Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

மெசேஜ் அனுப்புகிற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

குடும்பத்தில் இருப்பவர்களிடமும் சகோதர சகோதரிகளிடமும் தொடர்பில் இருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளில் சிலர் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவற்றைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவரும் இந்த அறிவுரையை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”—நீதி. 27:12.

ஆபத்துகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவது இதிலிருந்து தெரிகிறது. அதனால், பிரிவினைகளை ஏற்படுத்துகிறவர்களிடமும், சபை நீக்கம் செய்யப்பட்டவர்களிடமும், தவறான விஷயங்களைப் பரப்புகிறவர்களிடமும் நாம் நட்பு வைத்துக்கொள்ளக் கூடாது. (ரோ. 16:17; 1 கொ. 5:11; 2 யோ. 10, 11) அதோடு, பைபிள் சொல்வதுபோல் நடக்காத சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களோடு பழகுகிறவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். (2 தீ. 2:20, 21) நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த எல்லா விஷயத்தையும் மனதில் வைத்துக்கொள்வது முக்கியம். உண்மையில், மெசேஜ் அனுப்புகிற அப்ளிகேஷன்கள் வழியாக நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபம் கிடையாது!

நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆட்களை இணைக்கிற பெரிய பெரிய குரூப்புகளில் சிலர் சேருகிறார்கள். அதனால், அவர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த குரூப்பில் இருக்கிற ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள்... யெகோவாவிடம் அவர்களுக்கு எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது... என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. அதனால், கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், சங்கீதம் 26:4 இப்படிச் சொல்கிறது: “ஏமாற்றுப் பேர்வழிகளோடு நான் பழகுவதில்லை. வெளிவேஷம் போடுகிறவர்களோடு சேருவதில்லை.” அப்படியென்றால், இந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும்போது நமக்கு நன்றாகப் பழக்கமானவர்களுக்கு அனுப்புவதுதானே சரியாக இருக்கும்?

கொஞ்சம் பேர் மட்டுமே இருக்கிற குரூப்பில் சிலர் சேர்ந்திருக்கிறார்கள். சிறிய குரூப்பாக இருந்தாலும், அதில் இருக்கிறவர்கள் எப்படிப்பட்ட விஷயங்களைப் பேசிக்கொள்கிறார்கள் என்றும் மெசேஜ் அனுப்புவதற்கு எவ்வளவு நேரம் செலவு செய்கிறோம் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும். குரூப்பில் இருப்பவர்கள் அனுப்புகிற எல்லா மெசேஜ்களுக்கும் நாம் பதில் அனுப்ப வேண்டியது இல்லை. அதே மாதிரி, ‘எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்ல, பதில் அனுப்பிடுவோம்’ என்றும் நினைக்கக் கூடாது. “வம்பளக்கிறவர்களாகவும், மற்றவர்களுடைய விஷயங்களில் அநாவசியமாகத் தலையிடுகிறவர்களாகவும்” இருக்கக் கூடாது என்று தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீ. 5:13) நாம் கவனமாக இல்லை என்றால், மெசேஜ் அனுப்பும்போது, பவுல் கொடுத்த அறிவுரையை மீறிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர், மற்ற சகோதர சகோதரிகளைப் பற்றித் தவறாக விமர்சனம் செய்ய மாட்டார். அவர்களைப் பற்றிய ரகசியமான விஷயங்களைப் பேசவும் மாட்டார். வேறு யாராவது அவர்களைப் பற்றித் தவறாக விமர்சனம் செய்தாலோ, அவர்களைப் பற்றிய ரகசியமான விஷயங்களைச் சொன்னாலோ அதைக் கேட்கவும் மாட்டார். (சங். 15:3; நீதி. 20:19) அதோடு, பரபரப்பான விஷயங்களைப் பற்றியோ, உறுதி செய்யப்படாத விஷயங்களைப் பற்றியோ பேச மாட்டார். (எபே. 4:25) நம்பகமான தகவல்களும் பைபிள் சம்பந்தப்பட்ட விஷயங்களும் நம்முடைய வெப்சைட்டிலும் மாதா மாதம் வருகிற JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகளிலும் போதுமான அளவுக்குக் கிடைக்கிறது.

பொருள்களை வாங்குவதற்கும், விற்பதற்கும், விளம்பரப்படுத்துவதற்கும், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் சாட்சிகள் சிலர் இந்த மாதிரி அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறார்கள். இதெல்லாம் வியாபார நோக்கத்துக்காகத்தான் செய்யப்படுகிறதே தவிர, யெகோவாவின் வழிபாட்டுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. “பண ஆசையில்லாமல் வாழ” நினைக்கிற ஒரு கிறிஸ்தவர், சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி இப்படிப் பணம் சம்பாதிக்க மாட்டார்.—எபி. 13:5.

சகோதர சகோதரிகளுக்கு அவசர உதவி தேவைப்படும் சமயத்திலோ இயற்கைப் பேரழிவுகளால் அவர்கள் பாதிக்கப்படுகிற சமயத்திலோ அவர்களுக்குப் பணம் திரட்டுவதற்காக சிலர் இந்த மாதிரியான அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்படிச் செய்வது சரியா? சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்று நாம் நினைப்பது நல்லதுதான். (யாக். 2:15, 16) ஆனால், பெரிய பெரிய குரூப்புகள் வழியாக இந்த மாதிரி செய்யும்போது கிளை அலுவலகமோ சபை மூப்பர்களோ செய்திருக்கிற ஏற்பாடுகளுக்கு அது இடைஞ்சலாக ஆகிவிடலாம். (1 தீ. 5:3, 4, 9, 10, 16) சகோதர சகோதரிகளைப் பார்த்துக்கொள்வதற்கு நாம் ஏதோ விசேஷமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போல் நடந்துகொள்ளக் கூடாது.

யெகோவாவுக்கு மகிமை சேர்க்கத்தான் நாம் ஆசைப்படுகிறோம். (1 கொ. 10:31) அதனால், மெசேஜ் அனுப்புகிற அப்ளிகேஷன்களையோ வேறு ஏதாவது தொழில்நுட்பத்தையோ பயன்படுத்தும்போது, அவற்றில் இருக்கிற ஆபத்துகளை மனதில் வைத்து கவனமாக நடந்துகொள்ளுங்கள்.