Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 27

துன்புறுத்தலைச் சந்திக்க இப்போதே தயாராகுங்கள்

துன்புறுத்தலைச் சந்திக்க இப்போதே தயாராகுங்கள்

“கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்.”—2 தீ. 3:12.

பாட்டு 154 சகித்தே ஓடுவோம்!

இந்தக் கட்டுரையில்... *

1. துன்புறுத்தலைச் சந்திக்க நாம் ஏன் தயாராக வேண்டும்?

இயேசு இறப்பதற்கு முந்தின இரவு, அவருடைய சீஷராக இருக்க விரும்புகிற எல்லாரும் மற்றவர்களுடைய வெறுப்பைச் சம்பாதிப்பார்கள் என்று சொன்னார். (யோவா. 17:14) உண்மை வணக்கத்தை எதிர்ப்பவர்கள், யெகோவாவின் சாட்சிகளை இன்றுவரை துன்புறுத்தியிருக்கிறார்கள். (2 தீ. 3:12) இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, எதிரிகளின் தாக்குதல்கள் இன்னும் தீவிரமாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.—மத். 24:9.

2-3. (அ) பயத்தைப் பற்றி நாம் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 துன்புறுத்தலைச் சந்திக்க நாம் எப்படி இப்போதே தயாராகலாம்? ‘இது நடக்குமோ அது நடக்குமோ’ என்றெல்லாம் நாம் கற்பனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்தால், பயத்திலும் கவலையிலும் நாம் மூழ்கிவிடலாம். சோதனைகள் வருவதற்கு முன்பே நாம் அப்படிக் கற்பனை செய்துகொண்டிருந்தால், அந்தக் கற்பனைகள் இப்போதே நம்மை வீழ்த்திவிட வாய்ப்பு இருக்கிறது. (நீதி. 12:25; 17:22) பயம் என்பது, நம் “எதிரியான பிசாசு” பயன்படுத்தும் வலிமையான ஓர் ஆயுதம்! (1 பே. 5:8, 9) அப்படியென்றால், நம்மைப் பலப்படுத்திக்கொள்ள இப்போது என்ன செய்யலாம்?

3 இந்தக் கட்டுரையில், யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை எப்படிப் பலப்படுத்தலாம் என்றும், அதை இப்போதே செய்வது ஏன் ரொம்ப முக்கியம் என்றும் பார்ப்போம். அதோடு, நாம் எப்படி இன்னும் தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். கடைசியாக, எதிரிகள் நம்மீது வெறுப்பைக் காட்டும்போது, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்றும் பார்ப்போம்.

யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்துவது எப்படி?

4. எபிரெயர் 13:5, 6-ன்படி நாம் எதில் உறுதியாக இருக்கலாம், அப்படி உறுதியாக இருப்பது ஏன் முக்கியம்?

4 யெகோவா உங்களை நேசிக்கிறார் என்பதிலும் அவர் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதிலும் உறுதியாக இருங்கள். (எபிரெயர் 13:5, 6-ஐ வாசியுங்கள்.) “கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவர், துன்புறுத்தல் வரும்போது கடவுள்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பார்” என்று பல வருஷங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு காவற்கோபுரம் சொன்னது. இது எவ்வளவு உண்மை! துன்புறுத்தலை வெற்றிகரமாகச் சமாளிக்க வேண்டுமென்றால், நாம் யெகோவாவை நெஞ்சார நேசிக்க வேண்டும். அவர்மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அவருக்கு நம்மீது அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு ஒருபோதும் வரக் கூடாது.—மத். 22:36-38; யாக். 5:11.

5. யெகோவா உங்கள்மீது வைத்திருக்கும் அன்பைப் புரிந்துகொள்ள எது உங்களுக்கு உதவும்?

