வாழ்க்கை சரிதை
எதிர்பார்ப்பை மிஞ்சிய ஆசீர்வாதங்கள்!
‘பயனியரா ஆகணும்னு ஆசைதான். ஆனா, பயனியர் சேவை சுவாரஸ்யமா இருக்குமா?’ என்று நான் யோசித்தேன். ஜெர்மனியில், உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் நான் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்த வேலை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்திருந்தது. தார்-எஸ்-சலாம், எலிசபெத்வில், அஸ்மரா போன்ற இடங்களுக்கு நாங்கள் ஏற்றுமதி செய்தோம். ஒருநாள் இந்த இடங்களிலும், ஆப்பிரிக்காவின் மற்ற இடங்களிலும் யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்வேன் என்று அப்போது நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை!
ஒருவழியாக, என்னுடைய சந்தேகங்களை மூட்டைகட்டிவிட்டு, பயனியர் சேவையை ஆரம்பித்தேன். எதிர்பார்ப்பை மிஞ்சிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள அது வழி செய்தது. (எபே. 3:20) ஆனால், இதெல்லாம் எப்படி நடந்தது? ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன், கேளுங்கள்.
1939-ல் இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்த சில மாதங்கள் கழித்து, ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் பிறந்தேன். 1945-ல் போர் முடியப்போகிற சமயத்தில், எங்கள் நகரத்தின் மேல் குண்டு மழை பொழிந்தது. அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், எங்கள் தெருவிலும் குண்டுகள் வந்து விழுந்ததால், தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் இடத்துக்கு நாங்கள் குடும்பமாக ஓடினோம். பிறகு, எங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, என் அம்மாவின் ஊரான எர்ஃபர்ட்டுக்குப் போனோம்.
அம்மா, சத்தியத்தை ஆர்வமாகத் தேடிக்கொண்டிருந்தார். தத்துவ ஞானிகளின் புத்தகங்களைப் படித்தார், நிறைய மதங்களை ஆராய்ந்து பார்த்தார். ஆனால், அவருக்குத் திருப்தி கிடைக்கவில்லை. சுமார் 1948-ல், யெகோவாவின் சாட்சிகள் இரண்டு பேர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவர்களை அம்மா உள்ளே கூப்பிட்டு, கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார். ஒருமணிநேரத்துக்குள்ளாகவே, “நான் சத்தியத்த கண்டுபிடிச்சிட்டேன்” என்று என் தங்கையிடமும் என்னிடமும் சொன்னார். அதற்குப் பிறகு, அம்மாவும் தங்கையும் நானும் ரொம்பச் சீக்கிரத்திலேயே எர்ஃபர்ட்டில் இருந்த சபைக்குப் போக ஆரம்பித்தோம்.
1950-ல், பெர்லினுக்குத் திரும்பினோம். அங்கே, பெர்லின்-க்ராட்ஸ்பெர்க் சபைக்குப் போக ஆரம்பித்தோம். பிறகு, பெர்லினிலேயே இன்னொரு இடத்துக்குக் குடிமாறிப் போனதால், பெர்லின்-டெம்பில்ஹூஃப் சபைக்குப் போனோம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அம்மா ஞானஸ்நானம் எடுத்தார். ஆனால், நான் தயங்கிக்கொண்டே இருந்தேன். ஏன்?
கூச்சத்தையும் தயக்கத்தையும் எதிர்த்துப் போராடினேன்
எனக்கு ரொம்பவே கூச்ச சுபாவம் இருந்ததால், நான் அவ்வளவாக முன்னேற்றம் செய்யவில்லை. இரண்டு வருஷங்களாக ஊழியத்துக்குப் போயும், ஒருவரிடம்கூட பேசவில்லை! யெகோவாவுக்குத் தங்கள் பக்தியை நிரூபித்திருந்த தைரியமான சகோதர சகோதரிகளோடு நேரம் செலவு செய்தபோது, என்னுடைய நிலைமை மாறியது. அவர்களில் சிலர், நாசி சித்திரவதை முகாம்களில் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்; சிலர், கிழக்கு ஜெர்மனியில் இருந்த சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள்.
