Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரச்சினையை மேலோட்டமாகத் தீர்த்தால் போதாது; காரணத்தைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும்

சவால்

ஆணிவேரை அழிப்பது

ஆணிவேரை அழிப்பது

இன்று உலகத்தில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால் சமாதானமும் பாதுகாப்பும் இல்லாமல் போய்விட்டது, மனிதர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. இந்தப் பிரச்சினைகளை மனிதர்களால் தீர்க்க முடியும் என்று நினைக்கிறீர்களா? இந்தப் பிரச்சினைகளை மேலோட்டமாகத் தீர்த்தால் போதாது, அதன் ஆணிவேரைக் கண்டுபிடித்து, அதை அடியோடு அழிக்க வேண்டும்.

இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். டாம் என்பவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது, கடைசியில் அவர் இறந்தே போய்விட்டார். அவருடைய உடல்நிலை ஏன் இந்தளவுக்கு மோசமானது? அவர் இறப்பதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு வேலை செய்யும் ஒரு டாக்டர் இப்படிச் சொன்னார்: “அவருக்கு ஆரம்பத்தில் உடம்பு சரியில்லாமல் போனபோது, அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க யாரும் முயற்சி செய்யவில்லை.” முன்பு டாமுக்குச் சிகிச்சை கொடுத்த டாக்டர்கள், வலி குறைவதற்கு மட்டுமே அவருக்கு மாத்திரைகளைக் கொடுத்திருந்தார்களாம்.

இன்று உலகத்திலுள்ள பிரச்சினைகளையும் மனிதர்கள் இப்படித்தான் மேலோட்டமாகத் தீர்க்கிறார்கள். உதாரணத்துக்கு, குற்றங்களைத் தடுப்பதற்குச் சட்டங்களைப் போடுகிறார்கள், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துகிறார்கள், போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் பிரச்சினையை ஓரளவு தீர்க்கின்றன, ஆனால் அடியோடு நீக்குவதில்லை. ஏனென்றால், குற்றச்செயல்களுக்கு ஆணிவேராக இருக்கும் கெட்ட யோசனைகளையும் ஆசைகளையும் இவை அழிப்பதில்லை!

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் ஒரு தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டேனியல் சொல்கிறார்... “ஒரு காலத்துல, கொள்ளைக்காரங்கள பத்தின பயமே இல்லாம நிம்மதியா இருந்தோம். ஆனா இப்போ, சின்ன சின்ன கிராமத்துலகூட ஜனங்க பயந்துட்டேதான் வாழ வேண்டியிருக்கு. பணப் பிரச்சினை அதிகம் ஆகஆக மக்களோட சுயரூபம் நல்லா தெரியுது. எல்லாரும் பேராசைபிடிச்சவங்களா இருக்காங்க, மத்தவங்களோட உயிருக்கும் சொத்துக்கும் அவங்க மதிப்பு கொடுக்குறதே இல்ல.”

மத்தியக் கிழக்கு நாட்டில் நடந்த போரிலிருந்து தப்பியோடி வந்த ஒருவர், பிற்பாடு யெகோவாவின் சாட்சியாக ஆனார். அவர் சொல்கிறார்... “‘போர்ல போய் சண்டை போடு. அப்பதான் உன்னை எல்லாரும் ஒரு ஹீரோவா நினைப்பாங்க’னு எங்க ஊர் பசங்ககிட்ட . . . அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் அடிக்கடி சொல்வாங்க. எதிரி நாட்டு தலைவர்களும் அவங்க ஆளுங்ககிட்ட இதையேதான் சொல்லிட்டு இருந்தாங்க. இதெல்லாம் பார்த்து எனக்கு வெறுத்துப்போச்சு. தலைவர்கள நம்புறது எவ்ளோ முட்டாள்தனம்னு புரிஞ்சுது.”

வேதம் சொல்லும் உண்மைகள்:

  • “சிறு வயதிலிருந்தே மனுஷர்களுடைய உள்ளத்தின் ஆசைகள் மோசமாக இருக்கின்றன.”—ஆதியாகமம் 8:21.

  • “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும். அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?”—எரேமியா 17:9.

  • “பொல்லாத யோசனைகள், கொலை, . . . பாலியல் முறைகேடு, திருட்டு, பொய் சாட்சி, . . . என எல்லா தீமைகளும் இதயத்திலிருந்தே வருகின்றன.”—மத்தேயு 15:19.

மக்களுடைய கெட்ட எண்ணங்களையும் குணங்களையும் ஒழிக்க யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சொல்லப்போனால், அவை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகின்றன. முந்தின கட்டுரையில் நாம் பார்த்த பிரச்சினைகள் இதைத்தான் காட்டுகின்றன. (2 தீமோத்தேயு 3:1-5) இத்தனைக்கும், தகவல்களைத் தெரிந்துகொள்வதும் பரிமாறிக்கொள்வதும் மனிதர்களுக்கு இன்று ரொம்பச் சுலபம். ஆனாலும், அவர்களால் ஏன் இந்த உலகத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவர முடியவில்லை? அது மனிதர்களுடைய சக்திக்கு மிஞ்சிய விஷயமா? அப்படியொரு உலகம் வருவதற்கு வாய்ப்பே இல்லையா?