5 யெகோவாவிடம் நெருங்கிப்போக வேண்டும் என்ற குறிக்கோளோடு தினமும் பைபிளைப் படியுங்கள். (யாக். 4:8) பைபிளைப் படிக்கும்போது, யெகோவாவின் இனிமையான குணங்களைப் பற்றி நன்றாக யோசியுங்கள். அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் படிக்கும்போது, அவர் உங்கள்மேல் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். (யாத். 34:6) சிலர், தங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுடைய அன்பை ருசித்திருக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, கடவுள் தங்கள்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்புவதே ரொம்பக் கஷ்டமாக இருக்கும். நீங்களும் அப்படித்தான் உணருகிறீர்களா? அப்படியென்றால், ஒவ்வொரு நாளும் யெகோவா உங்கள்மீது எப்படியெல்லாம் கருணையையும் தயவையும் காட்டுகிறார் என்பதைப் பட்டியல் போட முயற்சி செய்யுங்கள். (சங். 78:38, 39; ரோ. 8:32) உங்கள் சொந்த அனுபவத்தை நினைக்கும்போதும், பைபிளில் படித்தவற்றை ஆழமாக யோசிக்கும்போதும், யெகோவா உங்களுக்காகச் செய்திருக்கும் ஏராளமான விஷயங்களைப் பட்டியல் போட முடியும். அவர் உங்களுக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றுக்காகவும் நீங்கள் எந்தளவு நன்றியோடு இருக்கிறீர்களோ, அந்தளவு அவரோடு இருக்கும் பந்தம் பலமாகும்.—சங். 116:1, 2.

6. சங்கீதம் 94:17-19 சொல்கிறபடி, உருக்கமாக ஜெபம் செய்வது நமக்கு எப்படி உதவும்?

6 தவறாமல் ஜெபம் செய்யுங்கள். தன்னுடைய அப்பாவின் அன்பான அரவணைப்பில் இருக்கும் ஒரு சின்னப் பையனைப் பற்றிக் கற்பனை செய்துபாருங்கள். அப்பாவின் அரவணைப்பில் அவன் ரொம்பவே பாதுகாப்பாக உணருகிறான். அதனால், தினமும் நடக்கிற விஷயங்களைப் பற்றி அப்பாவிடம் தயங்காமல் சொல்கிறான். அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி! அதேபோல், நீங்களும் யெகோவாவோடு ஒரு நெருக்கமான பந்தத்தை அனுபவிக்கலாம். அதற்கு, ஒவ்வொரு நாளும் நீங்கள் அவரிடம் உருக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். (சங்கீதம் 94:17-19-ஐ வாசியுங்கள்.) அப்படி ஜெபம் செய்யும்போது, ‘இதயத்தில் இருப்பதை தண்ணீர்போல் ஊற்றிவிடுங்கள்.’ பயத்தையும் கவலையையும் உண்டாக்குகிற எல்லா விஷயத்தைப் பற்றியும் உங்கள் அன்பான அப்பாவிடம் சொல்லுங்கள். (புல. 2:19) அப்போது, “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” உங்களுக்குக் கிடைக்கும். (பிலி. 4:6, 7) இப்படி, நீங்கள் யெகோவாவிடம் எவ்வளவு அதிகமாக ஜெபம் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவரிடம் நெருங்கிப்போவீர்கள்.—ரோ. 8:38, 39.

யெகோவாவின் மேலும் அவருடைய அரசாங்கத்தின் மேலும் நம்பிக்கை வைக்கும்போது தைரியம் பிறக்கிறது

கடவுளுடைய அரசாங்கம் நிஜமானது என்பதை நிச்சயப்படுத்திக்கொண்டதன் மூலம் ஸ்டான்லி ஜோன்ஸ் தன்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தினார் (பாரா 7)

7. தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றிக் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் ஏன் உறுதியாக இருக்க வேண்டும்?