வேறுசிலர், சிறையில் தள்ளப்படுகிற ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கிழக்கு ஜெர்மனிக்கு ரகசியமாகப் பிரசுரங்களைக் கொண்டுபோனவர்கள். அவர்களுடைய அனுபவங்கள் என் மனதைத் தொட்டன! யெகோவாவுக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் அவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்திருக்கிறார்கள் என்றால்... சிறையில் தள்ளப்படுகிற ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார்கள் என்றால்... கூச்ச சுபாவத்தை விட்டுவிடுவதற்காவது நான் முயற்சி செய்ய வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.1955-ல் நடந்த விசேஷ ஊழியத்தில் கலந்துகொண்டபோது, கூச்ச சுபாவத்தைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அந்த ஊழியம், அமைப்பு இதுவரை செய்ததிலேயே மிகப் பெரிய ஓர் ஏற்பாடு என்று இன்ஃபார்மென்டில் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) வந்த ஒரு கடிதத்தில் சகோதரர் நேதன் நார் சொல்லியிருந்தார். சகோதர சகோதரிகள் எல்லாரும் அதில் கலந்துகொண்டால், “இதுவரை செய்யப்பட்ட ஊழியத்திலேயே அந்த மாதத்தில் செய்யப்போகிற ஊழியம்தான் மிகச் சிறந்ததாக இருக்கும்” என்று அவர் அதில் சொல்லியிருந்தார். அவர் சொன்னபடியே நடந்தது! சீக்கிரத்திலேயே, யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்தேன். 1956-ல் ஞானஸ்நானம் எடுத்தேன். என்னோடு சேர்ந்து அப்பாவும் தங்கையும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். சீக்கிரத்திலேயே நான் இன்னொரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருந்தது.
பயனியர் ஊழியம்தான் சரியான வேலை என்று நிறைய வருஷங்களாகவே எனக்குத் தெரியும். இருந்தாலும், நான் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். ஏற்றுமதி-இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழிற் பயிற்சியை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்த வேலையில் அனுபவம் பெற வேண்டும் என்றும், அதில் கரைகண்ட ஆளாக வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டதால், கொஞ்சக் காலத்துக்கு அந்த வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால், 1961-ல், ஜெர்மனியில் இருந்த மிகப்பெரிய துறைமுக நகரமான ஹாம்பர்க்கில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலையில் மூழ்க மூழ்க, முழுநேர சேவையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனேன்.
ஆன்மீகக் காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதற்கு, அன்பான சகோதரர்கள் நிறைய பேரைப் பயன்படுத்தி யெகோவா எனக்கு உதவினார். அதற்காக அவருக்கு ரொம்ப நன்றி சொல்கிறேன். என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் பயனியர் சேவையை ஆரம்பித்தார்கள், எனக்கு நல்ல முன்மாதிரி வைத்தார்கள். அதோடு, சித்திரவதை முகாமில் கஷ்டத்தை அனுபவித்திருந்த சகோதரர் எரிக் முண்ட், யெகோவாமீது நம்பிக்கை வைக்கும்படி என்னை உற்சாகப்படுத்தினார். சித்திரவதை முகாமில் யாரெல்லாம் தங்கள்மீது நம்பிக்கை வைத்தார்களோ, அவர்களெல்லாம் பிற்பாடு பலவீனமாகிவிட்டதாக அவர் சொன்னார். ஆனால் யெகோவாவை முழுமையாக நம்பியவர்கள், கடைசிவரை உண்மையோடு இருந்தார்கள் என்றும் அமைப்பின் தூண்களாக இருந்தார்கள் என்றும் சொன்னார்.
சகோதரர் மார்ட்டின் பொட்ஸிங்கர், “தைரியம்தான் எல்லாத்தையும்விட பெரிய சொத்து!” என்று எப்போதுமே சொல்வார். அப்படிச் சொல்லி சகோதரர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துவார். பிற்பாடு, ஆளும் குழுவில் அவர் சேவை செய்தார். அவர் சொன்னதை நன்றாக யோசித்த பிறகு, வேலையை விட்டுவிட்டேன். 1963, ஜூன் மாதத்தில், பயனியர் சேவையை ஆரம்பித்தேன். அதுவரை நான் எடுத்த முடிவுகளிலேயே அதுதான் அருமையான முடிவு! இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்னொரு வேலையைத் தேடுவதற்கு முன்பே, விசேஷ பயனியர் சேவை செய்வதற்கான அழைப்பு வந்தது. சில வருஷங்களுக்குப் பிறகு, எதிர்பார்ப்பை மிஞ்சிய ஆசீர்வாதத்தை யெகோவா கொடுத்தார்! 44-வது கிலியட் பள்ளிக்கு நான் அழைக்கப்பட்டேன்!
