Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தத்தளிக்கும் பூமி!

காற்று

காற்று

நமக்குக் காற்று தேவை! சுவாசிக்க மட்டுமல்ல, சூரியனிடமிருந்து வரும் ஆபத்தான கதிர்வீச்சுகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பதற்கும்தான்! காற்று இல்லை என்றால் பூமியில் எல்லாமே உறைந்துபோகும் அளவுக்கு வெப்பநிலை குறைந்துவிடும்.

காற்று—ஆபத்தில்!

காற்று மாசு ஏற்படுவதால் பூமியில் உயிர் வாழவே முடியாமல் போய்விடலாம். உலக மக்கள் தொகையில், வெறும் 1% மக்கள்தான் உண்மையிலேயே சுத்தமான காற்றைச் சுவாசிக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.

காற்று மாசு ஏற்படுவதால் மூச்சு கோளாறு, நுரையீரல் புற்றுநோய், மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வருகின்றன. அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சினையால் ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் வயதாவதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள்.

பூமிக்கு முடிவே இல்லை

எல்லா உயிரினங்களுக்கும் எப்போதுமே சுத்தமான காற்று கிடைக்கும் விதத்தில்தான் இந்தப் பூமி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படிக் கிடைக்க வேண்டும் என்றால் மனிதர்கள் காற்றை மாசுப்படுத்தாமல் இருக்க வேண்டும். எப்போதுமே சுத்தமான காற்று எப்படிக் கிடைக்கும் என்பதற்கு சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

  • காடுகளில் இருக்கும் மரங்கள் கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக்கொள்ளும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், நிறைய பேருக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. கடலோரத்தில் இருக்கும் ஈரநிலங்களில் வளரும் மாங்குரோவ் காடுகள் அதைவிட அதிகமாகவே கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக்கொள்ளும். சொல்லப்போனால், வெப்பமண்டல காடுகளைவிட 5 மடங்கு அதிகமாகவே இந்த வேலையைச் செய்யும்.

  • சில பெரிய பாசி வகைகள், கார்பன் டைஆக்சைடை உறிஞ்சிக்கொள்வது மட்டுமல்ல அதை கடலுக்கு அடியில் புதைத்தும் வைக்கிறது என்று சமீபத்தில் நடந்த ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதில் ஒரு பாசி வகைதான் கெல்ப். கெல்பின் இலைகளில் சின்ன சின்ன பல்பு போன்ற முட்டைகள் இருக்கும். அவற்றில் காற்று இருக்கும். அதனால், அவற்றால் ரொம்ப தூரம் மிதக்க முடியும். கரையிலிருந்து கடலுக்குள் ரொம்ப தூரம் போன பிறகு அந்த முட்டைகள் வெடித்துவிடும். அதனால், கார்பன் டைஆக்சைடை உறிஞ்சி வைத்திருக்கும் கெல்ப் கடலுக்கு அடியில் மூழ்கிவிடும். இப்படியே பல நூற்றாண்டுகளுக்குக் கடலுக்கு அடியில் புதைந்து இருக்கும்.

  • எந்த அளவுக்குக் காற்று மோசமாக மாசடைந்திருந்தாலும் அது தன்னைத்தானே சரிசெய்துகொண்டு மறுபடியும் பழைய நிலைமைக்கு மாறும் என்பதை கோவிட்-19 லாக்டவுன் சமயத்தில் பார்க்க முடிந்தது. 2020-ல் உலகம் முழுவதும் இருந்த தொழிற்சாலைகள் வேலை செய்யாமலும், வாகனங்கள் ஓடாமலும் இருந்ததால் காற்று மாசு குறைந்திருந்தது; சுத்தமான காற்றும் கிடைத்தது. “2020 உலக காற்று தர அறிக்கை” சொல்வதுபோல், 80% நாடுகளில் லாக்டவுன் போடப்பட்ட கொஞ்ச நாட்களிலேயே சுத்தமான காற்று கிடைத்திருக்கிறது.

மனிதர்களின் முயற்சி

சைக்கிளைப் பயன்படுத்துவதால் காற்று மாசைக் குறைக்க முடியும்

காற்று மாசை குறைக்க வேண்டும் என்று நிறைய தொழிற்சாலைகளுக்கு அரசாங்கங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. அதோடு, காற்று மாசை சரிசெய்து பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதற்கு புதுப் புது முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நுண்ணுயிர்களைப் பயன்படுத்தி, மாசு ஏற்படுத்தும் பொருள்களை நச்சுத்தன்மை இல்லாத பொருள்களாக மாற்றுவது. அதுமட்டுமல்ல, வீடுகளில் மின்சக்தி, எரிசக்தி போன்றவற்றைக் குறைவாகப் பயன்படுத்தும்படியும் வாகனங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நடந்து செல்லும்படியும்... சைக்கிள்களைப் பயன்படுத்தும்படியும்... நிபுணர்கள் மக்களிடம் சொல்கிறார்கள்.

சில அரசாங்கங்கள் தங்களுடைய மக்களுக்குக் காற்று மாசைக் குறைக்கும் புதுவிதமான சமையல் அடுப்புகளைக் கொடுக்கிறார்கள். ஆனால் இன்னும் நிறைய மக்களுடைய கைக்கு அது போய்ச் சேரவில்லை

ஆனால் இந்த முயற்சிகள் மட்டுமே போதாது. உலக சுகாதார அமைப்பு, உலக வங்கி போன்ற பெரிய பெரிய நிறுவனங்கள் 2022-ல் தயாரித்த அறிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன.

2020-ல் உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கைச் சேர்ந்தவர்கள் காற்றை மாசுபடுத்தும் சமையல் எரிபொருள்களையும் தொழில்நுட்பத்தையும் முக்கியமாக நம்பியிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை சொன்னது. காற்றை அவ்வளவாக மாசுபடுத்தாத எரிபொருளையும் அடுப்புகளையும் நிறைய இடங்களில் கொஞ்ச பேரால் மட்டுமே வாங்க முடிகிறது.

பைபிள் என்ன நம்பிக்கை கொடுக்கிறது?

“யெகோவாதான் உண்மையான கடவுள். வானத்தைப் படைத்தவர் அவர்தான், . . . பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் அவர்தான். எல்லாருக்கும் உயிர்மூச்சு கொடுத்தவரும், பூமியில் நடமாடுகிற எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரும் அவர்தான்.”—ஏசாயா 42:5.

நாம் சுவாசிக்கும் காற்றையும், அந்தக் காற்று தானாகவே சுத்தமாவதற்கு இயற்கை சுழற்சிகளையும் உருவாக்கியது கடவுள்தான். அவருக்கு எக்கச்சக்கமான சக்தி இருக்கிறது. மனிதர்கள்மேல் அவர் உயிரையே வைத்திருக்கிறார். அப்படியென்றால், நாம் சுவாசிக்கும் காற்று மாசுபடுவதைப் பார்த்துவிட்டு, அவர் எதுவும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள “பூமி உயிர்வாழும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.