7 கடவுளுடைய அரசாங்கம் ஆசீர்வாதங்களைப் பொழியும் என்பதில் உறுதியாக இருங்கள். (எண். 23:19) கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் நிறைவேறுமா என்ற சந்தேகம் இருந்தால், சாத்தானும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பவர்களும் உங்களைச் சுலபமாகப் பயமுறுத்திவிடலாம். (நீதி. 24:10; எபி. 2:15) அப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கத்தின் மீது இப்போதே எப்படிப் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம்? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய வாக்குறுதிகளையும் அவை நிச்சயம் நிறைவேறும் என்று நம்புவதற்கான காரணங்களையும் ஆராய்ச்சி செய்து பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். ஸ்டான்லி ஜோன்ஸ் என்ற சகோதரரின் அனுபவத்தைப் பாருங்கள். தன்னுடைய மத நம்பிக்கைகளின் காரணமாக அவர் ஏழு வருஷங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) உண்மையோடு சகித்திருக்க எது அவருக்கு உதவியது? “கடவுளோட அரசாங்கத்த பத்தி தெரிஞ்சு வைச்சிருந்ததால என்னோட விசுவாசம் ரொம்ப பலமாச்சு. அது கண்டிப்பா வரும்னு நான் நம்புனேன். இந்த விஷயத்துல எனக்கு கொஞ்சங்கூட சந்தேகம் இல்ல. அதனால, யாராலயும் என்னை யெகோவாகிட்ட இருந்து பிரிக்கவே முடியல” என்று அவர் சொல்கிறார். கடவுளுடைய வாக்குறுதிகளின் மீது உங்களுக்குப் பலமான விசுவாசம் இருந்தால், நீங்கள் யெகோவாவிடம் நெருங்கிப்போவீர்கள்; பயந்துவிட மாட்டீர்கள்; அவருக்குச் சேவை செய்வதையும் நிறுத்திவிட மாட்டீர்கள்.—நீதி. 3:25, 26.

8. கூட்டங்களை முக்கியமானதாக நினைக்கிறோமா இல்லையா என்பது எதைக் காட்டுகிறது? விளக்குங்கள்.

8 தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். யெகோவாவிடம் நெருங்கிப்போக கூட்டங்கள் உதவுகின்றன. கூட்டங்களை நாம் முக்கியமானதாக நினைக்கிறோமா இல்லையா என்பது, எதிர்காலத்தில் வரவிருக்கும் துன்புறுத்தல்களை வெற்றிகரமாகச் சமாளிப்போமா இல்லையா என்பதைக் காட்டுகிறது. (எபி. 10:24, 25) ஏன் அப்படிச் சொல்கிறோம்? சின்னச் சின்ன காரணங்களுக்காக நாம் இப்போது கூட்டங்களுக்குப் போகவில்லை என்றால், எதிர்காலத்தில் தடையுத்தரவு வரும் சமயத்தில் எப்படிப் போவோம்? கூட்டங்களைத் தவறவிடக் கூடாது என்பதில் நாம் இப்போதே உறுதியாக இருந்தால்தான், எதிரிகள் நம்மைத் தடுக்கும் சமயத்திலும் கூட்டங்களுக்குப் போவதை நிறுத்திவிட மாட்டோம். கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்வதற்கான சமயம் இதுதான்! அப்படி வளர்த்துக்கொண்டால், எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் சரி, அரசாங்கமே தடை போட்டாலும் சரி, மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிவோம்.—அப். 5:29.

வசனங்களையும் பாடல்களையும் இப்போதே மனப்பாடம் செய்வது துன்புறுத்தலைச் சந்திக்க நம்மைத் தயார்படுத்தும் (பாரா 9) *

9. வசனங்களை மனப்பாடம் செய்வது துன்புறுத்தலைச் சந்திக்க எப்படி உதவும்?

