Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மன அழுத்தம் மறைந்திட...

மன அழுத்தம்​—அப்படியென்றால்?

மன அழுத்தம்​—அப்படியென்றால்?

சவாலான ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க உங்கள் உடல் தயாராகும் விதம்தான் மன அழுத்தம். எப்படியென்றால், ஒரு சவாலான சூழ்நிலை வரும்போது, உங்கள் மூளை எக்கச்சக்கமான ஹார்மோன்களை உங்கள் உடல் முழுவதும் அனுப்பி வைக்கிறது. இதனால், இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூச்சின் வேகம் கூடுகிறது. தசைகளும் இறுகிவிடுகின்றன. கண் சிமிட்டும் நேரத்துக்குள் இவை எல்லாம் நடந்துவிடுகின்றன. உங்கள் உடலும் பிரச்சினையைச் சமாளிக்கத் தயாராகிவிடுகிறது. அந்தச் சூழ்நிலை மாறிய பிறகு, உங்கள் உடல் மறுபடியும் அமைதி நிலைக்குத் திரும்புகிறது.

மன அழுத்தம்​—நன்மையும் தீமையும்

சவாலான அல்லது ஆபத்தான சூழ்நிலை வரும்போது இயல்பாகவே மன அழுத்தம் ஏற்படும். அது அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க உங்களைத் தயார்படுத்தும். மன அழுத்தம் மூளையில்தான் அதன் வேலையைத் தொடங்குகிறது. நல்ல விதமான மன அழுத்தம், சட்டென்று செயல்பட உங்களுக்கு உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு மன அழுத்தம் இருந்தால், லட்சியங்களை அடையவும் எக்ஸாம், இன்டர்வியூ, விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் சிறந்து விளங்கவும் உங்களால் முடியும்.

ஆனால், மன அழுத்தம் அதிக அளவு இருந்தாலோ ரொம்ப நாள் நீடித்தாலோ ஆபத்து. உங்கள் உடல் அடிக்கடி அல்லது எப்போதுமே பதற்ற நிலையில் இருந்தால், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் நடந்துகொள்ளும் விதமும் மற்றவர்களை நீங்கள் நடத்தும் விதமும்கூட மாறலாம். தீராத மன அழுத்தமுள்ள நிறைய பேர், அளவுக்கு மீறி மதுபானம் குடிப்பது, போதைப்பொருள் எடுத்துக்கொள்வது, அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது, புகைப்பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். மன அழுத்தம், சிலசமயங்களில் மனச்சோர்வாகவோ, கடும் களைப்பாகவோ, தற்கொலை எண்ணமாகவோ உருமாறலாம்.

மன அழுத்தம் எல்லாரையும் ஒரேமாதிரி பாதிப்பதில்லை என்றாலும் பல விதமான நோய்களுக்கு அது வழிநடத்தலாம். கிட்டத்தட்ட உடலின் எல்லா உறுப்புகளையும் அது பாதித்துவிடலாம்.