Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிருக்கு ஏன் மரியாதை இல்லை?

உயிருக்கு ஏன் மரியாதை இல்லை?

உயிருக்கு மரியாதை கொடுப்பது ஏன் முக்கியம்?

உயிருக்கு மரியாதை கொடுக்காமல் நடக்கும்போது நம்முடைய ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்வோம், நம்மை சுற்றி இருப்பவர்களின் உயிருக்கும் உலை வைத்து விடுவோம்.

  • சிகரெட் பிடிப்பதால் கேன்சர் வரும், கேன்சரை எதிர்க்கும் சக்தியும் நம் உடம்புக்கு இல்லாமல் போய்விடும். நுரையீரல் கேன்சரால் இறந்துபோன 90 சதவீதம் பேருக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் இருந்திருக்கும் அல்லது அவர்களைச் சுற்றி இருந்தவர்களுக்கு அந்த பழக்கம் இருந்திருக்கும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

  • திடீரென்று பொதுமக்களை துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் இன்று சகஜமாகிவிட்டது. இதனால் நிறைய பேருடைய மனதில் தீராத வலி இன்னும் இருக்கிறது. “துப்பாக்கிச் சூட்டில் உடம்பில் எந்த காயமும் படாமல் நிறைய பேர் தப்பித்திருக்கலாம். ஆனால் அவர்கள் மனதில் பட்ட காயம் வருஷங்களானாலும் ஆறாது,” என்று ஆராய்ச்சிகள் காட்டுவதாக, ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டி வெளியிட்ட ஒரு அறிக்கை சொல்கிறது.

  • குடித்துவிட்டு அல்லது போதை மருந்து எடுத்துவிட்டு சிலர் வண்டி ஓட்டுவதால், ரோட்டில் நடந்து போவதற்கு, ஏன், ரோட்டு ஓரமாக நடந்து போவதற்குக் கூட பயமாகத்தான் இருக்கிறது. உயிருக்கு மதிப்பே கொடுக்காமல் இருப்பவர்களால் பாதிக்கப்படுகிறவர்கள் என்னமோ அப்பாவி மக்கள்தான்.

நீங்கள் என்ன செய்யலாம்

உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். சிகரெட் பிடிப்பது, ஈ-சிகரெட் பிடிப்பது, அளவுக்கு அதிகமாக குடிப்பது, ஜாலிக்காக போதை மருந்து எடுப்பது மாதிரியான பழக்கங்களை நீங்கள் நினைத்தால் இப்போதேகூட விட முடியும். இந்த பழக்கங்கள் உங்கள் உயிருக்கு மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாருடைய உயிருக்கும், ஏன், உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடைய உயிருக்கும் எதிரியாகிவிடும்.

‘உடலிலிருந்து எல்லாக் கறைகளையும் நீக்கி நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்வோமாக.’—2 கொரிந்தியர் 7:1.

எல்லாவற்றிலும் பாதுகாப்பாக இருங்கள். வீட்டில் ஏதாவது ரிப்பேர் வேலை இருந்தால் அதை உடனே செய்துவிடுங்கள். அப்போதுதான் எந்த விபரீதமும் நடக்காமல் இருக்கும். பத்திரமாக வண்டி ஓட்டுங்கள். உங்கள் வண்டியை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். யார் கட்டாயப்படுத்தினாலும் சரி, பலமாக அடிபட வாய்ப்பு இருக்கிற ஆபத்தான எதையும் செய்யாதீர்கள்.

“நீங்கள் புது வீடு கட்டினால், மொட்டைமாடிக்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும். ஏனென்றால், மாடியிலிருந்து யாராவது கீழே விழுந்தால் உங்கள் வீட்டில் இருக்கிறவர்கள்மேல் கொலைப்பழி வரும்.”—உபாகமம் 22:8. a

மற்றவர்களிடம் கரிசனையாக நடங்கள். ஏழை-பணக்காரர், படித்தவர்-படிக்காதவர், நாடு-இனம் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லாரிடமும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும்போது, உயிருக்கு நாம் மதிப்புக் காட்டுகிறோம். ஏனென்றால் உலகத்தில் நடக்கும் சண்டைகளுக்கும் போர்களுக்கும் முக்கிய காரணமே பகையும் பாகுபாடும்தான்.

“எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடும் கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், மற்ற எல்லா விதமான கெட்ட குணத்தையும் உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள். ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள். கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரை ஒருவர் தாராளமாக மன்னியுங்கள்.”—எபேசியர் 4:31, 32.

நாங்கள் என்ன செய்கிறோம்

யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள், உடல்நலத்தை கவனிப்பதும் பாதுகாப்பாக இருப்பதும் முக்கியம் என்று மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். பைபிளில் இருந்து நாங்கள் சொல்லிக் கொடுக்கும் விஷயங்கள் கெட்ட பழக்கங்களில் இருந்தும் உயிருக்கு உலை வைக்கும் பழக்கங்களில் இருந்தும் வெளியே வர நிறைய பேருக்கு உதவியிருக்கிறது.

எங்களுடைய கட்டிட வேலைகளை ரொம்ப பாதுகாப்பாக செய்கிறோம். பைபிள் பள்ளிகளையும் கூட்டங்களையும் நடத்துவதற்காக நாங்கள் கட்டிடங்களைக் கட்டுகிறோம். அந்தக் கட்டிட வேலைகளை செய்யும்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் விட்டுக்கொடுப்பதே இல்லை. அதில் வேலை செய்பவர்களுக்கும் அசம்பாவிதங்கள் நடக்காமல் பத்திரமாக வேலை செய்ய பயிற்சி கொடுக்கிறோம். உள்ளூர் பாதுகாப்பு சட்டங்களுக்கு ஏற்ற மாதிரி எங்கள் கட்டிடங்கள் இருக்கிறதா என்று அடிக்கடி சரி பார்க்கிறோம்.

பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறோம். உலகம் முழுதும் 2022-ல் மட்டும் உயிருக்கு ஆபத்தான கிட்டத்தட்ட 200 பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். இவர்களுக்கு உதவுவதற்காக நன்கொடையாக வந்த கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்திருக்கிறோம்.

மேற்கு ஆப்பிரிக்காவையும் (2014) காங்கோவையும் (2018) எபோலா வைரஸ் உலுக்கிய சமயத்தில், அது பரவுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம். எங்களுடைய அமைப்பில் இருந்து சிலரை அனுப்பி, “கீழ்ப்படிதல் உயிரை பாதுகாக்கும்” என்ற தலைப்பில் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தோம். வணக்கத்துக்காக நாங்கள் கூடிவரும் இடங்களுக்கு வெளியே கை கழுவுவதற்கு வசதிகளை செய்து வைத்தோம். கைகளை கழுவுவதும் பாதுகாப்பான மற்ற விஷயங்களை செய்வதும் முக்கியம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்தோம்.

எபோலா வைரஸ் பரவுவதை தடுக்க, யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய மக்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவினார்கள். மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சியர்ரா லியோனில் ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் இதைச் சொல்லி யெகோவாவின் சாட்சிகளை பாராட்டினார்கள்.

2014-ல் லைபீரியாவில் எபோலா பரவியபோது ராஜ்ய மன்றத்தில் கை கழுவ வசதிகள் செய்யப்பட்டது

a இது, அந்த காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்தவர்களின் கடமை. குடும்பத்தில் இருப்பவர்களின் உயிரையும் மற்றவர்களுடைய உயிரையும் பாதுகாப்பதற்காக அவர்கள் இதை செய்ய வேண்டியிருந்தது.