9 உங்களுக்கு மிகவும் பிடித்த வசனங்களை மனப்பாடம் செய்யுங்கள். (மத். 13:52) எல்லா வசனங்களும் நம் ஞாபகத்தில் இருக்கும் என்று சொல்ல முடியாது. இருந்தாலும், தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி நமக்குப் பிடித்த வசனங்களை யெகோவாவால் ஞாபகப்படுத்த முடியும். (யோவா. 14:26) ஒரு சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஒரு சிறையில் அவர் தள்ளப்பட்டார். பிறகு, தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். “ஏற்கெனவே நான் நூத்துக்கணக்கான வசனங்கள மனப்பாடம் செஞ்சிருந்தேன். அப்படி செஞ்சது ரொம்ப பிரயோஜனமா இருந்துச்சு. நான் தனியா இருந்தாலும், பைபிள் விஷயங்கள பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன்” என்று அவர் சொன்னார். யெகோவாவிடம் நெருங்கியிருக்கவும் உண்மையோடு சகித்திருக்கவும் அந்த வசனங்கள் அவருக்கு உதவின.

(பாரா 10) *

10. பாடல்களை மனப்பாடம் செய்வது ஏன் முக்கியம்?

10 யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் பாடல்களை மனப்பாடம் செய்யுங்கள்; அவற்றைப் பாடுங்கள். பவுலும் சீலாவும் பிலிப்பியில் இருந்த ஒரு சிறையில் தள்ளப்பட்டபோது, மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருந்த பாடல்களைப் பாடி யெகோவாவைப் புகழ்ந்தார்கள். (அப். 16:25) இவர்களைப் போலவே, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த சகோதரர்களும் செய்தார்கள். சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டபோது, எது அவர்களைப் பலப்படுத்தியது? “பாட்டு புத்தகத்துல இருந்த எந்தெந்த பாட்டு ஞாபகம் இருந்துச்சோ, அதையெல்லாம் பாடுனோம்” என்று மரியா ஃபிட்யூன் என்ற சகோதரி சொன்னார். அந்தப் பாடல்கள் அவர்கள் எல்லாரையும் உற்சாகப்படுத்தியதோடு, யெகோவாவோடு நெருங்கிப்போக உதவியதாகவும் அவர் சொன்னார். உங்களுக்குப் பிடித்த ராஜ்ய பாடல்களைப் பாடும்போது, புதுத்தெம்பு கிடைப்பதுபோல் உணருகிறீர்களா? அப்படியென்றால், பாட்டு புத்தகத்திலிருக்கும் பாடல்களையும் நம் வெப்சைட்டிலிருக்கும் பாடல்களையும் மனப்பாடம் செய்வதற்கான சமயம் இதுதான்!—“ தைரியம் தாரும்!” என்ற பெட்டியைப் பாருங்கள்.

தைரியத்தை வளர்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?

11-12. (அ) 1 சாமுவேல் 17:37, 45-47 சொல்கிறபடி, தாவீது தைரியமாக இருந்ததற்கு என்ன காரணம்? (ஆ) தாவீதிடமிருந்து என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்?

11 துன்புறுத்தலைச் சந்திக்க நமக்குத் தைரியம் தேவை! ஆனால், ‘எனக்கு அந்தளவு தைரியம் இல்ல’ என்று நினைத்தால் நீங்கள் என்ன செய்யலாம்? உண்மையான தைரியம் என்பது, தோற்றத்தையோ பலத்தையோ திறமைகளையோ பொறுத்தது கிடையாது! கோலியாத்தை எதிர்த்து சண்டைபோட்ட இளம் தாவீதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அந்த ராட்சதனோடு ஒப்பிடும்போது, தாவீது சின்னப் பையன்தான், பலசாலி அல்ல. சண்டைபோடுவதற்குத் தேவையான ஆயுதங்களும் தாவீதிடம் இல்லை. ஏன், ஒரு வாள்கூட இல்லை! இருந்தாலும், தாவீது ரொம்பவே தைரியமாக திமிர்பிடித்த அந்த ராட்சதனோடு நேருக்கு நேர் மோதினார்.