நம் சக்திக்கு மிஞ்சியதா?

ஏதாவது அற்புதம் செய்து மனிதர்களுடைய கெட்ட எண்ணங்களையும் குணங்களையும் மாற்றிவிட்டால்கூட, உலகத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் நம்மால் கொண்டுவர முடியாது. ஏனென்றால், நமக்கு வரம்புகள் இருக்கின்றன.

“மனுஷனுக்குத் . . . தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை” என்பதுதான் உண்மை. (எரேமியா 10:23) நம்மைநாமே ஆளுவதற்காக நாம் படைக்கப்படவில்லை. சொல்லப்போனால், நாம் எப்படித் தண்ணீருக்கு அடியிலோ விண்வெளியிலோ வாழ்வதற்காகப் படைக்கப்படவில்லையோ, அப்படித்தான் மற்ற மனிதர்களை ஆட்சி செய்வதற்காகவும் படைக்கப்படவில்லை!

நாம் எப்படித் தண்ணீருக்கு அடியில் வாழ்வதற்காகப் படைக்கப்படவில்லையோ, அப்படித்தான் மற்ற மனிதர்களை ஆட்சி செய்வதற்காகவும் படைக்கப்படவில்லை

இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: எப்படி வாழ வேண்டுமென்று அல்லது என்னென்ன ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று மற்றவர்கள் சொன்னால் யாருக்காவது பிடிக்குமா? அல்லது, கருக்கலைப்பைப் பற்றியோ பிள்ளைகளைக் கண்டித்து வளர்ப்பதைப் பற்றியோ மற்றவர்கள் தங்களுடைய கருத்தைத் திணிக்க நினைத்தால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? மற்ற மனிதர்கள்மேல் அதிகாரம் செலுத்த அல்லது அவர்களை ஆட்சி செய்ய யாருக்கும் திறமையோ உரிமையோ இல்லை என்று தெரிகிறது. இந்த உண்மையைத்தான் பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், யாரால் நமக்கு உதவி செய்ய முடியும்?

கடவுளால்தான் முடியும்! ஏனென்றால், நம்மைப் படைத்தவர் அவர்தான்! கடவுள் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. பைபிளில் அவர் நமக்குக் கொடுத்திருக்கிற நல்ல நல்ல அறிவுரைகளைப் பார்க்கும்போதே, அவர் நம்மேல் எந்தளவு அக்கறையாக இருக்கிறார் என்று தெரிகிறது. பைபிளை நாம் படித்தால், நம்முடைய வரம்புகளை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். மனிதர்கள் காலம்காலமாகவே ஏன் பிரச்சினைகளோடு போராடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். ஜெர்மன் நாட்டுத் தத்துவஞானி ஒருவர் எழுதியதுபோல், “மக்களும் சரி, அரசாங்கங்களும் சரி, சரித்திரத்திலிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை, தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவும் இல்லை.”

நம்மைப் பாதுகாக்கும் பைபிள் அறிவுரைகள்!

“யோசிக்கும் திறன் உன்னைக் காக்கும், பகுத்தறிவு உன்னைப் பாதுகாக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 2:11) யோசிக்கும் திறனையும் பகுத்தறிவையும் வளர்த்துக்கொள்ள பைபிள் அறிவுரைகள் நமக்கு உதவும். உதாரணத்துக்கு, “அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது” என்று சங்கீதம் 146:3 சொல்கிறது. வீணான விஷயங்களை நம்பி ஏமாறாமல் இருக்க இந்த அருமையான அறிவுரை நமக்கு உதவும். வன்முறைக்குப் பேர்போன ஒரு வட அமெரிக்க நகரத்தில் வாழும் கென்னெத் சொல்கிறார்... “ஆட்சிக்கு வர்ற ஒவ்வொருத்தரும், பிரச்சினைகள தீர்க்கப்போறதா வாக்கு கொடுக்குறாங்க. ஆனா, கொடுத்த வாக்க அவங்களால காப்பாத்த முடியல. பைபிள் சொல்றது எவ்வளவு உண்மைனு இதிலிருந்து தெரியுது.”

டேனியல் சொல்கிறார்... “மனுஷங்களால தங்களையே சரியா ஆட்சி செய்ய முடியாதுங்கறது நாளுக்கு நாள் தெளிவா தெரியுது. . . . நீங்க வங்கியில பணத்த சேமிச்சு வைச்சிருக்கலாம், இல்லன்னா எதுலயாவது முதலீடு செஞ்சிருக்கலாம். அதுக்காக, பின்னாடி நிம்மதியா வாழ்வீங்கன்னு சொல்லிட முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலையில நிறைய பேர் ரொம்ப விரக்தி அடைஞ்சிருக்காங்க. அத நானே பார்த்திருக்கேன்.”

வீணான விஷயங்களில் நம்பிக்கை வைக்காமல் இருப்பதற்கு பைபிள் நமக்கு உதவி செய்கிறது. அதுமட்டுமல்ல, நமக்கு உண்மையான நம்பிக்கையையும் தருகிறது. எப்படி என்று பார்க்கலாம்.