கிலியட் பள்ளியில் கற்றுக்கொண்ட பொன்னான பாடங்கள்
“நியமிப்பைச் சீக்கிரத்தில் விட்டுவிடக் கூடாது” என்பது நான் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடங்களில் ஒன்று! முக்கியமாக, சகோதரர்கள் நேதன் நாரிடமிருந்தும் லைமன் ஸ்விங்கிளிடமிருந்தும் இதை கற்றுக்கொண்டேன். கஷ்டங்கள் வந்தாலும் தொடர்ந்து நியமிப்பைச் செய்யும்படி அவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். “அழுக்கு... பூச்சிகள்... ஏழ்மை நிலை... இத பார்ப்பீங்களா? இல்ல, மரங்கள்... மலர்கள்... மலரும் முகங்கள்... இத பார்ப்பீங்களா? மக்கள நேசிக்க கத்துக்கோங்க” என்று சகோதரர் நார் சொன்னார். சகோதரர் ஸ்விங்கிள், தங்கள் நியமிப்பை சிலர் ஏன் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள் என்பதைப் பற்றி ஒருநாள் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்! அவருடைய கண்கள் குளமாகிவிட்டன. அதனால், கொஞ்ச நேரம் அவர் பேச்சை நிறுத்த வேண்டியிருந்தது. அதைப் பார்த்து என் நெஞ்சம் கரைந்தது. கிறிஸ்துவுக்கும், அவருடைய உண்மையுள்ள சகோதரர்களுக்கும் ஒருபோதும் ஏமாற்றம் தந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.—மத். 25:40.
எங்களுக்கு நியமிப்புகள் கிடைத்தபோது, நாங்கள் எங்கே போகப்போகிறோம் என்று பெத்தேல் ஊழியர்கள் சிலர் ஆர்வமாகக் கேட்டார்கள். ஒவ்வொருவருடைய நியமிப்பையும் கேட்டு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், “காங்கோவுக்கு (கின்ஷாசாவுக்கு) நியமிக்கப்பட்டிருக்கேன்” என்று நான் சொன்னபோது, “ஐயோ காங்கோவா! யெகோவாதான் உங்ககூட இருக்கணும்” என்று சொன்னார்கள். ஏனென்றால், காங்கோவில் நடந்துகொண்டிருந்த போர்கள், கூலிப்படைகளின் நடவடிக்கைகள், கொலைகள் பற்றிய செய்திகள் அந்தச் சமயத்தில் பரவலாக வந்துகொண்டிருந்தன. ஆனாலும், நான் கற்றுக்கொண்ட பாடங்களை மனதில் வைத்திருந்தேன். செப்டம்பர் 1967-ல் கிலியட் பட்டமளிப்பு நிகழ்ச்சி முடிந்த கொஞ்ச நாளிலேயே, சகோதரர்கள் ஹின்ரிக் டான்போஸ்டலும், க்ளாட் லின்ஸீயும், நானும் காங்கோவின் தலைநகரமான கின்ஷாசாவுக்குக் கிளம்பினோம்.
மிஷனரி சேவையில் கற்றுக்கொண்ட அருமையான பாடங்கள்
கின்ஷாசாவுக்குப் போனவுடன் மூன்று மாதங்களுக்கு பிரெஞ்சு மொழி கற்றுக்கொண்டோம். பிறகு, லுபும்பாஷி என்ற நகரத்துக்கு விமானத்தில் போனோம். இதன் முன்னாள் பெயர், எலிசபெத்வில். காங்கோவின் தென்கோடியில், ஜாம்பியாவின் எல்லையில் அந்த நகரம் இருக்கிறது. அதன் மத்தியில் இருந்த மிஷனரி இல்லத்தில் நாங்கள் தங்கினோம்.