12 தாவீதால் எப்படி அவ்வளவு தைரியமாக இருக்க முடிந்தது? யெகோவா தன்னோடு இருக்கிறார் என்பதில் தாவீதுக்குத் துளிகூட சந்தேகம் இருக்கவில்லை. (1 சாமுவேல் 17:37-ஐயும், 45-47-ஐயும் வாசியுங்கள்.) தன்னைவிட கோலியாத் எவ்வளவு கம்பீரமாக இருந்தான் என்பதைப் பற்றியே தாவீது யோசித்துக்கொண்டிருக்கவில்லை. அதற்குப் பதிலாக, யெகோவாவோடு ஒப்பிடும்போது அவன் எவ்வளவு பொடியனாக இருந்தான் என்பதைத்தான் யோசித்தார். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவா நம்மோடு இருக்கிறார் என்பதிலும், சர்வவல்லமையுள்ள கடவுளோடு ஒப்பிடும்போது நம்முடைய எதிரிகள் ரொம்பவே பொடியர்கள் என்பதிலும் உறுதியாக இருந்தால் நம்மால் தைரியமாக இருக்க முடியும். (2 நா. 20:15; சங். 16:8) அப்படியென்றால், துன்புறுத்தல் வருவதற்கு முன்பே தைரியத்தை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்யலாம்?

13. தைரியத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? விளக்குங்கள்.

13 யெகோவாமேல் நம்பிக்கை வைக்கவும் மனிதர்களுக்குப் பயப்படாமல் இருக்கவும் பிரசங்க வேலை உதவுகிறது. (நீதி. 29:25) அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை மக்களுக்கு வெளிப்படையாகப் பிரசங்கிப்பதன் மூலம் நாம் இப்போதே தைரியத்தை வளர்த்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும்போது நம்முடைய தசைகள் எப்படி வலுவடைகின்றனவோ, அதேபோல் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதும் பொது இடங்களில் ஊழியம் செய்யும்போதும் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதும் வியாபாரப் பகுதிகளில் ஊழியம் செய்யும்போதும் நம்முடைய தைரியம் அதிகமாகிறது. ஊழியம் செய்வதற்கு இப்போதே தைரியத்தை வளர்த்துக்கொண்டால், நம்முடைய வேலை தடை செய்யப்படும் சமயங்களில்கூட தொடர்ந்து ஊழியம் செய்யத் தயாராக இருப்போம்.—1 தெ. 2:1, 2.

நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதை நான்ஸி யுன் நிறுத்தவே இல்லை (பாரா 14)

14-15. நான்ஸி யுன், வாலெண்டீனா கார்னோஃப்ஸ்காயா என்ற சகோதரிகளிடமிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

14 அசாதாரணமான தைரியத்தைக் காட்டிய உண்மையுள்ள சகோதரிகள் இரண்டு பேரிடமிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். முதலில், நான்ஸி யுன் என்ற சகோதரியைப் பற்றிப் பார்க்கலாம். அவருடைய உயரம் வெறும் ஐந்து அடிதான்! இருந்தாலும், அவர் யாருக்கும் அடிபணிந்துவிடவில்லை. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதை அவர் நிறுத்தவே இல்லை. அதனால், சீனாவில் இருந்த ஒரு சிறையில் அவர் தள்ளப்பட்டார். 20 வருஷங்கள் சிறைவாசம் அனுபவித்தார்! அவரை விசாரணை செய்த அதிகாரிகள், “இவர்தான் இந்த நாட்டுலயே பிடிவாதமான ஆள்” என்று சொன்னார்கள்.

யெகோவா தன்னோடு இருக்கிறார் என்பதில் வாலெண்டீனா கார்னோஃப்ஸ்காயா உறுதியாக இருந்தார் (பாரா 15)

15 அடுத்து, வாலெண்டீனா கார்னோஃப்ஸ்காயா என்ற சகோதரியைப் பற்றிப் பார்ப்போம். முன்னாள் சோவியத் யூனியனில் மூன்று தடவை அவர் சிறையில் தள்ளப்பட்டார். ஒட்டுமொத்தமாக 21 வருஷங்கள் சிறையில் இருந்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால்தான் அவர் சிறையில் தள்ளப்பட்டார். “படுபயங்கரமான குற்றவாளி” என்று அதிகாரிகள் அவர்மீது முத்திரை குத்தினார்கள். இந்த உண்மையுள்ள இரண்டு சகோதரிகளும் எப்படி அவ்வளவு தைரியத்தைக் காட்டினார்கள்? யெகோவா தங்களோடு இருக்கிறார் என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்!

