Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரைப் பார்த்துப் பிள்ளைகள் அன்பு காட்ட கற்றுக்கொள்கிறார்கள்

சவாலைச் சமாளிக்க வழி

சிந்தையைச் செதுக்கும் கல்வி

சிந்தையைச் செதுக்கும் கல்வி

சில டீனேஜ் மாணவர்கள் சுற்றுலாவுக்குப் போனபோது, இன்னொரு மாணவனைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள். அந்த மாணவர்கள் கனடாவிலுள்ள ஒரு பிரபலமான ஸ்கூலில் படிக்கிறவர்கள். இந்தச் சம்பவத்தைப் பற்றி லெனர்ட் ஸ்டெர்ன் என்பவர் ஒரு செய்தித்தாளில் (ஒட்டாவா சிட்டிசன்) எழுதினார். “இளைஞர்களுக்கு என்னதான் புத்திசாலித்தனமும் படிப்பறிவும் அந்தஸ்தும் இருந்தால்கூட, கெட்ட காரியங்களைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

“பிள்ளைகளுக்கு நல்லது கெட்டதை எடுத்துச்சொல்வதுதான் பெற்றோருடைய முக்கியமான பொறுப்பு என்று நமக்குத் தெரியும். ஆனால், பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க வேண்டும் அல்லது கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர் பலர் நினைக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளிப் படிப்பு முக்கியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், எப்பேர்ப்பட்ட படிப்பாக இருந்தாலும், கெட்ட ஆசைகளையோ எண்ணங்களையோ விட்டொழிப்பதற்கு அது உதவி செய்வதில்லை. அப்படியென்றால், எப்படிப்பட்ட கல்வி நல்ல ஒழுக்கங்களையும் குணங்களையும் கற்றுத்தரும்?

கல்வியிலேயே சிறந்த கல்வி

பைபிளை ஒரு கண்ணாடி என்று சொல்லலாம். அது நம்முடைய குறைகளையும் பலவீனங்களையும் நமக்குத் தெளிவாகக் காட்டும். (யாக்கோபு 1:23-25) அதுமட்டுமல்ல, மற்றவர்களோடு சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்குத் தேவையான குணங்களை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும். கருணை, பொறுமை, சுயக்கட்டுப்பாடு, அன்பு ஆகிய குணங்கள் அவற்றில் சில. அதிலும், அன்பு ‘எல்லாரையும் பரிபூரணமாக இணைக்கிறது.’ (கொலோசெயர் 3:14) அன்பு ஏன் இவ்வளவு விசேஷமானது? இந்தக் குணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று கவனியுங்கள்.

  • “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து [கெட்டதைக் குறித்து] சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், . . . எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.”—1 கொரிந்தியர் 13:4-8.

  • “அன்பு காட்டுகிறவன் மற்றவர்களுக்குக் கெட்டது செய்ய மாட்டான்.”—ரோமர் 13:10.

  • “எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு ஏராளமான பாவங்களை மூடும்.”—1 பேதுரு 4:8.

உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்கள் உங்களைச் சுற்றி இருக்கும்போது, நீங்கள் பயம் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புவார்கள்; உங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார்கள்.

ஒருவருக்கு அன்பு இருந்தால் மற்றவர்களுக்காகத் தியாகங்கள் செய்யவும், தன்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளவும்கூட தயாராக இருப்பார். உதாரணத்துக்கு, ஜார்ஜ் என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடைய பேரக் குழந்தையோடு கொஞ்சி விளையாட ஆசைப்பட்டார். ஆனால், அவர் அளவுக்கு அதிகமாகப் புகைபிடித்தார். அதனால், பேரக் குழந்தைக்கு முன்னால் புகைபிடிக்கக் கூடாதென்று அவருடைய மருமகன் சொல்லிவிட்டார். ஜார்ஜ் என்ன செய்தார் தெரியுமா? பேரனுக்காகத் தன்னுடைய 50 வருஷப் பழக்கத்தையே விட்டுவிட்டார்! அன்புக்கு எவ்வளவு சக்தி என்று பார்த்தீர்களா?

கருணை, அன்பு போன்ற அருமையான குணங்களை வளர்த்துக்கொள்ள பைபிள் நமக்கு உதவி செய்யும்

அன்பு என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு குணம். பெற்றோரைப் பார்த்துத்தான் பிள்ளைகள் அன்பு காட்டக் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் எப்படியெல்லாம் தங்கள் பிள்ளைகள்மேல் அன்பு காட்டுகிறார்கள்? உணவு கொடுக்கிறார்கள்... பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்... காயம் ஏற்படும்போது அல்லது உடம்பு சரியில்லாமல் போகும்போது கவனித்துக்கொள்கிறார்கள்... மனம்விட்டுப் பேசுகிறார்கள். அதோடு, கண்டித்து வளர்க்கிறார்கள்; குறிப்பாக, நல்லது கெட்டதைச் சொல்லிக்கொடுக்கிறார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள்.

ஆனால், வருத்தமான விஷயம் என்ன தெரியுமா? சில பெற்றோர்கள் தங்கள் பொறுப்புகளைச் சரியாகச் செய்வதில்லை. அதற்காக அவர்களுடைய பிள்ளைகள் மோசமானவர்களாகத்தான் இருப்பார்களா? மாறவே மாட்டார்களா? அப்படிச் சொல்ல முடியாது! ஏனென்றால், வளர்ந்து ஆளான நிறைய பேர்கூட, தங்கள் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அதேபோல், பிரச்சினைகள் நிறைந்த குடும்பங்களில் வளர்ந்தவர்கள்கூட, அன்பான, அக்கறையான, நம்பகமான ஆட்களாக ஆகியிருக்கிறார்கள். சொல்லப்போனால், திருந்தவே மாட்டார்கள் என்று மற்றவர்கள் நினைத்த சிலர்கூட அடியோடு மாறியிருக்கிறார்கள். எப்படி என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.