Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றவர்களுக்கு ஏன் மரியாதை இல்லை?

மற்றவர்களுக்கு ஏன் மரியாதை இல்லை?

மற்றவர்களை மதிப்பது ஏன் முக்கியம்?

மற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தோம் என்றால் நிலைமையை இன்னும் மோசமாக்காமல் இருப்போம். தேவையில்லாத டென்ஷனையும் குறைப்போம்.

  • ஒரு பைபிள் பழமொழி இப்படி சொல்கிறது: “சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.” (நீதிமொழிகள் 15:1) மரியாதை இல்லாமல் பேசுவதும் நடந்துகொள்வதும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் இருக்கும். அது நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கும்.

  • ‘இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும்’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 12:34) அப்படியென்றால் வேறு இனத்தை, தேசத்தை, கலாச்சாரத்தை சேர்ந்தவர்களிடம் மரியாதை இல்லாமல் பேசினோம் என்றால் நம் மனதுக்குள் அவர்களைப் பற்றி தாழ்வாக நினைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம்.

    கொஞ்சம் நாட்களுக்கு முன்பு 28 நாடுகளை சேர்ந்தவர்களிடம் எடுத்த ஒரு சர்வேயில் 32,000-க்கும் அதிகமான பேர் பதில் சொல்லியிருந்தார்கள். அதில் 65% மக்கள், ‘மரியாதை என்றால் என்ன’ என்று கேட்கும் நிலைமை வந்துவிட்டது. அந்தளவுக்குச் சூழ்நிலைமை படுமோசமாக ஆகிவிட்டது என்று சொன்னார்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்

மற்றவர்களோடு உங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றாலும் சரி, எப்போதும் எல்லாரிடமும் மரியாதையாக நடந்துகொள்ளுங்கள். ஒத்துப்போகிற ஒருசில விஷயங்களையாவது கண்டுபிடியுங்கள். அப்படி செய்தீர்கள் என்றால் ‘இவர்கள் இப்படித்தான்’ என்று முடிவுகட்ட மாட்டீர்கள். அவர்களைக் குறை சொல்லாமலும் இருப்பீர்கள்.

“மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்.”—மத்தேயு 7:1.

மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அப்படியே நீங்கள் அவர்களை நடத்துங்கள். நீங்கள் மற்றவர்களிடம் அன்பாக, நியாயமாக நடந்துகொண்டீர்கள் என்றால் அவர்களும் அதே மாதிரி உங்களிடம் நடந்துகொள்வார்கள்.

“மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—லூக்கா 6:31.

மன்னியுங்கள். முன்பு அவர்கள் சொன்னதையோ செய்ததையோ நினைத்துக்கொண்டே இருக்காதீர்கள். அதை வேண்டும் என்று செய்திருக்க மாட்டார்கள் என்று நம்புங்கள்.

“விவேகம் ஒருவனுடைய கோபத்தைத் தணிக்கும். தன் மனதைப் புண்படுத்துகிறவர்களை மன்னிப்பது அவனுக்கு அழகு.”—நீதிமொழிகள் 19:11.

நாங்கள் என்ன செய்கிறோம்

யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள், எங்களை சுற்றியிருக்கிற மக்களிடம் மரியாதையாக நடந்துகொள்கிறோம். அப்படி நடந்துகொள்ள மற்றவர்களுக்கும் உதவி செய்கிறோம்.

பைபிள் ஆலோசனைகளை எல்லாருக்கும் இலவசமாக சொல்லித் தருகிறோம். ஆனால் எங்களுடைய நம்பிக்கைகளையோ கருத்துகளையோ யாரிடமும் திணிக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, பைபிள் சொல்கிற மாதிரியே “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” சொல்லிக் கொடுக்கிறோம்.—1 பேதுரு 3:15; 2 தீமோத்தேயு 2:24.

பாரபட்சம் பார்ப்பதில்லை. எந்த பின்னணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கள் கூட்டங்களுக்கு வரலாம், பைபிளை கற்றுக்கொள்ளலாம். எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கவும், ‘எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுக்கவும்’ நாங்கள் முயற்சி செய்கிறோம்.—1 பேதுரு 2:17.

அரசாங்கத்துக்கு மதிப்புக் கொடுக்கிறோம். அரசாங்கம் போடுகிற சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறோம், வரி கட்டுகிறோம். (ரோமர் 13:1) அரசியல் விஷயத்தில் நாங்கள் யாரையும் ஆதரிப்பது இல்லை. ஆனால், தீர்மானம் எடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை நாங்கள் மதிக்கிறோம்.