16. உண்மையான தைரியத்தைக் காட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?

16 இதுவரை பார்த்ததுபோல், தைரியத்தை வளர்த்துக்கொள்ள, நம்முடைய சொந்த பலத்தையும் திறமைகளையும் நம்பியிருக்கக் கூடாது. யெகோவா நம்மோடு இருக்கிறார் என்றும், அவர்தான் நமக்காகப் போர் செய்கிறார் என்றும் நம்ப வேண்டும். (உபா. 1:29, 30; சக. 4:6) இதுதான் உண்மையான தைரியத்தின் அஸ்திவாரம்!

மற்றவர்களுடைய வெறுப்பைச் சமாளிப்பது எப்படி?

17-18. யோவான் 15:18-21-ல் இயேசு என்ன எச்சரிப்பைக் கொடுத்தார்? விளக்குங்கள்.

17 மற்றவர்களுடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதிப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. ஆனால், அவர்கள் நம்மை மதிக்கவில்லை என்றால், நாம் எதற்குமே லாயக்கில்லாதவர்கள் என்று நினைத்துவிடக் கூடாது. “நீங்கள் மனிதகுமாரனின் சீஷர்கள் என்பதால் மக்கள் உங்களை வெறுக்கும்போதும், உங்களை விலக்கி வைக்கும்போதும், கேவலமாகப் பேசும்போதும், பொல்லாதவர்கள் என்று சொல்லி உங்கள் பெயரைக் கெடுக்கும்போதும் சந்தோஷப்படுங்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 6:22) இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?

18 மற்றவர்களுடைய வெறுப்புக்கு ஆளாவது கிறிஸ்தவர்களுக்குச் சந்தோஷத்தைத் தரும் என்று இயேசு சொல்லவில்லை. நமக்கு என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பற்றித்தான் அவர் எச்சரித்தார். நாம் இந்த உலகத்தின் பாகமாக இல்லாமல் இயேசுவின் போதனைகளின்படி வாழ்கிறோம். அவர் பிரசங்கித்த செய்தியைப் பிரசங்கிக்கிறோம். அதனால், இந்த உலகம் நம்மை வெறுக்கிறது. (யோவான் 15:18-21-ஐ வாசியுங்கள்.) நாம் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த விரும்புகிறோம். நம் தந்தையின் மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதற்காக மற்றவர்கள் நம்மை வெறுத்தால், அது அவர்களுடைய பிரச்சினை! அதற்காக நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

19. அப்போஸ்தலர்களைப் போலவே நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?

19 மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி, என்ன செய்தாலும் சரி, யெகோவாவின் சாட்சியாக இருப்பதை நினைத்து வெட்கப்படாதீர்கள். (மீ. 4:5) மனிதர்களைப் பார்த்துப் பயப்படாமல் இருப்பது எப்படி என்று எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். இயேசு இறந்த பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்று யோசித்துப்பாருங்கள். யூத மதத் தலைவர்கள் தங்களை எந்தளவு வெறுத்தார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (அப். 5:17, 18, 27, 28) இருந்தாலும், ஒவ்வொரு நாளும் ஆலயத்துக்குப் போய்ப் பிரசங்கித்தார்கள். இப்படி, தாங்கள் இயேசுவின் சீஷர்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டினார்கள். (அப். 5:42) பயத்தில் அவர்கள் முடங்கிவிடவில்லை. நாமும் எப்படி மனிதர்களைப் பார்த்துப் பயப்படாமல் இருக்கலாம்? வேலை செய்யும் இடத்திலும் பள்ளியிலும் அக்கம்பக்கத்திலும் நாம் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை வெளிப்படையாகச் சொல்வதன் மூலம் மனித பயத்தைத் தவிர்க்கலாம்.—அப். 4:29; ரோ. 1:16.

