Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எலக்ட்ரானிக் சாதனங்களால் கற்றுக்கொள்ளும் திறன் பாதிக்குமா?

எலக்ட்ரானிக் சாதனங்களால் கற்றுக்கொள்ளும் திறன் பாதிக்குமா?

நாம் எல்லாருமே நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, பள்ளிப் பாடங்களைப் புரிந்துகொள்வதற்காக, வேலைக்காக, மற்ற சில காரணங்களுக்காக நாம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம், இருந்த இடத்திலிருந்தே நிறைய தகவல்களை நம்மால் கற்றுக்கொள்ள முடிகிறது. இதற்கு எலக்ட்ரானிக் சாதனங்கள் கைகொடுக்கின்றன!

ஆனால், எலக்ட்ரானிக் சாதனங்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது...

  • கவனம் செலுத்தி படிப்பது கஷ்டமாகிவிடலாம்.

  • ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது கஷ்டமாகிவிடலாம்.

  • கொஞ்ச நேரம் தனியாக இருப்பதுகூட ‘போர்’ அடித்துவிடலாம்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

படிப்பது

எலக்ட்ரானிக் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு, ஒரு கட்டுரையை முழுமையாகப் படிப்பதற்குக்கூட பொறுமை இருப்பதில்லை. அவர்கள் மேலோட்டமாக மட்டுமே படிக்கிறார்கள்.

மேலோட்டமாகப் படிப்பது ஒரு கேள்விக்குச் சட்டென்று பதில் கண்டுபிடிக்க வேண்டுமானால் உதவும். ஆனால், தகவலை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவாது.

யோசித்துப்பாருங்கள்: ஒரு கட்டுரையை உங்களால் முழுமையாகப் படிக்க முடிகிறதா? அப்படிப் படிப்பதால் என்ன நன்மை? —நீதிமொழிகள் 18:15.

கவனம் செலுத்துவது

எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தினால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளைச் செய்ய முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். உதாரணத்துக்கு, நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே படிக்கிறார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் கவனம் சிதறி எதையுமே சரியாகச் செய்ய முடியாமல் போய்விடலாம்.

ஒரு வேலையில் கவனம் செலுத்துவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தாலும், அப்படிச் செய்வதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி வீண்போகாது. “ஒரே நேரத்துல ரெண்டு, மூணு வேலைகள செய்யாம ஒரு வேலையில மட்டும் கவனம் செலுத்துறது நல்லதுனு புரிஞ்சுகிட்டேன். அப்படி செஞ்சா அவ்வளவா தப்பும் வராது, டென்ஷனும் இருக்காது” என்று 14 வயது கிரேஸ் சொல்கிறாள்.

யோசித்துப்பாருங்கள்: கவனம் செலுத்துவதற்கும், படித்ததை ஞாபகம் வைப்பதற்கும் எலக்ட்ரானிக் சாதனங்கள் உங்களுக்குத் தடையாக இருக்கிறதா?—நீதிமொழிகள் 17:24.

தனிமையில் இருப்பது

சிலருக்குத் தனியாக நேரத்தைப் போக்குவது கஷ்டமாக இருக்கிறது. அதனால், பொழுதைப் போக்க எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள். “ஃபோன், டேப் (Tablet), டிவி இதெல்லாம் பாக்காம 15 நிமிஷம்கூட என்னால சும்மா இருக்க முடியாது” என்று ஒலிவியா சொல்கிறாள்.

ஆனால், தனியாக இருக்கும்போது ஒரு விஷயத்தை ஆழமாக யோசிக்க முடியும். அதனால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். இது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் பொருந்தும்.

யோசித்துப்பாருங்கள்: சில விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்க்க நீங்கள் தனியாக இருக்கிற நேரத்தைப் பயன்படுத்துகிறீர்களா? —1 தீமோத்தேயு 4:15.

நீங்கள் செய்ய வேண்டியவை

எலக்ட்ரானிக் சாதனங்களை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள்

ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதற்கு எலக்ட்ரானிக் சாதனங்களை எப்படிப் பயன்படுத்தலாம்? அதேசமயம், கவனம் செலுத்துவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் அவை எப்படித் தடையாகிவிடலாம்?

பைபிள் ஆலோசனை: “ஞானத்தையும் யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள்.”—நீதிமொழிகள் 3:21.