சந்தோஷப் பாதையில் செல்ல...
உடல் ஆரோக்கியமும் மன உறுதியும்
தீராத வியாதி அல்லது உடல் குறைபாடு ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடலாம். ஒரு காலத்தில் துடிப்போடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருந்த யுல்ஃப், பக்கவாதத்தால் படுத்த படுக்கையானார்; அந்தச் சமயத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகளைப் பற்றிச் சொல்லும்போது, “ரொம்பவே உடைஞ்சுபோயிட்டேன். என் பலம், தைரியம், சக்தியெல்லாம் சுத்தமா போயிடுச்சு . . . அப்படியே நிலைகுலைஞ்சு போயிட்டேன்” என்கிறார் அவர்.
நம்முடைய ஆரோக்கியம் முழுக்கமுழுக்க நம் கையில் இல்லை என்பதை யுல்ஃபின் அனுபவம் காட்டுகிறது. ஆனாலும், உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க நியாயமான படிகளை நம்மால் எடுக்க முடியும். ஒருவேளை, நம் ஆரோக்கியம் மோசமாகிவந்தால்? சோகமே கதியென்று கிடக்க வேண்டியதுதானா? இல்லை! ஏன் அப்படிச் சொல்கிறோம்? இதற்கான பதிலைப் பார்ப்பதற்குமுன், உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிற சில நெறிமுறைகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.
‘பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதீர்கள்.’ (1 தீமோத்தேயு 3:2, 11) சாப்பிடுவதில், குடிப்பதில் அளவுக்குமீறி போவது நிச்சயம் நம் உடலுக்குக் கேடுதான்—நம் பர்சுக்கும்தான்! “அளவுக்கு அதிகமாகத் திராட்சமது குடிக்கிறவர்களோடும், அளவுக்கு அதிகமாக இறைச்சி சாப்பிடுகிறவர்களோடும் சேர்ந்துகொள்ளாதே. ஏனென்றால், குடிகாரர்களும் பெருந்தீனிக்காரர்களும் ஏழைகளாவார்கள்.”—நீதிமொழிகள் 23:20, 21.
உங்கள் உடலைக் கெடுக்காதீர்கள். “உடலிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் எல்லா கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.” (2 கொரிந்தியர் 7:1) புகையிலை மெல்லுவது, புகைபிடிப்பது, மதுபானம் அல்லது போதைமருந்து எடுத்துக்கொள்வது உடலைக் கறைபடுத்துகிறது. உதாரணத்துக்கு, புகைபிடிப்பது “நோய்களுக்கும் உடல் குறைபாடுகளுக்கும் காரணமாகிவிடுகிறது, உடலிலுள்ள கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளையும் நாசமாக்கிவிடுகிறது” என அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் சொல்கின்றன.
உங்கள் உடலையும் உயிரையும் மதிப்புமிக்க பரிசுகளாகக் கருதுங்கள். “[கடவுளால்தான்] நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (அப்போஸ்தலர் 17:28) இதை நன்றாகப் புரிந்துகொண்டோம் என்றால், வேலை செய்யும்போது, வண்டி ஓட்டும்போது, பொழுதுபோக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது தேவையில்லாமல் ‘ரிஸ்க்’ எடுக்க மாட்டோம். ஒருநிமிஷ ‘த்ரில்லுக்காக’ உடல் ஆரோக்கியத்தைப் பணயம் வைப்பது அடிமுட்டாள்தனம்!
வேண்டாத உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால், வீண் கவலையையும், கட்டுக்கடங்காத கோபத்தையும், பொறாமையையும், தீங்கு விளைவிக்கிற மற்ற எல்லா உணர்ச்சிகளையும் தவிர்த்திடுங்கள். “கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிடு” என்று சங்கீதம் 37:8 சொல்கிறது. இன்னொரு வசனம் இப்படிச் சொல்கிறது: “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்; நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்.”—மத்தேயு 6:34.
