Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எலக்ட்ரானிக் சாதனங்களால் பிள்ளைகளுக்கு ஆபத்தா?

எலக்ட்ரானிக் சாதனங்களால் பிள்ளைகளுக்கு ஆபத்தா?

எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவது பிள்ளைகளுக்குக் கைவந்த கலை! ஆனால், பெரியவர்கள் இந்த விஷயத்தில் கத்துக்குட்டிகளாகத்தான் இருக்கிறார்கள்.

ஆன்லைனில் அதிக நேரம் செலவு செய்கிற பிள்ளைகளுக்குப் பின்வரும் ஆபத்துகள் வர வாய்ப்பு இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்:

  • எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு அடிமையாவது.

  • ஆன்லைனில் வம்பு இழுப்பது அல்லது வம்புக்கு இழுக்கப்படுவது.

  • தெரிந்தோ தெரியாமலோ ஆபாசப் படங்களைப் பார்ப்பது.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

அடிமையாவது

வீடியோ கேம்ஸ் மாதிரி ஆன்லைனில் இருக்கிற சில விஷயங்கள் நம்மைச் சுலபமாக அடிமைப்படுத்திவிடும். “நாம் எப்போதுமே ஃபோனும் கையுமாக இருக்கிற மாதிரிதான் ஃபோனில் இருக்கிற ஆப்-களை (Apps) தயாரித்திருக்கிறார்கள்” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. விளம்பரங்கள் வருகிற ஆப்-களை எந்தளவுக்குப் பார்க்கிறீர்களோ அந்தளவுக்கு விளம்பரதாரர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.

யோசித்துப்பாருங்கள்: உங்கள் பிள்ளைகள் எலக்ட்ரானிக் சாதனங்களே கதி என்று இருக்கிறார்களா? நேரத்தை வீணடிக்காமல் அதை நல்ல விதத்தில் பயன்படுத்த அவர்களுக்கு நீங்கள் எப்படிச் சொல்லித்தரலாம்?—எபேசியர் 5:15, 16.

ஆன்லைனில் வம்பு இழுப்பது

ஆன்லைனில் இருக்கும்போது, சிலர் மற்றவர்களை வம்பு இழுப்பதற்கு அடாவடித்தனமாக, கீழ்த்தரமாக, மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள்.

சோஷியல் மீடியாவில், தங்களுக்கு நிறைய ‘லைக்ஸ்’ கிடைக்க வேண்டும் என்று சிலர் ரொம்ப ஆசைப்படுவார்கள். அவர்கள் ஆசைப்படுவது நடக்கவில்லை என்றால், தங்களை வேண்டுமென்றே ஒதுக்குவதாக நினைத்துக்கொள்வார்கள். உதாரணத்துக்கு, யாராவது பார்ட்டிக்கு அழைக்கவில்லை என்று தெரிந்துகொள்ளும்போது தங்களை வம்பு இழுப்பதாக நினைத்துகொள்வார்கள்.

யோசித்துப்பாருங்கள்: ஆன்லைனில் உங்கள் பிள்ளைகள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள்? (எபேசியர் 4:31) மற்றவர்கள் அவர்களை ஒதுக்கும்போது அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?

ஆபாசம்

இன்டர்நெட்டில் ஆபாசமான விஷயங்களுக்கு பஞ்சமே இல்லை. அவற்றைப் பிள்ளைகள் பார்க்காமல் இருப்பதற்கு, பெற்றோர்கள் ஃபோனில் சில செட்டிங்கை மாற்றி வைக்க முடியும். ஆனால், இது எல்லா சமயங்களிலும் ஒத்து வருவதில்லை.

தங்களையே ஆபாசமாகக் காட்டும் ஃபோட்டோக்களை இன்னொருவருக்கு அனுப்பவதும் பெறுவதும் சட்டப்படி குற்றம். இதைத்தான் செக்ஸ்டிங் என்று சொல்கிறார்கள். இதில் ஈடுபடும் ஆட்களுடைய வயதையும் அந்த நாட்டு சட்டங்களையும் பொறுத்து, அவர்கள்மீது சில சமயங்களில் குழந்தை வன்கொடுமை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

யோசித்துப்பாருங்கள்: ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கான அல்லது அதை மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான கெட்ட ஆசையைத் தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்? —எபேசியர் 5:3, 4.

நீங்கள் செய்ய வேண்டியவை

பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்

எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதில் பிள்ளைகள் படு கில்லாடிகள்! ஆனால், சரியான விதத்தில் பயன்படுத்த அவர்களுக்குச் சொல்லித்தர வேண்டும். அப்படிச் செய்யாமல் அவர்களிடம் ஃபோனைக் கொடுப்பது, “நீச்சல் தெரியாத பிள்ளையைத் தண்ணீரில் தள்ளிவிடுவதுபோல் இருக்கும்” என்று ஒரு புத்தகம் சொல்கிறது.

பைபிள் ஆலோசனை: “சரியான வழியில் நடக்க  பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.” —நீதிமொழிகள் 22:6, அடிக்குறிப்பு.

கீழே உள்ள ஆலோசனைகளில் எதைச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை டிக் செய்யுங்கள். அல்லது, உங்கள் குறிப்புகளைக் கீழே எழுதுங்கள்.

  • ஆன்லைனில் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்று என் பிள்ளைக்குச் சொல்லித்தர வேண்டும்

  • மற்றவர்கள் ஒதுக்கும்போது அதை நினைத்து கவலைப்படாமல் இருக்க சொல்லித்தர வேண்டும்

  • ஆன்லைனில் வருகிற மோசமான விஷயங்களை என் பிள்ளை பார்க்காதபடி முடிந்தளவுக்கு அதை பிளாக் (Block) செய்ய வேண்டும்

  • ஃபோனில் என் பிள்ளை எதைப் பார்க்கிறான் என்று தெரிந்துகொள்ள அதை அடிக்கடி எடுத்துப் பார்க்க வேண்டும்

  • ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம்தான் ஃபோனைப் பயன்படுத்த வேண்டுமென்று கட்டுப்பாடு வைக்க வேண்டும்

  • ராத்திரியில் பிள்ளைகள் தனியாகப் படுத்திருக்கும்போது ஃபோனைக் கொடுக்கக் கூடாது

  • சாப்பிடும்போது ஃபோனைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது