Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசு உண்மையிலேயே எனக்காக இறந்தாரா?

இயேசு உண்மையிலேயே எனக்காக இறந்தாரா?

தங்கள் இதயத்தில் இருக்கிற எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டிய நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. “நமக்கு இருக்கும் உணர்ச்சிகள்தான்” அவர்களுக்கும் இருந்தன. (யாக். 5:17) உதாரணத்துக்கு, ரோமர் 7:21-24-ஐப் படிக்கும்போது, பவுல் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. “நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது. . . . எப்பேர்ப்பட்ட பரிதாபமான நிலையில் இருக்கிறேன்!” என்று அவர் சொன்னார். நம்முடைய பலவீனங்களோடு போராடிக்கொண்டிருக்கும்போது, நேர்மையான இந்த வார்த்தைகள் நமக்கு ஆறுதலாக இருக்கும், இல்லையா?

தனக்கு இருந்த வேறுசில உணர்ச்சிகளையும் பவுல் வெளிப்படுத்தினார். உதாரணத்துக்கு, கலாத்தியர் 2:20-ல், இயேசு “[அவர்மேல்] அன்பு வைத்து [அவருக்காக] தன்னையே தியாகம் செய்தார்” என்று அவர் உறுதியாக நம்பியதைப் பற்றிச் சொன்னார். நீங்களும் அவரைப் போல் உணருகிறீர்களா? ஒருவேளை, எல்லா சமயத்திலும் உங்களால் அப்படி உணர முடியாமல் இருக்கலாம்.

முன்பு செய்த தவறுகளை நினைத்து நாம் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கலாம். அதனால், யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இல்லை என்றும், அவர் நம்மை மன்னிக்கவில்லை என்றும் நாம் நினைக்கலாம். அதோடு, நமக்காகக் கொடுக்கப்பட்ட பரிசுதான் மீட்புப் பலி என்று நம்புவது கஷ்டமாகிவிடலாம். ஆனால், மீட்புவிலையை ஒரு பரிசாக நாம் நினைக்க வேண்டும் என்று இயேசு உண்மையிலேயே விரும்புகிறாரா? அப்படியென்றால், அப்படி நினைக்க எது நமக்கு உதவும்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் இப்போது பதில்களைப் பார்க்கலாம்.

தன்னுடைய பலியைப் பற்றி இயேசு என்ன நினைத்தார்?

தன்னுடைய பலியை ஒரு பரிசாக நாம் நினைக்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் விருப்பம்! அதை எப்படி உறுதியாகச் சொல்லலாம்? லூக்கா 23:39-43-ல் இருக்கிற பதிவைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இயேசுவுக்குப் பக்கத்தில் ஒருவன் சித்திரவதைக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருக்கிறான். தான் செய்த குற்றங்களை நினைத்து அவன் வருந்துகிறான். சித்திரவதைக் கம்பத்தில் தொங்கவிடப்படும் அளவுக்கு அவனுக்குக் கொடூரமான தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால், கண்டிப்பாக அவன் பெரிய குற்றத்தைச் செய்திருக்க வேண்டும்! அவன் ரொம்பவே வேதனையில் மூழ்கியிருக்கிறான்; “நீங்கள் ஆட்சிக்கு வரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்று இயேசுவிடம் கெஞ்சுகிறான்.

அப்போது, இயேசு என்ன செய்தார்? தன்னுடைய தலையை மெதுவாகத் திருப்பி அவனைப் பார்க்கிறார். அப்படிச் செய்வது அவருக்கு எவ்வளவு வலியைத் தந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவு வலியில் இருந்தபோதும் அவனைப் பார்த்து அன்பாகப் புன்னகை செய்கிறார். ஆறுதலாக அவனிடம், “உண்மையாகவே இன்று உனக்குச் சொல்கிறேன், நீ என்னோடு பூஞ்சோலையில் இருப்பாய்” என்று சொல்கிறார். இயேசு நினைத்திருந்தால், ‘மனிதகுமாரன் . . . பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்கு வந்தார்’ என்ற விஷயத்தை மட்டும் அவனுக்கு ஞாபகப்படுத்தியிருக்கலாம். (மத். 20:28) ஆனால், தன்னுடைய பலி, தனிப்பட்ட விதத்தில் அவனுக்கும் நன்மை அளிக்கும் என்பதை எடுத்துச் சொன்னார். “நீ,” “என்னோடு” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவனிடம் கனிவாகப் பேசினார். பூஞ்சோலையில் அவன் இருப்பான் என்று சொன்னதன் மூலம், தன்னுடைய பலியால் அவனும் நன்மை அடையப் போவதாகச் சொன்னார்.

தன்னுடைய பலியை, அவனுக்குக் கொடுக்கப்பட்ட பரிசாக அவன் நினைக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். கடவுளுக்குச் சேவை செய்ய வாய்ப்புக் கிடைக்காத அந்தக் குற்றவாளிமீதே இயேசு அந்தளவு அக்கறை காட்டினார் என்றால், ஞானஸ்நானம் எடுத்து கடவுளுக்குச் சேவை செய்துவருகிற உங்கள்மீது எந்தளவு அக்கறை காட்டுவார்! முன்பு நாம் தவறுகள் செய்திருந்தாலும், தனிப்பட்ட விதத்தில் நமக்கும் இயேசுவின் பலி நன்மை அளிக்கிறது என்பதை நம்ப எது உதவும்?