20. மற்றவர்கள் வெறுத்தபோதும் அப்போஸ்தலர்களால் எப்படிச் சந்தோஷமாக இருக்க முடிந்தது?

20 தாங்கள் வெறுக்கப்படுவதற்கான காரணத்தை அப்போஸ்தலர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். அதோடு, யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதற்காகத் துன்பங்களை அனுபவிப்பதைக் கௌரவமாக நினைத்தார்கள். அதனால்தான், அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். (லூக். 6:23; அப். 5:41) “நீதிக்காக நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும், சந்தோஷமாக இருப்பீர்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு பிற்பாடு எழுதினார். (1 பே. 2:19-21; 3:14) நல்லது செய்வதால்தான் நாம் வெறுக்கப்படுகிறோம் என்பதைப் புரிந்துகொண்டால், மற்றவர்கள் வெறுக்கும்போது நாம் பயத்தில் முடங்கிவிட மாட்டோம்.

இப்போதே தயாரானால் நன்மை அடைவீர்கள்

21-22. (அ) துன்புறுத்தலைச் சந்திக்கத் தயாராவதற்கு என்ன செய்யலாம் என்று முடிவு எடுத்திருக்கிறீர்கள்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

21 துன்புறுத்தல் எப்போது வரும் அல்லது நம்முடைய வேலை எப்போது தடை செய்யப்படும் என்றெல்லாம் நமக்குத் தெரியாது. இருந்தாலும், அதைச் சந்திக்க இப்போதே நம்மால் தயாராக இருக்க முடியும். எப்படி? யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்துவதன் மூலமும், தைரியத்தை வளர்த்துக்கொள்வதன் மூலமும், மனிதர்களின் வெறுப்பைச் சமாளிக்க பழகிக்கொள்வதன் மூலமும் நாம் இப்போதே தயாராகலாம். இதையெல்லாம் இப்போதே செய்யும்போது, எதிர்காலத்தில் நம்மால் உறுதியாக நிலைத்திருக்க முடியும்.

22 ஒருவேளை நம்முடைய வணக்கம் தடை செய்யப்பட்டால் என்ன செய்வது? அந்தச் சூழ்நிலையிலும் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு உதவுகிற பைபிள் நியமங்களைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 81 ‘அதிகரியும் எம் விசுவாசமே!’

^ பாரா. 5 பொதுவாக, யாருடைய வெறுப்பையும் சம்பாதிக்க நாம் விரும்ப மாட்டோம். ஆனால் சீக்கிரத்தில், நாம் எல்லாருமே துன்புறுத்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதைத் தைரியமாகச் சந்திக்க இந்தக் கட்டுரை நமக்கு உதவும்.

^ பாரா. 7 டிசம்பர் 15, 1965 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 756-767-ஐப் பாருங்கள்.

^ பாரா. 14 ஜூலை 15, 1979-ல் வெளிவந்த ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 4-7-ஐப் பாருங்கள். JW பிராட்காஸ்டிங்கில் இருக்கிற எல்லாரும் யெகோவாவின் பெயரை தெரிந்துகொள்வார்கள் என்ற வீடியோவையும் பாருங்கள். பேட்டிகளும் அனுபவங்களும் என்ற பகுதியில் இதைப் பார்க்கலாம்.

^ பாரா. 67 படங்களின் விளக்கம்: ஓர் அப்பா அம்மா, தங்களுடைய குடும்ப வழிபாட்டில், வசனங்கள் எழுதப்பட்ட அட்டைகளைப் பயன்படுத்தி, வசனங்களை மனப்பாடம் செய்ய பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள்.

^ பாரா. 70 படங்களின் விளக்கம்: காரில் கூட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, ஒரு குடும்பத்தார் ராஜ்ய பாடல்களைப் பாடிப் பழகுகிறார்கள்.