Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிரச்சினை

ஆபத்தின் பிடியில் உலகம்!

ஆபத்தின் பிடியில் உலகம்!

“தொழில்நுட்பம், அறிவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் தலைமுறை இதுதான். . . . அதேசமயத்தில், [அரசியல், நிதிநிலை, சுற்றுச்சூழலைப் பொறுத்ததில்] இந்த உலகத்தை அழிவின் வாசலுக்கே கொண்டுபோகிற முதல் தலைமுறையும் இதுவாகத்தான் இருக்கும்.”—உலகளாவிய அபாயங்களைப் பற்றிய அறிக்கை 2018, உலகப் பொருளாதார மன்றம்.

விவரம் தெரிந்தவர்கள்கூட இந்த உலகத்துக்கு என்ன நடக்குமோ என்று பயப்படுகிறார்கள். ஏன்? உலகத்தை ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகளை நினைத்துத்தான்! இதோ, ஒருசில...

  • ஆன்லைன் மோசடி: “வரவர இன்டர்நெட் என்றாலே பீதி கிளம்புகிறது, அந்தளவுக்கு அதில் ஆபத்துகள் மறைந்திருக்கின்றன. பிள்ளைகளைத் தங்கள் காமப்பசிக்குப் பலியாக்குகிறவர்கள்... வீண் வம்பு செய்கிறவர்கள்... மற்றவர்களுடைய கோபத்தைக் கிளறுவதற்காகவே மெசேஜுகளை அனுப்புகிறவர்கள்... தகவல்களைத் திருடுகிறவர்கள்... இப்படிப்பட்ட ஆட்களுக்குத்தான் இன்டர்நெட் ஒரு சொர்க்கம்போல் இருக்கிறது!” என்று தி ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் சொன்னது. “உலகத்திலேயே ரொம்ப வேகமாகப் பரவிவருகிற ஒரு மோசடி, அடையாளத் திருட்டு. . . . இன்டர்நெட்டில் மனிதர்களின் கோர முகம் தெரிகிறது; ஏனென்றால், கெட்ட எண்ணத்தையும் கொடூரமான புத்தியையும் காட்டுவதற்கு அது அவர்களுக்கு வசதியான இடமாக இருக்கிறது” என்றும் அந்தச் செய்தித்தாள் சொன்னது.

  • பொருளாதார ஏற்றத்தாழ்வு: சமீபத்தில் வெளியான ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அறிக்கையின்படி, உலகத்திலேயே பெரிய பணக்காரர்களாக இருக்கும் எட்டுப் பேரிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா? உலக மக்களில் பாதிப் பேரிடம் இருக்கும் சொத்து இவர்களிடம் இருக்கிறதாம்! அந்த அறிக்கையின்படி, “பொருளாதார ஏற்றத்தாழ்வினால் பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாகிக்கொண்டே போகிறார்கள், ஏழைகள் இன்னும் ஏழைகளாகிக்கொண்டே போகிறார்கள். அதுவும், ஏழைகளின் பட்டியலில் முக்கால்வாசி பேர் பெண்கள்.” இந்த ஏற்றத்தாழ்வு அதிகமாகிக்கொண்டே போவதால் கலவரம் வெடிக்குமோ என்றுகூட சிலர் பயப்படுகிறார்கள்.

  • கலவரங்களும் கொடுமைகளும்: “சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு இன்று நிறைய பேர் தங்கள் வீட்டையோ நாட்டையோ விட்டு வெளியேறுகிறார்கள்” என்று 2018-ஆம் வருஷத்துக்கான ஐக்கிய நாட்டு அகதிகள் அமைப்பின் அறிக்கை குறிப்பிட்டது. கலவரங்கள் அல்லது கொடுமைகள் நடப்பதால் ஆறு கோடியே எண்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். “ஒவ்வொரு நிமிஷமும் கிட்டத்தட்ட 30 பேர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்” என்றும் அந்த அறிக்கை சொன்னது.

  • சுற்றுச்சூழல் ஆபத்துகள்: “பல வகையான தாவரங்களும் விலங்குகளும் வேகமாக அழிந்துவருகின்றன” என்று உலகளாவிய அபாயங்களைப் பற்றிய அறிக்கை 2018 சொல்கிறது. “காற்றும் கடலும் மாசுபடுத்தப்படுவதால், மனிதர்களுடைய ஆரோக்கியம் சீர்குலையும் ஆபத்து அதிகமாகிவிட்டது” என்றும் அந்த அறிக்கை சொல்கிறது. சில நாடுகளில் பூச்சிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துவருகிறது. ஆனால், தாவரங்களில் மகரந்தச்சேர்க்கை நடக்க உதவியாக இருப்பது பூச்சிகள்தான். அவை அழிந்துவருவதால் சுற்றுச்சூழல் அடியோடு அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். கடலில் உள்ள பவளப்பாறைகள்கூட அழிந்துவருகின்றன. உலகத்திலுள்ள பவளப்பாறைகளில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி, கடந்த 30 வருஷங்களில் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உலகத்தை உருவாக்குவதற்குத் தேவையான மாற்றங்களை மனிதர்களால் செய்ய முடியுமா? கல்வியறிவு இருந்தால் முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படியென்றால், எப்படிப்பட்ட கல்வியறிவு தேவை? அடுத்துவரும் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள்.