லுபும்பாஷியின் பெரும்பாலான இடங்களில் அதுவரை ஊழியம் செய்யப்படவில்லை. அங்கிருந்த மக்களுக்கு முதன்முதலில் நல்ல செய்தியைச் சொல்லும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நாங்கள் பூரித்துப்போனோம். ரொம்பச் சீக்கிரத்திலேயே, நடத்த முடியாதளவுக்கு ஏராளமான பைபிள் படிப்புகள் கிடைத்தன. அரசாங்க அதிகாரிகளிடமும் போலீஸ்காரர்களிடமும் பிரசங்கித்தோம். அவர்களில் நிறைய பேர், பைபிளையும் பிரசங்க வேலையையும் ரொம்பவே மதித்தார்கள். அங்கிருந்த மக்கள் பெரும்பாலும் ஸ்வாஹிலி மொழி பேசியதால், க்ளாட் லின்ஸீயும் நானும் அதை கற்றுக்கொண்டோம். ரொம்பச் சீக்கிரத்திலேயே ஸ்வாஹிலி மொழி சபைக்கு நியமிக்கப்பட்டோம்.
அருமையான அனுபவங்கள் கிடைத்தாலும் எங்களுக்குச் சில சவால்களும் இருந்தன. குடிபோதையில் இருந்த துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களும் பிரச்சினைக்குரிய போலீஸ்காரர்களும் எங்கள்மேல் சுமத்திய பொய்க் குற்றச்சாட்டுகளை சமாளிக்க வேண்டியிருந்தது. ஒரு தடவை, மிஷனரி இல்லத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தார்கள். மத்திய போலீஸ் நிலையத்துக்கு எங்களைக் கூட்டிக்கொண்டு போய், சுமார் ராத்திரி 10 மணிவரைக்கும் எங்களை வெறும் தரையில் உட்கார வைத்தார்கள்.
1969-ல், பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். நான் சேவை செய்த வட்டாரத்தில் புதர்க்காடுகள் இருந்தன. ஆள் உயரம் நின்ற புற்களின் நடுவில், சேரும் சகதியுமான வழியில், ரொம்பத் தூரம் நடந்துபோக வேண்டியிருந்தது. ஒரு கிராமத்தில், என்
படுக்கைக்குக் கீழே ஒரு கோழி தன் குஞ்சுகளோடு வந்து படுத்துக்கொண்டது. பொழுது விடிவதற்கு முன்பே அந்தக் கோழி கூவியதையும், அதைக் கேட்டு நான் எழுந்துகொண்டதையும் மறக்கவே முடியாது. சாயங்கால நேரங்களில், நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு சகோதரர்களோடு பைபிள் சத்தியங்களைப் பற்றிப் பேசுவேன். அந்த அருமையான தருணங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமாக இருக்கிறது!கிட்டாவாலா * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற இயக்கத்தைச் சேர்ந்த சிலர், நம்மோடு பைபிளைப் படித்து ஞானஸ்நானம் எடுத்தார்கள். பிற்பாடு, மூப்பர்களாகக்கூட ஆனார்கள்! நம்முடைய சகோதரர்களைப் போல் வேஷம் போட்டுக்கொண்டிருந்த அவர்களைச் சமாளிப்பது எங்களுக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. ‘மறைந்திருக்கிற பாறைகள்’ போல் இருந்த அவர்களில் நிறைய பேர், நம்முடைய சகோதர சகோதரிகளைத் தங்களுடைய வலையில் விழவைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. (யூ. 12) கடைசியில், அந்த வஞ்சகர்களைச் சபையிலிருந்து யெகோவா நீக்கினார். அதற்குப் பிறகு, ஏராளமான பேர் சத்தியத்துக்கு வந்தார்கள்.
1971-ல், கின்ஷாசாவில் இருக்கிற கிளை அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்டேன். கடிதத்தொடர்பு சம்பந்தப்பட்ட வேலைகளைப் பார்த்துக்கொள்வது, பிரசுரங்களை அனுப்பிவைப்பது, ஊழிய இலாகாவில் சேவை செய்வது என நிறைய வேலைகள் செய்தேன். அந்த நாட்டில், அடிப்படை வசதிகள் ரொம்பக் குறைவாகவே இருந்தன. அதை வைத்தே அவ்வளவு பெரிய நாட்டில் நம்முடைய வேலைகளை எப்படி ஒழுங்கமைப்பது என்பதை பெத்தேலில் கற்றுக்கொண்டேன். சிலசமயங்களில், விமானம் வழியாக நாங்கள் அனுப்புகிற கடிதங்கள் சபைகளுக்குப் போய்ச் சேர நிறைய மாதங்கள் ஆகும்! அந்தக் கடிதங்கள், விமானத்திலிருந்து படகுகளுக்கு மாற்றப்படும். பிறகு, அடர்த்தியாக வளர்ந்திருக்கும் ஆகாயத்தாமரைகளில் அந்தப் படகுகள் வாரக் கணக்கில் மாட்டிக்கொள்ளும். இதுபோன்ற சவால்கள் இருந்தாலும், நம்முடைய வேலை தொடர்ந்து நடந்துவந்தது.
