Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

வீட்டில் வேலை செய்ய பிள்ளைகளைப் பழக்குங்கள்

வீட்டில் வேலை செய்ய பிள்ளைகளைப் பழக்குங்கள்

சவால்

பிள்ளைகள் முணுமுணுக்காமல் வீட்டுவேலைகளைச் செய்ய வேண்டும் என்று சில பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், வேறு சில பெற்றோர்கள் அப்படி எதிர்பார்ப்பதே கிடையாது. அதனால், பிள்ளைகளும் எந்த வேலையும் செய்யாமல் ஜாலியாக இருக்கிறார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனியுங்கள். சில நாடுகளில் இருக்கும் பிள்ளைகள், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்று நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள்தான் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஸ்டீவன் என்ற அப்பா இப்படிச் சொல்கிறார்: “பிள்ளைங்க இன்டர்நெட், டிவி, வீடியோ கேம்ஸ்னு அதே கதியா இருக்காங்க. அப்பா-அம்மாவும் அவங்கள கண்டுக்குறது இல்ல. அவங்கள எந்த வேலையும் செய்ய சொல்றதில்ல.”

பிள்ளைகளை வீட்டுவேலை செய்ய சொல்வது முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக மட்டுமல்ல, அவர்களுடைய முன்னேற்றத்துக்கும் இது ரொம்ப முக்கியம். எப்படியென்று பார்க்கலாம்.

சில உண்மைகள்

விளையாட்டு, ஹோம் வொர்க், பயிற்சி என்று வாரம் முழுக்க ஏதாவது ஒன்று இருந்துகொண்டே இருப்பதால் சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வேலை கொடுக்க தயங்குகிறார்கள். இருந்தாலும், பிள்ளைகள் வீட்டில் வேலை செய்வதால் அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு உதவும். வீட்டில் வேலை செய்யும் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகமாகும். அதோடு, அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்ய கற்றுக்கொள்வார்கள். அதனால், பள்ளியில் நல்ல பெயர் எடுப்பார்கள், படிப்பிலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்ய கற்றுக்கொள்வார்கள். வீட்டில் அப்பா-அம்மாவுக்கு உதவி செய்கிற பிள்ளைகள், வளர்ந்து பெரியவர்களான பிறகு சமூக சேவை செய்ய முன்வருவதாக தெரிகிறது. இதற்கு காரணம், வீட்டுவேலைகளைச் செய்யும்போதே தங்களுடைய விருப்பங்களைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பிள்ளைகள் பழகிக்கொள்கிறார்கள். ஆனால் “அப்பா-அம்மா பிள்ளைங்ககிட்ட எந்த வேலையும் வாங்கலனா, மத்தவங்கதான் அவங்களுக்கு பணிவிடை செய்யணுங்குற எண்ணம் பிள்ளைங்களுக்கு வந்திடும். அவங்க பொறுப்புள்ள நபர்களாவும் ஆக மாட்டாங்க. அதோட, கடினமா உழைக்கணுங்குற எண்ணமும் அவங்களுக்கு வராது” என்று ஸ்டீவன் சொல்கிறார்.

குடும்பத்தோடு ஒற்றுமையாக இருக்க கற்றுக்கொள்வார்கள். வீட்டுவேலைகளைச் செய்யும்போது, குடும்பத்தில் தாங்களும் ஒருவர் என்பதை மட்டுமல்ல தங்களுக்கும் குடும்பத்தில் பொறுப்பு இருக்கிறது என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள். ஆனால், பிள்ளைகளின் படிப்புக்கும் மற்ற பயிற்சிகளுக்குமே பெற்றோர் முக்கியத்துவம் கொடுத்தால் இந்த எண்ணம் அவர்களுக்கு வராது. அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “படிப்பிலயும் விளையாட்டுலயும் மட்டும் என் பிள்ளை கெட்டிக்காரனா இருந்துட்டு குடும்பத்தோட எந்த ஒட்டும் உறவும் இல்லாம இருந்தா என்ன பிரயோஜனம்?”

