்தில் எதிரிகள் வந்து அவர்களுடைய வீடுகளில் இருந்த எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டு, மனைவி மக்களையும் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தாவீது ஒரு மாவீரன்! போர் செய்வதில் அனுபவசாலி! ஆனால், அந்த அனுபவத்தை வைத்து குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடலாம் என்று அவர் நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, என்ன செய்வது என்று தெரிந்துகொள்ள அபியத்தார் என்கிற குரு மூலம் யெகோவாவிடம் கேட்டார். “நான் இந்தக் கொள்ளைக்கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போகட்டுமா?” என்று கேட்டபோது, துரத்திக்கொண்டு போகச் சொல்லியும் அவருக்குக் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்றும் யெகோவா சொன்னார். (1 சா. 30:7-10) இந்தச் சம்பவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

இளைஞர்களே, மூப்பர்களிடம் அறிவுரை கேளுங்கள் (பாரா 11)

11. முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

11 முடிவுகள் எடுப்பதற்கு முன் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். உங்களுடைய அப்பா அம்மாவிடம் பேசலாம். அனுபவமுள்ள மூப்பர்களிடமும் கேட்கலாம். மூப்பர்களை யெகோவா நம்புகிறார். அதனால், நீங்களும் தாராளமாக நம்பலாம். அதோடு, மூப்பர்களை யெகோவா “பரிசுகளாக” பார்க்கிறார். (எபே. 4:8) அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து கற்றுக்கொள்ளும்போதும், அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும்போதும் உங்களால் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். இப்போது, ஆசா ராஜாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

ஆசா ராஜாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

12. ஆசா ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது அவரிடம் எப்படிப்பட்ட குணங்கள் இருந்தன?

12 இளைஞராக இருந்தபோது ஆசா ராஜா மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். தைரியமானவராகவும் இருந்தார். உதாரணத்துக்கு, அவருடைய அப்பா அபியாவுக்குப் பிறகு அவர் ஆட்சிக்கு வந்தபோது, சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்தார். அதுமட்டுமல்ல, “தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை வழிபட வேண்டும் என்றும், அவர் தந்த திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் யூதா மக்களிடம் சொன்னார்.” (2 நா. 14:1-7) எத்தியோப்பியனான சேராகு, பத்து லட்சம் படை வீரர்களோடு யூதாவை முற்றுகையிட்டபோது, “யெகோவாவே, நாங்கள் நிறைய பேரோ கொஞ்சப் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும். அதனால் யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்” என்று ஜெபம் செய்தார். அழகான வார்த்தைகள்! யெகோவாமேல் ஆசாவுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்பதை இவை காட்டுகின்றன. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை! யெகோவா ‘எத்தியோப்பியர்களைத் தோற்கடித்தார்.’—2 நா. 14:8-12.

13. ஆசா என்ன தவறு செய்தார், அதனால் என்ன ஆனது?

13 பத்து லட்சம் படை வீரர்களை நேருக்கு நேர் சந்திப்பது சாதாரண விஷயமா என்ன? ஆனாலும், அவ்வளவு பெரிய படையை ஆசா தோற்கடித்தார். ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், அதைவிட சின்ன படையை வைத்திருந்த இஸ்ரவேல் ராஜா பாஷா மிரட்டியபோது யெகோவாவிடம் அவர் உதவி கேட்கவில்லை. சீரியா ராஜாவிடம் உதவி கேட்டார். இப்படிச் செய்ததால் வாழ்க்கை முழுவதும் அவர் கஷ்டப்பட்டதுதான் மிச்சம்! அனானி தீர்க்கதரிசி மூலம் யெகோவா அவரிடம் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் சீரியா ராஜாமேல் நீங்கள் நம்பிக்கை வைத்ததால், அவனுடைய படை உங்கள் கையிலிருந்து தப்பித்துவிட்டது.” (2 நா. 16:7, 9; 1 ரா. 15:32) நமக்கு என்ன பாடம்?

14. யெகோவாவை நம்புகிறீர்கள் என்பதை எப்படிக் காட்டலாம், அப்படிச் செய்யும்போது 1 தீமோத்தேயு 4:12 சொல்வதுபோல் எப்படிப்பட்டவர்களாக ஆவீர்கள்?

14 எப்போதுமே மனத்தாழ்மையாக இருங்கள். தொடர்ந்து யெகோவாவை நம்பியிருங்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவாமேல் உங்களுக்குப் பலமான விசுவாசம் இருந்திருக்கும். அவர்மேல் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்திருப்பீர்கள். யெகோவாவும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கிற பாக்கியத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அன்று எப்படி யெகோவாவை நம்பினீர்களோ அதே மாதிரி எப்போதும் நம்புங்கள். பொதுவாக, வாழ்க்கையில் பெரிய பெரிய முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்புவீர்கள். ஆனால், மற்ற சமயங்களிலும் நம்புவீர்களா? உதாரணத்துக்கு, பொழுதுபோக்கு... வேலை... வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கிற குறிக்கோள்கள்... ஆகியவற்றைப் பற்றி முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்புகிறீர்களா? சொந்த புத்தியை நம்பவே நம்பாதீர்கள்! எப்போதுமே பைபிள் நியமங்களைப் பாருங்கள். அதன்படி முடிவுகளை எடுங்கள். (நீதி. 3:5, 6) அப்படிச் செய்யும்போது யெகோவாவை சந்தோஷப்படுத்துவீர்கள். சபையில் இருப்பவர்களுடைய மதிப்பு மரியாதையையும் சம்பாதிப்பீர்கள்.1 தீமோத்தேயு 4:12-ஐ வாசியுங்கள்.

யோசபாத் ராஜாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

15. யோசபாத் என்ன தவறுகள் செய்ததாக 2 நாளாகமம் 18:1-3-ம் 19:2-ம் சொல்கின்றன?

15 இளம் சகோதரர்களே! எல்லாரையும்போல் நீங்களும் பாவ இயல்புள்ளவர்கள்தான். அதனால், சிலசமயங்களில் நீங்கள் தவறு செய்துவிடலாம். அதற்காக, யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து பின்வாங்கிவிடாதீர்கள். இப்போது, யோசபாத் ராஜாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம். அவரிடம் பொன்னான குணங்கள் இருந்தன. இளைஞராக இருந்தபோது, “அவர் தன்னுடைய அப்பாவின் கடவுளைத் தேடி, அவர் கொடுத்த கட்டளைகளின்படி நடந்தார்.” அதோடு, யெகோவாவைப் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க யூதா முழுவதும் அதிகாரிகளை அனுப்பினார். (2 நா. 17:4, 7) இருந்தாலும், சிலசமயங்களில் தவறான முடிவுகளை எடுத்தார். அப்படி ஒருதடவை முடிவெடுத்தபோது யெகோவாவின் ஊழியர்களில் ஒருவர் அவரைக் கண்டித்தார். (2 நாளாகமம் 18:1-3-யும், 19:2-யும் வாசியுங்கள்.) இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

இளைஞர்களே, சுறுசுறுப்பானவர்களாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் நடந்துகொள்ளும்போது மற்றவர்களின் மதிப்பு மரியாதையைச் சம்பாதிக்கலாம் (பாரா 16)

16. ராஜீவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதன்படி செய்யுங்கள். இளம் சகோதரர்கள் நிறைய பேரைப் போல் யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுப்பதில் உங்களுக்கும் சிரமங்கள் இருக்கலாம். ஆனால் சோர்ந்துவிடாதீர்கள்! சகோதரர் ராஜீவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம். தன்னுடைய டீனேஜ் நாட்களைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “அந்த காலத்த வீணடிச்சிட்டனோனு சிலசமயங்கள்ல தோணும். கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போறதவிட, மத்த பசங்க மாதிரி விளையாடுறதுக்கும் எப்ப பார்த்தாலும் ஜாலியா இருக்குறதுக்கும்தான் ஆசப்பட்டேன்.” ராஜீவ் தன்னை எப்படி மாற்றிக்கொண்டார்? ஒரு மூப்பர் அவருக்கு அன்போடு ஆலோசனை கொடுத்தார். “1 தீமோத்தேயு 4:8-ல இருக்குற நியமத்த புரிஞ்சுக்குறதுக்கு அவர் உதவுனாரு” என்கிறார் ராஜீவ். அந்த மூப்பர் கொடுத்த அறிவுரையை அவர் மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார். வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தார். “யெகோவாவோட சேவைக்கு முதலிடம் கொடுக்கணும்னு முடிவெடுத்தேன்” என்று அவர் சொல்கிறார். “அந்த மூப்பர் அறிவுரை கொடுத்து கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் நான் ஒரு உதவி ஊழியரா ஆனேன்” என்கிறார் ராஜீவ்.

உங்களைப் பார்த்து யெகோவா பெருமைப்படட்டும்!

17. இளம் சகோதரர்களைப் பற்றிப் பெரியவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

17 இளம் சகோதரர்களே! பெரியவர்களோடு நீங்கள் “தோளோடு தோள் சேர்ந்து” சேவை செய்கிறீர்கள். (செப். 3:9) அதை அவர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். எந்த வேலை கொடுத்தாலும் நீங்கள் ஆர்வத்தோடும் இளமைத் துடிப்போடும் செய்து முடிப்பதைப் பார்த்து அவர்கள் பூரித்துப்போகிறார்கள். அவர்கள் உங்களை ரொம்ப நேசிக்கிறார்கள்.—1 யோ. 2:14.

18. தனக்குச் சேவை செய்கிற இளம் ஆண்களைப் பற்றி யெகோவா என்ன நினைப்பதாக நீதிமொழிகள் 27:11 சொல்கிறது?

18 இளம் சகோதரர்களே, இதை மறந்துவிடாதீர்கள்: யெகோவா உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்! அவர் உங்களை நம்புகிறார்!! கடைசி நாட்களில், தனக்கு மனப்பூர்வமாக சேவை செய்கிற இளைஞர்களின் படை இருக்கும் என்று அவர் முன்கூட்டியே சொன்னார். (சங். 110:1-3) நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள் என்றும், அவருக்கு சேவை செய்வதற்கு உங்களால் முடிந்ததை எல்லாம் செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்றும் அவருக்கு நன்றாகத் தெரியும். மற்றவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள். உங்களிடமும் பொறுமையாக இருங்கள். தப்பு செய்துவிட்டீர்களா? கவலைப்படாதீர்கள்! உங்களுக்குக் கிடைக்கிற பயிற்சியையும் கண்டிப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அது யெகோவாவிடமிருந்துதான் வருகிறது என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். (எபி. 12:6) எந்த வேலை கொடுத்தாலும் ஆர்வமாகச் செய்து முடியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களைப் பார்த்து யெகோவா அப்பா பெருமைப்படும் விதத்தில் நடந்துகொள்ளுங்கள்.நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.

பாட்டு 89 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’

^ பாரா. 5 இளம் சகோதரர்களே, யெகோவாவிடம் இருக்கிற பந்தம் வளர வளர, அவருக்கு இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வரும். நீங்கள் உதவி ஊழியராக ஆக வேண்டும் என்றால், சபையில் இருக்கிறவர்களுடைய மதிப்பு மரியாதையை சம்பாதிக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

^ பாரா. 9 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.