தத்தளிக்கும் உலகம்
2 | வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள்
ஏன் முக்கியம்?
அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்கே நிறைய பேர் தினம்தினம் போராடுகிறார்கள். அதுவும், உலகம் நெருக்கடியில் இருக்கும்போது சொல்லவே வேண்டாம்!
-
நெருக்கடியான காலகட்டத்தில் விலைவாசி அதிகமாகிவிடுகிறது. சாப்பாட்டு செலவும் வீட்டு வாடகையும் ரொம்பவே அதிகமாக ஆகிவிடுகின்றன.
-
நெருக்கடி வரும்போது சம்பளம் கம்மியாகிவிடுகிறது அல்லது வேலை போய்விடுகிறது.
-
பேரழிவுகள் வரும்போது மக்களுடைய வீடு, உடமைகள், வியாபாரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன அல்லது அழிந்துவிடுகின்றன. அதனால், வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள்.
இவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்
-
பணத்தை ஞானமாகச் செலவு செய்தால் நெருக்கடியான காலத்தைச் சுலபமாகச் சமாளிக்க முடியும்.
-
வருமானம், சேமிப்பு, சொத்து ஆகியவை நிரந்தரம் கிடையாது. அவற்றின் மதிப்பும் குறைந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
-
பணத்தால் வாங்க முடியாத சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சந்தோஷம், குடும்பத்தில் ஒற்றுமை ஆகியவற்றைச் சொல்லலாம்!
இதைச் செய்துபாருங்கள்
பைபிள் சொல்கிறது: “நமக்கு உணவும் உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.”—1 தீமோத்தேயு 6:8.
திருப்தியாக இருப்பது என்றால், ஆசைப்பட்ட எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்று நினைக்காமல் அத்தியாவசிய தேவைகள் கிடைத்தாலே போதும் என்று இருப்பதுதான்! வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிற சமயத்தில் இப்படி இருப்பது ரொம்பவே முக்கியம்.
திருப்தியாக இருப்பதற்கு கம்மியாக செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். வரவுக்கு மீறி செலவு செய்தால் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும்!