கொஞ்சப் பணத்தை வைத்துக்கொண்டே சகோதரர்கள் பெரிய பெரிய மாநாடுகளை நடத்தியதைப் பார்த்து நான் வாயடைத்துப்போனேன். கரையான் புற்றை மேடையாக மாற்றினார்கள், நீளமாக வளர்ந்த யானைப் புற்களைச் சுவராகப் பயன்படுத்தினார்கள். அந்தப் புற்களைச் சுருட்டிவைத்து, உட்காருவதற்கு மெத்தையாகப் பயன்படுத்தினார்கள். மூங்கில்களைத் தூண்களாக நிறுத்தினார்கள். நாணற் புற்களைக் கூரைகளாகவும் மேஜைகளாகவும் பயன்படுத்தினார்கள். மெல்லியதாகச் சீவப்பட்ட மரப்பட்டைகளை ஆணிகளாகப் பயன்படுத்தினார்கள். சகோதரர்களுடைய உறுதியையும், அவர்களுடைய அறிவுத் திறனையும் பார்த்து நான் அசந்துபோனேன். என் நெஞ்சில் அவர்கள் நீங்காத இடம்பிடித்தார்கள்! அவர்களை விட்டுப் பிரிவது எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது.
கென்யாவில் செய்த சேவை
1974-ல், கென்யாவின் நைரோபியில் இருக்கிற கிளை அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்டேன். பக்கத்தில் இருக்கிற பத்து நாடுகளில் நடந்த வேலையை கென்யா கிளை அலுவலகம் பார்த்துக்கொண்டதால், நிறைய வேலை செய்ய வேண்டியிருந்தது. அதில் சில நாடுகளில் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நாடுகளுக்கு அடிக்கடி நான் அனுப்பப்பட்டேன்; முக்கியமாக, எத்தியோப்பியாவுக்கு அடிக்கடி போக வேண்டியிருந்தது. எத்தியோப்பியாவில் இருந்த சகோதர சகோதரிகளுக்கு நிறைய துன்புறுத்தல்களும் பயங்கரமான சோதனைகளும் வந்தன. நிறைய பேர் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், சிலர் கொலையும் செய்யப்பட்டார்கள். ஆனாலும், யெகோவாவோடும் சகோதர சகோதரிகளோடும் அவர்களுக்கு நல்ல பந்தம் இருந்ததால், கடைசிவரை அவர்களால் உண்மையோடு சகித்திருக்க முடிந்தது.
1980-ல், கனடாவைச் சேர்ந்த கேல் மேத்ஸனை கல்யாணம் செய்துகொண்டபோது, என் வாழ்க்கையில் வசந்தம் வீசியது. கிலியட் பள்ளியில் நாங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். கிலியட் பள்ளிக்குப் பிறகு, கடிதங்கள் வழியாகப் பேசிக்கொண்டோம். பொலிவியாவில் அவள் மிஷனரியாக நியமிக்கப்பட்டிருந்தாள். 12 வருஷங்களுக்குப் பிறகு, மறுபடியும் நியு யார்க்கில் சந்தித்தோம். அதற்குப் பிறகு, சீக்கிரத்திலேயே கென்யாவில் கல்யாணம் செய்துகொண்டோம். யெகோவா யோசிப்பது போலவே அவள் யோசிப்பாள், இருப்பதை வைத்துத் திருப்தியோடு இருப்பாள். இப்படியொரு மனைவி கிடைத்ததற்கு நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்! இன்றுவரை அவள் எனக்குப் பக்கபலமாக இருக்கிறாள், தோள் கொடுக்கும் தோழியாக இருக்கிறாள்.