பவுலுக்கு எது உதவியது?

தனக்கு இயேசு கொடுத்த ஊழிய நியமிப்பிலிருந்து, தனக்காகவும் அவர் உயிரைக் கொடுத்திருக்கிறார் என்பதை பவுல் புரிந்துகொண்டார். எப்படி? “என்னைப் பலப்படுத்திய நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவுக்கு நன்றியோடு இருக்கிறேன். ஏனென்றால், அவர் என்னை உண்மையுள்ளவன் என்று கருதி, அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கு என்னை நியமித்தார். முன்பு நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்” என்று அவர் சொன்னார். (1 தீ. 1:12-14) பவுலுக்கு ஊழிய நியமிப்பைக் கொடுத்ததன் மூலம், அவர்மீது தான் இரக்கம் காட்டியிருப்பதையும், அவரை நேசிப்பதையும், அவர்மீது நம்பிக்கை வைத்திருப்பதையும் இயேசு காட்டினார். அதேபோல், இன்று நமக்கும் ஊழிய நியமிப்பைக் கொடுத்திருக்கிறார். (மத். 28:19, 20) நமக்காகவும் அவர் உயிரைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுமா?

ஆல்பர்ட் என்ற சகோதரர், சபை நீக்கம் செய்யப்பட்டு 34 வருஷங்கள் கழித்து, சமீபத்தில் யெகோவாவிடம் திரும்பிவந்திருக்கிறார். “என்னோட பாவங்கள் எப்பவும் என் கண் முன்னாடியே இருக்கு. ஆனா ஊழியம் செய்றப்போ, அப்போஸ்தலன் பவுல் மாதிரிதான் நானும் நினைக்கிறேன். இயேசுதான் எனக்கு இந்த வேலைய கொடுத்திருக்கிறார்! அதனால, என்னை பத்தியும், என் வாழ்க்கைய பத்தியும், எதிர்காலத்த பத்தியும் என்னால நல்ல விதமா நினைக்க முடியுது” என்று அவர் சொல்கிறார்.—சங். 51:3.

எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தினாலும் சரி, அவர்கள்மீது இயேசு இரக்கம் காட்டுகிறார் என்பதையும், அவர்களை நேசிக்கிறார் என்பதையும் புரியவையுங்கள்

ஆலன் என்ற சகோதரர், சத்தியத்துக்கு வருவதற்கு முன்பு நிறைய குற்றங்களைச் செய்திருந்தார்; பயங்கர முரடனாகவும் இருந்தார். “மத்தவங்கள எந்தளவு கொடுமைப்படுத்தியிருக்கேன்னு நினைச்சு பார்க்குறப்போ, சில சமயங்கள்ல மனசு ரொம்ப வலிக்கும். ஆனா, நல்ல செய்திய சொல்றதுக்கு என்னை மாதிரி ஒரு பாவிய பயன்படுத்துறதுக்காக நான் யெகோவாவுக்கு ரொம்ப நன்றி சொல்றேன். நல்ல செய்திய ஜனங்க காதுகொடுத்து கேட்குறப்போ, யெகோவா எவ்வளவு நல்லவர், அன்பானவர் அப்படிங்கிறத என்னால உணர முடியுது. என்னை மாதிரியே இருக்குறவங்களுக்கு உதவுறதுக்காக யெகோவா என்னை பயன்படுத்துறார்” என்று அவர் சொல்கிறார்.

ஊழியம் செய்யும்போது, நம்மால் நல்லதைச் செய்ய முடிகிறது; நல்லதை யோசிக்க முடிகிறது. அதோடு, இயேசுவுடைய இரக்கத்தையும், அன்பையும், நம்மீது அவர் வைத்திருக்கிற நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.

நம்முடைய இதயத்தைவிட யெகோவா உயர்ந்தவர்

சாத்தானின் இந்த உலகம் அழியும்வரை, நாம் முன்பு செய்த தவறுகளை நம்முடைய இதயம் கண்டனம் செய்துகொண்டே இருக்கலாம். இந்தப் போராட்டத்தில் எப்படி ஜெயிப்பது?

ஜீன் என்ற சகோதரி, இளவயதில் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தார். அதைப் பற்றிய குற்ற உணர்வால் இப்போதும் அவர் தவிக்கிறார். “‘கடவுள் நம் இதயத்தவிட உயர்ந்தவரா இருக்கிறாருங்குற’ விஷயம் எனக்கு ஆறுதலா இருக்கு” என்று அவர் சொல்கிறார். (1 யோ. 3:19, 20) நாம் பாவிகள் என்பதை யெகோவாவும் இயேசுவும் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது, ஜீனைப் போலவே நமக்கும் ஆறுதல் கிடைக்கும். இதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்: யெகோவாவும் இயேசுவும், பரிபூரண மனிதர்களுக்காக மீட்புவிலையைக் கொடுக்கவில்லை; மனம் திரும்புகிற பாவிகளுக்காகத்தான் கொடுத்தார்கள்!—1 தீ. 1:15.

பாவ இயல்புள்ள மனிதர்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போதும், அவர் கொடுத்த ஊழியத்தைச் செய்து முடிக்க நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யும்போதும், மீட்புவிலை தனிப்பட்ட விதத்தில் நமக்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்புவோம். அப்போது, இயேசு “என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்” என்று சொன்ன பவுலைப் போலவே நம்மாலும் சொல்ல முடியும்.