Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மைகளைத் தேடி...

உண்மைகளைத் தேடி...

உண்மைகள்—அவை வாழ்வா சாவா என்பதையே சிலசமயம் தீர்மானிக்கின்றன. ‘நோய்கள் எப்படிப் பரவுகின்றன’ என்ற ஒரேவொரு உண்மையைத் தெரிந்துகொண்டது மனித வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எப்படி என்று பாருங்கள்.

ஆயிரக்கணக்கான வருஷங்களாக இதற்கான பதில் மர்மமாகவே இருந்தது. விளைவு? கொள்ளைநோய்கள் பல லட்சம் மக்களின் உயிரைச் சூறையாடிவிட்டன. ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்தது. பாக்டீரியா அல்லது வைரஸ் போன்ற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்தான் நோய்களுக்குக் காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டதால், நோய்கள் வருவதைத் தடுக்கவும் அவற்றைக் குணமாக்கவும் முடிந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் ஆரோக்கியமாக, நீண்டநாள் வாழவும் முடிந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, வேறு சில முக்கியமான உண்மைகளும் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை? இந்தக் கேள்விகளை யோசித்துப்பாருங்கள்:

  • கடவுள் யார்?

  • இயேசு கிறிஸ்து யார்?

  • கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன?

  • எதிர்காலம் எப்படி இருக்கும்?

லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால், அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அந்தப் பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது நீங்களும் நன்மை அடையலாம்.

உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியுமா?

‘ஒரு விஷயம் உண்மைனு எப்படி கண்டுபிடிக்கிறது?’ என்று நீங்கள் யோசிக்கலாம். அதுவும் இந்தக் காலத்தில், நிறைய விஷயங்களில் எது உண்மை என்று கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. ஏன்?

நிறைய பேர் அரசாங்கங்களையோ நிறுவனங்களையோ மீடியாவையோ நம்புவதில்லை. அவை உண்மைகளைச் சொல்லும் என்ற நம்பிக்கையே அவர்களுக்கு இல்லை. சொந்த கருத்துகள், பாதி உண்மைகள், பொய்கள் ஆகியவை நம்ப வைக்கும் விதத்தில் சொல்லப்படுகின்றன. அதனால், அவற்றுக்கும் உண்மைக்கும் இருக்கிற வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பதே மக்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அவநம்பிக்கையும் பொய்யான தகவல்களும் உலகில் நிறைந்திருப்பதால், உண்மைகளையும் அதனால் வரும் நன்மைகளையும் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதில்லை.

உண்மைகளைத் தெரிந்துகொள்வது சவால்தான். ஆனால் கவலை வேண்டாம். வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும்! எப்படி? நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்திவரும் முறைகளால்தான்.

உண்மைகளுக்கான தேடுதல்

நீங்கள் ஒவ்வொரு நாளும், உண்மைகளை ஓரளவு தேடிக்கொண்டேதான் இருக்கிறீர்கள். ஜெஸிக்கா என்ற பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள். “நிலக்கடலை சாப்ட்டா என் பொண்ணுக்கு ஒத்துக்காது. ஒரு துளி அளவு அது சாப்பாட்ல கலந்திருந்தாலும் அவ உயிருக்கே ஆபத்தாயிடும்!” என்று ஜெஸிக்கா சொல்கிறார். தான் வாங்கும் உணவு எந்த விதத்திலும் தன் மகளுக்கு ஆபத்தாகி விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். “சாப்பிட ஏதாவது வாங்குனா, அதுல என்னென்ன கலந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்குவேன். அதுக்கு, முதல்ல அதோட ‘லேபிள்’ல இருக்கிற விவரங்களை நல்லா படிச்சு பாப்பேன். அப்புறம், அந்த உணவை பத்தி இன்னும் ஆராய்ச்சி செஞ்சு பாப்பேன். நிலக்கடலை தப்பித்தவறிகூட அதுல இருக்கக் கூடாது. அதுனால, அந்த உணவை தயாரிச்ச கம்பெனிகிட்டயே அதை பத்தி கேட்டு தெரிஞ்சுக்குவேன். அப்புறம், அந்த கம்பெனி பாதுகாப்பான விதத்துலதான் உணவு தயாரிக்குறாங்களானு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவேன். அதாவது, நம்பகமான இடத்திலிருந்து அந்தக் கம்பெனிய பத்தி தகவல்கள் ஏதாவது கிடைக்குதானும் ஆராய்ச்சி செஞ்சு பாப்பேன்.”

உங்கள் சூழ்நிலை ஜெஸிக்காவின் சூழ்நிலையைப் போல சிக்கலானதாக இல்லையென்றாலும், ஜெஸிக்கா பயன்படுத்திய இந்த முறையைப் பயன்படுத்தி, உங்களுடைய கேள்விகளுக்கு நீங்கள் பதில் தேடலாம்:

  • உண்மைகளைத் தெரிந்துகொள்வது.

  • கூடுதலாக ஆராய்ச்சி செய்வது.

  • தகவல் நம்பகமான இடத்திலிருந்து வருகிறதா என்று உறுதிசெய்துகொள்வது.

வாழ்க்கையின் மிக முக்கியமான கேள்விகளுக்கு உண்மையான பதில்களைக் கண்டுபிடிப்பதற்கும்கூட இதே முறை உங்களுக்கு உதவும். எப்படி?

உண்மைகளுக்குப் பேர்போன புத்தகம்

முன்பு பார்த்த ஜெஸிக்கா, வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கும்கூட பதில்களைக் கண்டுபிடித்தார். தன்னுடைய மகளுக்கு ஏற்ற உணவை வாங்க என்ன முறையைப் பயன்படுத்துகிறாரோ அதே முறையை அவர் இதற்கும் பயன்படுத்தினார். “பைபிளை கவனமா படிச்சதும்... நிறைய ஆராய்ச்சி செஞ்சதும்... உண்மையான பதில்கள கண்டுபிடிக்க எனக்கு உதவியா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஜெஸிக்காவைப் போலவே, லட்சக்கணக்கான மக்கள் பைபிள் சொல்லும் உண்மைகளைத் தெரிந்திருக்கிறார்கள். அவற்றில் சில...

  • நாம் ஏன் படைக்கப்பட்டோம்?

  • இறந்தபின்பு என்ன நடக்கிறது?

  • நமக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றன?

  • கஷ்டங்களுக்கு முடிவுகட்ட கடவுள் என்ன செய்கிறார்?

  • குடும்பம் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்தக் கேள்விகளுக்கும் மற்ற கேள்விகளுக்கும் உண்மையான பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு, நீங்கள் பைபிளைப் படிக்கலாம், அதோடு www.pr418.com-ல் அதைப் பற்றிக் கூடுதலாக ஆராய்ச்சி செய்யலாம்.