நல்ல விஷயங்கள்மீதே கவனம் செலுத்துங்கள். “அமைதியான உள்ளம் உடலுக்கு ஆரோக்கியம்” என்று நீதிமொழிகள் 14:30 சொல்கிறது. “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:22) அறிவியல்பூர்வமாக இதுவொரு நல்ல ஆலோசனை. “சந்தோஷமா இருந்தீங்கன்னா, அவ்வளவா வியாதியே வராது” என்கிறார் ஸ்காட்லாந்திலுள்ள ஒரு டாக்டர்.
மன உறுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட யுல்ஃபை போல, தீராத சோதனையை எதிர்ப்படும்போது சகித்திருப்பதைத் தவிர சிலசமயம் நமக்கு வேறு வழியே இருக்காது. ஆனாலும், அந்தச் சோதனையைச் சகிப்பதற்கான வழிகளை நம்மால் கண்டுபிடிக்க முடியும். சிலர் சோதனைகளோடு போராட முடியாமல் மனம் சோர்ந்துபோய்விடுகிறார்கள். இது பிரச்சினையை மோசமாகத்தான் ஆக்கும். “இக்கட்டில் தவிக்கிற நாளில் நீ சோர்ந்துபோனால், உன் பலம் குறைந்துவிடும்” என்று நீதிமொழிகள் 24:10 சொல்கிறது.
வேறு சிலரோ, ஆரம்பத்தில் துவண்டுபோய்க் கிடந்தாலும், சீக்கிரத்திலேயே துள்ளியெழுந்துவிடுகிறார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். சமாளிப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். யுல்ஃபும் அதைத்தான் செய்தார். நிறைய ஜெபம் செய்தார், பைபிளின் அருமையான செய்தியைப் பற்றி ஆழ்ந்து யோசித்தார். அதன்பிறகுதான் “தடைக்கற்களைப் படிக்கற்களாய்ப் பார்க்க ஆரம்பித்ததாக” அவர் சொல்கிறார். அதோடு, வாழ்க்கையில் பெரிய பெரிய சோதனைகளை எதிர்ப்பட்ட நிறைய பேரைப் போல, கரிசனை மற்றும் அனுதாபம் காட்டுவதில் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டார்; இதன் விளைவாக, பைபிளிலுள்ள ஆறுதலான செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார்.
பயங்கரமான கஷ்டங்களை அனுபவித்த மற்றொரு நபர், ஸ்டீவ். 15 வயதில் இவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது, இதனால் கழுத்துக்குக் கீழே உடல் முழுவதும் செயலிழந்துபோனது. ஆனால், 18 வயதை எட்டிய சமயத்தில், தன் கைகளை மட்டும் அவரால் மறுபடியும் பயன்படுத்த முடிந்தது. அதன்பிறகு ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், அங்கே கொஞ்ச நாட்களிலேயே போதைமருந்துகளையும் மதுபானங்களையும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். பாலியல் முறைகேட்டிலும் ஈடுபட ஆரம்பித்தார். வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் இருந்தார். ஆனால், பைபிள் படிப்பை ஆரம்பித்த பிறகு வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தார், கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டார். “இவ்ளோ காலமா எனக்குள்ள இருந்த வெறுமை இப்ப சுத்தமா இல்ல. என் மனசெல்லாம் இப்ப நிறைஞ்சிருக்கு, நிம்மதியா, சந்தோஷமா, திருப்தியா இருக்கு” என்கிறார் ஸ்டீவ்.
ஸ்டீவ் மற்றும் யுல்ஃபின் வார்த்தைகள் சங்கீதம் 19:7, 8-ல் உள்ள வார்த்தைகளை நினைப்பூட்டுகின்றன: “யெகோவாவின் சட்டம் குறையே இல்லாதது, அது தெம்பூட்டுகிறது. . . . யெகோவாவின் ஆணைகள் நீதியானவை, அவை இதயத்துக்குச் சந்தோஷத்தைத் தருகின்றன. யெகோவாவின் கட்டளைகள் தூய்மையானவை, அவை கண்களைப் பிரகாசிக்க வைக்கின்றன.”