1986-ல், பயண வேலைக்கு நியமிக்கப்பட்டோம். கிளை அலுவலகக் குழுவிலும் நான் சேவை செய்தேன். கென்யா கிளை அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழிருந்த நிறைய நாடுகளுக்கு நாங்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
1992-ல் எரிட்ரியாவில் இருக்கிற அஸ்மராவில் நடந்த மாநாட்டு ஏற்பாடுகளை நினைத்துப்பார்த்தால், இப்போதுகூட சந்தோஷமாக இருக்கிறது. அப்போது, நம் வேலைக்கு அங்கே தடையுத்தரவு போடப்படவில்லை. மாநாடு நடத்துவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு குடோன் மட்டும்தான் கிடைத்தது. பார்ப்பதற்கு அது அசிங்கமாக இருந்தது. உள்ளே இருந்த நிலைமையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! ஆனால், நம்முடைய சகோதர சகோதரிகள் அதைத் தலைகீழாக மாற்றியிருந்தார்கள். மாநாடு நாளன்று அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போனேன். யெகோவாவை வணங்கும் இடம் எப்படியிருக்க
வேண்டுமோ, அப்படி அது மாற்றப்பட்டிருந்தது! நிறைய குடும்பங்கள், அலங்காரம் செய்வதற்கான துணிகளை எடுத்துவந்திருந்தார்கள். சாமர்த்தியமாக அந்தத் துணிகளைப் போட்டு, பார்ப்பதற்கு நன்றாக இல்லாத இடங்களை மறைத்தார்கள். அந்த அருமையான மாநாட்டை உற்சாகம் பொங்க அனுபவித்தோம். மொத்தம் 1,279 பேர் வந்திருந்தார்கள்!பயண சேவையில், ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான இடங்களில் தங்கினோம். ஒரு தடவை, கடலுக்குப் பக்கத்திலேயே சொகுசான வீட்டில் தங்கினோம். இன்னொரு தடவை, தொழிலாளர்கள் பகுதியில் இருந்த தகரக் குடிசையில் தங்கினோம். அந்தச் சமயங்களில், 300 அடி தூரம் தாண்டிதான் கழிவறைக்குப் போக வேண்டியிருந்தது! ஆனால், நாங்கள் எங்கே இருந்தாலும் சரி, சுறுசுறுப்பான பயனியர்களோடும் பிரஸ்தாபிகளோடும் மும்முரமாக ஊழியம் செய்தோம். அந்த அனுபவமே தனிதான்! எங்களுடைய நியமிப்பு மாறியபோது, அன்பான நண்பர்களை விட்டுப் பிரிவது ரொம்பக் கஷ்டமாக இருந்தது.
எத்தியோப்பியாவில் அனுபவித்த ஆசீர்வாதங்கள்
1987 முதல் 1992 வரை, கென்யா கிளை அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழிருந்த நிறைய நாடுகளில் நம் வேலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. அதனால், தனித்தனி கிளை அலுவலகங்களும் நாட்டு அலுவலகங்களும் ஏற்படுத்தப்பட்டன. 1993-ல், எத்தியோப்பியாவைச் சேர்ந்த அடிஸ் அபாபாவில் இருக்கிற நாட்டு அலுவலகத்துக்கு மாற்றப்பட்டோம். நிறைய வருஷங்களாக அங்கே நம்முடைய வேலை ரகசியமாக நடந்துவந்தது. இப்போது, நமக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
எத்தியோப்பியாவில் நடக்கிற வேலையை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். சகோதர சகோதரிகள் நிறைய பேர் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். 2012-லிருந்து, ஒவ்வொரு வருஷமும் 20 சதவீதத்துக்கும் அதிகமான பேர் ஒழுங்கான பயனியர் சேவை செய்துவருகிறார்கள். வெவ்வேறு பள்ளிகளின் மூலம் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயிற்சி கிடைத்திருக்கிறது. 120-க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. 2004-ல், பெத்தேல் குடும்பத்தார் வேறொரு புதிய இடத்துக்கு மாறிப்போனார்கள். அதே இடத்தில் மாநாட்டு மன்றமும் கட்டப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் யெகோவா தந்த ஆசீர்வாதங்கள்!
எத்தியோப்பியாவில் இருக்கிற சகோதர சகோதரிகளிடம் இவ்வளவு வருஷங்களாகப் பழகியதில், நிறைய பேர் கேலுக்கும் எனக்கும் நெருங்கிய நண்பர்களாக ஆகியிருக்கிறார்கள். அந்த அன்பான, பாசமான சகோதர சகோதரிகளை நாங்கள் நெஞ்சார நேசிக்கிறோம். கொஞ்ச நாட்களாக எங்கள் உடல்நிலை சரியில்லை. அதனால், மத்திய ஐரோப்பா கிளை அலுவலகத்துக்கு நாங்கள் மாற்றப்பட்டிருக்கிறோம். இங்கே எங்களை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்கள். ஆனாலும், எத்தியோப்பியாவில் இருக்கிற எங்கள் அன்பான நண்பர்களை விட்டுப் பிரிந்திருப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
யெகோவா வளர வைத்தார்
தன்னுடைய வேலையை யெகோவா எப்படியெல்லாம் வளர வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் கண்ணாரப் பார்த்திருக்கிறோம். (1 கொ. 3:6, 9) உதாரணத்துக்கு, செம்பைத் தேடி காங்கோவுக்கு வந்த ருவாண்டா மக்களிடம் முதன்முதலில் பிரசங்கித்த சமயத்தில், ருவாண்டாவில் எந்தப் பிரஸ்தாபியும் இல்லை. ஆனால் இன்று, 30,000-க்கும் அதிகமான பேர் அங்கே இருக்கிறார்கள். 1967-ல், காங்கோவில் (கின்ஷாசாவில்) கிட்டத்தட்ட 6,000 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். ஆனால் இன்று, கிட்டத்தட்ட 2,30,000 பேர் இருக்கிறார்கள். 2018-ம் வருஷம் நடந்த நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 10,00,000-க்கும் அதிகமான பேர் வந்திருந்தார்கள். முன்பு கென்யா கிளை அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழிருந்த எல்லா நாடுகளிலும் மொத்தம் 1,00,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இப்போது இருக்கிறார்கள்!
50 வருஷங்களுக்கும் முன்னால், நிறைய சகோதரர்களைப் பயன்படுத்தி, முழுநேர சேவை செய்வதற்கு யெகோவா எனக்கு உதவினார். இன்னும் எனக்கு கூச்ச சுபாவம் இருக்கத்தான் செய்கிறது; ஆனாலும், யெகோவாவை முழுமையாக நம்புவதற்குக் கற்றுக்கொண்டேன். பொறுமையோடும் திருப்தியோடும் இருப்பதற்கு, ஆப்பிரிக்காவில் கிடைத்த அனுபவங்கள் எனக்கு உதவியாக இருந்தன. அவர்களுடைய உபசரிக்கும் தன்மை... மலை போன்ற பிரச்சினைகளையும் சகித்துக்கொள்கிற குணம்... யெகோவாமேல் வைத்திருக்கிற நம்பிக்கை... இதையெல்லாம் பார்த்து கேலும் நானும் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். யெகோவாவுடைய அளவற்ற கருணைக்காக நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்கிறேன். எதிர்பார்ப்பை மிஞ்சுகிற ஆசீர்வாதங்களை அவர் எனக்கு அள்ளித் தந்திருக்கிறார்!—சங். 37:4.
^ பாரா. 11 பிற்பாடு, நம் ராஜ்ய ஊழியம் என்று அழைக்கப்பட்டது. இப்போது, நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம் என்று அழைக்கப்படுகிறது.
^ பாரா. 23 “கிட்டாவாலா” என்பது ஸ்வாஹிலி மொழியிலிருந்து வந்த வார்த்தை. “ஆதிக்கம் செலுத்துவது, இயக்குவது, அல்லது ஆளுவது” என்பதுதான் அதன் அர்த்தம். இது அரசியல் சார்ந்த ஓர் இயக்கம். பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பதுதான் அதன் குறிக்கோள். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைப் பெற்றார்கள், படித்தார்கள், ஏன் வினியோகிக்கவும் செய்தார்கள். தங்கள் அரசியல் கருத்துகளையும், மூடநம்பிக்கைகளையும், ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையையும் ஆதரிப்பதற்காக பைபிள் போதனைகளைத் திரித்துச் சொன்னார்கள்.