நீங்கள் என்ன செய்யலாம்

சின்ன வயதிலேயே ஆரம்பியுங்கள். 3 வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு சின்ன சின்ன வேலைகளைக் கொடுக்கலாம் என்று சில பெற்றோர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர், ஒன்றிரண்டு வயதிலேயே பிள்ளைகளுக்கு சில வேலைகளைக் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்றால், சின்ன பிள்ளைகளுக்கு அப்பா-அம்மாவோடு சேர்ந்து வேலை செய்வது... அதுவும் அவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்வது... ரொம்ப பிடிக்கும்.—பைபிள் அறிவுரை: நீதிமொழிகள் 22:6.

வயதிற்கு ஏற்ற வேலைகளைக் கொடுங்கள். உதாரணத்துக்கு, 3 வயது பிள்ளைகளிடம் விளையாட்டு சாமான்களை எடுத்து வைக்க சொல்வது, ஏதாவது சிந்தியிருந்தால் துடைக்க சொல்வது, துவைக்க வேண்டிய துணிகளை நிறத்திற்கு ஏற்றபடி பிரித்து வைக்க சொல்வது போன்ற வேலைகளைச் சொல்லலாம். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளிடம் வீட்டைச் சுத்தம் செய்ய சொல்லலாம், காரைக் கழுவச் சொல்லலாம், அல்லது எளிய உணவைத் தயாரிக்க சொல்லலாம். அவர்களால் செய்ய முடிந்த வேலைகளைக் கொடுங்கள். நாட்கள் போக போக, அவர்கள் எந்தளவுக்கு உற்சாகமாக வேலைகளைச் செய்கிறார்கள் என்பதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

பிள்ளைகள் வீட்டுவேலைகளைச் செய்வது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு ஹோம் வொர்க் மலைபோல் குவிந்திருந்தால் வீட்டுவேலை செய்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக வேலையே கொடுக்காமல் இருந்தால் நீங்கள் “முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்” என்று தி பிரைஸ் ஆஃப் ப்ரிவிலேஜ் புத்தகம் சொல்கிறது. நாம் ஏற்கனவே பார்த்தது போல், வீட்டுவேலைகளைச் செய்யும் பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அதோடு, அவர்களுக்கென்று ஒரு குடும்பம் வரும்போது அதை நல்லபடியாக கவனித்துக்கொள்வார்கள்.—பைபிள் அறிவுரை: பிலிப்பியர் 1:10.

குறிக்கோளை மனதில் வையுங்கள். ஒரு வேலையைச் செய்து முடிக்க நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக நேரத்தை உங்கள் பிள்ளை எடுத்துக்கொள்ளலாம். அதை நன்றாக செய்யாமல்கூட போயிருக்கலாம். இருந்தாலும் நீங்கள் தலையிடாதீர்கள். பெரியவர்களைப் போல் ஒரு வேலையை அவர்கள் சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால், அது உங்கள் குறிக்கோள் கிடையாது. பிள்ளைகளைப் பொறுப்புள்ளவர்களாக ஆக்குவதும், வேலை செய்வதில் கிடைக்கும் சந்தோஷத்தைப் புரிய வைப்பதும்தான் உங்கள் குறிக்கோள்.—பைபிள் அறிவுரை: பிரசங்கி 3:22.

வீட்டில் வேலை செய்வதற்காக பணம் கொடுக்காதீர்கள். வீட்டில் வேலை செய்வதற்காக பிள்ளைகளுக்குப் பணம் கொடுத்தால் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக ஆவார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால், பணமோ பரிசோ கிடைக்கும் என்பதற்காக வேலை செய்வார்களே தவிர, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள் என்பது வேறு சிலரின் கருத்து. அதுமட்டுமல்ல, தேவையான அளவுக்கு பணம் கிடைத்துவிட்டால் வீட்டில் வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள். கடைசியில், அவர்களை வேலை செய்யும்படி சொல்வதற்கான நோக்கமே நிறைவேறாமல் போய்விடும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். அதனால், வீட்டில் வேலை செய்வதற்கெல்லாம் பிள்ளைகளுக்குப் பணம் கொடுக்காதீர்கள்.